அடுத்த வரியை நீங்கள் வாசிக்கத் தொடங்குவதற்கு முதல் அவசியம் இதனைத் தெரிந்து கொள்ளவேண்டும் நீங்கள். என்னுடைய அம்மம்மாவின் பெயர் சின்னம்மா. என்னுடைய அம்மப்பாவின் பெயர் செல்லையா.
காலம் 03.03.2005
இடம்: கிளிநொச்சியில் அமைந்த திருநகர் கிராமத்தில் எங்கட வீடு.
நான் சைக்கிளின் முன் பிரேக்கையம் பின் பிரேக்கையும் ஒண்டா அமத்தி முத்தத்தில் அரை வட்டமடிச்சு பாட்சா ரஜனி ரேஞ்சுக்கு இறங்க முதல் அம்மம்மா சொன்னா
“ஆ வாறார் அய்யா .. அவரும் அவற்ற ஸ்ரையிலும்.”
“ஹாய் சின்னம்மாக்கா”
“டேய்… பேர் சொல்லிக் கூப்பிடுறியோ” தடியை அடிக்கிற மாதிரி ஓங்கினா..
“எணெய் பெயர் என்னத்துக்கு இருக்கு கூப்பிடத் தானே.”
“ஓமடா ஆனா நீ கூப்பிட இல்ல..”
“சரி அந்த வெத்திலைப் பையைத் தாணை”
“அதுக்க இல்ல..”
“என்ன இல்லை…”
“ஆ… உன்ர …. கோ….”
ஹி ஹி ஹி ஹி…
“என்னடா இளிப்பு ஆரடா அவள்”
“எவள்?”
“அதான் நீ கண்ணன் கொயிலடியில வைச்சு கதைச்சுக்கொண்டிருந்தியாமே ஒருத்தி அவள்.”
எல்லாம் உங்கட மேளின்ர மருகள் தான்..
“மருமகளோ எவள் அவள்? எடியேய் நல்ல இளக்கயிறா எடுங்கோடி இவனைக் கட்டி வைப்பம்..”
“தாலி மஞ்சள் கயிறில எல்லோ கட்டிறது”
“தாலியோ நீ வீட்டை விட்டு வெளியில போகாம உன்னை உந்த தென்னையோட கட்டிவைக்க கயிறு கேக்கிறன் நான்”
“ஹா ஹா ஹா ணேய் அவள் நல்ல வடிவான வெள்ளைப் பெட்டையணை..”
“வெள்ளையோ வெள்ளையை என்ன கரைச்சோ குடிக்கிறது”
“ஹே அதானே செல்லையர் குடிச்சவர் என்ன…”
அதற்குப்பிறகு அம்மம்மா பேசயில்லை வெட்கப்பட்டு சிரிச்சுக்கொண்டு என்னை அடிக்கிற மாதிரி தடியை ஓங்கினா.. நான் ஓடியிட்டன். எனக்கு அம்ம்மாவைப்பிடிக்கும் அம்ம்மாக்கும் என்னைப் பிடிக்கும். எல்லோருடைய அம்மம்மாக்களும் அற்புதமானவர்கள் தான்.
அம்மம்மாக்கள் காட்டும் உலகம் புராதனமானது. அது ராஜகுமாரர்களும் இளவரசிகளும் மலைகளும் கடல்களுமென ஒரு அற்புதமான மறக்கவியலாக் கனவினைப்போல நம் வாழ்வின் நீளத்திற்கும் வழிந்துகொண்டிருக்கும். அங்கே குழந்தைகளுக்கான ரகசியங்களும் அவைகளுக்கான விடைகளும் உண்டு. வயதானவர்களைக் குழந்தைகள் என்று சொல்லுவது சரிதான் அவர்களால் தான் குழந்தைகளாக முடிகிறது. குழந்தைகளை மனிதர்களாக்க முடிகிறது. அம்மாக்களை விடவும் அம்மம்மாக்களின் சொற்கள் குழந்தைகளை எளிதில் வசப்படுத்தி விடுகிறது. அவர்களிடம் குழந்தைகளிற்குக் கொடுப்பதற்கு எப்போதும் ஏதேனும் இருந்துகொண்டேயிருக்கிறது. குழந்தைகளிடம் மறுதலிப்பதற்கு அம்மம்மாக்களிற்கு இயலுவதில்லை. குழந்தைகளும் அம்மம்மாக்களிடம் தயங்குவதில்லை.
நான் என்னுடைய அம்மம்மாவை நினைக்கிறேன். அம்மம்மா என்றால் எனக்கு இரண்டு விசயங்கள் உடனே நினைவுக்கு வரும் ஒன்று அப்பம். இன்னொன்று சத்தகம். அப்பம் என்றவுடன் நான் சரியான சாப்பாட்டு ராமனாயிருப்பேன் என்று நீங்கள் நினைத்தால் (என்னை நேரில் பார்க்காதவர்கள்) அதற்கு நான் பொறுப்பல்ல. ஏனெனில் எனக்கு தெரிந்து என்னுடைய பரம்பரையிலேயே அப்பத்தை சரியாகச் சுடத்தெரிந்தவர்கள் இரண்டே பேர். ஒன்று அம்மம்மா மற்றது பெரியம்மா. பெரியம்மாவை விட அம்மம்மாக்கு இந்த விசயத்தில எக்ஸ்பீரியன்ஸ் கூட என்பதனால் யாருடைய அப்பம் நன்றாயிருக்கும் என்பதையும் நான் சொல்லவேண்டியிருந்தால் இதை வாசிப்பதை விட்டு விட்டு வேறு வேலையிருந்தால் போய்ப் பார்க்கவும்.
மற்றது சத்தகம். சத்தகம் என்பது சிறியவகையான கத்தி(சரியான விளக்கம் தெரிந்தவர்கள் ஆட்டோ அனுப்பவேண்டாம்). அம்மம்மா சதா பெட்டிகள் இழைப்பவளாயிருந்தாள். பனை ஓலைப் பெட்டிகள் சிறியதும் பெரியதுமான பெட்டிகள். இடையிடையே பச்சை மற்றம் நாவல் கலர் ஓலைகள் வைத்தப்பின்னப்பட்ட அழகான பெட்டிகள். அம்ம்மா சத்தகத்தை கையில் பிடித்துக்கொண்டு ஓலையைக் கிழிக்கும் போதும் நறுக் நறுக் கென்று வெட்டும் போதும் எனக்கு கூசும். ஆனாலும் பிடிக்கும். அம்மம்மா எனக்கும் ஒரு பெட்டி இழைத்து தந்தாள் ஒரு குட்டிப் பெட்டி அது முற்றிலும் வண்ண இழைகளால் பின்னப்பட்டது. அதற்கு ஒரு மூடியும் உண்டு. சூர்யா தீப்பெட்டிக்குள் மூச்சுத்திணறிக்கொண்டிருந்த என்னுடைய பொன் வண்டுக்கு அந்தப்பெட்டி ஒரு அரண்மனையானது. அதனால் அம்மம்மாவின் சத்தகத்தையும் எனக்கு பிடிக்கும். அம்மம்மா பாடிக்கொண்டே இழைப்பாள்.
“மாப்பிள்ளை வாறார் மாப்பிள்ளை வாறார் மாட்டு வண்டியிலே
பொண்ணு வரா பொண்ணு வரா பொட்டு வண்டியிலே”
அம்மம்மா ஆயிரத்தெட்டு பாட்டுகளைப் பாடியிருந்தாலும் எனக்கு இந்தப்பாட்டுத்தான் ஞாபகமிருக்கு. மாப்பிளை பொம்பிளை எண்டு கலியாணத்தை பற்றியிருக்கிறதாலயே என்னவோ சின்னவயசிலயே இந்தப்பாட்டு நல்லாப்பிடிக்கும். அப்ப இது வயசுக்கு மீறின விசயம்தான் ஆனா எப்ப,எதில நாங்கள் வயசுக்கு மீறாமல் இருந்திருக்கிறம். (14 வயசில மாவீரராக் கூட ஆகிறாங்கள் இதொரு பெரிய விசயமே ஆ) அம்மம்மா சத்தகத்தாலா இல்லை பாட்டுக்களாலா எதனால் பெட்டிகளை இழைக்கிறாள் என்பதைத் தெரிந்து கொள்வது சிரமம் அப்படிப் பாடிக்கொண்டேயிருப்பாள்.
நாட்டில எவ்வளோ நடக்க உன்ர அம்மம்மா கலியாணப்பாட்டு பாடிறா என்டிறது முக்கியமோ எண்டு நீங்கள் கேக்கிறது விளங்குது. ஆனால் திடீரென்று நான் அம்மம்மா புராணம் பாடக் காரணம் The way home என்கிற படம்.
பால்யத்தின் மீளமுடியாத் திசைகளுக்கு என்னை இட்டுச்சென்றது. என்னுடைய அம்மம்மா எனக்கு கொடுத்துப்போன வாழ்வின் செழுமையான பக்கங்களில் எழுதப்பட்டிருக்கும் என் மழலைக்கிறுக்கல்களை நினைவுகளால் தடவச் செய்கிறது The way home. செத்துப்போன இந்த நகரத்து வாழ்வில் குழந்தைகளின் வாழ்க்கையும் களிப்பும் எத்தகைய மலட்டுத்தன்மையானது என்று தோன்றிற்றெனக்கு. மிக அற்புதங்கள் நிறைந்த படம்.
சங் – வூ நகரச் சூழலில் பிறந்து அதன் அத்தனை சௌகர்யங்களுடனும் வளர்க்கப்பட்டவன். திடீரென்று ஒரு விடுமுறைக்காலத்தில் அவனது தாயாரால் அவனுடைய பாட்டியின் கிராமத்துக்கு அழைத்துச் செலல்லப்படுகிறான். அவன் அந்தக் கிராமத்தை விரும்புகிறவன் இல்லை. பாட்டியையும் கூட. வாய்பேச முடியாத நகரத்தின் பகட்டுகள் எதுவுமற்ற கொஞ்சம் அழுக்காகக் கூட இருக்கிற அந்தக் கிழவியை அவனுக்கு பிடிக்கவேயில்லை. ஆனால் அம்மாதான் கட்டாயப்படுத்தி விட்டுவிட்டுப் போகிறாள். அவன் தன்னுடைய நகரத்தின் குட்டி உலகத்தை அவனது பையில் கொண்டு வந்திருக்கிறான் நகரமயப்பட்ட அவன மனத்தைப்போலவே.அவனுக்கான குடிபானங்கள் ரின் களிலான உணவுவகைகள். (எனக்கு இதைப்பார்த்துக்கொண்டிருக்கையில் வெளிநாட்டால நம்மட ஆக்கள் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு வந்து பிள்ளையளுக்கு ஊர்த்தண்ணி ஒத்துக்கொள்ளாதெண்டு சொல்லி மினரல் வாட்டருக்கு அலைஞ்சது நினைவுக்கு வந்தது. இதையும் மிஞ்சி சிலபேர் பிள்ளைகள் தண்ணி குடிக்காதெண்டும் ஒலே சோடா மட்டும் தான் குடிக்குமெண்டும் கூட சொல்லியிருக்கினம்)
சங் – வூ வை பாட்டியுடன் விட்டுவிட்டு அம்மா போய் விடுகிறாள். சங் – வூ பாட்டியுடன் பேசுவதில்லை. அம்மா போனதிலிருந்து அவனது ரீ.வி கேமுடன் எந்நேரமும் சதா விளையாடிபடியிருக்கிறான். அவனது நகரத்தில் இருந்து கொண்டு வந்த தின்பண்டங்களையே தின்கிறான். பாட்டி ஆசையாய் அவனுக்காய் தனது சுருக்குப்பையிலிருந்து இனிப்புகளை எடுத்து நீட்டுவாள். சுருங்கியும் கசங்கியும் வெறும் துணிக்கயிறு கொண்டு கட்டப்பட்டிருக்கும் அவளது சுருக்குப்பையுள் நிறைந்திருக்கும் இனிப்பை பிரியம் பொங்க எடுத்துத் தருவாள் ஆனால் சங்- வூ அதனைப் புறந்தள்ளிவிட்டு நீண்டதொரு சொக்லேட் பாரை தின்றபடி பாட்டியின் வீட்டில் குற்றுயிரும் குலையுயிருமாய்க் கிடக்கும் டி.வியில் காட்டுன் நெட்வர்க் ஏதாவது வருமா என்று அலைவரிசைகளைச் சோதிக்கிறான். பாட்டி தனது பிரியத்தை புறந்தள்ளும் அந்த நகரத்து குழந்தைமையப் புரிந்து கொண்டவளாக அமைதியாயிருக்கிறாள்.
மறுநாள் அந்தக் கிராமத்தின் சிறுவன் ஒருவனைப் பேரனுடன் விளையாட வருமாறு பாட்டி அழைத்து வருவாள். வந்தவனும் சங்-வூ வைத் தன்னுடன் விளையாட வரும்படி அழைக்கிறான். சங்- வூ அவனுடன் பேசுவதே தனக்கு பிடிக்கவில்லை என்பது போல முகத்தை திருப்பிக்கொள்வான். அந்தப் பையன் வெளியேறிவிடுவான்.
எனக்கு இந்த இடத்தில் என்னுடைய அம்மம்மா கண்டிப்பாக நினைவுக்கு வந்தாள் நான் அம்மம்மா வீட்ட போகும் போதெல்லாம் அம்மம்மா தெருவில் கிரிக்கெட் விளையாடுகிறவர்களிடம் பரிந்துரைப்பாள். ஏனெனில் அம்மம்மா வீட்ட போனால் மட்டும் தான் ஒழுங்கையில் (தெரு) விளையாட முடியும். அம்மாட்ட வீட்டுக்குள்ள ஆடு புலி சிங்கம் சேர்த்து விளையாடுற விளையாட்டெண்டாலே அரைநாள் முதல் பர்மிசன் வாங்கோணும். இல்லாட்டி வழக்கம் பொல அகப்பைக் காம்புதான் விளையாடும். ஆனால் அம்மம்மா என்னை வீதியில் விளையாட அனுமதிப்பாள். இன்னும் ஒரு படி மேல போய் “டேய் இவனையும் சேர்த்து விளையாடுங்கோடா” எண்டு அங்க விளையாடுற பெடியங்களிடம் பரிந்துரைத்திருக்கிறா. அம்மம்மா கிட்டத்தட்ட அந்த ஏரியா தாதா போல டேய் கோயிலாச்சி என்று ஒரு விநோதக் குரலில் பேசி அம்மம்மாவின் வருகையை அவர்கள் தங்களுக்குள் அறிவித்துக் கொள்வதை, வில்லியைப் போல சிறுவர்கள் அம்மம்மாக்கு பயப்பிடுவதை நான் பார்த்திருக்கிறேன். அம்மம்மா என்கிற அதிகாரமையம் அருகிலிருப்பதாலேயே நான் எத்தினையோ தரம் நான் அவுட் எண்டாலும் பொறு நான் அம்மம்மாட்ட சொல்றன் எண்டு அவர்களை வெருட்டி அவுட்டை கான்சல் செய்ய வைத்திருக்கிறேன்.(அழாப்பி அழாப்பி) அவர்களும் அம்மம்மாக்கு பயந்து கொண்டு என்னை அனுமதிப்பார்கள்.
எனக்கு இன்னொரு காட்சியிலும் அம்மம்மா நினைவுக்கு வந்தாள். சங்-வூ இரவில் டாய்லெட் போவதற்காக அம்மம்மாவுடன் வெளியே வருவான். அவளைத் தன்னைப் பார்க்கவேண்டாம் எனச் சொல்லும் அதே வேளை அவளை அங்கிருந்து போகவும் வேண்டாமெனச் சொல்லுவான். நானும் சின்ன வயசில் அம்மம்மாவை அழைத்துகொண்டு போயிருக்கிறேன் டாய்லெட்டுக்கு இரவுகளில். கழிப்பறையின் கதவுக்கு வெளியே நின்றபடி அம்மம்மாவை தொடர்ச்சியாகக் கதைத்தபடியிருக்கும்படி சொல்லுவேன். அம்மம்மா எனக்கு கதை சொல்லியபடியே இருப்பாள் அவள் ஒரு செக்கன் மௌனமானாலும் நான் பலத்த சத்தம் போட்டு பயத்துடன் அம்மம்மாவை அழைப்பேன். அம்மம்மா சிரித்தபடி நிற்கிறேன் என்பாள். அப்போதெல்லாம் எனக்கு ஆறு மணிக்கு பிறகு வீட்டுக் கேற்றுத் தடிபோடப் போறஎண்டாலும் ஆளும் பேருமாப்போனாத்தான் போவன் இல்லாட்டி அரங்கன். அம்மம்மாக்கள் எப்போதும் குழந்தைகளைப் பாதுகாக்கிறார்கள். (இப்போதைய அட்டாச் பாத்றூம்களில் இந்தச் சிக்கல் இருக்காதென்கிறவர்கள் அம்மம்மாக்களின் கதைகளையும் அறியாதிருக்கிறோம் என்பதறிக)
அம்மம்மாக்கள் எப்போதும் பேரன்களைச் சந்தோசப்படுத்திய படியே இருக்கிறார்கள். இப்போது டி.வி கேமில் விளையாடிக்கொண்டிருக்கும் சங்- வூ விடம் பாட்டியுடன் ஊசியில் நூலைக் கோர்த்துத் தரும்படி கேட்பாள். அவனோ இந்தக்கிழவியோட பெரிய கரைச்சல் என்கிற மாதிரி சினந்துகொண்டே கோர்த்துத் தருவான். அவளைத் திட்டி வீட்டுச் சுவர்களில் எழுதி வைப்பான். பாட்டி எல்லாவற்றைப் பார்த்தும் பேசாமலிருப்பாள். அவள் பேசமுடியாதவள் வேறு.
படம் முழுவதும் குழந்தைமையின் பிடிவாதமும். குட்டிக் கோபமும். தன்னை மீறி அம்மம்மாவின் மீது எழும் பிரியத்தை வெளிகாட்ட விரும்பாதவனாகவும் இருக்கிறான் நம்ம ஹீரோ சங்-வூ.
ஒரு நாள் அவனது டி.வி கேமின் பாட்டரி தீர்ந்து விடுகிறது. புதிய பாட்டரி வாங்குவதற்கு அம்மம்மாவிடம் பணம் கேட்டுக்கொண்டேயிருக்கிறான். அவளோ பதில் சொல்வதாயில்லை. பணமும் தரவில்லை. அவன் அவள் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவளது கொண்டையில் இருக்கும் அழகான ஊசியை எடுத்துக்கொண்டு அதை கொடுத்து பாட்டரி வாங்கலாமா என்று முயற்சிப்பதற்காக கடைகளைத் தேடி போகிறான். அந்தக் கிராமத்தின் சிறிய கடையில் அவன் தேடுகிற பாட்டரி இல்லை. அவன் பாட்டரி தேடிக்கொண்டே நீண்ட தொலைவு வந்து விடுகிறான். பிறகு கிராமத்துக்கு திரும்புகையில் களைத்து சோர்ந்து விடுகிறான். அவனை ஒரு பெரியவர் அவனைப் பாட்டியின் பேரன் என்று கண்டுகொண்டு அவனை அழைத்து வருகிறார். அதற்குள் அவனைத் தேடி பாட்டி வந்துவிடுகிறாள் பாதி வழி.. பாட்டியைக் கண்டதும் ஓடிச்சென்று அணைக்க ஆசையிருந்தாலும் அவள் வந்ததை விரும்பாதவனாகப் பாவனை செய்தபடி நடக்கிறான் சங்-வூ.
அவன் கொண்டு வந்த தின்பண்டங்கள் எல்லாம் தீர்ந்துவிட அவன் அம்மம்மா தயாரிக்கும் சாப்பாட்டையே சாப்பிட வேண்டியாகிறது. அவனுக்கோ நகரத்து உணவுகள் வேண்டும். pizza,kentucky chicken , hamburger கேட்கிறான். தன் வாழ்நாட்களில் கேட்டேயிராத பெயர்களிலான உணவுப்பண்டங்களை பேரன் கேட்கிறானே எனக் கிழவி குழம்புகிறாள். பாட்டி தனது தரப்பை புரிந்து கொள்ள முயற்சிக்கிறாள் எனத் தெரிந்து கொண்டு. அவளுக்கு அவன் உச்சரிக்கும் விநோதமான உணவுப் பண்டங்கள் என்ன என்பதை தெரிவித்து விட சங்-வூ பிரயத்தனப்படுவான். தனது புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு அவளுக்கு விளக்க முயற்சிப்பான். கடைசியில் ஒரு வழியாகக் ஏதோ கோழியிறைச்சியைத்தான் பேரன் கேட்கிறான் என்கிற அளவில் கிழவி புரிந்து கொண்டு விடுவாள். கிழவி விரல்களால் தலையில் கொண்டை வைத்துக்காட்ட சங்-வூ மகிழ்ந்து ஆ அதேதான் கோழி கோழிதான் எனக்கு வேண்டும் என்பான். பாட்டி தன் தோட்டத்து விளை பொருட்களுடன் நகரத்துக்கு போவாள். சங்-வூ மிகுந்த மகிழ்ச்சியுடன் அவளை வழியனுப்புவான்.. அவளைத்திட்டித் தான் சுவர்களில் எழுதியதையெல்லாம் அழித்துவிட்டுத் தூங்கிப்போவான். அதுதான் குழந்தைமனம் சட்டென்று மறந்து விடும் அழுகையை நிறுத்தி ஹே என்று சிரிக்கும் கோபத்தைக் கலைத்து சட்டென்று முத்தமிடும். நீடித்து உள்ளுறையும் வன்மங்கள் ஏதுமற்றது குழந்தைமனம். சங்-வூஅப்படித்தான். அவனைப் பொறுத்தவரை பாட்டி இப்போது வில்லியல்ல அவன் கேட்ட தின்பண்டத்தை வாங்கிவரப்போகிற தேவதை.
பாட்டி மழையில் நனைந்தபடி கோழியை வாங்கிக்கொண்டு வருவாள். அவன் தூங்கிக் கொண்டிருப்பான் அவள் அவளுக்கு தெரிந்தது மாதிரி கோழியைச் சமைத்து வைப்பாள். பாட்டி kentucky chicken உடன் வருவாள் என்று எதிர்பார்க்கிற சங்-வூ விற்கு தூங்கி எழுந்து பார்க்கையில் பாட்டி கோழியை தனக்கு தெரிந்த மாதிரி சமைத்து வைத்திருப்பது எரிச்சலை ஊட்ட திட்டுவான்.எங்கே என் kentucky chicken என்று ஆர்ப்பாட்டம் பண்ணுவான். பாட்டியோ என்னடா இவன் கோழி கேட்டான் வாங்கிக் கொடுத்தால் அதற்கும் திட்டுகிறான் என்பது மாதிரிப் பார்த்து கவலையடைவாள். அழுது கொண்டே சங்-வூ தூங்கிவிடுவான். பாட்டியும் தூங்கிப் போவாள். காலை எழுந்து பாரக்கையில் பாட்டிக்கு காய்ச்சல்(ஜரம்) வந்திருக்கும். பாட்டி எழுந்திருக்க முடியாமல் படுத்திருப்பாள். மழையில் மழையில் கோழி வாங்கிவரப் போனதால் தான் அவளுக்கு காய்ச்சல் வந்தது என்று சங்-வூ பாட்டியின் மீது இரக்கம் கொண்டு அவளைப் போர்த்துவான் அவள் சாப்பிட தானே எடுத்து வைப்பான். அவளுக்கு சுடுநீர் ஒத்தடம் கொடுப்பான்.
ஒருநாள் பாட்டி அவனை நகரத்து அழைத்துச் செல்வாள். அவனுக்கு பிடித்ததெல்லாம் வாங்கித் தருவாள். அவன் பாட்டியின் கிராமத்தில் இருக்கும் குட்டிப் பெண்ணொருத்தியிடம் சிநேகிதம் பிடிக்க விரும்புவான். ஆனால் எதிர் பாராத விதமாக அவர்களது சந்திப்பு மோதலில் முடிவடைந்து விடும். அவள் உனக்கு வளர்ந்த பிறகு நல்ல பொண்டாட்டியே கிடைக்க மாட்டாள் என்கிற ரேஞ்சில் திட்டி விட்டு ஓடியிருப்பாள். பிறகு ஒரு நாள் அவளே இவனோடு விளையாட விரும்பி இவனைத் தேடி வருவாள். இவன் நாளைக்கு வருவதாகச் சொல்லி வீட்டுக்கு வருவான். வீட்டுக்கு வந்ததும் நாளைக்கு அவளுடன் சேர்ந்து விளையாடுவதைக் கற்பனை பண்ணியபடியே தனது விளையாட்டுப் பொருட்களை எல்லாம் அவளுக்கு பரிசளிப்பதற்காக எடுத்து வைத்துக்கொண்டிருப்பான். பாட்டி இவனது பாட்டரி தீர்ந்து போன டி.வி கேமை ஒரு காகிதத்தில் சுற்றி இவனிடம் தருவாள்.
திடீரென்று சங் – வூ விற்கு நாளை புதிய சிநேகதியுடன் விளையாடும் போது தனது தலைமுடி அழகாயிருக்காதோ. இப்போது இருக்கிற ஸ்ரைல் அவளுக்கு பிடிக்காதோ என்கிற எண்ணம் ஏற்பட்டு பாட்டியிடம் முடிவெட்டுவது பற்றி கேட்க பாட்டி பேரனுக்கு முடிவெட்ட ஆயத்தமாகிறாள்.(புத்திசாலிப்பையன்) இவன் கொஞ்சமாக வெட்டுங்கள் என்று விரல்களால் அளவு காட்ட பாட்டி வெட்டத் தொடங்குவாள். இவன் அப்படியே தூங்கிப் போவான். பாட்டி எழுப்பும் போது தலைமுடியில் பாதி பரதேசம் போயிருப்பதை உணர்ந்து ஏன் மொட்டையாக வெட்டினாய் என்பான். பாட்டி நீதானோ அளவு காட்டினாய் என்பாள். நான் இருப்பதில் கொஞ்சத்தை வெட்டு என்றேன்.. நீ கொஞ்சத்தை விட்டு வைத்திருக்கிறாய் என்பான். இந்த தலைமுடியுடன் எப்படி நான் அவளைச் சந்திப்பேன் என்று கவலையடைவான்.
ஆனால் அடுத்த நாள் அவளுடன் விளையாடி விட்டு தனது தள்ளு வண்டியில் உட்கார்ந்த படியே பொம்மையுடன் சரிவில் இறங்குகைளில் கற்களில் இடறுப்பட்டு விழுந்து கைகால முழுக்க காயங்கள் அடைகிறான் யாருமற்ற கிராமத்து வீதியில் விழுந்து கிடப்பவனை கண்டு பாட்டியால் அழைத்து வரப்பட்டு முதலில் இவனிடம் சிநேகம் கொள்ளவந்து புறக்கணிக்கப்பட்ட கிராமத்து சிறுவன் உதவுவான். சங்-வூ இப்போது அவனிடம் மன்னிப்பு கேட்பான்.
அழுதபடியே வீடுதிரும்பும் சங்-வூ தன்னிடம் காகிதம் சுற்றப்பட்டபடி பாட்டி கொடுத்த டி.வி.கேமை எடுத்து பார்ப்பான். அந்தச் சுற்றிய காகிதத்திற்குள் பாட்டி பாட்டரி வாங்கப் பணம் வைத்திருப்பதைப் பார்ப்பான் சட்டென்று அழுகை பீறிட்டுக்கொண்டு வரும் பாட்டி தன்மீது வைத்திருக்கும் பிரியத்தை அவன் உணர்வான். பாட்டியின் தனிமையையும். அழுது கொண்டே வரும் அவனைப் பாட்டி சமாதானப்படுத்துவாள். அம்மா அவனை அழைத்துச் செல்லவரப்போவதாக எழுதிய கடிதத்தை பாட்டி அவனிடம் கொடுப்பாள்.
அவன் பாட்டியிடம் பிரியம் கொண்டு. அவளுக்கு கடிதம் எழுதக் கற்றுக்கொடுப்பான். I miss u ,I am sick இந்த இரண்டு வசனங்களையும் எழுதிக்காட்டி பாட்டியிடம் எழுதிப் பழகச் சொல்லிக்கொண்டிருப்பான். அந்த எழுத்தின் வாசனையறியாக் கிழவி அதைச் சரியாக எழுதமாட்டாள். பாட்டியைப் பிரியப்போகிறோமே. என்கிற ஏக்கம் மேலுற அவன் அழுதபடி பாட்டியிடம் சொல்லுவான். பாட்டி உனக்கு உடம்பு சரியில்லாவிட்டால் வெறும் வெள்ளைக்காகிதத்தையாவது அனுப்பு நான் அதைப் பார்த்ததும் உனக்கு உடம்பு சரியில்லை என்று புரிந்து கொள்வேன் என்பான். பாட்டியும் கண்ணீருடன் தலையசைப்பாள். அவன் பாட்டி வைத்திருக்கும் எல்லா ஊசிகளிலும் நூல் கோர்த்து வைப்பான்.
அம்மா வந்து விடுவாள் அவனை அழைத்துச்செல்ல.சங் – வூ வார்த்தைகள் ஏதுமற்றவனாக நின்று கொண்டிருப்பான். பாட்டியிடம் பேருந்தில் ஏறுமுன்பாக ஒரு சிறிய நோட்டைக் கொடுப்பான். அழுகை விம்ம திரும்பிப் பார்க்காமலே பேரூந்தில் ஏறுவான். பாட்டி பேரூந்தின் ஜன்னலைத் தட்டிக்கொண்டிருப்பாள்.. இவன் திரும்பாமல் மௌனமாயிருப்பான். பேருந்து புறப்படுகையில் இவன் பேருந்தின் பின் கண்ணாடிக்கு ஓடிச்சென்று அழுகையுடன்..பாட்டியிடம் மன்னிப்பு கேட்பான்.. கையசைப்பான்.. பாட்டியின் கையில் இருக்கும் நோட்டு முழுவதும்.. போஸ்ட் காட்டுகளில் I miss u ,I am sick என அவனது முகவரியிடப்பட்டு எழுதப்பட்டிருக்கும். பேரூந்து கிராமத்தின் அழுந்தப் புதையும் புழுதி நிலத்தை விட்டு இறுகித் திமிறும் நகரத்தின் வழவழப்பான சாலைகளில் நகரத் தொடங்கும்….
நகரவாழ்வு தின்று கொண்டிருக்கிறது குழந்தைகளின் பால்யத்தையும் பெரியவர்களின் ஆறுதலையும்.. தனித்த எலக்ரானிக் மனங்களுடன் குழந்தைகள் உருவாகிறார்கள்.பாட்டரி தீரும் வரைதான் இயங்கும் மனங்கள் அவை.. காலம் முழுதும் இயங்கும் சக்தி எங்கள் மூத்தவர்களின் சொற்களிலும் வருடலிலும் இருக்கிறது. நகரத்தின் குழந்தைகள் தொலைத்து விட்டிருக்கும் மிகப்பெரிய பொக்கிசம் இது. முதியவர்களின் கதைகளில் பெறமுடியாத அறிவை ஒரு போதும் கான்வெண்டுகள் வழங்கிவிடப்போவதில்லை. கட்டிடங்கள் ஒரு போதும் கற்றுத்தரப்போவதில்லை பூக்களும் பறவைகளுமிருக்கும் கிராமத்தின் அற்புதங்களையும் எங்கள் மூதாதையர்களின் பாடல்களையும் தடங்களையும்.
The way home
மொழி – கொரிய மொழி
வெளியான ஆண்டு – 2002
நாடு- தென் கொரியா
உணர்வுபூர்வமான, உண்மையான படைப்பு. இனிய பகிர்தலுக்கு நன்றி. நீடூழி வாழ்க!
அன்பின் த. அகிலன்,
அருமையாக உங்கள் அனுபவத்த்தையும், திரைப்படத்தின் காட்சிகளையும் முன்வைத்துள்ளீர்கள். இறுதியில் படம் பார்ப்பது போன்ற திருப்தியும், படிப்பினையும் ஏற்பட்டுவிட்டது.
நன்றி.
ஜிஜிஎஸ் மனோகர்
தம்பி அகிலன்! மத்திய கல்லூரியில் நீர் ப்ரிப(F)க்ற் ஆக இருந்த போது என்னுடன் இருந்த முன் கோபம் காரணமாக சரியாக நான் வரும் போது தான் மறிப்பீர் ஞாபகம் இருக்கிறதோ?
டேய் நாடுகிடக்கிற கிடையில நீ கொம்மம்மாவைப் பற்றியும் படத்தைப்பற்றியும் எழுதுற.. ம்…
கன நாளைக்கு பிறகு உங்கட மயக்கமூட்டும் எழுத்தில் ஒரு பதிவு வாசிக்கிறன். அது சரி உந்த படங்களை எல்லாம் எங்க தேடிப் பிடிக்கிறீயள்? ஏனென்றால் இங்க நாங்களும் கொரியா, மொங்கோலியா எண்டு எல்லா நாட்டு படங்களும் கிடைக்குமா எண்டு பார்த்தபடிதான் இருக்கிறம் 🙂
தம்பி ராசா உந்த டெம்பிளேட் சூப்பரா இருக்கடா.. உதை செய்த ஆளின்ரை கைக்கு மோதிரம் வாங்கிப் போடுடா.. வேறையென்ன.. பதிவை படிச்சிட்டுவாறன்
அகிலன்,
சொந்த அனுபவத்துடன் இணைத்து இந்த சினிமாவை விமர்சித்துள்ளது ரசிக்கும்படி உள்ளது !!!
ஏற்கனவே, இந்தப் படத்தைப் பற்றி கேள்விப்பட்டு இருப்பினும் இன்னமும் பார்கவில்லை. பார்க்கத் தூண்டுகின்றது உங்கள் விமர்சனம் !!!!
//அங்கே குழந்தைகளுக்கான ரகசியங்களும் அவைகளுக்கான விடைகளும் உண்டு. வயதானவர்களைக் குழந்தைகள் என்று சொல்லுவது சரிதான் அவர்களால் தான் குழந்தைகளாக முடிகிறது. குழந்தைகளை மனிதர்களாக்க முடிகிறது. அம்மாக்களை விடவும் அம்மம்மாக்களின் சொற்கள் குழந்தைகளை எளிதில் வசப்படுத்தி விடுகிறது. அவர்களிடம் குழந்தைகளிற்குக் கொடுப்பதற்கு எப்போதும் ஏதேனும் இருந்துகொண்டேயிருக்கிறது. குழந்தைகளிடம் மறுதலிப்பதற்கு அம்மம்மாக்களிற்கு இயலுவதில்லை. குழந்தைகளும் அம்மம்மாக்களிடம் தயங்குவதில்லை//
சினிமாக் குறிப்பு, அந்த சினிமா என்பவற்றைத் தாண்டி, வாழ்வின் சில துளிகளை நுணுக்கமாக அனுபவித்து அந்த அனுபவத்தைத் தொற்றிவிட்ட உங்கள் எழுத்து ம்கவும் கவர்கிறது.
நன்றி.
அம்மம்மாவின் ஞாபகங்களைக் கிளறிவிட்டது உங்கள் பதிவு. நீங்கள் சொல்லியிருப்பதைப் போல அம்மம்மாக்கள் தங்களுக்குள் அன்பை நிறைத்து வைத்திருக்கிறார்கள். பேரப்பிள்ளைகளின் உள்ளங்களும் நினைவுகளும் நிறைய நிறைய அள்ளித்தருகிறார்கள்.
வாரமொருமுறை வயல்வரப்பினூடாக என்னைக் காணவென வரும் அம்மம்மாவை ஓடிப் போய்க் கட்டிக்கொள்ளும் சிறுவயதின் சேலை வாசத்தை இன்னும் நான் உணர்கிறேன். இரவுகளில் மடியில் கிடத்தித் தலைகோதி மெல்லிதாய்த் தாலாட்டுப்பாடி உறங்க வைக்கும் வேளைகளில் உறங்கிப்போய்ப் பின் நள்ளிரவில் விழித்துக் கொள்வேன். அந்த நள்ளிரவின் பழங்காலக் கடிகாரத்தின் முட்கள் நகரும் ஓசையும் மணியடிக்கும் ஓசையும் இன்னும் காதுக்குள் ஒலிக்கின்றன. இப்படியாகப் பால்ய காலங்களின் மிச்சமாக அம்மம்மாக்கள் பின்னாலேயே வருகிறார்கள்.
இந்தப் படம் குறித்து முன்னரும் எங்கோ பார்த்து, படம் பார்க்க வேண்டுமென நினைத்துக் கொண்டேன். இப்பொழுது கட்டாயம் பார்க்கவேண்டுமென்ற ஆவல் மிகைக்கிறது. எப்படிப் பார்க்கப் போகிறேனெனத்தான் தெரியவில்லை.
நல்ல பதிவு அகிலன்..உங்களைச் சந்திக்கும் வேளையில் அம்மம்மா பின்னும் பெட்டிகளின் அழகையும் நேர்த்தியையும் உங்கள் விரல்களில் விட்டுச் சென்றிருக்கிறாரா என உங்கள் விரல்களைத்தான் முதலில் பார்க்கவேண்டும். அருமையாக எழுதுகிறீர்கள் நண்பா !
என் அம்மம்மா – செல்வதற்கு வேறிடமின்றி – ஒரே பெண் – எங்களோடே தம் இறுதி காலம் வரை இருந்து மனதில் இன்றும் எம்முடன் பேசிக்கொண்டிருக்கும் பாட்டியினை நினைத்துக்கொண்டேன்!
எத்தனையோ முறை கடும் கோபம் காட்டியதும்,சிற்சில உதவிகளை கூட செய்ய மறுத்து சண்டையிட்டதும் எப்படித்தான் உடனுக்குடன் மறந்துபோவார்களோ பெரியவர்கள்! – அழுகையினை நிறுத்த இயலவில்லை அம்மம்மா இல்லை என்ற உணர்வினை கொண்டு வரும் ஒவ்வொரு நொடியிலும் !
படம் பற்றிய செய்திகளோடு உங்களின் நினைவுகளையும் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி அகிலன்!
படம் பற்றிய விமர்சனம் மற்றும் உங்கள் அம்மம்மா பற்றி மிக அழகாக எழுதியிருக்கீர்கள்.
இந்த படத்தை பார்த்து அழுத கண்களில் என் கண்களும் ஒன்று. அந்த படத்தில் வரும் பாட்டியை போல தோல்கள் சுருங்கி எங்க வீட்டிலும் ஒரு ஜீவன் என் நலத்தை நினைத்து கடவுளிடம் பிராத்தனை செய்து கொண்டு இருக்கிறார். உங்கள் பதிவின் மூலம் மீண்டும் அந்த நினைவுகளையும் என்னோட ஆயா (நாங்க இப்படி தான் கூப்பிடுவோம் – ) நினைவுகளையும் மீண்டும் நினைத்து பார்க்கிறேன்.
நிறைய பேச வேண்டும் சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது…ஆனால் என்ன சொல்ல!? அவர்கள் அன்பை சொல்ல வார்த்தைகளே இல்லை அது தான் உண்மை 😉
\\அங்கே குழந்தைகளுக்கான ரகசியங்களும் அவைகளுக்கான விடைகளும் உண்டு. வயதானவர்களைக் குழந்தைகள் என்று சொல்லுவது சரிதான் அவர்களால் தான் குழந்தைகளாக முடிகிறது. குழந்தைகளை மனிதர்களாக்க முடிகிறது. அம்மாக்களை விடவும் அம்மம்மாக்களின் சொற்கள் குழந்தைகளை எளிதில் வசப்படுத்தி விடுகிறது. அவர்களிடம் குழந்தைகளிற்குக் கொடுப்பதற்கு எப்போதும் ஏதேனும் இருந்துகொண்டேயிருக்கிறது. குழந்தைகளிடம் மறுதலிப்பதற்கு அம்மம்மாக்களிற்கு இயலுவதில்லை. குழந்தைகளும் அம்மம்மாக்களிடம் தயங்குவதில்லை.
\\\\
ஆயிரம் ஆயிரம் முறை வழிமொழிக்கிறேன் 😉
அருமையான பதிவு அகிலன் 😉
Hey, nice post, really well written. You should post more about this. I’ll certainly be subscribing.
எல்லாருக்குள்ளும் இருக்கும் பால்யத்தின் நினைவுகளையும், அது கொண்டாடும் உறாவுகளையும் மீண்டும் ஒரு முறை மீட்டி வைத்துள்ளது உங்கள் எழுத்து…
தொடக்கத்தில் இருந்த சில வரிகள் மிகவும் ரசனை பூர்வமாக இருந்தன….
ரொம்ப அனுபவிச்சு எழுதியிருக்ீங்க..
அம்மம்மாக்கள் தேவதைகளே! சுகமான வாசக அனுபவம் தந்தமைக்காக பாராட்டுக்கள்.