என் சனங்களின் பசியை
எழுதும்
இந்த வார்த்தைகளின்
வெட்கத்தையும் துயரையும்
நீ
அறிவாயோ இறைவா?
எனது
குழந்தைகளின் இரவுகளை
தயைகூர்ந்து
வெடிச்சத்தங்களால்
நிரப்பாதிரும்..
இரண்டு
துப்பாக்கிகளுக்கிடையில்
மிரள்கிற அவர்களின்
மழலைச் சொற்களின்
அச்சத்தை விலக்கும்..
என்
சனங்கள் பாவம்
முன்னொரு போது
போரினின்று
நான் வெளியேறுகையில்
ஒன்பதாம் திசையில்
வழிகாட்டி ஒளிர்ந்த நட்சத்திரத்தை
அவர்களுடைய வானத்திலேயும்
ஒளிரச்செய்யும்
என் ஆண்டவரே..
என்னிடமிருக்கும்
இந்தச் சொற்கள்
சுயநலமிக்கவை….
பதுங்குகுழியின்
தழும்புகளை,
கண்ணிவெடியில்
பாதமற்றுப்போனவளின் பயணத்தை,
மற்றும்
வானத்தில் மிதந்த
ஒரு பேரிரைச்சலுக்கு
உறைந்து போன குழந்தையின் புன்னகையை…
நாளைக்கான நிபந்தனைகள் ஏதுமற்ற
ஓய்வுப்பொழுதொன்றில்
வெற்றுத்தாளில் அழத்தொடங்குகின்றன.
என்னிடமிருக்கும்
இந்தச் சொற்கள்
அயோக்கியத்தனமானவை.
துப்பாக்கிகளிடையில்
நசிபடும் சனங்களின் குருதியை
டாங்கிகள் ஏறிவந்த
ஒரு சிறுமியின் நிசிக்கனவை
மற்றும்
தனது ஊரைப்பிரியமறுத்த
ஒரு கிழவனின் கண்ணீரை
போரின் நிழல்விழா வெளியொன்றின்
குளுமையிலிருந்து
பாடத்தொடங்குகின்றன..
என்னிடமிருக்கும்
இந்தச் சொற்கள்
சுயநலமிக்கவை….
அயோக்கியத்தனமானவை…
ஆயினும் என்ன
பிணங்களை விற்பதற்கு முன்பாக
துயரங்களை விற்றுவிடுவதுதான்
புத்திசாலித்தனமாது..
துயரங்களை விற்றுவிடலாம் நினைவுகளை? 🙁
யதார்த்தமான வரிகள்….
sir
i would like to buy your book maranathin vasanai.plz tell me about the publication.i can feel your pain n pray for u . thank u
every time i read your poem you make me sad and cry you have so powerful words keep up the work
சிந்திக்க வைத்த வரிகள்…
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது…வாழ்த்துக்கள்…
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_12.html) சென்று பார்க்கவும்… நன்றி…
நேரம் கிடைச்சா நம்ம தளம் வாங்க… நன்றி…