Skip to content
த.அகிலன்

கனவும், வாழ்வும் பின் என் சொற்களும்…

த.அகிலன்

கனவும், வாழ்வும் பின் என் சொற்களும்…

பாவம் அந்தச் சனங்களை விட்டுவிடலாம்..

த.அகிலன், August 30, 2010April 13, 2024

நான் தேடுகிறேன்.
தொலைந்தது கிடைத்தபின்னும்
தொடர்ந்தும் தேடுகிறேன்
பொருளை அல்ல
அதன் அடையாளத்தை..

எப்போதோ நான் எழுதியது நினைவுக்குள் மீளெழுகிறது. நான் எப்போதுமே இப்படி நிகழும் என்று எண்ணியதேயில்லை. எனது பால்யத்தில் இச்சையின்றித் திரும்பிய எனது வீட்டொழுங்கையைக் கடந்தும் என் கால்கள் நடந்தன. எதுவும் பழகியதாயில்லை. எல்லாம் விலகியிருந்தது. என்னைவிட்டும் தம் ஆன்மாவை விட்டும். என் பதின்ம வயது இரவுகளில் மின்சாரமற்ற தெருக்களினூடே ஏமம் சாமம் பார்க்காமல் திரிந்து விட்டு நடுராத்திரியில் வீடு திரும்புகையில் என்னைக் கேளாமலே என் சைக்கிள் எங்கள் ஒழுங்கையில் திரும்பும். அந்த வீதியின் மேடு பள்ளங்களை என் சைக்கிளின் சக்கரங்கள் இருட்டிலும் விலத்தும். ஆனால் இன்றைக்கு பட்டப்பகலில் எனது தெருவுக்கு இரண்டு தெரு தாண்டிப்போய் நிற்கிறது கால்கள். எல்லாம் மாறிற்று எனக்குள் நினைவுகள் தடுமாறிற்று. 23 வருடங்கள் என்னோடிருந்த நிலம் அடையாளமற்றுக்கிடக்கிறது. எதையும் பிரித்தறிய முடியாத படி எல்லாம் ஒரே அளவாய்ச் சிதைந்து கிடந்தன. போர் எல்லாவற்றையும் விழுங்கிவிட்டு தூங்கிக் கொண்டிருக்கிறது. சனங்கள் நினைவுகளில் இருக்கிற தங்கள் வசந்தகாலங்களை விழுங்கிச் செரிக்கமுடியாது விழிகளில் ஏந்தியவர்களாக அலைகிறார்கள்.

வன்னியில் எல்லாவற்றினதும் ஆன்மா காயப்பட்டிருக்கிறது. சனங்களின், மிருகங்களின்,கட்டிடங்களின்,தெருக்களின், மரங்களின்,புல் பூண்டுகளின் இன்னும் பறவைகளின் என்று சகலமும் ஆன்மாவைத் தொலைத்து விட்டு அலைகின்றன.

வவுனியா வைத்தியசாலையில் பணிபுரியும் நண்பர் ஒருவருடன் நான் வவுனியா வைத்திய சாலைக்குப் போனேன். போரின் முக்கால்வாசித் தீனக்குரல்களைக் விழுங்கிக்கொண்டிருக்கும் அந்தச் சுவர்களுக்கிடையில் இன்னமும் அழுகுரல்கள் மிச்சமிருக்கின்றன. நண்பரைப் பணிசெய்ய விட்டுவிட்டு புத்த பிக்குகளிற்காக வவுனியா மாவட்ட வைத்திய சாலையினுள் கட்டப்படும் விடுதிக்கு முன்பாக நிற்கிறேன். பிக்குகள் நிறையப் பேரிராத ஊரில் விகாரைகள் அதிகமில்லாத ஊரில் எதற்காக தனியே பிக்குகளிற்கான விடுதி. கேள்விகள் குடைகிறது. நான் சனங்களைப் பார்க்கிறேன் ஏதாவது தெரிந்த முகத்தை ஒரு தெரிந்த மனிதனைத் தேடுகிறேன். தங்களைத் தேடியலையும் சனங்களுக்கிடையில் எனக்குத் தெரிந்தவனை எங்கே தேடுவது. ஒட்டியுலர்ந்த தேகங்களுக்குள் எனக்குத் தெரிந்தவர்கள் ஒளிந்துகொண்டிருக்கலாம். ஆனால் என்னால் ஒரு தெரிந்தவனைக் கூட அடையாளம் காணமுடியவில்லை ஒரு ஒல்லிக்குச்சிப் பெடியனாய்  ஊரைவிட்டுப் போய்.. கொஞ்சம் குண்டாய் நிறைய மொட்டையாய்த் திரும்ப வந்திருப்பவனை அவர்களுக்கும் அடையாளம் காணச் சிரமமாய் இருக்கலாம். எந்தத் தெரிந்தமுகமுமில்லை எல்லா முகங்களும் ஒரே மாதிரியானதாக இருக்கிறது. மனங்களே முகங்களைச் செய்கின்றன. எல்லார் மனங்களிலும் ஒரே துயரம் அதனால் எல்லா முகங்களும் ஒரே மாதிரியானதாய்ப் போயிருந்தன. அன்றைக்கு வெசாக்கிற்கு முதல்நாள், புத்தர் ஞானம் பெறப்போகிறார். வைத்திய சாலைக்குள் வெசாக் கூடுகள் வெளிச்சம் காட்டத் தொடங்கின பரவுகிறது ஞானத்தின் ஒளி ஆனாலும் என்ன மனங்களுக்குள் புகமுடியாத வெளிச்சம் அது.

மறுக்கப்பட்டிருந்த எல்லாம் இப்போது வவுனியாவைக் கடந்து வன்னிக்குப் போகின்றன. மூன்று  தசாப்த யுத்தம் நிகழ்ந்த இடம் புதிய சந்தையாகிறது. வண்ண வண்ண விளம்பரத் தட்டிகள் வழியெங்கும் உங்களை அழைத்துச் செல்கின்றன. வன்னி மூன்று தசாப்தங்களாக இராணுவம் நுழையாத மண். தனி புலிகளின் தனி ராசதானியாக ஆளப்பட்ட மண். இலங்கையோடு ஒட்டாமல் துருத்திக்கொண்டிருந்த நிலம். சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில் மின் பற்றாக்குறை காரணமாக அவர் இலங்கையின் நேரத்தை அரை மணி நேரத்தால் அதிகரித்தார். அதாவது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் ஒரே நேர அளவுதான் கடைப்பிடிகப்பட்டது. ஆனால் சந்திரிகா அம்மையார்இந்திய நேரப்படி காலை ஐந்தரை மணியை இலங்கையின் 6 மணி ஆக்கினார். அரைமணிநேரம் அதிகரித்தது இலங்கை நேரம். ஆனால் அப்போதும் வன்னியில் பழைய நேரமுறைமையே கடைப்பிடிக்கப்பட்டது. இரண்டு தேசங்களிற்கான வித்தியாசம் அதிலிருந்தது. அதனால் தானே என்னவோ இப்போது இலங்கையின் முக்கியமான தொலைபேசிச் சேவைகளை வழங்கும் டயலொக் பின்வருமாறு தன் விளம்பரத்தை செய்கிறது. “இலங்கையர்களுக்கென்றால் டயலொக் தான்” என்று. எனக்கென்னவோ அந்த விளம்பரத் தட்டி வன்னிச்சனங்களை நீங்கள் இலங்கையர்களா? என்று கேட்கிறதா இல்லை அவர்களது பாவங்களைக் கழுவி அவர்களை இலங்கையர்களாக புனிதப்படுத்துகிறதா? எனும் கேள்வி ஓடிற்று.

ஆனால் இப்போது பலாத்தகாரத்தை, வன்முறையை சகித்துக்கொள்ளப் பழகிவிட்ட அல்லது எதிர்க்கத் திராணியற்ற ஒரு பெண்ணைப் போல எதிர்ப்பின்றி வீழ்ந்து கிடக்கிறது நிலம். நான் வாழ்ந்த காலத்தில் மறுக்கப்பட்டிருந்த எல்லாவற்றையும் வன்னிக்குள் கண்டேன். ஆனால் தங்களுக்கு மறுக்கப்பட்டவையெல்லாம் திரும்பக் கிடைக்கிறபோது அதை எதிர்கொள்ளத் திராணியற்ற சனக்கூட்டமாக வன்னிச்சனத்தை காலம் மாற்றிவிட்டது. அவர்களது எதிரிகளும், அவர்களது காவலர்கள் என நம்பியவர்களுமாகச் சேர்ந்து அவர்களைத் கோவணாண்டிகள் ஆக்கிவிட்டனர்.

அம்மா அழுதுகொண்டேயிருக்கிறாள். அவளது அழுகை தீராத அழுகை அதை அவள் ஒரு வன்முறையை நிகழ்த்துவதைப்போலவே நிகழ்த்துகிறாள். அவளால் காப்பாற்ற முடியாது போன இளைய மகனைப்பற்றிய நினைவுகள் அவளை அழுத்துகின்றன. அம்மா நான் சின்ன வயசுக் கதைகளினூடு கற்பனை பண்ணிய சூனியக்காரக் கிழவியைப் போல இருக்கிறாள். அச்சமாயிருக்கிறது அவளை எதிர்கொள்வது. அம்மாவைப்போல அம்மாக்களினால் சபிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது நகரம். அம்மாவின் இளைய மகனைப்போல தமது மகவுகளைப் பிரிந்த தாய்களின் கண்ணீர் பெருகுகிறது. அம்மாக்கள் மட்டுமே மிஞ்சியிருக்கிறார்கள் உயிர் மிஞ்சியிருக்கும் விருப்பின்மையோடு.

வன்னி இப்போது ஆண்களற்ற நகரம். ஆண்களைப் போர்விழுங்கிவிட்டது. ஆண்கள் இறந்து போய்விட்டார்கள் அல்லது கைது செய்யப்பட்டு விட்டார்கள். இப்போது பெண்கள் தனித்து விடப்பட்டிருக்கிறார்கள். பெண்களின் கண்ணீரால் வன்னித்தெருக்களின் புழுதி அடங்குகிறது. இதுவரைகாலமும் குடும்பத்தின் வருமான வேராக இருந்த ஆண்கள் இல்லாமல் போக இப்போது சுமக்க முடியாத சுமையை பெண்கள் சுமந்தலைகின்றனர். யாரவது துரைமார் வரமாட்டார்களா? எங்களது துயரங்களைக் களைந்துவிட மாட்டார்களா? என்று அவர்கள் ஏங்குகிறார்கள். பசியும் தேவைகளும் அவர்களை நெருக்குகின்றன. ஏதாவதொரு அரசியல் வாதியோ, அதிகாரியோ, அல்லது பன்னாட்டு நிறுவனமோ எது வந்தாலும் பிள்ளைகளையும் இழுத்துக்கொண்டு அவர்களிடம் ஓடுகிறார்கள். ராசாக்களோவெனில் பொத்தாம் பொதுவாகத் தலையசைத்தபடி அந்தச் சனங்களை ரட்சிக்கிறார்கள். பெண்கள் மனுக்களை ஏந்தியபடி அலைந்து கொண்டேயிருக்கிறார்கள். நாளைக்கான சாப்பாட்டில் தொடங்கி பிள்ளையினதோ கணவனினதோ விடுதலை வேண்டி அல்லது அவர்களை கண்டுபிடித்துத் தரச்சொல்லி. இன்னும் இன்னும் தம் வாழ்வுக்கான கருணையாசிக்கும் வேண்டுதல்கள் நிறைந்த மனுக்கள் ராசாக்களால் சேகரிக்கப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன. இவர்கள் வழக்கம் போல பதிலுக்காக காத்திருக்கிறார்கள். அல்லது காத்திருக்காமல் திரும்பவும் திரும்பவும் இரங்கல் கடிதங்களை ராசாக்களிடம் கையளித்தபடி இருக்கிறார்கள்.

வவுனியா வைத்தியசாலையில் இருக்கிற உளவியல் மருத்துவர் ஒருவர் சொன்னார். சிறப்பு முகாமில் இருந்து தன்னிடம் அழைத்து வரப்பட்டிருந்த தற்கொலைக்கு முயற்சித்து தப்பிய நபரைப்பற்றி. தற்கொலைக்கான காரணமாக அவர்சொன்னது “ஒரு சிங்களக் குழந்தைக்கு தகப்பனாக எனக்கு விருப்பமில்லை” என்பது.  அவர்விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கிய பொறுப்பில் இருந்தவர். சிறப்பு முகாமில் இருந்து அவரை விடுவிப்பதற்கான பேரமாக அவரது மனைவியின் உடல் கோரப்படுகிறது சிங்கள இராணுவ அதிகாரி ஒருவரால். பெண்கள் வஞ்சிக்கப்பட்டபடியே இருக்கிறார்கள். எல்லாவிதமாகவும் பெண்கள் சுரண்டப்படுகிறார்கள். அவர்கள் திசைதெரியாப் பயணிகளாக தாங்கள் இதுவரையும் பயணிக்காத புதிய பாதைகளில் தனித்து நிற்கிறார்கள் கூடவே பெருஞ்சுமைகளோடு.

விதவைகளும், காணமல் போனவர்களிள் மனைவிகளும், கைதிகளின் தாய்மாரும் தங்களிடம் எஞ்சியிருக்கும் குடும்பத்தை காப்பாற்ற போராடுகிறார்கள். ஆயுதப் போராட்டம்,அகிம்சைப் போராட்டம் என்று எல்லாவகையான போராட்டங்களும் கைவிட்டபின் இப்போது வயிற்றுக்கான போராட்டம் மட்டுமே அந்த மண்ணில் எஞ்சி இருக்கிறது. அந்தச் சனங்களிடம் கோபமிருக்கிறது தாங்கள் வஞ்சிக்கப்பட்ட ஏமாற்றம் எரிகிறது. முதுகிலும் நெஞ்சிலும் குத்திய ஆயுதம் தாங்கிகளை சனங்கள் வெறுக்கிறார்கள். ஆனால் அவர்களால் எதுவும் செய்ய இயலுவதில்லை அவர்களிடம் போராட்ட குணம் எஞ்சியிருக்கிறது ஆனால் அது அன்றாட வாழ்வுக்கான போராட்டமாய் நிகழத்தவே அவர்களிடம் இயலுமையிருக்கிறது.அவர்கள் யார்போனாலும் யாசிக்கிறார்கள் அவர்களின் தேவைகள் யாரால் தீர்த்து வைக்கப்பட்டாலும் ஏற்றுக்கொள்கிறார்கள். அது எதிரியா துரோகியா எந்த முத்திரைகளும் இப்போது அந்தச்சனங்களிடம் இல்லை. அந்தச் சனங்களிடம் இருப்பது எல்லாம் எதிர்காலம் இருண்டுகிடக்கும் போதான உயிர்வாழ்தல் குறித்த அச்சம் மட்டும்தான்.  அவர்களுக்கு வேறெதைப்பற்றியும் அக்கறைகளிலில்லை. அடுத்த வேளைதான் அவர்களது இலக்கு. அவர்கள் அதைக்கடப்பதற்கே போராடுகிறார்கள்.

தங்கள் பெயரால் வெளியில் நடத்தப்படும் அரசியல் குறித்துக் கவனிப்பதற்கெல்லாம் அவர்களுக்கு திராணியில்லை.  அல்லது அந்த அரசியலின் மீது சலிப்பிலும் வெறுப்பிலும் இருக்கிறார்கள் அந்தச்சனங்கள். தப்பிச் செல்லும் வழிகள் அடைக்கப்பட்டு களத்தில் தவிர்க்க முடியாமல் இறக்கிவிடப்பட்டிருக்கிற ஆட்கள் அவர்கள். அவர்கள் பெயரால் உலகமெங்கும் நிகழ்த்தப்படுகிற வாய்ச் சவடால்களுக்கும் தங்களுக்கும் எந்தத் சம்பந்தமும் இல்லை என்பதை உரக்கச் சொல்லும் திராணி அவர்களுக்கில்லை அந்த அக்கறையுமில்லை. அவர்களின் கழுத்தில் சுருக்குகள் உள்ளன. அரசிடம் சுருக்குகளின் மறு நுனிகள். முள்வேளி முகாம்களிலிருந்து சொந்த இடங்களிற்கு குடியமர்த்தப்படுகிறவர்களை நாடுகடந்து செய்யப்படுகிற வாய்ச்சவடால்கள் அச்சமூட்டுகின்றன. களத்தில் இல்லாதவர்களின் வாய்வீரத்தால் அவர்களின் கழுத்துச் சுருக்குகள் இறுகுகின்றன. அவர்கள் பாவம். வன்னியின் குடிகளாயிருப்பதைத் தவிர வேறெந்தப் பாவமும் செய்யாதவர்கள். அவர்களை பிழைக்கவிட்டுவிடலாம். அவர்களுக்கான அரசியலை அவர்களே நிகழ்த்துவார்கள். முதலில் பட்டினி நோயிலிருந்த மீண்டு தெம்பாய் எழுந்திருக்க அவர்களை அனுமதிக்கவேண்டும். பாதுகாப்பான வெளிகளில் பதுங்குழிகளிற்கு அவசியமிராத தேசங்களில் இருந்து அவர்களின் தேவைகளைப் புரிந்து கொள்ளாதவர்களின் சவடால்களால் அந்தச்சனங்களின் வாழ்க்கை அச்சமூட்டப்படுகிறது. முதுகுகளில் ஏற்றப்படும் சிலுவைகளை மறுக்கவும் திராணியற்ற பாவிகள் அவர்கள். பாவம் அந்தச் சனங்களை விட்டுவிடலாம் பிழைத்துப் போகட்டும்.

எங்களுக்குச் செய்யவும் சொல்லவும்
ஏதுமில்லை
எங்களை வைத்து
அதிகாரங்கள் செய்ய
அடிமைசெய்ய
அரசியல் செய்ய
முடிந்தால் பிச்சையெடுக்கவும்
ஆட்களிருக்கிறார்கள்..
ஆனால்
எங்களுக்குத்தான் செய்யவும் சொல்லவும்
ஏதுமில்லை

புது விசை  யூலை -செப் 2010 இதழில் வெளியாகிய கட்டுரை.

அனுபவம் எண்ணங்கள் அகதிகள்ஈழம்தமிழீழம்போருக்கு பின்னான வாழ்வுபோருக்குப்பின்முள்ளிவாய்க்கால்வன்னி வாழ்வியல்விடுதலைப்புலிகள்

Post navigation

Previous post
Next post

Related Posts

மன்மதராசாவுக்கு கல்யாணம்..

November 24, 2008December 1, 2009

  தேவதை தேவையில்லை தெளிந்த நல் வதனம் போதும் வைர நகையெதற்கு? வழித்துணையாதல் இன்பம் படிக்கிற பழக்கமுண்டு அடிக்கடி திட்ட மாட்டேன் பாதியாய் இருக்க வேண்டாம் முழுவதும் நீயே ஆகு இம்சைகள் இருக்கும் கொஞ்சம் இனிமைதான் ஏற்றுக்கொள்க வருமானம் பரவாயில்லை வாழ்வதற்கு கைவசம் கவிதைகள் வாய்க்கப் பெற்றேன் காதலில் விழுந்தேனில்லை எனவே பிறக்கின்ற பிள்ளைக்கான பெயரையும் நீயே இடலாம் சந்தேகம் துளியும் இல்லை அந்தரங்கம் உனக்கும் உண்டு சமயத்தில் நிலவு…

Read More

ஆவிகளும் விமானங்களும்…..

July 10, 2007December 1, 2009

நான் எனது சின்னவயது ஞாபகங்களில் இருந்து விமானங்களைப்பற்றிய செய்திகளை நினைவுபடுத்த முயன்றேன். அப்போதிலிருந்தே அவை ஒரு விதமான அச்சமூட்டும் பொருட்களாகவே இருந்தன. கோகுலம் புத்தகத்தில் விமானத்தை கண்டு பிடித்தது ரைட் சகோதரர்கள் என்று படித்த ஞாபகம் இருக்கிறது. எதற்கு அவர்கள் இதனைக் கண்டு பிடித்தார்கள். எங்கள் மீது குண்டுபோடவா? எத்தனை விதம்விதமான விமானங்களின் குண்டுவீசும் திறன்களை சமாளித்து வந்திருக்கிறோம். அவ்ரோ, புக்காரா, சுப்பர்சொனிக், கிபிர் இப்படி விமானங்களை பறக்கும் ஒரு…

Read More
அனுபவம்

கேட்கவியலாச் சொல்

March 5, 2010April 13, 2024

தட்சணா மூர்த்தி அன்பழகன் (27.03.1985 – 05.03.2009) எனக்கு நினைவிருக்கிறது  நான் இரண்டாம் தடைவையாகவும் அவன் முதலாம் தடைவையாகவும் கடல் பார்த்தது. ஒரு பள்ளிச்சுற்றுலாவில் மாத்தளன் கடற்கரையை நாங்கள் பார்த்தோம். நான் அப்பாட அந்தரட்டிக்கு சாம்பல் கரைக்கப்போகும் போது முதல் முதலாக கீரிமலைக்கடலைப் பார்த்திருக்கிறேன். அது சாதுவாய் இருந்தது அன்றைக்கு கடல் அச்சமூட்டவில்லை அப்போதெல்லாம் பொங்கிவரும் அலைகளில்லை அலைகள் குறித்த நினைவேயில்லை எனக்கு அப்போதெல்லாம். ஆனால் இம்முறை அப்படியல்ல கடல்…

Read More

Comments (4)

  1. karan says:
    September 2, 2010 at 4:45 pm

    ellam nallaithan erukku ella eluththukkalukkum nokkam sare enral ok than pavam nankala?

  2. mrknaughty says:
    October 5, 2010 at 6:36 pm

    நல்லா இருக்கு
    thanks
    mrknaughty
    click here to enjoy the life

  3. ezhil says:
    October 21, 2010 at 12:34 pm

    அகிலன்
    நீங்களும் கொஞ்சம் விட்டு விடுங்கள் அங்கே மண்ணையும் மக்களையும் சிங்களவன் ஆக்கிரமிதுகொண்டிருந்த போது இங்கே சீரழிவு சினிமாவில் உதவி வேலை செய்துகொண்டு போராடுகிறவர்களை விமர்சனம் செய்து கொண்டு இணையப் புலியாக வலம் வந்தீர்கள்.
    உங்களைப் போன்ற துரோகிகளால் தான் போராட்டம் வீழ்ச்சியுற்றது என்பது திண்ணம்

  4. ranjan says:
    July 14, 2012 at 3:37 am

    தற்செயலாக உங்களின் இணையத்திற்குள் நுழைந்த போது முழுவதையும் படிக்கவேண்டுமென்று முடிவெடுத்து இருந்துவிட்டேன்.
    என் மண்ணும்,எம் மனிதர்களும் பட்ட,பட்டுக்கொண்டிருக்கிற வேதனைகளும்,துயர்களும் கொஞ்சம்நெஞ்சம்மல்ல என்பதை உங்களின் வார்த்தையின் வாக்குமூலம்களால் வாழ்ந்து இறந்த மானிடத்தின் வாழ்வை வாய் மெய்யாய் வாசிக்கதந்ததர்க்கு வாயார வாழ்த்தி மனதார போற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • அனுபவம்
  • எண்ணங்கள்
  • ஒலிக்கவிதைகள்
  • ஒலிப்பதிவுகள்
  • கவிதைகள்
  • காதல் சிலுவையில்
  • குளிரடிக்கிற ஏரியா
  • சினிமா அனுபவம்
  • நேர்காணல்
  • புகைப்படம்
  • புத்தகம்
  • September 2024
  • June 2021
  • November 2019
  • March 2019
  • April 2018
  • May 2013
  • February 2013
  • December 2012
  • October 2012
  • July 2012
  • June 2012
  • November 2010
  • August 2010
  • June 2010
  • April 2010
  • March 2010
  • February 2010
  • September 2009
  • August 2009
  • July 2009
  • June 2009
  • February 2009
  • January 2009
  • December 2008
  • November 2008
  • October 2008
  • September 2008
  • August 2008
  • July 2008
  • June 2008
  • May 2008
  • April 2008
  • March 2008
  • January 2008
  • December 2007
  • October 2007
  • September 2007
  • August 2007
  • July 2007
  • June 2007
  • May 2007
  • December 2006
  • November 2006
  • October 2006
  • September 2006
  • August 2006
  • July 2006
  • June 2006
©2025 த.அகிலன் | WordPress Theme by SuperbThemes