அத்தனை எளிதன்று
அகதியாதலும்
அதனின்று விடுபடலும்.
நீண்ட அலைதலின் முடிவில்
நதி மருங்கில் தேங்கிய
துரும்பைப் போலவோ
அல்லது
கடல் வீசியெறிந்த
தகரப் பேணியைப்போலவோ
எறியப்பட்டிருக்கிறது வாழ்வு.
துரும்பைத் திரும்பவும்
அலைகளில் எறியும் அறியாச்சிறுவனின்
எத்தனங்களோடிருக்கிறது உலகம்.
அலைதலும் தொலைதலும்
எறியப்படுதலின் வலியும்
துரும்பே அறியும்.
திடுக்கிட்டு விழிக்கும்
எல்லாக்கனவுகளும்
விசாரணையிலேயே தொடங்குகிறது.
நான் ஓர் அகதி
என்னிடமிருப்பதோ
அவளைச் சேர்வதான எத்தனங்களும்
விசாரணைக்கான பதில்களும்
கொஞ்சக் காகிதங்களும்
திரும்பவும் திரும்பவும்
பெருகும் விசாரணைக்கேள்விகள்
செவிகளில் நுழைகையில்
நான் நினைக்கத் தொடங்குவேன்
படகில் நுழையாக் கடலைக்குறித்து.
அத்தனை எளிதன்று
அகதியாதலும்
அதனின்று விடுபடலும்.
I like ur blog i can see ur feelings.its look different..all the best for ur future..
//அத்தனை எளிதன்று
அகதியாதலும்
அதனின்று விடுபடலும்//