Skip to content
த.அகிலன்

கனவும், வாழ்வும் பின் என் சொற்களும்…

த.அகிலன்

கனவும், வாழ்வும் பின் என் சொற்களும்…

யாழிசை-இயக்குத்துக்போன பெட்டை ஒருத்தியின் கதை

த.அகிலன், June 9, 2021April 13, 2024
இந்த நாவலைப் பற்றிய உரையாடலைத் தொடங்குவதற்கு முன்பாக இந்த நாவலின் நிகழ் களத்தின் பிண்ணணியை முன்வைத்து சில வற்றைச் சொல்லிப் பின்னர் இந்நாவல் பற்றிய எனது எண்ணங்களைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். இந்த நாவலின் கதாநாயகி ஒரு முன்னாள் போராளியாக இருப்பதனால் இதனைச் செய்யவேண்டியிருக்கின்றது.
முன்னாள் போராளிகளை எங்களுடைய சமூகம் 2009 ற்குப்பிறகு எவ்வாறு அணுகுகிறது என்பது வேதனையோடும் வெட்கத்தோடும் பேசப்படவேண்டிய பொருளாக இருக்கிறது. எந்தச் சனங்களுக்காக அவர்கள் போராடினார்களோ, யாருக்காக அவர்களுடைய இளமையை ஆகுதியாக்கினார்களோ அந்தச் சமூகத்தினாலேயே அவர்கள் தள்ளி வைக்கப்படுகிற, அவர்களாலேயே தீண்டத்தகாதவர்களாகக் கருதப்படுகின்ற மனிதர்களாகவே முன்னாள் போராளிகள் வாழ்கிறார்கள். (எங்கேனும் இருக்கிற விதி விலக்குகள் இதில் சேர்த்தியாகாது.)
வெளிப்படையாகப் பார்க்கின்றபோது முன்னாள் போராளிகளோடு தொடர்பு கொண்டிருந்தால் இராணுவ,மற்றும் சிங்கள ஆட்சியாளர்களின் அச்சுறுத்தலுக்கு ஆளாகலாம் என்பதால் வெகுசன வெளி அவர்களோடான தொடர்பை துண்டித்துக்கொள்ள விரும்புவது நியாயமாகத் தோன்றலாம். ஆனால் தமக்காக போராடியவர்களை எந்தக் குற்றவுணர்வுமின்றிச் இந்தச் சமூகம் கைவிட்டுத் தன்பாட்டுக்கு இயங்குவதென்பது போராட்டத்திற்கான மக்களின் பங்களிப்பென்ன? உரிமை மீட்புக்கான மக்கள் ஆதரவின் உறுதிநிலை என்ன? என்பன போன்ற கேள்விகளை எழுப்புகிறது. உரிமைப் போரின் சுமைகளை மீண்டும் மீண்டும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையினர் மீதே சுமத்திக் தான் முன்செல்ல நினைக்கிற சமூகத்தின் சுயநலவாதக் கோரமுகம்தான் இங்கே வெளிப்படை உண்மையாகப் பல்லிளிக்கிறது. 2009ற்கு முன்னர் யாரையெல்லாம் இந்தச் சமூகம் வெற்றிவீரர்களாகக் கருதியதோ,பெருமைமிகு அடையாளமாகக் கருதியதோ அவர்கள் இன்று கூனிக்குறுகி எதிர்காலத்திற்கான வழியறியாமல் தடுமாறி நிற்பதை கண்டுகொள்ளாமல் இருப்பது வெட்கம் தான்.
என்னுடைய அவதானத்தில் ஈழத்தமிழர்கள் குறித்த ஒரு விடயத்தில் கூட்டாக ஒரு நிலைப்பாட்டையும், அதே விடயம் குறித்து தனி ஆளாக அதற்கு நேர்மாறான நிலைப்பாட்டையும் எடுப்பவர்களாக இருக்கிறோம். உதாரணமாக இலங்கையில் மக்கள் வாழும் பிரதேசத்தில் இராணுவப்பிரசன்னம் தொடர்பாக கூட்டாக எதிர்ப்புக்குரலை எழுப்பியபடியிருக்கும் நாங்கள் தனிப்பட குடும்பத்தோடு இலங்கைக்கு செல்கையில் கடற்கரையில் இராணுவத்தினரால் நிர்வகிக்கப்படும் உல்லாச விடுதியில் தங்குவதை ஒரு குற்றமாகக் கருதுவதில்லை. மக்கள் குடியிருப்புகளை ஆக்கிரமித்திருப்பது தொடர்பாக ஊர்வலம் போகின்ற நாங்கள். இராணுவம் குடியிருக்கிற வீடுகளுக்கு அல்லது காணிகளுக்கு வாடகை வாங்க யோசிப்பதில்லை. இப்படி கூட்டாக ஒரு மனநிலையும் தனித்தனியாக அதற்கு நேர்மாறான முடிவை எடுப்பவர்களுமாகவே இத் தமிழ்ச்சமூகம் இயங்கிவருகிறது. இதே ஒன்றுக்கொன்று முரணான இரட்டை மனநிலைதான் முன்னாள் போராளிகள் விடயத்திலும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. கூட்டாக போராட்டத்தினை ஆதரிப்பவர்களாகவும், உரிமை விரும்பிகளாகவும் பாவனை செய்கிற நாங்கள் மறுவழமாக தனிப்பட இரகசியமாக இவை எல்லாவற்றிலிருந்தும் எம்மை துண்டித்துக்கொள்ளவே விரும்புகிறோம். இன்னும் உறைப்பாகச் சொன்னால் சுதந்திரம் நல்லது, போராட்டம் அவசியம் நடக்கவேண்டும் அதைப் பக்கத்துவீட்டுக்காரன் செய்தால் மிகவும் நல்லது. அந்தப் பக்கத்து வீட்டுக்காரன் என்னைப் பாத்து அண்ணை நீங்களும் போராட வாங்கோ எனச் சொல்லாமலிருந்தால் இன்னும் நல்லது. சரி ஒரு வேளை போராட்டம் வெண்டுதெண்டால் பக்கத்து வீட்டுக்காரன் மட்டுமெல்லோ பேரெடுத்துப் போடுவான். அதுக்கும் எங்களிட்ட ஒரு ஐடியா இருக்கு. அதுதான் போராளிகளிற்குத் தோசை சுட்டுக் கொடுப்பது. இங்கே நான் தோசை என்பது தோசையை மட்டும் அல்ல. பிறகு சந்தியில் நின்று நாங்கள் சொல்லுவோம் அந்த வீரம், வெற்றி எல்லாவற்றுக்குமான காரணம் எங்களுடைய தோசைதான். எங்களுடைய தோசை மட்டும் இல்லையென்றால் இந்த வெற்றி சாத்தியமேயில்லை. இன்றைக்கு இதுதான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தோசை சுட்டுக் கொடுத்தவர்கள் பிரமுகர்களாக, அரசியலைத் தீர்மானிப்பவர்களாக மாறிநிற்க. மெய்யான போராளிகளோ வாழும் வழியறியாது விக்கித்து நிற்கிறார்கள்.
இதிலும் முன்னாள் பெண்போராளிகளின் நிலைமை இன்னும் மோசமானது. போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களுக்கான புறக்கணிப்பும் கூடுதலாக பெண்களுக்கான இந்தச்சமூகத்தின் அழுத்தங்களும் சேர்ந்து கொள்ள அவர்கள் இடர்பாடுகளிலிருந்து வெளியேற மிகவும் சிரமப்படுகிறார்கள்.
விடுதலைப்புலிகள் இயக்கம் இருந்த காலங்களிலேயே ‘இயக்கத்துக்குப் போன பெட்டை’ என்பது சமூகத்தில் கொஞ்சம் அழுத்தமாக சொல்லப்படும் சொல்லாகவே இருந்தது. நாலும் தெரிந்த பெண் குடும்பத்துக்கு ஆகாள் என்பதுதான் அந்த அழுத்தத்தின் உள்ளோடும் இழையாக இருந்தது. ஆனாலும் இப்போதைப்போல அவர்கள் சமூகத்தால் விலக்கிவைக்கப்பட்டவர்களாக இருந்ததில்லை. ஆனால் இயக்கத்திற்குப் போன பெட்டைகளைத் தங்களுடைய வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுத்துக்கொள்ள அப்போதும் பெரும்பாலானோருக்குத் தயக்கங்கள் இருந்தன. உண்மையில் இயக்கத்துக்குப் போன பெண்கள் வீடு திரும்பியபோது பெரும் ஆளுமை மிக்கவர்களாக, தலைமைத்துவப் பண்புகள் நிறைந்தவர்களாக, சிக்கல்களில் உடனடித்தீர்வுகளை எளிதாகக் கண்டடைபவர்களாக மாற்றமடைந்தே திரும்பிவந்தார்கள். எனக்குத் தெரிந்து மிகவும் வறுமைநிலையிலிருந்த குடும்பங்கள் பல இயக்கத்தில் இருந்து திரும்பி வந்த பெண்களின் தலைமைத்துவத்தில் தங்கள் வறுமையில் இருந்து மீண்டு வந்திருக்கின்றன. குடிகாரத் தகப்பன்கள், பொறுப்பற்ற அண்ணன்கள், குழப்படித் தம்பிகள் வீடு திரும்பிய மகள்களினால், அக்காக்களால், தங்கைகளால் திருத்தியெடுக்கப்பட்டிருக்கிறார்கள். உண்மையில் இயக்கம் தம்முடன் இணைந்த பெண்களை ஆயுதங்களை இயக்குபவர்களாக மட்டும் உருவாக்காமல் சமூகப்பிரக்ஞை உள்ள ஆளுமைகளாகவே உருவாக்கி வளர்த்தது. ஆனால் சமூகம் என்னவோ தன்பாட்டுக்கு தன் ஊறிப்போன குணங்களோடேயே தான் தொடர்ந்தும் இருந்தது.
வன்னி விடுதலைப் புலிகளின் ஆட்சியில் இருந்தபோதே இயக்கத்தில் இருந்து வீடுதிரும்பிய பெண்ணின் திருமணத்தில் ‘இயக்கத்தில் இருந்தவ’ என்பது கிட்டத்தட்ட சாதகத்தில் செவ்வாய்க்குற்றம் இருப்பது போல… மாப்பிள்ளை தெறிச்சு ஓடுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.ஏன் ஆண் போராளிகள் பெண்போராளிகளைத் திருமணம் செய்து கொண்ட விகிதாச்சாரம் என்பது கூட ஆண் போராளிகள் வெளியில் வசித்த பெண்களைத் திருமணம் செய்த விகிதத்துடன் ஒப்பிட்டால் மிகவும் குறைவானதே. என்னுடைய போராளி நண்பர் ஒருவர் கொஞ்சம் வயசானவர்- அவர் சொல்லுவார் ஒவ்வொரு தடைவையும் இயக்கப் பெடியங்கள் வெளிப்பிள்ளையளை காதலிப்பதாகச் சொல்லி திருமணத்திற்கான அனுமதி கேட்கும் போதும் பிரபாகரன் சொல்லுவாராம் ‘டேய் எனக்கும் கொஞ்சப் பொம்பிளைப் பிள்ளையள் இருக்கு’ என்று. இது ஒரு வதந்தியாகக் கூட இருக்கலாம். ஆனால் ஆண்மையச் சிந்தனை என்பது அப்போதும் இயக்கத்தில் இருந்த பெண்களை நிராகரித்தே வந்துள்ளது என்பதற்கான பதிவாகவே இதனை இங்கே முன்வைக்கிறேன். ஆனால் அப்போதாவது அந்நிராகரிப்பில் ஒரு நேர்மறையான அம்சம் இருந்தது. நிராகரிக்கப்படும் அப்பெண் தன்னைத் தானே சுயமதிப்பீடு செய்து கொள்கையில் அதைப் பெருமையாகக் கருதிக்கொள்ள வாய்ப்பிருந்தது. நீ போனாப் போடா எனத் தூக்கியெறிந்து கடக்கும் வெளியை அக்காலம் கொண்டிருந்தது. திருமணம் மட்டுமே அன்று அவர்களது தேர்வாக இருக்கவில்லை. அந்நிராகரிப்பென்பது அவளை ஒருபோதும் அவமானத்தில் அமிழ்த்திவிடாத காலமாய் அது இருந்தது.
ஆனால் 2009 ற்குப் பிறகான காலம் எனப்படுவது அப்படியல்ல. இந்தச் சமூகம் முன்னாள் பெண்போராளிகள் மீது அள்ளியெறியும் அவதூறுகள் கொஞ்ச நஞ்சமல்ல. 2009 முகாம்களில் சனங்கள் அடைக்கப்பட்டிருந்த போது  அம்முகாம்களுக்கு வெளியே இந்தச் சமூகம் அங்கிருந்த பெண்களைத் தம்மிஸ்டத்திற்கு வன்புணர்வு செய்து கொண்டிருந்தது. இன்னும் மேலே போய் ‘வன்னியில் இனிமேல் கலியாணத்துக்குப் பெண்ணெடுக்கக் கூடாது’ என்கிற அளவில் அது வக்கிரத்தை கொட்டியது. தம்முடைய ஆளுமையால் நிராகரிகப்பட்ட காலம் போய் அவதூறுகளால் நிராகரிக்கப்படும் அவலம் அப்பெண்களுக்கு வந்து சேர்ந்தது.
நியாயம் கோருதல், எதிரியைத் தண்டித்தல் எனும் பெயரில் இசைப்பிரியாவின் உடலை எதிரியை விடவும் மோசமாக தமிழ்ச் சமூகமே தொடர்ந்தும் வன்புணர்ந்து கொண்டிருந்தது. இன்றை வரைக்கும் அதைத் தொடரவும் செய்கிறது. அநேகர் அதிலென்ன தவறு இருக்கிறது என்கிற நிலைப்பாட்டில் தான் இன்று வரை இருக்கின்றனர். அந்தப் படம் அவர்களைப் பொறுத்தவரை ஒரு அதிஸ்டலாபச் சீட்டு அதைக் காட்டினால் உலகம் இரக்கப்படும், அந்தக் கழிவிரக்கத்தைக் கொண்டு நாங்கள் எங்கள் தரப்பு நியாயத்தை வாங்கிவிடலாம் என்கிற பகல்கனவில் இசைப்பிரியா என்கிற போராளியின் உடலை அவளுடைய சொந்தச் சமூகமே கூவிக் கூவி ஏலமிட்டது.
அண்மையில் கூட தமிழினி தொடர்பில் ஒரு கதை எழுதப்பட்டிருந்து. எனக்கு அக்கதை தொடர்பில் அதிர்ச்சிகள் ஏதுமில்லை. ஏனெனில் இதுதான் இச்சமூகத்தின் மனநிலை. சமாதானத்தின் பெயரால் சிங்கள அரசுகளால் செய்யப்பட்ட போருக்கும் விடுதலையினதும் நீதி கோருதலினதும் பெயரால் செய்யப்படும் இத்தகைய போராட்டங்களுக்கும் பெரிய வேறுபாடில்லை. (போராட்டம் எனச் சொல்லுவது கதை எழுதுவதைத்தான், பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடுவதே போராட்டத்தின் ஒருபகுதியாகிவிட்ட காலத்திலல்லவா நாமிருக்கிறோம்)  தமிழினி எனப்படுகிற பிரபலமான இயக்கத்தின் முக்கியப் பொறுப்பாளரே அவரது ஆளுமைகள் எல்லாம் உதிர்ந்து வெறும் எய்ட்ஸ் நங்கியாகத்தான் இந்தச் சமூகத்தால் பார்க்கப்படுவாரென்றால்… சாதாரணமான வெளியே அறியப்படாமல் இயக்கத்திலிருந்து திரும்பி வந்தவருக்கிருக்கும் சவால்கள் எப்படிப்பட்டவையாயிருக்கும்.  “அவர்கள் கண்டும் காண்பதில்லை கேட்டும் புரிந்து கொள்வதில்லை”  என்ற பைபிள் வாசகம் எனக்கு நினைவுக்கு வருகிறது. இதுதான் நான் வாழும் சமூகத்தின் முன்னாள் போராளிகள் மீதான மனநிலை. இந்த மனநிலையுள்ள சமூகத்திற்கு, இந்த சமூகத்திற்கு வெளியிலிருந்து முன்னாள் போராளியொருத்தியின் வாழ்வைக் களமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது ஆரூரனின் யாழிசை. நான் இங்கே ஆரூரன் சமூகத்திற்கு வெளியில் இருக்கிறார் என்றெழுதுவது சிறை சமூகத்தினின்றும் துண்டிக்கப்பட்ட அமைப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றது என்பதனாலேயே.
எனக்கு சிவ.ஆருரனைத் தனிப்படத் தெரியாது. அரசியல் காரணங்களுக்காக பல ஆண்டுகளாக சிறையில் இருப்பவருடைய நாவல் எனும்போது ஒரு எதிர்பார்ப்பு எழுந்துவிடுகிறது. அதுவும் முன்னாள் போராளியைப் பற்றியது எனும்போது அவ்வெதிர்பார்ப்பு எகிறுகிறது. உண்மையில் நாங்கள் அரசியல் பிராணிகளாக மாறிவிட்டோம். எல்லாவற்றுக்குள்ளும் அரசியலைத் தேடும் வழக்கம் இச்சையின்றிய செயலாகவே நிகழ்த்தொடங்கிவிட்டது.அல்லது சரியாகச் சொல்வதானால் பரபரப்புக்குத் தீனிபோடும் விடயமொன்றை மனம் அவாவவே செய்கிறது. ஆனால் இந்நாவல் அப்படியெதுவுமில்லாமல் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் மாறாக அமைதியாக மெதுவாக ஒரு இலகுவான வாசிப்புக்குள் உங்களை ஆழ்த்தும் நாவலாக இருக்கிறது.
இந்தப் புத்தகத்தை படித்துக்கொண்டிருக்கும்போது நினைத்தேன் ஆருரன் மிகவும் நல்லவராக இருக்கவேண்டும் என்று. ஏனெனில் அவருடைய நாவலில் ஒரு கெட்டகுணம் கொண்ட பாத்திரத்தைக்கூட என்னால் அடையாளப்படுத்த முடியவில்லை அநியாயத்திற்கு எல்லாப் பாத்திரங்களுமே நல்லவர்களாக இருக்கிறார்கள். யாழ்ப்பாணத்திலிருந்து பாதிக்கப்பட்ட பிரதேசத்திற்கு தன் விருப்பத்திலேயே வேலை செய்ய மாறன் வருகிறார். முன்னாள் போராளியை ஒரு குடும்பம் இயல்பாகவே மருமகளாக ஏற்றுக்கொள்கிறது. கதாநாயகியான மாதவியோ இயல்பிலேயே எல்லாருக்கும் உதவும் குணம் கொண்டவளாக இருக்கிறாள். இந்நாவலில் கதாநாயகியின் அத்தான் ஆரம்பத்தில் வில்லன் மாதிரி இருந்தாலும் கடைசியில் அவரும் ரொம்ப நல்லவராக மாறிவிடுகிறார். அதையெல்லாம் விடுங்கள் ஒரு விடுப்புக் கதைக்கிற பெண்பாத்திரமொன்றிருக்கிறது. அதுகூட தான் சொல்லும் கதைகளுக்கு கை கால் வைத்துச் சொல்வதில்லை கேட்டதை அப்படியே கூட்டிக் குறைக்காமல் சொல்லும் இயல்புகொண்டதாய் இருக்கிறது.
இவ்வகையான ஆருரனின் பாத்திரங்களை வைத்து நான் ஆரூரன் பற்றிய சித்திரத்தை மனதுக்குள் வரைகிறேன். அவர் நல்லவற்றை மட்டுமே பார்க்கிற மனிதராக இருக்கவேண்டும். அல்லது சிறையில் இருக்கிறவராக சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஒரு மனிதராக இச்சமூகம் எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்கிற தனது வேட்கையை  தனது பாத்திரங்களினூடாகப் படைத்திருக்கிறார் என்ற எடுகோளுடன் நான் நாவலைப் படிக்கவேண்டியிருக்கிறது. ஆனாலும் நான்கு சுவர்களுக்குள் அடைக்கப்பட்டிருக்கிறநிலையிலும் இத்தனை நேர்மறை எண்ணங்களைத் தாங்கி அவர் பாத்திரங்களை உருவாக்கியிருப்பது குறித்து என் மனதுக்கு உவகை தருகிறது. அவரது நம்பிக்கை தேய்ந்து போகக் கூடாது.
ஆனால் அவருக்குச் திருப்பிச் சொல்ல துயரமான யதார்த்தம் ஒன்று மட்டுமே என்னிடம் உண்டு. அது சமூகம் நீங்கள் எதிர்பார்ப்பதைப்போல இல்லை…
இந்த நாவல் பின்தங்கிய பிரதேசங்களில் வேலைசெய்யத் தயங்கும் தமிழர்களைப் பற்றிப் பேசுகிறது. அதுவே இந்நாவலின் முக்கியமான அம்சம் என்று நான் கருதுகிறேன்.  வன்னிப் பாடசாலைகளில் கல்வி கற்பிக்கத் தயங்குகிற வெளிமாவட்ட ஆசிரியர்களைப் பற்றியது. இதைப் பிரதேசவாதத்தை தூண்டுகிற ஒரு கருத்தாக பலரும் கருதக்கூடும்.. ஆனாலும் யாழ்ப்பாணப் பட்டதாரிகள் வன்னிக்குப் போகப் பின்னடிப்பதாலேயே அதிகளவான ஆசிரியர் பற்றாக்குறைகள் வன்னியில் நிலவுகின்றன. உண்மையில் இந்நாவலில் திருவையாறு கஸ்டப்பிரதேசப் பாடசாலையாகச் சொல்லப்படுகிறது. அது உண்மையல்ல.. திருவையாறு கொஞ்சம் பசையான விவசாயிகள் வாழும் கிராமமாகவே இருந்தது. கிளிநொச்சியின் அதிகம் ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் சித்திகளை எய்துகிற பாடசாலையாக அது இருந்திருக்கிறது. திருவையாறு, கிளிநொச்சி நகரை அண்டிய கிராமம் அங்கே செல்வதைக்கூட யாழ்ப்பாண ஆசிரியர்கள் விரும்பாமலிருக்கிறார்கள். நகரை அண்டிய பாடசாலைக்கே இது நிலையென்றால் பூநகரி, வலைப்பாடு, முழங்காவில், புதுமுறிப்பு, அக்கராயன், வன்னேரிக்குளம் போன்ற உள்ளக கிராமங்களின் நிலை என்ன என்பதை எண்ணிப்பார்க்க இந்நாவல் என்னை உந்துகிறது.
அண்மை ஆண்டுகளில் இலங்கைக்கு சென்றவர்கள் வன்னியின் மாவட்ட வைத்தியசாலைகளில் சிங்கள மருத்துவர்களும், தாதிகளும் வேலை செய்வதை அவதானித்திருப்பீர்கள். நாங்கள் அதை அடக்குமுறை வடிவமாகப் பார்த்து அடடா அரசுக்கு எதிரான ஒரு ஸ்டேட்மெண்ட் கிடைத்து விட்டது என்று மகிழலாம். ஆனால் உண்மை வேறுவிதமானது. என்னுடைய மருத்துவ நண்பரின் கருத்துப்படி தமிழ் மருத்துவர்கள் யாரும் ஊரில் வேலை செய்ய விரும்புவதில்லை அவர்கள் அவுஸ்ரேலியாவுக்கு எப்படியாவது போய்விடுகிறார்கள். பொறியியலாளர்களும் அப்படியேதான். அதனாலேயே அரசு பணியிடங்களுக்கு சிங்களவர்களை இட்டு நிரப்புகிறது. காலப்போக்கில் என்ன நிகழும். சிங்கள ஊழியர்கள் தம் வாழிடங்களை பணியிடங்களுக்கு அருகாமையாக மாற்றுவார்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அது ஒரு சிங்கள குடியிருப்பாக மாற்றமடையும். நாங்கள் இனவாதம் என்று சத்தமிடுவோம் (அதற்காக அரசு திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களைச் செய்யவில்லை என்று நான் சொல்லவரவில்லை). சராசரியாக ஐம்பது என்றொரு கணக்கு வைத்துப் பார்த்தாலும் ஆண்டுக்கு 50 தமிழ் மருத்துவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இருந்து வெளிவருகிறார்கள்.  அப்படியிருந்தும் எப்படி தமிழ் மருத்துவர்களுக்கு பற்றாக்குறை தமிழ்ப்பகுதிகளில் உருவாகிறது. இதற்கு விடையை நாங்கள் தமிழர்களிடம் தேடவேண்டுமா.. சிங்கள அரசாங்கத்திடம் கேட்கவேண்டுமா? இத்தனைக்கும் இலங்கையில் கல்வி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. அப்படியானால் இந்தப்பிரச்சினையில் தீர்வுகாணவேண்டியது யார்?
இந்தக்காரணங்களுக்காகவே ஆருரன் தொட்டுச்செல்கிற பின்தங்கிய பிரதேசத்தில் வேலைசெய்தல் என்கிற விடயத்தை நான் முக்கியமான ஒன்றாக கருதுகிறேன். படித்த தமிழர்கள் சமூகத்திற்குச் சேவை செய்யவேண்டும் என்கிற தன் விருப்பின் பேரிலேயே ஆரூரன் மாறன் பாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார் என்று தோன்றுகிறது.
இந்த இடத்தில் ரஸ்சியக் கவிஞர் – யெங்கனி யெவ்டுன்கோவினுடைய கவிதையொன்று நினைவுக்கு வருகிறது.
சிறுவர்களிடம் பொய்க்கதைகள்
சொல்லாதீர்கள்! தவறு.
பொய்யை உண்மையென்று
நிரூபிப்பது அதைவிடத் தவறு.
வானில் சொர்க்கத்தில்
கடவுள் இருக்கிறார் என்றும்
உலகெல்லாம் இன்பத்தில் மிதக்கிறது
என்றும் கூறாதீர்கள்.
நீங்கள் சொல்வதை அவர்கள்
புரிந்து கொள்வார்கள்!
அவர்களே வருங்கால மக்கள்.
எண்ணற்ற நம் துன்பங்களை
அவர்களுக்கு உரையுங்கள்!
வாழ்க்கை எப்படியிருக்கவேண்டும்
என்பது மட்டுமல்லாமல் -அது
தற்போது எப்படியிருக்கிறது
என்பதையும் பார்க்கட்டும்.
தடைகள் இருக்கின்றன –
தகர்க்கச் சொல்லுங்கள்!
துயரங்களும் துன்பங்களும்
தோன்றக் கூடும்-
அழிக்கச் சொல்லுங்கள்
இன்பத்தின் விலையை அறியமுடியாதவர்கள்
இன்புறவே இயலாது!
தவறு என்று கண்டதை
மன்னிக்காதீர் – ஏனெனில்
அவைகள் திரும்பவும்
நேர்ந்து அதிகமாகக்கூடும்-பின்
நமது மாணவர்கள்
நாம் மன்னித்ததற்காக
நம்மை மன்னிக்க மாட்டார்கள்
இறுதியாக ஆரூரனுக்கு சாத்தியமாயின் அதிகாரத்தின் கண்களுக்குத் தப்பி அவரால் சிறைவாழ்வைப் பதிவுசெய்ய முடியுமாயின் அதுவே அவர் இச்சமூகத்திற்கு வழங்கப்போகும் பெறுமதிமிக்க இலக்கியமாக இருக்கும். யாழிசை அதற்கான ஒரு முதல் முயற்சியாக அமைந்திருக்கிறது.
புத்தகம் அரசியல் கைதிஈழத்து எழுத்தாளர்ஈழம்சிறைச்சாலைசிவ ஆருரன்நாவல்பெண் போராளிகள்யாழிசைவிடுதலைப்புலிகள்

Post navigation

Previous post
Next post

Related Posts

புத்தகம்

கடலுக்கு அழைத்துச் செல்லும் கதைகள்

July 10, 2012April 13, 2024

”எப்போதும் எனது வார்த்தைகளுக்கான இன்னோர் அர்த்தம் எதிராளியின் மனதில் ஒளிந்திருக்கிறது” என்பதில் எனக்கு நம்பிக்கையிருக்கிறது.  இதற்குப்பின்னால் வருகிற என்னுடைய எல்லா வார்த்தைகளும் முடிந்த முடிவுகளோ மாற்றமுடியாத தீர்மானங்களோ கிடையாது. முடிந்த முடிவுகளாக எதையும் அறிவித்துவிடமுடியாத அரசியலறிவும், இலக்கிய அறிவுமே எனக்கிருக்கிறது என்பதை ஆரம்பத்திலேயே சொல்லிக்கொள்கிறேன். புத்தகத்தின் சரி பிழைகளையோ, உள்ளமை, இல்லாமை பற்றியோ எனக்கெந்த விசனங்களும் கிடையாது.  மெலிஞ்சி முத்தனின் கதைகள் என்னை அழைத்துச் சென்ற பாதையை விபரிப்பதற்காகவே நான்…

Read More
புத்தகம்

அறஞ்செய விரும்பும் சொற்கள்

March 29, 2019April 13, 2024

நம் மனதிற்கினிய பெரும்பாலானவற்றை பிரியநேர்ந்த கதை நம் எல்லோரிடமும் உள்ளது. ஓர் அடிவளவு நாவலோ, சைக்கிளின் அரவத்துக்குத் துள்ளித்தாவுகின்ற ஜிம்மியோ, வானவில் கனவுகளால் எண்ணங்களை நிரப்புகிற குடைவெட்டுப்பாவாடையொன்றின் விளிம்புகளோ, மடிப்புக்கலையாத முழுக்கைச்சட்டையின் நேர்த்தியோ, குளத்தடியோ, கடைத்தெருவோ ஏதோ ஒன்று நம் எல்லோருடைய இதயத்திலும் பிரதியிடப்படமுடியாத நினைவுகளால் நிரம்பியிருக்கிறது. புலப்பெயர்வின் இரண்டாம் தலைமுறை தோன்றத் தொடங்கியிருக்கும் இந்தச் சூழலில் நனவிடை தோய்தலின் அவாவும் கனதியும் தேய்ந்தடங்கி வருகிறது அல்லது அது குறிப்பிட்ட…

Read More
புத்தகம்

கதைகளிற்கிடையே மிதந்து செல்லும் கப்பல்

November 19, 2019April 13, 2024

பயணம் என்பது ஒரு வகையில் விடுதலைதான். பயணம் நாம் அடைபட்டிருக்கும் அழகான கூண்டின் வாயிலைத் திறந்து வைத்துவிட்டு நாம் வெளியேறுவதற்காக காத்திருக்கிறது. நாம் அன்றாடம் பழகும் சூழலும் மனிதர்களும் நம்மை ஏதோ ஒரு வகையில் கட்டுப்படுத்துகிறார்கள். உண்மையில் நம் நெருக்கமான சுற்றத்திடம் நாம் அதிகம் உள்ளொடுங்கியும், தெரியாத சூழலில், புதிய நிலத்தில் நம்மை அதிகம் திறந்துகொள்ளவும் தயாராயிருக்கிறோம்.  பயணம் மட்டுமே பிரதிபலன் எதிர்பாராத அறிமுகமற்ற மனிதர்களின் பேரன்பை நாம் தரிசிக்கக்…

Read More

Comment

  1. த.அகிலன் says:
    April 13, 2024 at 1:15 am

    test

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • அனுபவம்
  • எண்ணங்கள்
  • ஒலிக்கவிதைகள்
  • ஒலிப்பதிவுகள்
  • கவிதைகள்
  • காதல் சிலுவையில்
  • குளிரடிக்கிற ஏரியா
  • சினிமா அனுபவம்
  • நேர்காணல்
  • புகைப்படம்
  • புத்தகம்
  • September 2024
  • June 2021
  • November 2019
  • March 2019
  • April 2018
  • May 2013
  • February 2013
  • December 2012
  • October 2012
  • July 2012
  • June 2012
  • November 2010
  • August 2010
  • June 2010
  • April 2010
  • March 2010
  • February 2010
  • September 2009
  • August 2009
  • July 2009
  • June 2009
  • February 2009
  • January 2009
  • December 2008
  • November 2008
  • October 2008
  • September 2008
  • August 2008
  • July 2008
  • June 2008
  • May 2008
  • April 2008
  • March 2008
  • January 2008
  • December 2007
  • October 2007
  • September 2007
  • August 2007
  • July 2007
  • June 2007
  • May 2007
  • December 2006
  • November 2006
  • October 2006
  • September 2006
  • August 2006
  • July 2006
  • June 2006
©2025 த.அகிலன் | WordPress Theme by SuperbThemes