Skip to content
த.அகிலன்

கனவும், வாழ்வும் பின் என் சொற்களும்…

த.அகிலன்

கனவும், வாழ்வும் பின் என் சொற்களும்…

வெளிதேடியலையும் இன்னொரு பறவை

த.அகிலன், June 8, 2009December 1, 2009

எழுதியவர்- கருணாகரன்
அகிலனின் கவிதைகளைப்பற்றி எழுதத் தொடங்கும்போது முதலில் ஒரு பிரச்சினை ஏற்படுகிறது. எந்த அகிலனின் கவிதைகளைப்பற்றி இங்கே எழுதப்படுகிறது என்ற கேள்வி உருவாகக்கூடியமாதிரி, தமிழில் பல அகிலன்களின் பெயர் பதிவாகியுள்ளது. அதிலும் ஈழத்தில் மட்டும் இரண்டு அகிலன்களுண்டு. ஒருவர் பா. அகிலன். மற்றவர் த.அகிலன். இருவருமே சமகாலத்தில் கவிதைகளை எழுதிவருகிறார்கள். இரண்டுபேருமே நவீன கவிதையின் புதிய பிரதேசங்களைக்கண்டடையும் முனைப்புடையவர்கள். எனவே இதில் எந்த அகிலனைப்பற்றி இங்கே எழுதப்படுகிறது என்று யாரும் முதலில் கேட்கவோ அவதானிக்கவோ கூடும். அதற்கு முன்னர் தமிழில் அகிலன் என்ற அடையாளம் பதிந்திருக்கும் விதம் குறித்து எழுதவேண்டிய நிலையுள்ளது.

இந்தப்பெயர் கடந்த தலைமுறையில் பதிந்த விதம் வேறுவிதமானது. அது படைப்பின் கூர்மைக்கும் செம்மைக்கும் எதிரானதாகவே இருந்தது. அந்தத்தலைமுறையில் இருந்த அகிலனை வாசித்தவர்கள் ஏராளம். அந்த அகிலன் தமிழ்ப்படைப்புக்கு எதிராக இயங்கியவர் என்ற தெளிவின்றியே அன்று தமிழ்ச்சமூகம் அந்த அகிலனைக் கொண்டாடியது. இப்போதும் பொதுவாக அந்த அகிலனைப்பற்றிய மறுவாசிப்புகளில்லாமலே தமிழ்ச்சமூகமிருக்கிறது. செய்யப்பட்ட மறு வாசிப்புகளையும் முன்வைக்கப்பட்ட விமரிசனங்களையும் தமிழ்ச்சமூகம் சரியாகப்புரிந்து கொண்டதாகவும் இல்லை. அகிலனுக்கு இந்திய அரசின் சாகித்திய அகாதமி விருது கிடைத்தபோதே படைப்பின் நுட்பங்களை அறிந்தவர்கள்கண்டித்தார்கள். அந்த விருதுக்கு அகிலன் தகுதியற்றவர் என்றும் எதிர்த்தார்கள். அப்போது விருதுக்குழு மீதே பெரும் குற்றம் சாட்டப்பட்டது. காலம் இவ்வளவு கடந்த பின்னும் அந்த விருது அகிலனுக்கு வழங்கப்பட்டமை குறித்து இன்னும் தீராத சர்ச்சைகளும் விமர்சனங்களுமுண்டு. ஆனால் அந்த அகிலன் தமிழில் பெருவாரியாகக் கொண்டாடப்பட்டிருக்கிறார்.

தமிழ்ச்சூழலின் அவல நிலையே இதுதான். தமிழில் பெரிதுங்கொண்டாடப்படுவோர் விழல்களாகவே இருந்துள்ளனர். இப்போதும் அப்படியான விழல்தனங்கள்தான் கொண்டாடப்படுகின்றன. விழல்தனங்கள் தமிழில் இலகுவாக வெற்றி பெற்றும் விடுகின்றன. பதிலாக சீரியஸானவை கவனிப்பாரற்றே கிடக்கின்றன. இந்த அறிவீனம் அல்லது புரிதலின்மை என்பது இன்னும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இதுதான் பாரதியின் காலத்திலும் இருந்தது. இப்போதும் தொடருகிறது. பாரதியை அன்று பலரும் புரிந்து கொள்ளவில்லை என்று சொல்கிறோம். ஆனால் இப்போது மட்டும் யாரைச்சரியாகப் புரிந்து கொள்கிறோம். யாருக்கு உரிய இடத்தைக் கொடுக்கிறோம். தமிழில் பெருவாரியாகக் கொண்டாடப்;படும் சினிமா இதற்கு துலக்கமான உதாரணமாகும். வெற்றிப்படங்களாகவும் வெற்றிப்பட நாயகர்களாகவும் தமிழ்மூளை கண்டுபிடித்துக் கொண்டாடும் தரப்புகளின் சிறப்பு எதுவெனத் தெரியுமல்லவா. அதுபோலவே பெருவாரியான தமிழர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிற படைப்பாளிகள், அரசியல்வாதிகள், விசயங்கள் எல்லாமே மிகவும் தரங்குறைந்தவையும் வாழ்க்கைக்கு எதிர்மாறானவையுமே இருக்கின்றன.பதிலாக தரமானவையும் சிறந்தவையும் பாராமுகமாக இருக்கின்றன. சீரியஸானவை புறக்கணிக்கப்படுகின்றன. சீரியஸான ஆட்களும்தான்.

இத்தகைய துயரமும் அவலமும் நிறைந்த பின்னணியில்தான் தமிழ்ப்படைப்புகளை அணுகவேண்டியிருக்கிறது. அதிலும் அகிலன் என்ற ஒரு படைப்பாளி எழுதிய கவிதைகளைப்பற்றி எழுதவரும்போது இந்த மாதிரி ஒரு முன்விளக்கத்தைக் கொடுக்கவேண்டிய வருத்தந்தரும் நிலையுமிருக்கிறது. இப்போது இரண்டு அகிலன்கள,; அகிலன் என்ற பெயர் தமிழ்ச்சூழலில் பதிந்துள்ள முறைமைக்கும் அடையாளத்துக்கும் மாறாக எழுதிவருகிறார்கள். இதில் பா. அகிலன் தன்னுடைய பதுங்குகுழி நாட்கள் என்ற தொகுப்புக்கூடாக பெருங்கவனிப்பைப் பெற்றவர். தமிழில் அகிலன் என்ற அடையாளம் பா.அகிலனின் மூலம் வேறுவிதமாக மாறுகிறது என்ற தொனியில் அவருடைய கவிதைகளை முன்வைத்துப் பேசும்போது வெங்கட்; சாமிநாதன் குறிப்பிட்டுள்ளார். இப்போது இன்னொரு அகிலன், வெங்கட் சாமிநாதன் சொன்னதைப் போல இன்னொரு புதிய அடையாளமாக தெரிகிறார். மாறுதலான பார்வையும் அனுபவமும் வெளிப்பாடும் கொண்ட ஒரு கவிதைத்தளத்தை நிர்மாணிக்க முனைகிறார் இந்தத் த. அகிலன்.

இவருடைய கவிதைகள் இன்னமும் தொகுக்கப்பட்டு புத்தகமாக்கப்படவில்லை. ஆனால் அகிலனின் கவிதைகள் பல இதழ்களிலும் இணைய இதழ்களிலும் வெளியாகியுள்ளன. அப்படி வெளியாகியுள்ள கவிதைகள்தான் இப்போது இந்த விமரிசனத்தை எழுத்தூண்டியிருக்கின்றன. புரிந்துகொள்ளுதலில் இடையறாது நிகழும் நெருக்கடிகளையும் பிரச்சினைகளையும் தவறுகளையும் -துயரோடு- சொல்லத்துடிக்கின்றன த. அகிலனின் கவிதைகள். எல்லாத்தளங்களிலும் நிகழ்ந்து கொண்டிருக்கிற புரிதலின்மை அல்லது தவறான புரிதல்கள் மனிதனைச் சிதைக்கும் அவலத்தை அகிலன் சொல்கிறார். இப்படி புரிதலின்மையின் மையத்தை அகிலன் சொல்லத்துடிக்கும்போது அதை அவற்றின் அர்த்தத்தில் புரிந்து கொள்ளாமல் வேறுவிதமாகப் புரிந்து கொள்ளும் நிலையும் யதார்த்தத்தில் ஏற்பட்டு விடுகிறது. இதுதான் மிகச் சுவாரசியமானதும் மிக அவலமானதுமாகும். புரிந்துகொள்ளலின்மை பற்றி பேசும்போது அதையே புரிந்து கொள்ளாமலிருக்கும் அவலத்தை என்னவென்று சொல்லலாம்.

புரிந்துகொள்ளலில் நடக்கின்ற குறைபாடுகளைப்பற்றி குறிப்பிடும்போது அதனையே குறைபாட்டுடன் புரிந்து கொள்ள முற்படும் அவலம் என்பது பெரும் வேதனைக்குரியது. இப்படியெல்லாம் புரிதலின்மை நிகழும்போது மனிதன் புழுவைப்போல துடித்துத்தான் ஆகவேண்டியிருக்கிறது. இந்தத் ‘துடித்தல் ‘ என்ற அந்தரிப்பு நிலைக்குள் கொதித்துக் கொண்டிருக்கும் பேரவலம் அகிலனின் கவிதைகளில் நிரம்பிக்கிடக்கின்றன. நவீன வாழ்வில் நிரம்பிக்கிடக்கும் காயங்களில் அநேகமானவை புரிதலின்மையினால் ஏற்படுவதே. புரிதலின்மையில் மொழியும் நடத்தைகளும் முக்கியமாகின்றன. மொழியின் தொனி பல சந்தர்;ப்பங்களிலும் எதிர்மறையான புரிதல்களை, விளக்கங்களை ஏற்படுத்தி விடுகின்றது. சொல்லில் மட்டும் பிழையான பொருள் ஏற்பட்டு விடுவதில்லை. சொல்லும் தொனியிலும் தவறான புரிதல் நிகழ்ந்து விடுகிறது. இதற்கு மொழியின் விரிவிலுள்ள போதாமை ஒரு காரணம். அத்துடன் அந்தச் சொற்களைப்பற்றிய படிமமும் அவை உணர்த்துகிற முன்னனுபவங்களும் இவ்வாறு தவறான புரிதல்களுக்குக் காரணமாகிவிடுகின்றன. அவ்வாறு படிமம் உருவாகுவற்கு அப்போதைய மனித நடத்தைகளே காரணமாகின்றன. ஆகப் பொதுவாக, மொழிக்கும் அப்பால் மனித நடத்தைகள் முக்கியமானவையாகின்றன. இந்த நடத்தைகள்தான் சொல்லுக்கான பொருளை அர்த்தப்படுத்துகின்றன: நம்பகத்தன்மையையும் உருவாக்குகின்றன.

ஒரு காலத்தில் மதிப்பாக இருந்த சொல் பின்னர் கொச்சைப்படுத்தப்பட்ட பாவனைக்காளாகிறது. அம்மா என்ற சொல்லும் அது சுட்டும் உணர்வும் அந்த உறவும் அடையாளமும் மிகப் பெறுமதியானது. ஆனால் அது சுருக்கப்பட்டு கொச்சைப்படுத்தப்பட்டு ஜெயலலிதாவை அம்மா என்று அழைக்கும் நிலைக்கு வந்திருப்பதன் அவலத்தை என்ன என்பது. இன்று பொருளும் (அர்த்தமும்) நம்பகத்தன்மையும் இழந்திருக்கும் ஏராளம் சொற்களுண்டு. இந்த அர்த்தமின்மையையும் நம்பகமின்மையையும் மனித நடத்தைகளே உருவாக்குகின்றன. அர்த்தத்தையும் நம்பகத்தன்மையையும் உருவாக்க வேண்டிய நடத்தைகள் அதற்கு எதிர்மாறாக இயங்குவதே இப்பெ ாழுது அதிகரித்துள்ளது. இது இன்னுமின்னும் பெருகியபடியே இருக்கிறது. உறவுகளுக்குள் நாங்கள் பெரும்பாலும் சந்திக்கின்ற பல பிரச்சினைகளின் மையமே புரிந்து கொள்ளலில் நிகழ்கின்ற தவறுகளும் சறுக்கல்களுமே. அகிலனுடைய கவிதைகளின் மையம் இதுதான்.

என்னுடைய
காலடிச்சுவடுகள்
கண்காணிக்கப்படுபவை
புன்னகைகள்
விசாரணைக்கானவை

அடுத்த கணங்கள்பற்றிய
அச்சங்களும்
துயரும்
நிரம்பிக்கிடக்கிறது
வழிமுழுதும்
(அடுத்து வரும் கணங்கள்)

அதிகமதிகம் அவநம்பிக்கையும் தன்னலத்தின் குரூரமும் பெருகிக் கிடக்கும் சூழலில் விதிக்கப்பட்டிருக்கும் சாபமாகிக் கிடக்கிறது நியாயவானின் வாழ்க்கை. நீதியும் நியாயமும்கூட ஆளாளுக்கு வேறுபடுகின்றன. சார்புநிலைப்படுகின்றன. குடும்பங்கள் விரிசலடைந்து வருகின்றன. உறவுகளுக்குள் அந்நியத்தன்மை பெருகி முகமூடிகளை உற்பத்தி செய்கிறது. அன்பில் எண்ணற்ற கரும்புள்ளிகளையும் காயத்தையும் ஏற்படுத்திக் கொண்டேயிருக்கிறது புரிந்துணர்வின்மை. எதிரும் புதிருமான நிலைப்பாடுகளுக்கு முடிவேயில்லை என்றாகி விட்டது.

அகிலன் எழுதுகிறார்

எப்போதும்
எனது சொற்களிற்கான
இன்னோர் அர்த்தம்
எதிராளியின்மனதில்
ஒளிந்திருக்கிறது
(தவறி வீழ்ந்த முடிச்சு)

இப்போது
என் எதிரில் இருக்கும்
இக்கணத்தில்
உன் புன்னகை
உண்மையானதாயிருக்கிறதா
(எதிர்பார்ப்பு)

நான்
சிந்திப்பதை
நிறுத்திவிடுகிறேன்
எதைப்பற்றியும்
அது என்னைக் கேள்விகளால்
குடைந்து கொண்டேயிருக்கிறது.

புன்னகைகளை
வெறுமனே புன்னகைகளாயும்
வார்த்தைகளை
வெறுமனே வார்த்தைகளாயும்
கண்களின் பின்னாலுள்ள
இருள்நிறைந்த காடுகளை
பசும் வயல்களெனவும்
நான் நம்பவேண்டுமெனில்
நிச்சயமாக
நான் சிந்திப்பதை நிறுத்தியேயாக வேண்டும்.
(சிந்திப்பது குறித்து)

ஒழுங்கமைப்புகள், தனியாள் நிலைப்பாடுகள் என்வற்றுக்கிடையிலான புரிதலில் உள்ள பெருங்குறைபாடுகள் வாழ்வைப்பிளந்தெறிகிறது. இந்த இரண்டையும் சமநிலைப்படுத்துவதிலும் சரியான அணுகுமுறைகளில்லை என்பது முக்கியமானது. இவற்றுக்கிடையிலான புரிதல் சரியாக நிகழ்ந்திருக்குமானால் அவலங்களுக்கும் துயரத்துக்கும் இடமேற்பட்டிருக்காது. தவிர முரண்களும் கொந்தளிப்பும் கூட ஏற்படாது. ஆனால் இதையெல்லாம் புரிந்து கொள்ளும் மனமும் இதயமும் அறிவொழுக்கமும் இன்னும் பெரிதாக இல்லையென்பதே கொடுமையானது. ‘

எல்லோருக்கும் அறிவும் இதயமும் சேர்ந்திருக்கவேணும்’ என்று சொல்வார் ஒரு நண்பர். ‘ அதுவுமில்லாது விட்டால் அறிவாவது இருக்க வேண்டும். இல்லையென்றால் மனச்சாட்சியாவது இருக்க வேணும். இது எதுவும் இல்லாமற்தான் இன்று சூழல் இப்படிக் கெட்டுக் கிடக்கிறது ‘ என்று சொல்வார் அவர்.

அதிகாரம் மிகப் பெரும் சவாலாக மனிதனைச் சூழ்ந்திருக்கிறது. மனிதன் மீPளமுடியாத சவாலாக அது பல ரூபங்களிலும் அரூபங்களிலும் விருத்தியுற்றுக் கொண்டேயிருக்கிறது. அழிவேயில்லாத மிகப் பெரிய சவால் அது. நுட்;பங்களும் தந்திரங்களும் பொறிகளும் குரூரங்களும் நிரம்பிக்கிடக்கும் பெரும் சவால்.மனிதனி;ன் எல்லாப்படைப்புகளும் எண்ணங்களும் அதிகாரத்தை நோக்கியதாகவும் அதிகாரத்தை எதிர்ப்பதாகவும் அல்லது அதை மறுப்பதாகவுமே இருக்கிறது. ஒரு பக்கம் அதிகாரத்தின் திரட்சிக்காக மனித ஆற்றல் முழுதும் பயன்படுத்தப்படுகிறது. அதேவேளையில் அப்படித்திரண்ட அதிகாரம் மனித வாழ்வுக்கு எதிராக இயங்குகிறது என மீண்டும் அந்த அதிகாரத்துக்கெதிராக மனித ஆற்றல் முழுவதும் திரட்டப்படுகிறது. இப்படியே மனித அவலம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. அதிகாரத்தின் நிழல்படியாத வாழ்க்கையில்லை. அதிகாரத்தின் குருதியோடாத இதயங்களில்லை. ஆளுக்காளிடம் வடிவங்களிலும் அளவுகளிலும் அது மாறுபடலாம். அல்லது வேறுபடலாம். ஆனால் தன்மையிலும் அடிப்படையிலும் அது ஒன்றுதான். அதிகாரம் ஒரு போதை. மிகப் பெரியபோதை. தீராப்போதை. மனிதனின் மிகப்பெரிய ருசியான பண்டமே அதிகாரம்தான். அது போதையூட்டும் ருசி. ருசி தரும் போதை. அந்த ருசி பிடிபடப்பிடிபட அது தீராத்தாகத்தை அளித்தபடியேயிருக்கிறது. அதிகாரத்தின் வேர்முடிச்சுகளில் நிம்மதியின்மை கிளைக்கிறது. மனிதனை ஆட்டிப்படைக்கும் மிகப் பெரிய பிரம்பாக அது சதா மனிதகுலத்தை மிரட்டிக்கொண்டேயிருக்கிறது. மிகநுண்ணிய வடிவங்களிலும் வகைகளிலும் மாபெரும் வலைப்பின்னலாக அது வாழ்வைச்சுற்றியிருக்கிறது. அதற்கு எண்ணற்ற நுட்பங்கள் உருவாகிவிட்டன. இதுவரையில் மனித குலம் தன் ஆற்றலை அதிகாரத்தின் நுட்பங்கள் குறித்தே அதிகளவில் செலவளித்திருக்கிறது. மனிதன் கண்டுபிடித்த அதிகூடிய நுட்பமுடைய கருவியும்; அதிகாரம்தான். அதேபோல மனித உழைப்பின் பெரும்பகுதியும் அதிகாரத்துக்கும் அதிகாரத்துக்கெதிரான முயற்சிகளுக்குமாகவே செலவளிக்கப்பட்டிருக்கிறது.

ஒருவரிடம் உள்ள அதிகாரம் பிரயோகிக்க முடியாமற்போகிறது. இன்னொருவர் அதையும் சுவீகரித்துக்கொண்டு பலமான நிலையில் பெருக்கிறார். அப்படிப் பெருக்கும்போது வாழ்க்கை சிதைக்கப்படுகிறது. இங்கேதான் சிதைக்கப்படும் வாழ்வைக்குறித்து படைப்பியக்கம் நிகழ்கிறது. இந்தப்படைப்பியக்கம் அதிகாரத்துக்கு எதிரானவாழ்வியக்கமாக வாழ்வை நசிக்கும் அத்தனை குரூரங்களுக்கும் எதிரானதாக தொழிற்படுகிறது. ஆனால் பொதுத்தளத்தில் மாற்று அதிகாரம் குறித்த சிந்தனை இன்று பின்னகர்ந்து கொண்டிருப்பதாகவே படுகிறது. வணிகக்கலாச்சாரமும் உலகமயமாதலும் உருவாக்கியுள்ள இடைவெளியின்மை வாழ்க்கையை மீள்பரிசீலனை செய்யும் மனோநிலையையும் அவகாசத்தையும் இல்லாமற் செய்துவிட்டது. மறுபுறத்தில் அதிகாரத்துக்குப் பலியாகும் சனங்களின் தொகை பெருகிக் கொண்டேயிருக்கிறது. சனங்கள் விழிகளை இழக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய செவிகளையும் இழந்துபோகிறார்கள். பொதுவாகச் சொன்னால் புலன்களை இழந்துபோகிறார்கள். ஆனால் வேடிக்கை என்னவென்றால் இந்த புலன்களையிழந்த மனிதர்களுக்காகவே இப்போது பெருவாரியான ஊடகங்கள் பெருகிக்கொண்டிருக்கின்றன. புலன்களுக்காகவும் புலன்திறப்புக்காகவும் இயங்கவேண்டிய ஊடகங்கள் புலன்களை அடைக்கும் முரண்நிலை பெருகிய யதார்த்தம் இது. அதிகாரத்தைப் பரப்பும் அதைப் பிரயோகிக்கும் நுண்ணரசியலின் வடிவப் பெருக்கில் இன்று ஊடகங்கள் முக்கியமான பாத்திரத்தை வகிக்கின்றன என்று சொல்லப்படுகிறது. ஆனால் அந்தளவுக்கு மாற்றதிகாரத்துக்கான அறிவுப்பலமும் நுட்பமும் விழிப்பும் ஊடகப்பயன் பாடும் இல்லை. இதெல்லாம் அகிலனுக்கும் பிரச்சினையாக இருக்கின்றன. உறவுகளுக்கிடையில் பெருகியிருக்கும் அதிகாரம் பொய்முகங்களையும் நெருக்கடிகளையும் உற்பத்தி செய்தபடியே யிருக்கின்றது.

அதிகார மனோநிலை எதையும் சந்தேகிக்கிறது. எதையும் தன்னுடைய கோணத்திலிருந்தே பார்க்க முற்படுகிறது. அதனால் எல்லாவற்றிலும் அதிகளவுpல் தவறுகள் நிகழ்கின்றன. அதாவது தவறான புரிதல்களும் அச்சங்களும் ஏற்படுகின்றன. உண்மையில் இது எந்த அடிப்படையும் அற்றது. தேவையில்லாதது. வாழ்;க்கைக்கும் மனிதகுலத்துக்கும் எதிரானது. அதிகாரத்துக்கெதிரான கவிதைகளைச்சமகாலத்தில் தீவிரமாக எழுதியவர் எஸ்போஸ் என்ற சந்திரபோஸ் சுதாகர். அவருடைய கவிதைகள் அதிகாரத்தின் குரூர முகத்தை கடுமையாக எதிர்த்தன. அதிகாரத்தின் நுட்பத்தையும் அதன் பொறிகளையும் எஸ்போஸ் தன்னாற்றல் முழுவதையும் திரட்டி எதிர்த்தார். ஆனால் அந்த அதிகாரம் அவரை ஏதோ ஒரு வடிவத்தில் பலியெடுத்து விட்டது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் எஸ்போஸ் சொல்லி வந்த அதிகாரம் அவர் எதிர்பார்த்ததைப் போல அவரைக் கொன்று விட்டது. அவர் தன்னுடைய குழந்தைகளின் முன்னால் சுட்டுக் கொல்லப்பட்டார். சமகால வாழ்வின் நிலைமைகளோடு இதை இணைத்து அகிலன் எழுதுகிறார் இப்படி

…பற்கள் முளைத்த
இரவுகள்
கனவுகளைத்தின்று கொழுத்தன
தூக்கத்தை
சிறையிலடைத்த
இரவின் படை வீரர்
விழிகளைச் சூறையாடினர்
….
…..
என் கனவின் மீதியை
வானில் கரைக்கிறது
நடு நிசியில்
வீரிட்டுப் பறக்கும்
ஒரு பறவை

மனிதனின் அத்தனை மாண்புகளையும் அதிகாரம் என்ற இந்தக்கரும்புள்ளி பெருநோயாகி அழித்துக் கொண்டேயிருக்கிறது. மனிதன் தன் வரலாற்றில் இந்தப்பூமியை அதிகளவில் சுவீகரித்திருக்கிறான். உண்மையில் அப்படிச் சுவீகாரம் பண்ணும் அதிகாரமோ உரிமையோ மனிதனுக்கில்லை. இந்தப்பூமியில் மனிதனும் ஒரு பிராணியே. ஏனைய பிராணிகளுக்கிருக்கும் இயற்கையின் உரிமைதானே மனிதனுக்கும் உண்டு. ஆனால் இந்த உண்மையை மனிதன் விட்டுவிட்டு தன்னுடைய அதிகார வெறிக்காக இதுவரையில் பூமியின் பெருவாரியான வளங்களை அழித்திருக்கிறான். மனித உழைப்பின் பெரும்பகுதியைச் சிதைத்திருக்கிறான். உண்மையில் இந்தப்பூமியின் மிகப்பெரிய எதிரி மனிதனே. தன்னுடைய அறிவுக்கும் ஆற்றலுக்கும் பண்புக்கும் அவன் உருவாக்கிய அறத்துக்கும் நீதிக்கும் அவனே எதிரி.

இந்தப்பிரச்சினைகள் பொதுவாக எந்தப்படைப்பாளியையும் நிம்மதியாக இருக்க விடுவதில்லை. அதிகாரத்தின் வெள்வேறுவிதமான பொறிகளால் கணமும் நிம்மதியற்றுத்தவிக்கும் அந்தர நிலையின் வலியை உணரும் நிலையையிட்ட வருத்தம் அகிலனையும் அலைக்கிறது.

அடுத்த கணங்கள்
பற்றிய
அச்சங்களும்
துயரங்களும்;
நிரம்பிக்கிடக்கிறது வழிமுழுதும்;
(அடுத்து வரும் கணங்கள்)

உறவுகளுக்குள்ளும் மின்னலைகளாக அதிகாரமே ஊடுருவியிருக்கும்போது அன்பு பாசம் இரக்கம் நேசம் எல்லாமே பொய்யாகி விடுகின்றன. இதனால் உறவுகளுக்குள் விரிசல் ஏற்படுகிறது. நலன் சார்ந்தே எல்லாம் நிர்ணயம் செய்யப்படுகிறது. நலனின் அடிப்படையிலேயே இணக்கமும் இணக்கமின்மையும் நிகழ்கிறது. அகிலன் இந்த நுண்வலைப்பின்னலை கண்டு அதிர்ந்துள்ளார்.

பிரபஞ்சத்தின்
எங்கோ ஒரு மூலையில்
சிக்கிக் கொண்டது
திருப்தியும் அன்பும்;
(தவறி வீழ்ந்த முடிச்சு)

இந்த நிலையில் மெய்யன்புக்கும் உறவுக்கும் இடமில்லை. உண்மையான அர்த்தத்தில் இதெல்லாம் உணரப்படுவதுமில்லை. அதனால் அவை உரிய முறையில் பொருட்படுத்தப்படுவதுமில்லை. உறவு அன்பினாலும் கருணையினாலும் எதிர்பார்ப்புகளுக்கப்பாலான நெருக்கத்தினாலுமே உருவாகிறது என்ற எதிர்பார்ப்பு ஏமாற்றத்துக்குள்ளாகிறது.

பதிலாக அது நலன்சார்ந்து. தேவைகளின் அடிப்படையில் பராமரிக்கப்படுகிறது என்பதைக்காணும்போது அதற்கப்பால் சிந்திக்கும் மனம் படுகின்ற துயரம் சாதாரணமானதல்ல. இது அன்புக்கு எதிரானது. கருணைக்கும் உண்மைக்கும் மாறானது. பரஸ்பரம் என்பதற்கும் பற்றற்றது என்பதற்கும் இதில் இடமில்லை. அன்பு என்பதன் பொருள் சிதையும் போது அதன் மெய்ப்பொருள் தேடும் மனம் அவலத்தில் வீழ்கிறது. இப்படி வீழ்ந்த மனங்களில் ஒன்று அகிலனுடையது. அன்பினால் இழைக்கப்படுவது உறவு என எதிர்பார்க்கும்மனதில் எழும் காயஙங்களை அகிலன் தன் கவிதைகளில் வலியெழும்பக்காண்பிக்கிறார்.

எப்போதும்
ஏதேனுமொரு
புன்னகையிலிருந்தே
ஆரம்பிக்கிறது துயரம்
(துயரின் தொடக்கம்)

அகிலனுக்கு எல்லாமே துயரமயமாக இருக்கிறது. உண்மையற்ற தனம் பெருகும் போது இப்படி புன்னகையும் துயரின் தொடக்கமாகவே இருக்கும் என அவர் உணர்கிறார். தன்னைப்புரிந்து கொள்ளத்தவறும் மனிதர்களை நோக்கி அகிலன் பேச முனைகிறார். புரிந்துகொள்ளத்தவறுவது வேறு. புரிந்து கொள்ள மறுப்பது வேறு. இரண்டு அனுபவங்களும் அகிலனை வருத்துகின்றன.

நமது வாழ்வில் அநேக தருணங்களில் நாம் பலதையும் புரிந்து கொள்ளத்தவறி விடுகிறோம். அதேபோலவே பல சந்தர்ப்பங்களிலும் மனிதர்களையும் மனித நடத்தைகளையும் விளங்கிக்கொள்ளாமல் விட்டு விடுகிறோம். இது இடைவெளிகளை உருவாக்குகிறது. பின்னர் இந்த இடைவெளிகளை நிர்பபமுடியாமலும் கடக்கமுடியாமலும் திணறுகிறோம். அகிலன் இந்த அந்தரிப்பையும் இந்த மூடத்தனத்தையும் கோபத்தோடும் துயரத்தோடும் பரிகாசத்தோடும் சொல்கிறார்.

என் மரணத்தின் போது
நீ ஒரு உருக்கமான
இரங்கற் கவிதையளிக்கலாம்
ஏன் ஒரு துளி
கண்ணீர் கூட உதிர்க்கலாம்
என் கல்லறையின் வாசகம்
உன்னுடையதாயிருக்கலாம்

அதைப் பூக்களால்
நீ நிறைக்கலாம்
நீ என்னோடு அருந்தவிருக்கும்
ஒரு கோப்பை தேநீரோ
வரும்பொளர்ணமியில்
நாம் போவதாய்ச் சொன்ன
கடற்கரை குறித்தோ
என்னிடம் எண்ணங்கள் கிடையாது
(எதிர்பார்ப்பு)

உளவியற் சிதைவுகள் ஏற்படுவதன் அடிப்படையே பெரும்பாலும் புரிந்துணர்வின் வீழ்ச்சியே. அகிலனின் காதற்கவிதைகளின் மையமும்கூட புரிந்து கொள்ளலின் நெருக்கடிகளைப்பற்றியவையே. அல்லது புரிந்து கொள்ளலில் உள்ள குழப்பமே. அவருடைய பெரும்பாலான கவிதைகளில் தொனிக்கிற கேவல், துயர்க்குரல் என்பது ஏதோ ஒரு வகையில் ஏற்பட்ட புரிந்துணர்வின்மையின் வீழ்ச்சியே.

யாரோடும் பகிர முடியாதுபோன
புன்னகையும்
முத்தங்களும்
துயரங்களும்
என்னுடையவைதானென்று
யாருக்குத் தெரியும்
என் வார்த்தைகளின்
அர்த்தம் கூட
எனதாயில்லை
……….
……….
அழுவதற்கான
வெட்கங்கள்
ஏதுமற்றுதுளிக்கும்
என் கண்கள்
(சுயம்)

இந்தப்புரிந்துணர்வின்மை என்பது மனிதனின் எல்லா ஆற்றலையும் சிதைக்கும் பெருங்கண்ணியாக இருக்கிறது. அதிகாரத்தைப்போலவே இதுவும் எதிர் அம்சங்கள் நிறைந்தது. எனவே இந்த அடிப்படையைச் சீர்செய்யாதவரையில் மனித முயற்சிகளும் ஆளுமையும் பொருளற்றே போகின்றன.

மனித குலம் திரட்டிய ஆற்றலுக்கு எதிராக புரிந்துணர்வின்மையின் எதிர்மறைவிளைவுகள் பெருகிக்கொண்டேயிருப்பதால்தான் இவ்வளவு இடர்ப்பாடுகளும் பூமியில் நிரம்பிக்கிடக்கின்றன என்று அகிலன் உணர்த்துகிறார். புரிதலை அதன் மெய்ப்பொருளில் சாத்தியப்படுத்தாதவரையில் எந்த உன்னதங்களும் சாத்தியமில்லை என்கிறார் அகிலன்.

அகிலனின் கவிதை மொழி தீவிரமானது. நவீன கவிதை பெற்றுவருகின்ற புதிய தொனியில் அவர் தன்னுடைய உணர்வுகளை பதிவு செய்கிறார். இந்தப்பதிவு ஒரு வகையான உரையாடல்தான். ஆனால் முறையீடற்ற உரையாடல்.

நேரடியாகச் சொல்லும் முறையில் எண்ணற்ற நேர், நேர் மறை அம்சங்களை காண்;பிக்கும் நுட்பத்தை தன்னுடைய கவிதை முறையாக்கிருக்கிறார் அகிலன். இது மென்மொழி. துயர்நிறை மொழி. யதார்த்த உலகத்தின் இடர்ப்பாடுகளை சொல்வதற்கான எளிய மொழி.

வாழ்வின் மீதான ஈடுபாடும் இளவயதின் தாபங்களும் எதிர்பார்ப்புகளும் அகிலனை வதைக்கின்றன. இயல்பற்ற சூழல் எல்லாவற்றையும் சிதைக்கிறது என்ற வருத்தம் அவரை அவருக்குத் தெரிந்த வகையில் பேச வைக்கிறது.

இதில் சில கவிதைகள் சொரிந்த தன்மையோடிருக்கின்றன. இவை ஆரம்ப நிலைக்கவிதைகளாகவும் இருக்கலாம். குறிப்பாக சில காதற் கவிதைகள். காதற்துயரைச் சொல்லும் கவிதைகளை விடவும் காதலின் ஏக்கத்தையும் அன்பிழைதலையும் சொல்லும் கவிதைகளில் மொழியின் அமைப்பும் உணர்வாழமும் குறைவாகவேயிருக்கின்றன. அதேபோல சில அரசியற் கவிதைகள். சுலொகத்தன்மைக்கு கிட்டவாக நிற்கின்றன அவை. அதாவது அகிலனின் கவிதை மொழிக்கு மாறானவையாகவும் விலகியும் தெரிகின்றன.

குரூரமாகப்பிளந்தெறியும் அரசியலை, அதன் அடக்குமுறைப்பயங்கரவாதத்தை அகிலன் வெறுக்கிறார். அவர் தன்னுடைய ‘கனவுகளைத்தின்னும் இரவுகள் ‘ என்ற கவிதையில் சொல்கிறார்

நீள இரவின்
பெரு மூச்சு
துப்பாக்கிகளினின்றும்
புறப்படுகிறது
பெரும் ஊழியாய்.

என்று.இவையெல்லாம் நம் வாழ்வைச் சுற்றிய யதார்த்தங்கள் என்பதை உணர்த்துவதே அகிலனுடைய அக்கறை. இந்த அக்கறைதான் அகிலனின் மீது வாசகருக்கு ஏற்படுகிற கவனம். அவருடைய கவிதைகளின் மீது ஏற்படுகிற கவனமும்.

குளிரடிக்கிற ஏரியா

Post navigation

Previous post
Next post

Related Posts

மரணத்தின் வாசனை பற்றி உமாஷக்தி

June 14, 2009December 1, 2009

இரண்டு வாரங்களாக இந்தப் புத்தகம் என்னுடன் எல்லா நேரத்திலும் பயணித்து வந்தது. ஒன்றிரண்டு நாட்களில் வாசித்திருக்க முடியும். ஆனால் இப்புத்தகத்தின் ஆழமும், வாசித்தபின் ஏற்படும் மன அழுத்தமும் சொல்லில் அடங்காது. கதையென்று அதை எப்படிக் கூற முடியும்? போரின் கொடூரங்களை பேரழிவுகளை வார்த்தை வார்த்தையாக கொட்டியிருக்கிறார் அகிலன். அவரைப்போல எம் ஈழ மக்களுக்கு அங்கு ஏற்பட்டிருக்கும் பெரும்துயர் என்று எப்போது எப்படி ஆறும்? காலத்தின் படர்ந்திருக்கும் இந்த ரத்தக் கறையை…

Read More

தனிமையின் நிழல் குடை – அகிலன்

June 9, 2009December 1, 2009

எழுதியவர் அய்யனார் பின் ஓர் இரவில் துப்பாக்கியின் கண்கள் அவன் முதுகினில் நிழலெனப்படிந்து அவன் குரலுருவி ஒரு பறவையைப் போல் விரைந்து மறைந்ததாய் அவன் குழந்தைகள் சொல்லின தமிழ்சூழலை வெற்றுச் சொற்களால், பகட்டால், விளம்பர மிகைப்படுத்தல்களால் நிறைக்கும் மாதிரிகளின் குரல்வளையை / கைவிரலை நெறிக்கத் தோன்றும் அதே சமயத்தில் உண்மைக்கு சமீபமான எழுத்துக்களை கொண்டாடத் தோணுகிறது.தனது வாழ்வை கிசுகிசுப்பான குரலில் ஈரத்தோடு பதிவிக்கும் கவிஞனை இறுக அணைத்துக்கொள்ளலாம். மிகுந்த அன்பும்…

Read More

Comment

  1. பிரேம்குமார் says:
    June 8, 2009 at 3:14 pm

    இது ரொம்ப காலம் முன்பு எழுதப்பட்டதா ? இருப்பினும் வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • அனுபவம்
  • எண்ணங்கள்
  • ஒலிக்கவிதைகள்
  • ஒலிப்பதிவுகள்
  • கவிதைகள்
  • காதல் சிலுவையில்
  • குளிரடிக்கிற ஏரியா
  • சினிமா அனுபவம்
  • நேர்காணல்
  • புகைப்படம்
  • புத்தகம்
  • September 2024
  • June 2021
  • November 2019
  • March 2019
  • April 2018
  • May 2013
  • February 2013
  • December 2012
  • October 2012
  • July 2012
  • June 2012
  • November 2010
  • August 2010
  • June 2010
  • April 2010
  • March 2010
  • February 2010
  • September 2009
  • August 2009
  • July 2009
  • June 2009
  • February 2009
  • January 2009
  • December 2008
  • November 2008
  • October 2008
  • September 2008
  • August 2008
  • July 2008
  • June 2008
  • May 2008
  • April 2008
  • March 2008
  • January 2008
  • December 2007
  • October 2007
  • September 2007
  • August 2007
  • July 2007
  • June 2007
  • May 2007
  • December 2006
  • November 2006
  • October 2006
  • September 2006
  • August 2006
  • July 2006
  • June 2006
©2025 த.அகிலன் | WordPress Theme by SuperbThemes