ஏ.குஞ்சம்மா இந்தப்பெயர் எனக்கு இன்னமும் நினைவிலிருப்பதற்கு நிறையக் காரணங்கள் உண்டு. பில் போடுற மேசையைவிடவும் கொஞ்சமே உயரம் கூடிய பொடியனாக இருந்தாலும் எந்தவிதமான சந்தேகக் குறியையும் முகத்தில் காட்டாமல் எனது முதலாவது தொழில்முறைப் புகைப்படத்துக்கு போஸ்கொடுத்த அற்புதமான பெண் அவர்.(அப்பாவிப் பெண்) நான் அப்போது ஸ்கந்தபுரத்தில் யோறேக்ஸ் ஸ்ரூடியோவில்(yorex studio) வேலைக்குச் சேர்ந்திருந்தேன். வேலைக்குச் சேர்ந்திருந்தேன் எண்டு சொல்வது சரியா என்றெனக்கு இப்பவும் தெரியாது ஆனாலும் அப்படித்தான் சொல்லிக்கொண்டேன்.
மந்தையிலிருந்து தப்பி ஓடி வந்த ஆடாய், அல்லது வீடு திரும்பிய மகனாய் இருந்த எனக்கு திரும்பவும் பள்ளிக்கூடம் போகும் அம்மாவின் யோசனையை ஏற்பதில் நிறையக் கௌரவச் சிக்கல்கள் இருந்தன. அதில் முக்கியமானது என்னோடு படித்தவனெல்லாம் வெள்ளை ஜீன்ஸ் போட்டு ஏ.எல்.(A/L)சோதனைக்குப்போக நான் திரும்பவும் நீலக்காச்சட்டை போட்டு பள்ளிக்கூடம் போவதா? என்பது. அம்மாவுக்கு மகன் உயிரோட தனக்குப் பக்கத்தில் இருந்தால் போதுமெண்டு நான் என்ன சொன்னாலும் தலையை ஆட்டுகின்ற நிலைமையில் இருந்தா. பள்ளிக்கூடத்துக்கு அடுத்த ஒரே தெரிவாக இருந்தது ஏதாவதொரு கடையில் வேலைக்குச் சேர்வது. ஆனாலும் ஒரு கல்வியதிகாரியின் மகன் கடையில் பொட்டலம் கட்டுவதிலுள்ள கௌவரப்பிரச்சினை அம்மாவுக்கு எழுந்தது. இப்படி எனக்கும் அம்மாவுக்கும் இடையிலான கௌரவப்பிரச்சினையில் நோர்வேயைப் போல பெரியம்மா தலையிட்டு ஏதாவதொரு ஸ்ரூடியோவில வேலைக்கு சேரலாம் அது நல்லம் தானே எண்ட தீர்வுப் பொதியை முன்வைச்சா.
ஸ்ரூடியோ நல்ல விசயமாத்தான் பட்டது. ஆனால் எனக்கு முந்தி எப்பவோ என்ர சிநேகிதப் பெடியன் ஒருத்தன்ர ஜசிக்கா(yacica) கமராவில் படமெடுத்த அனுபவம் மட்டும்தான் இருந்தது. (அந்த பிலிம் ரோலை நாங்கள் கழுவிப் பார்க்கவேயில்லை என்பது இங்கே தேவையற்ற தகவல் என்பதால் விட்டுவிடலாம்) கடைசியாக யோறெக்ஸ் மாமாவின் ஸ்ரூடியோவுக்கு அம்மா என்னைக் கூட்டிக்கொண்டு போன அண்டைக்கு நல்லவேளையாக அவர் இன்ரவியூ எல்லாம் வைக்கவேயில்லை. தச்சுத் தவறி என்ர கையில கமராவைத் தந்து அவை இடம்பெயர்ந்து வந்து கொட்டில் போட்டுக்கொண்டிருந்த வளவில் நிண்ட பலா மரத்தை படமெடுக்கச் சொல்லித் தந்திருந்தால், நான் எடுத்த வானத்தின்ர புகைப்படத்தில பலாமரத்து இலையள் நாலைந்து எட்டிப்பாத்து போஸ் கொடுக்கிற மாதிரித்தான் வந்திருக்கும். யோறெக்ஸ் மாமாக்கு என்னை பாத்தோண்ணயுமே தெரிஞ்சிருக்கோணும் இது சனியனுக்கு கமராவைப் பிடிக்கவே தெரியாதெண்டுற உண்மை. மனுசன் என்ன செய்யிறதெண்டு ரீச்சற்ற மகன் எண்டதுக்காக எனக்கு கமராவைக் கழுத்தில தொங்கவிடுறதில இருந்து எப்படி பிரேமுக்க உருவங்களைக் கொண்டு வாறது என்கிற அரிவரியில தொடங்கி சிவப்பு ரிசுப்பேப்பர் சுத்தின மஞ்சள் குண்டு பல்ப் எரியுற டாக்ரூமுக்க (Dark room) இருந்து எப்படி கட் பிலிமை கமராவுக்குள் லோட் பண்றது. பிறகு எப்படி அந்தப் பிலிமை டெவலப் பண்றது வரையும் சொல்லித் தந்தார். அங்க சேந்த புதுசில ஒவ்வொரு நாளும் இரவு கடை பூட்டினாப்பிறகு நறுமை மின்சார சேவைக்காரர் தாற கரண்டைச் செலவழிச்சு தங்காக்காவை இருத்தி நான் ஐடென்ரிகாட் படமெடுத்து பழகுவேன். தங்காக்காவின் இடது காது தெரியும் படியாக இருக்கச் சொல்லி இருத்திப்போட்டு அவாவைப் படமெடுப்பேன். அப்போதெல்லாம் இலங்கைத் தேசிய அடையாள அட்டைக்கு இடது காது தெரியும் படியாகத்தான் போஸ் கொடுக்க வேண்டும். அதுவும் கறுப்புவெள்ளையில். அது ஒரு வசதிதான் ஏனெண்டா கறுப்பு வெள்ளைப் படமெண்டால் மட்டும்தான் வன்னியிலயே கழுவிப் பிரிண்டெடுக்கும் வசதியிருந்தது .
இப்படிப் பல்வேறு ரிஸ்குகளை எடுத்து கிட்டதட்ட வெளியாக்கள் கண்டுபிடிக்காத அளவுக்கு போகசிங் அவுட்டாகாமலும் இடது காது பிரேமுக்கு வெளியில் தப்பியோடாமலும் ஐடென்ரிகாட் படமெடுக்குமளவுக்கு நான் தேர்ச்சியடைந்து விட்டதால் இனி நானும் ஒரு படப்பிடிப்பாளன் தான் எண்டு சின்ன மிதப்பொண்டு எனக்கு வந்திருந்தது. யோறெக்ஸ் மாமா கூட கடையில என்னை விட்டிட்டு வெளியில போகேக்க யாரும் ஐடென்ரிகாட் படமெடுக்க வந்தால் படமெடுத்து பிலிமை டெவலப்பண்ணி பாத்திட்டு அனுப்பு எண்டு சொல்லிப்போட்டு போகத் தொடங்கியிருந்தார். சாமி வரங்கொடுத்தாலும் பூசாரி குறுக்க பூந்து தடுக்கிற மாதிரி படமெடுக்க வாறாக்கள் யாரும் என்னை நம்பித் தங்கள் அழகு முகங்களை ஒப்படைக்கத் தயாராயிருப்பதேயில்லை. வாற வயசு போன கிழவனுகள் கிழவியள் கூட என்னை ஒரு மாதிரி மேலயும் கீழயும் பாத்திட்டு “அவர் இல்லையா?” எண்டு கேப்பினம். நான் மனசுக்க பொங்குற கடுப்பை மறைச்சபடி “இல்லை” எண்டுவன். “பிறகு வாறம்” எண்டுபோட்டுப் போகேக்க பத்திக்கொண்டு வரும். நான் ஓடுமீன் ஓடி உறுமீன் வருமட்டும் காத்திருக்கலானேன். அப்படிச் சிக்கிய உறு மீன்தான் ஏ.குஞ்சம்மா. குஞ்சம்மாவை நான் எடுத்த இலங்கைத் தேசிய அடையாள அட்டைக் கறுப்பு வெள்ளைப் படத்துடன் தொடங்கிற்று புகைப்படங்களோடான எனது தொழில்முறைப் பரிச்சயம்.
யோறேக்ஸ் ஸ்ரூடியோவின் மேசைக் கண்ணாடிக்குக் கீழே விதவிதமான அளவுகளில் படங்கள் இருந்தன. விதம் விதமான உணரச்சிகளின் பிரதிபலிப்பான்களான அவை வித விதமான காலத்தவையும் கூட. கிளிநொச்சியின் காலத்தால் முந்திய ஸ்ரூடியோக்களில் கமலா ஸ்ரூடியோவுக்கு அடுத்த இடத்தை யோறெக்ஸ் ஸ்ரூடியோதான் பிடிக்கும் என்று நினைக்கிறேன். பழையகாலத்தில் இருந்து எடுக்கப்பட்ட வெவ்வேறு மனிதர்களினுடைய முகங்கள் அந்த முகங்களைப் பதிவு செய்த நோக்கங்கள் என்று எல்லாமும் அந்தப் படங்களில் இருப்பதாகத் தோன்றும். அங்கேயிருந்த அநேகம் போட்டோக்கள் ஏதோவொரு அடையாள அட்டைக்காக எடுத்ததாய் இருந்தன. சிறிதாயும், பெரிதாயும்,சதுரமாயும்,செவ்வகமாயும் விரியும் சட்டகங்களுக்குள் சிக்கிய மனிதர்களின்; கறுப்பு வெள்ளை முகங்கள் அந்தக் கண்ணாடிக்குக் கீழேயிருந்தன. மேசைக்கு மேல ஒரு சோக்கேஸ் மாதிரியான தட்டுக்களில அவர் பெரிது படுத்தப்பட்ட அளவுகளில் அவர் எடுத்த சில கலர்ப்படங்களை வைச்சிருந்தார். அதில ஒரு பொம்பிளைப்பிள்ளையின்ர படம் எனக்கு இன்னமும் கண்ணுக்க நிக்கிது. பொம்பிளைப்பிள்ளையின்ர படம் கண்ணுக்க நிக்கிறதில என்ன அதிசயம் இருக்கெண்டு நீங்கள் நினைக்கலாம். எப்பவுமே சாமத்திய வீட்டில அம்மம்மாக் கிழவி பிள்ளையைக் கொஞ்சுற மாதிரி ஒரு சீனைப் படமெடுக்கத் தவறுறதேயில்லை நான் என்ர வாழ்நாளில பாத்த எல்லாப் படங்களுமே தங்கட மூஞ்சி கமராவுக்க வருதா இல்லையா? நாங்கள் வடிவாயிருக்கிறமா இல்லையா எண்டிற கவலையோட கமராவைக் கவனமாப் பாத்துக்கொண்டு கன்னத்தோடு கன்னம் வைத்த கொஞ்சலாத்தான் அது இருக்கும். ஆனா இந்தப் படத்தில இருக்கிற அம்மம்மாவும் பேத்தியும் கமராவை மறந்து உண்மையாவே பாசத்தோட கொஞ்சின கணம் பதிவு செய்யப்பட்டிருந்தது அதனாலேயே எனக்கந்த படத்தை பிடிச்சுப் போச்சுது நிறைய.
போட்டோக்களில் முகங்கள் மாத்திரமா இருக்கின்றன?. காலத்தின் சிறு துண்டொன்று அவற்றில் நிரப்பப் பட்டிருக்கிறது. முதலில் அது ஒரு சாட்சியாகவும், பிறகு அதுவொரு நினைவாகவும், பிறகு வரலாற்றாவணமாகவும், அரசியற் பிரதியாகவும் கூட மாறிப்போகிற நெகிழ்வுத் தன்மை புகைப்படத்துக்கு மட்டுமேயிருக்கிறது. எல்லோரும் போட்டோக்களில் அழகாயிருக்கவே விரும்புகிறோம். அழகாய் என்பதைவிடவும் இளமையாய் இருக்கவே விரும்புகிறோம். தோற்றங்களைத் தாண்டியும் போட்டோக்களில் உறைந்திருக்கிற காலம் கவனத்திலெடுக்கப்படாமலேயே கரைந்துவிடுகிறது.
இப்போதெல்லாம் போட்டோக்களை செக்கன்களில் பிரிண்ட் எடுத்துவிட முடிகிறது. கையில காசு வாயில தோசை என்பது மாதிரி சடக் சடக்கென விரும்பிய அளவுகளில் நாங்களே பிரிண்ட் எடுத்துக்கொள்ளமுடிகிறது. நான் வன்னியில் இருந்தபோது போட்டோ பிரிண்ட் எடுக்கிறதை நினைத்தேன் அப்படியொரு காலம் இருந்ததயே நம்பமுடியாமல் இருக்கு. யோறெக்ஸ் ஸ்ரூடியோவுக்கு படங்கழுவுகிற ஐயா எண்டொருத்தர் வருவார். ஒரு மாசத்துக்கொருக்காவோ அல்லது அதற்கும் கூடவான இடைவெளிகளிலோதான் அவர் கடைக்கு வந்து நான் பாத்திருக்கிறேன். ஆனால் மாதம் முழுவதும் அவரது வருகை எதிர்பார்க்கப்பட்டுக் கொண்டேயிருக்கும். வன்னியில் விடுதலைப்புலிகளைத் தவிர வேறு யாரிடமும் கலர்ப்புகைப்படங்களைக் கழுவிப் பிரதியெடுக்கும் வசதிகள் அப்போதிருக்கவில்லை. புலிகள் அவர்களின் தேவைகளுக்காக மட்டுப்படுத்தப்பட்ட அளவுகளிலேயே அவற்றைப் பாவித்து வந்தனர். மிச்ச ஸ்ரூடியோக்களிடமெல்லாம் கறுப்பு வெள்ளைப் படங்களை மட்டுமே பிரதியெடுக்கும் வசதியிருந்தது. கலர்ப்படங்கள் கழுவவேண்டுமானால் வவுனியாவுக்கு அல்லது கொழும்புக்கோ தான் போகவேண்டும். இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்வதற்காக முதலில் புலிகளிடம் ஆளைப் பிணைவைத்துப் பாசெடுக்கவேண்டும். அப்படிப் பிணைவச்சுப் பாசெடுத்த ஒருவர் நைசாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலேயே தங்கிவிட்டாரெண்டால் பிணைவச்சவருக்கு ஆப்புத்தான். யாரையாவது கெஞ்சிக் கூத்தாடிப் பிடிச்சுப் பிணைவச்சுப் பாசெடுத்தாலும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் போய் வருவதற்கான பாதையில் பிரச்சினையிருந்தது.
ஜெயசிக்குறு மற்றும் சத்ஜெய இராணுவ நடவடிக்கைகள் வரும் வரைக்கும் வவுனியாவுக்கும் கொழும்புக்கும் போக A9 வீதி பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் இந்த இரண்டு இராணுவ நடவடிக்கைகளுக்கும் பிறகு பாதையும் அங்கயும் இங்கயுமா இடம்பெயரத் தொடங்கியிச்சுது. இறுதி யுத்தக்காலத்தில அறிவிக்கப்பட்ட உயர் பாதுகாப்பு வலயம் மாதிரி அங்கயும் இங்கயுமாப் பாதை அலைக்கழிஞ்சது. இராணுவமும், புலிகளும், செஞ்சிலுவைச் சங்கமுமாச் சேர்ந்து வெள்ளாங்குளத்திலிருந்து, பண்டிவிரிச்சான் ,மடு,பெரிய மடு எண்டு மன்னார் மாவட்டத்தின் சந்து பொந்துகள் குச்சொழுங்கைகள் எல்லாத்தையும் மாறி மாறி வன்னிக்கு வெளியே செல்வதற்கும் உள் வருவதற்குமான பாதைகளா அறிவிச்சுக் கொண்டிருந்திச்சினம் இரண்டு நிலங்களுக்கும் இடையான போக்குவரத்துப் பாதையாக. அதுவும் வாரத்தில் இரண்டு நாள் மட்டும்தான் பாதை திறக்கப்படும். சிலவேளை இரண்டு தரப்புக்கும் சண்டை வந்தால் அதுவும் இராது. உப்புடிக் கஸ்டப்பட்டு போய்ப் படங்கழுவிக் கொண்டுவாற ரிஸ்க்கை எடுத்து அதை ஒரு தொழிலாகச் செய்யிறவர்தான் படங்கழுவிற ஐயா.
படங்கழுவிக் கொண்டு வாறதில போக்குவரத்துச் சிக்கல்களை விடவும் மிகப்பெரிய சிக்கல் ஒண்டிருந்தது அது தான் படங்களில இருக்கிற நபர்கள். படங்கழுவிக்கொண்டு வரேக்க எல்லாப் படத்தையும் ஆமி பாப்பான். படத்தில எங்கயாவது புலிகளின் சீருடையோட யாராவது நிண்டாலோ.. அல்லது சிவில் உடையில புலிகளின் உறுப்பினர்களின் படங்கள் இருந்தாலோ சிக்கினான் சிங்கன். இயக்கத்தில இருக்கிற பெடியன் ஒருத்தன் ஆசைப்பட்டு மச்சாளின்ர சாமத்திய வீட்டுக்கு லீவில வந்திருப்பான். அவனை என்னண்டு போட்டோக்கு நிக்கவேண்டாம் எண்டு சொல்லுறது. மச்சாள் வேற மச்சானோட நிண்டு படமெடுத்தே தீருவன் எண்டு அடம்பிடிச்சா. உப்புடி கன ரிஸ்குகளை எடுத்துத்தான் படம்கழுவிக் கொண்டு வருவார் ஐயா. ஐயா ஆமிக்குத் தெரியாமல் உப்புடிப் பட்ட படங்களை எங்கெங்க ஒழிச்சுக்கொண்டு வந்தவர். எப்படி எப்படிக் கொண்டு வந்தவர் எண்டெல்லாம் கதைகதையாச் சொல்லுவார். நான் அவற்ற வாயைப்பாத்துக்கொண்டு நிப்பன்.
எப்பவெல்லாம் பாதை திறக்குதோ அப்பயெல்லாம் சனம் வந்து கேக்கும். “படம் வந்திட்டுதோ?” பெரும்பாலும் “வரேல்ல” எண்டே பதில் சொல்லுவம். “எப்ப வரும்?” யோசிக்கிறதே இல்லை உடன பதில் சொல்லுவம் “இந்தமாதம் வந்திரும்”. எனக்கு இரண்டு விசயங்கள் எப்படி வேகமாப் பரவுது எண்ட சந்தேகத்துக்கான விடையை கடைசி வரைக்கும் கண்டுபிடிக்க முடியேல்ல. முதலாவது சங்கக் கடையில் மண்ணெண்ணை குடுக்கிறாங்களாம் எண்ட செய்தி எப்படி இவ்வளவு வேகமாப் பரவுது, அடுத்தபடியாக வேகமாகப் பரவிற விசயமாய் ஸ்ரூடியோவுக்கு படம் கழுவி வந்த செய்தி பரவும். சாமத்திய வீடு, கலியாண வீடு முடிஞ்சு மாசக்கணக்கா போட்டோக்கு காத்திருந்தாக்கள் ஆத்துப்பறந்து வந்து போட்டோக்களை வாங்கிப் பாப்பினம். போட்டோக்களைப் பாத்தோண்ண சிலரிட முகத்தில ஒளியும் சிலரிட முகத்தில டாக்ரூம் சிவப்பு லைட்டும் எரியும் இனியென்ன செய்யிறது சட்டியில இருந்தாத் தானே அகப்பையில வரும் எண்டு மனசைத் தேத்திக்கொண்டு வெளிக்கிடுவினம்.
போட்டோக்கள் பற்றி நான் திடீரென்று அத்தனை நினைவுகளையும் கிண்டிக்கிளறி யோசிக்கிறதுக்கு காரணம் நான் நேற்றொரு படம் பாத்தனான் அதின்ர பெயர் Bang Bang club. தென் ஆபிரிக்காவின் யுத்தகாலத்தில் இனக் குழுமங்களுக்கிடையிலான படுகொலைகளின் போது அங்கு புகைப்படம் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் புகைப்படப்பிடிப்பாளர்களின் வாழ்வையும், அவர்கள் எதிர்நோக்கும் உளவியல் சிக்கல்களையும் சவால்களையும். அவர்களின் புகைப்படங்களின் பின்னாலுள்ள அரசியலையும் வியாபாரத்தையும் சவாலையும் மன உழைச்சலையும் என்று நிறையப் பேசிச் செல்கின்ற சினிமா.
நான் கடந்து வந்த புகைப்படங்களின் மீது. எடுக்கவிரும்பிய, எடுத்த, என்னால் கடைசி வரைக்கும் எடுக்கமுடியாத புகைப்படங்களின் மீதெல்லாம் என் நினைவுகள் ஊர்ந்தன. புகைப்படப் பிடிப்பாளனுக்கு புகைப்படத்தில் சிறைப்பட்டிருக்கும் காலத்தின் சிறுதுளிக்கு முன்னதும் பின்னதுமான நிகழ்வுகளோடு சேர்த்தே அந்தப் படம் பற்றிய நினைவுகளிருக்கும். நான் என்னுடைய 98 வீதமான படங்களைத் தொலைத்து விட்டேன். எனது இறந்தகாலம் குறித்த முக்கால் வாசி நினைவுகள் எனக்குள் மட்டுமாய் புதைந்துகிடக்கிறது. உள்ளங்கையில் விரிகிற காட்சிகளின் அழகையும், துக்கத்தையும் அவற்றைப் பார்த்தபடி இதழோரம் அரும்பும் சிறுபுன்னகையால் கடந்து போகலாம். சொற்களால் எப்படிக் கடப்பது. சொற்களெல்லாம் ஒழித்துக்கொண்டு விட்டன. புகைப்படங்களில் இருக்கும் முகங்கள் மாத்திரம் நினைவுகளில் எழுந்தவண்ணம் இருக்கிறது. அப்பாவின் புகைப்படம் ஒன்றுகூட இப்போதில்லை. என்னுடைய 5 வது பிறந்தநாள்ப் படங்களில் அப்பாவின் முகம் எப்படியிருந்தது என்பது சேமிக்கப்பட்டிருந்தது. சின்னப்பிள்ளையில் தங்கச்சி பார்த்து அப்பா அப்பா என்று அழுது ஏங்கிப்போகலாம் என்பதற்காய் அப்பாவின் அந்தரட்டிக்குப் பிரேம் பண்ணிய பெரிய சைஸ் படத்தை சுவரில் கொழுவாமல் சூட்கேசிலேயே வைத்திருந்தாள் அம்மா. கடைசியாய் அவளது சாமத்திய வீட்டிற்குத் தான் அதை வெளியே எடுத்துக் கொழுவினாள். இப்போது அவளுடைய பிள்ளைகளுக்கு தன்னுடைய அப்பா இப்படித்தான் இருந்தார் எனச்சொல்ல ஒற்றைப் படம் கூடக்கிடையாது தங்கச்சியிடம்.ஒரு தலைமுறையின் முகம் அதன் அடுத்த தலைமுறை அறியாமலே அழிந்து போயிற்று. புகைப்படம் என்பது வெறும் நினைவுகளின் சேமிப்பல்ல என்று தோன்றுகிறது. அது சாட்சியம் வரலாற்றின் வேர்களுக்கு காலம் காட்டுகின்ற முகம் அது.
நான் எழுதித் தொலைந்துபோன கவிதைகளில் ‘அல்பங்களையும் தொலைத்தவர்கள்’ என்கிற கவிதையை நான் எத்தனையோ முறை முயன்றும் மறுபடி என்நினைவடுக்கிலிருந்து அதே சொற்களோடு கோர்க்க முடிந்ததில்லை. காலத்தை காட்சிகளாகச் சிறைப்பிடிக்கும் தொழிநுட்பங்கள் வளர்ந்து தசாப்தங்கள் கடந்துவிட்ட பின்னாலும். தமது காலத்தை தொலைப்பதையே போர் மனிதர்களுக்கு விதித்திருக்கிறது. முதல் முதலாக போட்டோசொப்பில்(photo shop) படங்களை வெட்டி ஒட்ட நான் தெரிந்து கொண்டபோது லண்டனில் நடந்த பெரியக்காவின் கல்யாணப் படத்தில் கிளிநொச்சியில் இருக்கிற பெரியம்மாவும் பெரியப்பாவும் நிற்பதுபோல வெட்டி ஒட்டி அனுப்பினேன் அக்கா அவ்வளவு சந்தோசப்பட்டாள். அவள் பிறக்கு முன்பே இறந்து போன அவளுடைய அப்பா அவளுடைய பிறந்த நாளில் இருப்பதுபோலவொரு படத்தைச் செய்து என் பிரியமான சிறுமியொருத்திக்கு பரிசளித்தேன் அவள் கொண்டாடித் தீர்த்தாள் என்னை.அந்தத் தருணத்தில் அவள் நேற்றுத் தொலைத்த பகலைக் கண்டுபிடித்துக்கொடுத்தவனின் சாயல்களோடு நானிருந்திருப்பேனோ என்னவோ?
ராமேஸ்வரம் அகதிகள் முகாமின் சிறைச்சாலையில் நான் ஒரு மாதம் இருந்தேன். அந்த நாட்களில் ஒரு வயதானவர் அங்கே வந்தார். நனைந்துபோன தன் பையிலிருந்து ஒரு தொகைப் போட்டோக்களை எடுத்து தன் பாய் முழுதும் அரக்கப்பரக்க பரப்பினார் ஒற்றைப்பாய்க்குள் அடங்காமல் அதற்கு வெளியிலும் பரவிய அவரது போட்டோக்களுக்கு நடுவில குந்தியிருந்தபடி மாறி மாறி எல்லாவற்றையும் தனது தோளில் தொங்கிய ரோஸ் நிறத் துவாயினால் ஈரம் துடைத்தபடியிருந்தார். எவ்வளவு துடைத்தாலும் தீராதபடி எல்லாவற்றிலும் ஒட்டிக்கொண்டிருந்த உப்புத் தண்ணீரோடு போராடிச் சலித்தவராய் கொஞ்ச நேரம் வெறுமனே பார்த்தபடியேயிருந்தார் அந்தப் புகைப்படங்களை. தீடீரென்று என்ன நினைத்தாரோ கதறி அழத்தொடங்கினார். யாரும் அழும் அவரைச் சமாதானப் படுத்தப் போகவில்லை, எனக்கும் அவரைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று தோன்றவில்லை. கண்ணீரால் ஒருவேளை அந்த உப்புத் தண்ணீரை உலர்த்தமுடியுமோவென நானும் நினைத்தேன். சில சமயங்களில் காலத்தைப் புகைப்படங்களில் சேமிப்பதென்பது துயரத்தை அதிகமாக்கவும் கூடும்.புகைப்படங்கள் துயரத்தின் உறுத்தலாகவும், துரத்திவிடவியலாத குட்டிநாயைப்போலக் கூடவந்து தொந்தரவு செய்யும்.
புகைப்படங்களை அழிப்பதென்பது ஒரு கொலையைப் போல நிகழ்வது. அது வெறும் காட்சியை அல்ல காலத்தையும் அதன் நினைவுகளையும் கொல்வது. அப்படிச் சில படங்களை நான் அழித்து மிருக்கிறேன். இயக்கத்தில இருந்து மாவீரராப்போன மகனின் படத்தை பேரம்பலம் பெரியப்பா சாமிப்படம் போலவே பாதுகாத்தார். அது ஒரு பெரிய படம். இரண்டு பக்கமும் கவிட்டு வச்ச தொப்பி போட்ட துவக்குகள் நிற்க மாவீரர் துயிலுமில்லத்தில போடுற பாட்டு பிரிண்ட் பண்ணியிருக்கிற படம். அதை மண்ணுக்க தாட்டுப்போட்டு இடம்பெயர்ந்து போனது குறித்து மறுபடி மறுபடி ஒரு குழந்தையைப் போல அழுதுகொண்டேயிருந்தார். மகனை இழந்த துயரம் கரைந்து கரைந்து நாளாவட்டத்தில் அந்தப் படம் அவரது வீட்டுச் சுவரை அலங்கரித்தபடியிருப்பது குறித்த பெருமிதத்தையும் காலம் அவருக்கு வழங்கியிருந்தது. இப்போது மறுபடியும் மீளக்குடியேறியான அவர் தன் மகனது படத்தை சுவரில் கூட கொழுவிவைக்க முடியாமல் தவித்துக்கொண்டிருக்கலாம். காலம் ஒரே மனிதனின் புகைப்படத்தை பெருமையின் சின்னமாகவும் பிறகு காட்டிக்கொடுக்கும் அடையாளமாகவும் மாற்றியபடி அவரெதிரில் பல்லிளிக்கிறது. போர் புகைப்படங்களை அழித்துவிடுகிறது. முள்ளி வாய்க்காலில் தான் எல்லாப் படங்களையும் தண்ணியில் ஊற வச்சு கரைத்துஅழித்தேன் என்று எனக்குச் சொன்ன நண்பருடைய தாயின் கண்ணீரை எதிர்கொள்ளவியலாமல் வெளியேறினேன். தன்னுடைய காலத்தின் நினைவுகளைத் தன் கரங்களால் அழிக்கிற பெருந்துயரை அவளுக்களித்த போரின் மனிதர்களைச் சபிப்பதன்றி, அந்தக்காலத்துக்குள் சிக்காமல் தப்பித்து வெளியேறிவிட்ட குற்றவுணர்விலிருந்து தப்பிக்க வேறெதைத் தான் நான் செய்வது.
போட்டோக்களால் செய்யப்படுகிற அரசியல் தனி மனிதனிலிருந்தே ஆரம்பிக்கிறது. அடையாள அட்டையிலிருந்து, பிணை வைக்கிறது வரையில் என்னுடைய புகைப்படங்களைச் சமர்ப்பித்துக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது. குருதி பெருகி வழியும் வன்னியின் புகைப்படங்கள் உலகத்தின் மனசாட்சியின் மீது ஆறாத ஆற்றமுடியாத காயங்களாகப் படர்கின்றன. சானல் 4 வீடியோவில் ஒரு பெண் கதறுகிறாள் “இப்ப படமெடுத்து என்னத்தை கிளிக்கப்போறியள் பங்கருக்க வந்து படுங்கோவன்” வன்னியின் போர்க்காலச் செய்தியாளர்கள் தம் உயிரைத் துச்சமென மதித்து,போர் மனிதர்களின் மீது எழுதிக்கொண்டிருக்கிற காட்டுமிராண்டித்தனமான வன்முறையை பதிவு செய்து உலகத்தின் இரக்கத்தினை சம்பாதித்து எப்படியாவது ‘அவர்களை’ பிழைக்கவைத்துவிடவேண்டும் என்கிற முனைப்போடு எடுத்துத் தள்ளிய புகைப்படங்களில் மரணம் துருத்திக்கொண்டு தெரிய, அதைவிட அதிகமாக மரணத்தின் குரூரங்களை நாங்கள் பார்த்திருக்கிறோம் என்பது மாதிரி இந்த உலகம் வாழாவிருந்தது. உலக மனசாட்சியின் குரூரப்புன்னகை மரணத்தையும் பின்தள்ளியபடி அந்தப் புகைப்படங்களில் தெரிகிறது. அந்தச் சனங்களை போருக்குள் மூச்சுத் திணறத்திணற அமிழ்த்தியவர்களின் கைரேககைகள் அந்தப் படங்களின் பின்னால் அழுந்தப் படிந்திருக்கிறது. அந்தப்புகைப்படங்களில் பின்னால் செய்யப்பட்ட செய்யப்பட்டுக்கொண்டிருக்கிற அரசியல் சனங்களின் மரணத்தின் மீதே நிகழ்த்தப்படுகிறது. எல்லாம் முடிந்த பின்னால் அந்தப்போரின் தயாரிப்பாளர்களும், முதலீட்டாளர்களும்,விநியோகஸ்தர்களும், போரின் சூட்சுமதாரிகளும், வாடிக்கையாளர்களும் இப்போது உச்சுக்கொட்டியபடி ஒவ்வொரு அல்பமாகப் புரட்டுகிறார்கள். போர் விரும்பிகள் அடுத்த போருக்கான ஆசையின் வீணீர் தம் வாய்களில் வடிவதை மறைக்க மறந்து இந்தப் போர்ப் படங்களின் மீது முதலைகளாகிக் கண்ணீர் வடிக்கிறார்கள். அதன் மீது செய்யப்படப்போகும் அடுத்த அரசியல் காய் நகர்த்தல்களை மனசுக்குள் அசைபோட்டபடி.
வன்னியின் இரண்டு முக்கியமான புகைப்படக்கார்களை எனக்குத் தெரியும். ஒளியும் நிழலுமில்லாத நிகழ் காலத்துக்குள் சிக்கிக்கொண்டிருக்கும் அவர்களுடைய உலகத்தை இப்போது எது நிரப்பிக்கொண்டிருக்கிறதெனச் சொற்களுக்குத் தெரியவில்லை. இரண்டு பேரிடமும் இன்றைக்கு கமரா இல்லை. இப்போது விடுவிக்கப்பட்டிருக்கும் போராளிப் பெண் புகைப்படப் பிடிப்பாளர் மீது எனக்குத் தீராத கோபமிருக்கிறது. வன்னியின் மூலை முடுக்குகளையெல்லாம் பதிவு செய்து அல்பங்களாக அவர் அடுக்கி வைத்திருந்தார். ஆனால் பிரசுரத்துக்காகக் கேட்டால் தரவே மாட்டார். அத்தி பூத்தாற்போல ஒன்றிரண்டு எப்போதேனும் தருவார் மிச்சத்தையெல்லாம் கேட்டால் இந்தப் பூக்களெல்லாம் கண்ணனுக்கே வேறு யாருக்கும் காட்டக்கூட மாட்டேன் என்கிற மாதிரிப் பதிலளித்துக் கடுப்பேத்துவார். அவர் வெளியிட்ட ஒன்றிரண்டு புகைப்படங்களுக்காகவே பிரபலமடைந்து விட்டவர். அவருடைய புகைப்படங்களை முழுமையாகத் தொகுத்திருந்தால் ஒரு வேளை வன்னியின் வாழ்வியல் 70 வீதம் பதிவுசெய்யப்பட்டிருந்திருக்கும் புகைப்படங்களில். தன் கமராவுக்குள சிக்கிய காலத்தையும் சேர்த்தே தொலைத்த கதை அவருடையது.
நான் இணையத்தளமொன்றுக்காக வன்னியில் இருந்தபடி செய்திகளைப் பதிவேற்றம் செய்துகொண்டிருந்தேன். நிருபர்கள் பல்வேறு பிரதேசங்களிலிருந்து அனுப்புகிற செய்திகளையும் புகைப்படங்களையும் பதிவேற்றம் செய்வது இதுதான் என்னுடைய வேலையாயிருந்தது. சமாதானச் சீசன்களின் கடைசிச் சீசனில் சமாதானம் ரத்ததாகமெடுத்து வீழ்ந்து சேடமிழுத்துக்கொண்டிருந்தது. நாடு முழுவதிலுமிருந்து பிணங்களின் புகைப்படங்கள் விதவிதமாக வந்து கொண்டேயிருந்தன். எல்லாம் கொலைகள் சிலகொலைகள் நியாமென்றென செய்திகள். அதே கொலைகள் அநியாயப் படுகொலைகள் என்றன வேறு சில செய்திகள். செய்திகளில் எது சொல்லப்பட்டாலும் புகைப்படங்களில் இருந்தது பரிசளிக்கப்பட்ட மரணம். இவ்வளவு குரூரமான புகைப்படங்களைப் பார்த்து இணையத்தள வாசகர்கள் அதிர்ச்சி அடைந்து விடுவார்கள் என்பதால் அவற்றை கறுப்பு வெள்ளைப் படங்களாக மாற்றி இணையத்தளத்தின் இலச்சினையை படங்களின் மேல் பொறித்து அதைப் பதிவேற்ற வேண்டியது என்வேலை. இரவு பகல் பாராத வேலை எனக்குள் போர் பற்றிய, துப்பாக்கி பற்றிய வீரதீரக் கதைகளுக்கும் அப்பாலான கதைகளை அந்தப் படங்களே எனக்குச் சொல்லின. நான் செய்துகொண்டிருப்பது பிணங்களுக்கு முத்திரை குத்துகிற வேலையா என்று தோன்றிய ஒரு பகலில் திடீரென அந்த வேலை எனக்கு வேண்டாமெனச் சொல்லி வெளியேறினேன்.
நான் எடுத்த புகைப்படங்களில் ஒன்றிரண்டைத்தவிர வேறேதுவும் என்னிடமில்லை. எனது புகைப்படங்களில் சிக்கிய முகங்களில் என்னோடு அதிகம் பேசிக்கொண்டேயிருக்கிற முகம் ஒரு செஞ்சோலைச் சிறுமியுடையது. என்னுடைய மரணத்தின் வாசனை புத்தகத்தின் அட்டையில் இருக்கிற அந்த புகைப்படச் சிறுபெண்ணை நான் திரும்பவும் சந்திக்க நினைக்கிறேன். இன்னும் நான் எழுதியிராத ஒரு வார்த்தையால் அவளுக்கு என் அன்பைச் சொல்ல விரும்புகிறேன். தேடலின் முடிவுகள் குறித்த அச்சத்தில் அவள்குறித்த தேடலை ஒத்திப்போட்டபடி காலத்தை கடந்து போகிறேன் சுயநலவாதியாய்.
இன்னமும் நான் ஒருத்தியைப் புகைப்படமெடுக்க விரும்புகிறேன். அமைதியே உருவான நீள்வட்டக் கண்களுக்குள்ளால் சிரிக்கத்தெரிந்த ஒருத்தியை. பெரியம்மா தன் பிள்ளைகளின் எண்ணிக்கையை திடீரென்று ஒரு மாலையில் ஒன்றினால் அதிகரித்திருந்தாள். பெயர் நிஷா. வீட்டுக்கு அடிக்கடி வருகிற ஒரு இயக்க அக்காவின் பெயரைச் சொல்லி அவா கொண்டு வந்து விட்டுவிட்டுப்போனவா என்கிற தகவல் மட்டும்தான் எனக்குத் தெரியும். பிறகு வழக்கத்துக்கு மாறாக வெள்ளனவாக முத்தங்கூட்டுகிற சத்தம் வீட்டில் கேக்கத்தொடங்கியது. எல்லாவேலையையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வாள். எனது அறையின் அலங்கோலத்தை அழகாக்குவாள். எனது புத்தகங்களையும் பேப்பருகளையும் கேக்காம எடுக்கிற பழக்கம் முதலில் எரிச்சலூட்டினாலும் பிறகு அவா எடுத்துக்கொண்டு போவதற்காக நான் பேப்பருகள் வாங்கத் தொடங்கினேன். நான் நிஷாக்கா எனக்கிந்த சேட்டை அயர்ன் பண்ணித் தாறியளா? எனக்கும் சாந்தனுக்கும் ரீ போடுறியளா? எண்டு கேக்கிற அளவுக்கு உரிமை எடுத்துக் கொண்டேன். எந்த நேரமும் உனக்கொரு தேத்தண்ணி எண்டலுத்துக் கொள்கிற சின்னக்காவுக்குப் போட்டியாக அலுப்புகள் ஏதுமன்றி ரீயா கோப்பியா எனத் தெரிவுகளை முன்வைத்துச் சிரிக்கிற நிஷாக்கா. அவளது சிரிப்பை படங்கள் எடுக்க மட்டும் அனுமதித்ததில்லை. என்னிடமிருந்த இரவல் கமராவில் கண்டபடி எல்லாவற்றையும் படமெடுத்துத் தள்ளிய நாட்களின் அவவையும் எக்கச்சக்க தடைவைகள் படமெடுத்திருக்கிறேன். ஆனால் கமராவின் படமெடுக்கும் வேகத்தை விஞ்சிவிடுகிற அவாட முகத்தை மூடிக்கொள்கிற வேகம் என்னை வியப்படைய வைத்திருக்கிறது. அவா எங்கட வீட்டில தங்கியிருக்கிற வேறு ஒராள் என்பது எங்களவில் மறந்து போன ஒன்றாயிருந்தது.
2006 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் ஒரு நாள் திடீரென்று என்னிடம் வந்து “அகிலன் என்னை ஒருக்கா முகமாலையில் இறக்கி விடுறியாடா 6 மணிக்கு பாதை பூட்டீருவாங்கள், இப்பவே நாலரையாப்போச்சு பஸ்சில போனா போகேலாது” எண்டு கேட்டா. நான் முகமாலைக்கு மோட்டசைக்கிளைத் திருப்பினேன். முகமாலையில் இருந்து திரும்பி வரும்போதே இன்றையோட இந்தப்பாதை பூட்டுப்படப் போகுது என்கிற செய்தி எனக்குத் தெரிந்தது. அதற்குப் பின் இரண்டாம் நாளோ மூன்றாம் நாளோ தன் முகத்தை மறைத்துக்கொள்ளாத நிஷாக்காவின் படத்தை நான் பார்த்தேன். அந்த மரணத்துக்குப் பரிசாகக் கிடைத்த வெற்றிக்கான பிரியாணி எனக்குத் தெரிந்த இயக்க முகாம்களில் பரிமாறப்பட்டது. என் வாழ்நாளில் நான் பெரிதும் வெறுத்த சாப்பாடு அதுதான். அந்தக் கொலையை அல்லது மரணத்தை தியாகமாகவும், வீரமாகவும், அல்லது வெற்றியாகவும் எனது சொற்களுக்கும் மனதுக்கும் கொண்டாடத் திராணியிருக்கவில்லை. அதற்கு முன்பும் நான் உண்டிருந்த அதைப்போன்ற எல்லா வெற்றிப் பிரியாணிகளின் பின்னாலிருந்த மரணங்களின்,மனிதர்களின் வாழ்வு குறித்த கேள்விகளும் குற்றவுணர்வும் எனக்குள் மேலோங்க எல்லாவற்றையும் ஓங்காளிச்சு ஓங்காளிச்சு சத்தியெடுக்கவேண்டுமாப்போல இருந்தது. இங்கே புனிதமென்று பெயரிடப்பட்டிருப்பது சராசரிகளினின்றும் விலகிச் செல்கிற சுயநலத்தைக் காக்கிற, பெருகிக் கிடக்கிற முதலீட்டாளர்களிடமும் பார்வையாளர்களிடமும் தம் பெருமையைப் பீத்துவதற்கான ஒரு உத்தியன்றி வேறொன்றுமில்லை எனப்பிறகொரு பொழுதில் புரிந்தபோது அதையெல்லாம் குறித்த கவலைகளற்று சனங்கள் குறித்த கனவுகள் நிரம்ப எனது வீட்டில் பரவிக்கிடந்த அந்த நீள்வட்டக் கண்கள் கொண்ட சராசரிப் பெண்ணின் சிரிப்பினது காலம், அவள் கண்களுக்குள் நிரம்பியிருந்த இலட்சியங்கள் மீதான அப்பழுக்கற்ற நம்பிக்கை என எல்லாமே எனது கமராவிடமிருந்து நழுவிப்போயிருந்தது தன்னைப் பிரதிசெய்துகொள்ளாமலேயே.
கூர் 2012 (வெயில் காயும் பெருவெளி) இதழில் பிரசுரமானது.
அகிலன், மறந்து போன பல புகைப்பட நினைவுகளையும் புகைப்படங்களே வேண்டாமென முகம் மறைத்த பலரது தோழமை நினைவுகளையும் ஞாபகப்படுத்தியிருக்கிறது உங்கள் பதிவு. வன்னியின் தெருக்களும் அந்த மண்ணின் மண் துணிக்கைகளும் பதிவான கமராக்கள் எத்தனையோ இன்று துரோகங்களாக சித்தரிக்கப்பட்டும் தூரவைக்கப்பட்டுள்ள கொடுமையான நினைவுகளளையும் உங்கள் கமராவின் கண்களின் ஊடாக தரிசிக்கிறேன். நிறைய கமராக்கள் பற்றி எழுதி வைக்க வேணும் போலான உணர்வை இந்தப்பதிவு தந்துள்ளது. பழையபடி மெல்ல மெல்ல எழுத ஆரம்பித்திருக்கிறீங்கள். மீளவும் நிறைய அகிலன் எழுத வேண்டும் எழுதுங்கள்.
மனதுக்கு பாரமான நினைவுகள்..தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் எழுதுகோல் எப்போதும் மாறாதவை அதுவே உங்கள் அடையாளம்