வெறுமனே
எதிர்முனை இரையும்
என் கேள்விகளின் போது
நீ
எச்சிலை விழுங்குகிறாயா?
எதைப்பற்றியும்
சொல்லவியலாச்
சொற்களைச் சபித்தபடி
ஒன்றுக்கும் யோசிக்காதே
என்கிறாய்..
அவன் இறப்பதற்கு சில மாதங்கள் முன்னதான தொலைபேசி உரையாடலின் பின் எழுதிய வரிகள் அவை.
யார் முதல் பற்றிங்? யார் சைக்கிள் ஓடுவது? யார் எடுத்திருக்கிறது பெரிய வாழைப்பழம்? இப்படி எதற்கெடுத்தாலும் சண்டைபிடித்துக்கொண்டேயிருந்தோம் சண்டை பிடிக்கவே பிறந்தது போலச் சண்டை, ஜென்ம விரோதிகளைப் போல. அவன் ஒரு முறை மயங்கி விழுந்த போது நான் அழுத கண்ணீர் எங்கிருந்தது? என்பது எனக்கே தெரியாது. எனக்குள்ளே புகுந்திருந்தது என்னை அழவைத்தது எது?அம்மம்மா சொன்னாள் “தானாடா விட்டாலும் தசையாடும்” சகோதரனைச் சினேகிதனாக்கும் வித்தைகள் தெரிந்தவர்கள் பாக்கியவான்கள். சினேகிதனோ? இலலையோ? நமக்கே தெரியாமல் நமக்கிடையில் ஓடிக்கொண்டிருக்கும் பிரியத்தின் அலைவரிசை ஆனந்தமானது, அலாதியானது. தம்பியைப் பற்றிய நினைவுகள் மீழெழுந்தபடியிருக்கிறது இன்றைக்கு. ஒரு கடற்கரையில் அவன் பிணமாய் மிதந்திருக்கக் கூடும் எனும்போது .. மேலே எழுதவேண்டாம் என்று தோன்றுகிறது. என்னுடை தம்பி மாத்திரமா? நிறையத் தம்பிகள், நிறையத் தங்கைகள் ஆனாலும் என்ன என்னைப்போலச் சகோதரங்கள் தானும் ஆடித் தசையும் ஆடிக் களைத்துச் சோர்ந்து விழத்தான் முடிந்தது. காப்பாற்றமுடியவில்லையே எனும் குற்றவுணர்வு நிழலைப்போலக் கூடவருகிறது. எப்படிக் கடப்பது அதை? சாகும் வரைக்கும் கடக்கவே முடியாதென்றுதான் தோன்றுகிறது. சகோதரனை இழப்பதென்பது உடலின் பாகமொன்றை இழப்பதைப் போலென்று அடிக்கடி நினைக்கிறேன். போர் என் சகோதரனைத் தின்றது. புலிகளால் கட்டாயமாக அவன் பிடித்துச் செல்லப்பட்டபோது கோழையாய் நான் தப்பிச் சென்னைக்கோடினேன். அதைவிடவும் எனக்குச் செய்வதற்கேதுமிருந்ததா எனவும் எனக்குத் தெரியாது? ஆனால் இன்றைக்கு அவனை இழந்தபின்னரான குற்றவுணர்விலிருந்து தப்பியோடும் திசைகளற்றவனாய் தடுமாறி நிற்கிறேன்.
ஒரு தென் கொரியப் படம் The brotherhood of war கொரிய யுத்தம் பற்றியது. தென் கொரியாவில் கட்டாயமாகப் படைக்கு இழுத்துச் செல்லப்படுகிற தம்பியைச் சாவிலிருந்து காப்பாற்ற அவனைப் படிப்பித்து பெரியாளாக்கோணும் என்கிற தன் அம்மாவின் கனவை நிறைவேற்ற, அண்ணனும் அவனோடே போகிறான். அதன் பிறகு சாவின் தருணங்களிலிருந்தெல்லாம் எப்படித் தம்பியைக் காப்பாற்றுகிறான் என்கிற கதையினூடாக யுத்தகாலத்தை, யுத்தத்தை, தென்கொரியாவின் படைகளை, அதன் அரசை விமர்சிக்கிறது அந்தப்படம். என் தம்பியை மற்றும் என்னை முன்னிறுத்தி அந்தப்படம் பெரும் துயரையும் கொந்தளிப்பையும் எனக்குள் நிகழ்த்தியது. உலகம் நம்மிலிருந்தே தொடங்குகிறது. நமது துயரங்களைப் போலவோ அல்லது நமது ஆனந்தங்களைப்போலவோதான் உலகத்தின் கண்ணீரும் புன்னகையும் இருக்கமுடியும் என்கிற புரிதலிருந்துதானே தொடங்கமுடியும் மனிதநேயம்.
போர் எல்லா இடங்களிலும் ஒன்றையேதான் உற்பத்தி செய்கிறது. அதுதான் சாவு. சாவுகளால் ஊரை நிறைக்கிற போர், திரை முழுதும் விரிகிற இரத்தம், காதுகளை நிறைக்கிற வெடிச்சத்தம், ஆன்மாவை அரித்துத் தொலைக்கிற போரின் நெடில் அவை துயரமானவை. மனதை வெடித்துவிடச்செய்யும் பாரம் நிறைந்த துயரத்தை திரைகளின் சித்திரங்களில் அசையவைப்பதன் சாத்தியங்கள் சொற்பமே. ஆனாலும் இந்தப்படம் இதயத்தை உலுக்குகிறது. ஒரு துளி கண்ணீரை, உதடுகளின் விம்மலை, போர் உற்பத்தியாளர்களின் மீதான கசப்பை பார்வையாளனிடம் விட்டுச் செல்கிறது.
துவக்குகள் திணிக்கப்பட்ட சிறுவர்கள், துரோகிகளால் நிறையும் சவக்குழிகள், நிலம் விட்டுத் துரத்தப்படும் சனங்கள், கூட்டம் கூட்டமாக சரணடைந்த எதிரிப்படைகளைக் கொல்லும் போர்க்குற்றங்கள் என்று எல்லா யுத்தங்களும் ஒரே மாதிரியானவையே.
“நீ வீரமாகப் போரிட்டாயானால் ஒரு மெடலுக்குத் தகுதி பெற்றவனானாயானால் உன்னுடைய தம்பியை வீட்டுக்கனுப்பிவிடுகிறேன். முன்பு ஒரு தந்தை தன் மகனைக் காப்பாற்ற அவ்வாறுதான் செய்தார் என்று தளபதி அண்ணனிடம் கூறுகிறான். அந்தக்கணத்திலிருந்து தன் தம்பியைக் காப்பாற்றப் போகும் பதக்கத்துக்காக அதற்காகவே தன்னுடைய உயிரைப் பணயம் வைத்து ஒரு யுத்த வெறியனைப் போல வட கொரியர்களைக் கொல்லுவதே தன்னுடைய லட்சியம் என்பதைப்போல தமையன் போரிடுகிறான். தன்னுடைய தளபதியை திருப்திப் படுத்துவதற்காக தங்களுடைய பால்ய நண்பனான ஒரு சரணடைந்த வடகொரியப் படைச்சிறுவனை (அவனும் கட்டாயமாகப் படையில் சேர்க்கப்பட்டவனே) அவனை கொல்லவும் துணிகிறான் அண்ணன். இதனால் தம்பி அவனை வெறுக்கவும் செய்கிறான். தம்பி அண்ணன் வெறும் பதக்கத்துக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு இதனைச் செய்கிறான் என்று கோவித்துக் கொள்கிறான். உன்னுடைய இதயத்தை எங்கே தொலைத்துவிட்டாய் நீ மாறிவிட்டாய் என்று அண்ணனிடம் வெறுப்படைகிறான். அண்ணனைக் குற்றவுணர்வுக்குள்ளாக்க தன்னைத் தானே சில சமயங்களில் சில சமயங்களில் வருத்திக்கொள்ளவும் செய்கிறான் தம்பி.
ஒரு காட்சியில் தென் கொரியாவுக்கு உதவுவதற்காக வந்திருக்கிற அமெரிக்கப்படைகளிடம் இருந்து கொஞ்ச சொக்லேற்றுக்களை வாங்கிக் கொண்டு வருகிற அண்ணன் அதிலொன்றை தன் தம்பியிடம் கொடுக்கிறான். படத்தின் ஆரம்பத்தில் ஐஸ் பழம் விற்கிறவரிடம் இருந்து தன் தம்பிக்கு எவ்வளவு ஆசையாக ஒரு ஐஸ்பழத்தை வாங்கிக் கொடுப்பானோ அதைப்போல அந்த சொக்லேட் பாரையும் அவனிடம் கொடுப்பான். யுத்தகளத்திலும், சுற்றிலும் நிறைகிற மரணங்களின் மத்தியிலும், விரட்டுகிற கட்டளைகளிற்குள்ளும் தமையனிடம் மிதக்கிற சகோதர வாஞ்சை மனதைப் பிசைகிறது.
ஒருநாள் தென்கொரியப் படையினரே கம்யூனிஸ்டுகளின் ஊர்வலத்துக்கு போனாள் என்று அண்ணனின் காதலியை பிடித்துச் செல்வார்கள். தம்பி அவளைக் காப்பாற்றப் போவான். அண்ணின் காதலியை சுடுவதற்காக வரிசையில் நிறுத்தி வைத்திருப்பார்கள். தன் இராணுவமே இந்தப் படுகொலையைச் செய்வதை தம்பி தடுப்பான். அவர்கள் அவனை நீயும் துரோகியா என்று கேட்பார்கள். இதற்கிடையில் அண்ணனும் வந்து சேர்ந்து கொள்வான் இருவருமாய் அவளைக் காப்பாற்ற தங்கள் சொந்த இராணுவத்தின் புலனாய்வுத் துறையினரிடமே சண்டையிடுவார்கள். அவர்கள் தமையனின் மெடலைப் பார்த்ததும் அவனிடம் சொல்லுவார்கள் இவள் துரோகி கம்யூனிஸ்டுகளின் ஊர்வலத்துக்குப் போயிருக்கிறாள் என்பான். அவளோ நானும் உன் தாயும் என் சகோதரர்களும் பசியாயிருந்தோம் ஊர்வலத்தில் அவர்கள் சாப்பாடு கொடுத்தார்கள் அதனால் போனேன் மற்றும்படி நான் எதுவும் செய்யவில்லை நம்பு என்று சொல்லுவாள். அண்ணனாலும் தம்பியாலும் எதுவும் செய்யமுடியாமல் அவளை அவர்களின் கண்ணெதிரே சுட்டுக்குழியில் தள்ளுவார்கள். தங்களை எதிர்த்தான் என்பதால் தம்பியையும் அவர்கள் சரணடைந்த எதிரிப்படையினரோடு சேர்த்து அடைத்து வைத்து தீயிட்டு கொழுத்தியும் விடுவார்கள். தம்பியை தன் சொந்த நாட்டு இராணுவமே கொன்று விட்டதே என்று அண்ணன் ஆத்திரமுற்று எதிரிகளோடு சேர்வான்.
ஆனால் தம்பி யாரோலோ காப்பாற்றப்பட்டு உயிரோடு ஒரு வைத்தியசாலையில் இருப்பான். தான் இறந்து விட்டதாகக் கருதித்தான் அண்ணன் எதிரிகளோடு சேர்ந்து விட்டான் என்பதை ஒரு கட்டத்தில் தம்பி தெரிந்து கொள்வான். அவன் அண்ணனைத் தேடி யுத்தம் தீவிரமாக நடந்துகொண்டிருக்கும் போது எதிரிகளின் முன்ணணி காவலரணுக்கு செல்வான். அங்கே தமையனிடம் நான் உயிரோடிருக்கிறேன். வா அம்மா நமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறாள். நான் பள்ளிக்கூடம் போகவேண்டும் நீ என்னோடு வா என்று கேட்கிறான். நீ இப்போது போ.. நான் நிச்சமாக வருவேன் என்று சொல்லி அவனைத் தமையன் அனுப்பி வைத்துவிடுகிறான்.
எனக்கு பவா மச்சாளினதும் ஜெகா மச்சாளினதும் நினைவு வருகிறது. ஜெகா மச்சாள் ஒரு நாள் இயக்கத்துக்கு போய்ட்டாள் அன்றிலிருந்தே மாமா வீடு செத்த வீட்டைப்போல இருந்தது. மாமா ஒப்பாரி வைத்தே அழுதுகொண்டிருந்தார். மாமி பவி மச்சாளோட ஏதோ இயக்க பேசுக்கு முன்னால நிண்டு அழப்போட்டா. சில வேளைகளில் பொறுப்பாளர்களின் மனதைத் தாய்மாரின் கண்ணீர் கரைத்த காலம் அது. அந்த நேரத்தில மாமாட இன்னொரு மகளான பவா மச்சாளும் இயக்கத்துக்கு போயிட்டா.. மாமா வீடே கதி கலங்கிப்போனது. ஒரே நேரத்தில் இரண்டு பிள்ளைகள் இயக்கத்திற்குப் போவதென்பதைவிடத் துயரமானது ஒரு குடும்பத்திற்கு வேறெதுவும் இல்லை. இயக்கத்துக்கு போவதென்பது மரணத்தை நோக்கிப் போவது. மரணத்தை விரும்பி ஏற்பது. கத்தி எடுத்தவன் கத்தியாலயே சாவான் என்பது போல துவக்கெடுத்தவன் துவக்காலதான் சாவான் எண்டு மாமா அடிக்கடி சொல்லுவார். இரண்டு பேரும் இயக்கத்துக்கு போன பிறகு மாமா தாடி வளர்த்துக் கொண்டு திரிஞ்சார்.. அந்தத் தாடி பெரிதாகிக் கொண்டேயிருந்தது அவரது துயரம் போல. பார் மகளே பார்… போன்ற சிவாஜி படத்துச் சோகப்பாட்டுக்களை பெரிதாகப் போட்டுக் கேட்டுக்கொண்டிருந்தார் மாமா. ஒரே வீட்டில இரண்டு பேர் ஒரேயடியாய் இயக்கத்துக்கு போறதென்பது மிகவும் துயரமானதுதான் அது ஒரு பெரிய விசயமாகக் கிராமத்தில் பேசப்பட்டது. ஆனால் கொஞ்சக் காலம் கழித்து மாமாவின் இரண்டு பிள்ளைகளுமே இயக்கத்திலிருந்து ஓடி வந்தார்கள். ஒரு நாள் சாமம் இரண்டு மணிக்கு யாருக்கும் தெரியாமல் ஒராளை எங்கட வீட்டையும் ஒராளை பெரியம்மா வீட்டிலும் ஒளிச்சு வைத்திருக்கச் சொல்லி விட்டிட்டு போனார் மாமா. அதற்குப்பிறகுதான் பவா மச்சாள் சொன்னா நான் ஜெகாவை திரும்ப வீட்ட கூட்டிக்கொண்டு வாறதுக்காகத்தான் நான் இயக்கத்துக்கே போனான் என்று. ஆனால் அதெல்லாம் கட்டாயமாக ஆட்பிடிப்பு நிகழாத காலம் விருப்பத்தின் பேரில் மட்டுமே இயக்கத்துக்கு பிள்ளைகள் சேர்ந்த காலம். கட்டாயமாக ஆட்பிடிக்கும் காலத்தில் எந்தத் தாயின் கண்ணீரும் பொறுப்பாளர்களின் இதயத்தை கரைக்கமுடியவில்லை. யாராலும் அவர்களிடமிருந்து தப்பியோடிவந்துவிடமுடியாதிருந்தது. யூரோக்களும், கல்வீடு வளவும் சொத்துக்களும் பொறுப்பாளர்களின் இதயங்களைமட்டுமல்ல வன்னியை விட்டு வௌியேறும் வழிகளையும் திறக்கவல்லனவாய் இருந்தது. ஏழைச் சனங்களின் கண்ணீரை உதாசீனம் செய்யதபடி அவர்களது புன்னகைக்கானதெனச் சொன்னபடி துவக்குகள் சுட்டன.
எனக்கு The brotherhood of war படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது. இந்த அண்ணனும் தம்பியும் எனக்கு பவா மச்சாளினதும் ஜெகா மச்சாளினதும் நினைவு படுத்தினர். கூடவே இயக்கத்தில் சேர்ந்து மாவீரர்களாகிப்போன ஒரே வீட்டின் பிள்ளைகள் அத்தனை பேரின் நினைவும் வந்தது. ஓரே சண்டையில் அடுத்தடுத்த நாள் செத்துப்போன ஒரே குடும்பத்தின் சகோதரர்களும் இருக்கிறார்கள். எல்லாரையும் விதைத்தோம் எதனை அறுவடை செய்தோம்? குருதி விட்டு வளர்த்தோம், கண்ணீரால் கழுவினோம் யார் யாரோ கொலரைத் தூக்கிக்கொள்ள மண்தின்ற பிள்ளைகளை சுமந்த வயிறுகளிடம் கனன்றுகொண்டிருக்கும் தீயை காலத்தின் எந்தப் பெருங்காற்றும், எந்தப் பெருநதியும் அணைக்காது. அணைக்கவும் முடியாது.
தவிப்பு என்று வன்னியிலிருந்து வெளியான முல்லை யேசுதாசனின் படமொன்றும் இருக்கிறது. அதுவும் மிக முக்கியமான படம். கரும்புலியாய் தம்பி போவான். அவனது படகினைத் தள்ளிக் கடலில் இறக்கும் குழுவில் அவனது சொந்தச் சகோதரியே இருப்பாள். கரும்புலிப்படகு தினமும் சரியாக இலக்கை அடைய முடியாமல் திரும்ப வந்து கொண்டேயிருக்கும். அப்போது கரும்புலியாய் இருக்கும் தம்பிக்காரன் தமக்கையிடம் சொல்லுவான்
“நீ அழுது கொண்டு படகு தள்ளுறதாலதான் எனக்கு இலக்கு கிடைக்குதில்லை இனிமேல் நீ படகு தள்ள வரவேண்டாம்”
தமக்கை கவலையோடு இருப்பாள். பிறகு கொஞ்ச நேரம் கழித்து அவனே திரும்பவும் அவளிடம் வந்து சொல்லுவான்
“சரி சரி அழாம வந்து தள்ளு. ஆனால் இண்டைக்கும் எனக்கு இலக்கு கிடைக்கேல்ல எண்டால் என்ர கண்ணுக்கு முன்னால வராத நான் உன்னை பார்க்கவும் மாட்டன் கதைக்கவும் மாட்டன்”
அவள் சொல்லுவாள் “உனக்கு இலக்கு சரியாக அமைந்தாலும் என்னால் உன்னைப் பார்க்கவோ கதைக்கவோ முடியாது தானேடா..”
ஒரு கனத்த மௌனத்தோடு கோவமா கவலையா என்று தெரியாமல் அவன் போவான். ஆனால் அன்றைக்கும் இலக்கு கிடைக்காது.
அடுத்தநாள் காலையில் படகு கடலில் இறக்கப்படும் போது அவன் அக்காவைத் தேடுவான் அவள் தொலைவில் நடந்துகொண்டிருப்பாள். இலக்கு கிடைக்கும். இது ஒரு உண்மைச் சம்பவம் என்பதோடு முல்லையேசுதாசனின் தவிப்பு படம் முடியும்.
மென்று விழுங்கப்பட்ட வழியனுப்புதல்களின் வடு எதனால் ஆற்றப்படக்கூடியது. தியாகங்களைக் கொண்டாடுவதால் மட்டுமே இந்தக் காயங்கள் ஆறுமா? தியாகத்தின் விலையென்ன? மேலும் மேலும் தியாகங்களைக் கோருவதா? அப்படியிருக்கமுடியாது. அவை புன்னகைகளையே யாசித்திருக்க முடியும். இன்னும் நம்மிடையே மீந்திருக்கும் தவிப்புகளின் தீர்வென்ன. தவிப்பையும் கண்ணீரையும், தியாகங்களையும் யார் அறுவடை செய்தார்கள்? யார் சுகித்திருந்தார்கள்? காலத்தின் கறைபடிந்த, ஆன்மாவை வெட்கப்பட வைக்கிற கேள்விகள் இவை. யாரிடமும் பதிலற்று நழுவிக்கொண்டிருக்கிறது காலம் நம் காலடியில். உறுதியளிக்கப்பட்ட மீள்வருகைகளுக்காக அம்மாக்களும், அப்பாக்களும், மனைவிகளும், குழந்தைகளும், சகோதரர்களும் காத்திருக்கிறார்கள்.
ஒரு சண்டையின் முடிவில் The brotherhood of war படத்தின் தம்பி தன் தமையனிடம் சொல்லுவான் “நான் இதெல்லாம் ஒரு கனவென்று நம்பவிரும்புகிறேன். காலையில் எனது படுக்கையிலிருந்து விழித்துக்கொண்டு. காலை உணவருந்துகையில் இந்தக் கொடுரமான கனவைப்பற்றி உன்னிடம் சொல்லி ஆச்சரியப்பட்டபடி பாடசாலைக்குப் போகவிரும்புகிறேன்” அவன் இப்படிச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஓரு குண்டு அவர்களின் பின்னால் விழுந்து வெடிக்கிறது. அண்ணனும் தம்பியும் பதறியடித்துக்கொண்டு பங்கருக்குள் ஒடுகிறார்கள்.
எல்லாவற்றையும் கனவென்று நினைக்கவே எனக்கும் விருப்பம். கால்களின் இழுப்பிற்குள் நுழைந்துவிட்ட பயணத்தின் திசைகளை கால்களே தீர்மானிக்கின்றன. யுத்தம் எதையும் மிச்சம் வைக்காமல் தின்றும் பசியடங்காமல் அலைகிறது. தம்பியுடையான் படைக்கஞ்சான் என்று மாமா அடிக்கடி சொல்லுவார். காலத்தின் எல்லா முடிச்சுகளும் இறுகி குற்றவுணர்வின் தாழ்வாரத்தில் ஒதுங்கிக் கிடப்பதைத் தவிரவும் வேறேதுவும் விதிக்கப்படாத தம்பியிழந்தான்கள் விழித்தபடியிருக்கிறோம் யாரைச் சபிப்பதெனத்தெரியாமல்.. திரும்பி வருவதாய் வாக்குறுதியளித்த தமையனை எண்ணித் தன் முதிய வயதில் அழுதபடியிருக்கிறான். The brotherhood of war படத்தின் தம்பி. ஒளியற்று நிறைகிறது திரை.
நன்றி காலம் 22வது ஆண்டுச் சிறப்பிதழ்
உங்களின் வரவு புதிது