எனது சொற்களை அடைத்துக்கொண்டிருப்பது எது?
கைநழுவிய சொற்களா?
சொற்களால் செய்யப்பட்ட கொலைவாட்களா?
உதிர்ந்துபோன காலமும்
மலராத கணமுமா?
என் சொற்களைத் தேக்கிவைத்திருப்பது எது?
அவசர அவசரமாகத் தாம் நடந்த தடங்களை அழித்தபடி
வழிகாட்டிகள் திசைகளை மாற்றினர்
கொலைவாட்களைப் பதுக்கியபடி நண்பர்கள் குலாவினர்
எதிரிகளிடம் மட்டுமே மிஞ்சியிருக்கிறது நேர்மை.
யேசுநாதர்கள் பெருகிப்போயிருக்கும் சபையில்
ஓரு குற்றவாளியாய் உள்நுழைகிறேன்.
எல்லோரிடமும்…
போதனைகள் இருக்கின்றன
தண்டனைகள் இருக்கின்றன
கேள்விகள் இருக்கின்றன
பதில்கள் இருக்கின்றன
நியாயங்கள் இருக்கின்றன
தீர்புக்களைக் கூட வைத்திருக்கிறார்கள்
சபைநிறைந்த சனங்களிடையே
குற்றங்கள் யாரிடமுமில்லை.
இறுக மூடியகைகளுக்குள்
காத்திருக்கின்றன கற்கள்
எனக்கான பாவமன்னிப்பை
நிகழ்த்தப்போகிறவர் எந்தயேசுபிரான்.
ஏனெனில் என்னிடமுமிருக்கிறது
ஒரு கல்.