Skip to content
த.அகிலன்

கனவும், வாழ்வும் பின் என் சொற்களும்…

த.அகிலன்

கனவும், வாழ்வும் பின் என் சொற்களும்…

ஊரான ஊரும், நினைவுகளை விடாத மாரித்தவக்கையும்..

த.அகிலன், November 28, 2008December 1, 2009

கொஞ்சமாய்
உள்நுழைந்து பார்க்கும் மழை..

மேலோடு தடவிப்போகும் நிலவு..

உள்ளே புகுந்து

அடிக்கடி விளக்கை அணைத்துவிடுகிற காற்று…

ஆசுவாசமாய் அடுப்பைக் கடந்து நடக்கும் பூனை

ஆனாலும்..

விடியலில் பூக்கத்தான் செய்கிறது முற்றத்து
நித்திய கல்யாணி….

இந்தக்கவிதையை நான் அக்கராயன் குளத்தில் நாங்கள் இருந்தபோது எழுதினேன்..

என் கத்துக்குட்டிக் கவிதைகளில் இதுவும் ஒன்று..(இப்போதும் அது
அப்படித்தான் இருக்கிறது என்பது வேறு விசயம்)
இன்றைக்கு அக்கராயன் மகாவித்தியாலயம் என்று எழுதப்பட்ட சுவரின் எதிரில்

இராணுவத்தினர் நிற்கின்ற புகைப்படம்.. மனசுக்குள் இனம்புரியாத நடுக்கத்தை
ஏற்படுத்தியது.. அந்த முற்றத்தை எனக்கு மறக்கமுடியாது.. இதற்கு முன்பும்
ஒரு நாள் நான் நடுக்கத்தோடும் படபடப்போடும் இந்த முற்றத்தில்
நின்றிருக்கிறேன்.. அது தமிழ்த்தினப்போட்டி முடிவுகளைத் தெரிந்து
கொள்வதற்காக..

கிளிநொச்சி மாவட்ட தமிழ்த்தினப்போட்டி முடிவுகள்
மத்தியபிரிவு பேச்சுப்போட்டி யாரோ ஒரு ஆசிரியர் முடிவுகளை அறிவித்தார்..

மூன்றாம் இடம் செல்வன்.இ.அன்ரன் கிளி பற்றிமா றோ.க
இரண்டாம் இடம்.. செல்வி.அ.வாணி கிளி புனித திரேசா மகளிர் கல்லூரி..
முதலாம் இடம்.. செல்வன்.த.அகிலன் கிளி மத்திய கல்லூரி..
வினோதன் தான் முதலில் கத்த ஆரம்பித்தான். நண்பர்கள் கத்தினார்கள்.
ஆரவாரித்தார்கள். எனது நடுக்கம் களிகொண்டு ஆனந்தக்கூத்தாடியது.. நான்
எனக்கு நண்பர்கள் பட்டந்தெளிக்கிற அவள் அங்கே இருக்கிறாளா என்று தேடினேன்
நல்லவேளை இருந்தாள்… எப்போதையும் விட இன்றைக்கு அவள் அதிகம்
புன்னகைத்தாள். (என் வெற்றிக்குப்பரிசு) எனக்கு குழந்தைமையின் நினைவுகள்
அதிகமாக இருப்பதாக பெரியம்மா சொல்லுவாள்.. “சின்னப்பிள்ளையில
நடந்ததெல்லாம் நினைவில் வச்சிருக்கிறான்..” என்று அவா சொல்லும்போதெல்லாம்
எனக்கு பெருமையாகத் தோன்றும். இப்போது கட்டாயம் மறந்துதொலைத்து விடவேண்டிய
நினைவுகள் மறுபடியும் எனைக் கிளர்த்திக் கிளர்த்தி வெறியூட்டுகையில்..
சலனப்படுத்துகையில்.. கலவரப்படுத்துகையில்.. தூக்கத்தை துரத்தி பாயில்
என்கூடச்சேர்ந்து புரண்டுகொண்டிருக்கையில் என் நினைவுகளின் மீது வெறுப்பு
எழுந்து படிகிறது… எனக்கு இன்னமும் நினைவுகளில் இருக்கிறது அந்த மங்கலான
மாலைப்பொழுது.. மேகங்கள் கறுத்து மயங்கிக்கொண்டிருந்த அன்றைக்கு நாங்கள்
அக்கராயனுக்கு வந்தோம்.. எங்கள் ஊரைவிட்டுஅகதியாக இன்னொரு ஊருக்கு
அதைவிடவும் அக்கராயன் என்கிற பெயரையே எனது பதின்மூன்று வயதுவரைக்கும் நான்
கேட்டதே இல்லை அன்றைக்குத்தான் கேட்டேன்.. அங்கு தெரிந்தவர்கள் யாரும்
இல்லை உறவினர்கள் யாரும் இல்லை.. இருந்தும்.. போனோம்.. அந்த ஊர் எங்களைத்
தாங்கிக்கொள்ளுமென்ற நம்பிக்கைகள் மேலிட.. எல்லாவற்றையும் இழந்துவிட்டு..
ஆளுக்கொரு சைக்கிளில் ஏற்றிய மூட்டையுடனும்.. மனசு நிறையப்பாரத்துடனும்.
அக்கராயன் எல்லாவற்றையும் உள்வாங்கியது எங்கள் சுமைகளை இறக்கிவைத்தது.
தன்னால் முடிந்த அளவு புன்னகையையும் எங்கள் முகத்தில் ஏற்றியது. எங்கள்
மனங்களில் இதுதான் எங்கள் ஊர் எனப் படிந்துகொண்டது.. வன்னியின் மனிதர்கள்
எப்போதும் இப்படித்தான் இருக்கிறார்கள் மாற்றங்களைச் சகித்துக்கொள்வதற்கு
அவர்களைப்போல வேறுயாராலும் முடியாது.. அவர்களைப்போல் பொறுமையாகவும்
யாரலும் இருக்கமுடியாது குரல்களற்றும் கூட.. அக்கராயனின் மக்கள்
கிளிநொச்சியில் இருந்து வந்தவர்களை வரவேற்றனர்.. தங்கள் வீட்டு
முற்றங்களில் அவர்கள் குடியிருக்க அனுமதித்தனர். கிட்டத்தட்ட ஏழுவருடங்கள்
கிளிநொச்சியைப் புலிகள் திரும்பக்கைப்பற்றும் வரையிலும் கிளிநொச்சியை
விட்டு வந்தமக்கள் திரும்பவேயில்லை.. வரலாற்றுச்சிறப்புவாய்ந்த யாழ்ப்பாண
இடப்பெயர்வில் வன்னிக்குள் வந்த எவரும், புலிகள் திரும்பவும்
யாழ்ப்பாணத்தை கைப்பற்றுமட்டும் காத்திருக்கவில்லை.. அவர்கள் திரும்பவும்
யாழ்ப்பாணத்துக்கே போய்விட்டார்கள்.. புலிகளை வன்னியிலேயே விட்டுவிட்டு..
ஆனால் கிளிநொச்சியில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள்.. புலிகள் திரும்பக்
கிளிநொச்சியைக் கைப்பற்றுமட்டும்.. துயருள் உழன்றார்கள்.. இதுதான் காலம்
முழுதும் நிகழ்கிறது இதோ இப்போது இரண்டாம்முறையாக. கிளிநொச்சியைவிட்டு
புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிகளிற்கு இடம்பெயர்ந்துபோயிருக்கிறார்கள்.
இரண்டாம் முறையாகவும் கிளிநொச்சியின் நுழைவாயில்களில் நிழல்விழுத்தி
நுழையக்காத்திருக்கும் ராணுவம், இந்தமுறையும் வெறும் சூனியமாய்
தெருநாய்களும் வெளியேறிய கிளிநொச்சியைத்தான் கைப்பற்றும்.. இதில் துயரம்
இதுதான்.. போனமுறை கிளநொச்சிக்காரர்களுக்கு அபயமளித்து அவர்கள் வீடுகளில்
தங்கஅனுமதித்த அக்கராயன் காரர்களும் இந்ததடைவை
இடம்பெயர்ந்திருக்கிறார்கள்.. இரண்டு பேருமாய்ச்சேர்நது
முல்லைத்தீவிலும்.. புதுக்குடியிருப்பிலும்.. விசுவமடுவிலும் இன்னும் நான்
பெயரரறியா புதுக் கிராமங்களிலும் வசிக்கும் மக்களின் கதவுகளைத்
தட்டுவார்கள்.. வீதிகளிலும் மரங்களின் நிழலிலும் குடிசைகள் கட்டுவார்கள்..
நாங்கள் கிளிநொச்சியில் இருந்து வந்தவழியால் அவர்கள்..
வெளியேறியிருப்பார்கள். நாங்கள் எப்படி ஒரு சைக்கிளோடும் ஒரு மூட்டையோடும்
வந்தோமோ அவர்களும் அப்படித்தான் வெளியேறியிருப்பார்கள்.. நான் அக்கராயனில்
வாழ்ந்த காலங்களை அசைபோடும் ஒரு மாடெனமாறிறேன்.. (உயிருக்குப்பத்திரமான
வெளிகளில்தங்கியிருந்துகொண்டு) பால்யத்தை விடவும் வாழ்க்கையில்
முக்கியமானது.. அழுத்தமாய் நினைவடுக்குகளில் நம்மையும் மீறிப்பதிந்து
விடுவது பதின்ம வயதுகள்தான்.. என் பதின்ம வயதுகள் முழுவதையும் கழித்த ஊர்
அது.. அக்கராயன். என் விடலைப்பருவத்தின் விண்ணாணங்களை நான் அந்தத்
தெருக்களில்தான் எழுதினேன்.. அக்கராயன் என்கிற ஊரின் மாடுகளின் சாணம்
கலந்த வாசனையும் அலையடிக்கும் குளமும்..வயலும்.. அருகில் இருக்கிற
கரும்புத்தோட்டமும் மனசுக்குள் மேலெழுந்து வருகின்றன.. எனது சொற்கள் இதை
எழுதுகையில் தடுமாறுகின்றன.. என்னிடம் சொற்கள் இல்லை அந்த ஊருடனான.. எனது
பிணைப்பை சொல்ல. இனிவரும் எந்தச்சொற்களும் அந்தஉணர்வை முழுசாகச்
சித்தரித்துவிடுமென்று நான் நினைக்கவில்லை…

ஒருவனது வாழ்வில்.. பதின்மவயதுகளில் வாழும் இடம்தான் அவனது மனசுக்கு
நெருக்கமான.. இடமாக இருக்கமுடியும்.. நான் அண்மையில் கனடாவிற்கு
பத்துவயதில் போன ஒருபெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தேன்.. அவளுக்கு நெருக்கமான
இடமாக அவள் கனடாவையே அவள் கருதுகிறாள். அவளது கலாச்சாரத்திற்கும் (அதாவது
கனடாவில் உள்ள ஈழத்தமிழர்களின் ) எங்களிற்கும் பெரிய பெரிய வித்தியாசங்கள்
இருப்பதாயச் சொன்னாள். (இந்த வித்தியாசம்.. துப்பாக்கிகள் செய்யும்
இயந்திரத்துக்கும் புத்தகங்கள் செய்யும் இயந்திரத்துக்கும் உள்ளதைப்போலவா
என்று கேட்க நினைத்தேன் விட்டுவிட்டேன்) நான் திருநகர் என்கிற நான் பிறந்த
கிராமத்தின் தெருக்களை விடவும் அக்கராயன் என்கிற எனக்கு அபயமளித்த அந்தத்
தெருக்கள்தான் என் உள்ளங்கைகளாய் இருந்தன.. எனது சைக்கிளால்
றோட்டளக்கிறதாய் அம்மா திட்டத்திட்ட நண்பர்களுடன் அளந்த தெருக்களின்
புழுதி மணம் மனசுக்குள் நெருடலாய் அசைகிறது. கடந்து வந்தாலும் கடல்நீரால்
கூடக்கழுவப்படமல் ஒட்டிக்கொண்டிருக்கிறது புழுதி.. கால்களை அவசரமாய்
குனிந்து பார்த்துக்கொள்கிறேன்.. என்னுடைய முதல்காதலை நான் கண்டுபிடித்தது
இங்கேதான்… (மூன்றாம் வகுப்பு ஜெகதாச் ரீச்சரை கல்யாணம் கட்டவேணும்
எண்டு நினைச்சது சேத்தி இல்லை என்றால்) முதல் முதலாக குழந்தைகள்
கதைமலர்கள்கள்,காமிக்ஸ் புத்தககங்களிடமிருந்து விலகி. நான் பாலகுமரானை
எனது பதின்மூன்று வயதில் கண்டுகொண்டது இங்கேதான்.. அவரில்
பைத்தியமாயிருந்து பின்.. அவரைக்கைவிட்டு கொஞ்சம் வேறு திசைகளில்
பலரைவாசிக்க தொடங்கியதும் இங்கேதான்.. முதல் முதலாக நீந்தக்கற்றுக்கொண்டது
இந்த அக்கராயன் குளத்தில்தான்.. அங்கே முதலைகள்.. அதிகமாக ஆட்களின்
உயிரைக் குடித்துக்கொண்ருந்த காலம் அது.. ஆனாலும் நாங்கள் நண்பர்கள்
எல்லாருமாச்சேர்ந்து திட்டம் போட்டு.. காய்ச்சல் மருந்தெடுக்கபோகோணும்
எண்டு பள்ளிக்கூடத்திற்கு கடிதம் எழுதிக்கொடுத்துவிட்டு.. ஆஸ்பத்திரிக்கு
போகாமல்.. அதுக்கு பக்கத்தில் இருந்த அக்கராயன் குளத்தில் நீராடிக்
களிக்களித்திருந்தோம். ஒருமுறை.. ஆஸ்பத்திரக்கு போவதாகப் பொய்சொல்லி
குளத்துக்குப்போனதற்காக அதிபரிடம் மாட்டுப்பட்டு வரிசைகட்டி
வாங்கியிருக்கிறோம்.. அக்கராயன் குளம்தான் மாரிகாலத்தில் பெரிய
சுற்றுலாத்தலம். அக்கராயன் குளம் மாத்திரம் அல்ல அநேகமாக
எல்லாக்குளங்களும் நிரம்பி வான் பாய்வது ஒரு பார்ப்பதற்கினிய காட்சிதான்..
தைப்பொங்கலுக்கு முதல் இரணைமடுக்குளம் வான்பாய்வது தண்ணீர் ஒரு
அசுரனைப்போலக்குதித்து வெளியேறுவது போல இருக்குமெண்டால்.. அக்கராயன்
குளத்தில் வான் பாய்வது ஒரு குட்டி அசுரன் வெளியேறுவது போல இருக்கும்..
அக்கராயன் குளத்தில்.. தண்ணீர்நிரம்பியிருக்கிறதோ இல்லையோ அது
கிசுகிசுக்களால்.. நிரம்பியிருந்தது.. அந்தப்பகுதியைத்தான்
நிறையக்காதலர்கள் தங்கள் சந்திக்கும் இடமாக மாற்றியிருந்தார்கள். குளம்
கூடக்கொஞ்சம் வெட்கப்படும் அளவுக்கு பெருகிப்போயிருந்தது அது. நான் ஆணும்
பெண்ணும் தழுவிக்கொள்வதையும் முத்தமிடுவதையும் லைவ்வா பாத்த இடம்..
அதுதான்.. (ஆகவே இது வரலாற்றில் பொறிக்கப்படவேண்டியதும் கூட…:) யாரோ ஒரு
வெளிநாட்டுக்காரனுக்கு வாங்கப்பட்டு
சீ வாழ்க்கைப்பட்டுப்போன வேணியும் அந்த வெளிநாட்டுக்காரனைத்திட்டியபடி
கொஞ்சநாள் தாடிவைத்து அலைந்துவிட்டு.. சுதன் தூக்குப்போட்டுச்செத்துப்போன
ஆலமரம்.. அக்கராயன் குளத்துஅணைக்கு கீழ இருந்த ஆலமரம்தான்.. கொஞ்சநாள் அவை
இரண்டுபேருக்குமிடையில தபால்காரன் வேலை செய்ததால்.. அவரது ஆவி அங்கே
உலாவும் என்கிற பயத்தில் நான் அந்த குளத்துக்கு தனியப்போவதையே
தவிர்த்தேன். யாரோடயாவது போனாலும்.. ஆலமரம் இருக்கும் துருசுப்பக்கம்
மட்டும் போவதில்லை.. அதற்குப்பிறகு அக்கராயன் குளம் ஒரு நிறைவேறாத காதலின்
துயரமாக மாறிப்போனது எனக்கு. அதேபோல அக்கராயனில் மறக்கமுடியாத இன்னொரு
இடம்.. வைத்தியசாலை.. அது அது மட்டும் இருந்திராவிட்டால்.. தொற்றுநோய்கள்
வந்தே செத்துப்போயிருக்கும் வன்னி. தினம் தினம் ஆயிரக்கணக்கானவர்களின்
தீனக்குரல்களையெல்லாம்..அந்த வைத்தியசாலை பொறுமையாகக் கேட்டுக்கொண்டு
ஆறுதலளித்தது. திடீர் என்று அரசபடைகளின் குண்டுவீச்சிற்கு இலக்காகி..
அவசரமாய்க்கொண்டுவரும் காயக்காரர்களையும் அது காப்பாற்றியது.. இடைவெளி
குறைந்த அந்த வராந்தாக்களில்.. வைக்கப்பட்டிருக்கும் நீள வாங்கில்களில்
காப்பாற்றப்பட்டுக்கொண்டிருந்தது
வன்னியின் சுகாதாரம். அதைவிடவும் ஒரு வைத்திய சாலையின் சவச்சாலைக்குள்
நான் முதல் முதலாய்ப் போனது அங்கேதான்.. கிளிநொச்சியில் காம்பிறா என்ற
சொல்லைக்கேட்டாலே எல்லாக் கடவுள்களின் பெயரையும் குழப்பியடித்து
கண்ணைமூடிக்கொண்டு வேகமாய் அதைக்கடந்து சைக்கிளை விரட்டுவேன் அம்மம்மா
வீட்டை போகும்போதெல்லாம்… இப்ப கொஞ்சம் வளர்ந்த பொடியனா.. சித்தியின்
உடலைப்பெறுவதற்காக போனேன் அக்கராயன் வைத்தியசாலையின்
சவச்சாலைக்குள்….கடுமையான காய்ச்சலில் வீழ்ந்து கிடந்த எனக்கு
உயிர்கொடுத்துக்காப்பாற்றியிருக்கிறது அந்த வைத்தியசாலை..
இவை இரண்டையும் விட அதிகம் நான் நேசித்ததும் நெருக்கமாயிருந்ததும்..
அக்கராயன் பள்ளிக்கூடத்தோடுதான்.. அக்கராயன் மக்கள் எப்படி மனிதர்களை
ஏற்றுக்கொண்டார்களோ அதைப்போலத்தான்.. அக்கராயன் மகாவித்தியாலயம்..
கிளிநொச்சியின் பாடசாலைகளை ஏற்றுக்கொண்டது..அநேகமாக 4 பாடசாலைகளை அது
தனக்குச்சொந்தமான கட்டிடங்களிலும்.. காணிகளிலும் இயங்கஅனுமதித்தது..
கிளிநொச்சி மாவட்ட கல்வித்திணைக்களமே அந்தப்பாடசாலையில்தான் இயங்கியது..
எங்கள் பள்ளிக்கூடத்திலேயே விடுப்புக்கதைப்பதில் தான் படிப்பிக்கிற
நேரத்தை விட அதிகஅளவான நேரத்தை செலவழிக்கிற குண்டுக் கலாச்ரீச்சர் ஒருக்கா
சொன்னா அக்கராயன் மகாவித்தியாலயத்தை பள்ளிக்கூடமாவே தன்னால்
பாக்கேலாதெண்டு நான் நினைச்சன் அவா அதை ஒரு கோயில் எண்டு
சொல்லப்போறாவாக்கும் எண்டு. ஆனா அவா சொன்னா அது ஒரு வீடு மாதிரி மூடின
அமைப்பில கட்டப்பட்டிருக்கு அதுன்ர தோற்றத்தை பாத்தாலே நிறையத்தப்புக்கள்
நடக்கிறஇடம்மாதிரித்தான் இருக்கு.. அக்கராயன் பள்ளிக்கூட அதிபர் தனது
அறைக்குள் வைத்து அவரோடு கிசுகிசுக்கப்பட்ட ஒரு ரீச்சரோடு சல்லாபங்களில்
ஈடுபட்டதாக வதந்திகள் பரவியதை ஒட்டியே கலாச்ரீச்சர் இப்படி ஒரு முத்தை
உதிர்த்தார்.. ஆனால் அந்தப் பள்ளிக்கூடத்தின் கட்டிடம் குறித்து சரியாக
உறுதிசெய்யப்படாத ஒரு தகவல் இருந்தது.. அது ஒரு சிங்கள அரசின்
சித்திரவதைக்கூடம் என்பதுதான் அது. தமிழர்களை அல்ல முன்பு சிங்களவர்கள்
நடைபெற்ற ஜே.வி.பி கிளர்ச்சியின்போது கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கானோரை
இங்கேதான் அடைத்து வைத்து சிங்கள அரசு சித்திரவதை செய்து கொன்றதாகச்
சொல்வார்கள்.. அந்தப்பள்ளிக்கூடத்திற்கு எதிரே ஆட்களைத் தூக்கிலிடப்படும்
இடம் ஒன்று இருந்ததற்கான கட்டிட அமைப்பொன்றும் இருந்தது மேடிட்டு.
இதெல்லாம் சேர்ந்து அதை ஒரு முன்னாள் சித்திரவதைக்கூடம் என்று நான்
உறுதிசெய்து வைத்துக்கொண்டேன்.. ஆனால் அக்ராயன் பள்ளிக்கூடத்தில்
பெ.கணேசன் வாத்தியின் பிரம்படி வாங்கிச்சிவந்த பையன்கள்
சொல்லிக்கொண்டார்கள் முன்னாள் சித்திரவதைக்கூடம் என்னடா இது இப்பயம்
சித்திரவதைக்கூடமாகத்தான் இருக்கிறது என்று.. அதெல்லாவற்றையும் விட அது
சித்திரவதைக்கூடம்தான் என்று உறுதிப்படுத்த நான் ஒரு விசயத்தை
சொல்லுவேன்.. அக்கராயன் பள்ளிக்கூடத்தை சுற்றிலும் நிறையத் தண்ணீரத்;
தொட்டிகள்.. கட்டப்பட்டிருந்தன ஒடுக்கமாயும் நிலமட்டத்திற்கு கீழேயும்.
எனக்கு ஆச்சரியமாயிருக்கும் ஏன் இவ்வளவு தண்ணீர் தொட்டிகள் அதுவும் நில
மட்டத்திற்கு கீழே என்று பிறகுதான்தெரிந்தது.. அதுவும்
சித்திரவதைக்குதவும் ஒன்றுதான் என்று அதற்குள் ஆட்களைப்போட்டுவிட்டு
தண்ணீரைத்திறந்து விட்டு மூச்சுத்திணறல் சித்திரவதைகொடுத்திருப்பார்கள்
போல சிலவேளை கொல்வதற்கான இடமாயும் இருக்கலாம்.. ஜே.வி.பியினரின்
ஆவிகளைத்தான் கேட்க வேண்டும்.. ( விமல் வீரவன்சவுக்கு தெரிந்திருக்காது)
அங்கே இரவில் ஆட்கள் அலறும் சத்தம்கேட்பதாக இரவுநேரக்காவலாளிகள்
சொல்லியிருக்கிறார்கள்.. பிறகு நான் அதிககாலம் அங்கே படிக்கவில்லையாதலால்
தகவல்களைத் திரட்ட முடியவில்லை.. ஆனால் இதைவிடவும் அக்கராயன்
மகாவித்தியாலயம் குறித்து பசுமையான நினைவுகள் உண்டு.. அங்கே தான் நான்
மாகாணமட்டத்தில் நடந்த கவிதைப்போட்டியில் முதல்பரிசு வாங்கினேன்
(நம்புங்க) அங்கேதான் நான் முதல் முதல் நடித்த பண்டாரவன்னியன் நாடகம்
அரங்கேறியது நானெல்லாம் அரசன் கெட்டப்போட்டா 23ம் புலிகேசியைவிடக்கேவலமா
இருந்ததுதான் எண்டாலும் வரலாறு முக்கியம் எண்டதால சொல்றன் (நோ நோ நோ..
கெட்டவார்த்தைகளை பாவிக்கப்படாது) அதைவிட முக்கியமா அவள்.. இ;ப்படி நிறைய
முதல்கள் அங்கே நிகழ்ந்தது.. அங்கே இருக்கும் போதுதான் எனது கவிதை முதல்
முதலாக ஈழநாதத்தில் பிரசுரமானது.. இப்படி அந்த நிலத்துடனான தனிப்பட்ட எனது
நினைவுகள் அநேகம் பசுமையானவை..
எல்லாவற்றைப்போலவுமல்லாமல் நான் அறிந்தவரையில் அறிஞர் அண்ணாவின் சிலை
வன்னியில் ஒரே ஒரு இடத்தில் தான் இருந்தது. அதுவும் அக்கராயனில் என்றுதான்
நினைக்கிறேன்.. அண்ணாசிலையடி என்பது ஒரு கொஞ்சம் உள்ளுர்ப் பேமசான இடம்..
மாணவர்களிடம் அது இன்னொரு விசயத்திற்கும் பேமசாக இருந்தது..அது
செல்வரத்தினம் சேரும் அவற்ற மனுசியும் அந்த இடத்தில் பண்ணுகிற
காமடிக்காக.. அண்ணாசிலை அமைந்திருக்கிற இடத்தில வீதியில் ஏத்தம்
ஒன்றிருந்தது அது அண்ணா சிலையடி ஏத்தம் என்று அழைக்கப்பட்டது..
செல்வரத்தினம் சேர் தன்ர பெரிய மூட்டைகள் வக்கிற கரியல்( விவசாயிகள்
கத்தரிக்காயை பெரிய மூட்டையாக்கட்டி சந்தைக்கு கொண்டு போகமட்டும் அதை
பயன்படுத்துறவை) பூட்டின சைக்கிள்ள ஏறி இருந்தாரெண்;டா நீங்கள் அவர்
அமர்ந்திருக்கும்போது சைக்கிளைப்பாத்தால் கற்பூரம் அணைச்சு சத்தியம்
பண்ணுவியள் இந்த சைக்கிளுக்கு சீற் இல்லைஎண்டு.. அந்தளவுக்கு சைக்கிள்
சீற்.. அவற்ற …டிக்குள்ள புதைஞ்சுபோய் இருக்கும்.. அவற்ற மனுசியும்
ரீச்சர்தான்.. அவா ஏறினா எண்டா.. அந்த பெரிய கரியலே இருக்கா எண்டு
சந்தேகம் வந்திரும்..

அவர் அவாவையம் ஏத்திக்கொண்டு வெளிக்கிடுவார் வீட்டை நாங்கள் பின்னால
பாதுகாப்பான தூரத்தில அவர்களைத் தொடர்ந்து போவம். அவர் அந்த ஏத்தத்தில
படுற பாட்டை எழுதி வர்ணிக்க முடியாது அந்த நேரத்தில அவர் ஒரு சுமோ
மல்யுத்த வீரர் நடனமாடினால் எப்படியிருக்குமோ அப்படியான அசைவுகளையே
நிகழ்த்துவார் அவர் நாங்க அவரது அசைவுகளுக்கு ஏற்றபடி பிண்ணணியில் ஐலசா
பாடுவோம்.. (ஒரு முறை ஐலசாவை நாங்கள் கொஞ்சம் உணர்வுமயப்பட்டு
பெரிசாப்பாடி அடுத்தநாள் அவரது பிரம்புகள் எங்கள் நீலக்காச்சட்டை
அணைகளையும் தாண்டி துடையில் இரண்டு மூன்று கோடுகளைப்போட்டது ரகசியம்)
இப்போது நான் மேலே சொன்ன இடங்கள் மாத்திரமல்ல மொத்தமாய்.. அக்கராயன்
குளப்பிரதேசத்தையே ராணுவம் கைப்பற்றி விட்டது.. நாங்கள் இடம்பெயர்ந்து
போனபோது எங்களுக்கு அடைக்கலமளித்த மக்கள் இப்போது வீடிழந்தவர்களானார்கள்..
நிலம் தன் குழந்தைகள் இழந்த தாயைப்போலத் தவிக்கும்.. பள்ளிக்கூடத்தில்
ராணுவம் முகாம் அமைத்து தங்கும்.. ஆஸ்பத்திரி எப்போதும் போல
ராணுவத்தினரின் உயிர்களையும் காக்கும். அண்ணா சிலை ஏத்தத்தில்..
ராணுவத்தின் வண்டிகள் எந்தச்சிரமமும் இன்றி அனாசயமாக ஏறிப்போகும்..
சிலவேளை அண்ணாசிலையை தமிழனின் சிலை என்பதால் ராணுவம் குண்டு வைத்து
தகர்க்கும்.. (அவர்கள் தான் கல்லறைகளையே தோண்டியவர்களாயிற்றே) இனிமேல்
அக்கராயன் குளக்கரையில் எந்தக்காதல் ஜோடியும் ஒதுங்கப்போவதில்லை..
அணையில்மோதும் செல்ல அலைகளில் ஓசையில் சிணுங்கலின் சாயலேதும் இராது.
இந்தமுறையும் மாரிக்கு குளம் நிரவி வான்பாயும் ஆனால் களிக்கத்தான்
யாருமிருக்கமாட்டார்கள்.. அடுத்தமாரிக்காவது.. ( ஏன் ஏன் என்னை
மாரித்தவக்கை எண்டுறியள்)

எண்ணங்கள்

Post navigation

Previous post
Next post

Related Posts

எண்ணங்கள்

கேட்கச் செவியுள்ளவர்கள் கேட்கட்டும்

October 20, 2012June 9, 2021

“தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்” –    பைபிளிலிருந்து பொங்குதமிழ் இணையத்தில் வெளியான அனுபவங்களின் காயத்தினை கேள்வி ஞானத்தினால் கண்டடைய முடியாது என்னும் என்னுடைய கட்டுரைக்கு பதிலாக யமுனா ராஜேந்திரன் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். அதைப் பதில் கட்டுரையாகப் பார்ப்பதா அல்லது சேகுவேரா நுழைந்தேயிராத கிறிஸ்தோபரின் வீடு என்ற தன் முன்னைய கட்டுரையில் யமுனா ராஜேந்திரன் என்னென்ன சொற்களை…

Read More

நட்சத்திர வணக்கம் அல்லது கணிணிக்கு காணிக்கை

May 12, 2008December 1, 2009

இரண்டாயிரத்தி நான்காம் ஆண்டு இதே மேமாதத்தின் ஏதோ ஒரு நாளில் நான் முதல் முதலாக கணிணியைத் தொட்டிருக்கிறேன். ஒரு பொருத்தத்திற்காக மே மாதம் என்று சொல்கிறேன் என நினைக்க வேண்டாம் உண்மையிலேயே அது அப்படித்தான் நடந்தது. எங்களிற்கு பிசிக்ஸ் படிப்பிச்ச வாத்தியாரான அல்லது நண்பரான பிரதீப் என்றவருடன் நான் 2004 ஏப்ரல் ல நடந்த க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் முடிவடைந்ததும் தான் நான்  அது வரை கண்காட்சிகளில் மட்டுமே பார்த்து…

Read More

மக்கள் தொலைக்காட்சி வன்னியில் இருந்து ஓர் பார்வை…

September 6, 2007December 1, 2009

தமிழிலான தொலைக்காட்சிகளுக்கான முன்னோடிமக்கள் தொலைக்காட்சி. ஈழம் வன்னியில் இருந்து – கருணாகரன் தமிழ்ச்சினிமா இல்லாமலே தமிழில் ஒரு தொலைக்கட்சி வந்திருக்கு. தமிழிலேயே நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களும் அறிவிப்பாளர்களும். அத்துடன் தமிழ் நிகழ்ச்சிகள். தமிழ் நிலப்பரப்பின் காட்சிகள். தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகள். பிரந்தியப் பேச்சு மொழிகள். இப்படி தமிழ்க்காட்சியூடகங்களில் மாறுதலான ஒரு புதிய தொலைக்காட்சியாக இப்போது அறிமுகமாகியிருக்கிறது மக்கள் தொலைக்கட்சி. சினிமா இல்லாமல், சினிமாக்காரரே இல்லாமல் இந்தத்தொலைக்காட்சி வெற்றிகரமாக இயங்கிவருகிறது. இது…

Read More

Comments (7)

  1. தமிழன் - கறுப்பி... says:
    November 28, 2008 at 10:48 am

    இந்த நித்யகல்யாணிப்பூக்களை மறக்க முடிவதில்லை அகிலன் வடக்கின் அனேகமான வீடுளில் இருக்கிற விசயம்…பல பேருக்கு சின்னச்சின்ன சந்தோசங்களை நிறையப்பூக்கிற பூமரம்…

  2. தமிழன் - கறுப்பி... says:
    November 28, 2008 at 10:53 am

    என்ன செய்வது நினைவுகளை கடக்க முடியாத உறவுகள் பலபேர் மாரித்தவக்கைகள் போலத்தான் இருக்கிறார்கள்…நீங்கள் எண்டாலும் பரவாயில்லை தவளைகளின் சத்தம் கேட்கக்கூடிய ஊரில இருக்கிறியள்…நானெல்லாம் தவளையைப்பாத்தே வருசக்கணக்காயிட்டுது ஆனாலும் அறை நண்பர்களுக்கு நானும் ஒரு வகையில் மாரித்தவக்கைதான்…

  3. ஹேமா says:
    November 29, 2008 at 1:50 am

    வணக்கம் அகிலன்.வந்தேன் ஐயா உங்கள் பக்கம்.இன்னும் வருவேன்.

    மனம் வலிக்கும் வேதனையோடு எழுதியிருக்கிறீர்கள்.நீங்கள் உங்களை உணர்ந்துகொண்ட ,வளர்த்துக்கொண்ட பாடசாலை.அதே பாடசாலையில் இராணுவத்தினர் நிற்கும் புகைப்படத்தோடு பார்க்கும்போது உங்கள் மனநிலை எப்படி இருந்திருக்கும்.இப்படியிருக்க ஏன் உங்களை மாரித்தவளை என்று சொல்லப் போகிறார்கள்.

    கவிதை நான்கு வரிகள் ஆனாலும் அர்த்தத்தோடு அமைந்திருக்கிறது அழகாய்.

  4. மெல்போர்ன் கமல் says:
    November 29, 2008 at 5:23 pm

    அங்கு தெரிந்தவர்கள் யாரும்
    இல்லை உறவினர்கள் யாரும் இல்லை.. இருந்தும்.. போனோம்.. அந்த ஊர் எங்களைத்
    தாங்கிக்கொள்ளுமென்ற நம்பிக்கைகள் மேலிட.. எல்லாவற்றையும் இழந்துவிட்டு..
    ஆளுக்கொரு சைக்கிளில் ஏற்றிய மூட்டையுடனும்.. மனசு நிறையப்பாரத்துடனும்.
    அக்கராயன் எல்லாவற்றையும் உள்வாங்கியது எங்கள் சுமைகளை இறக்கிவைத்தது.
    மிகவும் அருமையாக இருக்கிறது. வாசிக்கும் போதே நெஞ்சு கனக்கிறது அண்ணா.

    ஓ நீங்கள் திருநகர் தானே? உங்களுக்கு திருநகரூர் ஜெகா வை தெரியுமோ?? நான் அவரின் படைப்புக்களை ஈழநாதம் மூலமும் புலிகளின்குரல் மூலமும் அறிந்துள்ளேன். உங்களிடம் அவரின் படைப்புக்கள் ஏதாவது இருக்குதா அண்ணா??

  5. த.அகிலன் says:
    November 30, 2008 at 7:43 am

    //உங்களுக்கு திருநகரூர் ஜெகா வை தெரியுமோ??//
    தெரியுமாவா அவர் எனது இனிய நண்பர் அண்ணா இப்படி நிறைய..
    தனிமடலில் இப்படியான விசயங்களைக் கேட்கலாமே கமல். எதுக்கு பின்னூட்டமெல்லாம்.. உங்க புளொக்கர் புறொபைலில் உங்க மெயில் ஐடியைக் காணோம் அதாலஇதில பதிலெழுத வேண்டியதாப்போச்சு…

  6. சேந்தன் says:
    December 2, 2008 at 12:38 pm

    அண்ணா அக்கராஜன்ல இடம்பெயர்ந்து நீங்கள் இருந்த விட்டுக்கு சனி கிழமயில சங்கீதம் படிக்க டீச்சரீட்ட நானும் நண்பன் தீபனும் வருவம்.(ஆனா நீங்க இருக்க மாட்டியள்). அந்த மண் குந்தில இருந்து கொண்டு டீச்சர் ஆதி தளம் போடவைப்பா.வகுப்பு முடிய உங்கட தம்பி தங்கை தம்பியின் நண்பர்களும் சேர்ந்து கிளித்தட்டு மறிப்பம்.(நான் கிளிக்குத்தன் நிப்பன் முன்வீட்டு உமாவை அப்பத்தான் எந்த ஆங்கிலயும் பாக்க முடியும் என்பதால்.) அக்கராஜன் பள்ளிக்கூடம் எனக்கும் ஒருவகையில் உங்களை போலத்தான் முதன் முதலா கண்காட்சிக்கு வந்த டெலிபோன் கதைச்சது. நான் மட்டுமில்ல நிறையப்பேர் அண்டு தன் டெலிபோனையே பாத்தார்கள். அப்புறம் நாடக போட்டிகளில் மண்டபம் நிரம்பிவழி உம் உள்ள போக இடம் கிடையாது. அப்படி போக நினைத்தாலும் சாரணர் பெடியள் விடங்கள்.அப்புறம் அந்த தடிச்ச நேற்றுக்குள்ளல தலைய விட்டு பாக்க வேண்டியது தான் .அதுவும் பாரத நாட்டியம் என்றால் சொல்ல வேண்டியது இல்லை.நெட்ல தொங்கியே சாவம். அதவிட அந்த ஊர்வலம் எண்டாலும் அந்த பள்ளிக்கூடத்தில இருந்துதான்.நான் கனகபுரம் பள்ளிக்கூடத்தில படிச்சாலும் அக்கராஜன் பள்ளிக்கூட பெட்டயள்ள தனி மரியாதையே வச்சு இருந்தன். நிறித்திக்குவம் அப்புறம் மாரித்தவக்கை எண்டுறியள்

  7. Karthikeyan G says:
    December 11, 2008 at 8:09 pm

    :-((

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • அனுபவம்
  • எண்ணங்கள்
  • ஒலிக்கவிதைகள்
  • ஒலிப்பதிவுகள்
  • கவிதைகள்
  • காதல் சிலுவையில்
  • குளிரடிக்கிற ஏரியா
  • சினிமா அனுபவம்
  • நேர்காணல்
  • புகைப்படம்
  • புத்தகம்
  • September 2024
  • June 2021
  • November 2019
  • March 2019
  • April 2018
  • May 2013
  • February 2013
  • December 2012
  • October 2012
  • July 2012
  • June 2012
  • November 2010
  • August 2010
  • June 2010
  • April 2010
  • March 2010
  • February 2010
  • September 2009
  • August 2009
  • July 2009
  • June 2009
  • February 2009
  • January 2009
  • December 2008
  • November 2008
  • October 2008
  • September 2008
  • August 2008
  • July 2008
  • June 2008
  • May 2008
  • April 2008
  • March 2008
  • January 2008
  • December 2007
  • October 2007
  • September 2007
  • August 2007
  • July 2007
  • June 2007
  • May 2007
  • December 2006
  • November 2006
  • October 2006
  • September 2006
  • August 2006
  • July 2006
  • June 2006
©2026 த.அகிலன் | WordPress Theme by SuperbThemes