Skip to content
த.அகிலன்

கனவும், வாழ்வும் பின் என் சொற்களும்…

த.அகிலன்

கனவும், வாழ்வும் பின் என் சொற்களும்…

மயானங்களை புனிதமாக்கும் மாவீரர்நாள்

த.அகிலன், November 29, 2006December 1, 2009

தமிழீழ மாவீரர் நாள் ஒரு அனுபவம்

நேரம் நெருங்கிவிட்டது.டாங் டாங் டாங். மணி ஒலித்துக்கொண்டிருக்கிறது. நான் அமைதியாக நின்று கொண்டிருந்தேன். ஏதேதோ எண்ணங்கள் சிதறடித்துக்கொண்டிருந்தன நினைவுகளை. எல்லோரும் தயாராக நின்று கொண்டிருந்தார்கள் தீபமேற்றுவதற்கு. நேரம் வந்ததும் பிரதான சுடரை ஏற்றினார்கள் எல்லோரும் ஏற்றினார்கள் ஒரே நேரத்தில். தீபங்கள் பிரகாசித்தன விடுதலையை நோக்கி தீயின் நாவுகள் நீள்வது போலிருந்தது. அங்கே எந்தக்கல்லறையிலும் தீபம் ஏற்றப்படாமல் இருக்காது ஒரு வேளை கல்லறையுள் உறங்கும் ஒருவனது உறவினர்கள் யாவரும் செல்லடியில் செத்துப்போனாலோ அல்லது அகதியாகி உலகில் எங்கேனும் அவலப்பட்டாலோ அவன் கல்லறையை சீச்சி அவனை தத்தெடுத்துக்கொள்ள ஒவ்வொரு தமிழ்மகனும் தயார். அவன் என்பிள்ளை அவனுக்கு நான் சுடரேற்றுகிறேன் என்று எல்லாரும் முன்வருவார்கள்.(இதைத்தான் அல்லது இதனால்தான் புலிகள் தான் மக்கள் மக்கள் தான் புலிகள் என்கிறார்கள்) மாவீரர் நாள் அன்று துயிலுமில்லம் கல்லறைகளாலும் கண்ணீராலும் நிரம்பியிருக்கும் எல்லாரும் ஒரே நேரத்தில் சுடரேற்ற ஒரு பாடல் ஒலிக்கத் தொடங்கும். உயிர் உருக்கும் பாடல்அது.

மொழியாக எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ் மீது உறுதி
வழிகாட்டி எம்மை வரலாறாய் ஆக்கும் தலைவனின் மீதிலும் உறுதி
இழிவாக வாழோம் தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி

தாயக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே
இங்கு கூவிடும் எங்களின் அழுங்குரல் கேட்குதா
குழியினுள் வாழ்பவரே

எங்கே எங்கே விழிகளை ஒரு கணம் இங்கே திறவுங்கள்
ஒரு தரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்

உங்களை பெற்றவர்.உறவினர் வந்துள்ளோம்
அன்று செங்களம் மீதினில் உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்

எங்கே எங்கே விழிகளை ஒரு கணம் இங்கே திறவுங்கள்
ஒரு தரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்

இந்தப்பாடல் விடுதலைப்புலிகளின் வீரச்சாவுகளில் மட்டுமே ஒலிக்கும் பாடல் விடுதலைப்புலிகளின் ஆஸ்தான கவிஞர் புதுவை இரத்தினதுரை எழுதியது.வர்ணராமேஸ்வரன் பாடியது. உயிர் உருக்கும் வரிகள் மாவீரர் தினத்தன்று அவர்களுக்காக சுடரேற்றும் போது மட்டுமே இது ஒலிக்கும். இதில் வரும்

எங்கே எங்கே ஒரு தரம் விழிகளை இங்கே திறவுங்கள்
ஒரு தரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்

என்ற வரிகள் வரும்போது கோரசாக நிறைய பாடகர்கள் பாடுவார்கள்

எங்கே எங்கே ஒரு தரம் விழிகளை இங்கே திறவுங்கள்
ஒரு தரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்

என்று
அப்படி பாடிய பாடகர்களில் ஒருவரான பாடகர் சிட்டுவும் களத்தில் வீரச்சாவடைந்தபோது அவருக்காகவும் இந்தப்பாடல் ஒரு முறை ஒலித்தது. அப்போது சிட்டுவின் வீரச்சாவு அஞ்சலி நிகழ்வை தொகுத்து வழங்கியவர் சொன்னார் இதோ சிட்டுவுக்காக இறுதியாக ஒருமுறை சிட்டுவே பாடிய பாடல் .. கூடியிருந்த சனங்கள் ஹோ என்று கதறின. சிட்டுவின் ஞாபகங்கள் உணர்வூட்டும் பாடல்களாக இன்றைக்கும் வாழ்கிறது அங்கே.

எங்கே எங்கே ஒரு தரம் விழிகளை இங்கே திறவுங்கள்
ஒரு தரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்

இந்த வரிகளைக் கேட்டு விட்டும் யாரும் அழாமல் துயிலுமில்லத்தில் இருந்து திரும்பி வர முடியாது. கனவுகள் விழித்துக்கொள்ளும். எல்லாரும் அழுவார்கள் அங்கே கல்லறைக்குள் சொந்தக்காரர்கள் இருக்கிறார்களோ இல்லையோ. யாரும் அண்ணன் தம்பீ வீரச்சாவோ இல்லையோ துயிலுமில்ல வளாகத்தில் இருக்கிற அத்தனை பேரும் வெட்கத்தைவிட்டு கதறுவார்கள். அது கவலையா கோபமா என்று தெரியாத அழுகை. தீபங்களின் ஒளியில் கண்ணீர்த்துளிகள் மட்டும் மினுங்கிக்கொண்டிருக்கும். மௌனம் ஒரு பெரிய பாசையைப்போல எல்லாவற்றையும் ஆட் கொண்டிருக்கும். தீபங்கள் குரலெடுத்து அழுவது எல்லோருக்கும் கேட்கும். கல்லறைகள் மெல்லப்பிழப்பது போல இருக்கும். எதுவுமே பேச முடியாது நின்றிருப்போம். மொழியை மறந்து விட்டது போல இருப்போம் அங்கே அப்படித்தான் இருக்கமுடியும்.

துயிலுமில்லம் தான் இன்றைக்கு தமிழர்களின் புனிதப்பொருளாகிவிட்டது. விடுதலைப்போராட்டத்தில் தங்கள் உயிரை நீத்த போராளிகளின் வித்துடல்களை (உடல்களை) அங்கே விதைத்து வைத்திருக்கிறார்கள் தங்கள் அபிலாசை மீட்க தங்கள் மக்களின் துயரங்களைக் களைய அவர்கள் மறுபடியும் முளைப்பார்கள் என்று உணர்வு பொங்கச் சொல்வார்கள் தமிழ் மக்கள். அது தான் உண்மையும் கூட.அதனால் தான் அவர்களை புதைப்தில்லை விதைக்கிறார்கள்.

வரலாற்றில் நாங்கள் சுடலை என்பதை ஒரு தீட்டுப்பொருளாக துக்கிக்கும் இடமாக அல்லது எல்லாவற்றினதும் முடிவாக கருதி வந்த வழமையை மாற்றி புதிதாக அதை புனிதத்திற்கு இட்டுச்சென்றிருக்கிறார்கள் ஈழத்தமிழர்கள். அது புனிதம் மட்டுமல்ல எல்லாவற்றினதும் தொடக்கமும் கூட. அது மாவீரர் மயானம் அல்ல மாவீரர் துயிலும் இல்லம். அது நிச்சயமாக தீட்டுப்பொருள் அல்ல அங்கிருப்பவை வெறும் கல்லறைகளும் இல்லை இரத்தமும் சதையுமான வீரர்கள் இளமையும் குறும்புமாக ஓடித்திரிய வேண்டிய பிஞ்சுகள். கல்லறைகளின் அருகே போனால் காதை வைத்துக் கேட்டால் நிச்சயம் ஒரு குரல் ஒலித்துக்கொண்டிருக்கும். அந்தக்குரல் தன் அம்மாவை அறுதல் படுத்தும் தங்கைக்கு உத்வேகம் அளிக்கும். சிலசமயம் துணைவியின் தலைகோதும்.தான் பார்த்தேயிராத தன் குழந்தையை முத்தமிடும்.தோழர்களை உற்சாகப்படுத்தும்.

உள்ளேயிருப்பவர்களின் புன்னகை கல்லறைகளின் முகங்களில் ஒட்டியிருக்கும். கல்லறை ஒரு வேர்விட்ட மரம்போல உறுதியாய் இருக்கும். அங்கிருந்துதான் வேதனைகளையும் சோதனைகளையும் தாங்குவதற்கான சக்தியை தமிழர்கள் பெறுகிறார்கள். போராளிகளிற்கும் தமக்குமான சின்னச்சின்ன முரண்பாடுகளை மக்கள் மாவீரர்களின் தியாகத்தின் மூலம் தான் கடக்கிறார்கள். எத்தனை தடவைகள் குண்டு வீசினாலும் என்னதான் பொருளாதாரத்தடை போட்டாலும் உயிர்வாழ்கிற எங்கள் சனங்களின் உறுதியின் ரகசியம் இவர்களின் தியாகங்கள் தான்.

இந்த தமிழர்களின் புனித இடத்தைத்தான் சிங்களஅரசுபடைகள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றியபோது புல்டோசர் போட்டு தோண்டியது.ராணுவ டாங்க்கினை ஏற்றி கல்லறைகளை மிதித்தது.எங்கள் மயானங்களுக்கே மதிப்பளிக்காத அவர்களா எங்கள் மனங்களுக்கு மதிப்பளிப்பார்கள். அவர்களிடமா நாங்கள் மனிதாபிமானம் பேசுவது.சொல்லுங்கள் உறவுகளே?

(மன்னிக்கவும் நண்பர்களே முதலில் போட்ட பதிவை புளொக்கர் விழுங்கி விட்டதால் மறுபடியும் பதிய வேண்டியதாகிவிட்டது)
த.அகிலன்

எண்ணங்கள்

Post navigation

Previous post
Next post

Related Posts

கஜானியின் ஒளிப்படங்கள் தாகத்தின் ஒளியும் நிழலும்

October 13, 2006December 1, 2009

நண்பர்களே நான் பழைய பதிவுகளிலே இட்ட முகத்தில் அறையும் நிஜம்,போர்ப்பசி,இன்றைக்குச்சேறு நாளைக்குச்சோறு என்பவற்றை எடுத்த புகைப்படக் கலைஞர் கஜானியைப்பற்றி ஈழத்தின் மூத்தபடைப்பாளியான கருணாகரன் அவர்கள் எழுதிய குறிப்பு இங்கே கஜானியின் படத்தின் பார்வையாளர்களுக்காக தருகிறேன்.அன்புடன்த.அகிலன் வண்ணங்களாலான உலகத்தையும் வண்ணங்கள் சிதையும் உலகத்தையும் தன்னுடைய ஒளிப்படங்களின் மூலம் காண்பிக்கிறார் கஜானி. கஜனிக்கு ஒளியையும் வெளியையும் கையாளும் நுட்பம் நன்றாகத் தெரிகிறது. ஒளியைக் கையாள்வதன் மூலம் தனது உலகத்தை அவர் வலிமையாகப் படைக்கிறார்….

Read More

2006ன் கடைசி லஞ்சமும் 2007ன் முதல் பதிவும்…..

May 16, 2007December 1, 2009

எங்கேயோ இருந்து மெலிதாக சுப்ரபாதம் என் காதுகளிற்கு கேட்கத் தொடங்கும் போதுதான் நான் இதை எழுதத் தொடங்கினேன். எந்த ஆண்டும் நான் இப்படி உணர்ந்ததில்லை எல்லாம் மாறிப்போயிருந்தது. தமிழர்கள் எல்லோரும் இந்தப்புத்தாண்டை இத்தனை ஆரவாரத்துடன் வரவேற்பார்களா என்பதை என்னால் இன்னமும் நம்பமுடியவில்லை. சென்னை ரொம்ப சூப்பரா இருக்கும் நீங்க பார்க்கணும் அகிலன் என்று சோமி மிகுந்த அக்கறையுடன் வரச்சொன்னார். வெடிவெடிப்பாங்க பசங்களும் பொண்ணுகளும் சும்மா அப்பிடியே ஜாலியா ஒரு ரவுண்டு…

Read More

காத்திருப்பொன்றின் முடிவு(ஒரு அஞ்சலி)

December 13, 2006December 1, 2009

ஈழத்துக்கவிஞர் சு.வில்வரத்தினம் பற்றிய நினைவுப்பகிர்வு நான் அவரை சுமார் நான்கு வருடங்களிற்கு முன்பாக ஒரு மழைக்கால காலைப் பொழுதில் சந்தித்தேன். இவர்தான் கவிஞர் வில்வரத்தினம் என நிலாந்தன் அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார் . இவர் அகிலன் கவிதைகள் எழுதுவார் என்று அவருக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார். எனக்கு ஞாபகமிருக்கிறது நான் உடனே யார் சுனா.வில்வரத்தினமா என்று கேட்டேன். சுனா கொஞ்சம் அழுத்தமாக இருந்தது கேள்வியில் சு.வி…

Read More

Comments (7)

  1. இராம.கி says:
    November 29, 2006 at 12:20 pm

    உங்கள் மயானங்களுக்கே மதிப்பளிக்காத அவர்கள் உங்கள் மனங்களுக்கு மதிப்பளிக்க மாட்டார்கள். அவர்களிடம் மனிதாபிமானம் பேசுவது பலனளிக்காது. உங்கள் விடுதலைப் போராட்டத்தைத் தொடருவதைத் தவிர்த்து எமக்கு வேறு வழி தெரியவில்லை. தமிழ் ஈழம் மலருவதில் மட்டுமே வழி பிறக்கும்.

    நீங்கள் கொடுத்திருந்த பாடல் ஆழமாக உணர்வைத் தொடுகிறது.

    அன்புடன்,
    இராம.கி.

  2. தூயா says:
    November 30, 2006 at 4:45 am

    உண்மை தான்!..எப்பொழுதும் இந்த பாடல் வரிகள் எம் கண்ணில் நீரை வரவைக்கும்…

  3. த.அகிலன் says:
    November 30, 2006 at 7:49 am

    நன்றி இராம.கி அய்யா மற்றும் தூயா இருவருக்கும்

  4. ரவிசங்கர் says:
    December 12, 2006 at 1:21 pm

    உங்களின் இந்தப் பதிவை படிக்கச் சொல்லி என் வலைப்பதிவில் ஒருவர் தெரிவித்தார். – மனதை பிசைவது போல் இருக்கிறது உங்க எழுத்து ;(

    நெதர்லாந்திர் மாவீரர் நாள் குறித்த என் பதிவு –
    http://thamizhthendral.blogspot.com/2006/12/blog-post_09.html

  5. johan -paris says:
    December 12, 2006 at 3:10 pm

    மாவீரர் துயிலும் இல்லத்தை இடித்து; சிங்களராணுவம் தன் குரூரபுத்தியைக் காட்டியது.அருவருப்பான செயல்.
    யோகன் பாரிஸ்

  6. திரு says:
    September 11, 2009 at 1:03 pm

    டிசம்பர் 2002ல் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் சென்ற நினைவை இந்த பதிவு மீள வைக்கிறது. கோப்பாய் மாவீரர் கல்லறைகளை சிங்கள ராணுவம் நொறுக்கிய பிறகு புலிகள் மீண்டும் கட்டியெழுப்பியிருந்தனர். அதன் நுழைவு வாசலில் சிங்கள ராணுவம் உடைத்தெறிந்த கல்லறைகளின் துண்டுகளின் மிச்சங்களை கண்ணாடிப் பேழையில் வைத்து அதுபற்றிய குறிப்பையும் வைத்திருந்தனர்.

    ஒடுக்கப்படும் மக்களுக்கு உரிமையும், சுதந்திரமும் எந்த அடக்குமுறையாளனும் தானாக வழங்கியதாக வரலாற்றில் பதிவுகளில்லை. ஒடுக்கப்படுகிற மக்களது ஒன்றுபட்ட பெரும் திரட்சியான போராட்டங்களே சுதந்திர வெளியை உருவாக்குகிறது. இன்று முற்றுகைக்கு உள்ளாகியிருக்கும் ஈழமும், வதைமுகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் மக்களும் விடுதலை பெறுவதற்கு ஒரே வழி தமிழர்களின் தொடர்ச்சியான, தன்னெழுச்சியான அரசியல் போராட்டங்கள்.

    பாடல் நெஞ்சை உருக்குகிறது. ஈழத்து போர் இலக்கியத்தில் இப்பாடல் கூர்மையானது.

  7. திரு says:
    September 11, 2009 at 1:14 pm

    பாடலின் ஒளிக்காட்சி காண இங்கே http://www.youtube.com/watch?v=-aLZ-SLqDQ8&feature=related

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • அனுபவம்
  • எண்ணங்கள்
  • ஒலிக்கவிதைகள்
  • ஒலிப்பதிவுகள்
  • கவிதைகள்
  • காதல் சிலுவையில்
  • குளிரடிக்கிற ஏரியா
  • சினிமா அனுபவம்
  • நேர்காணல்
  • புகைப்படம்
  • புத்தகம்
  • September 2024
  • June 2021
  • November 2019
  • March 2019
  • April 2018
  • May 2013
  • February 2013
  • December 2012
  • October 2012
  • July 2012
  • June 2012
  • November 2010
  • August 2010
  • June 2010
  • April 2010
  • March 2010
  • February 2010
  • September 2009
  • August 2009
  • July 2009
  • June 2009
  • February 2009
  • January 2009
  • December 2008
  • November 2008
  • October 2008
  • September 2008
  • August 2008
  • July 2008
  • June 2008
  • May 2008
  • April 2008
  • March 2008
  • January 2008
  • December 2007
  • October 2007
  • September 2007
  • August 2007
  • July 2007
  • June 2007
  • May 2007
  • December 2006
  • November 2006
  • October 2006
  • September 2006
  • August 2006
  • July 2006
  • June 2006
©2025 த.அகிலன் | WordPress Theme by SuperbThemes