Skip to content
த.அகிலன்

கனவும், வாழ்வும் பின் என் சொற்களும்…

த.அகிலன்

கனவும், வாழ்வும் பின் என் சொற்களும்…

காதல் சிலுவையில் 01

த.அகிலன், September 15, 2008March 14, 2012

நீ எடுத்துச் சென்ற பிரியங்களை வேறெதனாலும் நிரப்ப முடியவில்லை.. கண்ணாடிக்குவளைகளுள் உடைந்து சிதறும்.. நுரைகளில்.. நொருக்கிக்கொண்டிருக்கிறேன் உனது பிரியத்தை.. ஒரு கணத்தில் குவளையே உன் முகமாக வீசியெறிகிறேன் அதை ஒரமாய்.. உடைந்து சிதறிய கண்ணாடித்துண்டுகளிலெல்லாம் பல்கிப்பெருகுகிறாய் ஏளனச் சிரிப்போடு..

நீ கொடுத்ததை எல்லாம் எடுத்துக்கொள்.. ஒரு மழைநிசியில் நீ கொண்டு வந்த பிரியங்களையெல்லாம்.. மழைநின்ற நண்பகலில் எடுத்துக்கொண்டு வெளியேறினாய்.. வானவில் அழியத்தொடங்கியிருந்த அந்த மழைப்பகல் கோடையாகிற்றெனக்கு மட்டும். பிறகு பெய்த மழை உன் கால்தடங்களையும் அழித்தது.. சொட்டிக்கொண்டிருக்கும் இலைகளின் துளியில் விரல்நனைத்தென்னை ஈரம் செய்யுமொரு குழந்தை நினைவூட்டிப்போகிறது உன் பிரியத்தையும் பிரிவையும்.. நீ தங்கியிருந்த சில நாட்களின் கதகதப்பை இழக்க மறுக்கிறதென் மனம்.. கோழிக்குஞ்சென உனக்குள் ஒண்டிக்கிடந்த அதை ஒரு கசாப்புக்கடைக்காரனின் மனநிலையோடு பிய்த்து எடுத்தாய்.. ஒரு அனாதையெனத் தனிக்கவிட்டு..

ஒரு விருந்தாளியின் எல்லைகளோடு நீ நின்றிருக்கலாம்.. நானும் ஒரு அழைப்பாளனின் பிரியத்தை மட்டுமே உனக்கு வழங்கியிருக்கலாம்.. (எல்லாம் நிகழ்ந்தேறியபின் இன்னும் என்ன..) ஆனாலும் உன்னால் சட்டென்று வெளியேறிவிட முடிந்தது ஒரு விருந்தாளியைப்போல… எந்தச் சலனங்களுமற்று. நீ அன்றைய மழைக்குத் தங்கியவளாகப் பாவனைகள் கொண்டாய்.. நான் மழையைக்கொணர்ந்தவள் நீயென்ற கற்பனைகளினின்றும் விடுபட இயலாதவனானேன்.. எல்லாவற்றையும் எடுத்தச்சென்றபின் உன் நினைவுகளை மட்டும் இங்கெதற்கு வைத்திருக்கிறாய்.. வெளியேறு போ ஓடிப்போ..

நான் பேயோட்டியின் தீவிரத்தோடு உனை விரட்டும் கூச்சல்கள் இடுகிறேன்.. புறக்காதுகள் நிறையும் படி.. ஆனால் உனக்கு மட்டும் கேட்கும் ரகசியக் குரலில் உன்னால் புரிந்து கொள்ளமுடியுமெனத் தான் நினைக்கும் சங்கேதங்களில். உன்னை வெளியேற வேண்டாம் எனக்கெஞ்சியபடியிருக்கிறது மனம்.. நீ இதைக்கேட்கவும் போவதில்லை..

மது மிதந்துகொண்டிருக்கிறது.. ஆர்க்கிமிடிஸ் தோற்றுப்போன இடம் இது.. உன்னை வெளியேற்றி அதனை நிரப்பமுடியவில்லை.. நீ இருக்கிறாய்.. நூற்றாண்டுகள் வளர்ந்து கிளைத்த ஒரு பெருமரம்போல.. அதன் நீலியாய். வனதேவதையாய்.. எல்லாமுமாய்.. இருக்கிறாய்..உன்னால் எப்படி முடிகிறது இப்படி அடிமை செய்ய.. எனக்கே ஆச்சரியமாய் இருக்கிறதாய் உள்ளுக்குள் ரசித்தபடியிருக்கிறேன் நான் உன் அதிகாரத்தை.. நீ புதிய அடிமைகளைத் தேடிப்போகிறாய்…

என் இயலாமையின் அவலங்கள் பெருகப்பெருக நான் கடதாசிக் கோப்பைகளைக் கசக்கிவீசுகிறேன். இயலாமையும் அன்பின்மையும் பெருகும் இப்பொழுதில் உடைந்து அழத்தொடங்குகிற மனசு உலகின் பெருங்கோழையாய் என்னை ஆக்கிவிடுகிறது.நீ தங்கியிருந்த நாட்களில் எனக்கழித்த நம்பிக்கையில் கடைசித்துளியையும் பருகியாயிற்று.. நான் மழையின் தடங்களை வெறித்தபடியிருக்கிறேன்.. அவைக்குள் ஒழிந்துகொண்டிருக்கும் உன் காலடித்தடங்கள் சென்ற திசைகளின் அடையாளங்கள் தேடி. தனிமையின் பெருங்கோடை உன் பிரியத்தின் ஒருதுளியைத் தாகிக்கிறது.. எனது பயணங்கள் சாத்தியமில்லாத் திசைகளில் இறங்கி நடக்கிறாய் நீ.. எனது மலர்கள் பூக்கத்தொடங்கிய ஒரு காலையில் நீ அவற்றைப் புறக்கணித்து கடந்து போனாய்..

உனது தொலைவுகள் எனது பார்வைப்புலத்தினின்றும் அகன்றன.. உன்னைப் பின்தொடரவியலாதபடி உனது ஒளிவட்டம் மங்கிய இவ்வந்தியில்.. அது எனது மதுக்கிண்ணங்களிற்குள்.. சுழன்று கொண்டிருப்பதைக் கண்டேன்..

என்னிடம் மிச்சமிருக்கும் காதலின் சொற்களனைத்தையும் திரட்டி உனக்கான பாடல் ஒன்றைச் செய்கிறேன்… உன் புன்னகையில் தொடங்கும் அப்பாடலின் இறுதிவரிகளை அழித்துவிடுகிறதென் கண்ணீர்த்துளி. நான் மறுபடி மறுபடி முயல்கிறேன் முன்னிலும் தீவிரமாய் அந்த வரிகளை நிரப்பிவிட. எத்தனை தடைவை முயன்றும் அதுவே நிகழ்கிறது.. கடைசியில் இறுதிசெய்யாத அந்தப்பாடலை.. நான் பாடத்தொடங்கினேன்.. தனிமை கவிந்திருக்கும் இந்த அறையில்.. காலிப் போத்தல்களையும் என்னையும் விட்டுவிட்டு நண்பர்கள் வெளியேறிப்போன பின்..

பின் குறிப்பு 01

எனக்குத் தெரிந்த தண்ணி அடிக்கிறவரிடத்தில் நான் ஒரு முறை கேட்டேன்.. தண்ணி அடிக்கிறதில என்ன லாபம். அவர் சொன்னால் தம்பி இந்த உலகத்தில் இரண்டு விதமா சந்தோசமாயிருக்கலாம்.. ஏதையாவது சாதிச்சு>நல்லது செய்து எந்த பிரச்சினைகளும் இல்லாத சாமர்த்தியமா வாழ்க்கையை ஓட்டி சந்தோசமா இருக்கலாம்.. மற்றது இருக்கிற பிரச்சினை எல்லாத்தையும் மறந்து சந்தோசமாயிருக்கிறது.. தண்ணி இரண்டாவதைச் செய்யும்.. புதுசா ஒரு உலகம் தெரியும்.. எனக்கும் புது உலகங்களை பார்க்க ஆவலிருந்தும்.. என்னவோ வாய்ப்பும் விருப்பும் இருந்ததில்லை…

பின் குறிப்பு 02

யோவ் சொன்னா கேளுமய்யா.. 3 நாளா தொடர்ந்து தண்ணி அடிக்கிறீர் கூடாது.. நம்ம எல்லாம் சும்மா ஜாலிக்கு அப்பப்போ அடிக்கிறதோட சரி.. அப்புறம் செல்வண்ணன் என்னையத் திட்டப்போறாரு… உம்மைக் கெடுக்கிறன்னு..

அதைப்பற்றி உங்களுக்கென்னய்யா .. நான் என்ன குழந்தைப்பிள்ளையா.. 25 வயசாச்சு எனக்குத் தெரியாதா என்னைப்பற்றி.. நான் விரும்பித்தானே அடிக்கிறன்.. அதுக்கில்லையா அப்புறம் நீர் அழுதிட்டே படுக்கிறீரு.. நைட்டுமுழுக்க.. தூங்க முடியல என்னால..

நாந்தானய்யா அழுகிறன். வாந்தியெடுத்து அசிங்கம் பண்றனா இல்லைல்ல.. அப்புறம் என்ன ….. ரு ஆ.. நீங்க விரும்பினா கீழ போய்ப்படுத்துக்கிறது.. இடந்தான் இருக்கில்ல எதுக்கு இதேரூம்ல படுக்கிறீங்க..

பின்குறிப்பு 03

எனது சொற்களின் வண்ணங்களை

நீ எங்கே வைத்திருக்கிறாய்

என்னிடமிருக்கும்

ஒற்றை வெளிறிய ஓவியத்தையும்

தந்துவிடச் சொல்லி மிரட்டுகிறாய்

உனது காலடிஓசைகளைக்

கற்பனைபண்ணியபடியிருக்கிறது

என் செவிகள்..

ஆரவாரம் மிகுந்த இந்த மதுக்கடையில்

தனித்து நிரம்புகிறது எனது கோப்பைகள்..

உடைந்து சிதறுகிறது.. நுரையும் மனமும்..

தீர்ந்த கோப்பைகளை மறுபடியும் நிரப்புகிறேன்

இன்னமும் இடம்பெயராதிருக்கிறதுன் நினைவுகள்..

ஆர்க்கிமிடிஸ் ஒரு பொய்யன்..

காதல் சிலுவையில்

Post navigation

Previous post
Next post

Related Posts

சாத்தானின் காதலி

February 7, 2009December 1, 2009

காதல் எப்போதும் தனக்கான நியாயங்களைக் கொண்டிருக்கிறது. உலகத்தின் நியதிகளைச் நீர்த்துப்போகச் செய்யவும் தனக்கான விதிகளை எழுதிக்கொள்ளவும் காதலால் முடிந்திருக்கிறது. காதலின் அழகான முடிச்சுக்கள் விழுகின்ற இடங்கள் நம்பமுடியாதவை சிலசமயங்களில் அதிர்ச்சிகளைத் தரவல்லவை. காதல் நேசித்துக்கொண்டிருக்கிறது.. தன்னைத்தானே. எந்த எதிர்பார்ப்புகளுமற்று ஒரு கடைக்கண் பார்வையையோ அல்லது சின்னப்புன்னகையைத்தானும் பரிசளிக்காத காதலியின் பின்னால் அலைந்துகொண்டேயிருப்பான் ஒருத்தன்… தன்னைச் சட்டைசெய்யாது.. வேறுயாரோ ஒருத்தியின் பின்னால் அலைந்துகொண்டிருக்கும் ஒருத்தனிடம் காலம் முழுதும் தன்னை நிராகரிக்கிற ஒருவனிடம்…

Read More

காதல் சிலுவையில் 02

September 16, 2008March 14, 2012

விளக்குகள் அணைக்கப்பட்ட கரையில் தளும்பிக்கொண்டிருக்கிற மதுக்கிண்மெனக்கிடக்கிறது கடல்.. உனது நினைவுகளெனப் பற்றியிழுத்து எனை வீழ்த்தும் திட்டங்கள் வகுக்கிறது கரைமணல்.. யாரோ ஒருத்தனின் முத்தங்களிற்கான யாரோ ஒருத்தியின் சிணுங்கலை எடுத்துப்போகிறது காற்று எனைக்கடந்து.. உனது முத்தங்களை நினைவூட்டி.. உன் சாயலை ஒத்த ஒருத்தியிடம் தயங்கிநிற்கிறதென் பாதங்கள்.. நிலவு எரிந்துகொண்டிருக்கிறது.. ஒரு மதுக்கடையின் மங்கலான விளக்குப்போல.. உலகம் ஒரு நாகரீகமான மதுக்கடை.. அதனால் தான் போதை எல்லாவற்றிலும் ஒளிந்திருக்கிறது.. காதல்,வெற்றி,காமம் எல்லாவற்றிலும் உள்ளொளிர்ந்து…

Read More

காதல் சிலுவையில் 04

September 28, 2008March 14, 2012

இதுவரை எழுதாத சொற்கள் கொண்டவொரு கவிதையை எழுதும் என் பிரயத்தனங்களை ஏளனம் பொங்கப் பார்த்துக்கொண்டேயிருக்கிறாய் நீ என்னுடைய வார்த்தைகளையெல்லாம் அடிமைசெய்து வைத்துக்கொண்டு. கூரையில் நிரந்தரத் தாளமெனப் பொழிந்து கொண்டிருந்துவிட்டு சட்டென்று நின்று போன மழையைப்போலப் போய்விட்டாய்.. உதிர்ந்து கிடக்கிற கொண்டல் பூக்களை இணைத்துக் கோலங்கள் செய்தபடி காத்திருக்கிறேன் நான்.. நீ வரும் திசைகளின் புகார்கள் விலகுவதாயில்லை. சில கவிதைகள் நினைவுக்குள் அலைந்தன. உன்னை நினைவூட்டும் பொருட்கள் இத்தனை தானென்ற என்…

Read More

Comments (3)

  1. ஆர்க்கிமிடிஸ் says:
    September 15, 2008 at 8:59 am

    வன்மையாகக் கண்டிக்கிறேன்..

  2. Saravana Kumar MSK says:
    September 15, 2008 at 6:57 pm

    //ஒரு விருந்தாளியின் எல்லைகளோடு நீ நின்றிருக்கலாம்.. நானும் ஒரு அழைப்பாளனின் பிரியத்தை மட்டுமே உனக்கு வழங்கியிருக்கலாம்..

    உன்னை வெளியேற்றி அதனை நிரப்பமுடியவில்லை.. நீ இருக்கிறாய்..

    நீ புதிய அடிமைகளைத் தேடிப்போகிறாய்…

    இயலாமையும் அன்பின்மையும் பெருகும் இப்பொழுதில் உடைந்து அழத்தொடங்குகிற மனசு உலகின் பெருங்கோழையாய் என்னை ஆக்கிவிடுகிறது.//

    பின்னீட்டீங்க அகிலன்.. மிக அருமை..

  3. Saravana Kumar MSK says:
    September 15, 2008 at 6:59 pm

    என்ன நண்பரே.. மப்போட இருக்கீங்க போல சமீப காலமாய்.. இரண்டாவது போதை பதிவு..
    🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • அனுபவம்
  • எண்ணங்கள்
  • ஒலிக்கவிதைகள்
  • ஒலிப்பதிவுகள்
  • கவிதைகள்
  • காதல் சிலுவையில்
  • குளிரடிக்கிற ஏரியா
  • சினிமா அனுபவம்
  • நேர்காணல்
  • புகைப்படம்
  • புத்தகம்
  • September 2024
  • June 2021
  • November 2019
  • March 2019
  • April 2018
  • May 2013
  • February 2013
  • December 2012
  • October 2012
  • July 2012
  • June 2012
  • November 2010
  • August 2010
  • June 2010
  • April 2010
  • March 2010
  • February 2010
  • September 2009
  • August 2009
  • July 2009
  • June 2009
  • February 2009
  • January 2009
  • December 2008
  • November 2008
  • October 2008
  • September 2008
  • August 2008
  • July 2008
  • June 2008
  • May 2008
  • April 2008
  • March 2008
  • January 2008
  • December 2007
  • October 2007
  • September 2007
  • August 2007
  • July 2007
  • June 2007
  • May 2007
  • December 2006
  • November 2006
  • October 2006
  • September 2006
  • August 2006
  • July 2006
  • June 2006
©2025 த.அகிலன் | WordPress Theme by SuperbThemes