துப்பாக்கியின் கண்கள்
வாசிக்கத் தொடங்கிய பிறகு
சொற்கள்
ஒழிக்கத் தொடங்கிவிட்டன/சபிக்கப்பட்டு விட்டன
பீரங்கியின் வாய்களால்
அச்சமூட்டப்பட்ட
சொற்கள் கொண்டு
செய்யப்படுகிறது
ஒரு நாள்….
முடமான சொற்கள் கொண்டு
கவிதைகள்
செய்வது எங்ஙனம்?
கால்களற்ற சொற்களைக்
காணச் சகியாதொருவன்
துப்பாக்கிகளறியாதொருகணத்தில்
மொழியைப் புணர்ந்து
புதிதாய்
கால்முளைத்த சொற்களைப்
பிரசவிக்கலானான்…
பின்
ஓர் இரவில்…
துப்பாக்கியின் கண்கள்
அவன் முதுகினில்
நிழலெனப் படிந்து
அவன் குரலுருவிப்
பின்
ஒரு பறவையைப்போல
விரைந்து மறைந்ததாய்..
அவன் குழந்தைகள் சொல்லின.
எஸ்.போசை மிருகங்கள் கவர்ந்து சென்று பத்தாண்டுகள் முடிவடைந்து விட்டன. ஆனாலும் அவரது குரல் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது நம்மிடையே. ஏனெனில் எஸ்.போஸ் நாங்கள் ஒலித்திருக்க வேண்டிய குரலாயிருந்தார் பிழைத்திருத்தலே சாகசமாகிப்போன நம்முடைய காலத்தில் பிழைத்திருத்தலுக்காக நம் அறவுணர்வை சற்றே வளைக்கநேர்கிற,அநீதிகளை மௌனமாய்க் கடக்கநேர்கிற வாழ்க்கைதான் நமக்கு வாய்த்திருக்கிறது. பிழைத்திருத்தலே விலங்கினத்தின் அடிப்படை என்கிறபோதும், வாழ்வு தன்னை எல்லாப்பக்கமிருந்தும் நொருக்கித் தள்ளியபோதும் தன் அறவுணர்வைக் குன்றாமல் பாதுக்காத்து அவ் அறவுணர்வின் சொற்களைச் சுடராய் ஏந்திச் செல்ல வெகு சிலரால் மட்டுமே முடிந்திருக்கிறது. அவ்வாறு தனக்குள் நிதமும் கனன்ற அறவுணர்வின் சொற்களைச் சுடராய் ஏந்தி ஓடிய அற்பமான காலத்தின் மகத்தான கவிஞன் எஸ்.போஸ்.
தான் வாழும் காலத்தின், சமூகத்தின் குரலாய் மட்டுமில்லாது தன் சமூகத்தின் எதிர்காலம் குறித்தும் கனவுகாணவும் அதற்காய் குரலெழுப்பவும் தன் சொற்களின் குரல் வளையைத் தானே நெரிக்காது தன் சொற்களைப் போலவே வாழவும் எஸ்.போஸ் கொடுத்த விலை அவருடைய உயிராயிருந்தது.
டிப்டொப்பாக உடையணிகிற மெலிந்த தோற்றமுடைய எஸ்.போசுடன் நான் நெருங்கிப் பழகியவன் அல்ல. ஆரம்ப இலக்கிய வாசகனான எனக்கு ஆச்சரிய ஆளுமைகளில் ஒருவராய் அப்போது எஸ்.போஸ் இருந்தார். முழுக்கைச் சட்டையை விரும்பி அணிகிற அந்த மெலிந்த மனிதனைப் பற்றிய நிறையக் கதைகளை அவரது எழுத்துக்களும் நண்பர்களின் சொற்களும் எனக்குச் சொல்லித் தீர்த்தன. காலம் முழுவதும் வாழ்வின் அபத்தங்களை சகியாதிருந்தவராய்,அதிகாரத்தின் எல்லா வடிவங்களையும் எதிர்த்தவராய் சதா மனசுக்குள் கேள்விகளைக் கொண்டலைந்த இளைஞராய் எஸ்.போஸ் இருந்தார். அதிகாரத்தை எதிர்த்தல் என்பது தனியே அரசமைப்பை மட்டும் எதிர்ப்பதல்ல என்பதை எஸ்.போஸ் புரிந்தவராயிருந்தார் அதனாலேயே அவர் குடும்பத்தில் பாடசாலையில்,வேலையிடங்களில்,நண்பர்களிடத்தில் முட்டிமோதினார்.
எங்களில் அநேகர் எங்களுடைய குரல் நேரடியாக சென்றடைய முடியாத அதிகாரங்களை நோக்கிக் குரலெழுப்புவதில் வல்லவர்களாயிருக்கிறோம் உதாரணத்திற்கு அமெரிக்க ஏகாதிபத்தியம்,சிங்கள இனவாதம், தமிழ்த்தேசியம், இந்திய வல்லாதிக்கம் இப்படியானவற்றையெல்லாம் விமர்சித்து நம் அறவுணர்வைக் கொட்டுவோம். ஆனால் நம் அலுவலகமேலாளரின் அத்துமீறலையோ, விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரியின் நிறவாதச் செயலையோ,நாம் கேள்விகேட்பதைத் தவிர்த்து, சகித்துக் கடந்து செல்வோம். ஒரு வேளை இதெல்லாம் சின்ன அநீதி பெரிய அநீதியைத் தட்டிக்கேட்டால் போதும் என்கிற மனநிலைகூட அதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால் எஸ்.போசால் அது முடியாமலிருந்தது. அவர் பாடசாலை ஆசிரியரின் அதிகாரத்தையும் எதிர்த்தார், பத்திரிகையாளர்கள் கடத்தப் பட்டாலும் கண்டித்தார்,மண் கடத்தினாலும் கண்டித்தார். அவரிடம் அநீதியின் அளவுகோல்கள் எதுவுமில்லை அவருக்கு எல்லாமே தட்டிக்கேட்க வேண்டியவைதான். ஏனெனில் அந்த மெல்லிய மனிதன் தன்னைப் போலவே எல்லோரையும் நேசித்தான். அவனது அலைவுக்கும், துன்பங்களிற்கும், நிலையாமைக்கும் ,சுடர்போல் எரிந்த அவன் சொற்களுக்கும் ,ஏன் அவனது மரணத்திற்கும் அவனிடமிருந்த மானுடத்தின் மீதான பேரன்பே காரணம்.
அதிகாரங்களிற்கெதிராக ஏதாவது செய்யவேண்டும் என்ற துடிப்பு எப்போதும் அவரிடமிருந்துகொண்டேயிருந்தது. அவரது எழுத்துக்களில் திரும்பவும் திரும்பவும் அவர் வலியுறுத்துவது அதுவாகவேயிருக்கிறது. அவரது ஒரு சிறுகதையில் அவர் எழுதுகிறார் ஒருவருடைய அந்தரங்கத்துக்குள் இந்த அதிகாரம் எப்படிக் கேட்டுக்கேள்வியில்லாமல் சட்டென்று நுழைந்து விடுகிறது என. இன்னொரு இடத்தில் எழுதுகிறார் “நாங்கள் நூறு வீதம் புனிதத்தை எதிர்பார்க்கிறோம் சில சமயங்களில் அது நம்மீதே முள்ளாய்ப் பாய்கிறது ”என்று. ஏன் தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களால் தன்னோடு கூடவரமுடியவில்லை என்ற கேள்வியின் முடிச்சை அவிழ்ப்பதற்காகத் தன் எழுத்துக்கள் முழுவதும் முயன்றிருக்கிறார். நேர் வாழ்க்கையிலும் நண்பர்களைத் தன்னைப்போல் சிந்திப்பவர்களாக ஆக்குவதற்காக நிறைய முயன்றிருக்கிறார். விவாதங்கள் பேச்சுக்கள்,பாராட்டுக்கள்,திருத்தங்கள்,தட்டிக்கொடுப்புகள் என்று தன்னுடைய பாதையில் நண்பர்களையும் அழைத்துச்செல்லவிரும்பிய கூட்டாளியாகத்தான் இன்றைக்கும் அவரது நண்பர்கள் அவரை நினைவு கூருகின்றனர்.
எஸ்.போசைப் பொறுத்தவரை வாழ்வின் அபத்தங்களைக் கடப்பதற்கான கருவியாகவே எழுத்தைக் கையாண்டார். கவிதையை வெறித்தனமாக நேசிக்கிற ஒருவராக இருந்திருக்கிறார் என்றே நினைக்கிறேன். எழுத்தின் மூலமே தான் வாழ்வின் துயரங்களைக் கடந்தார். றஷ்மியின் ஆயிரம் கிராமங்களைத் தின்ற ஆடு புத்தகத்தைப் பற்றிய குறிப்பில் சுதாகர் இவ்வாறு எழுதுகிறார்.
நமது கவிதைகள் பற்றிய உண்மைகளையும் அதன் சூக்குமங்களையும் மற்றவர்கள் புரிந்து கொள்ளும் போது அவர்களே தத்தமது புரிதல்களின் அடிப்படையில் நம்மை எதிரிகளாகவும் துரோகிகளாகவும் நண்பர்களாகவும் விபச்சாரர்களாகவும் மாற்றிவிடுகிறார்கள். நமது கவிதைகளோடு நாம் உண்மையாக வாழ்வதைப்போல இந்தச் சமூகத்தோடும் மனிதர்களோடும் உண்மையாக வாழ முடியுமா?
சமூகத்தோடு உண்மையாய் வாழமுடியாமலிருப்பதன் ஆதங்கமாயும், அவரது கவிதைகளின் மீதான காதலாகவுமே மேற்சொன்ன அவருடைய வரிகளை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் வாழ்வின் நெருக்குதல்கள் குறித்துச் சலிப்பெதுவும் அவர் சொற்களிடம் இல்லை. சொல்லப் போனால் அத்தகைய நெருக்குதல்களை அவர் போராடுவதற்கான உந்துதல்களாகவே கையாண்டிருக்கிறார். அவரது சிறுகதைப் பாத்திரமொன்று இப்படி நினைக்கும்“அடிக்க அடிக்க சுணை குறையிற மாதிரி அம்மா பேசப் பேச அந்தப் பேச்சே கதையாய் கவிதையாய் வியாபிக்கும் எல்லாம் மீறி எங்கும் ஒரு சந்தோசம் துளிர்விடும்”சுதாகர் எப்படி வாழ்வை எதிர்கொண்டார் என்பதன் மிகச் சிறிய மற்றும் சரியான உதாரணம் இதுவெனத் தான் நான் நினைக்கிறேன்.
பாலம் என்கிற சிறுகதையில் அவர் எழுதுகிறார் “மனுசனுக்கு மனுசனாலதான் துன்பம் அதைஎதிர்த்து நிக்கிறதுக்காக போராடலாமே தவிர அழக்கூடாது”அன்பின் போதாமை அவரை துரத்தியிருக்கிறது. அன்புக்காய் ஏங்கும் சொற்கள் அவர் படைப்புக்கள் முழுவதும் விரவிக் கிடக்கிறது. எப்போதும் குடும்பத்திடமிருந்தும் சொந்த நிலத்திடமிருந்தும் விலகி வாழ நேர்ந்த வாழ்வலைச்சலின் விளைவாயிருக்கலாம் அது.“ஒடுக்குதலற்ற உணர்வுகளை உள்வாங்கி நேசிக்கிற பாசம் அவனுக்குத் தேவையாயிருந்தது”“மனிதர்கள் அன்பாய்ப் பேசும் ஒரு வார்த்தையைக் கூட வெளியில் கேட்கவில்லை”என்றெல்லாம் எழுதிச் செல்கிறார். இன்னொரு கவிதையில் “நரிகளோடும் எருமைகளோடும் வாழக்கிடைத்துவிட்ட நிகழ்காலம்”என்கிறார். “எனக்கு அன்பு பற்றி பாசம் பற்றி காதல் பற்றி அயலவரோடு பேசப் பயமாயிருக்கிறது”என்றெழுதுகிறார். இந்தச் சொற்களின் மூலமாகவெல்லாம் எஸ்.போஸ் அன்பாலான ஒரு உலகம் பற்றிய தன் எதிர்பார்ப்பைச் சித்தரித்தபடியே அதை நோக்கி பயணப்பட்டிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். தன்னை நாள்முழுதும் பட்டினிபோடும் வறுமையிலிருந்தும்,எல்லாத்திசைகளிலிருந்தும் உதைத்துத் தள்ளும் வாழ்வெனும் அபத்த நாடகத்திலிருந்தும் தன் வாழ்வை முன்னெடுத்துச் செல்லும் உந்து சக்தியைக் கண்டடைகிற உறுதியான மனம் எஸ்.போசிடமிருந்தது அதுவே அவர் குரலை இன்றளவும் அவரது மரணத்தின் பின்னாலும் ஒலிக்கச் செய்தபடியிருக்கிறது.
அவரது உறுதியான மனமும் அன்பாலான உலகம் குறித்த தேடலும் சக மனிதனின் துன்பம் குறித்துக் கோபப்படுகிறவராக அவரை ஆக்கின. ஆகவேதான் ஏதாவது செய் ஏதாவது செய் என அவரது கவிதைகள் அதிகாரத்துக்கெதிராக போர்க்கொடியுயர்த்துகின்றன. துப்பாக்கியைச் சனியன் என அழைக்கும் சுதாகர் ஆயுதங்களை, அவை உருவாக்கும் போரை வெறுத்தார். ஆயுதங்களைப் பிடுங்கி எறி என்ற அவரது கவிதை சாக்கடவுளைத் தூற்றியது,போரற்ற ஒரு அழகான நிலத்தைக் குழந்தைகளுக்காக கொடுங்கள் எனக் கோரியது.சமீஹ் அல் ஹாசிமின் றாஃபாச் சிறுவர்கள் போல ஈழ நிலத்தின் சிறுவர்கள் ஆவதை சகியாத மனம் எஸ்.போசுடையது.
போர்நிலத்தில் வாழும் மனிதர்களுக்கும் போர் நிலத்தை நீங்கிய மனிதர்களுக்கும் இருக்கிற இடைவெளி நீங்கவேண்டும் என்கிற பெருவிருப்பு அவரிடமிருந்தது. சிந்தாந்தனின் கவிதைகள் மீதான கட்டுரையில் எஸ். போஸ் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
“ஆயுதப் போராட்டத்திலும் அரசியலிலும் ஏற்பட்ட விருப்பு வெறுப்புகள் காரணமாக சகிப்புத் தன்மையை இழந்தோ அன்றி தனிப்பட்ட பார்வையில் அரசியலையும் ஆயுதப்போராட்டத்தையும் நோக்கி அதன் மூலம் எடுக்கப்பட்ட தனிநபர் முடிவுகளின்படியோ அல்லது போராட்டக் குழுக்களிடையே ஏற்பட்ட விரிசல்கள் காரணமாகவோ சுயதேவைகளின் பொருட்டோ யுத்தப்பிரதேசத்தை விட்டு வெளியேறி இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் அல்லது புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் இலக்கியத்துக்காய் செயற்பட்டுக்கொண்டிருக்கும் படைப்பாளர்களுடன் யுத்தப் பிரதேசத்தில் அதன் அழிவையும் இன்னல்களையும் நேரடியாக அனுபவித்து வரும் படைப்பாளிகளிடையே நிலவி வந்த நிலவி வரும் புரிந்துணர்வு கொள்ளமுடியாத இடைவெளி இருசாராரது இலக்கிய முயற்சிகளையும் ஒருவரை ஒருவர் அணுக விடாது தடுத்திருக்கிறது. இது எதுவுமே இல்லையென்றால் யுத்தப்பிரதேசத்திற்குள் இருக்கும் படைப்பாளர்கள் மறுதரப்பினரால் புலிகளின் ஆதரவாளர்களாக நோக்கப்பட்டமையும் இந்த நோக்கம் தந்த புறக்கணிப்பு அல்லது அதனால் விளைந்த அச்சமும் நிச்சயம் காரணமாகலாம்”
உரையாடல்களின் மீதான பெருவிருப்பு அவருக்கிருந்தது. எதிர்த் தரப்பின் குரலைக் கேட்கமறுக்கிற ஏகப்பிரதிநிதித்துவச் சார்பென்பது எஸ்.போசிடம் இல்லை அவர் தன் எழுத்திலும் செயலிலிலும் அதனைப் பதிவுசெய்தே வந்திருக்கிறார். அத்தகைய செவிகொண்ட குரலாயிருப்பதன் மூலம் தான் எஸ்.போசின் வரலாறு முக்கியத்துவமுடையதாகிறது.
எனது ஒரே அடையாளம் நான் யாரைக்குறித்து இருக்கிறேன் என்பது என்று எழுதியதைப்போலவே அவர் சனங்களைக்குறித்து இருந்தார். சனங்களின் பாற்பட்ட அதிகாரத்திற்கு எதிரான சிந்தனைதான் எஸ்போசின் அடையாளம். அதிகாரமே யுத்தத்தின் பிறப்பிடம் யுத்தமே சனங்களை இன்னலுக்குள்ளாக்கிறது என்பதில் எஸ்.போஸ் உறுதியாயிருந்தார். ஆகவே அவர் அதிகாரத்தை எந்நேரமும் வெறுத்தார் அதற்கெதிராக அவரது சொற்கள் போராடின. கண்களற்ற ஆயுதங்களின் முன் நானென்ன கடவுளேயானாலும் மரணம்தான் என அவருக்குத் தெரிந்திருந்தது. அவரது நாட்குறிப்பில் அவர் எழுதுகிறார் “ஆயுதங்களுக்கு கருத்தியல் முக்கியமானதல்ல. ஆயுதங்களுக்கு எனது உயிர் பற்றிய அக்கறை கிடையாது அது தட்டும் திசையில் மனிதன் நானாக மட்டுமல்ல கடவுளேயாயினும் சாவு மட்டுமே தீர்ப்பு. எனினும் நான் எனது பேனாவை நம்புகிறேன். போர்க்குணம் மிக்க எனது இதயத்தில் இருந்து எழும் வார்த்தைகளை நம்புகிறேன்”சொற்களாலான சுதாகரது போராட்டம் சனங்களின் வலியைப் பிரதிபலித்தது.
உயர்ந்த பதவி, புகழ், செல்வம், பாதுகாப்பு போன்றவை அழைத்தாலும், அவற்றிற்கெல்லாம் மேலாக உள்ளுணர்வின் அழைப்பே முக்கியமாக இருக்கிறது என்று தனது இறுதி ஆசிரியர் தலையங்கத்தில் லசந்த எழுதினார். எஸ்.போசும் லசந்தவைப்போலவே தன் மரணத்தை முன்னுணர்ந்தே இருந்தார். சூரியனைக் கவர்ந்து சென்ற மிருகம் என்கிற கவிதையில்
“எனவே தோழர்களே
நான் திரும்ப மாட்டேன் என்றோ அல்லது
மண்டையினுள் குருதிக்கசிவோலோ
இரத்தம் கக்கியோ
சூரியன் வெளிவர அஞ்சிய ஒரு காலத்திலும்
நான் செத்துப்போவேன் என்பது பற்றிச் சொல்லுங்கள் ”என்கிறார்.
சுதாகர் தன் சொற்களின் விளைவை நன்கறிந்திருந்தார் என்பதன் வெளிப்பாடுதான் இந்த வரிகள். ஆனாலும் திரும்பவும் திரும்பவும் அதிகாரத்தை சீண்டும் சொற்களை அவர் பிரசவித்துக்கொண்டேயிருந்தார். அதுவே அதிகாரத்துக்கெதிராய் ஆயுதங்களை வெறுக்குமொருவன் செய்யக்கூடியது அதையே சுதாகரும் செய்தார்.
“நாங்கள் பயத்தின் மீதும் சிலுவையின் மீதும் அறைந்தறைந்து ஒளியிழக்கச் செய்த எமது சொற்களை மீட்டெடுப்பது எப்போது? இன்று எழுதப்பட்டவை பற்றியல்ல எழுதாமல் விடப்பட்டவை பற்றியே பேசவேண்டியிருக்கிறது. எல்லாம் எழுதப்பட்டு விட்டது என நாங்கள் கருதினால் படைப்பின் மூலம் அநீதிகள் என திரும்பத் திரும்ப வலியுறுத்தப்பட்டவை மீளவும் மீளவும் தலைவிரித்தாடுகிறது எனின் எமது எழுத்தின மூலம் சிறிதளவேனும் சமூகமாற்றமோ அரசியல் மாற்றமோ நிகழவில்லை என்ற எண்ணம் எம்முள் மூளும் எனில் அது பற்றியே நாங்கள் சிந்திக்கவும் பேசவும் வேண்டியிருக்கிறது” இவ்வாறு நிலம் ஆசிரியர் தலையங்கமொன்றில் நாங்கள் மீளவும் மீளவும் அதிகாரத்திற்கெதிரான சொற்களைக் காவிச்செல்லவேண்டியதன் அவசியத்தை எஸ்.போஸ் வலியுறுத்துகிறார். கொல்லப்பட முடியாத எஸ்.போசின் வரலாறு அவரது இந்தக் குரலைத் திரும்பத் திரும்ப மேலெழச் செய்தபடியேயிருக்கும்.