ஈழத்துக்கவிஞர் சு.வில்வரத்தினம் பற்றிய நினைவுப்பகிர்வு
நான் அவரை சுமார் நான்கு வருடங்களிற்கு முன்பாக ஒரு மழைக்கால காலைப் பொழுதில் சந்தித்தேன். இவர்தான் கவிஞர் வில்வரத்தினம் என நிலாந்தன் அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார் . இவர் அகிலன் கவிதைகள் எழுதுவார் என்று அவருக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார்.
எனக்கு ஞாபகமிருக்கிறது நான் உடனே யார் சுனா.வில்வரத்தினமா என்று கேட்டேன். சுனா கொஞ்சம் அழுத்தமாக இருந்தது கேள்வியில் சு.வி ரசித்துச்சிரித்தார். பெரிய சிரிப்பு ஓமப்பு நான் சுனா வில்வரத்தினம் தான் என்று கைகளைப்பற்றிக்கொண்டார். இன்றைக்கும் உறைந்து போன அந்தச்சிரிப்பு நான் இதை தட்டச்சிக்கொண்டிருக்கையிலும் நிழலெனப்படிகிறது நினைவுகளில்.
அதற்கு ஒரு இரண்டு வருடங்கள் முன்பாக நாங்கள் எமது இடப்பெயர்வு வாழ்க்கையின் இறுதிக்காலங்களில் இருந்தபோது கவிரும் புகைப்படகலைஞருமான அமரதாஸ் எனக்கு சு.வியின் நெற்றிமண் கவிதைத் தொகுதியைக்கொடுத்தார். அதுதான் எனக்கும் சு.விக்குமான முதல் பரிச்சயம் அவரது பெயரைiNயு நான் அப்பொழுதுதான் கேட்கிறேன். (நான் கவிதைகள் என்று எதையோ கிறுக்கி கொண்டிருந்த காலம் அது) நெற்றிமண் படித்து பிறகு அவரது கவிதைகள் எல்லாவற்றையும் படிக்கும் ஆர்வத்தில் அலைந்து அவரைப்பற்றி பிரமாண்டமான எண்ணங்களை எனக்குள் நிரப்பிக்கொண்டிருந்த காலத்தில் தான் நிலாந்தனின் வீட்டில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது கலகலப்பான மனிதர் அவர் மட்டு மல்ல அவர் இருக்கும் சூழலையும் கலகலப்பாக்க வேண்டு மென்பதில் குறியாயிருப்பார். அவரது துணைவியாரும் அவரும் அற்புதமான தம்பதிகள்; என்று தோன்றும். சு.வி தனது மனைவியை கிண்டலடிக்கும் விதமே தனிதான் எனக்கு ம் இந்த வயதிலும் இளமை தாண்டவமே ஆடகிறது இந்த மனிதரிடம் என்று நினைத்திருக்கிறேன்.
தொடாச்சியாக நான்கைந்து நாட்கள் அவரை நிலாந்தனின் வீட்டில் சந்தித்திருக்கிறேன். கூடவே தாயகத்தின் அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்களும் உடனிருப்பார் அவர்கள் எல்லோரும் இலக்கியம் பேசுவார்கள் அல்லது அரசியல் பெரும்பாலும் இப்போதெல்லாம் இலக்கியம் அரசியல் என்று தனித்தனியாக ஏதுமில்லை அங்கே அல்லது இல்லாமலாக்கப்பட்டிருக்கிறது. எல்லாமே அரசியல் தான் இருப்பே பிரச்சினையாகிய பிறகு இலக்கியம் என்ன வேண்டிக்கிடக்கிறது.அவர்கள் ஏதோ பேசுவார்கள் நான் கேட்டுக்கொண்டிருப்பேன் எப்போதாவது ஓரிரண்டு வார்த்தைகள் பேசியருப்பேன்.
சு.வியுடன் எனது பிறந்தநாளைக்கொண்டாடும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. சும்மா சின்னதாய் ஒரு றீட் அதில் சு.வி பாட்டுப்பாடினார் அற்புதமான பாடல் நான் நினைக்கிறேன் அது கிருஸ்ணணை நினைத்து உருகும் பாடல்
“யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே” இந்தப்பாடல் தான் சு.வி பாடினார் நன்றாக பாடினார். நிலாந்தன் அவர் முடித்தவுடன் சொன்னார் வில்வண்ணைக்கு மிகவும் பிடித்த பாடல் இது என்று. அது தவிரவும் சு.வி ஆன்மீகத்தில் ஈடுபாடுள்ளவராக இருந்தார். அதே நேரம் சடங்குகளிலே நம்பிக்கையற்றவராகவும் இருந்தார்.
பெரிய மூக்கு பளிச்சென்ற மனசின் அடியாளங்களைத் தேடுகிளன்ற பார்வை என்று அந்த நான்கைந்து நாட்கள் நான் சு.வியை ரசித்தபடி இருந்தேன். அவர் உள்ளுணர்வுகளை தான் நம்புகிறேன் என்றார் அவைதான் என்னை வழிநடத்துகின்றன.
தீவுப்பகுதியிலே இந்திய ராணுவம் குடியிருந்தபோது இவரும் அங்கேதான் இருந்தார்
ஒரு நாள் இரவு திடீரென்று தோன்றியிருக்கிறது.மனிசியை அழைத்து வா வெளிக்கிடு உங்கட அப்பாவீட்டை போவம் என்றிருக்கிறார். மனிசி என்னப்பா இந்த நேரத்தில போவம் எண்டுறியள் என்ன பிரச்சினை? இல்லையப்பா மனம் சரியில்லை போவம் என்றிருக்கிறார். இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு இரவிரவாக வீட்டை விட்டு கொஞ்ச தூரத்தில் இருந்த மாமனார் வீட்டிற்கு போய்விட்டார்கள் மொத்தக்குடும்பமும். அவர்கள் கையில் எடுத்துப்போனது தமது குழந்தைகளும் காலச்சுவடு சஞ்சிகை ஒன்றும் தான். அன்று இரவு பெரிய வெடிச்சத்தம் ஒன்று கேட்டதாம் அடுத்தநாள் வீடு திரும்பும்போது அவர்களது வீட்டுக்கு இந்தியராணுவம் குண்டுவைத்து தகர்த்து விட்டிருந்தது. தரைமட்டமா கிடந்ததாம் வீடு. தனது உள்ளுணர்வு தனக்கு உயிர்கொடுத்ததாக சொல்லுவார். சு.வி.
இது பற்றி எங்கேயோ எழுதிய சு.வி தான் கொண்டு போன காலச்சுவடு பற்றி சொல்லும்போது சொல்லுவார் சுந்தரராமசாமி ஆசிரியராக இருந்த போது வந்த இதழ் அது. இலக்கியம் குறித்து சர்ச்சைகளிலும் ஆரோக்கியமான விவாதங்களிலும் ஆர்வமாக கலந்து கொண்டார். சு.வி.
ஆத்மா ஒரு முறை ஒரு கட்டுரையில் குறிப்பிட்டார் சு.வியிடம் கவிதை கேட்டால் உடனேயே பேப்பரும் பேனாவும் எடுத்துக்கொண்டு ஒரமாகப்போய் எழுதிக்கொடுப்பாராம் என்று..
எல்லாம் முடிந்துவிட்டது ஒரு இலக்கிய ஆளுமையை தழிமர்கள் இழந்து விட்டார்கள். சு.வி ஒரு முன்னோடு பல இளைய தலைமுறை கவிஞர்களுக்கு அவர் வழிகாட்டிவிட்டிருக்கிறார் படைப்பிலக்கியத்தின் பல்வேறு தளங்களிலும் ஆவர்வமோடு இயங்கினார்.ஈடு செய்ய முடியாத பேரிழப்பு இது.
என்;னிடம் கடைசியாக சந்தித்தபோது கேட்டார் உன்ர கவிதைகள் எல்லாத்தையும் ஒரேயடியா ஒருக்கா தாடாப்பா படிக்கோணும் பிறகொருக்கா கொண்டு வந்து காட்டு எண்டு.. பிறகு நான் அவரை சந்திக்கவில்லை எனது கவிதைகளை ஒட்டு மொத்தமாக அவரிடம் காட்வே முடியவில்லை பெரும்பாலும் நாட்டுப்பிரச்சினை சந்திப்பதற்கான முட்டுக்கட்டைகளை நீட்டிக்கொண்டே சென்றது. இப்போ இன்னும் தீராமல் நீண்டு கொண்டே போய் முடிந்தும் விட்டது.
ஏக்கங்களுடன்
த.அகிலன்
சு.வி சிறுகுறிப்பு(1950-2006
ஈழத்தின் புகழ்மிக்க கவிஞர்களில் ஒருவரான கவிஞர் சு.வில்வரத்தினம் தனது 56 வயதில்
(09.12.06)சனிக்கிழமை கொழும்பில் காலமானார்.
புங்குடுதீவை பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர் சு.வில்வரத்தினம், இடம்பெயர்ந்து 1991 ஆம் ஆண்டு முதல் திருகோணமலையில் வாழ்ந்து வந்தார்.70களில் எழுதத்தொடங்கிய சு.வி இறுதிவரை எழுதிக்கொண்டே இருந்தார்.
இவரது கவிதைத்தொகுதிகளாவன, அகங்களும் முகங்களும் (1985),
காற்றுவெளிக்கிராமம் (1995), காலத்துயர். நெற்றிமண், 2000 இலே வெளியானது. இவரது மொத்தக் கவிதைகளும் “உயிர்த்தெழும் காலத்திற்காக” என்னும் ஒரே தொகுப்பாக இந்தியாவில் இரந்து வெளிவந்திருந்தது. ஈழத்தின் மிகு முக்கியமான கவிதைத்தொகுதியான மரணத்துள் வாழ்வோம் தொகுதியிலேயும் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
இவரது “காற்றுவழிக் கிராமம்” என்னும் கவிதைத் தொகுதி விபவி சுதந்திர இலக்கிய அமைப்பின் 1995 ஆம் ஆண்டிற்கான சிறந்த கவிதை நூலுக்கான விருதினை பெற்றுக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
படங்களுக்காக நன்றி வசந்தன் மற்றும் பெயரிலி
நல்லதோர் நினைவுப்பகிர்வு.
இந்த உள்ளுணர்வு என்பது பல நேரங்களில் மிகமிக ஆச்சரியப்படுத்தும்.
நானும் பலபொழுதுகளில் உணர்ந்திருக்கிறேன். வெளியிற் சொல்லப் பயப்படும் அல்லது சங்கடப்படும் அனுவங்கள் சில.
நல்லதொரு பதிவு.நன்றிகள்.
உங்கள் பதிவுகளை அண்மையில் படிக்க
முடிந்தது.நிறைய எழுதுங்கள்.
சு.வி. அவர்களுடைய படத்தை இப்பொழுதுதான் பார்க்கிறேன்.
ஒரு வாரத்துக்கு முன்னர் என நினைக்கிறேன் நண்பர் ஒருவர் தொலைபேசியில் சு.வி. வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் தகவலைச் சொன்னார்.வேலைப்பளுவில் மறந்துபோனேன்.மீண்டும் அவர் இறந்த செய்தி கேள்விப் பட்டவேளையில் தான் அவர் நோய்வாய்ப் பட்டிருந்த தகவல் நினைவுக்கு வந்தது.என்னையே நான் நொந்து கொள்கிறேன்.
நல்ல நினைவுப் பதிவு, மனது கனத்தது
வாழும்போது பெரிதும் அறிய முடியாது போன அல்லது நான் அறிவதை ஒத்திவைத்த கவிஞனை மரணத்தில் அறிந்துகொண்டேன். உங்கள் பகிர்வின் மூலம் அவரை வாசிக்கவேண்டுமென்று தூண்டப்படுகிறேன். மரணத்தின் பின்பே ‘மனிதர்கள்’பேசப்படுகிறார்கள். அகிலன் நீங்கள் கூறிய மு.திருநாவுக்கரசு அவர்களோடு உங்களுக்கு இப்போதும் தொடர்பு இருக்கிறதா… ஊரில் இருந்தபோது அவரை நான் அறிந்திருந்தேன். மிகச் சிறந்த அறிவாளி மற்றும் நல்ல மனிதர்.
//சு.வி ஆன்மீகத்தில் ஈடுபாடுள்ளவராக இருந்தார். அதே நேரம் சடங்குகளிலே நம்பிக்கையற்றவராகவும் இருந்தார்//
இது குறித்த செயற்பாடொன்றுடன்தான் அவரை நான் அறிந்து கொண்டேன். சொல்லிலும் செயலிலும் ஒன்றித்திருந்தவர்.
//இந்த உள்ளுணர்வு என்பது பல நேரங்களில் மிகமிக ஆச்சரியப்படுத்தும்.
நானும் பலபொழுதுகளில் உணர்ந்திருக்கிறேன். வெளியிற் சொல்லப் பயப்படும் அல்லது சங்கடப்படும் அனுவங்கள் சில. //
வசந்தன்!
உங்களுக்குமா? 🙂
சுனாவின் ( மனதிடை ஒரு விம்முதலோடு இதழ்விரியாச்சிரிப்பு ஒன்று என்னுள் பரவுகிறது) நான் பெரிதும் வியந்து போன ஈழத்து கவிஞன். இவன். ஒரு முறையாவது நேரடியாகவோ அன்றி மின்னஞ்சல் மூலமாகவோ சந்திக்க முடியவில்லையே என்ற பெரிய ஏக்கம் ஒன்று உள்ளது. அதை நினைத்து நினைத்து அவருடைய கவிதைகளில் மூழ்கிற போது செத்திடலாம் மாதிரி இருக்கும். அத்தனை நல்ல பல கவிதைகள் சு.வி யுடையது. சு.வி என்றாலே யாரென்று தெரியாத ஒரு சந்தற்பத்தில் தொலைபேசியூடாக எனது கவிதை ஒன்றை வாசித்து காட்டி பாராட்டு பெற்ற பாக்கியம் மட்டும் என்னிடமுள்ளது. ( சுவிசுக்கு வந்திருந்த போது ரவி ரஞ்சி வீட்டிற்கு தாற்செயலாக தொலைபேசி எடுத்த போது கதைத்தது மட்டுமே. )அது ஒன்று தான் கொஞ்சமாவது என்னை ஆசுவாசப்படுத்த முயல்கிறது. அதற்கு முதல் சு.வி என்றாலே யாரென்று தெரியாது. அவருடைய கவிதை ஒன்றைத்தன்னும் நான் தரிசித்ததும் கிடையாது. அதன் பின் சு.வியை தேடத்தோடங்கினேன். ( போர்ச்சூழல் நம்மை எல்லாம் பிய்த்து எறிந்தள்ளது. அது தான் உண்மை) வாழ்நாள் முழுவதும் வதைசெய்தே கொல்லும் என்னை. சு.வியை நேரடியாக ஒரு நாள் தன்னும் சந்திக்க வில்லையே என.