Skip to content
த.அகிலன்

கனவும், வாழ்வும் பின் என் சொற்களும்…

த.அகிலன்

கனவும், வாழ்வும் பின் என் சொற்களும்…

நெடுஞ்சாலைப் புத்தரும் சில அக்கப்போர்களும்..

த.அகிலன், June 3, 2010April 13, 2024

புத்தர்ஒரு சுவாரசியமான கவனிக்கத்தக்க பிரகிருதி தான்.  அவரை எனக்கு நல்லாப் பிடிக்கும். யசோதராவை நித்திரையாக்கிப்போட்டு நைசா  பின்கதவால எஸ்கேப்பாகும் போது புத்தர்நினைச்சிருப்பார்இண்டையோட இந்த அரசியலையும் அரசையும் இந்த இகலோக வாழ்வையும் நான் துறக்கிறேன் என்பதாய். ஆனால் விதி யாரை விட்டது. புத்தர்அரசியலை விட்டு அரசிலையைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் அதுவே பேரரசியல் ஆகிவிட்டது. இன்றைக்கு புத்தர்தான் ஆசியாவின் மிகப்பெரும் அரசியல்வாதி. அதிகாரக் குறியீடு எல்லாம்.

ஆனாலும் புத்தர்அறியார்அழகு பொருந்திய சாந்தம் நிரம்பிய தனது உருவம் வெறும் எல்லைக்கல்லாகச் சுருங்கிப்பேயிருப்பதை. இன்றைக்குப் புத்தர்சிலையென்பது எல்லைக்கல். விகாரை என்பது காவல் கொட்டில். ஆனாலுமெனக்குப் புத்தரைப்பிடிக்கும். புத்தர்அப்படியேதான் இருக்கிறார்எப்பொழுதும் எங்காவது  புத்தரை புடையன்பாம்புகள் பின்பற்றக்கூடாதென்பதாய் அவர்சொல்லவில்லையே அங்கேதான் புத்தர்தவறிழைத்தார்அதனால்த்தான் அவர்கைவிடவும்பட்டார். புடையன்களின் இயல்புகள் புத்தருடையதாயப் பிரகடனஞ் செய்யப்படுவதை கையாலாகாதவராய்ப் புத்தர்பார்த்துக்கொண்டிருக்கிறார்.

கையாலாகதவராக இருந்தாலும் அவரை நான் பெரிதும் விரும்புகிறேன். அவரளவுக்கு தன்னைப் பிறர்இஸ்டத்திற்குப்பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கிற  ஆள் வேறுயாரும் கிடையாது.  புத்தரை நானும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன் சில சமயங்களில். கிளிநொச்சியில் ஒரு சிங்கள மகா வித்தியாலயம் இருந்தது. நான் பள்ளிக்கூடம் போகத் தொடங்குகையில் அதிசயமாய் அந்தப் பள்ளிக்கூடத்துக்குப் போற பெடியளைப் பார்த்தபடி கடந்த மங்கலான நினைவு இன்னமும் இருக்கிறது.  அதன் அதிபராக ஒரு பிக்கு இருந்தார். அவரை பெரியம்மாக்களெல்லாம் “சாது சாது” எண்டு கூப்பிடுவினம். நான் அவருடைய வீட்டுக்கு நான் இரண்டொரு தடைவை போயிருக்கிறேன். அது ஒரு மாந்தீரீகக் குகை போல இருப்பதாய்த் தோன்றுமெனக்கு. நான் ஒரு நோஞ்சான் பெடியனாய் இருந்ததால் சழி,காய்ச்சல்,இருமல் அது இதெண்டு எல்லா வருத்தங்களுக்கும் என்மேல் அற்புதமானதொரு பிரியம் இருந்தது. எனக்கு வருத்தம் வந்தால் அம்மா முதல் கூட்டிக்கொண்டு போற இடம் சுப்பையற்ற சாந்தி கிளினிக். வருத்தம் மாறினோண்ண முதல் கூட்டிக்கொண்டு போறது சாதுவிட்ட. அவர் தகடு கூடு எல்லாம் வைச்சு ஒரு நூல் கட்டிவிடுவார் இடுப்பில அல்லது கையில அதுக்குப்பிறகு வருத்தங்கள் அண்டாது எண்டது அம்மாவின் பெருநம்பிக்கை. வருத்தங்கள் அண்டுதோ இல்லையே அவர் இடுப்பில கட்டின கூடுதகடு இடுப்பில அண்டு அண்டெண்டு அண்டி காச்சட்டை கழட்டேக்க எல்லாம் என்ர கருந்திரு மேனியைச் சிவப்பாக்கி வைச்சிடும்.

வடபகுதிகளில்  இருந்து முஸ்லிம்கள் புலிகளால் வெளியேற்றப்பட்டார்கள்.  அநேகமாக பிற இனத்தவர்கள் அனைவருமே புலிகளின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேறிவிட்டார்கள்.  ஆனால் பிக்குவை அவர்களால் வெளியேற்றமுடியவில்லை. (அவர்தமிழ்ப் பௌத்தரும் அல்ல)அல்லது பிக்கு வெளியேற விரும்பவில்லை. அவர்ஒரு அதிசயம் போல அங்கே நடமாடினார். பிக்கு வெளியேறாமல் வன்னியிலேயே இருப்பது குறித்து  பல்வேறு விதமான வதந்திகள் உலாவின. பிக்கு புலிகளுக்கு உதவிசெய்கிறார்என்பதாகச் சிலபேரும். அவர்இராணுவத்துக்கு மெசேச் கொடுக்கிறார்என்று சிலபேரும் சொல்லிக்கொண்டார்கள். ஆனால் உண்மை எதுவென்பது பிக்குவுக்குத்தான் வெளிச்சம். பிக்கு தன்னட்ட வாறாக்களுக்கு கூடு தகடு கட்டினாரே அன்றி வேறொரு விசயத்துக்கும் வாயைத்திறக்கயில்லை. ஆனால் பிக்கு புலிகளின் வீழ்ச்சி வரைக்கும்  வன்னியிலேயே இருந்துதான் வெளியேறினார். தன்னை புலிகள் நாகரீகமாகவும் மரியாதையாகவும் நடத்தினார்கள் என்பதையும் வெளி உலகுக்குச் சொன்னார். கடைசிவரைக்கும் அம்மாவைப் போல பலபேர்பிக்குவிடம் தங்கள் பிள்ளைகளுக்கு மந்திரித்துக்கொண்டுதான் இருந்தார்கள்.  அதைவிட முக்கியமான விசயம்  பிக்கு வன்னியில் இருக்கும் வரைக்கும் மொட்டைத்தலையும் காவியுமாகவே தன் அடையாளங்களோடேயே உலவினார்தன் அடையாளங்கள் எதனையும் துறக்கவுமில்லை துறக்க நிர்ப்பந்திக்கப்படவுமில்லை.

வழித்துணையாய் வந்த புத்தர்

புத்தரை நான் அடையாள அட்டையாகவும் ஒரு முறை பயன்படுத்தியிருக்கிறேன். அடையாள அட்டைகளைப் பராமரிப்பதற்கான டிப்ளோமாப் பயிற்சிகள் எதனையும் நான் பெற்றிருக்கவில்லை என்பதனாலும். வன்னியில் அடையாள அட்டைகளை பரீட்சை மண்டபத்தில் பயன்படுத்துவதேயன்றி சந்திக்குச் சந்தி காட்டவேண்டிய நிர்ப்பந்தங்கள் ஏதுமிருக்காது என்பதனாலும்  அதைக்கவனிக்க ஆட்களில்லை.    (இப்போது இங்கே கொழும்பில் அடையாள அட்டைகளைப் பாதுக்காப்பது எப்படி என்பது பற்றி பேச்செடுத்தாலே வகுப்பெடுக்கிறார்கள் நண்பர்கள் அவ்வளவு அனுபவசாலிகளாக இருக்கிறார்கள்)  அதைப்பற்றிக் கேட்டபோது நண்பரொருவர்சொன்னார்இப்போ ஓரளவு பரவாயில்லை இரண்டு வருடங்களுக்கு முன்னால்  என்றால் போய்க்கொண்டிருக்கிற உயிரை மறிச்சு அடையாள அட்டை கேப்பாங்கள் ஆமிக்காரர்என்று. இப்போது கெடுபிடிகள் குறைந்தேயிருக்கின்றன.

இலங்கைத் தீவில் புலிகளுக்கும் அரசுக்குமிடையில் ஏற்படுகின்ற சீசன் சமாதானங்களின் கடைசிச் சீசனான 2002 – 2006 பருவகாலத்தில் நானும் வவுனியாவுக்கும் யாழ்பாணத்துக்கும் அடிக்கடி போய்வந்தேன். புலிகளிடம் பாஸ் காட்டாமலும் இராணுவத்திடம் இலங்கை தேசிய அடையாளஅட்டையைக் காட்டாமலும் போகமுடியுமென்பதை அடிக்கடி நண்பர்கள் மத்தியில் நான் சமாதானகாலத் தொடக்கத்தில் நிரூபித்து எனது சாகசங்கைளை நிகழ்த்தி வந்தேன். ஆனால் 2006 ல் குலுக்கிய கைகள் குலுக்கியபடியே இருக்க உள்ளே எலும்புகள் உடைந்துகொண்டிருக்கிற சத்தம் சனத்துக்கு கேட்கத் தொடங்கியபோது தேசிய அடையாளஅட்டையில்லாமல் முகாமாலை இராணுவச்சோதனைச் சாவடியைக் கடப்பதென்பது சிம்ம சொப்பனமாகியது. அந்த நேரம்பார்த்து எனது தேசிய அடையாள அட்டையையும் நான் தொலைத்து விட்டிருந்தேன். அடையாள அட்டை இல்லை ஆனால் அவசரமாய் யாழ்ப்பாணம் போகோணும் எண்ட ஒரு இக்கட்டான நிலைமையில் நான் புத்தரைத் துணைக்கழைத்தேன். மனுசன் அதே புன்னகையுடன் வழித்துணையாய் வந்தார். புத்தகத்தின் அட்டைப்படமாக.  ஜெயமோகனின் ‘நெடுஞ்சாலைப் புத்தரின் நூறு முகங்கள்’ என்ற கவிதைத் தொகுதியைக் கையிலெடுத்தபடி முகமாலைச் சோதனைச்சாவடியைக் கடந்தேன். அடையாள அட்டையைக் கேட்ட இராணுவ வீரனிடம் தொலைந்துவிட்டது என்றேன் தைரியமாக. அவன் புத்தகத்தில் இருந்த புத்தரையும் என்னையும் மாறி மாறி இரண்டு தடைவை பார்த்தான். சிங்களத்தில் ஏதோ கேட்டான்.. நான் சிரித்தேன் கிட்டத்தட்ட புத்தரைப்போலச் சிரிப்பதாய்க் கற்பனைபண்ணிக்கொண்டு சிரித்தேன். என்ன நினைச்சானோ புத்தர்படம் போட்ட புத்தகத்தை கையில் வைத்திருக்கும் ஒருவனிடம் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் பயணம் செய்ய அனுமதிக்கலாம் என்று அந்த இராணுவ அதிகாரி அன்று அனுமதித்தான். புத்தர்என் வழித்துணையாயும் அடையாள அட்டைக்கு பதிலாக நான் அவரைப் பிரதியிட்டேன் என்பதையும் அறியாதவராய் அதே சிரிப்பை மெயின்டெயின் பண்ணினார்.  பிறகு நான் அந்தப்புத்தகத்தையும் வன்னியையும் விட்டு வெளியேறினேன்.  அதனாலும் புத்தரை எனக்குப்பிடிச்சிருந்தது.

புத்தர் என்னைத் துரோகியாக்கின கதை

[singlepic id=17 w=320 h=240 float=left]கனநாள் கழிச்சு நான் இலங்கை திரும்பினேன். சந்திக்கு சந்தி மறிச்சு அடையாள அட்டை கேட்காத இலங்கை. ஆனாலும் பதட்டம் உள்ளோடிக்கொண்டிருக்கிறது. தமிழன் என்கிற நினைப்பு உறுத்திக்கொண்டேயிருக்கிறது ஒரு ஒழித்து வைக்கப்பட்டிருக்கிற ரகசிய உறவைப்போல. நான் இருக்கிற ஒரு ஆற்றங்கரையில் ஒரு புத்தர். போகவும் வரவும் என்னைப் பாத்துச் சிரிச்சண்டேயிருந்தார். வௌ;ளைப்புத்தர்.. எனக்குப் புத்தரை இப்பவும் பிடிச்சிருந்தது. நான் அவரைப் படமெடுக்கவிரும்பினேன் என்னிடம் கமரா இல்லாததால் அதைத் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தேன். ஆனால் ஒரு நாள் நான் புத்தரைப் பாக்கேக்க திடுக்கிட்டுப் போனேன். அவரது அழகிய புன்னகையைப் போத்தி மூடியிருந்தது காவி. கொழும்பில அரசு சார்பிலான கொண்டாட்டங்கள் திட்டமிடப்பட்டிருந்தன. மே 18 தமிழனை வெண்டதினம் எண்ட கொண்டாட்டம். நான் அப்பதான் புத்தரைச் சரியா மதிச்சன். அட இந்த மனுசன் அப்பாவிகளைப் படுகொலை செய்தநாட்களை தன் மக்கள் வெற்றிநாளாக கொண்டாடுகிற அநியாயத்தை காணச்சகியாமல் கண்ணைக்கட்டிக்கொண்டிருக்குதே எண்டு. இந்தக்கணத்தை தவறவிடக்கூடாது விட்டா மனுசன் நாளைக்கு திரும்பவும் சிரிக்கத் தொடங்கியிருமெண்டு நினைச்சு உடன என்ர மொபைலால படமெடுத்தேன். இரண்டு கோணங்களில். மழைவேற பெய்யுது. நான் படமெடுத்து முடியவும் ஒருத்தர்என்னை “மல்லி மல்லி” எண்டு கூப்பிடவும் சரியாயிருந்திச்சு. அப்பயும் எனக்கு காந்தண்ணை முந்திக்காலத்தில எழுதின கவிதையொண்டின்ர வரி நினைவுக்கு வந்திச்சு ( அங்கதான் நிக்கிறான் அகிலன்) அது என்ன வரியெண்டா “மல்லி மல்லி எண்டு கொஞ்சி அழைத்தார்கள் மஞ்சி விசுக்கோத்தும் கிள்ளிக்கொடுத்தார்கள்” எண்டு வரும் அந்தக் கவிதையில.. அது நினைவுக்கு வர  நான் மல்லி மல்லி எண்டவரைத் திருப்பிப் பாத்தன் அவற்ற கையில மஞ்சிவிசுக்கோத்து இல்லை.

வந்தவர் சிங்களத்தில ஏதோ புத்தரைக்காட்டி கோவமாக் கேட்டார். நான் ஏன் இந்தாள் கோவப்படுது? பக்தனுக்கும் கடவுளுக்குமிடையில நானெதுக்கு என்பதாய் நடக்கத்தொடங்கினேன். அந்தாள் திரும்பவும் மறிச்சு பேசிச்சிது ஏன் இந்தாள் பேசுது எண்டு யோசிச்சன் பாத்தா அந்தாள் நான் புத்தரைப் படமெடுத்தது அவருக்கு குண்டு வைக்கத்தான் எண்ட ரீதியில முறைச்சுக்கொண்டு போட்டோ போட்டோ எண்டு சிங்களத்தில ஆவேசப்பட்டிச்சிது. நான் அந்தாளைப் புறக்கணிச்சிட்டு என்ர பாட்டுக்கு நடக்க வெளிக்கிட்டன் பெரிய கெத்தான ஆள்மாதிரி. (கால் அகலமான் ஜீன்சுகள் போடுறது எவ்வளவு நல்லது நடுக்கத்தை மறைக்கலாம் ஹி ஹி ஹி )  ஆனால் அந்தாள் தான் ஆவேசப்பட்டாலும் பறவாயில்லை றோட்டால் போற ஒரு ஆட்டோக்காரனை மறிச்சும் தன்ர ஆவேசத்தை அவனுக்கும் பற்றவைக்கும் முயற்சியில் தீவிரமா இறங்க நான் என்ர நடையின்ர வேகத்தைக் மெதுமெதுவாக்கூட்டி.. பிறகு வீட்டடிக்கு வரேக்க எப்படி வந்திருப்பன் எண்டதை நான் எழுதியா உங்களுக்கு விளங்கோணும்….. ஆ…

உப்புடியெல்லாம் றிஸ்க்கெடுத்து உந்தாளை (புத்தரை) ஒரு படமெடுத்து. அதை நான் என்ர பேஸ்புக்கில போட்டன். உடன என்ர நண்பர்ஒருத்தர்தொடங்கினார் ஓ உங்களுக்கிப்ப புத்தரைத் தானே பிடிக்கும் எண்டு.. எனக்கு சத்தியமா விளங்கேல்ல எனக்குப் புத்தரைப் பிடிச்சா அவருக்கென்ன பிரச்சினை எண்டு. பிறகென்ன அடியெடா பிடியடா எண்டு ஆளாளுக்கு றபர்ஸ்டாம்புகளோட வரிசையில வந்திட்டினம் புத்தரைப் பிடிச்சிருக்கெண்டு சொல்லுறவன் ஒரு தமிழ்விரோதி , புலிவிரோதி ( இது இரண்டையும் தனித்தனிய எழுதினதுக்கே சண்டைபிடிச்சாலும் பிடிப்பாங்கள் இரண்டும் ஒண்டுதான் பிரிக்கிறாய் எண்டு) நீங்க அரசாங்கத்துக்கு ஜால்றா அடிக்கிறீங்க விடியவில கிரிபத்தானே சாப்புடுறனீங்க எண்டு அரைச்செஞ்சுரி கொமண்டுகள். அடடா ஒரு புத்தருக்குப் போய் இத்தனை அக்கப் போரா? அடேய் அப்ப நீர் வேலியில கிடைச்சதாச் சொல்லப்படுற தமிழ்ப்பௌத்தத்துக்கான ஆதாரங்கள் பொய்யா?( அதுக்கான நான் தமிழ்ப்பௌத்தனல்ல)  எங்களிடம் புத்தர்என்ன மாதிரியான அரசியலாகிப் போனார்? எனக்கு அப்பத்தான் விளங்கிச்சு முகமாலைச் சென்ரிப்பொயின்ரில என்னைக் காப்பாத்தின புத்தர்முகப்புத்தகத்தில என்னைக் கைவிட்டிட்டார் எண்டு. டக்கெண்டு இன்னொண்டும் எனக்குத் தோணிச்சு எங்களிட்ட இருக்கிறது ஒரு ஒடுக்கப்படும் இனத்தின்ர வலி மாத்திரமல்ல. அதைவிடவும் மேலால எங்களிட்ட தமிழ் இனவாதம் இருக்கு அது சிங்கள இனவாதத்திற்குக் கிஞ்சித்தும் குறைஞ்சதில்ல.  அதைப்போலவே கருணையற்றதும் கொடுரமானதும் மன்னிக்கமுடியாததுமான தமிழ் இனவாதம். கனவில வந்த புத்தர்கேட்டேர் இப்ப தெரியுதா நான் ஏன் இலங்கைத் தீவின் குடிகளைக் கைகழுவிவிட்டேன் என்பது..?

குறிப்பு- 09.06.2010 திகதியிடப்பட்ட ஆனந்தவிகடனில் வெளியான புத்தன் எத்தனை புத்தனடா ..? கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம்.

அனுபவம் எண்ணங்கள் அடையாள அட்டைஇராணுவம்கொழும்புசிங்கள இனவாதம்தமிழ் இனவாதம்பிக்குபுத்தர்மே 18விடுதலைப்புலிகள்

Post navigation

Previous post
Next post

Related Posts

2006ன் கடைசி லஞ்சமும் 2007ன் முதல் பதிவும்…..

May 16, 2007December 1, 2009

எங்கேயோ இருந்து மெலிதாக சுப்ரபாதம் என் காதுகளிற்கு கேட்கத் தொடங்கும் போதுதான் நான் இதை எழுதத் தொடங்கினேன். எந்த ஆண்டும் நான் இப்படி உணர்ந்ததில்லை எல்லாம் மாறிப்போயிருந்தது. தமிழர்கள் எல்லோரும் இந்தப்புத்தாண்டை இத்தனை ஆரவாரத்துடன் வரவேற்பார்களா என்பதை என்னால் இன்னமும் நம்பமுடியவில்லை. சென்னை ரொம்ப சூப்பரா இருக்கும் நீங்க பார்க்கணும் அகிலன் என்று சோமி மிகுந்த அக்கறையுடன் வரச்சொன்னார். வெடிவெடிப்பாங்க பசங்களும் பொண்ணுகளும் சும்மா அப்பிடியே ஜாலியா ஒரு ரவுண்டு…

Read More
அனுபவம்

வீடெனப்படுவது யாதெனில் பிரியம் சமைக்கிற கூடு…..

September 10, 2009April 19, 2024

கூரையின் முகத்தில் அறையும் மழையைப் பற்றிய எந்தக் கவலைகளும் அற்றது புது வீடு இலைகளை உதிர்த்தும் காற்றைப் பற்றியும் இரவில் எங்கோ காடுகளில் அலறும் துர்ப்பறவையின் பாடலைப் பற்றியும் எந்தக்கவலைகளும் கிடையாது புது வீட்டில்.. ஆனாலும் என்ன புது வீட்டின் பெரிய யன்னல்களூடே நுழையும் நிலவிடம் துளியும் அழகில்லை.. இந்தக் கவிதையை நாங்கள் அக்காவின் லண்டன் காசில்.. அல்லது லண்டன் கடனில் கட்டிய புதுவீட்டிற்கு குடிபோன அன்றைக்கு எழுதினேன். (இதைக்…

Read More

ஊரான ஊரும், நினைவுகளை விடாத மாரித்தவக்கையும்..

November 28, 2008December 1, 2009

கொஞ்சமாய் உள்நுழைந்து பார்க்கும் மழை.. மேலோடு தடவிப்போகும் நிலவு.. உள்ளே புகுந்து அடிக்கடி விளக்கை அணைத்துவிடுகிற காற்று… ஆசுவாசமாய் அடுப்பைக் கடந்து நடக்கும் பூனை ஆனாலும்.. விடியலில் பூக்கத்தான் செய்கிறது முற்றத்து நித்திய கல்யாணி…. இந்தக்கவிதையை நான் அக்கராயன் குளத்தில் நாங்கள் இருந்தபோது எழுதினேன்.. என் கத்துக்குட்டிக் கவிதைகளில் இதுவும் ஒன்று..(இப்போதும் அது அப்படித்தான் இருக்கிறது என்பது வேறு விசயம்) இன்றைக்கு அக்கராயன் மகாவித்தியாலயம் என்று எழுதப்பட்ட சுவரின் எதிரில் இராணுவத்தினர்…

Read More

Comments (11)

  1. க.கோபி says:
    June 3, 2010 at 8:34 am

    ம்… ம்….

    பல இடங்களில் இரசித்தாலும், பல இடங்களில் உண்மை உறைத்தது…

  2. ThinkWhyNot says:
    June 3, 2010 at 9:13 am

    “ஒரு ஒடுக்கப்படும் இனத்தின்ர வலி மாத்திரமல்ல. அதைவிடவும் மேலால எங்களிட்ட தமிழ் இனவாதம் இருக்கு அது சிங்கள இனவாதத்திற்குக் கிஞ்சித்தும் குறைஞ்சதில்ல. ”

    உண்மைதான் அகிலன்… மனிதனாக வாழ பலரும் விரும்புவதில்லை… சனாதன தர்மம் (எனக்கு இன்னும் மதம் பிடிக்காததால் இந்து மதம் என குறிப்பிடவில்லை) ஒரு போதும் மற்றைய தர்மங்களை மதிக்காதே.. மற்றைய சமயத்ததை பின்பற்றும் மனிதர்களை எதிர்த்து வாழ கூறியதில்லை…

    இங்கு சிலர் சிங்களவனை எதிர்ப்பதுதான் தமிழனின் அடையாளம் என்று நினைத்து கொணடிருக்கிறார்கள்… அப்படி நடப்பவர்களிடம் அண்ணே அங்க அவதிப்படுகிற சனத்துக்கு ஏதாவது செய்ய வேணும் என்று தொடங்கினால், உடனேயே ஆள் எஸ்கேப் ஆகிடும்…

    இவங்கட ககையை விட்டுட்டு நடக்கிறத பாருங்க…

  3. ஃபஹீமாஜஹான் says:
    June 3, 2010 at 11:55 am

    அகிலன் நல்ல பதிவொன்று.
    அப்படியென்றால் அடையாள அட்டையைத் தொலைத்தாயிற்று.

    “அதைவிடவும் மேலால எங்களிட்ட தமிழ் இனவாதம் இருக்கு அது சிங்கள இனவாதத்திற்குக் கிஞ்சித்தும் குறைஞ்சதில்ல. அதைப்போலவே கருணையற்றதும் கொடுரமானதும் மன்னிக்கமுடியாததுமான தமிழ் இனவாதம்” எல்லா இனத்தினரிடையேயும் காணப்படும் கூட்டு இனவாதங்களால் தான் எங்கள் நாட்டுக்குத் தலை நிமிரமுடியவில்லை.

  4. அசரீரி says:
    June 3, 2010 at 8:32 pm

    சில நேரம் நீங்கள் முகத்தை மூடியிருக்கும் போது போட்டோ எடுத்தது புத்தருக்குப் பிடிக்கல்லயோ தெரியாது 🙂

    அருமையான பதிவு,
    இலங்கையின் மூன்று சமூகங்களுக்குள்ளும்
    நீங்கள் இனவாதம் என்று சொல்லும் பண்பு நூறுவீதம் அப்பட்டமாக இருக்கிறது,
    அதை அடிப்படைவாதம் எண்டும் சொல்லலாம்.

  5. அருண்மொழிவர்மன் says:
    June 4, 2010 at 4:16 am

    அகிலன் நல்ல பதிவு + பகிர்வு.

    நானும் கிட்டடியில் தனி வீடெடுத்துப் போனபோது வீட்டில் வைக்க புத்தர் சிலை ஒன்று தேடினேன். எதேச்சையாக நண்பர்கள் மத்தியிலும் இதைச் சொன்னேன். தொடங்கியது பிரச்சனை. இந்தப் புத்தர் சிலை விவகாரம் இப்போதும் சில நண்பர்கள் மத்தியில் அலசப் படுவதாகக் கேள்வி.

    இன்னுமொன்று, இப்ப கொஞ்ச நாளா நண்பர் ஒருவரின் சிபாரிசில் மகாவம்சம் வாசித்து வருகிறேன். இது தெரிஞ்சா என்ன சொல்லுவாங்களோ///

  6. hvl says:
    June 12, 2010 at 4:25 pm

    Dear akilan,
    I have read ur book ‘maranathin vaasanai’. Very touching . I wish to share ur story and my thoughts about it in my blog. I need ur permission to do so.
    thks
    HVL.

  7. rooto says:
    August 12, 2010 at 2:12 pm

    ஏன் பாஸ்??? பதிவுலகதில அதுவும் இலங்கை பதிவர்களிடையே ஒருமதிப்பு பெறுவதற்காகவா இப்பிடி சகட்டைமேனிக்கு புத்தரை புகழ்ந்து தள்ளியிருக்கிங்க!!அதுக்கு நிச்சயமா அவர் அருகதை உடையவர்தான்! அவரை வச்சு நீங்க பிஸ்னஸ் பண்ணேல்லயே? பண்ணினாலும் அவரு சிரிச்சுகிட்டேதான் இருப்பார்.
    எனக்கு கடவுள்(சிவன்,முதற்கொண்டு கதரகம தெவியோ -அதுதாங்க பழைய எங்கட முருகன், இப்ப பிறப்பு சான்றிதழ்ல முழுமையா அவருடைய பெயர்மாற்றம் சட்டவரைமுறைகளுக்கு உட்பட்டு நடந்துகொண்டுள்ளது- வரையும் இயேசு பிரான் முதற்கொண்டு புத்தர் வரையும், அல்லா முதர்கொண்டு ராமர்வரையும் எந்த கடவுள்மீதும்) நம்பிக்கை இல்லை.
    அது ஏன் எண்டு உங்களுக்கு விளக்கம்தரவும் விவாதிக்கவும் தயார் ஆன கொஞ்சம் செலவாகும்(தண்ணிஅடிக்காம கடவுளைபற்றி பேசின தெய்வ குத்தம் ஆகிடாது அதுதான்).அதவிடுங்க விசயத்துக்கு வருவம் சனாதன தர்மம் மட்டுமல்ல பெளத்த தர்மமும் மற்றைய மதத்தையோ கடவுளரையோ வணங்குவது தவறு என்று கூறவில்லை(இஸ்லாம் மட்டும் கொஞ்சம் விதிவிலக்கு இந்தவிசயத்தில்) நீர்வேலியில என்ன நல்லூர் முருகன் சிலையே எழும்பி நிண்டு குளிக்கிற புத்தர் எண்டும் தொல்பொருள் அகழ்வாரட்சிகாரர்கள் நிரூபிப்பார்கள்.அம்பாந்தோட்டையில் 1500 பிராமண குடும்பங்கள் இருந்ததற்கும் அங்கு மிகப்பெரும் சிவன்கோவில் இருந்ததற்கும் ஆதாரங்கள் உண்டு. அப்ப அங்க போய் அவங்கள சிவனை கும்பிட சொல்லமுடியுமா? இல்ல நீங்கதான் இப்பிடி சல்லியடிச்சிட்டு உயிரோட திரும்பிவரமுடியுமா? காலி சிவன்கோவில் “செந்தில்வேழ்” எனும் (இலங்கையின் மிகச்சில வியாபாரக்காந்தங்களில் ஒன்று) தனிமனிதனின் சொந்த செலவில் புணர்நிர்மாணம் செய்துமுடிக்கபடும் தறுவாயில், மிக சாதுர்யமாக அங்கிருந்த 16ற்கும் மேற்பட்ட சிலைகள் அவையனைத்தும் கோடிக்கணக்கான பெறுமதியுடையவை திருடப்பட்டுள்ளன. இதற்கான விசாரனைகள் தமிழர்மேலான மனித உரிமை மீறலுக்கு எதிராண விசாரணை போல மிக தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது.
    நீங்கள் பகுத்தறிவாளனோ அல்லது ஆஸ்தீகனோ என்பது வேறு ஆனால் மதம்/கடவுள்/ இவையெல்லாம் ஒரு இனத்தின் கலாச்சார அடையாளங்கள் என்பது உண்மை. அவற்றை நாம் ஏற்கவேண்டிய கட்டாயமோ கடைப்படொ இல்லை அந்த இனத்தின் இருப்புக்கு ஆபத்து இல்லத கட்டங்களில். ஆனால் இருப்பே கேள்விக்குறியாகியுள்ள நேரத்தில் இவ்வாறான முற்போக்குதனமான(அப்பிடி ஊரில உள்ள பிளாக்கருகள் சொலுறாங்க) உங்கள் செயற்பாடுகள் நம் இருப்பை,அல்லது இருப்பை உறுதிசெய்யும் செயற்பாடுகளை பின்நோக்கி தள்ளிவிடக்கூடாது என்பதே எனது கவலை. உங்களை குத்து குத்து என்று குத்துவதோ, புண்படுத்துவதோ எனது நோக்கமல்ல! அப்பிடி ஏதும் இதில இருந்தா காண்டாகாம என்னைய எஸ்ஸாகவிடுங்க பாஸ்!!!

  8. கனகசபை says:
    August 12, 2010 at 9:11 pm

    அப்ப தம்பிrooto தமிழ்ப் பௌத்தம் எண்டொண்டிருக்கேல்லயோ.. அப்படியே இருந்தாலும்…அதை மூடிமறைச்சுப் போடோணும் எண்டுறீர்… நல்லரெக்னிக்கடாப்பா.. நடத்துங்கோ நடத்துங்கோ..

    தம்பி அகிலன் நீர் இலங்கை பதிவர்களிட்ட பேர் எடுக்கிறதுக்கு என்னத்துக்கு புத்தரைப் பிடிச்சுத் தொங்குறீர்.. தம்பி rooto ட்ட கேட்டா நல்ல ஐடியாவாத் தருவார்போலயிருக்கே.. உம்மை ஊரில முற்போக்கு எண்டு சொல்லீனமாமே.. தகவல் புதுசாயிருக்கு.. rooto வை யாரோ பிற்போக்கு எண்டு சொல்லீட்னம் போல.

  9. rooto says:
    August 13, 2010 at 8:15 pm

    அண்ணை கனகசபை! நான் கேட்ட மற்றகேள்விகளுக்கு பதில் இல்லாம ஏன் சும்மா சப்பைகட்டு கட்டுறியள். பெளத்தமே இந்துமதத்தில இருந்து போன சித்தார்த்தனால் உருவாக்கப்பட்ட ஒரு கோட்பாடுதான்! எனக்கு கடவுள்ளையே நம்பிக்கை இல்லை உங்களமாதிரி பெரியபெரிய புத்திசாலியள் எல்லம் இந்தகடவுளைவிட இது பெரிசு எண்டுகொண்டுவாங்கோ! கனகசபை நீங்க உங்கட சொந்த பெயரில….எண்டே எனக்கு பதிலளிக்கலாம்.

  10. த.அகிலன் says:
    August 14, 2010 at 6:56 am

    அன்பு நண்பர் rooto நீங்கள் எழுதிய பின்னூட்டத்தை நான் இங்கே பிரசுரிக்காமல் விடுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. நான் மட்டுறித்திய பின்கே அவை இத்தளத்தில் வெளியிடப்படும் ஆக உங்கள் கேள்விகளுக்கு நான் பயந்துகொண்டிருந்தால்.. ஒரு கிளிக்கில் அந்தப் பின்னூட்டத்தை நீக்கிவிட்டு போய்க்கொண்டேயிருந்திருப்பேன்.. நான் பொதுவாகவே பின்னூட்டங்களிற்கு பதில் சொல்வதில்லை அப்படியே பின்னூட்மிட்டாலும் என் சொந்தப்பெயரில் மட்டும் தான் பின்னூட்டமிடுவேன். ஆனால் இந்தமாதிரி என்ன கையைப்பிடிச்சு இழுத்தியா என்கிறமாதிரி வடிவேலு பாணிச் சல்லியடிப்புக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது… தவிர ஏதோ தமிழர்களையெல்லாம் தம்முடைய இன அடையாளங்களைத் துறந்து விட்டு பௌத்தநெறிக்கு மதம் மாறிவிடுங்கள் என்று நான் எங்கேயும் எழுதவில்லை.. என்ன செய்வது ஒற்றை வரிகளில் எழுதுகிற உண்மைகளுக்கே பந்தி பந்தியாய்ப் பதட்டப் படுகிறீர்கள் நீங்கள்..

  11. கனகசபை says:
    August 15, 2010 at 5:33 am

    டோய்.. டோய்.. டோய்.. ஒரு நாள் லீவெடுத்தா என்ர பேத்சேட்டிபிக்கட்டையை மாத்தீருவீங்கபோல.. அடுத்தவன்ல சேறறடிக்கிறதெண்டா குண்டியில அடிச்ச புழுகம்தான்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • அனுபவம்
  • எண்ணங்கள்
  • ஒலிக்கவிதைகள்
  • ஒலிப்பதிவுகள்
  • கவிதைகள்
  • காதல் சிலுவையில்
  • குளிரடிக்கிற ஏரியா
  • சினிமா அனுபவம்
  • நேர்காணல்
  • புகைப்படம்
  • புத்தகம்
  • September 2024
  • June 2021
  • November 2019
  • March 2019
  • April 2018
  • May 2013
  • February 2013
  • December 2012
  • October 2012
  • July 2012
  • June 2012
  • November 2010
  • August 2010
  • June 2010
  • April 2010
  • March 2010
  • February 2010
  • September 2009
  • August 2009
  • July 2009
  • June 2009
  • February 2009
  • January 2009
  • December 2008
  • November 2008
  • October 2008
  • September 2008
  • August 2008
  • July 2008
  • June 2008
  • May 2008
  • April 2008
  • March 2008
  • January 2008
  • December 2007
  • October 2007
  • September 2007
  • August 2007
  • July 2007
  • June 2007
  • May 2007
  • December 2006
  • November 2006
  • October 2006
  • September 2006
  • August 2006
  • July 2006
  • June 2006
©2025 த.அகிலன் | WordPress Theme by SuperbThemes