Skip to content
த.அகிலன்

கனவும், வாழ்வும் பின் என் சொற்களும்…

த.அகிலன்

கனவும், வாழ்வும் பின் என் சொற்களும்…

My name is agiilan and I am not a terrorist

த.அகிலன், February 20, 2010April 19, 2024

00.00.2007
அகிலன்:    அண்ணா ஓட்டோ வருமா?
ஓட்டுனர்:    எங்க போணும்பா?
அகி:        வளசரவாக்கம் போகோணும் வருவீங்களா?
ஓட்:        ஆ போலாம்பா
அகி:        எவ்வளவு
ஓட்:        நீ சிலோனாப்பா?.
…………………………………

19.02.2010

அகி:    ஆட்டோ .. ஆட்டோ?
ன்ணா கோடம்பாக்கம் வருமா?
ஓட்:    ம் போலாம்..
அகி:    எவ்ளோ.
ஓட்:    பிப்டி குடு
அகி:    ஆ போலாம்
………………
ஓட்:    நமக்கு எந்தூரு தம்பி
அகி:    எதுக்கு கேக்றீங்க
ஓட்:    இல்ல பேச்சு நம்மூரு பக்கம் மாதிரியிருந்திச்சு
அகி:    உங்களுக்கு எந்தூரு
ஓட்:    நமக்கு தஞ்சாவூருப் பக்கம்

இது எனக்கும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் மேலே குறிப்பிட்ட காலங்களில் நிகழ்ந்த உரையாடல்கள். எனது மொழிவழக்கின் அடையாளம் இப்படித்தான் மாறியது. எனது மொழியின் அடையாளங்களை நான் எப்படி ஒளிக்க நேர்ந்தது என்பதை எனக்கு நினைவூட்டிற்று  My name is khan திரைப்படம்.

My name is khan சர்ச்சைகளுக்கிடமான படம். சக்கைப்போடு போடுகிற படமும் கூடத்தான்.  போனவாரமே வெளியாகி விட்டிருந்தாலும் நான் நேற்றுத்தான் படம் பார்த்தேன். மிக நெருக்கமாக, சந்தோசமாக, துக்கமாக இன்னும் ஏதேதோ உணர்வுகளை கிளறிய திரைப்படம் My name is khan.இந்த உலகின் பிரஜை ஒருவன் தன் இன அடையாளங்களோடும் தான் பிறப்பிலிருந்தே பின்பற்றி வரும் பழக்க வழக்கங்களோடும் வாழ்வதற்கு ஏற்படுகிற சிக்கல்களே படம்.

அடையாளம் மிக முக்கியமானதுதான் அது என்னை என் சுயத்தோடு வைத்திருப்பது. அது எனக்கு கௌரவத்தை அளிப்பது. அதுவே எனது வேர்களின் வழியாக என்னை நிறுவுகிறது. ஆனால் உலகம் இப்போது அடையாளங்களை அட்டைகளுக்குள் அடைத்துவிட்டது. அடையாளம் முக்கியமானதுதான் ஆனால் அடையாள அட்டைகள் அதைவிட முக்கியமானவை. ஆட்களை விடவும் அவர்களின் அடையாளஅட்டைகளே அதிகம் நம்பப்படுகின்றன. அடையாள அட்டைகள்,அதன் இலக்கங்கள் மற்றும் அதன் மேலான முத்திரைகளின் வழியாகவே மனிதன்; அளவிடப்படுகிறான். அவனது கண்களின் மொழியை விடவும் அட்டைகளின் விதவிதமான முத்திரைகள் கொண்டும் , கலர் கலரான மை கொண்டும் எழுதப்படுகிற மொழியே அவனது அடையாளங்களைச் சொல்லுவதாய் உலகம் நம்புகிறது.  மனித நாகரிகம் இப்போது அட்டைகளின் கலாச்சாரத்தையே கடைப்பிடிக்கிறது. எல்லாவற்றுக்கும் ஏதாவது ஒரு அட்டையை நான் வைத்திருக்கவேண்டியதாகிறது. ஒரு மனிதன் சட்டையில்லாமல் வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் அவனை அடையாளப்படுத்தும் அட்டையில்லாமல் இருக்கவே முடியாது. நான் என்னுடை 27 வயதிற்குள் நிறைய அடையாள அட்டைகளைப் பார்த்திருக்கிறேன். போஸ்டல் ஐடென்டிட் காட், பிறகு இலங்கை தேசிய அடையாள அட்டை,போராளி மாவீரர் குடும்ப அட்டை, ஊடகவியளாளர் அட்டை, அகதிகள் அட்டை,நிவாரணபொருட்கள் அட்டை இப்படி என்னை நிறுவும் நிரூபிக்கும் அட்டைகளால் சூழ்ந்திருக்கிறது வாழ்க்கை. அவை என்னை விதவிதமான தருணங்களில் விதவிதமான சூழ்நிலைகளின் மனிதனாக அடையாளப்படுத்தியிருக்கிறது. சில இடங்களில் காப்பாற்றியிருக்கிறது சில இடங்களில் காட்டிக்கொடுத்திருக்கிறது. எல்லா அட்டைகளும் எல்லா இடங்களிலும் செல்லுபடியாவதில்லை. எல்லா அட்டைகளையும் எல்லாக்காலங்களிலும் பயன்படுத்தவும் முடியாது. அட்டைகளைக் காலாவதியாகாது பார்த்துக்கொள்ளவேண்டியது அவசியம் ஏனெனில் அவையே என் இருத்தலின் அடையாளங்கள்.

இந்த உலகம் சக மனிதனைச் சந்தேகக் கண்கொண்டே நோக்குகிறது. சந்தேகி சகலரையும் சந்தேகி இதுதான் உலக ஏகாதிபத்தியங்களும், ஆளும்தரப்புக்களும் பின் அவர்கள் உருவாக்கிய பயங்கரவாதமும் மனிதவர்க்கத்திற்கு பரிசளித்திருக்கிற உணர்வு. உலகம் நிர்ப்பந்திக்கிறது எல்லா  இடங்களிலும் நான் சுத்தமானவன் அப்பாவி நான் பயங்கரவாதியில்லை இப்படி நெற்றியில் பச்சை குத்தாத குறையாக நிரூபிக்க வேண்டியிருக்கிறது.

இந்த சந்தேகம் குறிப்பிட்ட ஒரு இனக்குழுமம் மீது நிரந்தரமாகப் படிந்துவிடுகிற போது ஒரு  சமூகத்தை குற்றப்பரம்பரயையாக பயங்கரவாதிகளாக மட்டுமே அடையாளப்படுத்தும் போது அது மிகவும் வலி நிறைந்ததாகிறது. 9/11 தாக்குதலுக்குப்பிறகு  தொப்பி அணிந்த தாடிவைத்த அனைவரும் பின்லேடனின் அடியாட்கள் போலவும் பர்தா அணிந்த பெண்கள் தீவிரவாதிகளை மட்டுமே பிரசவிக்கிறார்கள் எனவும்  இந்த உலகம் நம்புகிறதா? அந்தப் பிரச்சினையை மிகவும் அழகியலோடும் அதன் தீர்க்கமான அரசியலோடும் பேசுகிறது My name is khan திரைப்படம்.

நான் என்னுடைய மத அடையாளங்களைச் சுமந்திருப்பதால் சந்தேகிக்கப்படுகிறேன். மற்றவர்களை விடவும் அருவருக்கத்தக்கவனாக நடத்தப்படுகிறேன். ஏன்? நான் என் அடையாளங்களோடு   இருப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? ஒருவர் முஸ்லிமாக இருப்பதால் மட்டுமே தீவிரவாதியாகிவிடுகிறாரா? அப்படித்தான் இந்த உலகம் கண்ணை மூடிக்கொண்டு நம்புகிறதா? அப்படி நம்புகிற இந்த உலகிற்கு  My name is khan படத்தின் இயக்குனர் கரண் ஜோகர் சொல்லவிரும்புகிற செய்தி My name is khan and I am not a terrorist.. உலக முஸ்லிம்களின் பிரதிநிதியாக ஒரு முஸ்லிமாக ஷாரூக்கான் தன் கடைமையைச் செய்திருக்கிறார். ஒரு சந்தேகிக்கப்படும் ஒடுக்கப்படும் ஒரு சமூகத்தின் பிரதிநிதியாய் ஷாரூக் தன் கடைமைச் செய்திருக்கிற படம் இது.

என்னால் இந்தப் படத்தை மிக மிக அதிகமாய் நேசிக்க முடிகிறமைக்கு காரணம் நான் என் அடையாளங்களால் சபிக்கப்பட்டவனாயிருக்கிறேன் என்பதாய் இருக்கலாம். என் அடையாளம் குறித்து நான் அசௌகரியமாய் உணர்ந்திருக்கிறேன் (நிச்சயமாக வெட்கமாய் அல்ல). என்னுடைய அடையாளம் என்னைக் கைதியாக்கியிருக்கிறது. அதிகளவான விசாரணைகளை எதிர்நோக்க வைத்திருக்கிறது. எந்நேரமும் அடையைாள அட்டைகளைச் சுமந்தலையவைத்திருக்கிறது. சோதனைச்சாவடிகளில் காத்திருக்கும்படி செய்திருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக என் எதிர்ப்பை காட்டமுடியாதவனாக ஆக்கியிருக்கிறது. உலகளவில் எப்படி 9/11 முக்கியமான நாளோ ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் 21/05 மிகமுக்கியமான நாள். ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட தினம் அது. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஈழத்தமிழர்கள் குறித்தான பிம்பம் மாற்றி எழுதப்பட்ட நாள் அது.  அது வரைக்கும் எந்த மொழி தேனினும் இனியதாய் “என்னமாத் தமிழ்பேசறான்யா” என்று தமிழகத்தவர்களால் வியக்கப்பட்டதோ அந்த ஈழத்தமிழ் வழக்கு தமிழகச் சராசரி மக்களைப் பொறுத்தவரையில் அச்சமூட்டும் ஒன்றாய் மாறிவிட்டது. வியப்பு சந்தேகமாக மாறிற்று. ஈழத்தமிழர்களுக்கு பொதுவாகவே அந்த பேச்சுவழக்கு அசௌகரியமூட்டும் ஒன்றாக இருக்கிறது அதுவும் பாஸ்போட் இல்லாத நிரந்தர விசாக்கள் இல்லாத போர்ப்பகுதியில் (=புலிகளின்கட்டுப்பாட்டு பகுதியில்) இருந்து வந்த என்னை மாதிரி ஒரு கள்ளத்தோணிக்கு என்னுடைய ஈழத்தமிழ் அடையாளங்கள் இன்னுமின்னும் அச்சமூட்டும் என் வாழ்வைக் கேள்விக்குள்ளாக்கும் ஒன்றாயின.

எனக்கு இலங்கையில் இருந்து புறப்படும் போதிருந்த கனவுகளைக் காணாமல் போகச்செய்ததில்,எனது பிழைக்கும் வழிகளை மூடியதில் ஈழத்தமிழன் என்கிற அடையாளம் மிக முக்கியமானது. ஆனால் அதே சமயம் அதே ஈழத்தமிழன் என்ற அடையாளம் சில இடங்களில் அதிகமான கருணையையும், நட்பையும், புரிதலையும் பெற்றுத்தந்திருக்கிறது.  ஆனால் பொதுவாகவே அது என்னை சந்தேகத்துக்குரியவனாக மாற்றியது. நான் முன்பு ஒரு முறை எழுதியதைப்போல நீங்க சிலோனா? என்று கேட்கிற ஒருத்தரின் கண்கள் என் சட்டைக்குள்ளால் ஒடிக்கொண்டிருக்கிற வயர்களைத்தான் தேடுகின்றன. என்ன செய்வது நான் சாமானியன் சாப்பாட்டுக்கு வழிதேடும் படலத்தில் நான் முதலில் தொலைக்க விரும்பிய சொல் ‘ஓம்’. இந்த ‘ஒம்’ என்பதும் ‘விளங்கேல்ல’ என்பதும் எவ்வளவு மறுத்தாலும் என்னிலிருந்து போகச் சிரமப்பட்டன. சகமனிதர்களின் துருத்தும் விழிகளில் இருந்து தப்ப, அவர்களது சுருங்கும் நெற்றிகளை நிமிர்த்த,ஒரு முகவரியை பயமின்றி விசாரித்து அறிந்து கொள்ள, எந்த இடத்தில் இறங்கவேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள இப்படி நிறையப்பிரச்சினைகளுக்கு நான் என் அடையாளத்தை தின்று செரிக்க வேண்டியவனாயிருந்தேன். My name is khan திரைப்படத்தினை நான் அடையாளம் தொலைக்க விதிக்கப்பட்டவர்களின் குரலாகப்பார்க்கிறேன். அதனால் அந்தப்படம் எனக்குள் உரையாடல்களை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது.

[singlepic id=4 w=320 h=240 float=left] ஒரு சந்தேகிக்கப்படும் இனத்தின் பிரச்சனைகளை, பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்படுகிற ஒரு இனத்தின் பிரச்சினைகளை எப்படி படமாக்கவேண்டும் என்பதற்கு இந்தப்படமும் நிச்சயமாக ஒரு உதாரணம். அது தவிரவும் முக்கியமான அரசியல் பிரச்சினையைக் கொண்டு  வெகுஜனத்தளத்தில் இயங்குவதென்பது முக்கியமானது.  நான் ஈழப்பிரச்சினை குறித்து எடுக்கப்பட்ட சினிமாக்களை நினைவு படுத்துகிறேன்.(ஈழத்தில் மற்றும் இந்தியாவில்) அவற்றில் சில உதிரிகளைத் தவிர்த்து மிச்சமெல்லாம் வீரக்கூச்சல்கள்,அழுகாச்சிக்காவியங்கள் அல்லது அந்த நிலம்பற்றிய,மொழி பற்றிய புரிதலில்லாதவர்களால் எடுக்கப்பட்ட அறிவிலிக் கனவுகள். ஈழம் குறித்த திரைப்படங்களின் அடிநாதம் உளவியல் சார்ந்ததாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு தமிழனும் அதில் தன்னைப் பொருத்திக்கொண்டு தன்னுணர்வுகளை அந்தப்படம் சொல்லுவதாய் உணரவேண்டும்.

ஈழத்தமிழர்களுக்கும் சினிமா மீது எப்போதுமே மோகம் உண்டு. பத்திரிகையாளர் பாரதிதம்பி எல்லாளன் சினிமா குறித்து எழுதியிருந்தார் “ஈழத்தில் போர் நடந்து கொண்டிருந்தபோது அதை ஒரு சினிமாபோலவே பார்த்தோம். இப்போது அதை ஒரு சினிமாவாகவே பார்க்கிறோம் என்பதாய். 2008 ம் ஆண்டு உக்கிரமான போர்க்காலத்தில் மக்களின்  அவலமான இடப்பெயர்வுகளுக்கு மத்தியிலும் லண்டனில் இருக்கிற ஒரு தயாரிப்பாளர்! வன்னியில் (போர் நடந்துகொண்டிருந்த களத்திலேயே) சினிமா எடுத்திருக்கிறார் அவ்வளவு ஆர்வம் சினிமா மீது ஈழத்தமிழர்களுக்கு. ( அது என்ன மாதிரியான சினிமா என்பதை விட்டுவிடுவோம்)

நிறைய ஈழத்தமிழர்கள் இன்றைக்கு சினிமாவில் முதலீடு செய்கிறார்கள். அவர்கள் தயாரிக்கவிரும்புகிற சினிமாவாக My name is khan மாதிரியான ஒரு படம் நிச்சயமாக இருக்கிறதா என்றெனக்குத் தெரியாது. ஈழத்தமிழர்களால் நடத்தப்படுகிற மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனத்தின் காவலாளிக்கு ஈழத் தமிழன் எண்டு சொல்லிக்கொண்டு எவனாவது வந்தால் உள்ள விடாதை என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதை நான் அறிவேன். ஆனால் இவர்கள் எல்லாரிடமும் இருந்துதான் ஈழத்தமிழர் பிரச்சினைகளைப் பேசுகிற சினிமாவும் வந்தாகவேண்டும்.

சினிமாத்துறையில் இருக்கிற ஷாரூக்கான் ஒரு சினிமாக்காரனாக தன் சமூகத்துக்காகச் செய்திருக்கிற மிகமுக்கியமான பங்களிப்பு இந்தப்படம். பேராதிக்கங்களால் ஒடுக்கப்படுகிற தமது அடையாளங்களை உள்ளொடுக்கிக் கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகிற அனைத்து மக்களின் சார்பாகவும் இந்தச் சினிமா பேசுகிறது.

அமெரிக்காவில் ஒரு முஸ்லிம் என்பதற்காக தனது மகன் கொல்லப்பட அதனால் “எனது பெயர் கான். நான் ஒரு முஸ்லிம்  ஆனால் நான் தீவிரவாதியல்ல, எனது மகனும் ஒரு தீவிரவாதி கிடையாது ” என்கிற செய்தியை அமெரிக்க ஜனாதிபதிக்கு சொல்லுவதற்காக கிளம்புகிறார் Mr.Khan. கடைசியில் அமெரிக்க ஜனாதிபதியிடம் சொல்லியும் விடுகிறார். ஒரு பேச்சுக்கு இலங்கைத் தீவிலும் அப்படி Mr.கந்தசாமி எண்டொருத்தர்  Mr.khan மாதிரிஇலங்கை ஜனாதிபதிக்கு நான் ஒரு அப்பாவித்தமிழன் நான் ஒன்றும் புலியல்ல என்று சொல்ல முடிவெடுத்துக் வெளிக்கிடுறார் (கிளம்புகிறார்) என்று வைப்போம் ( ஒரு பேச்சுக்குத்தான்)  கந்தசாமியற்ற  பிடரியில் இரண்டு அடிகள் விழும். ஜனாதிபதியைக் கொல்லமுயற்சி செய்வதாகச் சொல்லி ஒன்று.  “மக்களே புலிகள் புலிகளே மக்கள்” தான் புலியில்லை என்று சொல்கிற  கந்தசாமி ஒரு  துரோகி என்று மற்றொன்று. அப்பாவிச்சனங்கள் எப்போதும் பாவிகளே அவர்கள் இராமன்கள் எனப்படுபவர்களிடமிருந்தும், இராவணர்கள் எனப்படுபவர்களிடமிருந்தும் ஒரே மாதிரியான விளைவுகளையே பெறுகிறார்கள்.  அடையாளங்களைத் தொலைக்க விதிக்கப்பட்டவர்கள் எல்லாரிடமும் நிறுவியாகவேண்டியிருக்கிறது நான் உங்களுடைய நண்பன் என்பதாய். அதைத்தவிர வேறென்னதான் செய்ய முடியும்..

அனுபவம் My name is khanஅகதிகள்அகதிவாழ்வுஅடையாளஅட்டைஅடையாளம்ஈழம்தமிழக அகதிகள்பயங்கரவாதம்புலப்பெயர்வுமுஸ்லிம்கள்விடுதலைப்புலிகள்

Post navigation

Previous post
Next post

Related Posts

ஒரு சின்னப்பையனின் அப்பா செத்துப்போனார்…

June 22, 2009December 1, 2009

கண்ணீரும் கம்பலையுமாக ஒரு தாய் கதறுகிறாள் “எனது மகனைக் காப்பாற் றுங்கள் அவன் எனக்கு வேண்டும் தயவு செய்து காப்பாற்றுங்கள்”. சீடர்கள் எல்லாரும் காத்திருந்தார்கள் நிகழப்போகும் அதிசயத்தின் சாட்சியாய் இருக்கப்போகிறோம் என்கிற முறுவல் அவர்களிடம் மிதந்து கொண்டிருந்தது. புத்தர் அமைதியாய் சொன்னார் “அம்மா மரணமே நிகழாத வீட்டில் இருந்து ஒரே ஒரு பிடி கடுகு வாங்கிவா” புத்தரின் முகம் புன்னகை மாறாதிருக்கிறது. அவள் தெருவெங்கும் ஒடினாள் தன்மகனைக் காப்பாற்றி விடுகிற…

Read More
அனுபவம்

பாவம் அந்தச் சனங்களை விட்டுவிடலாம்..

August 30, 2010April 13, 2024

நான் தேடுகிறேன். தொலைந்தது கிடைத்தபின்னும் தொடர்ந்தும் தேடுகிறேன் பொருளை அல்ல அதன் அடையாளத்தை.. எப்போதோ நான் எழுதியது நினைவுக்குள் மீளெழுகிறது. நான் எப்போதுமே இப்படி நிகழும் என்று எண்ணியதேயில்லை. எனது பால்யத்தில் இச்சையின்றித் திரும்பிய எனது வீட்டொழுங்கையைக் கடந்தும் என் கால்கள் நடந்தன. எதுவும் பழகியதாயில்லை. எல்லாம் விலகியிருந்தது. என்னைவிட்டும் தம் ஆன்மாவை விட்டும். என் பதின்ம வயது இரவுகளில் மின்சாரமற்ற தெருக்களினூடே ஏமம் சாமம் பார்க்காமல் திரிந்து விட்டு…

Read More
அனுபவம்

கனவு கலையாத கடற்கன்னி – அனிதா கவிதைகள்

August 11, 2009April 20, 2024

தனது நான்கைந்து கவிதைத் தொகுதிகளைக் கையில் திணித்தபடி கவிதை பற்றி விடாப்பிடியாக ஒருவர் பேசியது இப்போது நினைவுக்கு வந்து தொலைக்கிறது. நீங்கள் கடைசியாக வாசித்த கவிதைப்புத்தகம் எது எனத் என் நாக்குத்தவறிக் கேட்டதில் அவர் அற்புதமானதொரு கருத்தைச் சொன்னார்.. “நான் வேறு புத்தகங்கள் படிப்பதில்லைத் தம்பி… அவற்றில் ஒரு வரியைப் படிப்பதற்கிடையில் எனக்கு நான்கு வரி தோன்றிவிடுகிறது நானென்ன செய்ய… எழுதுவது தானே முக்கியம்” என்றார். நான் அவர் வயசு…

Read More

Comments (21)

  1. நந்தா says:
    February 20, 2010 at 10:08 am

    அருமை அகிலன்.

  2. கென் says:
    February 20, 2010 at 10:25 am

    நிதர்சனமான பதிவு கான் படம் பாக்கனும்

  3. `மழை` ஷ்ரேயா says:
    February 20, 2010 at 2:04 pm

    //ஈழம் குறித்த திரைப்படங்களின் அடிநாதம் உளவியல் சார்ந்ததாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். //

    வழமையான ஈழத்தமிழ்(ழர்) குறித்த ஆரவாரங்களையும் மிகையுணர்ச்சிகளையும் கடந்து உள்ளதைச் சொல்கிற மாதிரியான திரைப்படம் வரக் கொஞ்சக் காலம் எடுக்கும் என்றே எண்ணுகிறேன்.

    எண்ணிலடங்கா அடையாள அட்டைகளை ஞாபகப்படுத்தி இருக்கிறீங்க அகிலன். அட்டைகளினது பெயர் பொருத்தமாய்த்தான் இருக்குது என்ன? எங்களை உறிஞ்சிக் கொண்டே இருக்கின்றன அவை.

    My name is Khan பார்க்க வேண்டும்.

  4. தமிழன்-கறுப்பி... says:
    February 20, 2010 at 4:02 pm

    பகிர்வு அருமை, கடைசிப்பந்தியை சொல்லியே ஆகணும் அகிலன்!

  5. கிருத்திகன் says:
    February 20, 2010 at 7:59 pm

    கடைசிப்பந்திதான் அருமை பாருங்கோ

  6. somee says:
    February 22, 2010 at 10:43 am

    //கந்தசாமியற்ற பிடரியில் இரண்டு அடிகள் விழும். ஜனாதிபதியைக் கொல்லமுயற்சி செய்வதாகச் சொல்லி ஒன்று. “மக்களே புலிகள் புலிகளே மக்கள்” தான் புலியில்லை என்று சொல்கிற கந்தசாமி ஒரு துரோகி என்று மற்றொன்று. // nalla pathivu agilan

  7. வலசு - வேலணை says:
    February 22, 2010 at 11:39 am

    ஒரு சிறந்த நடுநிலையான கட்டுரைக்கு பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள்

  8. Ramanan says:
    February 23, 2010 at 6:11 pm

    இந்த பக்கத்தை நண்பரொருவர் facebook இல் பகிர்ந்த போது நீங்கள் கூறிய இரண்டாவது அடி தப்பாமல் விழுகிறது உங்களுக்கு. இது தமிழில் இருப்பதால் முதலாவதற்கு சந்தர்ப்பம் குறைவுதானே?
    ம்ம்ம், அவனவன் பிரச்சினை அவனவனுக்கு. உங்கள் கஷ்டம் உங்களுக்கு, உங்களை விமர்சிக்கும் சிலரை விட உங்களை நான் அதிகமாக மதிக்கிறேன்

  9. Udhaya Kumar.V says:
    February 24, 2010 at 8:48 am

    True one.

  10. அனுதினன் says:
    February 25, 2010 at 2:54 pm

    அண்ணா பல உண்மைகளை சொன்ன படத்தில் நீங்களும் சில நிதர்சனமான உண்மைகளை சொல்லி இருக்கிறிர்கள்.

    நான் உங்கள் தளத்துக்கு புதியவன்.. நன்றாக இருக்கிறது …. அதிகமாகவே இருக்கிறது

  11. Loshan says:
    February 28, 2010 at 4:43 pm

    அருமை அகிலன்..
    படம் இன்னும் பார்க்கவில்லை. ஆனாலும் உங்கள் பார்வையால் படம் சொல்லும் விஷயங்கள் நம் பக்கம் பற்றியும் பேசுவது யதார்த்தம்.

    உங்கள் தலைப்பையும், ஒட்டோக்காரருடனான உரையாடல்களையும் ரசித்தேன்..

  12. aruna says:
    March 1, 2010 at 8:15 am

    ./ஆனால் உலகம் இப்போது அடையாளங்களை அட்டைகளுக்குள் அடைத்துவிட்டது. அடையாளம் முக்கியமானதுதான் ஆனால் அடையாள அட்டைகள் அதைவிட முக்கியமானவை. ஆட்களை விடவும் அவர்களின் அடையாளஅட்டைகளே அதிகம் நம்பப்படுகின்றன/
    முகத்தில் அறைகிறது உண்மை.
    அருமையான நேர்மையான எழுத்து.

  13. gulf-tamilan says:
    March 1, 2010 at 8:21 am

    நல்லா எழுதியிருங்கீங்க!!!

  14. hafil says:
    March 1, 2010 at 2:25 pm

    My name is Khan படத்தை நானும் பார்த்தேன். மிக மிக அருமையான படம். மக்களுக்கு நல்ல செய்தியை சொல்லியிருக்கிறார்கள். அதிலும் ஷாருக்கானின் நடிப்புக்கு அவருக்கு நிகர் அவரே. இப்படம் மட்டுமில்லை உங்கள் கட்டுரையும் என் மனதில் நிற்கின்றன.

  15. Indhira says:
    March 2, 2010 at 8:07 am

    Ithu My name is Khan padathai patriyathala.Tamil Eezham patriyathu.Oru unmaiyaium padathin moolam than eduthu solla mudikirathu.Padathodu thodarbupaduthi nanraga ezhuthi irukirirgal vazhthugal thamizha

  16. Prashanth says:
    March 2, 2010 at 9:48 pm

    நானும் வன்னீல இருந்துதான் வந்தநான் வளசரவாக்கத்திலதான் இருக்கிறன் இங்க என்னையும் ஆட்டோக்காறர்கள் விரோதிய பாக்கிறமாரித்தான் பாக்கிறானுகள் இவங்கள்ள மூக்கால் வாசி பேருக்கு ராயீவ்காந்தி ஈழத்துக்கு அவன்ர படைய அனுப்பி என்னஎல்லாம் செய்தவனெண்டு தெரியுமா இவியளுக்கும் ஒருநாளைக்கு அப்பிடிநடந்தாத்தான் எங்கட வலி இவங்களுக்கு விளங்கும்

  17. nagulan says:
    March 9, 2010 at 12:30 pm

    It is very wel.

  18. ஓமனா says:
    March 10, 2010 at 1:54 am

    அகிலன்,
    ரொம்ப நன்னா இருக்கு.
    நெறைய எழுதுய்யா.

    ஓமனா

  19. hvl says:
    June 13, 2010 at 9:43 am

    வலியைப் புரிந்துக் கொள்ள முடிகிறது.

  20. சு.மோகன் says:
    October 11, 2010 at 7:52 pm

    அகிலன்,

    அடையாளத்தை இழந்துவிட்டு வாழ்வது மிகவும் கொடுமையானது. துப்பாக்கி முனையிலும் அடையாளங்களைத் துறக்க சிலர் மறுக்கும்போது, பணத்துக்காக அவற்றைத் துறப்பவர்களும் வாழும் விந்தையான உலகம் இது.

    உங்கள் வலியையும் நயமாகச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி!

  21. veeramani says:
    May 4, 2011 at 4:42 pm

    nanraaka irukirathu akilan,
    anpudan
    veeramani

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • அனுபவம்
  • எண்ணங்கள்
  • ஒலிக்கவிதைகள்
  • ஒலிப்பதிவுகள்
  • கவிதைகள்
  • காதல் சிலுவையில்
  • குளிரடிக்கிற ஏரியா
  • சினிமா அனுபவம்
  • நேர்காணல்
  • புகைப்படம்
  • புத்தகம்
  • September 2024
  • June 2021
  • November 2019
  • March 2019
  • April 2018
  • May 2013
  • February 2013
  • December 2012
  • October 2012
  • July 2012
  • June 2012
  • November 2010
  • August 2010
  • June 2010
  • April 2010
  • March 2010
  • February 2010
  • September 2009
  • August 2009
  • July 2009
  • June 2009
  • February 2009
  • January 2009
  • December 2008
  • November 2008
  • October 2008
  • September 2008
  • August 2008
  • July 2008
  • June 2008
  • May 2008
  • April 2008
  • March 2008
  • January 2008
  • December 2007
  • October 2007
  • September 2007
  • August 2007
  • July 2007
  • June 2007
  • May 2007
  • December 2006
  • November 2006
  • October 2006
  • September 2006
  • August 2006
  • July 2006
  • June 2006
©2025 த.அகிலன் | WordPress Theme by SuperbThemes