மரணம் என்றுமே நண்பனல்ல அப்படியிருக்க முடியவே முடியாது.
மரணம் பிரியமானவர்களுக்கு எதிரி
மரணம் எழுத்தாளர்களுக்கு பாடுபொருள்
மரணம் ஆன்மீகவாதிகளுக்குக் கச்சாப்பொருள்
மரணம் சிலருக்கு சாகசம்
மரணம் சில வேளைகளில் தந்திரோபாயம் அல்லது அப்படி அழைக்கப்படுகிற மண்மூட்டை
மரணம் சில வேளைகளில் பெரும் வியாபாரம்
மரணம் ஒரு பெரும் அரசியல்
மரணம் ஒரு இளவரசனைத் தன் இல்லாளைக் கைவிட்டு நைசாக எஸ்கேப்பாகும் படி தூண்டியிராவிட்டால். அவனது பெயரால் ஒரு வழிமுறையைக் அவன் தோற்றுவித்திருக்காவிட்டால் இன்றைக்கு ஒருவேளை நாம் இதைப் பேச நேர்ந்திருக்காது. சரி பேசுவது என்று தொடங்கிவிட்டோம் பேசிவிடுவதே சிறந்தது.
மீராபாரதி என்னை இந்தக் கூட்டத்தில் பேசும்படி அல்லது என்னுடைய கருத்தை முன்வைக்கும் படி மின்னஞ்சல் அனுப்பியபோது உண்மையில் நான் துணுக்குற்றேன். இதற்கான தகுதியை நான் வந்தடைந்த விதம் பற்றி. நான் பேச்சாளன் என்பதாலோ, அல்லது மரணத்தின் வாசனை என்கிற புத்தகத்தை எழுதினவன் என்பதாலோ அல்லது 3 கூட்டங்களில் எழுதிக்கொண்டு வந்து வைத்து வாசித்தேன் என்பதாலோ அல்ல இந்த அழைப்பு என்பதாகவே நான் உணர்ந்தேன். சில வேளைகளில் ஒரு 2009ம் ஆண்டே நான் வெளிநாட்டில் வசித்திருந்து என்னிடம் ஒரு பத்தாயிரம் யூரோ பெறுமானமுள்ள பணமும் இருந்திருந்தால் நான் இந்தச் சிறப்புத் தகுதியை வந்தடைந்திருக்கமாட்டேன். ஏனெனில் நான் புலிகளின் அனைத்துலகச் செயலகக் காரருக்குப் பத்தாயிரம் யூரோக்களைக் கொடுத்து அதற்குப் பதிலாக அவர்களிடமிருந்து என்னுடைய தம்பியை மீட்டு அவன் தெரிவாகியிருந்த பல்கலைக்கழகப் பொறியியல் பீடத்துக்கு அவனை அனுப்பியிருந்திருப்பேன். அவன் நைசாக ஸ்ரூடண்ட் விசா எடுத்து லண்டன் போய் புலிக்கொடியைப் பிடித்தபடி ஏதோ ஒரு ஊர்வலத்தில் கலந்து கொண்டிருப்பான். ஆனால் என்னுடைய கையாலாகாத் தனத்தால் அவன் கொல்லப்பட்டு நான் இத்தகைய அனுபவங்களை உடையவன் என்கிற தகுதியை வந்தடைந்தேன். உண்மையில் இந்தச் சிறப்புத் தகுதியால் நான் கவனப்படுத்தப்படும் போதெல்லாம் நான் டபுள்புறமோசன் கிடைத்த உணர்வை ஒரு போதும் அடைவதில்லை நான் கூனிக்குறுகி பெரும் குற்வுணர்வுக்குள்ளாகிறேன்.
அவ்வாறு என்னைச் சிறப்புக் கவனத்துக்குள்ளாக்குவது என்மீதான அன்பினால் அல்லது இரக்கத்தினால்,கரிசனத்தினாலாகக் கூட இருக்கலாம். ஆனால் அது என்னளவில் என்னைச் சீண்டுகிறது. ஒரு விசையைப்போல நான் கடந்து வந்துவிட விரும்பகிற அதே திசையிலேயே என்னை மீளச் செலுத்துகிறது. என்னை மட்டுமல்ல இழப்புள் இருக்கிறவர்களை வெளிக்கொண்டு வருதல்,ஆற்றுப்படுத்தல்,ஆறுதலளித்தல் எல்லாமே அபத்தநாடகங்களாகவே நிகழ்த்தப்படுகின்றன என்பது என் எண்ணம். உண்மையில் இழப்பினை அணுகும் விதம் பற்றிய அறிவூட்டல் இழப்புகளிற்கு வெளியில் இருக்கிறவர்களிடம் ஏற்படுத்தப்பட வேண்டும். இழப்புகளிற்கு வெளியில் யார் இருக்கிறார்கள் எல்லோரிடம் இழப்பு இருந்துகொண்டுதானே இருக்கிறது இழப்பில்லா வீட்டிலிருந்து ஒரு சொம்புத் தண்ணீர் கொண்டு வா என்று யாரேனும் கேட்கக் கூடும். நானே வெளியேயும் உள்ளேயும் இருக்கிற இடைவெட்டில் நின்றுகொண்டே தொடர்கிறேன்.
அப்படி என்ன பெரிய பிரச்சினையாக இந்த விசயம் இவருக்கிருக்கிறது என்று ஒரு சிலர் விசனப்படவும் கூடும். தொடங்கிவிட்டேன் சில அனுபவங்களைச் சொல்லிவிடுகிறேன்.
கனடாவுக்கு நான் வந்த புதிது ஒரு நண்பர் இன்னொரு இந்திய எழுத்தாளருக்கு என்னை அறிமுகம் செய்கிறார் இவர் அகிலன் இவற்ற தம்பி ஒராள் கடைசி நேரம் செத்தவர். எனக்கு என்னுடைய தகுதியை நினைத்து அருவருப்பாயிருந்தது. என்னைப் பற்றிச் சொல்ல வேறொன்றும் இல்லாவிட்டால் அல்லது வேறெதையும் சொல்ல மனமில்லாவிட்டால் அறிமுகம் தேவையேயில்லை.
இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் கருணை காட்டுவார்கள் அதுவோ பெரும் கருணை ஏதேனும் விவாதித்தால் என்ன பெரிய விவாதம் ஏதாவது ஒரு விவகாரத்தில் புலிகளை விமர்சித்தால், அரசை விமர்சித்தால் அந்த நபர் நம்பிக்கொண்டிருப்பதற்கு எதிராயிருந்தால் நீங்கள் தம்பியை இழந்திருக்கிறீர்கள் அதனால் நாங்கள் உங்களோடு கதைக்கிறதில்லை என்பார்கள். அதாவது உங்களுடைய பார்வை முற்றிலும் தவறானது உங்கட தம்பி செத்துப்போனவர் என்பதால் அதை மன்னித்து விடுகிறோம் என்பதான் பாவனை அதிலிருக்கும். எனக்கு இதுவும் எரிச்சலாயிருக்கும் ஏதோ என் தம்பி ஒருவன்தான் புலிகளால் வலுக்கட்டாயமாகப் பிடித்துச் செல்லப்பட்டவனா? வன்னியிலிருந்தவர்கள் பத்தாயிரத்திற்கும் அதிகமானவர்கள் எனச் சொல்கிறார்கள். நான் சொல்வது பிடித்துச் செல்லப்பட்டவர்களது எண்ணிக்கை அல்ல பிடித்துச் செல்லப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை. ஆகவே இது ஒரு வகை மாதிரி என்னுடைய குடும்பத்தின் பிரச்சினை பத்தாயிரம் குடும்பத்தின் பிரச்சினை அது ஒரு சமூகத்தின் பிரச்சினை இல்லையா? ஆனால் அதை என்னுடைய தகுதியாக்கி நீங்கள் பாவம் இழப்பிலிருக்கிறவர் கோபத்தில் கதைக்கிறியள் அதனால் நாங்கள் மறுத்துரைப்பதில்லை எனச் சொல்லுவார்கள். ஆக இந்த ஆறுதலளிக்கிறோம் கோஸ்டி மிகவும் ஆபத்தானவர்களால் நிறைந்திருக்கிறது.
இன்னும் கொஞ்சப் பேர் இருக்கிறார்கள் நீங்கள் எழுதவேண்டும். தம்பியைப் பற்றி எழுதுங்கய்யா உங்கடை அனுபவங்கள் பதியப்படவேண்டும் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என்று நச்சரிப்பார்கள். நீங்கள் இதிலிருந்து வெளியே வரவேண்டும் அது இதெண்டு அன்புத் தொல்லை கொடுப்பார்கள் இப்படிப் பட்டவர்களை நான் மனசுக்குள் நினைப்பதுண்டு நல்லவன் ஆனா மூதேசி. சில வேளை எனக்கு ஓங்கி முகத்திலேயே குத்துவிடவேண்டும் என்றெல்லாம் தோன்றும். ஏனெனனில் இப்படிக் கேட்பதும் துயரத்திலிருந்து விடுபடவைப்பதற்கான வழியல்ல மாறாக மீண்டும் மீண்டும் அதனுள்ளேயே அழுந்தவைக்கும் பாரக்கற்கள். இழப்பிலிருப்பவனை அவன் வழியிலேயே விட்டு விடுங்கள் காலம் எல்லாவற்றையும் ஆற்றும். அப்படி ஆற்றாவிட்டால் தான் என்ன? இழப்பினைத் திருப்பித்தர முடியாதபோது? எல்லாரும் யேசுநாதர்களா என்ன மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து வருவதற்கு.
சொல்லப் போனால் இந்தச் சிறப்புக் கவனப்படுத்தல் சின்ன வயதிலிருந்து என்னோடு கூட வருவதுதான். அதற்குப் பெயர் தகப்பனைத் தின்னி. இப்போது இந்த தம்பியிழந்தான். இவ்வகையான சிறப்புத்தகுதியால் எனக்குக் கிடைக்கிற கடைசி மேடையாக இது இருக்கவேண்டும் என்று எல்லாம் வல்ல மரணத்தை வேண்டுகிறேன்.
இவ்வளவு நேரமும் நான் சொன்னதெல்லாம் என்னுடைய தம்பியின் இறப்பின் சற்றுப்பிந்திய சம்பவங்கள். உடனடியான சம்பவங்கள் காட்சிகள் இன்னும் கவனத்துக்குரியவை. என்னுடைய தம்பியின் இறப்புச் செய்தியை லண்டன்ல இருக்கிற தங்கையின் கணவர் எனக்குச் சென்னைக்கு போன் பண்ணிச் சொன்னவேளையில் உண்மையில் சென்னையில் நான் தங்கியிருந்த அறையில் என்னுடைய கணினியும் நானும் மட்டுமேயிருந்தோம். வெளிநாட்டில் என்னோடு நண்பராயிருந்தார் என்று நான் நம்பிய ஒரு எழுத்தாளருக்கு அவர் எனக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார் பொருளாதார ரீதியாகவும் நட்பு ரீதியாகவும் நான் சொல்வதற்கு வேறு யாருமில்லாமல் கூகுள் ரோக்கில் அவரைக் கூப்பிட்டுச் சொன்னேன் அல்லது அழுதேன். அவர் அந்தக் கணம் ஆறுதலாயிருந்தார். போரின் மீது,புலிகள் மீது, அரசின் மீது, சமூகத்தின் மீது நிறையக் கோவப்பட்டார். அதனைத் தொடர்ந்த அவருடைய ஒன்றிரண்டு கதைகளில், கவிதைகளில் அந்த கோவத்தையும் அவர் பதிவு செய்திருந்தார். இப்போது அண்மைக்காலமாக அந்தத் தீர்ப்புகளில் ஒன்றிரண்டைத் திருத்தியெழுதியிருப்பதை அவதானித்தேன். கணிணியில் எழுதிய எழுத்துக்கள் தானே காலம் மாற மாற மாறும்.ஆனால் இழப்பென்பது சிலையில் எழுதிய எழுத்து. எல்லாவற்றிற்கும் மேலாக சில காலம் கழித்து கோவம் குறைந்து அவர் தளம் திரும்பிய பிறகு இப்போது நான் பெயர் சொல்லாமல் அவரைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருப்பதைப் போலவே அவர் ஒரு இடத்தில் என்னைப் பற்றி மறைமுகமாகச் சொன்னார் இப்படி “ மச்சான் செத்தான் மாமன் செத்தான் எண்டு இயக்கத்தை எதிர்க்க வெளிக்கிட்டவன் என்று” அதனை அவர் பொதுசனவெளியிடம் கொஞ்சக் காலம் புலிகளை தான் விமர்சித்த பாவகாரியத்திற்கான தன்னுடைய பாவமன்னிப்புப் பிரார்த்தனையின் வாசகங்களாகத்தான் சொல்லியிருப்பார் என்று நாம் நம்புகிறேன். பாவமன்னிப்பும் அவருக்குக் கிடைத்தது. ஆனால் அதற்கும் கனகாலம் முன்பாகவே என்னிடம் புலிகள் குறித்த அப்படியான பார்வையிருந்தது என்பதை அவர் அறிவார். என்ன செய்வது எல்லோருக்குமானதுதானே ஆகாயமும் பூமியும். ஆனால் அது என்னை மிகவும் பாதித்தது. மனிதர்களற்றுக் கணினியும் நானுமாய்த் தனித்துவிடப்பட்ட கணத்தில் அறியநேர்ந்த சகோதரனின் மரணத்தை இவன் என் நண்பன் என நினைத்து ஆறுதலாச் சொல்லி இவனிடமா அழுதேன் என நான் வெட்கப்பட்டேன். அங்கீகாரமே எல்லாம் வல்லது என நண்பர் உணர்ந்திருந்தார் போலும் எதிர்ப்புணர்வும் மாற்றுக்கருத்தும் யாருக்கு வேண்டும் மண்ணாங்கட்டி.
இன்னொருவர் கொஞ்சப் பணத்தை எடுத்து என்பக்கமாக நீட்டி வைத்துக்கொள்ளுங்கள் என்றார் துயரத்தை பங்கு போடுகிறாராம். பற்றிக்கொள்ள ஏதுமற்றவரெனத் தன்னைச் சொல்லியபடி அவர் தமிழ்த்தேசியத்தை தாங்கும் பெருந்தூண்.
இன்னொருவர் வந்து என்னைப் பார்த்தபடியே நீண்டநேரம் மௌனமாய் அமர்ந்திருந்தார். திடீரென ஞாபகம் வந்தவரைப்போலக் கேட்டார் என்ன றாங்? எனக்கொருகணம் அவர் என்ன கேட்கிறார் எனத் தெரியவேயில்லை பிறகுதான் புரிந்தது புலிகள் அவர்களுடைய உறுப்பினர்களுக்கு வழங்குகிற இராணுவப் படிநிலையைக் கேட்கிறார் என்பது. நான் பதில் சொல்லாமல் அமைதியாயிருந்தேன். அவர் சிறிது நேரம் என்னைப் பார்த்துக்கொண்டிருந்து விட்டு சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாய்க் திரும்பவும் கேட்டார். உங்கட தம்பி அவசரகாலத்தில் அழைத்துச் செல்லப்பட்டவரா அல்லது தானாகச் சேர்ந்தவரா? தொடர்ந்து அவசரகாலத்தில் அழைத்துச் செல்லப்பட்டவராயிருந்தால் வீரவேங்கைதான் குடுத்திருப்பாங்கள் என்றார். அதற்கிடையில் என்னருகில் இருந்த இன்னொரு நண்பர் அவரைக் கையைப்பிடித்து வெளியில் அழைத்துச்சென்றுவிட்டார். இல்லையென்றால் நான் சத்தியமாய் அவரை அடித்திருப்பேன்.
நேற்று நான் இதை எழுதிக்கொண்டிருக்கும் போதுதான் இரண்டு விசயங்களை உணர்ந்தேன். ஒன்று அந்த நண்பருக்கு பிடித்துச் செல்லப்படுவதற்கு வன்னியில் யாருமில்லை. வைபோசாகப் பிள்ளை பிடித்தல் என்பதை எவ்வளவு நல்ல நிகழ்வாக அவசரகாலத்தில் அழைத்துச் செல்லுதல் என்று அவர் சொன்னார் அது எவ்வளவு அரசியல் நியாயப்படுத்தல் நிறைந்த சொல். அங்க நிக்கிறான் தப்பியோடிய தமிழன், என்று தோன்றிச்சுது.
இந்த இடத்தில் நினைவுக்கு வருவதால் இன்னொன்றையும் சொல்லிவிட்டுப் போகிறேன். சொற்களாலானதுதான் இந்த அரசியல் வெளி. இலங்கை மனித சமூகத்தின் அரசியலே சொற்களின் வர்ணனைகளாலானது. இதே தொழிநுட்பத்தைத் தான் இலங்கை அரசும் பயன்படுத்துகிறது. அதாவது முன்னாள் போராளிகளை ஜெயிலில் அடைத்த வைத்திருப்பதற்கு அது வைத்திருக்கிற சொல் புனர்வாழ்வு பாருங்கள் எவ்வளவு அரசியல் நியாயமூட்டப்பட்ட சொல் அது.
சரி அந்த றாங் கேட்ட நண்பருக்கே மீண்டும் வருகிறேன். இன்னொரு முரணும் உண்டு அவர் சுரேஸ் பிரேமச்சந்திரனாக்கள் வைபோசா ஆள்பிடிச்சபோது(தமிழ்த்தேசிய இராணுவத்திற்கு) தான்தப்பிப் பிழைத்த கதைகளை சாகசமாக இன்றைக்கும் விபரிப்பார். ஒரே செயல் சில வருடங்கள் கடந்து செய்யப்படும்போது எப்படி நல்லசெயலாக பாதிக்கப்பட்டவராலேயே பார்க்கப்படுகிறது என்று வியந்தேன். இரண்டாவது அவர் என்ன றாங் என்ற அவருடைய கேள்விக்கு நான் பதிலளிக்காமல் இருந்ததற்கு காரணம் என்னுடைய தம்பிக்கு வழங்கப்பட்ட றாங் பெருமையோடு சொல்லப்பட முடியாதபடி குறைவானது என்பதனால் ஏற்பட்ட கள்ள மௌனம் என அவர் நினைத்திருப்பாரோ என்றும் நான் நேற்று நினைத்தேன்.
அது எவ்வளவு துயரமான உண்மை. வீரவேங்கைகளின் மரணமும், பிரிகேடியர்களின் மரணமும், இளவரசர்களின் மரணமும்,சாதாரண பாலகர்களின் மரணமும், தளபதிகளின் மரணமும், சிப்பாய்களின் மரணமும் எத்தனை வேறுபாட்டுடன் அணுகப்படுகிறது, அணுகப்பட்டது. இதற்கெல்லாம் உயிருள்ள சாட்சியங்கள் இன்னும் இருக்கிறார்கள். புரகந்த கழுவர அந்தப்படம் தான் எனக்கிந்த இடத்தில் நினைவுக்கு வருகிறது. அதோடு கூடவே கொக்காவிலில் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தினரால் எரியூட்டப்பட்ட 1500 படையினரின் சடலங்களும் நினைவுக்கு வருகின்றன. முல்லைத்தீவுப் படைமுகாமை புலிகள் கைப்பற்றியபோது அதில் கைப்பற்றப்பட்ட இராணுவத்தினரின் சடலங்களை அப்போதைய சந்திரிகா அரசாங்கம் கையேற்க மறுத்தது. அந்தச் சடலங்களை வெற்றி இறுமாப்போடு வன்னிச் சனங்கள் சந்திரன் சிறுவர் பூங்காவில் சென்று பார்த்தனர். முல்லைமண் எங்களின் வசமாச்சு ஈழம் முற்றிலும் வெல்வது திடமாச்சு வெற்றி மெட்டு வானலைகளில் மிதந்தது. ஏழாம் வகுப்புச் சின்னப்பெடியன் இந்தப் பாட்டைப் பாடிக்கொண்டு ஒழுங்கைக்குள் தனது நீலச் அரைச் சைக்கிளை ஓடித்திரிந்தான். அது நான் தான். பிறகு அதே சின்னப் பெடியன் கொக்காவில் ஏ9 வீதியோரக்காடுகளில் எரிக்கப்பட்ட அந்தச் சடலங்களின் பிணவாடை மறையும் முன்பாக மூக்கைப் பொத்தியபடி கிளிநொச்சியை விட்டு அதே சைக்கிளில் இடம்பெயர்ந்து மாங்குளம் நோக்கிப் போனான். வெற்றி என்பதும் தோல்வியின் முதற்படிதான் சில நேரங்களில். மரணம் எவ்வளவு பொய்யாக எவ்வளவு அரசியலாக,எவ்வளவு ஏமாற்றாக யுத்தத்தை முன்னெடுக்கும் தரப்புகளால் செய்யப்படுகின்றன என்பதற்கது சாட்சி.
இசைப்பிரியாவின் இறந்த உடல் முதலில் துவாரகாவின் உடலாகத்தான் உலகம் முழுவதும் அறியப்பட்டது. உங்களுக்கது நினைவிருக்கலாம். உலகம் பதைபதைத்தது. பிரபாகரனின் மகள் என்கிற பதட்டம் அதிலிருந்தது. பிறகுதான் அது இசைப்பிரியா என்கிற ஆறுதலான தகவல் தமிழ்த்தேசிய இணையப்போராளிகளை வந்தடைந்தது. அந்த ஆறுதலை அவர்கள் 2009 ல் வெளிப்படுத்திய விதம் மிகவும் அருவருக்கத்தக்கது. அப்போது நான் பேஸ்புக்கில் எழுதியது நினைவிருக்கிறது “அது அவளில்லாவிட்டால் பரவாயில்லையா?” உண்மையைச் சொன்னால் பரவாயில்லை என்பதுதான் அநேகரின் உள்ளக்கிடக்கை. இந்த மனோ நிலை எங்கிருந்து முளைக்கிறது? இந்தச் சாக்கடைச் சமூகத்திற்குத்தான் அறிவூட்டல் முதலில் தேவை. மரணம் என்பதில் இத்தனை வேறுபாடுகளைக் கண்டுபிடித்து வைத்திருக்கிற ஒரு சமூகம். இழப்பில் இத்தனை தகுதி நிலைகளைக் கொண்டியங்கும் சமூக அமைப்பில் எப்படி இழப்பில் இருக்கிறவனுக்கு ஆறுதல் கிடைக்கும்.
சாவு இழப்புத்தான். ஆனால் ஐஐயோ என்று ஒன்றையும்,அப்படியா சந்தோசம் என்று இன்னொன்றையும் எப்படி இந்தச் சமூகத்தால் பார்க்கமுடிகிறது?
அண்மையில் சவுதி அரேபியாவில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட ரிசானாவின் தண்டனை நிறைவேற்றல் காட்சி என்ற பெயரில் ஒரு வீடியோவை பார்த்தேன். உடல் பதற சகமனிதனாயிருக்க வெட்கப்பட்ட ஒரு தருணம் அது. என்ன ஒரு கொடுரமான தருணம் அது. என்னை மிகவும் பாதித்தது. ஆனால் அது ஒரு பெரும் குற்றவுணர்வை எனக்குள் எழுப்பியது ஒரு பதினைந்து வருடங்கள் முன்னால் என்னுடைய அனுபவம் இது ஒரு பதினாலாவது வயதில் என்று நினைக்கிறேன் நாங்கள் இடம் பெயர்ந்து ஸ்கந்தபுரத்தில் இருந்தோம் தேசத்துரோகியைச் சுடுவதற்காக ஸ்கந்தபுரச் சந்தைக்கு முன்னால் மரக்குற்றியில் ஏற்றிவைத்து குற்றப்பத்திரிகை படித்துக்கொண்டிருந்தார்கள் அந்த மனிதனின் கைகள் பின்னால் கட்டப்பட்டிருக்க அவன் கால்களால் கூப்பியபடி தனக்கருகில் துவக்கேந்தி நின்றவர்களிடம் கெஞ்சிக்கொண்டிருந்தான். துவக்குகள் ஏந்தியிருந்தவர்கள் சுடப்போகிறார்கள் என்றெதிர்பார்த்த தருணத்தில் சரேலென்று பிக்கப்பொன்றின் கதவுதிறந்து வெகு ஸ்டைலாக பிஸ்டலை உயர்த்தி ஒரே வெடி நான் அதை ஒரு புனிதக் காரியத்தைப் பார்ப்பதைப் போலவே பார்த்தேன். தேசத்துரோகிக்கு வேண்டியதுதான் வெட்கத்துடனும் துயரத்துடனும் சொல்கிறேன் அந்த மனிதன் பற்றி எந்த அக்கறையும் எனக்கிருக்கவில்லை. இறந்து போன அந்த மனிதனை விடவும் பிஸ்டலோடு வந்த கதாநாயகனின் தரிசனம் மகிழ்ச்சியளித்தது. அவர்தான் அந்த விசாரணைப்பிரிவின் பொறுப்பாளர், பொட்டம்மானின் வலது கை இப்படித்தான் சனங்களிடம் ஆரவாரமிருந்தது. இறந்த போன அந்த மனிதனைப் பற்றி ஒரு நாயும் சீண்டவில்லை. நான் அவனது கொலையை நியாயம் என்றே நினைத்தேன். இன்னும் தெளிவாகச் சொன்னால் நியாயமா அநியாயமா என்றெல்லாம் யோசிக்கக் கூட இல்லை. ஆனால் இத்தனை வருடங்கள் கழித்து யாரோ ஒரு பெண்ணின் தலை கொய்யப்படுவதைக் கண்டு வேதனைப் படும்போது காட்டிக் கொடுத்ததாய்ச் சொல்லப்பட்டுக் கொல்லப்பட்டவனின் கூப்பிய கால்களும் அந்த மரக்குற்றியில் யாரோ மண்ணள்ளிப் போட்டு மறைத்தபின்னும் எட்டிப்பார்த்த படியிருந்து உறைந்த இரத்தமும் என் நினைவுகளில் மேலெழுகின்றன. அவை என்னைப் பார்த்து பெரிய மனிதாபிமானி மாதிரி நடிக்காதே என்றென்னைக் கேட்குமாப்போல் இருக்கிறது. நான் இந்த இரண்டு மரணங்களையும் பார்த்ததைப் போலத்தானே இந்தச் சமூகம் மரணத்தைக் கொலையை அணுகுகிறது. அப்படியானால் எங்கே அறிவூட்டல் தேவை?
நினைவு கொள்ளல் நல்லதுதான். தேவைதான். நமது உரிமைதான் ஆனால் இன்றைக்கு அது பெரும் அரசியலாகவும் வியாபாரமாகவும் தமிழ் மொழிக்குப் புதிய சொற்களைக் கண்டடைவதற்கான நாளாகவும்தான் இருக்கிறது. மே 18 ஐ என்ன பெயரில் அழைப்பது என்பதிலேயே தமிழ்த்தேசிய ஜனநாயக இதயத்தில் ஒரு பெயரில்லை. அதற்கே ஆயிரம் அடிபாடு நீங்கள் தமிழ்த்தேசியத்தை இந்த அடிபாடுகளிலிருந்து பார்க்காதீர்கள் என்பதாய் மரத்திலிருந்து பாம்பொன்று காதுக்குள் சொல்லும். இன்றைக்கு புலிகள் இயக்கமே பலதாய் பிரிந்திருக்கிறது அதற்குள் ஒற்றுமை வேண்டி ஒரு சிலர் பேசுகிறார்கள். காலப்போக்கில் மற்றவற்றைப் பின்தள்ளி ஒரு அமைப்பு ஏகப்பிரதிநித்துவம் பெறும், மற்ற இரண்டோ மூன்றோ அமைப்புக்களும் ஒட்டுக்குழுவாகவும்,துரோகக் கும்பலாகவும் உறுதிப்படுத்தப்படும். தமிழ்த்தேசியத்தின் ஜனநாயக இதயம் பலத்துடன் இருப்பதாகப் பத்தியாளர் எழுதுவார்கள். இதுதானே முப்பத்துச் சொச்சம் இயக்கங்களுக்கும் நடந்தது. வாழ்க்கை மட்டுமல்ல வரலாறும் வட்டம் தானோ? நினைவு கொள்ளுதலில் எவ்வளவு அரசியல் இருக்கிறது? யார் நினைவு கொள்ளப்படுகிறார்? யாரால் நினைவு கொள்ளப்படுகிறார் என்பதில் தானே எல்லாம் இருக்கிறது இல்லையா? யார் யாரை நினைவு கொள்ளுவது யார் யாரைக் கழிப்பது ஒரு தீர்மானத்துக்கு வரமுடியுமா? ஓரு உதாரணத்துக்குச் சொல்கிறேன் தியாகிகள் தினத்துக்கும் மாவீரர் தினமளவு பிசினஸ் நடக்குமா? மன்னிக்கோணும் கவனம் கிடைக்குமா? எங்களுக்குள் இவ்வளவு சிக்கல் இருக்கிறதே இதை எப்படித் தீர்ப்பது? நாங்களே இன்னொருவர் நினைவுகொள்ளும் உரிமையை மறுத்தபடி நமது உரிமைக்காய் குரலெழுப்புகிறோம் நடக்குமா? அது வேறு இது வேறு கனி ருசியானது அருந்து அருந்து மரத்தில் தொங்கும் அதே பாம்பு உருவேற்றும்.
அரசாங்கம் இன்றைக்கு யுத்த வெற்றியைக் கொண்டாடுகிறது அல்லது நினைவு கூர்கிறது. ஆனால் இந்த யுத்த வெற்றியைப் பெறுவதற்காக எத்தனை ஆயிரக்கணக்கான ஏழைச்சிங்களவர்களின் வீடுகளுக்கு சவப்பெட்டிகளை வெகுமானமாக இனவாதம் அழித்திருக்கிறது. உண்மையில் சிங்களவர்கள் வீடுகளில் இந்த நாளன்று யுத்தத்தில் இழந்த தங்கள் பிள்ளைகளை நினைக்காமல் உறவினர்கள் இருப்பார்களா? வெற்றிக் கொண்டாட்டங்களின் உற்சாக ஓசையில்,இராணுவ அணிவகுப்பின் சப்பாத்துக் குளம்பின் ஓசையில்,வெடிக்கப்படும் மரியாதை வேட்டுக்களின் பேரொலியில் மேலெழமுடியாது தேய்ந்தடங்கிப் போகிறது தாய்மாரின் விசும்பல். உண்மையில் வெற்றியைக் கொண்டாடுகிறவர்களுக்கு அதற்காகக் கொடுக்கப்பட்ட விலை தெரிவதேயில்லை ஏனெனில் அதை அவர்கள் செலுத்துவதில்லை. இந்த வெற்றி என்று அவர்கள் சொல்லிக்கொள்ளும் மனிதகுலத்தையே வெட்கம் கொள்ளவைக்கும் செயலுக்காக எத்தனை பேரின் மரணங்களை அந்தச் சின்னத்தீவுக்கு இராஜபக்ச குடும்பம் பரிசளித்திருக்கிறது.
இதே நிபந்தனைகள்தான் நமக்கும் ஒரு காலத்தில் பொருந்திப் போயிருந்தது நண்பர்களே. சமாதான காலத்தில் நம்முடைய ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்றத்தில் சாவல் விட்டார் “40000 சவப்பெட்டிகளை தயாராக வைத்திருங்கள்” என்று அப்போது யாழ்ப்பாணத்தில் இருந்த இராணுவ வீரர்களின் எண்ணிக்கையது. ஆனையிறவு புலிகளிடம் வீழ்ந்த போது உலகம் முழுவதும் பட்டாசுகள் வெடித்தன இனிப்புக்கள் பரிமாறப்பட்டன. அதே நேரம் நூற்றுக்கணக்கான வீடுகளில் சவப்பெட்டிகளுக்கு தாய்மார்கள் துணையிருந்தார்கள். ஆனால் பரிமாறப்பட்ட எந்த இனிப்பிலும் இந்தத் தாய்மாரின் கண்ணீரின் உப்புச் சுவடேயில்லை. வெற்றி ஆராவாரத்தில் துயிலுமில்லப்பாடல் ஒலியடங்கித் தேய்ந்தது. எப்படி இந்த உலகம் இத்தனை கொடுரமானதாய் சீவிக்கிறது? சவப்பெட்டிகளை தயார்ப்படுத்துங்கள் என்று சவால் விட்டவர் இன்றைக்கும் இருக்கிறார் அதே சவாலை அவர் எப்போதும், இன்னொரு சந்தர்ப்பத்திலும் விடத் தயாராயே இருப்பார் என்றே நான் நம்புகிறேன். ஏனெனில் அவருக்கு உறுதியாகத் தெரியும் களத்தில் செத்து மடியப்போவது தானல்ல என்பது.
என்னிடமிருக்கும்
இந்தச் சொற்கள்
சுயநலமிக்கவை….
பதுங்குகுழியின்
தழும்புகளை,
கண்ணிவெடியில்
பாதமற்றுப்போனவளின் பயணத்தை,
மற்றும்
வானத்தில் மிதந்த
ஒரு பேரிரைச்சலுக்கு
உறைந்து போன குழந்தையின் புன்னகையை…
நாளைக்கான நிபந்தனைகள் ஏதுமற்ற
ஓய்வுப்பொழுதொன்றில்
வெற்றுத்தாளில் அழத்தொடங்குகின்றன.
என்னிடமிருக்கும்
இந்தச் சொற்கள்
அயோக்கியத்தனமானவை.
துப்பாக்கிகளிடையில்
நசிபடும் சனங்களின் குருதியை
டாங்கிகள் ஏறிவந்த
ஒரு சிறுமியின் நிசிக்கனவை
மற்றும்
தனது ஊரைப்பிரியமறுத்த
ஒரு கிழவனின் கண்ணீரை
போரின் நிழல்விழா வெளியொன்றின்
குளுமையிலிருந்து
பாடத்தொடங்குகின்றன..
என்னிடமிருக்கும்
இந்தச் சொற்கள்
சுயநலமிக்கவை….
அயோக்கியத்தனமானவை…
ஆயினும் என்ன
பிணங்களை விற்பதற்கு முன்பாக
துயரங்களை விற்றுவிடுவதுதான்
புத்திசாலித்தனமாது..
இதை என்னுடைய வலைப்பதிவில் 2009 ஜனவரியில் போட்டிருக்கிறேன் அதற்கும் சில மாதங்கள் முன்பு எழுதியிருந்திருப்பேன். துயரங்களை விற்றுத் தீர்ந்து பிணங்களை விற்கும் காலத்தில் நாம் இப்போதிருப்பதாய் உணர்கிறேன்.
வென்றவர்கள் தோற்றவர்களாகவும் தோற்றவர்கள் வென்றவர்களாகவும் மாறி மாறிக் கொன்றதில். தமிழ்த்தாய்மார்களுக்குப் பிள்ளைகளுமில்லை அவர்களின் கல்லறைகளுமில்லை. கல்லறைகளைக்கூட விட்டுவைக்காத நாகரீகமற்ற நீசர்களாக இலங்கை ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். பிழைத்தலுக்காக பல்வேறு இடங்களில் மாவீரர் நாள் என்ற பெயரில் வசூலை இந்தப்பக்கத்தில் நடத்துகிறார்கள். இது இரண்டுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? அதை விடவும் பல பத்தாண்டுகளுக்கு முன்பே மண்ணுக்காய் போராட்டம் என்ற பெயரில் செத்துப்போன எத்தனையோ பேர் செத்தும் அங்கீகரிக்கப்படாதவர்களாய் தசாப்தங்கள் கடந்தும் ஒரு அனுங்கல் குரலில் நாங்களும் ஈழத்தமிழர்களுக்காய் இனவாதத்திற்கெதிராய்ப் போராடியவர்கள் தான் என்று முனகிக் கொண்டிருக்கிறார்கள்.
“மாண்ட வீரர் கனவு பலிக்கும் மகிழ்ச்சிக் கடலில் தமிழ் மண் குளிக்கும்” என்று கொத்துரொட்டிக் கடைப் பெயர்ப்பலகையில் எழுதிப் போட்டிருக்கிறார்கள். இதற்காகத் தானா இந்தவிலை? இதற்காகவா இத்தனை மரணங்கள்? உண்மையில் இந்தச் சமூகம் அந்த மரணங்களை மதிக்கிறதா? எல்லாவற்றையும் தங்களது இருப்பிற்கானதாகவும், பிழைத்தலுக்காகவும் , உணர்ச்சி அரசியலுக்காகவும் ஆகுதியாக்கிக் கொண்டிருக்கிற இந்தச் சமூகம் உண்மையில் இழந்தவர்களைப் பற்றி அக்கறை கொள்வதை விட்டு விட்டு. மரணங்களைக் கொண்டாடாமலிருக்கக் கற்றுக் கொள்ளட்டும். எல்லா இடங்களிலும் மரணத்தின் விளைவுகள் ஒன்றேதான் என்பதை இந்தச் சமூகம் அறிந்து கொள்ளட்டும். பெருமைப்படுத்திவிட்டாலோ அல்லது சிறுமைப்படுத்திவிட்டாலோ மரணம் அல்லது இழப்பு உருவம் மாறிவிடாது என்கிற உண்மையை ஏற்றுக்கொள்ளட்டும். ஆற்றுப் படுத்துதல் பற்றி பிறகு பார்க்கலாம்.
மே 19 2013 அன்று கனடாவில் இடம்பெற்ற மரணம் இழப்பு மலர்தல் நிகழ்வில் நிகழ்த்திய உரையில் எழுத்து வடிவம்.
இது புதிது. போருக்குப் பிந்திய உண்மைப் பதிவு . எம்மை நாம் உள்நோக்கிப் பார்க்கவேண்டிய உண்மையை ,அவசியத்தை உணர்த்துகிறது . நன்றி .
அருமையான…பதிவு,தனிமனித வலியை அழுத்தமாக,வெளிக்கொணர்கிறது…..அரசியல்….சத்தத்தில் அமைதியான தனிமனித உணர்வுகள் மதிக்கபடுவதில் உள்ளசிக்கல்களை அழகாக எடுத்துகூருகிறது.நன்றி. இதைமட்டுமே என்னால் கூறமுடியும்.