Skip to content
த.அகிலன்

கனவும், வாழ்வும் பின் என் சொற்களும்…

த.அகிலன்

கனவும், வாழ்வும் பின் என் சொற்களும்…

கூத்துப் பார்க்கப் போன கூத்து

த.அகிலன், May 17, 2008December 1, 2009

மாப்பிள்ளை வாறார் மாப்பிள்ளை வாறார்
மாட்டு வண்டியில
பொண்ணு வாறா பொண்ணு வாறா
பொட்டு வண்டியில

எப்போதாவது அம்மம்மா வீட்டில் தங்க நேர்கிற சந்தர்ப்பங்களில் அம்மம்மா பாடுகிற பாடல்வரிகளில் எனக்கு நினைவிருக்கிற மிகவும் பிடித்த இரண்டு வரிகள் இவை. அம்மம்மா எப்போதும் இரவுகளில் தூங்குவதில்லை மாலை ஆறுமணிக்கு மேல் துணையின்றித் தனியாக ஒன்றுக்கும் போகத் தைரியம் வராத வயசில் நான் இருக்கையில், வாசலை விட்டுக் கீழ இறங்கவே அம்மாவைத் துணைக்குக் கூப்பிட்டு அம்மாவின் சினத்தையும் சேர்த்துக் கூட்டிக் கொள்ள வேண்டும். ஆனால் அம்மம்மா வீட்ட நிண்டால் எந்த நடுச்சாமத்திலும் வெளியில போகலாம் ஏனெனில் அம்மம்மா எப்பவும் முழிச்சிருப்பா. கைவிளக்குப் பெரிசாகப் புகைஞ்ச படி எரிந்து கொண்டிருக்கும். அம்மம்மா வீட்டை பெரிய பித்தளைக் கைவிளக்கு இருந்தது அந்தக் காலத்தான். இரவுமுழுதும் சத்தகத்தால் பனையோலையைக் கிளிக்கிற ‘சரக் சரக்’ என்ற சத்தமும். பெட்டிகள், நீத்துப்பெட்டிகள் கடகங்கள் பின்னுகிற சத்தமும் கேட்டுக்கொண்டேயிருக்கும் தாலாட்டாய். லேசாக அருண்டாலும் என்னய்யா வெளியில் போகோணுமே என்று கேப்பா. அம்மம்மா இரா முழுதும் பாடிக்கொண்டேயிருப்பா. அப்படி அம்மம்மா நிறையப் பாடல்கள் பாடிக்கேட்டிருக்கிறேன். அவையெல்லாம் அம்மம்மா சின்ன வயசில் பார்த்த கூத்துக்களில் இடம்பெறுகிற பாடல்கள் என்று சித்தி சொல்லியிருக்கிறார். எங்கள் அம்மப்பா ஒரு கூத்துக் கலைஞராம் அரசாங்க உத்தியோகம் பார்த்து வந்தாலும் கூத்திலும் நாடகத்திலும் அவருக்கு தனி ஆர்வம் இருந்ததாக நான் பின்னாளில் அறிந்திருக்கிறேன். அம்மம்மாவின் கல்யாணம் காதல் கல்யாணம் என்று பொன்னம்பலம் ஆச்சி சொல்றவா. ஒன்றும் ஒன்றும் மூன்றான ரகசியம் இதுதான். அவர் கூத்துக் கலைஞர் இவா கூத்தின் ரசிகை எல்லாத்தையும் ஒன்றாக முடிச்சிட்டுப் பாhத்தா அம்மம்மா கூத்துப்பாடல்கள் பாடுவதன் ரகசியம் அம்பலமாகும் என்று நினைக்கிறேன்.
அந்தக் காலத்தில நடக்கிற மாதிரிக் கூத்துகள் இப்ப இல்லை என்று பெரியம்மா சொல்லுவா. எனக்கு கூத்து என்கிற கலை வடிவத்தின் சொற்பிரயோகங்கள்,வடிவங்கள்,விதிமுறைகள் வரலாறு இப்படி எதுவும் தெரியாது. ஒரு ரசிக மனோநிலையில் ஆர்வக்கோளாறாக சில விசயங்களை எழுதலாம் என்று வெளிக்கிட்டிருக்கிறன். எனக்கு கூத்து என்கிற கலைவடிவத்தின் சொல்லறிமுகம் அம்மம்மாவிடம் இருந்து கிடைத்தாலும் நான் கூத்து என்கிற பெயரில் முதல் முதலாகப் பார்த்ததாய் நினைவில் இருப்பது “களத்தில் காத்தான்” சிந்து நடைக் கூத்து. ஆறு வயதில் என்று நினைக்கிறன். ஆனால் அதில் பாடப்பட்ட சில வரிகள் தான் எனக்கு இப்பவும் நினைவிருக்கு.

பேப்பரெடுங்கடா விடுதலைப் பேப்பரெடுங்கடா
…………………………….
இப்படிப் பாடியபடி துவக்கேந்திய நாலைந்து பேர் டேய் நைன்ரி பேப்பர் எடன்ரா என்று ஒரு கிழவரை வெருட்டுவார்கள். எதற்காக இந்தக் காட்சி எனக்கு நினைவிருக்கிறது எண்டு தெரியவில்லை. சிலவேளை வயது போனவர்களை நைன்ரி என்று கிண்டலடிக்கிற சொற்பிரயோகத்தை அறிந்துகொண்டதாலா என்று தெரியவில்லை. ஏதோ நினைவில் நிற்கிறது.
 பிறகு நான் பார்த்த கூத்து காத்தவராயன் கூத்து. ஆரியமாலா குளிச்ச தண்ணியே இவ்வளவு வாசனையாயிருக்கே. அவள் எவ்வளவு வாசனையான அழகியாய் இருப்பாள் என்று ஆரியமாலையைத் தேடிக் காதலிக்கிற காத்தவராயனின் கதை. காத்தவராயனின் தாய் ( முத்துமாரி என்று நினைக்கிறேன்) மகனே நீ ஆரியமாலையைத் மணமுடிக்க வேண்டுமாயின் மலையைப் புரட்ட வேண்டும் மடுவைக் கிழிக்க வேண்டும் என்பது மாதிரியான ஏகப்பட்ட நிபந்தனைகள் வைப்பாள். மகன் அத்தனையும் செய்து மாலையை மணமுடிக்க சிரமப்படுவான். அந்தக் கூத்திலிருந்தும் ஒரு வரி நினைவிருக்கிறது. மலையிலே எதிலோ ஏறிக்கொண்டே காத்தவராயன் பாடுவான்.
 
 ………. எல்லாம் ஏறிவந்தேன் பெத்தவளே தாயே
 என் பாதம் மிக நோகுதம்மா பெத்தவளே தாயே

இப்படியாக எனக்குள் கூத்துப்பார்த்த நினைவுகள் கிடக்கின்றன. நான் மேலே சொன்ன பாடல் வரிகள் எல்லாம் சரியானவைதான் என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. பிறகு தெருக்கூத்துகள் வந்தன. அவை தெருக்கூத்துகள் என்று சொன்னாலும் அவை தெருக்களில் நிகழ்த்தப்பட்ட நாடகங்கள் அவ்வளவுதான் என்று நினைக்கிறேன்.(நான் பாhர்த்தவை) போராட்டத்திற்கு ஆளெடுப்பதற்கு நிகழ்த்தப்பட்டவை. என்னுடைய அறிவுக்கெட்டியபடி கூத்து என்பதன் கதைநகர்த்தல் அதிகமாக பாடல்களினூடாகவும் கொஞ்சமாய் வசனமாகவும் இருக்கும். (யாரேனும் துறை சார் அறிஞர்கள் விளக்கங்கள் அளிக்கலாம்) நாடகம் என்பதன் கதைநகர்த்தல் உரையாடல்களிற்கூடாக நிகழ்த்தப்படுவது. இப்படித்தான் நான் இரண்டையும் புரிந்து வைத்திருக்கிறேன். (மிகப் பெரும் தவறான விளக்கங்களாகவும் இருக்கலாம் யாரும் வரிந்து கட்டிக்கொண்டு வரவேண்டாம் )
Photobucket

 தமிழ் நாட்டில் நிறையக் கூத்துவடிவங்கள் இருக்கின்றன. அவை நிகழ்த்தப் படவும் செய்கின்றன. நிறையக் கூத்துக் கலைஞர்களும் வறுமையின் பிடியில் வாழ்கிறார்கள். சென்னைக்கு கிட்டவாய் காஞ்சிபுரம் பகுதியில் கூத்துகள் அதிகம் நிகழ்த்தப்படுகின்றன என்றும். சிறந்த கூத்துக் கலைஞர்கள் அங்கேதான் இருக்கிறார்கள் என்றும். எங்களைக் கூத்துப்பார்ப்பதற்காக காஞ்சிபுரம் அழைத்துக்கொண்டு போன நண்பர் முத்துக் கந்தன் சொன்னார். காஞ்சியில் இருக்கிற சுங்குவார்ச் சத்திரம் என்கிற கூத்து நடக்க இருந்த கிராமத்திற்கு நாங்கள் போகவே இரவு 9.30 மேலாயிற்று. நான் கூத்து நடக்க இருப்பது ஏதாவது கோயில் திருவிழாவாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் திருவிழாவின் வாடை கூட அந்த சுற்று வட்டாரத்திலேயே இல்லை. ஒரு வீட்டிற்கு முன்பாக கொஞ்சப் பேர் கூடியிருந்தார்கள் சிறிதாக ஒரு பந்தல் போடப்பட்டிருந்தது அவ்வளவுதான். நண்பர் முத்துக் கந்தன் அது ஒரு காரியக் கூத்து என்றார். நான் என்ன காரியமாக் கூத்து என்றேன். ஆட்கள் இறந்தால் பதினாறாம் நாள் காரியம் செய்வார்கள் இல்லையா அதற்காக நிகழ்த்தப் படுகிற கூத்துதான் காரியக் கூத்து என்றார் முத்து.(இலங்கையில் எட்டுச்சிலவு மாதிரியான சடங்கு) எனக்கு இந்த விசயம் புதுசாக இருந்தது கூத்து என்பதை ஒரு கொண்டாட்ட விசயமாக கருதி மகிழ்வான விழாக்களில் மட்டுமே நிகழ்த்தப் படுவதாக அது இருக்கும் என்றும் கருதியிருந்தேன். அது துயரத்திற்கும் நிகழ்த்தப் படுகிறது என்பது ஆச்சரியமூட்டியது.

 கர்ண மோட்சம் கூத்து நிகழ்த்தப்படப் போவதாகச் சொன்னார்கள். இறந்தவர் மோட்சம் போவதற்காக என்று நினைத்துக்கொண்டேன். சென்னையில் இருந்து வந்திருக்கிறோம் என்பதும், நாங்கள் போயிறங்கியிருந்த வாகனமும் எங்கள் கையில் இருந்த கமாராக்களும் ( இரவல் தான்) எங்களை அவர்கள் ஒப்பனை செய்வதைப் பார்ப்பதற்கான அனுமதியைப் பெற்றுத் தர உதவியது. ஒரு சின்னப் பையனும் அந்தக் கூத்துக் குழுவில் இருந்தான். எனக்கு அவனை மிகவும் பிடித்திருந்தது. அவனது அப்பாவும் அந்தக் குழுவில் இருக்கிறாராம் என்றான்;. (கூத்தாடிக் குடும்பம்.)  சின்னவனைத் தவிர மற்றெல்லாருடைய கண்களும் குடித்துச் சிவப்பேறியிருந்தன. ஒப்பனை ஆரம்பமாகியது சின்னவன் உட்பட எல்லோரும் தமக்குத் தாங்களே ஒப்பனை செய்து கொண்டார்கள். நாங்கள் பார்த்துக்கொண்டிருக்க அவர்களது முகம் கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. அவர்களது சொந்தமுகம் மறைந்து கதாபாத்திரத்தின் முகம் கண்முன்னே விரிந்தது. முகம் மாத்திரமல்ல அவர்களுடைய மனமும் அந்தப் பாத்திரமாகவே மாறிவிடுகிறதைப் பார்க்கமுடிந்தது. இங்கே அந்தப் பாத்திரமாக மாறிவிடுகிறது என்று சொல்வது வழக்கமாக எங்கள் சினிமாக்காரர்கள் சொல்கிற அர்த்தத்தில் கிடையாது. இது கலையாடிகள் மாறிவிடுவது போன்ற அர்;த்தத்தில் என்று வேண்டுமானால் சொல்லலாம். அதாவது முனியம்மா அருள்வந்ததும் மாரியாத்தா ஆகிவிடுகிறது மாதிரி. அதைப்போல இங்கேயும் கர்ணன் வேசம் போட்டவர் கிட்டத்தட்ட கர்ணணாக மாறிவிடுகிறார்.

 ஒப்பனைகள் முடிந்து பபூன் மேடையில் தோன்றவே மணி பதினொன்றரை ஆகிவிட்டது. கூத்து தொடங்கியது. கூட்டமாக நின்று கொண்டு சத்தமாக அவர்கள் பாடிய பாடல்கள் சுழன்று சுழன்று அரங்கைச் சுற்றிவந்து ஆடிய வேகம் எல்லாம் அவர்களுக்குள் நம்மை ஈர்த்தது இந்தக் கலைவடிவத்தை இத்தனை நாள் தவறவிட்டிருக்கிறோமே என்று கவலைப்பட வைத்தது. அது ஒரு அற்புதமான அனுபவத்தை கண்முன் விரித்தது. ஒவ்வொரு பாத்திரமும் அறிமுகமாகும் போதும் கூத்து மேலும் சுவாரசியமானது. அதைவிட அவர்கள் மக்களோடு உரையாடிபடி தங்கள் கூத்தை நகர்த்திச் சென்ற விதம் ஆச்சரியமூட்டியது. அவர்களுடைய உரையாடல்கள் ஏற்கனவே தயார் செய்யப்பட்டவை அல்ல கருப்பொருளை மட்டும் மனசில் வைத்து உடனடியாக நிகழ்த்தப் படுபவை. உதாரணத்திற்கு துரியோதனன் தன்னுடைய நாட்டைப் பற்றிச் சொல்லுவான்.
நான் துரியோதன மகாராஜா என்னுடைய நாடு பெரியது.
அதிகாரங்கள் வாய்ந்தது
எப்படி?
அதிகாரங்கள் வாய்ந்தது.(பார்வையாளர்கள்)
அது தில்லி மாதிரி. என்னுடைய நாட்டு மக்கள் செல்வச் செழிப்போடும் புன்னகையோடும் வாழ்வார்கள். இதோ இவர்களை மாதிரி (பார்வையாளர்களில் ஒரு சிலரைக் காட்டுவார்)

இப்படி பார்வையாளர்களையும் தங்கள் கூத்தில் பங்கேற்பாளர்களாக மாற்றி கூத்தை நிகழ்த்திச் செல்வார்கள். அது மிகவும் புத்திசாலித் தனமாக அரங்காக, கலைவடிவமாக எனக்குப் பட்டது.
 கூத்து நிகழ்ந்து கொண்டிருக்கையிலேயே பார்வையாளர்களில் சிலபேர் தங்கள் வித்தைகளைக் காட்டிக்கொண்டிருந்தார்கள். சிலர் குடித்து விட்டு அலப்பறை பண்ணிக் கொண்டிருந்தார்கள் வேட்டி சரியச் சரிய. இன்னும் சிலபேர் பபூனிடம் பத்து ரூபாய், இருபது ரூபாய் என்று காசு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். காசு கொடுத்ததும் ஆடிக்கொண்டிருக்கும் பாத்திரம் அப்படியே நிற்க பப+ன் அறிவிப்பார்; சுங்குவார்ச் சத்திரத்தை சேர்ந்த முருகையா இங்கே கர்ணணாக வேசம் போட்டிருக்கிறவருக்கு பத்துரூபாவும். துரியனாக வேசமிட்டிருக்கிறவருக்கு பத்து ரூபாவும் ஆக மொத்தம் இருபது ரூபாய் அன்பளிப்பாக வளங்கியிருக்கிறார் என்று பபூன் அறிவித்ததும் பணம் கொடுத்த முருகையா அப்படியே (n)காலரைத் தூக்கி விட்டுக்கொண்டு எகத்தாளமாய் கூட்டத்தை ஒரு பார்வை பார்ப்பார். உடனே முருகையாவுக்கு போட்டியாக இன்னொரு கறுப்பையா வேட்டியை மடிச்சுக்கட்டிக்கொண்டு  எழுந்து போய் அவரைவிட அதிகமாய்க் காசு கொடுத்து விட்டு அவரை விட எகத்தாளமாய் பார்த்துக்கொண்டு போய் அமர்வார் பபூன் இதை ஊக்குவித்தபடி இருப்பார். நான் இதெல்லாம் கூத்தில் வருகின்ற விளம்பர இடைவேளை போல என்று நினைத்துக்கொண்டேன். அவர்கள் அப்படிக் காசு கொடுத்த போது எனக்கு வேறு ஒன்று நினைவுக்கு வந்தது.

Photobucket

இலங்கையின் செத்த வீடுகளில் நடக்கிற கூத்தொன்று இது. ஒரு முறை எங்களுக்கு பிசிக்கஸ் படிப்பிக்கிற சிறீ வாத்தியின்ர அப்பா செத்துப் போனார் வாத்தியார் வவுனியாவுக்குப் போனவர் உடன திரும்பி வரமுடியாத நிலைமை அவர் எங்களுக்குப் படிப்பிக்கும் போது கரும்பலகையோடு சேர்ந்து நித்திரையடிக்கிறதையெல்லாம் மன்னிச்சு நாங்கள் வேறு வழியின்றி அந்தச் செத்த வீட்டு வேலைகளைப் பொறுப்பெடுத்து செய்யவேண்டியதாப் போச்சு. வாத்தியார் வந்தவுடன் கொள்ளிவைக்கத்தயாராய் ஏற்பாடுகள் செய்யவேண்டும். வாத்தியார் வந்திட்டார் வகுப்புப் பெடியள் தான் பாடையைத் தூக்கிக் கொண்டு சுடலை வரைக்கும் போகவேண்டும். சுடலை வீட்டில இருந்து ஒரு இரண்டு கிலோ மீட்டர் வரும். கொஞ்சப் பெருசுகள் தண்ணியைப் போட்டிட்டு பறைமேளம் அடிக்கிறவைக்கு காசைக் காட்டி ஒவ்வொரு சந்தி சந்தியா நிண்டு அடி ம் அடி, இன்னும் வடிவா அடி எண்டு டான்ஸ் ஆடிக்கொண்டு நிக்கினம். பெடியள் தோள் நோகுது மச்சான் கெதியா கிளப்படா இங்களை  எண்டுறாங்கள். ஆனால் கிழடுகளோ விடுற பாட்டைக் காணம். பறை மேளம் அடிக்கிறவைக்கு காசு கொடுக்கிறது பிரச்சினையில்லை. பிரச்சினை வேற. சுப்பிரமணியம்  ஐம்பது ரூபாய்  குடுத்து அடியெண்டா கந்தசாமிக்கு அது கௌரவப் பிரச்சினையாகீரும். அவர் உடன நூறு எடுத்து விசுறுவார் இப்படி அவைக்குள்ள தங்கட ‘கெத்தைக்’ காட்டுறதக்கு ஆற்றையேனும் செத்தவீட்டைப் பயன்படுத்துறது. பறையடிக்கிறவர்களுக்கு என்னதான் காசெண்டாலும் இவங்கள் தங்கட பெருமையக் காட்டி முடிக்கக் கிடையில நாக்குத் தொங்கிப்போடும். ஆனாலும் இது தங்களுக்கு விடுக்கப் பட்ட சவால் எண்டு நினைச்சோ. அல்லது காசைக் காட்டி எங்களை இப்படி வருத்துறாங்களே என்ற கோபத்தையோ அவர்கள் தங்கள் பறையில் பிளந்து கட்டிக்கொண்டிருப்பார்கள். இப்பவும் கூத்துக் கலைஞர்களுக்கு மாறி மாறி இவர்கள் காசு கொடுத்தபோது எனக்கு அதுதான் நினைவுக்கு வந்தது.

 கூத்து நடந்து கொண்டிருந்தது. நான் படமெடுத்துக்கொண்டிருந்தேன். கலைஞர்களைப் படமெடுத்து முடிந்ததும் குழந்தைகளைப் படமெடுக்கத் தொடங்கினேன். இரண்டு மூன்று கிளிக்குகள். ஒரு இரண்டு வயதுச் செல்லம் ஒன்றைப் படமெடுக்க எவ்வளோ முயன்றும் அது இடைவிடாமல் ஓடிக்கொண்டேயிருந்ததில் எடுக்க முடியவில்லை. அப்போதுதான் கவனித்தேன் கிராமத்து அழகிகள் எவரையுமே காணவில்லை. ஒரு திருவிழாவில் வளையல்கள் வாங்கிக் கொண்டோ அல்லது யார் மீதாவது மஞ்சத் தண்ணி ஊத்திக்கொண்டோ இருப்பார்கள் என்று எதிர் பார்த்த எனக்கு இங்கு திருவிழா நடக்காததே பெரிய இடி. கூத்தின் சுவாரசியத்தில் அழகிகள் யாரும் இல்லாததைக் கவனிக்காத பெரும் வரலாற்றுத் தவறொன்றைச் செய்து விட்டோமே என்று மனம் வருந்தினேன். என்ன இது சிறுவர்கள் சிறுமிகள் பிறகு பழைய அழகிகள், என்று தான் இருந்தார்கள் குமாரிகள் யாரும் இந்தச் சுங்குவார்ச் சத்திரத்தில் இல்லையா? என்கிற ஆதங்கத்தை நண்பர் முத்துக் கந்தனிடம் கொட்டியபோது அவர் சொன்னார், கல்யாணமாகாத இளம் பெண்கள் இப்படியான கூத்துகள் பார்க்க அனுமதிகிடையாது. வயசுப் பெண்கள் பார்க்கிற ஒரே கூத்து “அர்ஜூனன் தபசு” என்கிற கூத்து மட்டும் தான். அந்தக் கூத்தின் முடிவில் தான் எலுமிச்சம் பழங்களை வெட்டி வீசுவார்கள் அந்த எலுமிச்சம் பழங்கள் யார் மீது விழுகிறதோ அவர்களுக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகும் என்பது ஐதீகம் அதனால் அhஜூனன் தபசுக்கு மட்டும் பெண்கள் வருவார்கள் என்றார். நான் அர்ஜூனன் தபசு எங்கேயாவது நடந்தால் எனக்குச் சொல்லுங்கள் என்று அவரிடம் சொன்னேன்.
 ஆங்காங்கே தண்ணியைப் போட்டு விட்டு அலப்பறை பண்ணிக் கொண்டிருந்தவர்களின் குரல் இப்போது இன்னும் இன்னும் உயர்ந்தது. டேய்  அவளுகளை ஆடச் சொல்லுங்கடா என்று குரலை உயர்த்திக் கத்திக் கலாட்டா பண்ணிக் கொண்டிருந்தார்கள். எனக்கு எவளுகளை என்பது புதிராக இருந்தது. கொஞ்ச நேரம் கழித்து அது அவிழ்க்கப் பட்டபோது புரிந்தது எவளுகளை என்பது. கூத்தில் விளம்பர இடைவேளை மட்டுமல்ல குத்தாட்ட இடைவேளையும் உண்டு என்பதும் புரிந்தது.(சில இடங்களில் கவர்ச்சி ஆட்டங்களும் கூட உண்டு என்று குமுதத்தில் எழுதியிருந்தது) மஞ்சள் புடைவையில் இரண்டு மேனா மினுக்கிகள் அரங்கிற்குள் வந்தார்கள் யாரோ ஓரிருவர் விசில் அடித்தார்கள். இடுப்பையும் மார்பையும் குலுக்கி குலுக்கி ஏதோ பாட்டுப்பாடி ஆடினார்கள். அந்தப் பாடல் எனக்கு நினைவில்லை (பாட்டை நீ கேட்டால் தானே) அவர்கள் பெண்வேடமிட்ட ஆண்கள். இப்போது முதலில் கதாபாத்திரங்களிற்கு பபூனிடம் பணம் கொடுத்தவர்கள் இந்த மினுக்கிகளுக்கு மட்டும் தாங்களே அரங்கிற்கள் வந்து அவர்களின் முந்தானையில் காசைச் செருகினார்கள். அப்படி செருகும் ஒவ்வொரு தடைவையும் பார்வையாளர்கள் மத்தியில் இருந்து ஒரு கிளு கிளுப்பான சிரிப்பு.

 இந்தக் கிளுகிளுப்புகளிற்கு மப்பால். இந்தப் பெண் வேட மிட்டு ஆடுகிற நடிக்கிற ஆண்கள் குறித்து நண்பர் முத்து கந்தன் சில தகவல்கள் சொன்னார். அவர்களுடைய துயரங்கள் மிக மோசமானவை என்றார். அவர்கள் மனதளவில் ஆண்களாகவும் மேடையில் மட்டுமே பெண்களாகவும் நடிக்கிறார்கள். ஆனால் சமூகம் இந்தக் கலைஞர்களை ஆண்களாக ஏற்றுக் கொள்வதில்லை அவர்களைப் பெண்களாகப் பார்க்கவே விரும்புகிறது. ஆணாக அவர்களை ஏற்றுக் கொள்வதில்லை (வரலாறு அஜித் நினைவுக்கு வருகிறாரா) அரவாணிகள் இந்தச் சமூகத்தில் தாங்கள் மனதளவில் பெண்களாகவே வாழ விரும்புகிறவர்கள்.  ஆனால் இந்தக்கலைஞர்களுடைய பிரச்சினை வேறு மாதிரியானதாக இருக்கிறது. இவர்கள் மேடையில் மட்டுமே பெண்ணாக நடிக்கிறவர்கள். மற்றபடி ஆண்களாகவே வாழும் விருப்புக் கொண்டவர்கள்.

 தனக்குத் தெரிந்து சினிமாவில் நடிக்க வாய்ப்புத் தேடித்திரிந்த நண்பர் ஒருவர் கடைசியில் பிழைப்புக்காக இந்தக் கூத்துக் குழுவில் சேர்ந்து பெண் பாத்திரங்களில் நடித்திருக்கிறார். இதனாலேயே அவரது காதலி அவரை விலகிச் சென்று விட அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் முத்துக் கந்தன் சொன்னார்.

Photobucket

 இந்த சமூகம் எவ்வளவு குரூரமான இயல்புகளைத் தனக்குள் கொண்டிருக்கிறது இல்லையா? தனியே துயரத்தையும் புர்pந்து கொள்ளாமையையும் தான் தன் சகமனிதர்களிற்கு இது கொடுக்கிறது. அரவாணிகள் தங்களை அரவாணிப் பெண்களாகக் கருதி ஒரு மூன்றாம் பாலினமாக அங்கீகரிக்கச் சொல்லி சமூகத்தை நோக்கி குரல் கொடுக்கிறார்கள். சமூகம் இந்தக் குரல்களை மிகக் கேவலமான மனநிலையோடு அணுகுகிறது. இதோ இந்தக் கலைஞர்களும் நாங்கள் ஆண்கள் தான் பெண்வேடமிட்ட குற்றத்திற்காக எங்களைப் பெண்களாகப் பார்க்காதீர்கள் என்கிறார்கள். ஆனால் வேடிக்கையானதும் குரூரமானதும் இயல்புகள் கொண்ட இந்தச் சமூகம் நீ பெண் என்று அவர்களை முண்டித் தள்ளுகிறது துயருக்குள். நாங்களும் இந்தச் சமூகத்தின் ஒரு அங்கம் என்கிற வகையில் இதற்காக வெட்கப் படவேண்டும். கூனிக்குறுகி ஒடுங்கிப் போகவேண்டும். சக மனிதனைப் புரிந்து கொள்ளாமல் வஞ்சிக்கிற எங்கள் புரிதலின்மையை நினைத்து.
 கூத்து தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருந்தது. நேரம் அதிகாலை 3 மணியாவிட்டது. என் பக்கத்தில் இருந்த கிழவி சூர்யோதயத்திற்கும் கர்ணன் மோட்சம் அடைவதற்கும் சரியாக இருக்கும் என்று சொன்னார். என்னதான் வ(ஒ)ன் டே கிரிக்கெட் ரசிக்கும் படி விறுவிறுப்பாய் இருந்தாலும் டுவன்டி டுவன்டி தேவையாய் இருக்கிறதில்லையா? அது கலைகளுக்கும் பிரயோகிக்கப் படவேண்டியிருக்கிறதாய் தோன்றிற்று. (இந்தக் கட்டுரையே ஒரு டெஸ்ட் மாட்ச் மாதிரி இருக்கு அதுக்குள்ள……) சென்னையில் எங்களிற்கு காலையில் நிறைய வேலைகள் இருந்தன. கிளம்பினோம்   கூத்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது வாகனத்தை எடுத்துக்கொண்டு போவது பற்றி அதிகநேரம் யோசிக்கவேண்டியிருந்தது. அது அவர்கள் மனதைப் புண்படுத்துமோ என்று. பிறகு அவர்களிடம் சொல்லிக்கொண்டே கிளம்பினோம் வேலைகள் இருப்பதாக. கர்ண மோட்சம் முடிகிறபோதான நிகழ்வுகளை முத்து கந்தன் சொல்லிக்கொண்டே வந்தார் வழி முழுதும். கர்ணன் இறந்து பெண்கள் எல்லாரும் மாரடித்து அழுகிறபோது யாருக்கு பதினாறாம் நாள் காரியம் நடக்கிறதோ அவரைக் கர்ணணாகப் பாவித்து அவரது பெருமைகளையெல்லாம் சொல்லி அழுவார்களாம். கூத்துக் கலை எல்லாவற்றையும் தனக்குள் உள்வாங்கிக்கொண்டு நிகழத்தப்படக் கூடிய ஒன்று என்று நினைத்தேன்.

முத்துக் கந்தன் தொடர்ந்து சொல்லிக்கொண்டேயிருந்தார் அவர் கூத்துப் பற்றிய ஆய்வு மாணவராயிற்றே. ஆனால் என் மனசுக்குள் புரண்டு கொண்டிருந்தது பெண் வேடமிட்ட அந்த ஆண்களின் துயரையும், அர்ஜூனன் தபசுக்கு வரப்போகும் அழகிகளைப் பற்றிய நினைவுகள் தான்.

எண்ணங்கள்

Post navigation

Previous post
Next post

Related Posts

மக்கள் தொலைக்காட்சி வன்னியில் இருந்து ஓர் பார்வை…

September 6, 2007December 1, 2009

தமிழிலான தொலைக்காட்சிகளுக்கான முன்னோடிமக்கள் தொலைக்காட்சி. ஈழம் வன்னியில் இருந்து – கருணாகரன் தமிழ்ச்சினிமா இல்லாமலே தமிழில் ஒரு தொலைக்கட்சி வந்திருக்கு. தமிழிலேயே நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களும் அறிவிப்பாளர்களும். அத்துடன் தமிழ் நிகழ்ச்சிகள். தமிழ் நிலப்பரப்பின் காட்சிகள். தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகள். பிரந்தியப் பேச்சு மொழிகள். இப்படி தமிழ்க்காட்சியூடகங்களில் மாறுதலான ஒரு புதிய தொலைக்காட்சியாக இப்போது அறிமுகமாகியிருக்கிறது மக்கள் தொலைக்கட்சி. சினிமா இல்லாமல், சினிமாக்காரரே இல்லாமல் இந்தத்தொலைக்காட்சி வெற்றிகரமாக இயங்கிவருகிறது. இது…

Read More
அனுபவம்

கேட்கவியலாச் சொல்

March 5, 2010April 13, 2024

தட்சணா மூர்த்தி அன்பழகன் (27.03.1985 – 05.03.2009) எனக்கு நினைவிருக்கிறது  நான் இரண்டாம் தடைவையாகவும் அவன் முதலாம் தடைவையாகவும் கடல் பார்த்தது. ஒரு பள்ளிச்சுற்றுலாவில் மாத்தளன் கடற்கரையை நாங்கள் பார்த்தோம். நான் அப்பாட அந்தரட்டிக்கு சாம்பல் கரைக்கப்போகும் போது முதல் முதலாக கீரிமலைக்கடலைப் பார்த்திருக்கிறேன். அது சாதுவாய் இருந்தது அன்றைக்கு கடல் அச்சமூட்டவில்லை அப்போதெல்லாம் பொங்கிவரும் அலைகளில்லை அலைகள் குறித்த நினைவேயில்லை எனக்கு அப்போதெல்லாம். ஆனால் இம்முறை அப்படியல்ல கடல்…

Read More
எண்ணங்கள்

கொல்லப்பட முடியாத எஸ்.போஸின் வரலாறு

April 17, 2018June 9, 2021

துப்பாக்கியின் கண்கள் வாசிக்கத் தொடங்கிய பிறகு சொற்கள் ஒழிக்கத் தொடங்கிவிட்டன/சபிக்கப்பட்டு விட்டன பீரங்கியின் வாய்களால் அச்சமூட்டப்பட்ட சொற்கள் கொண்டு செய்யப்படுகிறது ஒரு நாள்…. முடமான சொற்கள் கொண்டு கவிதைகள் செய்வது எங்ஙனம்? கால்களற்ற சொற்களைக் காணச் சகியாதொருவன் துப்பாக்கிகளறியாதொருகணத்தில் மொழியைப் புணர்ந்து புதிதாய் கால்முளைத்த சொற்களைப் பிரசவிக்கலானான்… பின் ஓர் இரவில்… துப்பாக்கியின் கண்கள் அவன் முதுகினில் நிழலெனப் படிந்து அவன் குரலுருவிப் பின் ஒரு பறவையைப்போல விரைந்து மறைந்ததாய்…..

Read More

Comments (6)

  1. Anonymous says:
    May 18, 2008 at 5:46 am

    “அர்ஜூனன் தபசு எங்கேயாவது நடந்தால் எனக்குச் சொல்லுங்கள் என்று அவரிடம் சொன்னேன்.” நானும் கேள்விப்பட்டால் சொல்கிறேன்:)

  2. Kana Praba says:
    May 18, 2008 at 8:15 am

    //புர்pந்து// கொள்ளாமையையும்

    எழுத்துப் பிழை திருத்தவும்.

    நேற்றே பதிவு பார்த்தேன், வலைப்பதிவு இல்லாத நண்பர்களுக்கும் பரிந்துரைத்தேன். நன்றாக இருக்கு.

    2006 இல் தாயகம் போனபோது செல்லையா மெற்றாஸ் மெயில் தயாரிப்பில் 17 கூத்து நாடகங்களின் இறுவட்டுக்களை வாங்கி வந்திருக்கின்றேன். எல்லா நாடகங்கKஉமே 6 மணித்தியாலத்துக்கு மேல் ஓடக்கூடிய எம்.பி3 வடிவில் செய்து பழைய காலத்து கூத்து வடிவைச் சுருக்காது தந்துள்ளனர். விரிவாக இது பற்றியும் எழுதவேணும். போன மாதம் சிட்னியில் செஞ்சோற்றுக் கடன் என்ற நவீன உத்தி கலந்த கூத்தும் அண்ணாவியார் இளையபத்மநாதன் தயாரிப்பில் சிட்னியில் சிறப்பாக அரங்கேறியது, நமது தாயகக் களத்தை ஒப்பிட்டுச் செய்த புதுமை அதில் இருந்தது. அதன் விமர்சனம் பார்க்க
    http://www.tamilnation.org/diaspora/australia/080504karnan.htm

  3. வசந்தன் says:
    May 18, 2008 at 3:00 pm

    ‘தெருக்கூத்து’ என்பது ‘வீதிநாடகம்’ என்ற சொல்லால்தான் வன்னியில் அழைக்கப்பட்டது.
    ஆட்சேர்ப்புக்காக ‘மட்டுமே’ வீதிநாடகங்கள் நடத்தப்பட்டன என்ற உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. சமகாலத்தைச் சொல்ல, மக்களோடு உரையாட, மக்களை ஒன்றிணைக்க அதுவொரு ஊடகமாகப் பயன்படுத்தப்பட்டது.
    ஈழப்போராட்டத்தோடு தொடர்பேயற்ற முறையில் புதுவையன்பனின் வீதிநாடகமொன்றுகூட (வாழ்விழந்த மனிதர்கள்??) இடம்பெற்றது. மனித இனத்தின் தொடக்கம், தொடக்ககால வாழ்க்கைமுறை, ஆண்டான் அடிமை முறையின் தொடக்கம் என்று மனிதவரலாற்றைச் சொன்ன வீதிநாடகமது.

    ===================
    கூத்துக்கும் நாடகத்துக்குமிடையிலான வித்தியாசத்தை (முதலில் வித்தியாசமுள்ளதா என்ற கேள்வியுமுண்டு)ச் சொல்ல எனக்குத் தெரியவில்லை. ஆனால் இசையுடன் பாடினால் கூத்து, பாடாமல் வசனம் பேசினால் நாடகம் என்ற விளக்கம் முற்றிலும் தவறென்று நினைக்கிறேன்.
    தமிழகத்திலும் நாடகம் எனச் சொல்லப்படும் கலைவடிவம் பாடல்களால் நிறைந்திருந்தன. (வசனங்களுக்கான முக்கியத்துவம் அல்லது வசனங்களின் வீதம் அதிகரித்தமை திராவிட இயக்கங்களின் வழியால் என நினைக்கிறேன்).

    கூத்து என்று நாம் சொல்லும் கலைவடிவத்திற் பங்கேற்பவர்கள் “பலர்” அக்கலையை கூத்து என்று சொல்வதில்லை. நாடகம் என்றே சொல்கிறார்கள். 2003 இல் அண்ணாவியார் இருவரோடு யாழ்ப்பாணத்தில் கதைத்தபோதுதான் இந்த விடயம் உறைத்தது. அவர்கள் ஒருபோதும் கூத்து என்று சொல்வதில்லை. நாடகம் என்றுதான் அதைச் சொல்கிறார்கள். இது இடத்துக்கிடம் மாறுபடுமென்று நினைக்கிறேன். வன்னியல் ‘கூத்துக் கட்டுதல்’ என்ற சொல்லாடல் அக்கலையில் பங்கேற்பவர்களாற் சொல்லப்பட்டதைப் பார்த்திருக்கிறேன்.

    ====================
    விடிய விடிய நடக்கும் கூத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குச் சிறுவயதில் கிடைத்தது. அவ்வகையில் எங்கள் கிராமத்தில் நடந்த சங்கிலியன் கூத்து ஞாபகமுள்ளது. இரவு எட்டு மணிக்குத் தொடங்கி அதிகாலை ஆறுமணியளவில்தான் மங்களம் பாடி முடித்தார்கள். மங்கள் பாடுவதே நீண்டநேரமெடுக்கும் காரியம். ‘களத்தில் காத்தான்’ கூத்தும் சிறிதளவு பார்த்திருக்கிறேன். ஆனால் காத்தவராயன் கூத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் யாழ்ப்பாணத்திலிருக்கும்வரை எனக்குக் கிடைக்கவில்லை. 1998 இல் சுதந்திரபுரம் முப்பெருந்தேவியர் கோவில் திருவிழாவில்தான் முதன்முதல் காத்தவராயன் கூத்துப் பார்த்தேன். அதற்குமுன்னர் ‘தோழர்கள்’ துண்டுதுண்டாக காத்தான் கூத்தின் பாடல்களைப் பாடியதைக் கேட்டிருக்கிறேன்.
    நீர் குறிப்பிட்ட படியேறும் பாடல்களைத்தான் அனேகமாக எல்லோரும் பாடுவார்கள்.

    ======================
    என்ன பொருத்தம் பாரும்…
    நட்சத்திரம் என்று வந்தாலே கூத்துப் பற்றி எழுத வேண்டுமா?

    சரியாக மூன்று வருடங்களின்முன்னர் எனது நட்சத்திரக் கிழமையில் கூத்து பற்றி ஈரிடுகைகள் எழுதியிருந்தேன்.

    கூத்தழிவு
    கூத்துக்கள்.

  4. தமிழன்... says:
    May 18, 2008 at 9:46 pm

    என்க்கும் பல நிகழவுகள் நினைவுக்கு வருகிறது அகிலன் நல்லதொரு இரவை கொடுத்திருக்கிறீர்கள் மீண்டும் ஊர்வரை போய்வந்திருந்தேன் கடந்த இரவில்..இதுவரை எத்தனையோ கூத்துக்களுக்கு போயிருக்கிறேன் நான் முழுதாகப்பார்த்த கூத்தும் காத்தவராயன் தான் அதுவும் ஒரே ஒரு முறைதான் பார்த்திருக்கிறேன்… ஆரம்பத்தில அது ஒரு காதல் கதையென்பதே தெரியாமல் இருந்தது…

  5. தமிழன்... says:
    May 18, 2008 at 9:55 pm

    அகிலன் நன்றாக எழுதுகிறீர்கள் ஆனால் இந்தப்பதிவை இன்னும் மெருகோடு உங்களால் எழுதியிருக்க முடியும்…

  6. தமிழன்... says:
    May 18, 2008 at 10:09 pm

    மற்றய சிந்து நடைக் கூத்துப்பாடல்களிலும் எனக்கு காத்தவராயன் கூத்துப்பாடல்கள் பிடிக்கும்.. அதுவும் என் வகுப்பு தோழர்கள் சிலர் பாடி நடிகத்திருக்கிறார்கள் அவர்களில் முக்கியமாக பார்த்தீபன் என்றொருவன் அவன் சிறு வயது முதலே காத்தான் வேடம் போட்டிருக்கிறான்

    “பள்ளிக்கூடம் போகச்சொன்னால்” பருவத்திலிருந்து “அந்த மங்கையை மாலைய மாமணம் செய்யாமல் விடமாட்டேன்” வரையும் வேடம் ஏற்று நடித்திருக்கிறான்…

    நன்றி அகிலன் அருமையான உங்கள் பதிவுகளுக்கு.

    வசந்தன் அண்ணனின் பதிவையும் வாசிக்க வேண்டியதுதான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • அனுபவம்
  • எண்ணங்கள்
  • ஒலிக்கவிதைகள்
  • ஒலிப்பதிவுகள்
  • கவிதைகள்
  • காதல் சிலுவையில்
  • குளிரடிக்கிற ஏரியா
  • சினிமா அனுபவம்
  • நேர்காணல்
  • புகைப்படம்
  • புத்தகம்
  • September 2024
  • June 2021
  • November 2019
  • March 2019
  • April 2018
  • May 2013
  • February 2013
  • December 2012
  • October 2012
  • July 2012
  • June 2012
  • November 2010
  • August 2010
  • June 2010
  • April 2010
  • March 2010
  • February 2010
  • September 2009
  • August 2009
  • July 2009
  • June 2009
  • February 2009
  • January 2009
  • December 2008
  • November 2008
  • October 2008
  • September 2008
  • August 2008
  • July 2008
  • June 2008
  • May 2008
  • April 2008
  • March 2008
  • January 2008
  • December 2007
  • October 2007
  • September 2007
  • August 2007
  • July 2007
  • June 2007
  • May 2007
  • December 2006
  • November 2006
  • October 2006
  • September 2006
  • August 2006
  • July 2006
  • June 2006
©2026 த.அகிலன் | WordPress Theme by SuperbThemes