கேட்கவியலாச் சொல்

Posted by த.அகிலன் on Mar 5th, 2010
2010
Mar 5

ravi2

தட்சணா மூர்த்தி அன்பழகன் (27.03.1985 – 05.03.2009)

எனக்கு நினைவிருக்கிறது  நான் இரண்டாம் தடைவையாகவும் அவன் முதலாம் தடைவையாகவும் கடல் பார்த்தது. ஒரு பள்ளிச்சுற்றுலாவில் மாத்தளன் கடற்கரையை நாங்கள் பார்த்தோம். நான் அப்பாட அந்தரட்டிக்கு சாம்பல் கரைக்கப்போகும் போது முதல் முதலாக கீரிமலைக்கடலைப் பார்த்திருக்கிறேன். அது சாதுவாய் இருந்தது அன்றைக்கு கடல் அச்சமூட்டவில்லை அப்போதெல்லாம் பொங்கிவரும் அலைகளில்லை அலைகள் குறித்த நினைவேயில்லை எனக்கு அப்போதெல்லாம். ஆனால் இம்முறை அப்படியல்ல கடல் சீறிக்கொண்டிருந்தது ஒரு மிருகத்தைப்போல  நான் நூற்றுச் சொச்சம் மாணவர்களினிடையில் அவசரமாய்த் தம்பியைத் தேடினேன். அலைகள் அவனை கொண்டுபோயிருமோ எண்டு நான் பயந்துபோனேன். ஓடிப்போய் அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு இரண்டு பேரும் கால்களில் நழுவும் மணலை உணர்ந்தபடி சிரித்தோம்.

எனக்கு உண்மையில் அன்றைக்கு ஆச்சரியமாயிருந்தது.  எனக்கு அவனைப்பிடிக்காது என்றுதான் நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். பலமுறை அவனைத் தொந்தரவாய் உணர்ந்திருக்கிறேன். அவன் என் நிழலைப்போல எப்போதுமிருந்திருக்கிறான் அதுவே என் பெரிய பிரச்சினை அவன் என் சுதந்திரத்தை பறிப்பதாக நான் எண்ணிக்கொண்டிருந்தேன்.  என் பால்யத்தில் இருந்தே அவன் என்னைத் தொடர்ந்து கொண்டிருந்தான். நான் படித்த அதே பள்ளியில் அவன் படித்தான். நான் கலந்து கொண்ட பேச்சுப்போட்டியில் அவன் கலந்து கொண்டான் நான் செய்வதெல்லாவற்றையும் அவன் செய்கிறான் என்பது எனக்கு எரிச்சலூட்டியது. ஆனால் அவன் என்னோடு போட்டிக்கு நிற்பதாய் நான்ஒரு போதும் நினைத்ததில்லை மாறாக அவன் என்னைக் கண்காணிக்கிறான் என்பதாய் உணர்ந்திருக்கிறேன். எதற்கெடுத்தாலும் அகப்பைக்காம்பைத் தூக்குகிற அம்மாவிடம் நான் செய்கிற திருகுதாளங்களைப் போட்டுக்கொடுப்பதற்காகவே அவன் என்னைத் தொடர்கிறான் என்றெனக்குத் தோன்றும் அதனால் அவனை நான் சினந்திருக்கிறேன். அம்மாவுக்கு பிடித்த பிள்ளையாய் அவன் எப்போதுமிருந்தான். அம்மாவை அதிகம் நேசித்த மகனாகவும்.

ஆனால் எப்போதும் அவனை நான் வெறுத்ததில்லை என்னால் வெறுத்திருக்கவும் முடியாது. ஆனால் அவன் என்னோடு ஒட்டிக்கொண்டு திரியவே ஆசையாயிருந்தான். எப்போதும்  “அண்ணா டேய்” என்றழைத்த படி எல்லாவற்றிற்கும் கூட வந்தான்.ஒரே சமயத்தில் அண்ணனாகவும் தோழனாகவும் என்னை அவன் அழைத்தஅந்தச் சொல் ஒரு உத்தி அழகான உத்தி. அப்படி அழைக்க நிர்ப்பந்திக்கப்பட்ட வயது வித்தியாசங்களே எங்களுக்கிருந்தன. இனி எப்போதும் என்னை அப்படியாரும் அழைக்கப்போவதில்லை.

அதே மாத்தளன் கடற்கரையில் அவனிடம் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் அவன் பலியிடப்பட்டபோது. அவன் இந்த பூமியைவிட்டே நழுவியபோது அதை அறியாத ,ஒரு கையாலாகாத சுயநலவாதியாக சென்னையில் தூங்கிக்கொண்டிருந்திருக்கிறேன். என்னால் அவனைப்பற்றி முழுமையாக ஒரு படைப்பை ஒரு நினைவுக்குறிப்பை எப்போதும் எழுதிவிடமுடியாது. என்னால் முடிவதெல்லாம் அவன் பலியிடப்பட்டவன் என்பதை உரக்கச் சொல்வதே. யார் யாருடையதோ தூக்கின காவடியை ஆடிமுடிக்கும் கனவுகளுக்காக பலியிடப்பட்ட ஆயிரக்கணக்கான உயிர்களில் அவனுடையதும் ஒன்று என்று சொல்லுவதே. அவனை மாவீரர் பட்டியலில் சேர்த்து என்னால் கற்பனை பண்ணவே முடியாது. நான் ஒரு மாவீரனின் அண்ணன் என்று குளிர்காய விரும்பவில்லை. அவன் பலியிடப்பட்டவன் அதுவே உண்மை அவன் சுமந்திருந்த துவக்கு அவன் மேல் திணிக்கப்பட்ட துவக்கு. அவனைக் கொன்றதும் அதுவே.

மேலும் சில நினைவுகள்

நிலவு

மரணத்துக்கு முன்னும் பின்னுமான குறிப்புக்கள்

அம்மாவின் சுருதிப்பெட்டி

அன்புத்தம்பி அன்பழகனுக்காக – நன்றி ப.அருள்நேசன்

என்னுடைய ‘மரணத்தின் வாசனை’ தொகுப்பு முதலாம் பதிப்பு வந்தபோது என்னைவிட தொலைபேசிப் பேச்சில் அவன் அதிகம் புழகாங்கிமடைந்தான். அதே மரணத்தின் வாசனை மூன்று மாதங்கள் கழித்து இரண்டாம் பதிப்பு வந்தபோது அது அவனுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

My name is agiilan and I am not a terrorist

Posted by த.அகிலன் on Feb 20th, 2010
2010
Feb 20

00.00.2007
அகிலன்:    அண்ணா ஓட்டோ வருமா?
ஓட்டுனர்:    எங்க போணும்பா?
அகி:        வளசரவாக்கம் போகோணும் வருவீங்களா?
ஓட்:        ஆ போலாம்பா
அகி:        எவ்வளவு
ஓட்:        நீ சிலோனாப்பா?.
…………………………………

19.02.2010

அகி:    ஆட்டோ .. ஆட்டோ?
ன்ணா கோடம்பாக்கம் வருமா?
ஓட்:    ம் போலாம்..
அகி:    எவ்ளோ.
ஓட்:    பிப்டி குடு
அகி:    ஆ போலாம்
………………
ஓட்:    நமக்கு எந்தூரு தம்பி
அகி:    எதுக்கு கேக்றீங்க
ஓட்:    இல்ல பேச்சு நம்மூரு பக்கம் மாதிரியிருந்திச்சு
அகி:    உங்களுக்கு எந்தூரு
ஓட்:    நமக்கு தஞ்சாவூருப் பக்கம்

இது எனக்கும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் மேலே குறிப்பிட்ட காலங்களில் நிகழ்ந்த உரையாடல்கள். எனது மொழிவழக்கின் அடையாளம் இப்படித்தான் மாறியது. எனது மொழியின் அடையாளங்களை நான் எப்படி ஒளிக்க நேர்ந்தது என்பதை எனக்கு நினைவூட்டிற்று  My name is khan திரைப்படம்.

My name is khan சர்ச்சைகளுக்கிடமான படம். சக்கைப்போடு போடுகிற படமும் கூடத்தான்.  போனவாரமே வெளியாகி விட்டிருந்தாலும் நான் நேற்றுத்தான் படம் பார்த்தேன். மிக நெருக்கமாக, சந்தோசமாக, துக்கமாக இன்னும் ஏதேதோ உணர்வுகளை கிளறிய திரைப்படம் My name is khan.இந்த உலகின் பிரஜை ஒருவன் தன் இன அடையாளங்களோடும் தான் பிறப்பிலிருந்தே பின்பற்றி வரும் பழக்க வழக்கங்களோடும் வாழ்வதற்கு ஏற்படுகிற சிக்கல்களே படம்.

[singlepic id=7 w=320 h=240 float=left]அடையாளம் மிக முக்கியமானதுதான் அது என்னை என் சுயத்தோடு வைத்திருப்பது. அது எனக்கு கௌரவத்தை அளிப்பது. அதுவே எனது வேர்களின் வழியாக என்னை நிறுவுகிறது. ஆனால் உலகம் இப்போது அடையாளங்களை அட்டைகளுக்குள் அடைத்துவிட்டது. அடையாளம் முக்கியமானதுதான் ஆனால் அடையாள அட்டைகள் அதைவிட முக்கியமானவை. ஆட்களை விடவும் அவர்களின் அடையாளஅட்டைகளே அதிகம் நம்பப்படுகின்றன. அடையாள அட்டைகள்,அதன் இலக்கங்கள் மற்றும் அதன் மேலான முத்திரைகளின் வழியாகவே மனிதன்; அளவிடப்படுகிறான். அவனது கண்களின் மொழியை விடவும் அட்டைகளின் விதவிதமான முத்திரைகள் கொண்டும் , கலர் கலரான மை கொண்டும் எழுதப்படுகிற மொழியே அவனது அடையாளங்களைச் சொல்லுவதாய் உலகம் நம்புகிறது.  மனித நாகரிகம் இப்போது அட்டைகளின் கலாச்சாரத்தையே கடைப்பிடிக்கிறது. எல்லாவற்றுக்கும் ஏதாவது ஒரு அட்டையை நான் வைத்திருக்கவேண்டியதாகிறது. ஒரு மனிதன் சட்டையில்லாமல் வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் அவனை அடையாளப்படுத்தும் அட்டையில்லாமல் இருக்கவே முடியாது. நான் என்னுடை 27 வயதிற்குள் நிறைய அடையாள அட்டைகளைப் பார்த்திருக்கிறேன். போஸ்டல் ஐடென்டிட் காட், பிறகு இலங்கை தேசிய அடையாள அட்டை,போராளி மாவீரர் குடும்ப அட்டை, ஊடகவியளாளர் அட்டை, அகதிகள் அட்டை,நிவாரணபொருட்கள் அட்டை இப்படி என்னை நிறுவும் நிரூபிக்கும் அட்டைகளால் சூழ்ந்திருக்கிறது வாழ்க்கை. அவை என்னை விதவிதமான தருணங்களில் விதவிதமான சூழ்நிலைகளின் மனிதனாக அடையாளப்படுத்தியிருக்கிறது. சில இடங்களில் காப்பாற்றியிருக்கிறது சில இடங்களில் காட்டிக்கொடுத்திருக்கிறது. எல்லா அட்டைகளும் எல்லா இடங்களிலும் செல்லுபடியாவதில்லை. எல்லா அட்டைகளையும் எல்லாக்காலங்களிலும் பயன்படுத்தவும் முடியாது. அட்டைகளைக் காலாவதியாகாது பார்த்துக்கொள்ளவேண்டியது அவசியம் ஏனெனில் அவையே என் இருத்தலின் அடையாளங்கள்.

இந்த உலகம் சக மனிதனைச் சந்தேகக் கண்கொண்டே நோக்குகிறது. சந்தேகி சகலரையும் சந்தேகி இதுதான் உலக ஏகாதிபத்தியங்களும், ஆளும்தரப்புக்களும் பின் அவர்கள் உருவாக்கிய பயங்கரவாதமும் மனிதவர்க்கத்திற்கு பரிசளித்திருக்கிற உணர்வு. உலகம் நிர்ப்பந்திக்கிறது எல்லா  இடங்களிலும் நான் சுத்தமானவன் அப்பாவி நான் பயங்கரவாதியில்லை இப்படி நெற்றியில் பச்சை குத்தாத குறையாக நிரூபிக்க வேண்டியிருக்கிறது.

[singlepic id=6 w=320 h=240 float=right] இந்த சந்தேகம் குறிப்பிட்ட ஒரு இனக்குழுமம் மீது நிரந்தரமாகப் படிந்துவிடுகிற போது ஒரு  சமூகத்தை குற்றப்பரம்பரயையாக பயங்கரவாதிகளாக மட்டுமே அடையாளப்படுத்தும் போது அது மிகவும் வலி நிறைந்ததாகிறது. 9/11 தாக்குதலுக்குப்பிறகு  தொப்பி அணிந்த தாடிவைத்த அனைவரும் பின்லேடனின் அடியாட்கள் போலவும் பர்தா அணிந்த பெண்கள் தீவிரவாதிகளை மட்டுமே பிரசவிக்கிறார்கள் எனவும்  இந்த உலகம் நம்புகிறதா? அந்தப் பிரச்சினையை மிகவும் அழகியலோடும் அதன் தீர்க்கமான அரசியலோடும் பேசுகிறது My name is khan திரைப்படம்.

நான் என்னுடைய மத அடையாளங்களைச் சுமந்திருப்பதால் சந்தேகிக்கப்படுகிறேன். மற்றவர்களை விடவும் அருவருக்கத்தக்கவனாக நடத்தப்படுகிறேன். ஏன்? நான் என் அடையாளங்களோடு   இருப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? ஒருவர் முஸ்லிமாக இருப்பதால் மட்டுமே தீவிரவாதியாகிவிடுகிறாரா? அப்படித்தான் இந்த உலகம் கண்ணை மூடிக்கொண்டு நம்புகிறதா? அப்படி நம்புகிற இந்த உலகிற்கு  My name is khan படத்தின் இயக்குனர் கரண் ஜோகர் சொல்லவிரும்புகிற செய்தி My name is khan and I am not a terrorist.. உலக முஸ்லிம்களின் பிரதிநிதியாக ஒரு முஸ்லிமாக ஷாரூக்கான் தன் கடைமையைச் செய்திருக்கிறார். ஒரு சந்தேகிக்கப்படும் ஒடுக்கப்படும் ஒரு சமூகத்தின் பிரதிநிதியாய் ஷாரூக் தன் கடைமைச் செய்திருக்கிற படம் இது.

என்னால் இந்தப் படத்தை மிக மிக அதிகமாய் நேசிக்க முடிகிறமைக்கு காரணம் நான் என் அடையாளங்களால் சபிக்கப்பட்டவனாயிருக்கிறேன் என்பதாய் இருக்கலாம். என் அடையாளம் குறித்து நான் அசௌகரியமாய் உணர்ந்திருக்கிறேன் (நிச்சயமாக வெட்கமாய் அல்ல). என்னுடைய அடையாளம் என்னைக் கைதியாக்கியிருக்கிறது. அதிகளவான விசாரணைகளை எதிர்நோக்க வைத்திருக்கிறது. எந்நேரமும் அடையைாள அட்டைகளைச் சுமந்தலையவைத்திருக்கிறது. சோதனைச்சாவடிகளில் காத்திருக்கும்படி செய்திருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக என் எதிர்ப்பை காட்டமுடியாதவனாக ஆக்கியிருக்கிறது. உலகளவில் எப்படி 9/11 முக்கியமான நாளோ ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் 21/05 மிகமுக்கியமான நாள். ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட தினம் அது. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஈழத்தமிழர்கள் குறித்தான பிம்பம் மாற்றி எழுதப்பட்ட நாள் அது.  அது வரைக்கும் எந்த மொழி தேனினும் இனியதாய் “என்னமாத் தமிழ்பேசறான்யா” என்று தமிழகத்தவர்களால் வியக்கப்பட்டதோ அந்த ஈழத்தமிழ் வழக்கு தமிழகச் சராசரி மக்களைப் பொறுத்தவரையில் அச்சமூட்டும் ஒன்றாய் மாறிவிட்டது. வியப்பு சந்தேகமாக மாறிற்று. ஈழத்தமிழர்களுக்கு பொதுவாகவே அந்த பேச்சுவழக்கு அசௌகரியமூட்டும் ஒன்றாக இருக்கிறது அதுவும் பாஸ்போட் இல்லாத நிரந்தர விசாக்கள் இல்லாத போர்ப்பகுதியில் (=புலிகளின்கட்டுப்பாட்டு பகுதியில்) இருந்து வந்த என்னை மாதிரி ஒரு கள்ளத்தோணிக்கு என்னுடைய ஈழத்தமிழ் அடையாளங்கள் இன்னுமின்னும் அச்சமூட்டும் என் வாழ்வைக் கேள்விக்குள்ளாக்கும் ஒன்றாயின.

எனக்கு இலங்கையில் இருந்து புறப்படும் போதிருந்த கனவுகளைக் காணாமல் போகச்செய்ததில்,எனது பிழைக்கும் வழிகளை மூடியதில் ஈழத்தமிழன் என்கிற அடையாளம் மிக முக்கியமானது. ஆனால் அதே சமயம் அதே ஈழத்தமிழன் என்ற அடையாளம் சில இடங்களில் அதிகமான கருணையையும், நட்பையும், புரிதலையும் பெற்றுத்தந்திருக்கிறது.  ஆனால் பொதுவாகவே அது என்னை சந்தேகத்துக்குரியவனாக மாற்றியது. நான் முன்பு ஒரு முறை எழுதியதைப்போல நீங்க சிலோனா? என்று கேட்கிற ஒருத்தரின் கண்கள் என் சட்டைக்குள்ளால் ஒடிக்கொண்டிருக்கிற வயர்களைத்தான் தேடுகின்றன. என்ன செய்வது நான் சாமானியன் சாப்பாட்டுக்கு வழிதேடும் படலத்தில் நான் முதலில் தொலைக்க விரும்பிய சொல் ‘ஓம்’. இந்த ‘ஒம்’ என்பதும் ‘விளங்கேல்ல’ என்பதும் எவ்வளவு மறுத்தாலும் என்னிலிருந்து போகச் சிரமப்பட்டன. சகமனிதர்களின் துருத்தும் விழிகளில் இருந்து தப்ப, அவர்களது சுருங்கும் நெற்றிகளை நிமிர்த்த,ஒரு முகவரியை பயமின்றி விசாரித்து அறிந்து கொள்ள, எந்த இடத்தில் இறங்கவேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள இப்படி நிறையப்பிரச்சினைகளுக்கு நான் என் அடையாளத்தை தின்று செரிக்க வேண்டியவனாயிருந்தேன். My name is khan திரைப்படத்தினை நான் அடையாளம் தொலைக்க விதிக்கப்பட்டவர்களின் குரலாகப்பார்க்கிறேன். அதனால் அந்தப்படம் எனக்குள் உரையாடல்களை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது.

[singlepic id=4 w=320 h=240 float=left] ஒரு சந்தேகிக்கப்படும் இனத்தின் பிரச்சனைகளை, பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்படுகிற ஒரு இனத்தின் பிரச்சினைகளை எப்படி படமாக்கவேண்டும் என்பதற்கு இந்தப்படமும் நிச்சயமாக ஒரு உதாரணம். அது தவிரவும் முக்கியமான அரசியல் பிரச்சினையைக் கொண்டு  வெகுஜனத்தளத்தில் இயங்குவதென்பது முக்கியமானது.  நான் ஈழப்பிரச்சினை குறித்து எடுக்கப்பட்ட சினிமாக்களை நினைவு படுத்துகிறேன்.(ஈழத்தில் மற்றும் இந்தியாவில்) அவற்றில் சில உதிரிகளைத் தவிர்த்து மிச்சமெல்லாம் வீரக்கூச்சல்கள்,அழுகாச்சிக்காவியங்கள் அல்லது அந்த நிலம்பற்றிய,மொழி பற்றிய புரிதலில்லாதவர்களால் எடுக்கப்பட்ட அறிவிலிக் கனவுகள். ஈழம் குறித்த திரைப்படங்களின் அடிநாதம் உளவியல் சார்ந்ததாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு தமிழனும் அதில் தன்னைப் பொருத்திக்கொண்டு தன்னுணர்வுகளை அந்தப்படம் சொல்லுவதாய் உணரவேண்டும்.

ஈழத்தமிழர்களுக்கும் சினிமா மீது எப்போதுமே மோகம் உண்டு. பத்திரிகையாளர் பாரதிதம்பி எல்லாளன் சினிமா குறித்து எழுதியிருந்தார் “ஈழத்தில் போர் நடந்து கொண்டிருந்தபோது அதை ஒரு சினிமாபோலவே பார்த்தோம். இப்போது அதை ஒரு சினிமாவாகவே பார்க்கிறோம் என்பதாய். 2008 ம் ஆண்டு உக்கிரமான போர்க்காலத்தில் மக்களின்  அவலமான இடப்பெயர்வுகளுக்கு மத்தியிலும் லண்டனில் இருக்கிற ஒரு தயாரிப்பாளர்! வன்னியில் (போர் நடந்துகொண்டிருந்த களத்திலேயே) சினிமா எடுத்திருக்கிறார் அவ்வளவு ஆர்வம் சினிமா மீது ஈழத்தமிழர்களுக்கு. ( அது என்ன மாதிரியான சினிமா என்பதை விட்டுவிடுவோம்)

நிறைய ஈழத்தமிழர்கள் இன்றைக்கு சினிமாவில் முதலீடு செய்கிறார்கள். அவர்கள் தயாரிக்கவிரும்புகிற சினிமாவாக My name is khan மாதிரியான ஒரு படம் நிச்சயமாக இருக்கிறதா என்றெனக்குத் தெரியாது. ஈழத்தமிழர்களால் நடத்தப்படுகிற மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனத்தின் காவலாளிக்கு ஈழத் தமிழன் எண்டு சொல்லிக்கொண்டு எவனாவது வந்தால் உள்ள விடாதை என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதை நான் அறிவேன். ஆனால் இவர்கள் எல்லாரிடமும் இருந்துதான் ஈழத்தமிழர் பிரச்சினைகளைப் பேசுகிற சினிமாவும் வந்தாகவேண்டும்.

சினிமாத்துறையில் இருக்கிற ஷாரூக்கான் ஒரு சினிமாக்காரனாக தன் சமூகத்துக்காகச் செய்திருக்கிற மிகமுக்கியமான பங்களிப்பு இந்தப்படம். பேராதிக்கங்களால் ஒடுக்கப்படுகிற தமது அடையாளங்களை உள்ளொடுக்கிக் கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகிற அனைத்து மக்களின் சார்பாகவும் இந்தச் சினிமா பேசுகிறது.

அமெரிக்காவில் ஒரு முஸ்லிம் என்பதற்காக தனது மகன் கொல்லப்பட அதனால் “எனது பெயர் கான். நான் ஒரு முஸ்லிம்  ஆனால் நான் தீவிரவாதியல்ல, எனது மகனும் ஒரு தீவிரவாதி கிடையாது ” என்கிற செய்தியை அமெரிக்க ஜனாதிபதிக்கு சொல்லுவதற்காக கிளம்புகிறார் Mr.Khan. கடைசியில் அமெரிக்க ஜனாதிபதியிடம் சொல்லியும் விடுகிறார். ஒரு பேச்சுக்கு இலங்கைத் தீவிலும் அப்படி Mr.கந்தசாமி எண்டொருத்தர்  Mr.khan மாதிரிஇலங்கை ஜனாதிபதிக்கு நான் ஒரு அப்பாவித்தமிழன் நான் ஒன்றும் புலியல்ல என்று சொல்ல முடிவெடுத்துக் வெளிக்கிடுறார் (கிளம்புகிறார்) என்று வைப்போம் ( ஒரு பேச்சுக்குத்தான்)  கந்தசாமியற்ற  பிடரியில் இரண்டு அடிகள் விழும். ஜனாதிபதியைக் கொல்லமுயற்சி செய்வதாகச் சொல்லி ஒன்று.  “மக்களே புலிகள் புலிகளே மக்கள்” தான் புலியில்லை என்று சொல்கிற  கந்தசாமி ஒரு  துரோகி என்று மற்றொன்று. அப்பாவிச்சனங்கள் எப்போதும் பாவிகளே அவர்கள் இராமன்கள் எனப்படுபவர்களிடமிருந்தும், இராவணர்கள் எனப்படுபவர்களிடமிருந்தும் ஒரே மாதிரியான விளைவுகளையே பெறுகிறார்கள்.  அடையாளங்களைத் தொலைக்க விதிக்கப்பட்டவர்கள் எல்லாரிடமும் நிறுவியாகவேண்டியிருக்கிறது நான் உங்களுடைய நண்பன் என்பதாய். அதைத்தவிர வேறென்னதான் செய்ய முடியும்..

house_380.jpg
கூரையின்
முகத்தில் அறையும்

மழையைப் பற்றிய
எந்தக் கவலைகளும் அற்றது
புது வீடு
இலைகளை உதிர்த்தும்
காற்றைப் பற்றியும்
இரவில் எங்கோ காடுகளில்
அலறும் துர்ப்பறவையின்
பாடலைப் பற்றியும்
எந்தக்கவலைகளும்
கிடையாது
புது வீட்டில்..
ஆனாலும் என்ன
புது வீட்டின்
பெரிய யன்னல்களூடே நுழையும்
நிலவிடம் துளியும் அழகில்லை..

இந்தக் கவிதையை நாங்கள் அக்காவின் லண்டன் காசில்.. அல்லது லண்டன் கடனில் கட்டிய புதுவீட்டிற்கு குடிபோன அன்றைக்கு எழுதினேன். (இதைக் கவிதை என்று ஏற்றுக்கொள்வதும் விடுவதும் உங்கள் முடிவுக்கு விடப்படுகிறது).. நாங்கள் முதலில் ஒரு சின்ன அறையும் ஒரு பெரியறையும் (சாமியறை)ஒரு விறாந்தையும் கொண்ட வீட்டில் குடியிருந்தோம்.. தனித்தனி அறைகள் கிடையாது.. அப்போதெல்லாம் தனித்தனி அறைகளும் தனிமையும் பெரும் வசதிகளைத் தரும் என்று நினைப்பிருந்து கொண்டிருக்கும். ஆனால் அதெல்லாம் அமைந்த போது.. எங்களுக்குள் கொஞ்சம் விலகல் நிகழ்ந்து விட்டிருப்பதை உணரமுடிந்தது.

தனிமை வேண்டித் தவமிருந்த நாட்கள் என் வாழ்க்கையில் உண்டு.. ஒரு பாட்டுக்கேக்கிற பொட்டியோடும்(வோக்மேனோடும்) கொஞ்சப் புத்தகங்களோடும் எங்காவது தொலைந்து போய்விட வேண்டும் என்று விரும்பியிருக்கிறேன்.. அப்போதெல்லாம் நான் எழுதிக்கொண்டிருக்கும்போது..(அநேகமாக அது கணிணியிலாக இருக்கும்..) தட்டச்சும் என் கைகளுக்கு குறுக்கால் புகுந்து என் கதிரைநுனியில் தனக்கு போதுமான இடம் கிடைத்துவிட.. பூனைக்கு குட்டி டான்ஸ் ஆடுகிற அனிமேசன் காட்சியை உடனடினாகப் போடவேண்டும் என்று அடம்பிடிக்கிற ஒரு குட்டிப்பையனுக்கு நான் சித்தப்பாவாயிருந்தேன்.

நான் போடமறுக்கையில்.. அய்லன் என்று என்பெயரை தனக்கேற்ற மாதிரி உச்சரித்துக் கொக்கரித்து விட்டு ஓடிப்போய்.. தன் அம்மாவின் சோட்டிக்குப் பின்னால் ஒழிந்து கொள்ளும்.. அவனை விரட்டிப்பிடித்து அவன்.. கத்தக் கத்த தலைக்கு மேலாய்த் தூக்கிவீசிப் பிடித்துக் கொஞ்சுகையில் அவன் எழுதுவதைக் குழப்புவதாகத்தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.. இதோ இன்றைக்கு எந்த நிழலும் ஆடாத என் அறையின் வாசற்கதவைப் பார்க்கிறேன். ஒரு குட்டிப்பையனும்.. வருவதற்கில்லை.. காகிதம் பறந்து வெளியேறிப் போகிறது.. வெளியே விரவிக்கிடக்கும் கோடையின் தகிப்பு மட்டும் எஞ்சிக்கிடக்கிறது அறையுள்.. போராடுகிறது மின்விசிறி எனக்கு கொஞ்சம் காற்றைக் காட்டி விட.

நான்கு பல்லிகளும் திக்கொன்றாய் இரைதேடும் சுவர்களில் பெரிய பல்லியைக் காணோம்.. அவை ஒளித்துப்பிடித்து விளையாடுகின்றனவோ என்னவோ.. சுவர்களை விடவும் தகிக்கிறது மனம்.. கனவும் நிஜமும் சேரும் பிரமையின் புள்ளிகளில்.. துள்ளி ஓடுகிறது அய்லன் என்றழைக்கும் ஒரு குட்டிப்பையனின் குரல். எனது சொற்களின் குதூகலம் அவனிடமிருந்திருக்கிறது என்பது புரிந்தபோது.. பாக்கு நீரிணையை நான் கடந்து விட்டிருந்தேன். வீடு என்பதன் வெறுமையான அர்த்தங்களைத் தாண்டி அது தரும் பாதுகாப்புணர்வை கடல் கடந்த பின்னர் நான் தீவிரமாக உணரத் தலைப்பட்டேன்.. வீடு என்பது கட்டிடம் அல்ல.. என்பதன் குரூரம்.. சென்னை மாநகரில் எனக்கு புரிந்தபோது காலம் கடந்துவிட்டிருக்கிறதோ என்னமோ.

எட்டாம் வகுப்புக் காலத்தில் சொந்த வீட்டை விட்டு இடம்பெயர்ந்து போகும் போது புரியாதது.. மீண்டும் கிளிநொச்சிக்குத் திரும்பி உடைந்த வீட்டை திருத்திக் கட்டியபோது புரியாதது சிறிய வீட்டை பெரிய வீடாக்கி எல்லாருக்கும் தனித்தனி அறைகள் இருந்தபோது புரியாதது.. சென்னையில்.. தங்குவதற்கிடமில்லை என்றாகிய ஒரு இரவில் திடீரெனப் புரிந்தது.. வீட்டைக் காலி பண்ணச் சொல்லிக்கொண்டேயிருந்தார் வீட்டுக்காரர் காரணம் வாடகைப் பாக்கியில்லை.. கரண்ட்பில் கட்டாமல் இல்லை.. தண்ணி அடித்துவிட்டு நாங்கள் அவர் வீட்டு மொட்டைமாடியில் பண்ணிய அலப்பறையில்லை.. நான் சைற்றடிக்கக் கூடிய மாதிரி அவருக்கு பொம்பிளைப் பிள்ளைகள் இல்லை.. அவரிடம் இருந்த ஒரே காரணம் நான் சிலோன்காரன்.. அந்த ஒற்றைக்காரணம் போதுமானதாய் இருந்தது அவர் என்னை அவசரமாய் வெளியேறச் சொல்வதற்கு.

எங்காவது பேப்பரில் வருகிற இலங்கை வாலிபர் கைது என்று செய்தி வருகிறபோதெல்லாம் அவர் நான் இருக்கிறேனா என்று வீட்டிற்குள் வந்து பார்த்து உறுதிப்படுத்திக் கொள்வார்.. நான் வாடகைக் காசை நாள் பிந்தாமல் கொடுப்பதற்கு காரணம் நான் வெளிநாட்டில் இருக்கிற நண்பர்களின் உதவியோடு கிரடிட் காட் மோசடியில் ஈடுபடுவதுதான் என்று அவரது அறிவு அவருடைய கனவில் சொல்லிய நாளில் அவர் என்னை வெளியேறச் சொன்னார். நான் 7 நாள் தவணை கேட்டேன்.. தந்தார்.. ஆனால் என்ன நினைத்தாரோ 5ம் நாளே நான் வெளியே போயிருந்த நேரமாய் எனது பூட்டுக்களை அறுத்தெறிந்து விட்டு தனது பூட்டால் நான் வசித்த அறையைப் பூட்டிவிட்டு வெளியேறி விட்டார்.

நான் வந்து பார்த்தேன் வீட்டு ஓனரில் பூட்டு என்னை வேளியேறச் சொல்லி இளித்தது. அடுத்து எங்கே போவது அன்றைய இரவை எங்கே கழிப்பது என்பது போன் பல பிரச்சினைகள் எனக்குள் முளைத்தது. எனக்குத் தெரியாமல் எனது பொருட்கள் உள்ளே இருக்கும்போது.. பூட்டை உடைத்ததற்கு நியாயம் கேட்டு போலீசில் புகார் கொடுக்கலாம் என்று நினைத்தேன்.. பிறகு சிலநாட்களிற்கு முன்பு தான் அந்த வீட்டிற்கு அருகில் இருந்த கடை ஒன்றில்.. திருடு போய்விட்டிருந்தது.. அந்த திருடனை இன்னமும் போலீஸ் தேடிக்கொண்டுதான் இருக்கிறது.. இந்த நேரத்தில் நான் அங்கு போக ஆகா சிக்கிட்டான்யா மாப்ள என்று என்பெயரில்.. அந்தக் கேசுகள் எல்லாவற்றையும் போட்டுத்தாக்கிவிடும் வாய்ப்புகள் அதிகம் என்பதால்.. அந்த திட்டத்தைக் கைவிட்டேன்..

கேற்றை மெதுவாச் சாத்தப்பு பெரியம்மாவின் குரல் நினைவிலிருந்தும் மோட்டார் சைக்கிளால் உறுமியபடி கேற்றை இடித்துத் திறக்கிற நினைவெழுந்து படம் விரித்தாடியது..இரண்டாம் சாமங்களில்.. எனது மோட்டார் சைக்கிள் உறுமும் சத்தத்திற்கு தூக்கக் கலக்கத்திலும் எழுந்து வந்து சாப்பாடு போடட்டேப்பு என்று கேட்கும் அண்ணியின் குரல் நினைவுக்கு வந்த அடுத்த கணம் பீறிட்டுக் கிளம்பியது அழுகை.. நான் நின்று கொண்டிருப்பது நடுத்தெருவென சட்டை செய்யாத அழுகை.. சென்னை மாநகரத்தின் ஒரு தெருவில் நின்று நான் அழுகையை விழுங்கி விழுங்கி அடக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன். அடுத்த நேரப்படுக்கைக்கு இடமில்லாமல் போகும் என்று நான் ஒரு போதும் கற்பனை செய்து கொண்டதில்லை.. அது எனக்கு நிகழ்ந்ததென்று என்னால் நம்பமுடியவில்லை..

இடப்பெயர்வில் எத்தனையோ இரவல் வீடுகள் மரநிழல்கள்.. சங்கடங்கள் இருந்தன.. கருணாகரனின் ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது..ஒரு இரவல் வீட்டில் வசிக்கிற அப்பா மகனுக்கு சொல்லுவது போன்றான ஒரு கவிதை.. பல ஆண்டுகளாயிற்று படித்து.. இந்தச் சுவற்றில் கீறாதே மகனே, கிணற்றடியில் தண்ணீரை ஊற்றவேண்டாம்.. என்பது போன்ற வரிகள் எல்லாம் வரும் (நான் முதல் முதலில் படித்த கவிதைத் தொகுப்பு அதுதான் ஒரு பொழுதுக்கு காத்திருத்தல்) இப்படியான அனுபவங்களின் போதெல்லாம் நான் அழுததில்லை.. ஏனெனில் எனக்கு என் வீட்டு மனிதர்கள் பக்கத்தில் இருந்தார்கள்.. அது எல்லாருக்கும் நிகழ்ந்தது.. இப்போது எனக்கு மட்டுமாய் நிகழ்ந்தது. அது தான் அழுகை..

நான் என்ன மாதிரித் தனித்து விட்டேன் என்கிற அச்சம் பிரமாண்டமாய் எழ நான் மட்டும் ஒரு தனித்தீவின் கரைகளைச் சுற்றி ஓடிக்கொண்டிருந்தேன்.. அநேக நாட்களில் வீடு திரும்புவதேயில்லை.. பள்ளிக் கூடத்து மேசைகளிலோ.. நண்பர்கள் வீடுகளிலோ.. படுத்துவிட்டு காலையில் பல்லு விளக்காமல் வீட்டுக்குப் போகையில்.. முதல் கேள்வி இரவு சாப்பிட்டாயா என்பதாய்த் தான் இருக்கும் அப்போதெல்லாம் வீடு எனக்கு அளிக்கும் பாதுகாப்புணர்வை இன்னதென்று அறியாதிருந்தேன்.. வெட்கத்தை விட்டு விட்டால் ஏதாவது தெருவில் படுத்துவிடலாம்.. நான் விட்டாலும் அது நம்மை விடுவதாயில்லை.. இந்தப் பெருநகரில் ஒரு புழுப் பூச்சி கூட என்னைக் கவனிக்காது இருந்தும். கௌரவத்தின் கண்கள் என்னைக் கண்காணித்துக் கொண்டிருந்தன.. மன்மத மாசம் போட்டிருந்தார்கள் ஞாயிற்றுக்கிழமை சிறப்புக்காட்சி.(மேட்டர் படம் தான்) குமரன் தியட்டரில். தியட்டரை ஒரு அரை நாள் வீடாக்குவதெனத் தீர்மானித்தேன்..

வானம் பெருங்கூரை
நட்சத்திர அலங்கரிப்பு..
காலப்பெருவிளக்கு நிலா..
என் கனவுப் பாதையிலே..

ஏதேதோ தோன்றிற்று.. புலம்பலாய்.. குமரன் தியட்டர் வாசலில் ஒரு கழைக்கூத்தாடிக் கூட்டம் ஒன்று தங்கள் வண்டியை நிறுத்தி விட்டு தூங்க ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.. எனக்கு இன்றைக்கொரு நாளைக்குத்தான் இப்படி நாளைக்கு நான் வீடு தேடிவிடலாம்.. அல்லது இன்றைக்கே எதாவது லொட்ஜ்ஜில் அறையெடுத்து விடலாம்.. அவர்கள் பிறந்ததிலிருந்தே வானமே கூரையெனக் கொண்டவர்கள்.. அவர்களுடைய எந்தக் குழந்தையும் அடம்பிடித்து வீரிட்டு அழுததாய் நான் பார்த்ததேயில்லை.. நுளம்பு அவர்களைக் கடிக்காதா.. அந்தப் பெண்களிற்கு நாணம் இருக்காதா.. திரைப்படத்தின் முத்தக் காட்சிக்கே.. பரபரப்பாகிற கலாச்சாரம் பேசுகிற ஊரில் இருந்து கொண்டு தெருவில் புணர்ந்து தெருவில் பிறந்து தெருவில் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மனிதர்களைப் பார்த்தேன்..அழுது கொண்டிருந்த மனம் தளர்ந்தது.

இந்த மனிதர்களிற்கு வீடு பற்றிய கனவுகள் ஏதேனும் இருக்குமா என்கிற நினைப்பெழுந்தது.. இருக்கும் நிச்சயமாய் இருக்கும் என்று தான் தோன்றிற்று.. அவனது கனவில் வருகிற வீடு.. சாருக்கான் தனது மனைவிக்கு பரிசளித்த வீட்டைப் போலவோ.. அம்பானி தனது மனைவிக்கு பரிசளிக்க கட்டிக் கொண்டிருக்கிற வீட்டைப் போலவோ நிச்சயம் இருக்காது.. அது நிச்சயமாய் நான்கு மறைப்புச் சுவர்களும்.. ஒரு கூரையும் கொண்ட எளிய குடிசையாகத்தான் இருக்கும்.. ஒரு வேளை அவர்கள் பூசலாரைப் போல வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ என்னவோ..

வீடுகள் அவரவர் கனவுகளைப் போல.. சிலது அவரவர் வசதியைப்போல.. புல்லை எடுத்து வேய்ந்து களிமண்ணை உருட்டிச் சுவர்வைத்த வீடு கூட சிலருக்கு கனவு வீடாகத்தான் இருக்கிறது.. அண்மையில் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் வீட்டிற்குப் போனேன். தமிழகத்தை கொஞ்சமேனும் கலக்கிக் கொண்டிருக்கிற அரசியல்வாதி அவர். அரசியல் வாழ்விற்கு வந்து கால்நூற்றாண்டுகளாகிறதாம்.. அதனைக்குறித்த ஒரு ஆவணப்படத் தயாரிப்பு பணிகளில் ஈடுபட அல்லது அங்கே சென்று வாய் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்தது.. அங்கனூரில் இருக்கும் அவரது வீட்டைப் பார்க்கையில் எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.. அது வீடல்ல குடிசை தொட்டதெற்கெல்லாம் ஊழலும் கட்டைப்பஞ்சாயத்தும் தலைவிரித்தாடுகிற அரசியல் சூழலில் ஒரு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு கட்சியின் தலைவராக இருக்கிறவரின் வீடு ஒரு குடிசை என்பது.. ஆச்சரியங்கள் தராமல் வேறென்ன தரும். அவருடைய வீடு மட்டுமில்லை..

அவருக்கு ஓட்டுப்போடுகிறவர்களான தலித் மக்களின் வீடுகள் எல்லாமே குடிசைகள் தான்.. அவர்களிம் மிச்சமிருப்பது நூற்றாண்டுகளாய் சாதியின் வன்கொடு நிழலில் வசித்த வசித்துக் கொண்டிருக்கிற ஆயாசம் மட்டும்தான்.. திருமாவளவன் நிச்சயமாய் அவர்களிற்கு விடுதலை தருவார் என்று நம்புகிறார்கள்.. நம்புவோம்.. இலங்கையின் அகதி முகாம்களில் இருக்கிற சிறிய வீடுகளை விடவும் மோசமான குடிசைகள் அவை.. யாருடைய வீட்டைச் சற்றியும் வேலிகள் கிடையாது.. இந்தியாவில் நகரங்களில் தான் மதில் கலாச்சாரம் கிராமங்களில் அநேகம் வேலிகள் கிடையாது.. (ஒரு கிடுகு வேலிக்கலாச்சாரத்தின் தேசத்திலிருந்து வந்தவனின் மனோ நிலை எனக்கு)

இலங்கையின் அகதி முகாம்களைப் பற்றிய நினைவெழுகையில்.. இந்தியாவில் இருக்கிற இலங்கை அகதி முகாம்களில் இருக்கிற வீடுகள் (அப்படி அவற்றை நிச்சயமாகச் சொல்ல முடியாது..) பற்றிய நினைவும் கூடவே எழுகிறது.. ராமேஸ்வரம் அகதிகள் முகாமில் நான் கழிக்கநேர்ந்த ஏறக்குறைய ஒரு மாத காலத்தில்.. அந்த வீடுகள் லயன்களை விடமோசமாயிருந்தன.. இலங்கையில் தோட்டத்தொழிலாளர்களிற்கு கட்டித்தரப்படுகிற வீடுகள்(லயன்) குறித்த விசனங்கள் பதிவு செய்யப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.. இந்தியாவில் அதேபோல வீடுகள்தான் ஈழத்தமிழ் அகதிகளிற்கு வழங்கப்படுகிறது. கக்கூஸ் முதல் சங்கக் கடை வரை எல்லாவற்றிற்கும் வரிசை வாழ்க்கையின் மிகக் கடினமான தருணங்கள் அவை.

நான் இதுவரை வசித்த வீட்டிற்கு கீழே சேட்டுக்காரர்கள் கடை வைத்திருந்தார்கள்.. அண்ணனும் தம்பியுமாக இரண்டு சேட்டுகள். அவர்களுடைய கடையின் கல்லாப்பொட்டி வரை போகும் அளவிற்கு நம்பிக்கையும் அன்பும் எங்களிடம் அவர்களிற்கு இருந்தன. நாங்கள் இந்த வீட்டிற்கு குடிவந்தபோது எங்களை இந்த வீட்டில் கொண்டு வந்து விட்ட ஆட்டோக்காரர் சொன்னார்.. சேட்டுக்காரன் ரொம்பக் குப்பையா இருப்பான்யா ராஜஸ்தான்ல தண்ணி கிடையாதுல்ல.. அதால பாத்றும்ல டாய்லெட்ல எல்லாம் தண்ணியை சிக்கனப்படுத்துகிறேன் என்று அதன் மணத்தை அதிகப்படுத்தி விடுவான்கள் என்று.. அதையும் மீறி நாங்கள் அவர்களோடு பழகினோம்.. இராஜஸ்தானில் இருந்து தனது எடையைவிட அதிக எடையுள்ள உலோகங்களை தன் உடம்பிலே போட்டுக்கொண்டு வருகிற சேட்டுக்களின் அம்மா.. பேட்டா என்று எங்களை அணைக்கையில் பெரியம்மாவின் நினைவெழுவதைத் தவிர்க்க முடியவில்லை.. அதெல்லாவற்றையும் விட.. அவர்கள் செய்து தருகிற சப்பாத்தியும் கிழங்கையும் அவ்வப்போது ஒரு பிடி பிடிக்கவும் நாங்கள் தயக்கம் காட்டியதில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக இராஜஸ்தானில் இருந்து கொண்டு வருகிற எள்ளுல செய்த ஒரு வகைப் பலகாரம் அதைச்சாப்பிடாதவனுக்கு இந்த ஜென்மம் சாபல்யம் அடையக் கூடாதெனச் சபிப்பேன் நான்.. ஆனால் என்ன அவர்கள் வீட்டில் எந்த ராஜஸ்தானி சின்னப்பொண்ணும் இல்லை என்பதுதான் என் ஒரே மனக்குறை.. அவர்களுடைய வீடாக தண்ணீர் அதிகம் பாவிக்காத ஒரு அசுத்தமான வீட்டைக் கற்பனை பண்ணி வைத்திருந்தேன். ஆனால் அவர்களுடைய வீட்டுக்குள் போனதும் எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.. துடைத்து வைத்தது மாதிரி அத்தனை சுத்தமாக இருந்தது சமையலையில் சமைக்கிறதற்காக சுவடுகளே தெரியாமல் அத்தனை சுத்தமாக இருந்தது.. நானே எனக்குள் அவர்களை அசுத்தமானவர்களாக கற்பனை பண்ணியதற்காக வெட்கப்பட்டுக் கொண்டேன்..

நான் குமரன் தியட்டரின் வாசலில் பீறிட்டுக் கிளம்புகிற அழுகையை வெட்கம் கருதி அடக்கிய படி படம் முடிவதற்காக தியட்டர் வாசலில் காத்திருந்தேன்.. யாரும் அவ்வளவு நெருக்கமான நண்பர்கள் கிடையாது.. யார் வீட்டிற்காவது போய் இன்றைய இரவைக்கழிக்கலாம் என்றால் எல்லா கல்யாணமாகாத இளைஞர்களின் வாழ்க்கையும். இட்டுமுட்டு அறைக்குள். தட்டுமுட்டுச் சாமான்கள் காலில் முட்டுப்படத் தூங்கும் வாழ்க்கைதான் இதில் நான் வேறு போய் ஏன் சிரமத்தைக் கொடுப்பான் என்று நினைத்தேன்.

டேய் பாடு என்னடா மேட்டர் படம் பாக்கப்போறியா என்றபடி சேட்டு தன் பைக்கை என்னருகில் நிறுத்தினான் சேட்டு.. ஆதரவான மனிதர்களை காணோம்.. என்று தவித்துக் கொண்டிருந்த அழுகை விடுவிடென ஊதடுகளில் விம்மித் தழும்பியது.. என்னடா வாடா.. என்று அவனது பைக்கில் போனேன்.. அவனது வீட்டிற்குப் போனதும் அழுகை பீறிட்டுக் கிளம்பியது.. அடக்கமுடியாத அழுகை பாத்ரூமில் நின்று அழுது தீர்த்தேன்.. லால்(சேட்டுகளில் அண்ணன்)இன் மனைவி ஹிந்தியில் ஏதோ சொன்னார்.. அநேகமாக வீட்டு ஓனரைத் சபித்து திட்டுகிறாள் என்று புரிந்தது.. டேய்.. நாங்க இருக்குமட்டும் நீ எதுக்கு யோசிக்காத எப்ப வேணா இங்க வா உன் வீடு மாதிரி இது.. ஹரி(சேட்டுகளில் தம்பி) சொன்னான்.

அவனது அண்ணி இன்னமும் போலீசில் சொல்லலாம் என்பது மாதிரி ஏதோ சொன்னாள்.. ஹரி என்னிடம் சொன்னான் இது எங்க ஊரு இல்ல மாப்ள நாங்க இங்க பிழைக்க வந்திருக்கம்.. இது நம்ம ஊரு கிடையாதுல்ல.. நாம எதுசொன்னாலும் வேலைக்காகாது அவன் சொல்றதுதான் எடுபடும். அதால பேசாம இருந்திட்டு நம்ம ஜோலியைப் பார்க்கணும்டா.. விடு எல்லாம் நல்லதுக்குத்தான்.. அவனது அண்ணி தேத்தண்ணி கொண்டு வந்து தந்தாள்.. அவளது குழந்தை என்னை நெருங்கி எனது தலைமுடியைப் பற்றி இழுத்தது..

வீடென்பது அறைகள் கொண்ட கட்டிடடம் அல்ல.. அது மனிதர்கள்.. கவனிப்புகளும் கனிவுகளாலும் நம்மை ஆட்கொள்கின்ற மனிதர்கள் நிறைந்த சொர்க்கம். துயரங்கள் என்னை அண்டாமல் காத்துநிற்கிற வேலி.. நான் விட்டுவிட்டு வந்திருப்பது கட்டிடத்தை அல்ல அந்த மனிதர்களின் கனிவை.. இனி எப்போது மறுபடி திரும்பமுடியும் என உறுதியாகச் சொல்ல முடியாத தொலைவுக்கு வந்துவிட்டேன்.. உலகெங்கும் தன்மையின் கொடுநிழலில் வசிக்கநேர்கிற ஒவ்வோரு தனியன்களினதும் துயரம் இதுவாகத்தானே இருக்கும்.. ஹரி எனக்காக ஒரு நான்கு சுவர்கள் கொண்ட கட்டிடத்தை வாடகைக்கு மறுபடி.. எடுத்துக் கொடுத்தான். அந்தகட்டிடமும் வீடாக முடியாது என்பதை நான் இப்போது உணர்ந்து கொண்டேன்.. நான் இனி எப்போது ஒரு வீட்டில் வசிக்கத் தொடங்குவேன்.. என் தம்பின்னு சொல்லியிருக்கேன்.. நீ சிலோன் அது இதுன்னு.. சொல்லாத.. ஹரி என்னிடம் சொன்னான். வீட்டுக்காரர் என்னை ஒரு சேட்டாக எண்ணுகிறார்.. அவரது விழிகளில்..ஒரு சந்தேகம் முளைத்துக் கிடக்கிறது.. கறுப்பு நிறத்தில் ஒரு சேட்டா இருப்பார்களா? இந்தக் கட்டிடமும் என்னை வெளியே தள்ளலாம்.. அதுவரைக்கும் அதன் சுவர்களிற்குள்ளிருந்து கொண்டு…

01.

25.02.2009 (முன்)

நமது தொலைபேசி

உரையாடலை

கேட்டுக்கொண்டிருக்கின்றன

நமக்குச் சொந்தமற்ற செவிகள்.

பீறிட்டுக்கிளம்பும்  சொற்கள்

பதுங்கிக் கொண்டபின்

உலர்ந்து போன வார்த்தைகளில்

நிகழ்கிறது.

நீ உயிரோடிருப்பதை அறிவிக்கும்

உன் ஒப்புதல் வாக்குமூலம்.


வெறுமனே

எதிர்முனை இரையும்

என் கேள்விகளின் போது

நீ

எச்சிலை விழுங்குகிறாயா?

எதைப்பற்றியும்

சொல்லவியலாச்

சொற்களைச் சபித்தபடி

ஒன்றுக்கும் யோசிக்காதே

என்கிறாய்..

உன்னிடம்

திணிக்கப்பட்ட

துப்பாக்கிகளை நீ

எந்தப்பக்கமாகப் பிடிப்பாய்

வாய் வரை வந்த

கேள்வியை விழுங்கிக்கொண்டு

மௌனிக்கிறேன்.

தணிக்கையாளர்களாலும்

ஒலிப்பதிவாளர்களாலும்

கண்டுகொள்ளமுடியாத

ஒருதுளிக்கண்ணீர் புறங்கையில்

உதிர்கிறது..

தொலைபேசிகளை

நிறைக்கிறது

ஒரு நிம்மதிப்பெருமூச்சு..

நீ நிம்மதியாப் போ..

02.

05.03.2009 (பின்)

அவனது பெயரில் அழகிருந்தது..

அன்பும் கூட
அவனோடு எப்போதுமிருக்கும்
அவனது மென்புன்னகையைப் போலவும்

அவனது புன்னகை ஒரு வண்டு.
மற்றவர்களின் இதயத்தை
மொய்த்துவிடுகிற வண்டு.

அவனுக்கு இரண்டு பெயர்கள் இருந்தன..
செல்லமாய் ஒன்றும்
காகிதங்களில் ஒன்றுமாய்
எதைக்கொண்டு அழைத்தாலும்
அவனது புன்னகை
ஒரே மாதிரியானதுதான்..
மாற்றமுடியாதபடி…

அவனுக்கு மூன்றாம் பெயரை
அவர்கள் வழங்கினர்
அந்த மூன்றாம் பெயர்
அவனது புன்னகையைப்
பிடுங்கிவைத்துக்கொண்டு
துவக்குகளைப் பரிசளித்தது.
அவனது விருப்புகளின்
மீதேறிநின்று பல்லிளித்தது.
அவனது தாயைப் பைத்தியமாயத்
தெருவில் அலைத்தது.

அம்மா மூன்றாம் பெயர்
அவனைக் கொன்றுவிடுமெனப்
புலம்பியபடியிருந்தாள்.
அவனது முதலிரண்டு பெயர்களையும்
திரும்பத் திரும்பச்
சொல்லிக்கொண்டிருந்தாள்..
மந்திரங்களின் உச்சாடனம்போல..

இறுதியில் அந்த மூன்றாம் பெயர்
அவனைக் கொன்றது.
அம்மா பேச்சை நிறுத்தினாள்..
யாருமற்ற வெளியில்

அலைந்துகொண்டிருக்கிறார்கள்
முதலிரண்டு பெயர்களும்
மரணத்தால் எடுத்துச்செல்லமுடியாத
அவனது புன்னகையும்.. அம்மாவும்


(தம்பி அன்பழகனுக்கு)
நன்றி – எதுவரை (செப்-அக் 2009)

ani.jpgதனது நான்கைந்து கவிதைத் தொகுதிகளைக் கையில் திணித்தபடி கவிதை பற்றி விடாப்பிடியாக ஒருவர் பேசியது இப்போது நினைவுக்கு வந்து தொலைக்கிறது. நீங்கள் கடைசியாக வாசித்த கவிதைப்புத்தகம் எது எனத் என் நாக்குத்தவறிக் கேட்டதில் அவர் அற்புதமானதொரு கருத்தைச் சொன்னார்..

“நான் வேறு புத்தகங்கள் படிப்பதில்லைத் தம்பி… அவற்றில் ஒரு வரியைப் படிப்பதற்கிடையில் எனக்கு நான்கு வரி தோன்றிவிடுகிறது நானென்ன செய்ய… எழுதுவது தானே முக்கியம்” என்றார். நான் அவர் வயசு கருதி தலையை மட்டும் எந்தப்பக்கம் என்றில்லாமல் ஆட்டிவைத்தேன்.(நழுவல் தான் நமக்குத் தொழிலாயிற்றே).

சில நல்ல எழுத்துக்களைப் படிக்கும் நம்மையறியாத பரவசமும் வெட்கமும் ஒருங்கே கைகூடிவருகிறது. (வெட்கம் எழுகிறவராயிருப்பின் மட்டும்). வாசிக்கச் சலிக்கிறவன் எதற்கு எழுதுகிறான். எனத் தோன்றும்.. கவிதைகள் என்னைத் தின்று செரிக்கின்றன. சில அற்புதமான கவிதைகளைப் படிக்கநேர்கையில் என்னை நீயெல்லாம் ஏன் கவிதை எழுதுகிறாய் மனக்குரங்கு கேள்விகேட்டுத் துளைக்கிறது. இன்னும் சில கவிதைகள் பரவசம் கொண்டென் மனதுக்குள் மறுபடி மறுபடி புரண்டுகொண்டிருக்கும். இன்னும் சில என்னை ஏன் நீ எழுதவில்லை என்பதாய் முறைக்கும். கவிதைகள் மட்டுமென்றல்ல புத்தகங்கள் எல்லாமே அப்படித்தான்.

அப்படி என்னை வெட்கம் கொள்ள வைத்த. பரவசத்தில் ஆழ்த்திய சில கவிதைகள் கொண்ட அனிதாவின் ‘கனவு கலையாத கடற்கன்னி’ தொகுப்பை இந்தக் காலையில் படித்தேன். எற்கனவே அது மின்தொகுப்பாக கிடைத்திருந்தாலும். புத்தகத்தை புத்தகமாகப் படிப்பதன் சுகம் கருதி. தாள்களைத் தடவும் விரல்களின் வழிதான் என்னுள் வார்த்தைகளின் கிறக்கம் ஏறுவதாய்க் கருதியோ என்னமோ அதை புத்தகப்பிரதியாய் வாங்கி வந்தபின்னரே படித்தேன். மற்றவர்கள் ஒத்துக்கொள்கிறார்களோ இல்லையோ நானும் கவிதைகள் எழுதுவ(திய)தாய் நம்பிக்கொண்டிருக்கிறது மனசு.

கவிதைகள் எழுதலாம் கவிதைகள் பற்றி எப்படி எழுதுவது. எனக்குத் தெரியாது. அனிதாவின் கவிதைகளின் வழியாக எனக்கு நேரமுடியாத அனுபவங்கள் கூட கோர்த்துக்கிடக்கும் அவரது வார்த்தைகள் வழியாய் நிகழ்ந்து கடக்கிறது என்னை. பெண் என்கிற இருப்பின் தனித்துவம் மிகுந்து கிடக்கும் கவிதைகளில் காமமும் அழகும் பெருகும் புள்ளியாய் தான் பார்க்கப்படுவது குறித்த கோபமிருக்கிறது. மென் துயரங்கள் படிந்த சொற்களின் மீது லேசான பதற்றம் தூவப்பட்டிருக்கிறது. அது பெண்கள் மட்டுமே அலைகிற வெளி. அது சுருக்கிடப்பட்ட ஒரு சிறுதுளிக்குள் விரிகிற பால்வீதிப் பிரபஞ்சம். ஆண்கள் அறியாத ரகசியவழிகளில் பெண்கள் அதை அடைகிறார்கள். யாராலும் பின்பற்ற முடியாதபடி ஒழிந்துகிடக்கும் அவர்களது தடங்களைத் தேடும் அலைதலில் தோற்றுத்தான் போகிறார்கள் ஆண்கள்.

எல்லாம் போதும் கவிதையைப் பற்றிப் பேசடா என்ற உங்கள் முணுமுணுப்பு கேட்கிறது..

ஆனாலும் என்ன கவிதைகளைப் பற்றி எப்படி பேசுவது என்றெனக்குத் தெரியாது.. தொகுப்பை மூடிவைத்தை பின்னும் மனதுக்குள் மினுங்கிய சில கவிதைகள்.. மற்றும் அனுபவங்கள்.

இந்தக் கவிதை எனக்கு பயங்கரமாப்பிடிச்சது இதே அனுபவத்தை பல்வேறு பெண்கவிஞர்களின் கவிதைகள் பேசுகின்றன. கோபமாய், வேகமாய், எரிச்சலாய்.. இன்னும் இன்னும் வன்மமாய்ப் பேசியிருக்கின்றன. ஆனால் எனக்கு அனிதா அதைச் சொல்லியிருக்கிற மொழி பிடித்திருக்கிறது. நான் அறியாத ஒன்றைக் கண்டடைந்த சந்தோசம் மேலிட ஒரு புதிர் போல இதை மறுபடி மறுபடி படித்துக்கொண்டிருந்தேன்.

சுழற்சி.

இது நிகழாதிருக்க வேண்டும்
இம்முறையாவது.

அங்குலம் அங்குலமாய் வெப்பம் பரவி
தீ கனன்று அனல் துவங்கும்
ஐந்து விரல் அனிச்சயாய் மடங்கி
ரேகைக்குள் குழி பறிக்கும்
மரங்கள் மெலிந்து கொடிகளாகி
கொடிகள் வளைந்து நாணலாகும்

வீடு அதிர்ந்து அதிர்ந்து அடங்கும்
தூண்கள் வலுவின்றி சரியத் துவங்கும்
முற்றத்து துளசி மாடம்
சமயம் பார்த்து ஓடி ஒளியும்

எனினும் வீடும் அழியபோவதில்லை
காடும் கருகபோவதில்லை
யாரையும் ஈர்க்கவில்லை எந்த ஒரு நிகழ்வும்

பேருந்து நெரிசலின் சலனம் தாண்டி
சன்னமாய் உதிர்கின்றன
ஒரு குழந்தைக்கான ஆயத்தங்கள்.

இப்படி ஒரு அனுபவத்தை நான் எழுதவேண்டும் என்று நினைத்தபடி இருந்தேன். யாரிடமிருந்தாவது கரிசனத்தை யாசிக்கிற பொழுதுகள் நிறைந்தே கிடக்கின்றன வீட்டை விட்டுத் தனித்தெறியப்பட்ட என்வாழ்வில். என் தம்பியின் புகைப்படத்தை பிரின்ட் பண்ணிக்கொண்டு வந்த ஆட்டோப் பயணத்தில் எனைமீறிப்பீறிட்ட விசும்பலின் போது துணைவந்த ஆசுவாசம் தந்த ஆட்டோ ஓட்டும் எளியமனிதரின் வார்த்தைகளைப் நினைவூட்டிப்போயிற்று இக்கவிதை..

அன்பின் விலைகள்..

எதற்காகவோ கண் கலங்கியபடி
ஆட்டோவில் ஏறினேன்

மௌனமாய் விம்மத்துவங்கி
பின் உடைந்து பெரிதாய் அழவும்
ஆட்டோக்காரன் திரும்பிப்பார்த்து
ஏன் அழறீங்க என்றான்
பின் என்ன நினைத்தானோ அழாதீங்க‌ என்றான்
என் இடம் வந்ததும்
கொடுத்த இருபது ரூபாய்க்கு எட்டு ரூபாய் சில்லரை
எண்ணி கொடுத்துவிட்டு சென்றுவிட்டான்.

அந்த மீதி சில்லரையாவது வாங்காமல் விட்டிருக்கலாம்.

உலகம் தந்திரமான சொற்களால் நிறைந்திருக்கிறது. வாய்களில் புழுத்து நெளிகிறது தேவைகளின் நிமித்தம் உதிர்க்கப்படும் பிரியத்தின் சொற்கள். காதல் தொடங்கி காதல் வரையும் அதன் சாதுரியங்கள் எல்லாஇடங்களிலும் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. அதன் சாதுரியங்கள் தோற்றுத் துவளும் ஒரு கணத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது இந்தக்கவிதை என்பதாய் நான் உணர்கிறேன்.

துரோகம்

அகால வேளையின்
நம்பிக்கை திரை கிழித்துக்கொண்டு
ஒரு பொய் பிறக்கிறது

பின் மற்றொன்று
மற்றுமொன்று.
பிணவறையின் சவங்களாய்
வரிசையாய் பொய்கள்

குளிர்ந்து
விறைத்து
உணர்வற்று.
சரி நம்புகிறேன்.

இப்போது தள்ளிப்படு.

பிரியத்தின் அழகான கண்டுபிடிப்பு முத்தம். வார்த்தைகளற்ற அன்பின் மொழி சிலபொழுகளில் காமத்தின் தோழனாயும் அல்லது தோழியாயும். பெருகிப் பெருகி வழிகிற பேரன்பில் நிகழந்துகொண்டிருக்க வேண்டுமென்று பேராசைகொண்டலைகின்றன் முத்தங்கள். திடீரென்று ஒரு கணத்தில் நிகழ்ந்து மனசுக்குள் உறையவைக்கப்பட்ட முதல் முத்தங்கள் சிலிர்ப்பூட்டிக்கொண்டிருப்பவை அனிதாவின் இக்கவிதை படிக்கையிலும் உதடுகளில் ஈரலித்தது அம்முத்தம்.. ஆனால் இதைப்போலல்ல.. அது கன்னத்தைக் குறிவைத்து உதட்டில் முடிவடைந்தது.

முத்தங்களாலான கூட்டில்

//உன் கைக்குள் சுருங்கிக் கொண்டு
முகமெங்கும் ஈரம் காயாமல்
முத்தங்கள் வாங்கிக் கொண்டிருப்பினும்
என் கீழுதட்டை நோக்கிப் பயணித்து பின்
வழிதவறிக் கன்னம் சேர்ந்த முதல் முத்தத்தை
வெட்கிச் சிரித்து
நினைவு கூர்கின்றன
வழியெல்லாம் படுத்திருக்கும் அத்தனை வேகத்தடைகளும்//

என் அனுபவங்களோடு சேர்த்துச் சொன்ன இந்த கவிதைகள் போல தொகுப்பிலிருந்து மனசுக்குள் புரள்கிற மேலும்சில கவிதைகள். எண்ணங்கள்,வழியும் வெறுமைகள்,என் பிரிய வழிப்போக்கனுக்கு இப்படிப் போகுமொரு வரிசை இவை என் தேர்வுகள் மட்டுமே. கவிதை அனுபவம் தானே அது அவரவர்க்கு நிகழ்வதுதான். மேலே அனுபவத்தோடு சேர்த்து எழுதுகையில் கிட்டத்தட்ட முழுக்கவிதைகளையும் எழுதியிருப்பதன் காரணம் அனிதாவின் கவிதைகளில் சில வரிகளைத் தேர்ந்தெடுத்து இது நல்லாயிருக்கு என்பதாய்ச் சொல்லமுடியவில்லை. அது அவசியமும் கூடக் கிடையாது. ஒரு முழுக்கவிதையாய் நிகழும் போதே அது நன்றாயிருக்கிறது. சில வேளை அனிதாவே சொல்வது போல

//இதயங்களின் கதகதப்பில் அடைகாக்கப்படும்

என் கவிதையின் முதல் வாசகனுக்கு

என்னை எப்போதும் புரியப்போவதில்லை//

இது என் புரிதல் அனிதாவின் கவிதைகள் எனக்குள் நிகழ்த்திய அனுபவங்கள். உங்களுக்கு அவை வேறொரு அனுபவமாகவும் நிகழலாம். அனுபவித்தல் தானே கவிதை.

கடைசியாக ஒரு குறிப்பு…

தி.நகர் நியூ புக் லாண்டில் இந்த தொகுப்பை வாங்கு முன்பாக.. புத்தகங்களைப் புரட்டினேன். பிரபலங்களின் முகவரிகள் என்கிற ஒரு புத்தகத்தை புரட்டினேன். ஜோதிகாவின் முகவரிக்கு நேரே தொடர்புக்கு சிவகுமார் (நடிகர்) என்றிருந்தது. வீட்டுக்கு வந்து அனிதாவின் தொகுப்பில் ‘இன்று இந்த அறையில்’ என்கிற கீழ்வரும் கவிதையை படிக்கையில் ஏனோ ஜோதிகாவின் முகவரி இருந்த பக்கம் நினைவுக்கு வந்தது.

இன்று இந்த அறையில்

இன்று இந்த அறையில் சில்லு சில்லாய்
சிதறியிருக்கிறேன்

உடைந்ததில் தேறியவற்றை
எடுத்துப்போக வந்து விட்டார்கள்
பிரியத்துக்குரியவர்கள்

அப்பாவை முந்திக்கொண்ட தம்பி
அம்மாவின் நினைவுகளை
கடைசி உமிழ்நீர் வழிய
அள்ளிப் போனான்

பெற்ற பரிசுகளும் பட்டங்களும்
தன்னம்பிக்கைகளும்
கவிதைப்புத்தகமும்
அப்பாவுக்கு

என் குழந்தையின் வண்ணப் புகைப்படங்களும்
முதலிரவுக்கு நாளைய சோப்பு வாசமும்
கணவனின் தேர்வு

மீதமிருக்கும் சில
சிதறுண்ட நான்
சிதறுண்ட நீ
கொஞ்சம் ரத்தம்

உயிர்மை வெளியீடு
விலை -40.00

அம்மாவின் சுருதிப்பெட்டி..

Posted by த.அகிலன் on Aug 2nd, 2009
2009
Aug 2

kathai_padam_.jpgநீங்கள் ஈழம் பற்றிய வீடீயோக்கள் வருகிற எந்த இணையத்தளத்திலும் பார்க்கலாம். தனது சோட்டிக்கு மேலால் பச்சைப் புடைவையைச் சுற்றியபடி வெறுங்கையுடன் தனித்து திசையற்று நடந்து போகிற பெண் என்ர அம்மாதான். பத்துமாதம் என்னைச் சுமந்து பெத்த அம்மாதான் அது. இரண்டு ஆண் பிள்ளைகளையும் ஒரு பொம்பிளைப் பிள்ளையையும் பெத்து வளர்த்து ஆளாக்கின அதே அம்மாதான்….
ஸ.. ப.. ஸ..
அம்மா சுருதி சேர்த்துக்கொள்ளுவது ஒரு அழகுதான். எனக்கு அம்மாவின் பாட்டுக்கேட்பதை விடவும் அதைத் தொடங்குவதற்கு முன்னாலும் பின்னாலும் அம்மா சுருதி சேர்ப்பதை கேட்பதில் எனக்கு பிரியம் அதிகம். சங்கீதத்தின் முழுமையும் அவள் சுருதி சேர்க்கும் போது வெளிவந்துவிடுகிறதோ என்னமோ. அம்மா வீட்டில் தன் மாணவிகளிற்குப் பாட்டுச் சொல்லிக்கொடுக்கும் போதெல்லாம் சுருதிப்பெட்டியை யார் போடுவது என்பதில் எனக்கும் தம்பிக்கும் போட்டியிருக்கும். தம்பி நல்லாய்ப் பாடவேறு செய்வான் எனக்கோ பாடுவது என்றால் வெறும் காத்துமட்டும்தான் வரும். பாடுவதில் அவனோடு போட்டியிட முடியாததால் நான் அதைச் சுருதிப்பெட்டிக்காகச் சண்டைபிடிப்பதில் காட்டுவேன். அம்மாவுக்கும் அது தெரிந்தோ என்னமோ எப்போது தீர்ப்புகள் என்பக்கமாயிருக்கும். எப்போதாவது திட்டும் போதெல்லாம் அம்மா சொல்லுவாள்.“டேய் கத்திக் கத்தி நான் உங்களை வளர்க்கிறனடா கொஞ்சமாவது இரக்கமிருக்கா உங்களுக்கு..”இரக்கம் என்கிற வார்த்தை கொஞ்சம் அதிகம் தான் என்றாலும் அம்மாவும் சங்கீதமும் தான் எங்களை வளர்த்தார்கள்.

அம்மா மட்டும் சங்கீதச்ரீச்சராயிருந்திருக்காவிட்டால் அப்பா செத்துப்போனவுடனேயே நாங்கள் நடுத்தெருவுக்கு வந்திருப்போம். ஆனால் துயரங்களை அம்மாவின் சங்கீதம் கரைத்தது. அம்மாவும் அவளது சங்கீதத்துக்குள் கரைந்துபோகிறவளாயிருந்தாள்.

சொந்தங்கள் எல்லாருமாய்க் கூடுகிற நாட்களில் எல்லாரும் அம்மாவைப் பாடச்சொல்லிக் கேட்பார்கள். அம்மா பாடத்தொடங்குவாள் “எனக்கென்ன மனக்கவலை என்தாய்க்கன்றோ தினம் தினம் என்கவலை” நான் பாடவேண்டியதை அம்மா பாடுகிறாளோ என்று நினைப்பேன். அம்மாவை யார் பாடச்சொல்லிக் கேட்டாலும் அம்மா இந்தப் பாடலைத் தான் பாடுவாள். அம்மா ஏன் இந்தப்பாடலைப் பாடுகிறாள் என்றெனக்குத் தோன்றுவதுண்டு உண்மையிலேயே அம்மாவிற்கு ஏதும் மனக்கவலைகள் கிடையாதா? அல்லது தன் மனசுமுழுவதிலும் துயரங்களை வைத்துக்கொண்டு எதிர்வளமாக அதையெல்லாம் பாடிக்கரைக்க முயற்சிக்கிறாளா அம்மா. பாடும் போது அம்மாவின் முகம் வழக்கமானதாக இராது. கண்களை மூடிக்கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்திருக்கிற அம்மாவின் தோற்றம் தெய்வீகமானதாக மாறிவிடுகிறது.

நான் “நான் அம்மா இந்தப் பாடலை அடிக்கடி பாடுகிறீங்கள்” என்று அம்மா என் தலையில் பேன் பார்த்துக்கொண்டிருந்த ஒரு நாள் மாலையில் கேட்டேன். என் தலையில் ஊர்ந்து கொண்டிருந்த அம்மாவின் கைகள் கொஞ்சநேரம் தங்கள் ஊர்தலை நிறுத்தியது. நான் அம்மா கோபமாயத் தலையில் குட்டப்போகிறாளோ என்று பயந்துபோனேன். ஆனால் அம்மாவின் கைகள் சிறிது இடைவெளி விட்டு மறுபடி தமது ஊர்தலைத் தொடர்ந்தன ஆனால் அம்மா பதில் சொல்லவில்லை. ஏனோ நானும் மறுபடியும் கேட்கவில்லை. அம்மா கோபமாகிவிட்டாளோ என்றெனக்குப் பயமாக இருந்தது.நான் அம்மாவின் அகப்பைக் காம்புப் பூசையை நினைத்துக்கொண்டு பேசாமல் இருந்துவிட்டேன்.

அம்மா எப்படி நன்றாகப் பாடுவாளோ அப்படி நன்றாக அடிக்கவும் செய்வாள்.அம்மா அப்படி அடிக்கிற சமயங்களில் நாங்கள் மூன்று பெருமே ராகமெடுத்து அழுவோம். அழுகிறதிலயாவது நாங்கள் சங்கீதச் ரீச்சரின் பிள்ளைகள் எண்டதைக் காட்டவேண்டாமா?.. எங்கள அழுகை ஆலாபனையைக் கேட்டு முன்வளவில இருந்து மாமாவோ..  பக்கத்து வளவில இருந்து பெரியம்மாவோ வந்து காப்பாற்ற மாட்டார்களா என்கிற ஏக்கம் நிரம்பிய அவலச் சங்கீதமாய அது இருக்கும். அதிலும் என் தம்பி திறமைசாலியாக இருந்தான் அம்மா பூவரசம் கம்பை ஓங்குகிறபோது உச்சஸ்தாயியில் கத்தி அடிவிழுந்தபிறகு படிப்படியாக அதைக்குறைப்பான். அதை விழுகிற அடியின் வேகத்தை குறைக்கும் ஒரு தொழிநுட்பமாக அவன் பாவித்திருக்கிறான் என்பதை பின்னாளில் அவன் சொல்ல கேட்டிருக்கிறேன்.. (ஹி ஹி ஹி )

ஆனால் அம்மா அடுத்த தடைவை பாட்டை மாற்றியிருந்தாள். “குறைவொன்றுமில்லை மறைமூர்த்திக் கண்ணா” எனக் கென்னவோ பாடலின் வரிகள் மாறியிருக்கிறதே தவிர அம்மா உட்பொருளை அப்படியேதான் வைத்திருக்கிறாள் என்று தோன்றியது. ஆனால் நானும் இன்ற வரைக்கும் அதைக்குறித்துக் கேட்கவில்லை. அம்மாவும் சொல்லவில்லை. அம்மாவுக்கு ஒரு ஆசையிருந்தது. சொந்தமாய் ஒரு சுருதிப்பெட்டி வாங்கிவிடவேண்டும் என்கிற ஆசைதான் அது. என்ன இருந்தாலும் சங்கீதத் ரீச்சரிடமே சுருதிப்பெட்டியில்லை என்பது ஒரு பெரிய குறைதானே. ஆனால் அம்மாவின் வருமானம் சொந்தமாய் ஒரு சுருதிப்பெட்டியை வாங்கஅனுமதிக்கிறதாயில்லை. அவளது சுருதிப்பெட்டி ஆசைகளை விழுங்கி நாங்கள் எங்கள் வயிறுகளை நிரப்பிக்கொண்டோம். எங்கள் நோய்களை தீர்த்துக்கொண்டோம். நல்ல அழகான ஆடைகளாய் உடுத்திக்கொண்டோம்.

ஆனால் அம்மா எப்படியோ ஒரு வழியாக காசு சேர்த்து ஒரு சுருதிப்பெட்டியை சொந்தமாக வாங்கினாள். கிளிநொச்சியில் சுருதிப்பெட்டி கிடைக்காது யாழ்ப்பாணத்தில் மட்டும் தான் வாங்கமுடியும். யாழ்ப்பாணத்துக்கு தரைவழியாகப் போகமுடியாது. பாதையையில் போர் பயணித்துக்கொண்டிருந்தது. கடல் வழியாகத்தான் போகவேண்டும். அம்மா எங்களைப் பெரியம்மா வீட்டில் விட்டுவிட்டு ஆசைப்பெரியம்மாவுடன் யாழ்ப்பாணம் போய் அந்தச் சுருதிப்பெட்டியை வாங்கிக்கொண்டு வந்தாள். அம்மா வரும் வரைக்கும் பெரியம்மா புறுபுறுத்துக்கொண்டேயிருந்தா “இப்ப உந்தக்கடலுக்கால போய்ச் சுருதிப்பெட்டி வாங்கத்தான் வேணுமோ” என்று. அப்போதெல்லாம் கிளாளிக் கடலுக்கால போற சனங்கள் உயிரோ வாறது நிச்சயமில்லை நேவி வந்து வெட்டியும் சுட்டும் ஆட்களைக் கொன்றுகொண்டிருந்தது. பெரியம்மா அம்மாக்கு ஏதும் நடந்திருமோ எண்ட பயத்திலதான் திட்டிக்கொண்டிருந்தாள் எல்லாம் அம்மா திரும்பி வரும் வரைக்கும் தான்.

அம்மா சுருதிப்பெட்டியை வாங்கிக் கொண்டு வந்தாள். ஒரு நீலநிறப்பையுக்குள் செவ்வகமாய் அதிசயப் பொருளைப்போல இருந்தது அது. அந்த நீலநிறப்பையும் வழக்கமான பைகளைப் போல அல்லாமல் வார் நீளமானதாக இருந்தது. நாங்கள் அம்மாவின் சொந்தச் சுருதிப் பெட்டியைப் பார்ப்பதற்கு ஆவலாயிருந்தோம். ஆனால் அம்மா அதைச் சாமிப்படங்கள் இருக்கிற தட்டில் வைத்தாள். சாமியெல்லாம் கும்பிட்டாப்பிறகுதான் அதைத் தொடலாம் என்றுவிட்டாள். அன்றிலிருந்து சுருதிப்பெட்டியும் ஒரு சாமியாகிவிட்டது வீட்டில்.

ஒவ்வொரு தடைவையும் போர் எங்களை ஊரைவிட்டுத் துரத்தும் போதெல்லாம் நாங்கள் அவசர அவசரமாய் வீட்டைவிட்டு ஓடநேர்ந்திருக்கிறது. கையில் அகப்பட்டதை மட்டும் எடுத்துக்கொண்டு ஓட நேர்ந்திருக்கிறது. ஆனால் எல்லாரும் தாங்கள் அதிகம் நேசிக்கிறவற்றை எப்படியாவது எடுத்துக்கொண்டு போய்விடுவோம் ஏனெனில் மறுபடி திரும்பவும் எப்போது வரமுடியும் என்று சொல்லமுடியாது. அப்படியே வந்தாலும் வீடும் பொருட்களும் இருக்கும் என்று சொல்லமுடியாது. அம்மா எப்போதும் முதலில் சுருதிப்பெட்டியைத் தான் எடுத்துக்கொள்வாள். நான் தீப்பெட்டிப் பொன்வண்டும். காமிக்ஸ் புத்தகங்களையும் முதல் எடுப்பேன். தம்பி செஸ் போர்ட்டை எடுப்பான். தங்கச்சி எதையும் எடுப்பதில்லை அம்மா எதைச் சொல்கிறாளோ அதைத் தான் எடுப்பாள். தின்பண்டங்களில் மட்டுமே அவளுக்கு ஆசை. ஆனால் உயிர்பிழைக்க ஓடுகிற அவசரத்தில் அதையார் கவனிப்பது.

நாங்கள் மூன்றாம் முறையாக கனகராயன் குளத்தில் இருந்து அக்கராயனுக்கு இடம்பெயர்ந்த போது அம்மாவின் சுருதிப்பெட்டி காயமடைந்தது. வீதியில் குண்டுகள் விழுந்துகொண்டிருந்தன. நாங்கள் குண்டுகள் வீழ்ந்து வெடிக்கும் போதெல்லாம் நிலத்தில் விழுந்து படுப்பதும் பிறகு எழுந்து நடப்பதுமாகப் இடம்பெயர்ந்து கொண்டிருந்தோம். அப்படி ஒரு தடவை விழுந்து எழுகையில் குண்டு எங்கள் காலடிகளில் வெடித்தது மாதிரியிருந்தது. சத்தம் ஓய்ந்து தலையை நிமிர்த்திப் பார்க்கையில் அம்மா விசும்பிக்கொண்டிருந்தாள். அம்மாதன் முகத்தோடு அணைத்துக்கொண்டிருந்த சுருதிப்பெட்டியின் ஒரு பக்கத்துப் பலகையைக் குண்டுகள் காயப்படுத்தி விட்டன. வாளிப்பான அதன் வார்னிஸ் பூசப்பட்ட முகம் அகோரமாய் கிழிபட்டுக் கிடந்தது. அம்மா அன்று முழுவதும் துயரப்பட்டுக்கொண்டேயிருந்தாள். அந்த இடத்தில் சுருதிப்பெட்டி இல்லாவிட்டால் அந்தக் குண்டு அம்மாவின் முகத்தைத்தான் தாக்கியிருக்கும். சங்கீதம் அம்மாவின் உயிரையும் காப்பாற்றியது. நாங்கள் உடைந்துபோன சுருதிப்பெட்டியில் ஒரு முகத்திற்கு பிளாஸ்திரி வைத்து ஒட்டினோம். ஆனால் அது எந்தப்பிளாஸ்திரியாலும் ஆறாத காயம். அன்றையைப் போல் அம்மா அழுது அதற்கு முன்பாக நான் பார்த்ததாய் நினைவடுக்குகளில் இல்லை.

ஆனால் அதற்குப்பிறகு ஒரு தடைவை பார்க்க நேர்ந்தது. சுருதிப்பெட்டியை விடவும் அம்மாவுக்கு ஒரு ஆசையிருந்தது. என்னை அல்லது தம்பியை இரண்டத்தா ஒராளை இன்ஜினியராக்கி விடுவது என்பதுதான் அது. ஆனால் எனக்கு படிப்பும் வராது பாட்டும் வராது என்கிற சங்கதி அம்மாவிற்குத் தெரிய கனநாள் ஆகவில்லை அம்மா என்னை ஒரு ஸ்ரூடியோவில் வேலைக்கு சேர்த்துவிட்டாள். கமராவின் கண்களால் உலகத்தை பார்க்கத்தொடங்கினேன் நான். தம்பி படித்தான் இன்ஜினியராகிவிடுவேன் என்பதாக அவனும் நம்பிக்கொண்டுதான் இருந்தான். பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகியும் விட்டான் அம்மா தன் வாழ்நாள் இலட்சியம் நிறைவேறி விட்டதாகச் புழுகத்தில் இருந்தாள். தன் சங்கீதம் தன் பிள்ளையை இன்ஜினியராக்கி விட்டதென்ற பெருமையும் கூட.. ஆனால் வீட்டுக்கொரு பிள்ளை நாட்டுக்கு கட்டாயம் குடுக்கத்தான் வேணும் எண்டு சொல்லி தம்பியை இயக்கம் பிடித்துக்கொண்டு போன அண்டைக்கு அம்மா மறுபடியும் அழுதாள் இந்தத் துயரத்தை தன் பாட்டுக் கரைக்காதென்று நினைத்தாளோ என்னவோ அம்மா குமுறிக் குழுறி அழுதாள். ஒரு விதவைத் தாய் பாடுவதைப் கேட்பது போலில்லை அவள் அழுகையத் தாங்கிக் கொள்வது.

அம்மா புலம்பினாள் “நாங்கள் ஆசைப்படக்கூடாதைய்யா.. எதுக்குமே ஆசைப்படக் கூடாது எங்கட பிள்ளையை இன்ஜினியர் ஆக்கவேணும் நாங்கள் நல்லாயிருந்திரோணும் எண்டு ஒரு தாய் ஆசைப்படவே கூடாது” அதற்குப் பிறகு அம்மாவின் கண்ணீர் நிற்கவேயில்லை. நானும் ஊரில் நிற்கவில்லை. இப்போது இதையெல்லாம் எழுதிக்கொண்டிருக்கிற இந்த அதிகாலையில் என் சென்னை அறைக்குள் மின்விசிறி நின்றுபோன ஒரு இரவில் வந்த ஒரு துர்க்கனவில் அம்மாவைக் கண்டேன். குண்டுகள் சூழ வீழ்ந்துகொண்டிருக்க அம்மா நிமிர்ந்து உட்கார்ந்திருக்கிறாள். பாடும் போது அவள் முகத்தில் இருக்கிற தெய்வீகம் இல்லை நிறையச் சலனங்கள்.

ஆனாலும் பாடுவதற்குத்தான் அமர்ந்திருக்கிறாள். குண்டுகளின் இரைச்சல் காதுகளை நிறைக்கிறது. அம்மா கண்களை மூடிக்கொண்டு பாடத் தயாராகிறாள்.

ஸ.. ப.. ஸ..

சரியாகச் சுருதிசேராமல் அம்மா முகத்தைச் சுழிக்கிறாள். மறுபடியும் குண்டுகள் அம்மாவைச் சூழவும் விழுகின்றன ஆனால் அம்மா அதைக் கவனிக்காமல் மறுபடியும் சுருதி சேர்க்க ஆரம்பிக்கிறாள்.

ஸ.. ப..ஸ..

இந்தமுறையும் சுருதி சேரவில்லை.. நான் கத்தினேன்..

“அம்மா சுருதிப்பெட்டி எங்க? எங்க சுருதிப்பெட்டி? தாங்கோ நான் சுருதிப்பெட்டி போடுறன்”

“ இந்த முறை இடம்பெயரேக்க அதைக்கூட எடுக்கமுடியாமப் போச்சு மோனை..”அம்மா அழத்தொடங்கினாள்.. நான் திடுக்கிட்டு விழித்தேன். அம்மா குண்டுகள் புழுதி எதுவுமில்லை.. சென்னையின் வெக்கை புழுங்கியது. கண்களை மூடிக்கொண்டேன்.. அம்மா பாடத்தொடங்கினாள்

“எனக் கென்ன மனக்கவலை என்தாய்க் கன்றோ தினம் தினம் என்கவலை”

எழுதிய நாள்..02.03.2009

anna.jpgஇலங்கைத் தீவில் பிரபாகரனுக்குப் பின்னரான தமிழ் அரசியல் என்பது இன்னமும் தொடங்கவில்லை. நாடு இப்பொழுதும் ஒரு இடைமாறு காலகட்டத்தில்தான் நிற்கிறது. பிரபாகரன் இல்லை என்பதை ஜீரணித்துக்கொள்ள முடியாத தமிழர்களே அதிகமாகத் தென்படுகிறார்கள். அவரை ஒரு சாகாவரம் பெற்ற மாயாவியாக உருவகித்து வைத்திருந்த அநேகமானவர்களுக்கு அவரில்லாத ஒரு உலகத்தை நினைத்துப் பார்க்கவே முடியாதிருக்கிறது. குறைந்தபட்சம் அவருடைய ஆவியோடாவது கதைத்துவிடவேண்டும் என்ற தவிப்போடு அவர்கள் கண்ணாடிக் குவளைகளை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், பிரபகாரன் அரங்கில் இல்லை என்பதே உண்மை. அவர் தப்பியோடி எங்காவது பர்மியக் காடுகளில் ஒளிந்திருந்தாலும்கூட இனி அவரால் அரசியல் செய்யமுடியாது. அவருடைய அரசியல் எப்பொழுதோ காலாவதியாகிவிட்டது. அவர் உயிருடன் தப்பியிருந்தாலும் கூட அரசியல்த் துறவறம் பூண்டு ஒரு தலைமறைவுச் சாட்சியாக இருக்கலாம். அவ்வளவுதான். அதாவது பிரபாரனின் யுகம் முடிந்துவிட்டது. நவீன தமிழ் அரசியலில் தோன்றிய ஒரு வீரயுகம் முடிந்துவிட்டது. அதை ஒரு வீரயுகம் என்று அழைக்கலாமா என்பதும் இப்பொழுதும் விவாதத்துக்குரியதே.

விடுதலைப் புலிகளின் வீரம் தியாகம் என்பவற்றைச் சூழ்திருந்த புனிதத்திரைகள் யாவும் நாலாம்கட்ட ஈழப்போரில் கிழிந்துபோய்விட்டன. தன்னையும் தன்னுடைய அதிகாரத்தையும் தக்கவைப்பதற்காக அவர் ஆடிய சூதாட்டம் அவரை உலகின் மன்னிக்கப்படமுடியாத போர்க்குற்றவாளிகள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களைப் புரிந்தவர்களின் பட்டியலில் சேர்த்துவிட்டது.

மாவிலாற்றிலும், முகமாலையிலும் தோற்கடிக்கப்பட்டபோது பிரபாகரன் நிதானமிழந்துவிட்டார். அவர் ஆட்சிசெய்த அரை அரசைப் பாதுகாப்பதற்காக அவருடைய பிரஜைகள் என்று அவர் நம்பிய சுமார் மூன்று இலட்சம் மக்களை அவர் வதைத்த விதம் அதை நியாயப்படுத்த அவருடைய ஆட்கள் சொன்ன பொய்கள் தோல்விகளையும் இயலாமைகளையும் மறைக்க அவர் தனது சொந்தச் சனங்களுக்கே அவிழ்த்துவிட்ட கட்டுக்கதைகள் எல்லாமுமே அவருடைய தலையைச் சுற்றி அவருடைய அபிமானிகளால் வரையப்பட்டிருந்த ஒளிவட்டத்தை அழித்துவிட்டன. முதலில் அவர் வீட்டுக்கு ஒரு பிள்ளை என்று கேட்டார். முடிவில் வீட்டிலுள்ள வலுவுள்ள எல்லோரையும் கேட்டார். வராதவர்களைக் கடத்திச் சென்றார். எதிர்த்த உறவினர்களைச் சுட்டுக்கொன்றார் அல்லது அடித்து நொறுக்கினார். தனது பிடியிலிருந்து தப்பி அரச படைகளை நோக்கி ஓடிய தனது சனங்களைப் புறமுதுகில் சுட்டுக்கொன்றார் அல்லது தப்பியோடிப் பிடிபட்டவர்களை அடித்து நொறுக்கினார்.

நவீன தமிழ் அரசியலில் தனிநபர் வழிபாட்டின் உச்சமாகக் காணப்படுவது அவர்தான். அதேசமயம் தனது சொந்தச் சனங்களால் வேறெந்தத் தமிழ்த் தலைவரையும் தூற்றியிராத அளவுக்கு கேவலமான வசைச் சொற்களால் தூற்றப்பட்ட ஒரு தலைவராகவும் அவரே காணப்படுகிறார். அவர் தொடக்கி வைத்த தமிழின் நவீன வீரயுகம் எனப்படுவது அவரைத் தமிழ் வீரத்தை அதிகம் துஷ்பிரயோகம் செய்த ஒரு தலைவராகவே நிறுவிவிட்டு முடிந்திருக்கிறது.
பிரபாகரன்தான் எல்லாமும் என்று நம்புகிறவர்களைப் பொறுத்தவரை எல்லாம் முடிந்துவிட்டதுதான். 38 ஆண்டுகாலத் தமிழ் அரசியல் முழுவதும் வீணாகிவிட்டதுதான். ஆனால், பிரபாகரனோடு முடிவுக்கு வந்தது தமிழ் மிலிட்டரிசம் தான். தமிழ் அரசியல் அல்ல. தமிழின் நவீன வீரயுகம் ஒன்று அவருடன் முடிந்துவிட்டது இனி அறநெறியுகம் ஒன்று வரும். அதற்கிடையிலான ஒரு இடைமாறு காலகட்டத்திலேயே இப்பொழுது தமிழ் அரசியல் நிற்கிறது.
அறநெறிக்காலம் என்றதும் நாயன்மார்களும், ஆழ்வார்களும் வந்து உதித்து அதிசயங்கள், அற்புதங்களைச் செய்து தேவாரத் திருப்பதிகங்களைப் பாடப்போகிறார்கள் என்ற அர்த்தத்தில் அல்ல. மாறாக, தமிழின் முன்னைய வீரயுகங்களைப்போல யுத்தத்தின் படிப்பினைகளிலிருந்து வீரத்திற்குப் பதிலாக அறிவைப் போற்றும் ஒரு புதிய மரபின் எழுச்சியை அதாவது மரபு மாற்றத்தைக் கருதியே இங்கு இவ்வாறு கூறப்படுகிறது. அதாவது, புலிகளின் வீழச்சியிலிருந்து பெற்ற படிப்பினைகளிலிருந்து ஒரு புதிய தமிழ் அரசியல் வெளியை உருவாக்குவது என்ற அர்த்தத்தில்.
பிரபாகரன் ஒரு கெடுபிடிப்போரின் குழந்தை, அவர் கெடுபிடிப்போரின் இரு துருவ போட்டி அரசியலுக்கு ஊடாகவே வளர்ந்தவர். ஆனால், கெடுபிடிப்போரின் பின்னரான ஒரு துருவ உலக ஒழுங்கை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. அல்லது அவரது தலையைச்சுற்றி வரையப்பட்டிருந்த ஒளிவட்டம் ஒரு புதிய உலக ஒழுங்கைப் புரிந்துகொள்ள அவரை விடவில்லை. அல்லது அதை இடித்துரைக்க வல்ல புத்திஜீவிகளை அவர் நெருங்கிச்செல்லவில்லை. முள்ளிவாய்க்காலில் அவருடைய வீழ்ச்சியின் இறுதிக்கட்டத்திலும் அவர் எதற்காகவோ காத்திருந்தும் கூட ஒரு துருவ உலக ஒழுங்கைச் சரியாக உள்வாங்காததன் விளைவுதான்.

ஒரு துருவ உலக ஒழுங்கை அவர் மட்டுமல்ல அவரைப்போன்ற ஒற்றைப் பரிமாண அரசியலை அவாவும் எவராலும் சுதாகரித்துக்கொள்ள முடியாதுதான். ஏனெனில், ஒரு துருவ உலகம் எனப்படுவது தகவல் தொழில்நுட்பம், நிதி மூலதனம் இரண்டினதும் திரட்சியாக எழுச்சிபெற்ற ஒன்று. தகவல் தொழில்நுட்பமானது தகவல்களை ஒரு மையத்தை நோக்கிக் குவித்தது. நிதி மூலதனமானது நிதியை ஒரு மையத்தை நோக்கிக் குவித்தது. தகவல் தொழில்நுட்பம் தகவலை அதாவது அறிவைத் திறந்துவிட்டது. நிதி மூலதனம் சந்தைகளைத் திறந்துவிட்டது. இரண்டும் சேர்ந்து தேசங்களின் எல்லைகளையும், கண்டங்களின் எல்லைகளையும் கரைத்து வருகின்றன. இவ்விதம் எல்லைகள் கரைந்துருவாகி வரும் பூகோளக் கிராமத்தில் எதுவும் தூயதாக இருக்க முடியாது. எல்லாமே ஒன்று மற்றதுடன் கலந்துதான் இருக்கமுடியும். இதில் தூய விடுதலையும் இல்லை. தூய இலட்சியங்களும் இல்லை. தூய தியாகமும் இல்லை. தூய துரோகமும் இல்லை. தூய வீரமும் இல்லை. தூய கோழைத்தனமும் இல்லை. எல்லாமே ஒன்று மற்றதிலிருந்து பிரிக்கப்படவியலாதபடி ஏதோவொரு விதத்திற்கு கலந்துதான் காணப்படுகின்றன. அதாவது கலப்பு நிறங்களின் யுகம் இது. அல்லது சாம்பல் நிற ஓரங்களின் யுகம் இது. தூயது என்று எதுவுமே தனித்து நிற்கமுடியாதளவுக்கு தொழில்நுட்பமும் நிதிமூலதனமும் உலகங்களை இணைத்துகொண்டுவருகின்றன.

இதனால் எதிலும் ஒற்றைப் பரிமாணம் என்பது நடைமுறைச் சாத்தியம் அற்றதாகி வருகிறது. அரசியல், பொருளாதாரம், அறிவியல், கலை, இலக்கியம் அனைத்திலுமே பல்பரிமாணம் அல்லது பல்லொழுக்கம் -மல்டி டிசிப்பிளின்- எனப்படுவதே முழுமையானது என்றாகி வருகிறது. எதிலும் பல்பரிமாணத்தை அல்லது பன்மைத்துவத்தை அல்லது கூட்டு ஒழுக்கத்தை ஏற்றுக்கொள்ளாத எவரும் முழுமைத்துவத்துக்கு எதிரானவர்களாக காணப்படுகிறார்கள். இப்பூமியில் எதுவும் ஏதோவொரு முழுமையின் தவிர்க்கப்படவியலாத ஒரு பகுதியாகவே காணப்படுகிறது. எனவே, முழுமைத்துவம் எனப்படுவது அதன் பிரயோக அர்த்தத்தில் பன்மைத்துவம்தான். பன்மைத்துவம் எனப்படுவது அதன் அரசியல் பிரயோகத்தில் ஜனநாயகம்தான். இந்த யுகமாற்றத்தை ஏற்றுக்கொள்ளாத எவரும் அரசியல்க் கூர்ப்பில் காலாவதியாகவேண்டியதுதான். பிரபாகரனுக்கும் இதுதான் நடந்தது.

கெடுபிடிப்போரின் குழந்தையான அவரால் கெடுபிடிப்போரின் பின்னரான ஒரு துருவ உலக ஒழுங்குடன் அனுசரித்துப்போக முடியவில்லை. எனவே அவர் காலாவதியாகி அரங்கிலிருந்து அகற்றப்பட்டார். அவரால் எதையுமே கறுப்பு வெள்ளையாகத்தான் பார்க்க முடிந்தது. அவரிடம் இரண்டே இரண்டு பெட்டிகள்தான் இருந்தன. ஒன்று கறுப்பு மற்றது வெள்ளை. இரண்டு பட்டியல்கள்தான் இருந்தன. ஒன்று தியாகிகளின் பட்டியல் மற்றது துரோகிகளின் பட்டியல். இந்த இரண்டுக்கும் வெளியே இந்த இரண்டுக்கும் இடையே சாம்பல் நிறத்திலும் பெட்டிகள் இருக்க முடியும் என்பதை ஏற்றுக்கொள்ள அவருடைய ஒற்றைப் பரிமாண ஒழுக்கம் விட்டுக்கொடுக்கவில்லை. பூமி சாம்பல் நிற ஓரங்களை நோக்கிச் சுற்றிக்கொண்டிருக்க பிரபாகரனோ கறுப்பு வெள்ளை அரசியலை நடத்த முற்பட்டார். முடிவில் அரங்கிலிருந்து அகற்றப்பட்டார்.

எனவே பிரபாகரனிடமிருந்து கற்றுக்கொள்வது என்பது சாம்பல் நிற ஓரங்களை ஏற்றுக்கொள்வதுதான். அது நிச்சயமாக புலிகளின் சாம்பலில் இருந்துதான் வரவேண்டியிருக்கிறது.
பிரபாகரன் எல்லாவற்றையுமே பிரித்து வைத்திருந்தார். அவர் இலங்கைத் தீவை மட்டும் பிரிக்க முயலவில்லை. முதலில் அவர் தமிழ் அறிவைத் தமிழ் வீரத்திலிருந்து பிரித்தார். பின்னர் சிங்கள முற்போக்குச் சக்திகளை தமிழர்களிடமிருந்து பிரித்தார். பின்னர் அவர் தமிழர்களை தியாகி; துரோகி; மாற்று இயக்கம் என்று கூறுபோட்டுப் பிரித்தார். பின்னர் முஸ்லிம்களைத் தமிழர்களிடமிருந்து பிரித்தார். பின்னர் கிழக்குத் தமிழர்களை வடக்கிலிருந்து பிரித்தார். இவை தவிர ரஜீவ் காந்தியைக் கொல்லுமாறு உத்தரவிட்டதன் மூலம் இந்தியாவைத் தமிழர்களிமிருந்து பிரித்தார். பின்னர் நாலாம் கட்டம் ஈழப்போருக்கான புறநிலமைகளை உருவாக்கியதன் மூலம் மேற்கு நாடுகளை தன்னிடமிருந்து பிரித்தார். பின்னர் நாலாம்கட்ட ஈழப்போரில் தன்னையும் தன்னுடைய அதிகாரங்களையும் பாதுகாப்பதற்காக அவர் முன்னெடுத்த ஆட்பிடி அரசியலும் அதன் தொடர் விளைவுகளும் அவரை அவருடைய ஆட்சிக்குட்பட்டிருந்த சுமார் மூன்று இலட்சம் மக்களில் பெரும்பாலாலனவர்களிடமிருந்து பிரித்தன. முடிவில் முள்ளிவாய்க்காலில் அவர் சுற்றிவளைக்கப்பட்டிருந்தபோது கவச குண்டலங்களை இழந்த கர்ணணைப்போலக் காணப்பட்டார்.

எனவே பிரபாகரனிடமிருந்து கற்றுக்கொள்வது என்பது என்னவெனில் தனது மெய்யான பலங்கள் எவையெவையோ அவற்றையெல்லாம் தன்னிடமிருந்து பிரித்துவைத்த அல்லது பிரிந்துபோகவைத்த ஒரு மனிதனின் வீழ்ச்சியைத்தான். எனவே, பிரபாகரனுக்குப் பின்னரான தமிழ் அரசியல் வெளி எனப்படுவது அவர் பிரித்துவைத்த எல்லாவற்றையும் ஒரு மெய்யான தேசிய அடித்தளத்தில் ஒன்றுசேர்த்து வைப்பதுதான்.

மேற்கத்தைய அறிஞர்களின் முடிவுகளின்படி தேசியம் எனப்படுவது ஜனநாயகத்தை அதன் உள்ளடக்கமாகக் கொண்டிருப்பது. இதன்படி கூறின் தேசியம் எனப்படுவது பன்மைத்துவத்தை அதன் உள்ளடக்கமாகக் கொண்டிருப்பது. அதாவது சாம்பல் நிற ஓரங்களைக் கொண்டதாக இருப்பது. எனவே பிரபாகரனுக்குப் பின்னரான தமிழ் அரசியல் எனப்படுவது சாம்பல் நிற ஓரங்களை உடையதொன்றாக உருவாகவேண்டும்;. தமிழர்கள் தமக்குள்ளும் தமக்கு வெளியே தீவு முழுவதும் தீவுக்கு வெளியே பிராந்திய மற்றும் சர்வதேச அளவிலும் சாம்பல் நிற ஓரங்களை உருவாக்கவேண்டும். அதாவது மையத்தில் நிறங்களின் தனித்துவங்கள் துலங்கும் அதேசமயம் ஓரங்களில் கலப்பு நிறங்களை அதாவது சாம்பல் நிற ஓரங்களைக் கொண்ட ஒரு முழுமை.

சாம்பல் நிற ஓரம் அல்லது சாம்பல் நிறத் தமிழ் அரசியல் வெளி எனப்படுவது, குறிப்பாக புலிகளின் வீழ்ச்சிக்குப் பின் அதைப்பற்றி உரையாடுவது என்று சிலருக்கு சரணாகதி அரசியலோ என்று தோன்றக்கூடும். அதாவது வென்றவர்களுக்கும் தோற்றவர்களுக்கும் இடையிலான கோழைத்தனமான ஒர் உடன்படிக்கைக்கான கோட்பாட்டு விளக்கமா இது என்று கேள்விகள் வரும்.
இல்லை. நிச்சயமாக இல்லை.

சாம்பல் நிறம் என்று இங்கு கூறப்படுவது எதுவும் தனது தனித்துவத்தை இழந்து மற்றதுடன் இரண்டறக் கரைந்து சங்கமாகிவிடுதல் என்ற அர்த்தத்தில் அல்ல. ஒன்று மற்றதுடன் கரைந்து எல்லாமும் ஒரே கலவையாக மாறிவிடுதல் என்பதும் ஒற்றைப் பரிமாண வாதம்தான். அது பன்மைத்துவத்துக்கு எதிரானதுதான். மாறாக, இங்கு சாம்பல் நிறம் என்று கூறப்படுவது எதுவெனில், எதையும் கறுப்பு வெள்ளையாக மட்டும் பார்க்கக்கூடாது என்ற அர்த்தத்தில்தான். எதுவும் தனது தனித்துவத்தை இழந்துவிடாமலிருக்கும் அதேசமயம் மற்றொன்றுடன் கலந்து வாழ்தலே இது. மையத்தில் நிறத்தின் தனித்துவம் துலங்கும் அதேசமயம் ஓரத்தில் கலப்பு நிறங்கள் (சாம்பல் நிறம்) காணப்படும். இதுதான் மெய்யான பன்மைத்துவம். அதாவது தனித்துவம் மிக்க இரண்டு சிறு முழுமைகள் ஒன்று மற்றதுடன் இணைந்து ஒரு பெரிய முழுமை உருவாகிறது. இதன்படி ஒன்று அது அதுவாக இருக்கும் அதேசமயம் ஒரு பெருமுழுமையின் தவிர்க்கப்படவியலாத ஒரு பகுதியாகவும் இருக்கும். தொழில்நுட்ப வார்த்தைகளில் இதுதான் இன்ரநெற் உலகம். அரசியல் அர்த்தத்தில் இதுதான் பன்மைத்துவம். இதுவே மெய்யான ஜனநாயகத்துக்கான தகர்க்கப்படமுடியாத அடித்தளமும்கூட. இதற்குத்தான் ஒப்பீட்டளவில் அதிகளவும் வீரம் தேவை. சுத்த வீரர்களால்தான் தமது தனித்துவங்களை இழந்துவிடாதிருக்கும் அதேசமயம் மற்றவர்களின் தனித்துவங்களையும் அங்கீகரிக்க முடியும்.
எனவே சாம்பல் நிற ஓரங்களின் அரசியல் எனப்படுவது அதன் பிரயோக இயக்கத்தில் பன்மைத்துவம்தான். ஒற்றைப் பரிமாண அரசியல் எதுவுமே பன்மைத்துவத்துக்கு எதிரானது. தமிழ் அரசியல் எனப்படுவது கடந்த சுமார் கால்நூற்றாண்டுக்கும் மேலாக பெருமளவுக்கு ஒற்றைப் பரிமாண அரசியலாகவே உருவாகி வந்திருக்கிறது. ஒற்றைப் பரிமாண அரசியல் எனப்படுவது அதன் பிரயோக வடிவத்தில் இராணுவ அரசியல்தான். தமிழ் மக்கள் கடந்த கால்நூற்றாண்டுக்கும் மேலாக இராணுவமயப்பட்டு வந்துள்ளார்கள்.

இதனால் தமிழ் அரசியலை பன்மைத்துவத்தை நோக்கிக் கொண்டு வருதல் என்பது அதை இராணுமயநீக்கம் செய்வதுதான். ஒரு சமூகத்தை இராணுவமயநீக்கம் செய்வது என்றால் அதை ஃபியர் சைக்கோஸிஸ் (அச்ச உளவியல்) இலிருந்து விடுவிக்கவேண்டும். ஏகப்பரிமாண அரசியலின் பிரதான தோற்றப்பாடே ஃபியர் சைக்கோஸிஸ்தான். எனவே ஃபியர் சைக்கோஸிஸ் இலிருந்து தமிழ்ச்சமூகத்தை முதலில் விடுவிக்கவேண்டும். அதற்கு சிவில் கட்டமைபுக்களை உருவாக்கவேண்டும்.

ஒரு சமூகத்தை ஃபியர் சைக்கோஸிஸ் இலிருந்து விடுவிப்பதென்றால் அங்கே மூடப்பட்டிருக்கும் எல்லாக் கதவுகளையும் திறக்கவேண்டும். மக்களை அவர்களுடைய பதுங்கு குழிகளை விட்டு வெளியே வருமாறு ஊக்குவிக்கவேண்டும். சுமார் கால்நூhற்றாண்டுக்கும் மேலாக ஏன் அதற்கு முன்பிருந்த தமிழர்கள் ஏதோவொரு பதுங்கு குழிக்குள்தான் வசித்துவருகிறார்கள். ஒன்றில் பண்பாட்டுப் பதுங்குகுழி அல்லது சாதிப் பதுங்குகுழி அல்லது பிரதேசவாத மற்றும் ஊர்வாதப் பதுங்குகுழி. இவற்றுடன் பிரபாகரன் கொண்டுவந்த இராணுவப் பதுங்குகுழி.
எனவே, தமிழர்களை முதலில் பதுங்குகுழிகளுக்குள் இருந்து வெளியே எடுக்கவேண்டும். அதற்குவேண்டிய எல்லாவிதமான உரையாடல்களுக்கும் சுயவிமர்சனங்களுக்குமான கதவுகள் அகலத் திறக்கப்படவேண்டும். பிரபாகரனின் ஆவியோடு உரையாட விரும்புவோர் முதல் தமது மனச்சாட்சிகளோடு உரையாடட்டும் அப்பொழுதுதான் ஒரு அறநெறி யுகத்தின் பிறப்பை அவர்களால் ஆமோதிக்க முடியும். அப்பொழுதுதான் சாம்பல் நிற ஓரங்களை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியும். இது விடயத்தில் இலங்;கைத் தீவுக்குள்ளும் தீவுக்கு வெளியே தமிழ் நாட்டிலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் உள்ள அனைத்து புத்திஜீவிகளும் கலைஞர்களும் அக்கறை கொண்ட எல்லாரும் ஒன்றுதிரளவேண்டும்.

கறுப்பு வெள்ளை அரசியல் எனப்படுவது நாடுகளையும், கண்டங்களையும், உலகங்களையும் மூடுவது.
ஆனால், சாம்பல் நிற ஓரங்களின் அரசியல் எனப்படுவது நாடுகளையும், கண்டங்களையும், உலகங்களையும் திறந்துவிடுவது:
கறுப்பு வெள்ளை அரசியல் அறிவின் எதிரி. சாம்பல் நிற அரசியலோ அறிவின் தோழன்.
கறுப்பு வெள்ளை அரசியல் ஒரு சமூகத்தை இராணுவமயப்படுத்தும். சாம்பல் நிற அரசியலோ ஒரு சமூகத்தை இராணுவமய நீக்கம் செய்து சிவில் கட்டமைப்புக்களை உருவாக்கும்.
கறுப்பு வெள்ளை அரசியல் ஏகப்பரிமாண அரசியலில் போய் முடியும். சாம்பல் நிற அரசியலோ பன்மைத்துவத்தை ஸ்தாபிக்கும்.
கறுப்பு வெள்ளை அரசியல் அச்ச உளவியலைப் பாதுகாக்கும். சாம்பல் நிற அரசியலோ மனித உரிமைகளைப் பாதுகாக்கும்.
கறுப்பு வெள்ளை அரசியல் கசப்பை, வெறுப்பை, வன்மத்தை, பழிவாங்கும் உணர்ச்சியைப் பேணும். சாம்பல் நிற அரசியலோ சகிப்புத்தன்மையையும், நல்லிணக்கத்தையும் பேணும்.
கறுப்பு வெள்ளை அரசியல் தன்னுடைய மெய்யான பலங்களைத் தன்னிலிருந்து பிரித்து முடிவில் எதிர்த்தரப்பின் நிகழ்ச்சி நிரலுக்குள் போய் வீழ்ந்துவிடும்.
ஆனால், சாம்பல் நிற அரசியலோ எல்லாத் தரப்பினரையும் தன்வசப்படுத்தி எதிர்ப்பையும் தனது நிகழ்ச்சி நிரலுக்குள் வந்துவிழச் செய்துவிடும்.

பிரபாகரனின் கறுப்பு வெள்ளை அரசியலாசை முடிவில் அவரது “பகைவர்களுக்கே” வெற்றியைப் பெற்றுக்கொடுத்துவிட்டது. 38 ஆண்டுகாலப் போராட்டத்தின் முடிவில் தமிழர்கள் பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்ற இழிநிலைக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள்.
ஆனாலும் வீழ்ச்சியுற்றிருப்பது பிரபாகரனிஸம் மட்டும்தான். நிச்சயமாகத் தமிழ் அரசியல் அல்ல. எனவே, பிரபாகரன் விட்ட தவறுகளிலிருந்து பெற்ற படிப்பினைகளின் அடிப்படையில் ஒரு புதிய தமிழ் அரசியல்வெளி உருவாக்கப்படவேண்டும்.

இனிப் பதுங்கு குழிகளும் வேண்டாம். புதை குழிகளும் வேண்டாம்.
தியாகிகள் பட்டியலும் வேண்டாம். துரோகிகள் பட்டியலும் வேண்டாம்.
வீரத்தை வழிபடப்போய் முடிவில் மரணத்தை மகிமைப்படுத்தி வாழ்வை நிராகரித்தது போதும்.
இனி அறிவை வழிபடுவதிற் தொடங்கி வாழ்வை ஆமோதிக்கும் ஒரு புதிய அரசியல் நாகரீகம் தேவை.
தான் சாகத் தயாராக இருந்த ஒரே காரணத்திற்காக பிற உயிர்களை ஒரு பொருட்டாகத்தானும் மதிக்காத ஒரு வீரமரபு இனி வேண்டாம்.
பதிலாக, தன்னுடைய உயிரின் பெறுமதி தெரிந்த காரணத்தினாலேயே பிற உயிர்களையும் தன்னுயிர்போல நேசிக்கும் ஒரு புதிய அரசியல் நாகரீகமே இனித் தமிழர்களுக்கு வேண்டும்
அதாவது புதிய சாம்பல் நிற அரசியல்வெளி ஒன்று வேண்டும்.

முக்கிய குறிப்பு
இந்தக்கட்டுரை நானெழுதிய கட்டுரை அல்ல.ஆனால் இந்த கட்டுரையில் சொல்லப்படுகின்ற உண்மைகள் நான் பேசவிரும்பியவை ஆனால் அதைப் பேசுவதற்கான இடத்தில் நான் இருக்கவில்லை என்பதால் பேசாமல் விட்டவை. இப்போது இந்தக்கட்டுரை இலங்கையின் அரச படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கிற ஒரு அகதிமுகாமின் தறப்பாளின் கீழிருந்து எழுதப்படுகிறது. இந்தக் குரலை நீங்கள் புறந்தள்ளமுடியாது. அவர்கள் இறுதிச் சாட்சிகள். என்னையும் சேர்த்து வெறுமனே அந்த அவலத்தின் பார்வையாளர்களாக இருந்தவர்களின் குரல் அல்ல இது. இறுதி வரை வன்னியில் இருந்த மனிதர்களின் வார்த்தைகள். புலி எதிர்ப்பு,புலி ஆதரவு,தமிழ்த்தேசியவாதி,அல்லது அதன் துரோகி.. இந்த மாதிரியான புடுக்கு வார்த்தைப் பிரயோகங்களை விட்டு விட்டு. இந்தக் குரலை மனசாட்சியோடு கேட்கத் தொடங்குவோம்.. அந்த முகாம்களில் இருக்கிற மக்களின் குரலாய் அந்த வாழ்க்கையைப் பற்றி கிஞ்சித்தும் அறியாமல் வெளியில் இருந்து ஒலிக்க நினைக்கிற குரல்களைப் போலல்ல இது. அந்த சுழலுக்குள் சிக்கி இருப்பவர்களின் வார்த்தைகள் நிஜத்தின் வார்த்தைகள். போரின் உண்மைச் சாட்சிகள். வன்னிமக்களின் குரல்கள்.

« Prev - Next »