தட்சணா மூர்த்தி அன்பழகன் (27.03.1985 – 05.03.2009)
எனக்கு நினைவிருக்கிறது நான் இரண்டாம் தடைவையாகவும் அவன் முதலாம் தடைவையாகவும் கடல் பார்த்தது. ஒரு பள்ளிச்சுற்றுலாவில் மாத்தளன் கடற்கரையை நாங்கள் பார்த்தோம். நான் அப்பாட அந்தரட்டிக்கு சாம்பல் கரைக்கப்போகும் போது முதல் முதலாக கீரிமலைக்கடலைப் பார்த்திருக்கிறேன். அது சாதுவாய் இருந்தது அன்றைக்கு கடல் அச்சமூட்டவில்லை அப்போதெல்லாம் பொங்கிவரும் அலைகளில்லை அலைகள் குறித்த நினைவேயில்லை எனக்கு அப்போதெல்லாம். ஆனால் இம்முறை அப்படியல்ல கடல் சீறிக்கொண்டிருந்தது ஒரு மிருகத்தைப்போல நான் நூற்றுச் சொச்சம் மாணவர்களினிடையில் அவசரமாய்த் தம்பியைத் தேடினேன். அலைகள் அவனை கொண்டுபோயிருமோ எண்டு நான் பயந்துபோனேன். ஓடிப்போய் அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு இரண்டு பேரும் கால்களில் நழுவும் மணலை உணர்ந்தபடி சிரித்தோம்.
எனக்கு உண்மையில் அன்றைக்கு ஆச்சரியமாயிருந்தது. எனக்கு அவனைப்பிடிக்காது என்றுதான் நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். பலமுறை அவனைத் தொந்தரவாய் உணர்ந்திருக்கிறேன். அவன் என் நிழலைப்போல எப்போதுமிருந்திருக்கிறான் அதுவே என் பெரிய பிரச்சினை அவன் என் சுதந்திரத்தை பறிப்பதாக நான் எண்ணிக்கொண்டிருந்தேன். என் பால்யத்தில் இருந்தே அவன் என்னைத் தொடர்ந்து கொண்டிருந்தான். நான் படித்த அதே பள்ளியில் அவன் படித்தான். நான் கலந்து கொண்ட பேச்சுப்போட்டியில் அவன் கலந்து கொண்டான் நான் செய்வதெல்லாவற்றையும் அவன் செய்கிறான் என்பது எனக்கு எரிச்சலூட்டியது. ஆனால் அவன் என்னோடு போட்டிக்கு நிற்பதாய் நான்ஒரு போதும் நினைத்ததில்லை மாறாக அவன் என்னைக் கண்காணிக்கிறான் என்பதாய் உணர்ந்திருக்கிறேன். எதற்கெடுத்தாலும் அகப்பைக்காம்பைத் தூக்குகிற அம்மாவிடம் நான் செய்கிற திருகுதாளங்களைப் போட்டுக்கொடுப்பதற்காகவே அவன் என்னைத் தொடர்கிறான் என்றெனக்குத் தோன்றும் அதனால் அவனை நான் சினந்திருக்கிறேன். அம்மாவுக்கு பிடித்த பிள்ளையாய் அவன் எப்போதுமிருந்தான். அம்மாவை அதிகம் நேசித்த மகனாகவும்.
ஆனால் எப்போதும் அவனை நான் வெறுத்ததில்லை என்னால் வெறுத்திருக்கவும் முடியாது. ஆனால் அவன் என்னோடு ஒட்டிக்கொண்டு திரியவே ஆசையாயிருந்தான். எப்போதும் “அண்ணா டேய்” என்றழைத்த படி எல்லாவற்றிற்கும் கூட வந்தான்.ஒரே சமயத்தில் அண்ணனாகவும் தோழனாகவும் என்னை அவன் அழைத்தஅந்தச் சொல் ஒரு உத்தி அழகான உத்தி. அப்படி அழைக்க நிர்ப்பந்திக்கப்பட்ட வயது வித்தியாசங்களே எங்களுக்கிருந்தன. இனி எப்போதும் என்னை அப்படியாரும் அழைக்கப்போவதில்லை.
அதே மாத்தளன் கடற்கரையில் அவனிடம் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் அவன் பலியிடப்பட்டபோது. அவன் இந்த பூமியைவிட்டே நழுவியபோது அதை அறியாத ,ஒரு கையாலாகாத சுயநலவாதியாக சென்னையில் தூங்கிக்கொண்டிருந்திருக்கிறேன். என்னால் அவனைப்பற்றி முழுமையாக ஒரு படைப்பை ஒரு நினைவுக்குறிப்பை எப்போதும் எழுதிவிடமுடியாது. என்னால் முடிவதெல்லாம் அவன் பலியிடப்பட்டவன் என்பதை உரக்கச் சொல்வதே. யார் யாருடையதோ தூக்கின காவடியை ஆடிமுடிக்கும் கனவுகளுக்காக பலியிடப்பட்ட ஆயிரக்கணக்கான உயிர்களில் அவனுடையதும் ஒன்று என்று சொல்லுவதே. அவனை மாவீரர் பட்டியலில் சேர்த்து என்னால் கற்பனை பண்ணவே முடியாது. நான் ஒரு மாவீரனின் அண்ணன் என்று குளிர்காய விரும்பவில்லை. அவன் பலியிடப்பட்டவன் அதுவே உண்மை அவன் சுமந்திருந்த துவக்கு அவன் மேல் திணிக்கப்பட்ட துவக்கு. அவனைக் கொன்றதும் அதுவே.
மேலும் சில நினைவுகள்
மரணத்துக்கு முன்னும் பின்னுமான குறிப்புக்கள்
அன்புத்தம்பி அன்பழகனுக்காக – நன்றி ப.அருள்நேசன்
என்னுடைய ‘மரணத்தின் வாசனை’ தொகுப்பு முதலாம் பதிப்பு வந்தபோது என்னைவிட தொலைபேசிப் பேச்சில் அவன் அதிகம் புழகாங்கிமடைந்தான். அதே மரணத்தின் வாசனை மூன்று மாதங்கள் கழித்து இரண்டாம் பதிப்பு வந்தபோது அது அவனுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
”பலியிடப்பட்டான் “ இதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை.
அந்தநாள் இன்னமும் நினைவில் நிற்கிறது. அது மறந்து போகக் கூடிய நாளும் அல்ல.
கிட்டத்தட்ட உங்களோடான எல்லாத் தொடர்புகளையும் நிறுத்தி விட்ட பிறகும் இந்தப் பதிவு அன்றைய நாளின் பதற்றத்தை மீளக் கொண்டு வருகிறது.
என்ன சொல்வதென்று புரியவில்லை, உங்கள் வேதனைஐ புரிந்து கொள்வதைத் தவிர எதையும் சொல்லமுடியவில்லை அகிலன்
வாசிக்கிறேன். தொடருங்கள் தோழர்.
வேதனைகளை சுமந்த வார்த்தைகள்..
//உண்மை அவன் சுமந்திருந்த துவக்கு அவன் மேல் திணிக்கப்பட்ட துவக்கு. அவனைக் கொன்றதும் அதுவே.//
யார் பதில் சொல்வது?
பலியிடப்பட்டவன்………..
Agiilan, …………………………………….. i can’t say anything
princenrsama Says:
March 21st, 2010 at 10:16 pm
//உண்மை அவன் சுமந்திருந்த துவக்கு அவன் மேல் திணிக்கப்பட்ட துவக்கு. அவனைக் கொன்றதும் அதுவே.// யார் பதில் சொல்வது?”
பிரின்ஸ் இந்தப் பார்வை உங்களுக்கு எப்போ வந்தது, எல்லாம் கருணாநிதிக்கு எதிராக திரும்புகிறது என்ற உடனா?
அன்பு ,அது நாங்கள் அழைக்கும் பெயர்.7ம் ஆண்டில் இருந்து தொடங்கிய நம் நற்ப்பு மாத்தளனில் புதைக்கப்பட்டது.
அவன் கையில் துப்பாக்கி(சாவு)தினிக்கப்பட்டது..அது யாவருக்கும் தெரியும்…அவனை நான் இருதியாக
மாத்தளனில் கன்டபொது..அவன் எனக்கு வாழ்வு கொடுத்தான்
என் கையில் தினிக்கபட இருந்த சாவை ..நாசுக்காக தட்டிவிட்டான்.இழந்தவனுக்கு தெரியும் 30 வருட போராட்டத்தின்
வலி.
மிகவும் துன்பம் தருகிறது. இப்படி எத்தனை ஆயிரம் பேருடைய தவிப்புகள் குமுறிக்கொண்டிருக்கின்றன எம்பூமியில். நெஞ்சு பொறுக்குதில்லை.
எப்போதும் மனிதனை வாழவைத்துக் கொண்டிருப்பது மறதிதான் இல்லையேல் நினைவுகளே இவனைக் கொன்றுவிடும். இன்னும் பொரியும் சட்டியிலிருந்து தப்புவதாக நினைத்துக்கொண்டு நெருப்பில் விழுந்த என் போன்றோருடைய கதையும் மீதமிருக்கிறதே…அடுத்தடுத்து மூன்று ஆண்மக்களையும் திருமணத்துக்கு நாள் குறித்திருந்த என் பேத்தி மாயாவையும்.(பின்புறமாக கைகள் கட்டப்பட்ட நிலையில் அவள் சுடப்படும் காட்சியைக் கண்டபின்னும்கூட) அது அவளில்லை என்று நம்பிக்கொண்டு இன்னும்வாழ்கிறேனே இது மறதிதந்த பரிசா? இல்லை எனக்கு நானே தரும் சமாதானமா? இப்படி அடிக்கடி ஆறிய புண்ணைக் கீறிப்பார்க்காதீர்கள்.தாங்க முடியவில்லை..