என்னிடம் ஒரு விநோதமான பழக்கம் இருந்தது. நான் நினைக்கிற காரியம் நடக்குமா என்பதை அறிந்து கொள்ள.. பூவா தலையா போட்டுப்பார்ப்பதைப்போல.. நான் போகிற பாதையில் ஒரு குறிப்பிட்ட தூரத்தை மூச்சே விடாமல் கடந்து பார்ப்பது மூச்சு விடாமல் கடந்தால் அந்த காரியம் வெற்றி.. இடையிலே மூச்சை விட்டு விட்டால் அந்த காரியம் தோற்றுவிடும் என்று நான் நம்பி வந்தேன்.. என்னிடம் அந்த விநோதமான பழக்கம் இருந்தது என்று சொல்வதன் மூலம் அதை நான் விட்டு விட்டேன் என்று அர்த்தம் அல்ல.. அதைப் பிரயோகிக்கும் தேவைகள் இப்போது குறைந்துள்ளன என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம்… ( இது என்ன விதமான மனோ வியாதி என்று ஆராய்பவர்கள் முடிவுகளை என் மின்னஞ்சல் முகவரிக்கு தட்டிவிடலாம்…) ஆனால் சென்னையில் மேடவாக்கத்தில் வசிக்கத் தொடங்கிய பிற்பாடு அதன் தேவை நம்பிக்கைகளையும் தாண்டி வாழ்வதற்கு அவசியமான ஒன்றாகிவிட்டது.. வேளச்சேரி மேடவாக்கம் பிரதான சாலையில் காமாட்சி மருத்துவ மனைதாண்டியதும் .. ஆலந்தூர் நகராட்சியின் குப்பை கொட்டுகின்ற இடம். இருக்கிறது அதைத்தவிர்த்து விட்டு வேறு பாதைகள் .. மிகத் தொலைவானவை..(எனக்கு) அதைக்கடக்கும்போது.. யப்பா.. குப்பென்று அடிக்கின்ற வாசம்.எனது மூச்சடக்கும் விளையாட்டுத்தான் என்னைப் பாதுகாக்கிறது..
இதை இங்கே எழுதுவதற்கு காரணம் மூச்சுவிடுவது மற்றும் சுவாசம் தொடர்பான ஒன்றைச் சொல்ல…இயற்கை மனிதனை விரோதிக்கத் தொடங்கி தசாப்பதங்கள் கடந்து விட்டிருக்கிற நிலையில்.. இயற்கையின் அநேக வடிவங்கள் மனிதனை திருப்பித் தாக்கத் தொடங்கிவிட்டன.. தண்ணீர் வெள்ளமாய்,சுனாமியாய்.. தாகமாய் .. ஒரு குடம் குடிநீருக்கு அலையவிட்டு மனிதனை கண்ணீர்ப் பலி(ழி) வாங்குகிறது.. நெருப்பும் அவ்வப்போது தன் வக்கிரத்தை காட்டுகிறது.. நிலம் அவ்வப்போது தனக்குள் மனிதனை விழுங்கி ஆத்திரத்தை அடக்கிக் கொள்கிறது.. மரங்கள் மட்டும் தான் நேரடியாக களத்தில் இன்னமும் குதிக்காதவை(என் சிற்றறிவுக்குட்பட்டு) மரங்களும் களத்தில் குதித்தால் என்னாகும் என்று கற்பனை பண்ணிப் பார்க்கிறது happening திரைப்படம்…
மனிதனின் கொடுமை தாங்காத மரங்களெல்லாம் ஒன்றாகக் கூட்டம்போட்டு மனிதனுக்கெதிராக களமிறங்குகின்றன.. எப்படி?
படம் தொடங்கும் போது மிக ரம்மியமன பூங்காவில் மனிதர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள்.. காற்று மிதமாக வீசகிறது.. ஒரு வாங்கில் (பெஞ்ச்) அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் இரண்டு பெண்களில் ஒருத்தி திடீரென்று சிலைபோலாகி.. தனது ஹெயார் பின் எடுத்து தனது கழுத்தில் குத்திக்கொண்டு செத்துப் போகிறாள்.. இதைப்பார்த்த அவளது தோழி திகைத்து திரும்ப.. அந்த பூங்கா அமைந்திருக்கிறது தெருவில் இருந்த மனிதர்கள் முழுப்பேரும்.. ஆங்காங்கோ நடுத்தெருவில் நின்று கொண்டு.. தற்கொலை செய்து கொள்கின்றனர்.. ஒரு கட்டடத்தில் வேலை செய்து கொண்டிருப்பவர்கள் எல்லோரும் பொத்து பொத்தென்று மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்கிறார்கள்.. மீடியா அலறுகிறது தீவிரவாதிகளின் சதியா என்று அலசுகிறது.. ஏதாவது ரசாயன ஆயுதங்களின் தாக்குதலா.. தற்கொலைகள் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது..
சனங்கள் ரயிலில் ஏறித் தப்பிவிடலாம் என்று போகிறார்கள்.. தொடர்ந்து செல்வது ஆபத்தென்று கருதி ரயில் பாதிவழியில் நிறுத்தப்படுகிறது. ஆனால் ரயில் நின்ற இடமும் பாதுகாப்பில்லாத இடம் என்று அறிவிக்கிறார்கள்.. அங்கிருந்து ஓடுகிறார்கள்.. ரயிலில் ஏறித்தப்புகிறவர்களில் ஏலியட்(elliot) ஒருவன்.. அவன் சூழலில் அக்கறையுள்ள ஒரு விஞ்ஞான வாத்தியார் அவனோடு அவனின் காதலி.. மற்றும்.. அவர்களது நண்பன் யூலியன் அவனுடைய மகள் ஜெஸ் ஆகியோர் அடக்கம்.. இவர்கள் ரயிலில் வந்திறங்கிய இடமும் பாதுகாப்பில்லாத இடம் என்று அறிவிக்கப்பட.. அவர்கள் அங்கிருந்து ஓடுகிறார்கள்.. யூலியன் தான் புறப்பட்ட இடத்தில் விட்டுவிட்டு வந்துவிட்ட அவனுடைய மனைவியைத் தேடி.. மறுபடியும் அங்கே போக முடிவெடுக்கிறான்.. ஏலியட்டிடமும் அவர் காதலி அல்மாவிடமும் தன் மகளை ஒப்படைத்து விட்டு.. போகிறான்;.. அவன் வேறு திசை இவர்கள் வேறு திசையில் போக முடிவெடுக்கிறார்கள்..
ஆனால் அங்கிருந்து சிறிது தூரம் சென்ற பின் எத்திசையில் போனாலும்.. பாதுகாப்பற்ற பிரதேசம் என்ற நிலைமை ஏற்பட்டு விடுகிறது.. எல்லாத் திசையில் மனிதர்கள் தற்கொலை செய்து கொண்டே இருக்கிறார்கள்.. இப்போது ஒரு நாற்சந்தியில்.. நான்கு பக்கமும் இவர்களைப் போலவே எங்கேபோவதெனத் தெரியாது வந்து சேர்ந்தவர்கள்.. இருக்கிறார்கள்.. அதில் ஒரு ராணுவ வீரனும் இருக்கிறான்.. அவன் ஒரு வரைபடத்தை தோண்டித் துருவி பாதுகாப்பான இடத்திற்கு வாகனங்கள் போக முடியாத ஆனால் இலகுவில் நடந்து போகக் கூடிய பாதை ஒன்றிருப்பதாகச் சொல்கிறான். இவர்கள் போகிறார்கள்.. அவன் பின்னால்.. ஆனால் இது வரைக்கும் எதனால் இப்படிநேர்கிறது ஏன் மனிதர்கள் திடீரென்று தற்கொலை செய்து கொண்டு செத்துப்போகிறார்கள் என்று தெரியாமல் எல்லாரும் குழம்பிக்கொண்டிருக்கிறார்களே ஒழிய கண்டுபிடிக்கிறார்கள் இல்லை.. இப்போது அவர்கள் இராணுவவீரன் சொன்ன பாதுகாப்பான இடத்திற்கு குழுக்குழுவாக போகிறார்கள்.. இராணுவ வீரன் நடுவிலும்.. ஏலியட் ,அல்மா எல்லாரும் முன்னாலும்.. இராணுவவீரனுக்கு பின்னால் ஒரு குழுவுமாக போய்க்கொண்டிருப்பார்கள்.. திடீரென்று இராணுவத்தான் எனது ஆயுதம் எனது நண்பன் என்று கத்திக்கொண்டே தன்னைத் தானே சுட்டுச் செத்துப்போவான்.. வெடிச்சத்தம் கேட்டு முன்னால் போன ஏலியட் குழு திரும்பிப் பார்க்கும்.. தொடர்ச்சியாக டப் டப்..என்று வெடிச்சத்தம் பின்னால் வந்தவர்கள் எல்லாரும் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று புரிய..அல்மா ஏதாவது செய் என்று கத்துவாள்.. என்ன நடக்கிறது என்று ஏலியட்டை ஆற்றாமையிலும் பயத்திலும் திட்டுவாள்.. இப்போது ஏலியட் உறுதியாக மரங்கள் வெளிவிடுகிற ரசாயனக் காற்றுத்தான் மனிதர்களைத் தற்கொலைக்கு தூண்டுகிறது என்று கண்டு பிடிப்பான்..(இதற்கு முன்பாகவும் அவன் அதைச் சொல்லிவருவான் ஆனால் சந்தேகத்துடன்) அதே கணம் மரங்கள் அசையும் காற்று இவர்களை நோக்கி வரும்.. ஓடுகிறார்கள்.. கத்தரி வெய்யில் காலத்தில் காய்ஞ்ச புல்வெளியில் பற்றிக்கொண்ட தீ போல கிசு கிசு வென்று.. இவர்களைக் காற்று விரட்டும்…. ஓடு வார்கள் முடிந்த மட்டும்.. பிறகு மூச்சை அடக்கிக் கொண்டு காற்றைத் தம்மைக் கடந்து போக விடுவார்கள். காற்றடங்கிப் போனதும் தொடர்ந்து போகிறார்கள்.. காற்றின் சூரத்தனம் அடங்குவதாயில்லை.. இவர்கள் மரங்கள் வெளிவிடுகிற இரசாயன வாயுவில் இருந்து தப்பி.. தேனும் பாலும்போல.. அல்லது ஓடும் புளியம்பழமும் போல வாழ்ந்தார்களா என்பதுதான் மிச்சம்..
உலகத் தரமாக மிகச் சிறந்த படம் என்றெல்லாம் இதை நான் சொல்லவரவில்லை.. அது சொல்ல வந்திருக்கிற செய்தி.. முக்கியமானது. இதன் இயக்குனர் செய்திருக்கிற வேலை.. மிக அற்புதமானது. ஒரு மீட்டிங்கைப்போட்டு.. கொஞ்சம் பேர் மரங்களைப் பாதுகாப்போம் சற்றுச் சூழலைப் பேணுவோம் என்றெல்லாம் மாநாடு போட்டுப் சலிக்கச் சலிக்க புள்ளிவிபரங்களோடு பேசுகிற விசயத்தை.. மவனே புள்ளி விபரமெல்லாம் கிடையாது மரங்களெல்லாம் ஒரு நாள் வெகுண்டெழுந்திச்சின்னு வைச்சுக்கோ உன்கதை முடியும் நேரமிதுன்னு பாட்டுப்பாடக் கூட அவகாசம் இருக்காதுன்னு சொல்லிவிடுகிறது படம். (சீரியசை ஜனரஞ்சகமாக்குவது என்பது இது தானோ) விறு விறுப்பான படமாக்கியிருக்கிறார்கள் கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் ஓடுகிற இந்தப்படத்தில் எதுவும் சலிப்பாகத் தோன்றவில்லை படம் முழுக்க படபடப்பிருக்கிறது…
படத்தின் இறுதிக்காட்சியில். அல்மாவும் ஜெஸ்சும் ஒரு கட்டிடத்திலும்.. ஏலியட் இன்னனொரு கட்டிடத்திலும் மாட்டிக்கொள்வார்கள்… காற்று உள்ளே வந்து விடக்கூடாது கதவுகள் ஜன்னல்கள் எல்லாவற்றையும் அடைத்து விட்டு இரண்டு கட்டிடங்களையும் எதற்காகவோ இணைத்திருக்கிற குழாய் வழி இருவரும் பேசிக்கொள்வார்கள்.. கொஞ்சம் புருசன் பொண்டாட்டிப்பிரச்சினை… (காற்றே என்வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்.. காற்றே உன் பேரைக் கேட்டேன் சாதல் என்றாய் என்கிற றேஞ்சில்)
உண்மையில் இப்படி ஒரு நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை… சென்னையில் இப்போதிருக்கிற மரங்களை எண்ணிச் சொல்லிவிடலாம். ஒரு நாளில்.. இன்னும் சில பத்தாண்டுகளில் சென்னையில் கூவம் நதியில் இருந்து பல்வேறு வகையான விச வாயுக்கள் வெளியேறி.. மனிதர்களை விரட்டிக்கொண்டு வரலாம்.. எங்கே ஓடுவது… படத்தில் வரும் காட்சிகள் போல கதவுகள் எல்லாவற்றையும் பூட்டிக்கொண்டு.. மாஸ்க்குகள் சிலிண்டர்கள் என்று மாட்டிக்கொண்டு.. வாழ வேண்டி வந்தாலும் வரலாம் வாழ்க்கை ஹெக்கே பிக்கே தான் போங்க..
உங்கள் விமர்சனம் படத்தை விட அருமையாக உள்ளது
படத்தில் இன்னும் கொஞ்சம் மசாலா ஏற்றியிருந்தால் நன்றாக வந்திருக்கும் .
எதிர்பார்ப்போடு பார்த்து ஏமாந்த பல படங்களின் பட்டியலில் இதுவும் ஒன்று
//நான் போகிற பாதையில் ஒரு குறிப்பிட்ட தூரத்தை மூச்சே விடாமல் கடந்து பார்ப்பது மூச்சு விடாமல் கடந்தால் அந்த காரியம் வெற்றி..//
நீங்களுமா? எனக்கும் அப்படி கெட்ட பழக்கங்கள் உண்டு
நன்ராக உள்ளது
நல்ல அறிமுகம் அகிலன். இதுவரை இந்த திரைப்படம் பார்க்கவில்லை.
நன்றி..