“அன்பென்ற மழையிலே அகிலங்கள்
நனையவே அதிரூபன் தோன்றினானே”
இதைப் பாடியது அனுராதா சிறீராம் தான் என்று நான் கொஞ்காலம் நம்பவேயில்லை. அவர் “டேய் கையை வைச்சுகிட்டு சும்மாயிருடா” என்கிற மாதிரியான மார்க்கப்பாடல் களைத்தான் பாடுவார் என் நினைத்துக்கொண்டிருந்தேன். ம் இந்தப்பாடல் அனுராதாசிறீராமின் குரல்வளத்தின் ஒரு மைல்கல்.
கிறிஸ்மஸ் கொண்டாட உலகம் தயாராகிறது. ஊரில் கொண்டாடிய நினைவுகளை மீட்டிப்பார்க்கிறேன். நான் ஒரு சைவக்காரனாக இருந்தாலும் கிறிஸ்மஸ் எப்போதும் என் கூடவே வருகிறது. எங்கள் வீட்டின் பின்வேலியோடு ஒரு தேவாலயமிருந்தது அதன் திருவிழாக்கள் பூசைகள் வித்தியாசமாக இருந்தன அவர்கள் பூசையின் போது பாடல்களை பாடுவார்கள் அப்போது நாங்கள் வேலிக்குள்ளால தலையை ஓட்டி பார்த்துக்கொண்டிருந்திருக்கிறோம். அந்த கோயில் திருவிழாக்கள் வருகிறதென்றால் ஒரு மாதத்துக்கு முன்னாலேயே கொஞ்ச அக்காக்கள் சேர்ந்து பாடுறதுக்கு பயிற்சி எடுப்பினம் மறுபடியும் மறுபடியும் ஒரே பாடல்களைப்பாடி பாடிப்பாடி அவர்கள் பயிற்சி எடுப்பதை பார்த்துப்பார்த்தே எனக்கு பாடல்கள் பாடமாகிவிடும் அந்தப்பாடல்களைப்பாடிக்கொண்டு திரிவேன்.
பிறகு கிறிஸ்மஸ் என்றால் கொலுவைக்கிற மாதிரி மாட்டுத்தொழுவத்தில் பாலன் பிறந்த காட்சியை தேவாலயத்தின் ஒரு ஓரமாக ஒரு மேசையைப்போட்டு சவுக்கு மரத்தை வெட்டி ஒரு குடில் அமைத்து சின்னசின்ன உருவ பொம்மைகளை வைத்து புது வருடப்பிறப்பு வரை வைத்திருப்பார்கள். நாங்கள் அந்த பொம்மைகளையும் அது விபரிக்கிற காட்சிகளையும் அடிக்கடி போய் பார்த்து விட்டு வருவோம். இதற்காகவே அந்த நாட்களில் எங்கள் பின்வேலியில் முள்ளுக்கம்பிகளுக்கு இடையால் ஒரு சிறப்பு பாதையை ஏற்பாடு செய்திருப்போம் வீட்டுக்கு யாராவது எங்கள் வயதில் விருந்தாளிகள் வந்தால் நாங்கள் உடனே அவனை அல்லது அவளை எங்கள் பிரத்தியேக பாதை வழியாக அழைத்துச்சென்று அந்த கொலுவினைக்காட்டுவோம்
(யாரிட்டயும் சொல்ல மாட்டியள் என்றால் ஒரு விசயம் சொல்லுறன் ஒருக்கா இப்பிடி போய் பார்க்கும் போது கைகளைக்கட்டுப்படுத்த முடியாமல் ஒரு பொம்மையை நான் தூக்க தம்பி பறிக்க அது உடைஞ்சு போய்ச்சுது கோயிலைப்பார்க்கிற அம்மம்மா பிறகு அம்மாவைக்கூப்பிட்டு கேட்டா உவங்கள் வந்தவங்களோ எண்டு அம்மா கேக்கேக்க நாங்கள் உண்மையை சொல்லிப்போட்டம் நாங்கள் போகவே இல்லை எண்டு ஹிஹி)
அப்படி கிறிஸ்மஸ் என்றால் எங்களுக்கும் மகிழ்ச்சிதான். கிறிஸ்மசில் எனக்கு இன்னொரு மகிழ்ச்சியும் இருக்கும் என்னெண்டா அது நத்தார்பாப்பா
“யேசுபாப்பா ஓடிவாறாராம்
ஏழைகளைத் தேடிவாறாராம்”
எண்டு மேளதாளங்களொடு ஆடிக்கொண்டு ஒரு பெரிய வயித்தோடு ஆட்டமே ஒரு மாதிரி கிக்காக இருக்கும் நத்தார் பாப்பா வருவார். அப்பிடியே ஆடியபடி அவர் ரொபிகளை எடுத்து எங்களிடம் தருவார் நாங்கள் அதைவாங்கி தின்னுவம் சில துணிஞ்ச கட்டைகள் நத்தார் பாப்பாவோட சேர்ந்து ஆடுங்கள் நாங்கள் அம்மாட அகப்பைக்காம்பை நினைச்சுக்கொண்டு பேசாம இருப்பம். ம் …
பிறகு பள்ளிக் கூடத்திலயும் கிறிஸ்மஸ் நடக்கும் இலங்கைப்பள்ளிக் கூடங்களில் மார்கழி மாதம் விடுமுறை என்பதால் நவம்பர் மாதத்திலேயே ஒரு நாளை ஒளிவிழா என்று கொண்டாடுவார்கள் பள்ளிக்கூடத்தில படிக்கிற வேதக்காரப்பெடியள் சந்தோசப்படவேண்டுமே அதற்குத்தான். சந்தோசம் அவங்களுக்கு மட்டுமே எங்களுக்கும்தான் கேக் உட்பட்ட இத்தியாதி தின்பண்டங்களை பாக்கில போட்டு தர திண்டுவிட்டு அப்பிடியே போடுற நாடகங்கள் பாடுற பாட்டுக்கள் எண்டு பாத்திட்டு வருவம் சந்தோசமா.
இது சின்னப்பொடியனா இருக்கேக்க வளர்ந்தாப்பிறகு ஒளிவிழாவை நடத்துறதே நாங்கதான் ஒரு குண்டான பெடியனை பிடிச்சு அவன் வயித்துல தலகாணியைக்கட்டி நத்தார்ப்பாப்பாவின் உடுப்பை போட்டு அவனை ஆடவிடுவம். ஒளிவிழா தொடங்கும் போதே அறிவிப்பாளர் சொல்லத்தொடங்கியிருப்பார் உங்களை மகிழச்சிப்படுத்துவதற்காக நத்தார்ப்பாப்பா வந்து கொண்டிருக்கிறார் என்று ஆனா மற்ற நிகழ்ச்சிகள் எல்லாம் முடிந்து கடைசியாத்தான் நத்தார்ப்பாப்பாவை வரவிடுவாங்கள்
அப்போதெல்லாம் மேடைக்கு நத்தார் பாப்பா வந்தால் அவர் கூடுதலா ஒரு மொழிபெயர்ப்பாளரோட தான் வருவார். கசுபுசு என்று சும்மா நத்தார் பாப்பா அவர் மைக்கில சொல்ல மொழிபெயர்ப்பாளர் அதைமொழிபெயர்ப்பார்.
அந்த உரையாடல் இப்பிடி இருக்கும்
ந.பாப்பா – கசுபுசு
மொழி. பெ – அவர் அமெரிக்காவில் இருந்து வந்தவராம்
ந. பாப்பா – ஸ்சிக்மழகுபு
மொழி.பெ – அவ்வளவு தூரம் வந்ததால தனக்கு சரியா களைக்குதாம்
ந.பாப்பா – கினிகதடட
மொழி பெ – வரும்போது பயங்கர செக்கிங்காம்(அப்போது வன்னிக்குள் வருவதெண்டால் கடுமையான செக்கிங் இருக்கும் இப்போதும் தான்)
ந.பாப்பா – (வயித்தை தடவிக்கொண்டே) கிசபிசபா
மொழி.பெ – ஆமி வயித்துக்க குண்டு இருக்கோ எண்டு கேட்வனாம்.
இப்படி போகும் உரையாடல்.
இந்த உரையாடல் முடிஞ்சோண்ண அப்பிடியே நத்தார் பாப்பா இனிப்பு பொட்டலங்களை வீசிய படியே சின்னனுகளுக்குள்ளால நடந்து போய் அதிபர் உட்பட்ட முக்கிய பிரபலங்களுக்கு கைகொடுப்பார்.( யார் அவயளிட்ட படிக்கிற இந்த பாப்பா) இப்பிடி ஒரு முறை விஜந் எண்டொரு குண்டன் பாப்பாவா வேசம் போடேக்க கெமிஸ்ரி வாத்தி ஜெகதீஸ்வரனின் கையை பிடித்து நசிநசியெண்டு வேண்டிய மட்டும் நசித்து விட்டான். (வாத்தி அடுத்தநாள் அவனைக் கேள்விமேல் கேள்வி கேட்டு பின்னியெடுத்தது வேறு கதை)
இதெல்லாம் முடிந்தவுடன நத்தார் பாப்பா மேடையில ஏறி ஒரு குத்தாட்டமான பாட்டுக்கு ஆட்டம் போடுவார் இப்பிடி ஒரு முறை ஆடிக்கொண்டிருந்த பாப்பா தன்ர ஆட்டத்தை திடீரென்று நிறுத்தினார் அவசரமா நாங்கள் திரையை இழுத்து மூடினம் நடந்தது என்ன?
?
??
???
????……………….
ஆடிக்கொண்டு இருந்த பாப்பா திடீரென்று தன் ஆட்டத்தை நிறுத்த சின்னனுகள் ஹோ எண்டு கத்த கிட்டப்போய் என்னடா எண்டால் தலையாணி அறுந்து போச்சு மச்சான் பிறகென்ன விவேக் பாணியில்
“கவலைதோய்ந்த உங்கள் முகங்கள் முன்னால் இருந்தாலும் கட்சிப்பணிகள் அழைப்பதால் என்று சீச்சி”
“நத்தார் பாப்பாவுக்கு அமெரிக்காவில் இருந்து அவசர அழைப்பு வந்ததால் உடனடியாக போகிறார்”
எண்டு சொல்லி திரையை இழுத்து மூடிவிட்டோம்.
இது ஒன்று.
நான் அப்பகவிதைகள் எல்லாம் எழுதுவன். ஒளிவிழாவுக்கு ஒரு கவியரங்கம் வைச்சோம் தலைவர் நான்தான் (நம்புங்கள்) பாலன் பிறந்தார் என்று தலைப்பு அப்ப எங்கட வகுப்பில அருள்நேசன் எண்டொரு நண்பன் இருந்தான் அவன் எங்களோடயே படிக்கிற உதயா எண்டொருத்திய காதல் அதுவும் ஒருதலைக்காதல் பண்ணினான்.
ம் நாங்கள் யார் காதலை வாழவைக்க வந்த தெய்வங்கள் அல்லவா
அதனால் அவனை கவிபாட மேடைக்கு அழைக்கும் கவிதையை நான் இப்படி எழுதினேன்
அடுத்து வருவது அருள்
அவர்
எடுத்து வருகிறார்
கவிதைகள் எழுதிய
பேப்பர் சுருள்
பௌர்ணமி நிலவின்
உதயம் பார்த்து இவர் சிலிர்த்ததுண்டு
சூரிய உதயம் பார்த்து
பனித்துளி போல் இவர் கரைந்ததுண்டு.
இறை அருளின் உதயம் பாடவரும்
கல்லூரிக்கவியுலகின் புது உதயம்
அருளே வருக
இறைஅருளின் உதயம் உன் கவியில் தருக(இயேசு மன்னிப்பாராக)
இப்படி நிறைய உதயத்தை கொஞ்சமாய் அழுத்திச் சேர்க்க வகுப்பு பெடியள் விசிலடிச்சு அரங்கத்தை நிறைக்க( எல்லாம் ஏற்கனவே செய்த ஏற்பாடுதான்)
எப்படிப்பட்ட புனிதமான பணி நான் செய்தது பார்தீர்களா?(மெய் சிலிர்த்திருக்குமே) பிறகு மேடைய விட்டு இறங்க உதயா பல்லைக்கடிச்சுக்கொண்டு பத்திரகாளியாய் மாறின விசயம் உங்கள் ஒருத்தருக்கும் தெரியாது எண்ட நம்பிக்கையில் ம் அதையெல்லாம் விடுவோம்.
இயேசு பிறக்கும் போது ஒரு அகதி. தனது நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட தாய்க்கும் தந்தைக்கும் இரவல் வீட்டு மாட்டுத்தொழுவத்தில் பிறந்த குழந்தை. இந்தக் கோணத்தில் இந்த விழாவை நாம் எத்தனை பேர் அணுகுகிறோம் அல்லது அணுகத் தயாராகிறொம். அகதியின் வேதனையையும் சோதனைகளையும் நான் நிச்சயமாக இப்போது தான் உணர்கிறென் என் கேள்வியெல்லாம் இயேசுவுக்காவது மாட்டுத்தொழுவம் கிடைத்தது. உலகமெங்கும் அதிகாரவர்க்கங்களால் அகதியாகிற எத்தனை பேருக்கு மாட்டுத் தொழுவங்களாவது கிடைக்கின்றன?
த.அகிலன்
என்னப்பா இது யாரும் கண்டுக்கவே மாட்டேங்கிறீங்க
நல்ல பதிவு.
உங்கடை கவிதையளில தான் எனக்கு அதிக ஈடுபாடு. நல்லா எழுதுறியள். இவ்வளவு காலமும் மற்ற வீடுகளில நடக்கிற கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில தான் நானும் கலந்து கொள்ளுறனான். 95 க்கு முதல் சங்கானையில எங்களுக்கு தெரிந்த ஒரு வீட்டில இறைச்சிக்கறியயும் நூடில்சையும் சாப்பிட்டு விட்டு அடுத்த நாள் முழுக்க வயிறு கட முட எண்டு கொண்டு கிடக்கும்.
இம்முறை என்ர வீட்டிலையும் அதிகாரபூர்வமாக கிறிஸ்மஸ் நடக்க போவுது. 🙂
தம்பி அகிலன்,பதிவு மிகவும் நன்றாக உள்ளது.
//நாங்கள் அம்மாட அகப்பைக்காம்பை நினைச்சுக்கொண்டு பேசாம இருப்பம். ம் …//
அப்போ உங்களுக்கு அகப்பைக்காம்புப் பூசைதானா?
//விஜந் எண்டொரு குண்டன் பாப்பாவா வேசம் போடேக்க கெமிஸ்ரி வாத்தி ஜெகதீஸ்வரனின் கையை பிடித்து நசிநசியெண்டு வேண்டிய மட்டும் நசித்து விட்டான்.//
இதுவும் உங்கள் திட்டப் படியா நடந்தது?
//பிறகு மேடைய விட்டு இறங்க உதயா பல்லைக்கடிச்சுக்கொண்டு பத்திரகாளியாய் மாறின விசயம் உங்கள் ஒருத்தருக்கும் தெரியாது//
தம்பிக்கு விஷேட கவனிப்பு நடந்ததாம் 🙂
கானா பிரபா,
இந்தப் பதிவைப் பார்த்தீர்கள் என்றால் உங்கள் அருமை நண்பனின் கூற்றைக் கவனியுங்கள்.
“அதிகாரபூர்வமான கிறிஸ்மஸ்”
//இம்முறை என்ர வீட்டிலையும் அதிகாரபூர்வமாக கிறிஸ்மஸ் நடக்க போவுது. :)//(சயந்தன்)
வணக்கம் அகிலன்
இன்று தான் இந்தப் பதிவைக் கவனித்தேன், எப்படியோ என் கண்ணிற் படாமல் விட்டுவிட்டது. ஊரில் இருக்கும் போது நான் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் ஒன்றாதலில் கலந்து கொள்ளாமல் விட்டாலும் உங்கள் எழுத்து மூலம் இப்படித் தான் இருக்கும் என்பது உண்மை. மீண்டும் ஒரு நல்ல நனவிடை தேய்தல்.
வணக்கம் பஹீமா ஜகான்
அவர் இப்ப வேலைக்காரன் படத்தில ரஜினியும் அமலாவும் மாதிரி பனி மலைகள் தோறும் திரிந்து கொண்டாடுவார்:-)))
//சயந்தன் said…
இம்முறை என்ர வீட்டிலையும் அதிகாரபூர்வமாக கிறிஸ்மஸ் நடக்க போவுது. :)//
வாழத்துக்கள் சயந்தன். ஜமாய்ங்க.
//பஹீமா ஜகான் said…
தம்பிக்கு விஷேட கவனிப்பு நடந்ததாம் :)//
ஆஹா எவ்வளவு அழகாய் தம்பியில் அக்கறை வைத்திருக்கிறீர்கள்.
//கானா பிரபா said…
அவர்(சயந்தன்) இப்ப வேலைக்காரன் படத்தில ரஜினியும் அமலாவும் மாதிரி பனி மலைகள் தோறும் திரிந்து கொண்டாடுவார்:-))) //
என்ன சயந்தன் அப்படியா?
நேற்றைக்கே வாசித்தேன்.இன்று மீண்டும் வாசித்தேன்.
அடுத்த கிறுஸ்துமஸ் மேலும் இனிதாக வாழ்த்துக்கள்
எல்லா ஊரிலும் எல்லோரின் இளமைக் காலத்திலும் இப்பிடித்தான் நடக்குமோ? நானும் இப்பிடித்தான். தெரியாத கரோல் பாடல்களைத் தெரிந்த ஒரு அக்காவிடம் கேட்டுப்பாடிப் பழகிக்கொண்டு எங்கள் நண்பர்கள் வீடுகளுக்குப் போய்த் தெண்டலிட்டதும் குறிப்பாக நண்பன் ரொனிக்கு முகை அரும்பியிருந்த காதலின் நாயகி வீட்டுக்குப் போனதுமென பழைய நினைவுகளைத் தூண்டி விட்டீர்கள்.குறிப்பாக அந்த கரோலில் பாடியோரில் ரொனியைத் தவிர மற்ற அனைவரும் இந்துக்களும் முஸ்லீம்களும் என்பது முக்கியம். நல்லதொரு பதிவு