Skip to content
த.அகிலன்

கனவும், வாழ்வும் பின் என் சொற்களும்…

த.அகிலன்

கனவும், வாழ்வும் பின் என் சொற்களும்…

காதல் சிலுவையில் 05

த.அகிலன், October 6, 2008March 14, 2012

இன்றைக்குப் பெய்த மழையும் உன் முத்தங்களை நினைவூட்டிற்று.. என்னால் உன்னைப் போல் சலனமற்றிருக்க முடியவில்லை.. நீ கலைத்துவிட்டுப்போன எனது வசிப்பிடம் ஒழுங்கற்றுகிடக்கிறது.. நான் என் பிரியங்களையெல்லாம் ஒன்று திரட்டி உனது திசைகளில் ஏவினேன்.. ஒய்ந்த மழையின் பின் சொட்டிக்கொண்டிருக்கும் இலைகளின் துளியைக் கைகளில் ஏந்திக்கொள்ளுகையில் உன் குரலின் ரகசியங்கள் அதில் ஒளிந்துகொண்டிருப்பதாய் படுகிறதெனக்கு.. நீ ஒரு குட்டிப்பெண்.. சில சமயம் அம்மா..  என் திசைகளில் படர்ந்த இருள் நீ விலக்கியது. இப்போது கவிந்திருப்பதும் நீ அளித்ததே..
நீ வெளியேறியபின்.. நான் உன்னை நினைவூட்டும் எல்லாவற்றையும் வெளியேற்ற எண்ணினேன். அப்போதுதான் இந்த பூமியின் எல்லாமே உன்னை நினைவுறுத்த வல்லதென்றறிந்தேன்.. எதையும் வெளியேற்ற முடியவில்லை உன்னையும். நீ ஏகிய திசைகளைக் காத்துக்கிடந்தேன்.. உன் புன்னகையை நினைவிருத்தி நினைவிருத்தி ஒரு ஓவியம் செய்யஎண்ணியிருக்கிறேன்.. பிரிவின் குருரம் வழியும் அந்த வெளிறிய ஓவியத்திலும் உயிர்ப்புடனிருக்கிறது உனது புன்னகை..

இந்த உலகத்தில் போதையற்றது எது வெற்றி போதை,  புகழ் போதை பணம் போதை போதைக்குள் சிக்கிக்கொண்டிருக்கிறது உலகம்.. உலகம் விரும்புவதும் கூட அதைத்தான்.. நானும் உன்னில் போதையாயிருந்தேன்.. அது காதல் போதை.. உன் பிரியத்தின் வார்த்தைகளில் கிறங்கிக் குழந்தையாய்க் கிடக்கிறபோதை.. தாலாட்டுக்கேட்காமல் தூங்கமறுக்கும் குழந்தையைப்போல உனது பிரியங்கள் இல்லாத ஒரு கணப்பொழுதின் வெறுமையைத் தாங்கிக்கொள்ளவியலாமல்.. நான் பரிதவிக்கிறேன்.. நான் இனிமேல் அதை எங்கேயும் பெறமுடியாது அதைத் தரக்கூடியவள் நீ நீ மட்டுமே.. நான் ஒரு ஆடு.. பலியிடக்காத்திருக்கிற ஆடு.. உனது புன்னகையின் பின்னால் ஒழிந்திருக்கும் விசமத்தின் கொடுவேர்களைக் கண்டு கொள்ளத் திராணியற்றவனாகிக் புன்னகைக்கும் தொழிநுட்பம் வாய்க்கப்பெறாமல்;.. அழுது கொண்டிருப்பவன் தன்னிரக்கமும் இயலாமையும் மேலிட..
நீ சலனமின்றி வெளியேறினாய். பிரிவின் சொற்களை அனாசயமாய் அள்ளிஇறைத்தபடி.. நான் காத்துக்கிடந்தேன்.. நீ வரும் திசைகளை நோக்கிக்கொண்டு.. அம்மாவின் வியர்வை படிந்த கரங்களுக்குள் பொத்திவைத்து எடுத்துவரப்போகும் மிட்டாய்க்கு காத்திருக்கும் ஒரு குட்டிப்பையனைப்போல நீ எனக்கான பிரியத்தை எடுத்து வருவாய் எனக்கனவுகள் கொண்டிருந்தேன்.. நீ குறு வாட்களை எடுத்துவந்தாய்.. எனது கனவுகளைக் கிழித்தபடி உன்னோடு போயின அவை.. நான் உன் அடிமை என்னை எடுத்துச்செல் என்றுகதறினேன்.. நீ புன்னகைத்தபடி கடந்தாய்.. வழிகளில் மிதியுண்ட என் பிரியத்தின் சொற்களை புறங்காலால் விலக்கியபடி நெடு வழி நடந்தாய்.. கடைவாயில் வழிந்த ஏளனத்தின் கொடுந்தீயில் பற்றி எரிகிறதென் பிரியம்.. நான். அப்போதும் பூச்செண்டுகளைப் பரிசளித்தேன்.. நீ பூக்கள் சூடுவதில் இப்போதெனக்குப் பிரியமில்லை என்றாய்.. சரி உனக்குப் பிரியமானதைச் சொல் செய்கிறேன் என்றேன்.. உண்மையில் நான் எல்லாவற்றுக்கும் தயாராய் இருந்தேன்.. எல்லாவற்றுக்கும்…  ஆனால் நீயோ நான் செய்வதெதுவோ அது உனக்குப்பிரியமானதாய் இருக்காதென்பதில் உறுதியாய்..இருந்தாய்..
வெறும் ஆய்வுகூடப் பரிசோதனைக் குழாய் போல என்னை ஆக்கி அன்பை ஊற்றிநிரப்பி என்னவாகிறேன்.. என்று பரிசோதித்து விட்டு கழுவிக்காயவைத்துவிட்டு வெளியேறினாய்  நீ. வெளியேறிப்போனபின்பும் நான் எதிர்வினைகள் ஆற்றிக்கொண்டிருந்தேன்.. உனது குறிப்பேடுகளில் எழுதிக்கொள்.. அன்பின் எதிர்வினைகள் ஆயுளுக்கானவை அவை நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது முடிவிலிக்காலம் வரை.. என்று..

புதியகாலைகளும் பழையநினைவுகளும்..

தினமும்
புதிய காலைகளை
எதிர் கொள்ளவேண்டியிருக்கிறது
பழைய நினைவுகளுடன்..

இன்றைக்கும் மழை
உன்னிடம்
என் பிரியத்தை சொன்ன அன்றைக்கு
பொழிந்ததைப்போலவே பொழிகிறது.
மழையிடம் மாறுதல்கள் கிடையாது..

இலையின் முதுகில்
ஒழிந்திருக்கும்
பனித்துளியைப்போலப்
பதுங்கிக் கிடக்கிறது
என் துயரம்
சூரியனால் எடுத்துச்செல்ல முடியாதபடி

காதல் சிலுவையில்

Post navigation

Previous post
Next post

Related Posts

காதல் சிலுவையில் 01

September 15, 2008March 14, 2012

நீ எடுத்துச் சென்ற பிரியங்களை வேறெதனாலும் நிரப்ப முடியவில்லை.. கண்ணாடிக்குவளைகளுள் உடைந்து சிதறும்.. நுரைகளில்.. நொருக்கிக்கொண்டிருக்கிறேன் உனது பிரியத்தை.. ஒரு கணத்தில் குவளையே உன் முகமாக வீசியெறிகிறேன் அதை ஒரமாய்.. உடைந்து சிதறிய கண்ணாடித்துண்டுகளிலெல்லாம் பல்கிப்பெருகுகிறாய் ஏளனச் சிரிப்போடு.. நீ கொடுத்ததை எல்லாம் எடுத்துக்கொள்.. ஒரு மழைநிசியில் நீ கொண்டு வந்த பிரியங்களையெல்லாம்.. மழைநின்ற நண்பகலில் எடுத்துக்கொண்டு வெளியேறினாய்.. வானவில் அழியத்தொடங்கியிருந்த அந்த மழைப்பகல் கோடையாகிற்றெனக்கு மட்டும். பிறகு பெய்த…

Read More

காதல் சிலுவையில் 04

September 28, 2008March 14, 2012

இதுவரை எழுதாத சொற்கள் கொண்டவொரு கவிதையை எழுதும் என் பிரயத்தனங்களை ஏளனம் பொங்கப் பார்த்துக்கொண்டேயிருக்கிறாய் நீ என்னுடைய வார்த்தைகளையெல்லாம் அடிமைசெய்து வைத்துக்கொண்டு. கூரையில் நிரந்தரத் தாளமெனப் பொழிந்து கொண்டிருந்துவிட்டு சட்டென்று நின்று போன மழையைப்போலப் போய்விட்டாய்.. உதிர்ந்து கிடக்கிற கொண்டல் பூக்களை இணைத்துக் கோலங்கள் செய்தபடி காத்திருக்கிறேன் நான்.. நீ வரும் திசைகளின் புகார்கள் விலகுவதாயில்லை. சில கவிதைகள் நினைவுக்குள் அலைந்தன. உன்னை நினைவூட்டும் பொருட்கள் இத்தனை தானென்ற என்…

Read More

காதலின் சிறைக்கைதி…

February 5, 2009December 1, 2009

உலகத்தின் அழகான வார்த்தைகள் ஒருவனிடம் மண்டியிட்டுக்கொண்டிருந்தன. என்னையும் உன் காவியங்களில் சேர்த்துக்கொள் என்று அவனிடம் கெஞ்சின. பெண்கள் அவனது வார்த்தைகளிடம் அடிமையாயிருந்தனர். வார்த்தைகள் அவனிடம் அடிமையாயிருந்தன. முறிந்த சிறகுகள் என்கிற தன் காதல் காவியத்தை கலீல்ஜிப்ரான் உலகத்திற்குக் கொடுத்தார். அந்த அளப்பெரிய காதலனுபவத்தை ஜிப்ரானுக்கு பரிசளித்தவள் அவனது செல்மா. ஜிப்ரான் தன்னுடைய பதினெட்டாவது வயதில் தன் தந்தையின் ஆத்ம நண்பரான பாரிஸ் எபாண்டி கராமி என்பவருடைய செல்ல மகளாக செல்மாவைச்…

Read More

Comments (14)

  1. சயந்தன் says:
    October 6, 2008 at 11:59 pm

    காதல் சிலுவையில் 1
    நான் : அகிலன் சூப்பர் – உணர்வுகளின் திரளெனக் குவிகிறது வார்த்தைகள்

    காதல் சிலுவையில் 2
    நான் : எப்பிடி அகிலன். வார்த்தைப் பஞ்சமே ஏற்படுவதில்லையா உங்களுக்கு

    காதல் சிலுவையில் 3
    ம்.. புதுப் புது வார்த்தைகள்.. கொஞ்சம் புலம்பிறதுமாதிரி இருக்கு

    காதல் சிலுவையில் 4
    திகட்டுது அகிலன். கொஞ்சம் நிறுத்தி.. தொடரலாமே..

    காதல் சிலுவையில் 5
    bla bla bla bla கவிதை –
    அகிலன்
    உன் உயிர்த்த ஞாயிறு எப்போது ?

  2. vazhip pokkan says:
    October 7, 2008 at 11:20 am

    திகட்டுகிறது.அளவுக்கு மிஞ்சினால்…..

  3. Anonymous says:
    October 7, 2008 at 12:25 pm

    வெறும் ஆய்வுகூடப் பரிசோதனைக் குழாய் போல என்னை ஆக்கி அன்பை ஊற்றிநிரப்பி என்னவாகிறேன்.. என்று பரிசோதித்து விட்டு கழுவிக்காயவைத்துவிட்டு வெளியேறினாய் நீ. //

    அம்மான் தெரியும்தானே
    அது கட்டுப்பாட்டு பரிசோதனை. பள்ளிகூடத்தில விஞ்ஞான பாடத்தில வருமே அதேதான்.

    உண்மையானதும் விளைவறியும் நோக்கம் கொண்டதுமான சோதனை இன்னொரு சோதனைக் குழாயில நடக்கும்.

  4. வந்து போனவன் says:
    October 7, 2008 at 1:20 pm

    //உண்மையானதும் விளைவறியும் நோக்கம் கொண்டதுமான சோதனை இன்னொரு சோதனைக் குழாயில நடக்கும்.//
    பிறகு அதில கண்டு பிடிச்ச முடிவுகளை இதைவிடவும் வேற குழாயில பிரயோகிப்பினமோ..

  5. Anonymous says:
    October 7, 2008 at 2:19 pm

    பிறகு அதில கண்டு பிடிச்ச முடிவுகளை இதைவிடவும் வேற குழாயில பிரயோகிப்பினமோ.//

    ஓம். ஆனா அந்த குழாய அவையின்ர அம்மா அப்பாதான் வாங்கிட்டு வருவினம்

  6. aruna says:
    October 7, 2008 at 6:35 pm

    //இன்றைக்கும் மழை
    உன்னிடம்
    என் பிரியத்தை சொன்ன அன்றைக்கு
    பொழிந்ததைப்போலவே பொழிகிறது.
    மழையிடம் மாறுதல்கள் கிடையாது//

    மழை என்று மாறியது??நாம்தான் வசதிப் படி மழையை காரணங்களாய் மாற்றிக் கொண்டிருக்கிறோம்.
    அன்புடன் அருணா

  7. aruna says:
    October 7, 2008 at 6:41 pm

    //வெறும் ஆய்வுகூடப் பரிசோதனைக் குழாய் போல என்னை ஆக்கி அன்பை ஊற்றிநிரப்பி என்னவாகிறேன்.. என்று பரிசோதித்து விட்டு கழுவிக்காயவைத்துவிட்டு வெளியேறினாய் நீ. வெளியேறிப்போனபின்பும் நான் எதிர்வினைகள் ஆற்றிக்கொண்டிருந்தேன்.. உனது குறிப்பேடுகளில் எழுதிக்கொள்.. அன்பின் எதிர்வினைகள் ஆயுளுக்கானவை அவை நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது முடிவிலிக்காலம் வரை.. என்று//

    மிக மிக அருமையான பதிவு……மனதில் அப்படியே ஒரு சில அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
    அன்புடன் அருணா

  8. therup paadakan says:
    October 8, 2008 at 9:05 am

    விபச்சாரங்கள் பலவகைப்படும். தன் காதலையும் தன் சோகத்தையும்கூட விபச்சாரம் செய்யலாமென்ற உண்மை இப்போதுதான் தெரிந்தது.காதலுக்கு மரியாதை செய்பவன் ஒருநாளும் இப்படிக் கொச்சைப்படுத்தமாட் டான்
    -தெருப் பாடகன்

  9. த.அகிலன் says:
    October 8, 2008 at 9:15 pm

    வாங்க தெருப்பாடகன்..
    தெருவிலயே ரொம்பநாளாப்பாடுறதால விபச்சாரம் குறித்த தகவல்கள் அதிகம் தெரிஞ்சிருக்கு போல அல்லது எல்லாத்தையும் விபச்சார நோக்கோட பாக்கிறியளோ என்னவோ.. (நீங்க ஏதோ சொந்தக்கதை கதைக்கிற மாதிரி இருக்கு) எனது வலி அல்லது உணர்வை அது என்னவடிவமாக இருந்தாலும் எழுதுவதற்கு பெயர் விபச்சாரம் என்றால் அதைச் செய்ய ஆசைப்படுகிறேன்.. எல்லாவற்றுக்கும் ஒரு வடிகால் தேவை அழுவதற்கும் கூட.. மற்றபடி நான் உங்களைக் கூப்பிட்டு இதைப்படிக்கச் சொல்லி அழவில்லை.. எனது தளம் நான் எழுதுகிறேன் அவ்வளவுதான். படைப்பை படைப்பாக அணுகுங்கள் தலைவா.. மற்றபடி அவரவர்க்கான பார்வைகள் ஒரு விசயம் குறித்து வேறுபடலாம்.. அதில் எனக்கு ஆட்சேபணை எதுவுமில்லை..

  10. king... says:
    October 8, 2008 at 9:45 pm

    ம்ம்ம்…

  11. king... says:
    October 8, 2008 at 9:47 pm

    எனக்கு புரிகிறது அண்ணன்…
    கொட்டித்தீர்த்துவிட முடியும் என்றால் ஆறாவுதையும் பகிரலாம்…

  12. கென் says:
    October 9, 2008 at 12:35 pm

    அகிலன் ,

    தெருப்பாடகன் போன்ற விபச்சார மாமாக்களுக்கு பதில் அளிக்க தேவையில்லை என்பது என் கருத்து/

  13. siththanthan says:
    October 20, 2008 at 8:22 am

    “வழிகளில் மிதியுண்ட என் பிரியத்தின் சொற்களை புறங்காலால் விலக்கியபடி நெடு வழி நடந்தாய்.. கடைவாயில் வழிந்த ஏளனத்தின் கொடுந்தீயில் பற்றி எரிகிறதென் பிரியம்.”
    யதார்த்தமான வரிகள் இவை.காதல் என்ற வார்த்தைகளின் பரிமாணங்களைக்கடந்தும் அர்த்தங்களைக் கிளர்த்திக் கொண்டிருப்பவை.எவற்றில்த்தான் போலிகள் இல்லை.மனித உறவுகளின் அடித்தளத்தில் இப்படித்தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது .வாழ்த்துக்கள் அகிலன்.

  14. mercy says:
    October 20, 2008 at 1:23 pm

    ஆனால் நீயோ நான் செய்வதெதுவோ அது உனக்குப்பிரியமானதாய் இருக்காதென்பதில் உறுதியாய்..இருந்தாய்..

    romba romba arumayana vaarthaigal padichu mei maranthen
    she has been pushed to this extreme situation which is irreversible

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • அனுபவம்
  • எண்ணங்கள்
  • ஒலிக்கவிதைகள்
  • ஒலிப்பதிவுகள்
  • கவிதைகள்
  • காதல் சிலுவையில்
  • குளிரடிக்கிற ஏரியா
  • சினிமா அனுபவம்
  • நேர்காணல்
  • புகைப்படம்
  • புத்தகம்
  • September 2024
  • June 2021
  • November 2019
  • March 2019
  • April 2018
  • May 2013
  • February 2013
  • December 2012
  • October 2012
  • July 2012
  • June 2012
  • November 2010
  • August 2010
  • June 2010
  • April 2010
  • March 2010
  • February 2010
  • September 2009
  • August 2009
  • July 2009
  • June 2009
  • February 2009
  • January 2009
  • December 2008
  • November 2008
  • October 2008
  • September 2008
  • August 2008
  • July 2008
  • June 2008
  • May 2008
  • April 2008
  • March 2008
  • January 2008
  • December 2007
  • October 2007
  • September 2007
  • August 2007
  • July 2007
  • June 2007
  • May 2007
  • December 2006
  • November 2006
  • October 2006
  • September 2006
  • August 2006
  • July 2006
  • June 2006
©2025 த.அகிலன் | WordPress Theme by SuperbThemes