வண்ண நிலவனின் கடல் புரத்தில் வாசித்தேன். நீண்டநாட்களாகத் தேடிக்கொண்டிருந்த நாவல்.வாசித்து முடித்தபின்னும் கடல் புரம் அலைகளைப்போல் இரைந்துகொண்டிருக்கிறது இன்னமும். அதன் சொற்களாலும் அதனுள் நடமாடுகிற மனிதர்களாலும். தான் நேசிக்கிற ஒன்றைத் தவிர்க்க,அல்லது பிரிய நிர்ப்பந்திக்கப்படுகிற மனிதர்களின் துயரம் அந்த நாவலில் குடிகொண்டிருக்கிறது.
அந்த நாவலில் வருகிற குருஸ் ஒரு குறியீடு. எல்லாவற்றையும் நேசிக்கிற தனது பாரம்பரியத்தை, தனது நிலத்தை, கடலை,காற்றை பிரிய மறுக்கிற அவற்றின் மீது தமது எல்லாப்பிரியங்களையும் கொட்டிவைத்திருக்கிற எளியமனிதர்களின் உருவம் குரூஸ். கடக்கவியலாமல் திணறுகிற ஒரு காலம் அல்லது விசயம் எல்லாருடைய வாழ்விலும் வருகிறது. சிலர் அதனை வலியோடு கடந்துவிடுகிறார்கள் சிலர் அந்தவலியோடு தேங்கிவிடுகிறார்கள்.வண்ணநிலவனின் கடல்புரத்தில் தேங்கியவர்களும் இருக்கிறார்கள் கடந்தவர்களும் இருக்கிறார்கள்.
வண்ணநிலவன் எந்த மிகுபுனைவுமற்று, வர்ணணைகள் அற்று கடலை அதன் அலையோசையோடும், கரையோரத்தை அதன் நிர்வாணத்தோடும் அதன் மனிதர்களை அவர்களின் எளிய சொற்களோடும் உலவவிட்டிருக்கிறார். தன் உயிர் வீழ்கிற வரைக்கும் கடலில் வலைவீசத்திராணியிருக்கிறதெனச் சொல்லிக்கொண்டிருக்கும் தைரியமிக்க குரூஸ் தான் நேசித்த கடலையையும் தன் வீட்டையும் வள்ளத்தையம் பிரியநேர்கிறபோது அல்லது அவற்றின் மீது தனக்கெந்த உரிமையுமில்லாமலாகிறபோது நொடிந்து வீழ்கிற அந்த மீனவனின் துயரம் என்னைப் பீடிக்கிறது. தன் பிரியமான காதலன் வேறொருத்தியைக் கைப்பிடித்த பின்னாலும் துவண்டுபோகாத பிலோமிக்குட்டியின் தைரியம் எனக்குள் நிலைகொள்கிறது. வண்ணநிலவன் எனக்குள் அதை அந்தத் துயரத்தை,தைரியத்தை அல்லது அந்த மனிதர்களின் உலகை அவர்களின் அற்புதமான சொற்களிலேயே கொண்டுவருகிறார்.
பிலோமினா எல்லாவற்றையும் கடந்து வருகிறாள் நிறைவேறாத தன் காதலையும் கனவுகளையும் கடந்து எதார்த்தத்தை எதிர்கொள்ளத் திராணியிருப்பவள். கடல் புரத்தின் ஆண்களை விட அங்கிருக்கும் பெண்கள் தைரியசாலிகளாக இருக்கிறார்கள். ஆண்கள் துயரகளைக் கடக்கவியாலாமல் மரித்தும் பைத்தியமாகியும் போகிறார்கள். பெண்கள் எல்லாவற்றையும் விழுங்கிக்கொண்டிருக்கிறார்கள். வண்ணநிலவனின் கடல புரத்தில் மட்டுமல்ல எல்லாப் புரங்களிலும் பெண்கள் அப்படித்தான் எல்லாவற்றையும் இலகுவில் கடந்து போக அவர்களால் முடிகிறது.
கரையோர மனிதர்களின் அழகான இருதயத்தை அதனுள்ளிருக்கும் கடல் மீதான ஆசையை, அவர்களுக்குள் ஒழிந்திருக்கும் குரூரத்தை அந்தக் குரூரத்தை ஓரங்கட்டும் பேரன்பை இப்படி எல்லா மனிதர்களினதும் இயலுமைகளினதும் இயலாமைகளினதும் அல்லது அகமும் பறமுமான வாழ்வின் இரு பக்கங்களையும் வண்ணநிலவனின் சொற்கள் நம்முன் விரிக்கின்றன. இந்த மனிதர்களும் அவர்களுடைய மனங்களின் உணர்வுகளும் கடல்புரத்தில் மட்டுமல்ல மனிதர்கள் வாழும் எல்லாப்புரங்களிலும் பிரதியிடக்கூடியவை. ஏனெனில் வண்ணநிலவன் கட்டியெழுப்பும் பாத்திரங்களும் அவற்றின் மன எழுச்சியும் இயல்பானவை எனக்குள்ளுள் மறுபடி மறுபடி மேலெழுந்து வருபவை அலைகளைப்போல..
கடல்புரத்தில் பற்றி சா.கந்தசாமி இப்படிச் சொல்கிறார்..
கடல்புரத்தில், பரபரப்பூட்டும் சம்பவங்களும் கிளர்ச்சி தரும் காட்சிகளும் கொண்ட நாவல் அல்ல. ஆனால், இது ஒரு நல்ல நாவல். கலைத்தன்மை நிறைந்த உயர்வான நாவல். படித்தவர்கள் மனத்தில் பல காலத்துக்கு அழுத்தமாக நிற்கக்கூடியது. இதன் கதாபாத்திரங்கள் இயல்பாக வளர்ந்து, இயல்பாகப் பேசி, இயல்பாக நடந்து, இயல்பாகவே நம் மனத்தில் இடம் பிடித்துக் கொள்கிறார்கள்.
ஒரு தேர்ந்த சிறுகதையைப்போல போராட்டத்துடன் தொடங்குகிறது நாவல். அனாதி காலமாகத் தந்தைகளுக்கும் மகன்களுக்கும் இடையில் நிலவிவரும் நெருடல், உள்ளார்ந்த இணக்கமின்மை என்ற இழைகளோடு மின்னல் வெட்டு போன்ற சம்பவத்துடன் முழு வீச்சோடு ஆரம்பமாகிறது. ஆனால், போகப் போக நெருடல்களும் கோபங்களும் அமிழ்ந்துபோக, கடல்புரத்து மக்களின் ஜீவ சரித்திரம் – குரூஸ் மிக்கேல், அவன் மனைவி மரியம்மை, மகன் செபஸ்தி, இளைய மகள் பிலோமி, பணியாள் சிலுவை, பக்கத்து வீட்டுக்கார ஐசக், பிலோமியின் சிநேகிதி ரஞ்சி, பிலோமிக்குப் பிரியமான சாமிதாஸ், மரியம்மை-யின் பிரிய வாத்தி, எல்லோருக்கும் பிரியமான பவுலுப் பாட்டா இவர்களின் கதையாகி மனிதர்களின் இதயங்களில் இயல்பாகக் குடிகொண்டுள்ள மூர்க்கக்குணம் வெறித்தன்மையோடு, ஆனால் களங்கமின்றி விவரிக்கப்படுகிறது.
வாழ்க்கையின் முரண்பாடான அம்சங்களை மிகவும் யதார்த்தமாகவும் தீவிரமாக எதிர்க்க வேண்டிய அம்சங்களை மென்மையாகவும் சாத்தியமே என ஏற்றுக்கொள்ளும்படி சொல்லுகிறது இந்த நாவல். விஷயத்தை-விட, சொல்லும் முறையில் அபூர்வமான கலைத்தன்மை பூரணம் பெறுகிறது. இந்த நாவலின் சிறப்பு அம்சமே இதன் பாஷைதான். மென்மையும் குளுமையும் உயிர்த் துடிப்பும் கொண்ட பாஷை. எதையும் சாதிக்கவல்ல பாஷை, இந்த நாவலையும் ஸ்தாபிக்கிறது.
இன்னும் பல காலத்துக்குக் கடல்புரத்தில் சிறந்த நாவலாகவே இருக்கும்.
நன்றி அகிலன் பகிர்தலுக்கு.. நிச்சயம் வாங்கி படித்துவிட்டு சொல்கிறேன்..
good writing agilan 🙂