2018
Apr 17

ess-bose2_

துப்பாக்கியின் கண்கள்
வாசிக்கத் தொடங்கிய பிறகு
சொற்கள்
ஒழிக்கத் தொடங்கிவிட்டன/சபிக்கப்பட்டு விட்டன

பீரங்கியின் வாய்களால்
அச்சமூட்டப்பட்ட
சொற்கள் கொண்டு
செய்யப்படுகிறது
ஒரு நாள்….

முடமான சொற்கள் கொண்டு
கவிதைகள்
செய்வது எங்ஙனம்?

கால்களற்ற சொற்களைக்
காணச் சகியாதொருவன்
துப்பாக்கிகளறியாதொருகணத்தில்
மொழியைப் புணர்ந்து
புதிதாய்
கால்முளைத்த சொற்களைப்
பிரசவிக்கலானான்…

பின்
ஓர் இரவில்…

துப்பாக்கியின் கண்கள்
அவன் முதுகினில்
நிழலெனப் படிந்து
அவன் குரலுருவிப்
பின்
ஒரு பறவையைப்போல
விரைந்து மறைந்ததாய்..
அவன் குழந்தைகள் சொல்லின.

எஸ்.போசை மிருகங்கள் கவர்ந்து சென்று பத்தாண்டுகள் முடிவடைந்து விட்டன. ஆனாலும் அவரது குரல் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது நம்மிடையே. ஏனெனில் எஸ்.போஸ் நாங்கள் ஒலித்திருக்க வேண்டிய குரலாயிருந்தார் பிழைத்திருத்தலே சாகசமாகிப்போன நம்முடைய காலத்தில் பிழைத்திருத்தலுக்காக நம் அறவுணர்வை சற்றே வளைக்கநேர்கிற,அநீதிகளை மௌனமாய்க் கடக்கநேர்கிற வாழ்க்கைதான் நமக்கு வாய்த்திருக்கிறது. பிழைத்திருத்தலே விலங்கினத்தின் அடிப்படை என்கிறபோதும், வாழ்வு தன்னை எல்லாப்பக்கமிருந்தும் நொருக்கித் தள்ளியபோதும் தன் அறவுணர்வைக் குன்றாமல் பாதுக்காத்து அவ் அறவுணர்வின் சொற்களைச் சுடராய் ஏந்திச் செல்ல வெகு சிலரால் மட்டுமே முடிந்திருக்கிறது. அவ்வாறு தனக்குள் நிதமும் கனன்ற அறவுணர்வின் சொற்களைச் சுடராய் ஏந்தி ஓடிய அற்பமான காலத்தின் மகத்தான கவிஞன் எஸ்.போஸ்.

தான் வாழும் காலத்தின், சமூகத்தின் குரலாய் மட்டுமில்லாது தன் சமூகத்தின் எதிர்காலம் குறித்தும் கனவுகாணவும் அதற்காய் குரலெழுப்பவும் தன் சொற்களின் குரல் வளையைத் தானே நெரிக்காது தன் சொற்களைப் போலவே வாழவும் எஸ்.போஸ் கொடுத்த விலை அவருடைய உயிராயிருந்தது.

டிப்டொப்பாக உடையணிகிற மெலிந்த தோற்றமுடைய எஸ்.போசுடன் நான் நெருங்கிப் பழகியவன் அல்ல. ஆரம்ப இலக்கிய வாசகனான எனக்கு ஆச்சரிய ஆளுமைகளில் ஒருவராய் அப்போது எஸ்.போஸ் இருந்தார். முழுக்கைச் சட்டையை விரும்பி அணிகிற அந்த மெலிந்த மனிதனைப் பற்றிய நிறையக் கதைகளை அவரது எழுத்துக்களும் நண்பர்களின் சொற்களும் எனக்குச் சொல்லித் தீர்த்தன. காலம் முழுவதும் வாழ்வின் அபத்தங்களை சகியாதிருந்தவராய்,அதிகாரத்தின் எல்லா வடிவங்களையும் எதிர்த்தவராய் சதா மனசுக்குள் கேள்விகளைக் கொண்டலைந்த இளைஞராய் எஸ்.போஸ் இருந்தார். அதிகாரத்தை எதிர்த்தல் என்பது தனியே அரசமைப்பை மட்டும் எதிர்ப்பதல்ல என்பதை எஸ்.போஸ் புரிந்தவராயிருந்தார் அதனாலேயே அவர்  குடும்பத்தில் பாடசாலையில்,வேலையிடங்களில்,நண்பர்களிடத்தில் முட்டிமோதினார்.

எங்களில் அநேகர் எங்களுடைய குரல் நேரடியாக சென்றடைய முடியாத அதிகாரங்களை நோக்கிக் குரலெழுப்புவதில் வல்லவர்களாயிருக்கிறோம் உதாரணத்திற்கு அமெரிக்க ஏகாதிபத்தியம்,சிங்கள இனவாதம், தமிழ்த்தேசியம், இந்திய வல்லாதிக்கம் இப்படியானவற்றையெல்லாம் விமர்சித்து நம் அறவுணர்வைக் கொட்டுவோம். ஆனால்  நம் அலுவலகமேலாளரின் அத்துமீறலையோ, விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரியின் நிறவாதச் செயலையோ,நாம் கேள்விகேட்பதைத் தவிர்த்து, சகித்துக் கடந்து செல்வோம். ஒரு வேளை இதெல்லாம் சின்ன அநீதி பெரிய அநீதியைத் தட்டிக்கேட்டால் போதும் என்கிற மனநிலைகூட அதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால் எஸ்.போசால் அது முடியாமலிருந்தது. அவர் பாடசாலை ஆசிரியரின் அதிகாரத்தையும் எதிர்த்தார், பத்திரிகையாளர்கள் கடத்தப் பட்டாலும் கண்டித்தார்,மண் கடத்தினாலும் கண்டித்தார். அவரிடம் அநீதியின் அளவுகோல்கள் எதுவுமில்லை அவருக்கு எல்லாமே தட்டிக்கேட்க வேண்டியவைதான். ஏனெனில் அந்த மெல்லிய மனிதன் தன்னைப் போலவே எல்லோரையும் நேசித்தான். அவனது அலைவுக்கும், துன்பங்களிற்கும், நிலையாமைக்கும் ,சுடர்போல் எரிந்த அவன் சொற்களுக்கும் ,ஏன் அவனது மரணத்திற்கும் அவனிடமிருந்த மானுடத்தின் மீதான பேரன்பே காரணம்.

அதிகாரங்களிற்கெதிராக ஏதாவது செய்யவேண்டும் என்ற துடிப்பு எப்போதும் அவரிடமிருந்துகொண்டேயிருந்தது. அவரது எழுத்துக்களில் திரும்பவும் திரும்பவும் அவர் வலியுறுத்துவது அதுவாகவேயிருக்கிறது. அவரது ஒரு சிறுகதையில் அவர் எழுதுகிறார் ஒருவருடைய அந்தரங்கத்துக்குள் இந்த அதிகாரம் எப்படிக் கேட்டுக்கேள்வியில்லாமல் சட்டென்று நுழைந்து விடுகிறது என. இன்னொரு  இடத்தில் எழுதுகிறார்  “நாங்கள் நூறு வீதம் புனிதத்தை எதிர்பார்க்கிறோம் சில சமயங்களில் அது நம்மீதே முள்ளாய்ப் பாய்கிறது ”என்று. ஏன் தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களால் தன்னோடு கூடவரமுடியவில்லை என்ற கேள்வியின் முடிச்சை அவிழ்ப்பதற்காகத் தன் எழுத்துக்கள் முழுவதும் முயன்றிருக்கிறார். நேர் வாழ்க்கையிலும் நண்பர்களைத் தன்னைப்போல் சிந்திப்பவர்களாக ஆக்குவதற்காக நிறைய முயன்றிருக்கிறார். விவாதங்கள் பேச்சுக்கள்,பாராட்டுக்கள்,திருத்தங்கள்,தட்டிக்கொடுப்புகள் என்று தன்னுடைய பாதையில் நண்பர்களையும் அழைத்துச்செல்லவிரும்பிய கூட்டாளியாகத்தான் இன்றைக்கும் அவரது நண்பர்கள் அவரை நினைவு கூருகின்றனர்.

எஸ்.போசைப் பொறுத்தவரை வாழ்வின் அபத்தங்களைக் கடப்பதற்கான கருவியாகவே எழுத்தைக் கையாண்டார். கவிதையை வெறித்தனமாக நேசிக்கிற ஒருவராக இருந்திருக்கிறார் என்றே நினைக்கிறேன். எழுத்தின் மூலமே தான் வாழ்வின் துயரங்களைக் கடந்தார். றஷ்மியின் ஆயிரம் கிராமங்களைத் தின்ற ஆடு புத்தகத்தைப் பற்றிய  குறிப்பில் சுதாகர் இவ்வாறு எழுதுகிறார்.

நமது கவிதைகள் பற்றிய உண்மைகளையும் அதன் சூக்குமங்களையும் மற்றவர்கள் புரிந்து கொள்ளும் போது அவர்களே தத்தமது புரிதல்களின் அடிப்படையில் நம்மை எதிரிகளாகவும் துரோகிகளாகவும் நண்பர்களாகவும் விபச்சாரர்களாகவும் மாற்றிவிடுகிறார்கள். நமது கவிதைகளோடு நாம் உண்மையாக வாழ்வதைப்போல இந்தச் சமூகத்தோடும் மனிதர்களோடும் உண்மையாக வாழ முடியுமா?

சமூகத்தோடு உண்மையாய் வாழமுடியாமலிருப்பதன் ஆதங்கமாயும்,  அவரது கவிதைகளின் மீதான காதலாகவுமே மேற்சொன்ன அவருடைய வரிகளை நான் புரிந்துகொள்கிறேன்.  ஆனால் வாழ்வின் நெருக்குதல்கள் குறித்துச் சலிப்பெதுவும் அவர் சொற்களிடம் இல்லை. சொல்லப் போனால் அத்தகைய நெருக்குதல்களை அவர் போராடுவதற்கான உந்துதல்களாகவே கையாண்டிருக்கிறார். அவரது சிறுகதைப் பாத்திரமொன்று இப்படி நினைக்கும்“அடிக்க அடிக்க சுணை குறையிற மாதிரி அம்மா பேசப் பேச அந்தப் பேச்சே கதையாய் கவிதையாய் வியாபிக்கும் எல்லாம் மீறி எங்கும் ஒரு சந்தோசம் துளிர்விடும்”சுதாகர் எப்படி வாழ்வை எதிர்கொண்டார் என்பதன் மிகச் சிறிய மற்றும் சரியான உதாரணம் இதுவெனத் தான் நான் நினைக்கிறேன்.

பாலம் என்கிற சிறுகதையில் அவர் எழுதுகிறார் “மனுசனுக்கு மனுசனாலதான் துன்பம் அதைஎதிர்த்து நிக்கிறதுக்காக போராடலாமே தவிர அழக்கூடாது”அன்பின் போதாமை அவரை துரத்தியிருக்கிறது. அன்புக்காய் ஏங்கும் சொற்கள் அவர் படைப்புக்கள் முழுவதும் விரவிக் கிடக்கிறது. எப்போதும் குடும்பத்திடமிருந்தும் சொந்த நிலத்திடமிருந்தும் விலகி வாழ நேர்ந்த வாழ்வலைச்சலின் விளைவாயிருக்கலாம் அது.“ஒடுக்குதலற்ற உணர்வுகளை உள்வாங்கி நேசிக்கிற பாசம் அவனுக்குத் தேவையாயிருந்தது”“மனிதர்கள் அன்பாய்ப் பேசும் ஒரு வார்த்தையைக் கூட வெளியில் கேட்கவில்லை”என்றெல்லாம் எழுதிச் செல்கிறார். இன்னொரு கவிதையில் “நரிகளோடும் எருமைகளோடும் வாழக்கிடைத்துவிட்ட நிகழ்காலம்”என்கிறார். “எனக்கு அன்பு பற்றி பாசம் பற்றி காதல் பற்றி அயலவரோடு பேசப் பயமாயிருக்கிறது”என்றெழுதுகிறார். இந்தச் சொற்களின் மூலமாகவெல்லாம் எஸ்.போஸ் அன்பாலான ஒரு உலகம் பற்றிய தன் எதிர்பார்ப்பைச் சித்தரித்தபடியே அதை நோக்கி பயணப்பட்டிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். தன்னை நாள்முழுதும் பட்டினிபோடும் வறுமையிலிருந்தும்,எல்லாத்திசைகளிலிருந்தும் உதைத்துத் தள்ளும் வாழ்வெனும் அபத்த நாடகத்திலிருந்தும் தன் வாழ்வை முன்னெடுத்துச் செல்லும் உந்து சக்தியைக் கண்டடைகிற உறுதியான மனம் எஸ்.போசிடமிருந்தது அதுவே அவர் குரலை இன்றளவும் அவரது மரணத்தின் பின்னாலும் ஒலிக்கச் செய்தபடியிருக்கிறது.

அவரது உறுதியான மனமும் அன்பாலான உலகம் குறித்த தேடலும் சக மனிதனின் துன்பம் குறித்துக் கோபப்படுகிறவராக அவரை ஆக்கின. ஆகவேதான் ஏதாவது செய் ஏதாவது செய் என அவரது கவிதைகள் அதிகாரத்துக்கெதிராக போர்க்கொடியுயர்த்துகின்றன. துப்பாக்கியைச் சனியன் என அழைக்கும் சுதாகர் ஆயுதங்களை, அவை உருவாக்கும் போரை  வெறுத்தார். ஆயுதங்களைப் பிடுங்கி எறி என்ற அவரது கவிதை சாக்கடவுளைத் தூற்றியது,போரற்ற ஒரு அழகான நிலத்தைக் குழந்தைகளுக்காக கொடுங்கள் எனக் கோரியது.சமீஹ் அல் ஹாசிமின்  றாஃபாச் சிறுவர்கள் போல ஈழ நிலத்தின் சிறுவர்கள் ஆவதை சகியாத மனம் எஸ்.போசுடையது.

போர்நிலத்தில் வாழும் மனிதர்களுக்கும் போர் நிலத்தை நீங்கிய மனிதர்களுக்கும் இருக்கிற இடைவெளி நீங்கவேண்டும் என்கிற பெருவிருப்பு அவரிடமிருந்தது. சிந்தாந்தனின் கவிதைகள் மீதான கட்டுரையில் எஸ். போஸ் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“ஆயுதப் போராட்டத்திலும் அரசியலிலும் ஏற்பட்ட விருப்பு வெறுப்புகள் காரணமாக சகிப்புத் தன்மையை இழந்தோ அன்றி தனிப்பட்ட பார்வையில் அரசியலையும் ஆயுதப்போராட்டத்தையும் நோக்கி அதன் மூலம் எடுக்கப்பட்ட தனிநபர் முடிவுகளின்படியோ அல்லது போராட்டக் குழுக்களிடையே ஏற்பட்ட விரிசல்கள் காரணமாகவோ சுயதேவைகளின் பொருட்டோ யுத்தப்பிரதேசத்தை விட்டு வெளியேறி இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் அல்லது புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் இலக்கியத்துக்காய் செயற்பட்டுக்கொண்டிருக்கும் படைப்பாளர்களுடன் யுத்தப் பிரதேசத்தில் அதன் அழிவையும் இன்னல்களையும் நேரடியாக அனுபவித்து வரும் படைப்பாளிகளிடையே நிலவி வந்த நிலவி வரும் புரிந்துணர்வு கொள்ளமுடியாத இடைவெளி இருசாராரது இலக்கிய முயற்சிகளையும் ஒருவரை ஒருவர் அணுக விடாது தடுத்திருக்கிறது.  இது எதுவுமே இல்லையென்றால் யுத்தப்பிரதேசத்திற்குள் இருக்கும் படைப்பாளர்கள் மறுதரப்பினரால் புலிகளின் ஆதரவாளர்களாக நோக்கப்பட்டமையும் இந்த நோக்கம் தந்த புறக்கணிப்பு அல்லது அதனால் விளைந்த அச்சமும் நிச்சயம் காரணமாகலாம்”

உரையாடல்களின் மீதான பெருவிருப்பு அவருக்கிருந்தது. எதிர்த் தரப்பின் குரலைக் கேட்கமறுக்கிற ஏகப்பிரதிநிதித்துவச் சார்பென்பது எஸ்.போசிடம் இல்லை அவர் தன் எழுத்திலும் செயலிலிலும் அதனைப் பதிவுசெய்தே வந்திருக்கிறார். அத்தகைய செவிகொண்ட குரலாயிருப்பதன் மூலம் தான் எஸ்.போசின் வரலாறு முக்கியத்துவமுடையதாகிறது.

எனது ஒரே அடையாளம் நான் யாரைக்குறித்து இருக்கிறேன் என்பது என்று எழுதியதைப்போலவே அவர் சனங்களைக்குறித்து இருந்தார். சனங்களின் பாற்பட்ட அதிகாரத்திற்கு எதிரான சிந்தனைதான் எஸ்போசின் அடையாளம். அதிகாரமே யுத்தத்தின் பிறப்பிடம் யுத்தமே சனங்களை இன்னலுக்குள்ளாக்கிறது என்பதில் எஸ்.போஸ் உறுதியாயிருந்தார். ஆகவே அவர் அதிகாரத்தை எந்நேரமும் வெறுத்தார் அதற்கெதிராக அவரது சொற்கள் போராடின. கண்களற்ற ஆயுதங்களின் முன் நானென்ன கடவுளேயானாலும் மரணம்தான்  என அவருக்குத் தெரிந்திருந்தது. அவரது நாட்குறிப்பில் அவர் எழுதுகிறார் “ஆயுதங்களுக்கு கருத்தியல் முக்கியமானதல்ல. ஆயுதங்களுக்கு எனது உயிர் பற்றிய அக்கறை கிடையாது அது தட்டும் திசையில் மனிதன் நானாக மட்டுமல்ல கடவுளேயாயினும் சாவு மட்டுமே தீர்ப்பு. எனினும் நான் எனது பேனாவை நம்புகிறேன். போர்க்குணம் மிக்க எனது இதயத்தில் இருந்து எழும் வார்த்தைகளை நம்புகிறேன்”சொற்களாலான சுதாகரது போராட்டம் சனங்களின் வலியைப் பிரதிபலித்தது.

உயர்ந்த பதவி, புகழ், செல்வம், பாதுகாப்பு போன்றவை அழைத்தாலும், அவற்றிற்கெல்லாம் மேலாக உள்ளுணர்வின் அழைப்பே முக்கியமாக இருக்கிறது என்று தனது இறுதி ஆசிரியர் தலையங்கத்தில் லசந்த எழுதினார். எஸ்.போசும் லசந்தவைப்போலவே தன் மரணத்தை முன்னுணர்ந்தே இருந்தார். சூரியனைக் கவர்ந்து சென்ற மிருகம் என்கிற கவிதையில்

“எனவே தோழர்களே

நான் திரும்ப மாட்டேன் என்றோ அல்லது

மண்டையினுள் குருதிக்கசிவோலோ

இரத்தம் கக்கியோ

சூரியன் வெளிவர அஞ்சிய ஒரு காலத்திலும்

நான் செத்துப்போவேன் என்பது பற்றிச் சொல்லுங்கள் ”என்கிறார்.

சுதாகர் தன் சொற்களின் விளைவை நன்கறிந்திருந்தார் என்பதன் வெளிப்பாடுதான் இந்த வரிகள்.  ஆனாலும் திரும்பவும் திரும்பவும் அதிகாரத்தை சீண்டும் சொற்களை அவர் பிரசவித்துக்கொண்டேயிருந்தார். அதுவே அதிகாரத்துக்கெதிராய் ஆயுதங்களை வெறுக்குமொருவன் செய்யக்கூடியது அதையே சுதாகரும் செய்தார்.

“நாங்கள் பயத்தின் மீதும் சிலுவையின் மீதும் அறைந்தறைந்து ஒளியிழக்கச் செய்த எமது சொற்களை மீட்டெடுப்பது எப்போது? இன்று எழுதப்பட்டவை பற்றியல்ல எழுதாமல் விடப்பட்டவை பற்றியே பேசவேண்டியிருக்கிறது. எல்லாம் எழுதப்பட்டு விட்டது என நாங்கள் கருதினால் படைப்பின் மூலம் அநீதிகள் என திரும்பத் திரும்ப வலியுறுத்தப்பட்டவை மீளவும் மீளவும் தலைவிரித்தாடுகிறது எனின் எமது எழுத்தின மூலம் சிறிதளவேனும் சமூகமாற்றமோ அரசியல் மாற்றமோ நிகழவில்லை என்ற எண்ணம் எம்முள் மூளும் எனில் அது பற்றியே நாங்கள் சிந்திக்கவும் பேசவும் வேண்டியிருக்கிறது” இவ்வாறு நிலம் ஆசிரியர் தலையங்கமொன்றில் நாங்கள் மீளவும் மீளவும்  அதிகாரத்திற்கெதிரான சொற்களைக் காவிச்செல்லவேண்டியதன் அவசியத்தை எஸ்.போஸ் வலியுறுத்துகிறார். கொல்லப்பட முடியாத எஸ்.போசின் வரலாறு அவரது இந்தக் குரலைத் திரும்பத் திரும்ப மேலெழச் செய்தபடியேயிருக்கும்.

2012
Jul 10

melinchi”எப்போதும் எனது வார்த்தைகளுக்கான இன்னோர் அர்த்தம்
எதிராளியின் மனதில் ஒளிந்திருக்கிறது”

என்பதில் எனக்கு நம்பிக்கையிருக்கிறது.  இதற்குப்பின்னால் வருகிற என்னுடைய எல்லா வார்த்தைகளும் முடிந்த முடிவுகளோ மாற்றமுடியாத தீர்மானங்களோ கிடையாது. முடிந்த முடிவுகளாக எதையும் அறிவித்துவிடமுடியாத அரசியலறிவும், இலக்கிய அறிவுமே எனக்கிருக்கிறது என்பதை ஆரம்பத்திலேயே சொல்லிக்கொள்கிறேன். புத்தகத்தின் சரி பிழைகளையோ, உள்ளமை, இல்லாமை பற்றியோ எனக்கெந்த விசனங்களும் கிடையாது.  மெலிஞ்சி முத்தனின் கதைகள் என்னை அழைத்துச் சென்ற பாதையை விபரிப்பதற்காகவே நான் இங்கே வந்திருக்கிறேன். வாசிப்பின் பயணம் என்பது, அதிசயங்களைத் தேடுகிற பயணம்போல திருப்பங்களோடும், விருப்பு விருப்பின்மைகளோடும் ஆச்சரியங்களோடும் தன்பாட்டுக்கு நிகழ்வது என்று நான் நம்புகிறேன்.

உண்மையில் கூட்டங்களில் பேசுவது குறித்து எனக்கு அச்சம் இருக்கிறது. யார் யாருடைய கோபத்துக்கெல்லாம் ஆளாகவேண்டியிருக்குமோ? இவரை இவரையெல்லாம் திருப்திப்படுத்த வேண்டியிருக்குமோ? என ஒரு நடுக்கம் இருந்தது. பேசாமல் புனைபெயரில் பேசமுடியுமென்றால் எவ்வளவு நல்லது என்று யோசித்தேன். அல்லது அனானியாகப் பேசுவதற்கும் விருப்பம்தான். வெகு விரைவில் அப்படி ஒரு வசதியையும் இந்த தொழிநுட்பங்களில் வளர்ச்சியைக்  கொண்டு கண்டுபிடிப்பதன் மூலம் அர்த்தமும்,உணர்வுகளும் கூடிய இதைப் போன்று கூட்டங்கள் நிகழ்த்தி உரையாடுகின்ற சாத்தியங்களைக் உலகம் கொன்றுவிடுமென்றுதான் நினைக்கிறேன்.

புத்தகத்தின் அட்டைப்படத்தைப் பார்த்தவுடன் எனக்கு நினைவுக்கு வந்தது ஒரு விசயம் தான். அது தமிழீழத் தேசியக்கொடியாக விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட கொடி. அதற்குள் ஒரு புலி கண்ணை உருட்டியபடி பார்த்துக்கொண்டிருக்கிறது. அதற்கு முன்னால் இரண்டு சிறுவர்கள் துவக்குகளை வைத்துக்கொண்டு நிற்கிறார்கள். துவக்குகளை நிமிர்த்திப் பிடித்தால் அவர்களை விடத் துவக்குகள் உயரமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.  அட்டைப்படத்தில் அவர்களுடைய முதுகுகளின் நிழல் மட்டும்தான் தெரிகிறது. முதுகுகளிடம் கண்கள் இருந்தால் எவ்வளவு நல்லம். அந்தச் சிறுவர்களின் கண்களில் தெரிவது என்ன உணர்ச்சி என்று அந்தக் கண்களைப் பார்த்தே சொல்லிவிடலாம். இப்போது நான் அந்தக் கண்களில் தெரிவது பயமென்றோ,வீரமென்றோ,இல்லை அவை செத்துப்போய்க் கிடக்கிற கண்களென்றோ சொல்லப்போக செத்த புலிகளைப் பற்றி என்ன பேச்சு வேண்டிக்கிடக்கிறது என்றோ அல்லது பசித்த புலிகள் என்னைத் தின்னட்டும் என்பதான விசனங்கள் வரலாம் என்பதால் புத்தகத்தின் அட்டையைத் திருப்பி உள்ளே போய்விடலாம்.

கதைகளைப் படித்த பிறகு தீட்டப்படப்போகிற வார்த்தைக் கத்திகளை நிதானப்படுத்த மெலிஞ்சிமுத்தன் முன்னுரையிலேயே சொல்லிவிடுகிறார். “இவற்றை எழுதிய நான் எவற்றுடனும் நேரெதிரே நின்று போரிட்டு வென்றவனில்லை. தப்பித்தலின் சாத்தியங்களை நீதியென்று தோற்றம் கொண்டவற்றுக்கு குந்தகம் வராத தருணம் பார்த்து பயன்படுத்தி வந்தவன்தான்” எனக்கு உடனடியாகவே சந்தோசம் பொத்துக்கொண்டு வந்தது அடடா என்னைப்போல ஒருவன்.

உரையாடலின் அவசியம் குறித்து தமிழ்ச்சூழலில்,தமிழ்த்தேசியச் சூழலில் அதீதமான அக்கறையோடும் கரிசனையோடும் அணுகப்பட்டுக்கொண்டிருக்கிற சமகாலத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். முன்னெப்போதையும்விட உரையாடலின் சாத்தியங்களைப் பெருக்கியிருக்கிறது தொழிநுட்பம். உரையாடலை விரல்நுனிக்கு கொண்டுவந்திருக்கும் இக்காலத்தில்  இணையம் எவ்வளவு நெருக்கமாக அதனை எளிமைப்படுத்தியிருக்கிறதோ அத்தனை தூரம் அதனை மர்மப்படுத்தியும் இருக்கிறது. எல்லோருடைய இரண்டாம் முகங்களும் அல்லது அவதாரங்களும் இணையவெளியெங்கும் இறைந்து கிடக்கிறது. ஆண் பெண்ணாகவும்,பெண் ஆணாகவும் மாறி மாறிப் பிறருடைய மனங்களுக்குள் பின்கதவுக்குள்ளால் நுழைவதற்கான முயற்சிகள் தொடர்ந்தபடியிருக்கிறது. ஒரு நண்பர் பதின்நான்கு face book ஐடிகளை வைத்திருக்கிறார்  என்பதை எனக்கு வேறொரு நண்பர் Facebook ல் சொன்னார். கிட்டத்தட்ட அந்தப் பதின்நான்கில் எட்டு பெயர்களுக்கு நான் பேஸ்புக்கில் நண்பராயிருக்கிறேன். சிறுகதைத் தொகுப்பினைப் பற்றிக் கதைக்கிறதை விட்டுவிட்டு face book ஐடிகளைப் பற்றிய கிசுகிசுக்களை பேசுகிறேன் என்று நீங்கள் எரிச்சலமையக்கூடும். இந்தத் தொகுப்பில் மெலிஞ்சி முத்தன் இருக்கிறார், அவரது இன்னொரு ஐடியும் இருக்கிறார் அவருக்குப் பெயர் மாணங்கி. இன்னும் பல ஐடிக்களும் மெலிஞ்சி முத்தனுக்கு உண்டு. ஆனால் அவர் அதிகமாகப் பாவிக்கிற ஐடி மாணங்கி. அது தவிரவும் உரையாடல்கள் பற்றி நான் பேச இன்னொரு காரணமும் உண்டு. இக்கதைப்புத்தகத்தில் இடம் பெறுவது உரையாடல்கள் என்பதாயே நான் உணர்கிறேன்.  தனது மனக்கிடக்கைகளை யாரிடமாவது கொட்டித்தீர்த்துவிடுகிற வேட்கைதான் இங்கே மெலிஞ்சியால் கதைகளாக எழுதப்பட்டிருக்கிறது. அரசியலும், வாழ்வில் நிலையின்மையும் நண்பர்களை நம்மிடமிருந்து துரத்தியபடியிருக்க தனக்குத்தானே ஐடிகளைக் கிரியேட்பண்ணியபடி பேசிக்கொண்டிருக்கிறார் மெலிஞ்சி முத்தன் இந்தக் கதைத்தொகுதி நெடுகிலும்.

இந்தக் கதைகள் முழுவதும் மாணங்கி வந்துகொண்டேயிருக்கிறார். உண்மையில் இந்தச் சிறுகதைகளில் மெலிஞ்சி முத்தன் தான் கடந்து வந்திருக்கிற மனிதர்கள் குறித்தும், அவரது வாழ்வின் தேங்கிநிற்கிற நினைவுகளைப் பற்றியும் அவருடன் எப்போதுமே இருந்துகொண்டிருக்கும்  கடற்கரையில் அமர்ந்து மாணங்கியுடன் பகிர்ந்து கொள்கிறார். அவர் நினைத்த மாத்திரத்தில் சிருஷ்டித்துக்கொள்ளக்கூடிய கடலின் மகனாக அவர் இருக்கிறார். அவர் விளையாடும் பருவத்தில் புதினமான பொருட்களைப் பரிசளித்த கடல் அவருக்குத் துயரத்தையும் பரிசளிக்கிறது. அவரால் கடலை நம்பமுடியாமலும் இருக்கிறது அதே நேரம் கடலைக் கைவிடவும் முடியாமலிருக்கிறது. அவர் அந்தக் கடலை என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளிக்கிறார்.

தாங்கள் நம்புகிற பெருங்கடலை நம்பவும் முடியாத,அதே சமயம்  நம்பாமலிருக்கவும் முடியாத சாதாரணர்களின் கதைகள் தான் இந்தப் புத்தகத்தில் இருப்பவை. அறிவை நிராகரித்த ஆயுதம் பற்றிய கதைகளும், பிறகொரு நாள் சுயநலம் மிக ஆயுதங்களுக்கு ஆலாபனை பாடிய அறிவும் என்று இது வரைக்கும் கதைகள் சொல்லும் உரிமையை ஆக்கிரமித்துக்கொண்டிருந்த கதைகளை இப்போது வரத்தொடங்கியிருக்கிற இவை இரண்டுக்கும் நடுவில் இருந்துகொண்டு இந்த இரண்டு எதிர்நிலைகளுக்கிடையேயும்  நசிபட்ட சனங்களின் கதைகள் இந்தப் புத்தகத்தில் உண்டு. நம்பியும் நம்பாமலும் விரும்பியும் விரும்பாமலும் பொதுவெளியின் அரசியலோடு இழுபட்டுச் சென்ற சனங்களில் குரல்கள் கதைகளில் இருக்கிறது.

இல்ஹாம் என்கிற கதையில் இப்படி எழுதுகிறார்.
“எங்கள் நம்பிக்கைகள் ஒன்றும் வித்தியாசமானவையல்ல. எங்கள் குடும்பம் ஒன்றும் புரட்சிகரமான சிந்தனையைக் கொண்டதுமல்ல. சமூகத்தின் பெரும்பாலானவர்களின் நம்பிக்கைகளையே எங்கள் நம்பிக்கைகளாக் கொண்டிருந்தோம்…………………….. கூப்பன் கடைகளில் சந்தித்துக்கொள்ளும் போது எங்கள் துயரங்களைப் பகிர்ந்து கொள்வோம்”

கூப்பன் கடைகளோடு சேர்ந்து தங்களையும் இடம்பெயர்த்திக்கொண்டேயலைந்த, சமூகத்தின் பெரும்போக்காகவுள்ள அரசியலையே தங்களுடைய அரசியலாகவும் வரித்துக்கொள்ள நேர்ந்த மனிதர்களின் கதைகளாக இக்கதைகள் எழுதப்படுகின்றன. இல்ஹாம் என்கிற கதையில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட வீட்டில் வாழநேர்ந்த  ஒரு மனிதன் அது குறித்து சங்கடப்பட்டு குற்றவுணர்வுக்குள்ளாகிறான் பிறகு அதே குற்றவுணர்வு ஏன் இத்தனை தாமதமாக எனக்கு ஏற்படுகிறது என்று வெட்கமடைகிறான். இந்தக் குற்றவுணர்வு சாதாரணமான சனங்களின் மனவுணர்களைப் பிரதிபலிக்கிறது. இந்தக் குற்றவுணர்வும் வெட்கமும் கதைசொல்லும் வெளிகளை இது வரை ஆக்கிரமித்திருந்த பிரகிருதிகளிடமிருந்து வரவில்லை. அவர்கள் இதற்கும் ஒரு விளக்கமும் சொல்லிக் கடந்து போவார்கள். ஆனால் சாதாரணிகளால் அவற்றைக் கடக்க இலகுவில் முடிவதில்லை.

உண்மையில் மனிதர்களின் மிகப்பெரிய சாபமே குற்றவுணர்வுதான்.  குற்றவுணர்வை எப்படிக் கடப்பதென்பதுதான் மனித ஆன்மாவை அலைக்களித்தபடியிருக்கும் பெருங்கடல். பாவமன்னிப்பு கேட்பதைப் போல, கோவில் திருவிழாவில் உபயகாரராய் இருப்பதைப்போல, பிச்சைக்காரர்களின் சில்லரைத் தட்டில் நாணயங்களை வீசியெறிவதைப்போல குற்றவுணர்வுகளைக் கடக்கும் எளிய சூத்திரங்கள் எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும்  மனித ஆன்மாவைத் திருப்தி செய்துவிடுவதில்லை. அரசியல் சார்ந்த தமிழர்களின் குற்றவுணர்வு ஒரு பெரும் வெளியாய் விரிந்திருக்கிறது. அதனால் போர்க்கடவுள்களின் உண்டியல்கள் நிறைந்ததன்றி வேறெதுவும் நடந்ததாயில்லை.

ஒரு படைப்பாளியாக மெலிஞ்சு முத்தனின் ஆற்றாமைகள் இந்தக் கதைகளிலே பதிவு செய்யப்படுகிறது.  உண்மையில் ஊரைப்பிரிய நேர்கிற எல்லோரிடமும் நினைவு மூட்டைகள் இருக்கின்றன. அந்த மூட்டைகளுக்குள் காலத்தின் புன்னகையிருக்கிறது,தப்பித்தலின் கண்ணி ஒழித்துவைக்கப்பட்டிருக்கிறது, இடம்விட்டு இடம்தாவித் தன்னைக் தகவமைத்துக்கொள்ளும் உடலொன்றிருக்கிறது, கூடவே பாவங்களும், துயரங்களும், கண்ணீரும் அந்த மூட்டைக்குள் இருக்கின்றன. இதயத்தை அழுத்திக்கொண்டிருக்கும் நினைவின் சுமைகள் உரையாடலைக் கோருகின்றன, பகிர்தலை யாசிக்கின்றன. ஆனால் துரதிருஸ்ட வசமாக எல்லோரிடமும் மூட்டைகள் இருக்கின்றன. எல்லோருக்கும் மூட்டைகளை அவிழ்க்கவேண்டிய அவஸ்தையும் பெருத்த தயக்கங்களும் உண்டு.  எனக்கும் கூட. ஆனால் அடுத்தவரின் மூட்டைகளில் என்ன இருக்கின்றது என்பது  பற்றி அறியும் ஆவல் அதனைவிடப் பன்மடங்காககப் பெருகிக்கொண்டேயிருக்கிறது. மூட்டைகளை அவிழ்ப்பதில் இருக்கிற தயக்கமும் அவஸ்தையும் மெய்யான உரையாடலின் சாத்தியமான வெளிகளை அறைந்து சாத்துகிறது.

மெய்யான உரையாடலுக்கான சாத்தியங்கள் குறைந்த இப்படியான ஒரு சூழலில் மெய்யான உரையாடலை யாசிக்கும் மெலிஞ்சிமுத்தனின் படைப்பு மனம் தன்னோடு உரையாட ஒரு பிரகிருதியைக் உருவாக்குகிறது. அதன்பெயர்  மாணங்கி. மெலிஞ்சி முத்தன் தான் சுமந்துகொண்டிருக்கும் நினைவுகளாலான மூட்டையை அவருக்கும் மாணங்கிக்குமான உரையாடல்களாக சிறுகதைகளாக இந்தப்புத்தகத்தில் அவிழ்க்கிறார். அந்த உரையாடல்கள் நம்மையும் ஒரு உரையாடல் வெளிக்கும் நமது மூட்டைகளை அவிழ்ப்பதற்கான தூண்டுதலையும் நமக்களிக்கின்றன.

இத்தொகுப்பில் இருக்கிற கூட்டிச்செல்லும் குரல் என்கிற சிறுகதையில் மாணங்கியும் ஒரு குழந்தையைச் சுமக்கிறார். அந்த குழந்தையை இறக்கிவிடுவதற்காக அலைகிறார். குழந்தை அழுகிறது அதைச் சமாதானப்படுத்த ஒரு தென்மோடிக் கூத்துப்பாடலொன்றைப் பாடுகிறார் மாணங்கி அந்தப்பாடலில் பாடுபொருளே பிரண்டையாறு தொகுப்வு முழுவதும்  இழையோடுகிறது.  அந்தப் பாடல் இதுதான் .

நேற்றிருந்த நிலவதுவும்
நெருப்புத் தின்று பாதியாகும்
காற்றினிலே ஓலக்குரல்
கரைமுழுதும் பரவிவிடும்.
குரலெடுக்க நாதியில்லை
கூடவர யாருமில்லை
பரந்த சிறைப் பட்டணங்கள்
பாவம் இந்தக் கேடயங்கள்.

எல்லோருக்குமான அரசியலைத் தமக்கான அரசியலாகக் கொள்ள நேர்கிறவர்கள் கேடயங்களாக்கப்படுவதை. கூட்டத்திலும் தனித்திருக்க நேர்கிற படைப்பு மனத்தின் அவாவுதலை கதைகள் பேசிச் செல்கின்றன.
‘மொழியின் எளிமையான குழந்தை சிறுகதை’ என்று எங்கோ படித்திருக்கிறேன். அந்தக் கூற்றோடு என்னளவில் உடன்படவும் செய்கிறேன். இவரது கதைகளில் எங்கும் குறியீடுகள் நிரம்பியிருக்கிறது. கதைகளைப் படித்து முடித்த பின்னர் அட்டைப்படம் குறித்த இன்னுமொரு யோசனையும் எனக்கு வந்தது. இந்தப்பக்கம் புலிக்கொடியிருக்கிறது. இந்தக் கொடியின் எதிர்த்திசையில் ஒரு வாளேந்திய சிங்கத்தின் கொடியும் இருக்கிறது. இரண்டுக்கும் நடுவில் இழுபட்டுக்கொண்டிருக்கும் சனங்களில் வாழ்வு மெலிஞ்சி முத்தனால் எழுதப்பட்டிருக்கிறதாக நினைத்தேன். அந்தச் சிறுவர்கள் இரண்டு கொடிகளுக்கும் இடையில் நிற்கிறார்களே என்கிற பார்வையும் எனக்கும் தோன்றியது. இது குறியீட்டின் சாத்தியம். சில சமயங்களில் படைப்பு பேச வருகிற அரசியலையும் தவிர்த்து நமக்கு விருப்பமான அரசியலைப் பொருத்திப்பார்க்கச் செய்துவிடுகிற அபத்தங்களுக்கான சாத்தியங்களும் நிரம்பியிருக்கிற வெளி இந்தக் குறியீட்டு மொழி.

குறியீடுகள் எழுத்தை பல்வேறு விதமான வாசிப்பின் சாத்தியங்களுக்குள் அழைத்துப்போகக் கூடியவை. ஒரு பிரதியின் மீதான பல்வேறு வாசிப்புக்கள் என்பது மொழியின் பலவீனமா? பலமா? என்கிற ஆய்வுகளுக்கெல்லாம் அப்பால், இலங்கைத்தீவின் இனமுரண்பாடுகள் குறித்த எழுத்துக்களை, அல்லது தமிழ் மற்றும் சிங்கள அதிகார மையங்களைக் கேள்விக்குள்ளாக்கும் பத்திரிகைகளை,புத்தகங்களை துப்பாக்கிகளின் கண்கள் வாசிக்கத் தொடங்கியதற்குப் பிறகு எங்களுடைய மொழிப்பயன்பாட்டின் நேரடித்தன்மை குறைந்து வந்திருக்கிறதை அவதானிக்கலாம். அது ஒரு நழுவல் மொழியை, அச்சமூட்டப்பட்ட சொற்களை, உண்மையைத் தயக்கத்துடன் எட்டிப்பார்த்தபடியிருக்கும் எழுத்துக்களை உருவாக்கியிருக்கிறது. அந்தச் சூழ்நிலை எழுத்தின் சகல துறைகளிலும் வியாபித்திருக்கிறது.எழுத்தின் இந்தநேரடித் தன்மையின்மையை எழுத்தின் பலவீனமாக நான் உணர்கிறேன். அரசர்களின் நிர்வாணத்தை சிலசமயங்களில் குறியீடுகள் ஆடைகளாகத் தோற்றம்பெறச் செய்துவிடுகின்றன.

இந்தக் கதைகளைப் படித்துக்கொண்டிருக்கும் போது மெலிஞ்சி முத்தன் ஒரு கவிஞராக இருந்திருக்க வேண்டுமே! என்று எனக்குத் தோன்றியது. அவர் இரண்டு கவிதைத் தொகுகளையும் வெளியிட்டிருக்கிறாராம் என்று அவர் சொல்லிப் பிறகு அறிந்தேன். அந்தப் புத்தகங்களைப்பற்றி அறியாமலிருந்தது குறித்து வெட்கமாயிருந்தது. ஆனால் புலப்பெயர்வும்,போரும், இலக்கியச் சந்தையும் எல்லாமுகங்களையும் எங்களுக்கு காட்டினவா? எப்போதும் ஒரு சில பெயர்களே முன்னிறுத்தப்படுகின்றன. அந்தப் பெயர்களை முன்வைத்தே கதையாடல்கள் நிகழ்த்தப்படுகின்றன. ஈழத்து தமிழ் அரசியல்ச் சூழலில் ஏற்பட்ட இரண்டு எதிர்நிலைகளுக்கிடையில் நின்ற எல்லாப் படைப்புக்களும் பேசப்படாமலேபோயின. ஏதோ ஒரு நிலையெடுத்த, ஏதோ ஒன்றைத் தூக்கிப்பிடித்த  படைப்புக்களே விவாதிக்கவும் ஆராதிக்கவும் பட்டன. எதிர் எதிர் அந்தங்களின் அழிவுகள் உணரப்படுகிற காலமாய் சமகாலம் இருக்கிறது. எப்போதும் மைய ஆழுமைகளைக் கட்டமைத்தபடி சுழன்றுகொண்டிருக்கும் இலக்கியச்சக்கரத்தில் எல்லாப் படைப்புகளும், படைப்பாளுமைகளும் கவனத்தை பெறுவதற்கான இலக்கியச் சூழலை நாங்கள் உருவாக்கவேண்டிய ஒரு அவசியம் இருக்கிறதாக நான் கருதுகிறேன். சந்தைப்படுத்தல் லாவகங்கள் தெரிந்தவர்களும், நமக்கு நாமே திட்டங்களை முன்னெடுப்பவர்களிடமிருந்தும் இலக்கியத்தின் பிரதிநிதித்துவங்களையும் கூட எல்லாருக்கும் பகிர்ந்தளிக்கவேண்டியிருக்கிறதோ என்றும் தோன்றுகிறது.

மெலிஞ்சி முத்தனின் இந்தக் கதைகள் என்னை கடலுக்கு அழைத்துப்போயின. அந்தகடலின் கொந்தளிப்பை, அழுகையை, தழுவலை ,மௌனத்தை இந்தப் பயணத்தின் போது நான் உணர்ந்தேன். உங்களுடைய பயணஅனுபவங்களும் இப்படியேதான் இருக்கவேண்டுமென்றில்லை பயணங்கள் ஒன்றெனினும் பயணிகளைப் பொறுத்து அனுபவங்கள் வேறாகின்றன…

நன்றி: எதுவரை இதழ் 3

ani.jpgதனது நான்கைந்து கவிதைத் தொகுதிகளைக் கையில் திணித்தபடி கவிதை பற்றி விடாப்பிடியாக ஒருவர் பேசியது இப்போது நினைவுக்கு வந்து தொலைக்கிறது. நீங்கள் கடைசியாக வாசித்த கவிதைப்புத்தகம் எது எனத் என் நாக்குத்தவறிக் கேட்டதில் அவர் அற்புதமானதொரு கருத்தைச் சொன்னார்..

“நான் வேறு புத்தகங்கள் படிப்பதில்லைத் தம்பி… அவற்றில் ஒரு வரியைப் படிப்பதற்கிடையில் எனக்கு நான்கு வரி தோன்றிவிடுகிறது நானென்ன செய்ய… எழுதுவது தானே முக்கியம்” என்றார். நான் அவர் வயசு கருதி தலையை மட்டும் எந்தப்பக்கம் என்றில்லாமல் ஆட்டிவைத்தேன்.(நழுவல் தான் நமக்குத் தொழிலாயிற்றே).

சில நல்ல எழுத்துக்களைப் படிக்கும் நம்மையறியாத பரவசமும் வெட்கமும் ஒருங்கே கைகூடிவருகிறது. (வெட்கம் எழுகிறவராயிருப்பின் மட்டும்). வாசிக்கச் சலிக்கிறவன் எதற்கு எழுதுகிறான். எனத் தோன்றும்.. கவிதைகள் என்னைத் தின்று செரிக்கின்றன. சில அற்புதமான கவிதைகளைப் படிக்கநேர்கையில் என்னை நீயெல்லாம் ஏன் கவிதை எழுதுகிறாய் மனக்குரங்கு கேள்விகேட்டுத் துளைக்கிறது. இன்னும் சில கவிதைகள் பரவசம் கொண்டென் மனதுக்குள் மறுபடி மறுபடி புரண்டுகொண்டிருக்கும். இன்னும் சில என்னை ஏன் நீ எழுதவில்லை என்பதாய் முறைக்கும். கவிதைகள் மட்டுமென்றல்ல புத்தகங்கள் எல்லாமே அப்படித்தான்.

அப்படி என்னை வெட்கம் கொள்ள வைத்த. பரவசத்தில் ஆழ்த்திய சில கவிதைகள் கொண்ட அனிதாவின் ‘கனவு கலையாத கடற்கன்னி’ தொகுப்பை இந்தக் காலையில் படித்தேன். எற்கனவே அது மின்தொகுப்பாக கிடைத்திருந்தாலும். புத்தகத்தை புத்தகமாகப் படிப்பதன் சுகம் கருதி. தாள்களைத் தடவும் விரல்களின் வழிதான் என்னுள் வார்த்தைகளின் கிறக்கம் ஏறுவதாய்க் கருதியோ என்னமோ அதை புத்தகப்பிரதியாய் வாங்கி வந்தபின்னரே படித்தேன். மற்றவர்கள் ஒத்துக்கொள்கிறார்களோ இல்லையோ நானும் கவிதைகள் எழுதுவ(திய)தாய் நம்பிக்கொண்டிருக்கிறது மனசு.

கவிதைகள் எழுதலாம் கவிதைகள் பற்றி எப்படி எழுதுவது. எனக்குத் தெரியாது. அனிதாவின் கவிதைகளின் வழியாக எனக்கு நேரமுடியாத அனுபவங்கள் கூட கோர்த்துக்கிடக்கும் அவரது வார்த்தைகள் வழியாய் நிகழ்ந்து கடக்கிறது என்னை. பெண் என்கிற இருப்பின் தனித்துவம் மிகுந்து கிடக்கும் கவிதைகளில் காமமும் அழகும் பெருகும் புள்ளியாய் தான் பார்க்கப்படுவது குறித்த கோபமிருக்கிறது. மென் துயரங்கள் படிந்த சொற்களின் மீது லேசான பதற்றம் தூவப்பட்டிருக்கிறது. அது பெண்கள் மட்டுமே அலைகிற வெளி. அது சுருக்கிடப்பட்ட ஒரு சிறுதுளிக்குள் விரிகிற பால்வீதிப் பிரபஞ்சம். ஆண்கள் அறியாத ரகசியவழிகளில் பெண்கள் அதை அடைகிறார்கள். யாராலும் பின்பற்ற முடியாதபடி ஒழிந்துகிடக்கும் அவர்களது தடங்களைத் தேடும் அலைதலில் தோற்றுத்தான் போகிறார்கள் ஆண்கள்.

எல்லாம் போதும் கவிதையைப் பற்றிப் பேசடா என்ற உங்கள் முணுமுணுப்பு கேட்கிறது..

ஆனாலும் என்ன கவிதைகளைப் பற்றி எப்படி பேசுவது என்றெனக்குத் தெரியாது.. தொகுப்பை மூடிவைத்தை பின்னும் மனதுக்குள் மினுங்கிய சில கவிதைகள்.. மற்றும் அனுபவங்கள்.

இந்தக் கவிதை எனக்கு பயங்கரமாப்பிடிச்சது இதே அனுபவத்தை பல்வேறு பெண்கவிஞர்களின் கவிதைகள் பேசுகின்றன. கோபமாய், வேகமாய், எரிச்சலாய்.. இன்னும் இன்னும் வன்மமாய்ப் பேசியிருக்கின்றன. ஆனால் எனக்கு அனிதா அதைச் சொல்லியிருக்கிற மொழி பிடித்திருக்கிறது. நான் அறியாத ஒன்றைக் கண்டடைந்த சந்தோசம் மேலிட ஒரு புதிர் போல இதை மறுபடி மறுபடி படித்துக்கொண்டிருந்தேன்.

சுழற்சி.

இது நிகழாதிருக்க வேண்டும்
இம்முறையாவது.

அங்குலம் அங்குலமாய் வெப்பம் பரவி
தீ கனன்று அனல் துவங்கும்
ஐந்து விரல் அனிச்சயாய் மடங்கி
ரேகைக்குள் குழி பறிக்கும்
மரங்கள் மெலிந்து கொடிகளாகி
கொடிகள் வளைந்து நாணலாகும்

வீடு அதிர்ந்து அதிர்ந்து அடங்கும்
தூண்கள் வலுவின்றி சரியத் துவங்கும்
முற்றத்து துளசி மாடம்
சமயம் பார்த்து ஓடி ஒளியும்

எனினும் வீடும் அழியபோவதில்லை
காடும் கருகபோவதில்லை
யாரையும் ஈர்க்கவில்லை எந்த ஒரு நிகழ்வும்

பேருந்து நெரிசலின் சலனம் தாண்டி
சன்னமாய் உதிர்கின்றன
ஒரு குழந்தைக்கான ஆயத்தங்கள்.

இப்படி ஒரு அனுபவத்தை நான் எழுதவேண்டும் என்று நினைத்தபடி இருந்தேன். யாரிடமிருந்தாவது கரிசனத்தை யாசிக்கிற பொழுதுகள் நிறைந்தே கிடக்கின்றன வீட்டை விட்டுத் தனித்தெறியப்பட்ட என்வாழ்வில். என் தம்பியின் புகைப்படத்தை பிரின்ட் பண்ணிக்கொண்டு வந்த ஆட்டோப் பயணத்தில் எனைமீறிப்பீறிட்ட விசும்பலின் போது துணைவந்த ஆசுவாசம் தந்த ஆட்டோ ஓட்டும் எளியமனிதரின் வார்த்தைகளைப் நினைவூட்டிப்போயிற்று இக்கவிதை..

அன்பின் விலைகள்..

எதற்காகவோ கண் கலங்கியபடி
ஆட்டோவில் ஏறினேன்

மௌனமாய் விம்மத்துவங்கி
பின் உடைந்து பெரிதாய் அழவும்
ஆட்டோக்காரன் திரும்பிப்பார்த்து
ஏன் அழறீங்க என்றான்
பின் என்ன நினைத்தானோ அழாதீங்க‌ என்றான்
என் இடம் வந்ததும்
கொடுத்த இருபது ரூபாய்க்கு எட்டு ரூபாய் சில்லரை
எண்ணி கொடுத்துவிட்டு சென்றுவிட்டான்.

அந்த மீதி சில்லரையாவது வாங்காமல் விட்டிருக்கலாம்.

உலகம் தந்திரமான சொற்களால் நிறைந்திருக்கிறது. வாய்களில் புழுத்து நெளிகிறது தேவைகளின் நிமித்தம் உதிர்க்கப்படும் பிரியத்தின் சொற்கள். காதல் தொடங்கி காதல் வரையும் அதன் சாதுரியங்கள் எல்லாஇடங்களிலும் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. அதன் சாதுரியங்கள் தோற்றுத் துவளும் ஒரு கணத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது இந்தக்கவிதை என்பதாய் நான் உணர்கிறேன்.

துரோகம்

அகால வேளையின்
நம்பிக்கை திரை கிழித்துக்கொண்டு
ஒரு பொய் பிறக்கிறது

பின் மற்றொன்று
மற்றுமொன்று.
பிணவறையின் சவங்களாய்
வரிசையாய் பொய்கள்

குளிர்ந்து
விறைத்து
உணர்வற்று.
சரி நம்புகிறேன்.

இப்போது தள்ளிப்படு.

பிரியத்தின் அழகான கண்டுபிடிப்பு முத்தம். வார்த்தைகளற்ற அன்பின் மொழி சிலபொழுகளில் காமத்தின் தோழனாயும் அல்லது தோழியாயும். பெருகிப் பெருகி வழிகிற பேரன்பில் நிகழந்துகொண்டிருக்க வேண்டுமென்று பேராசைகொண்டலைகின்றன் முத்தங்கள். திடீரென்று ஒரு கணத்தில் நிகழ்ந்து மனசுக்குள் உறையவைக்கப்பட்ட முதல் முத்தங்கள் சிலிர்ப்பூட்டிக்கொண்டிருப்பவை அனிதாவின் இக்கவிதை படிக்கையிலும் உதடுகளில் ஈரலித்தது அம்முத்தம்.. ஆனால் இதைப்போலல்ல.. அது கன்னத்தைக் குறிவைத்து உதட்டில் முடிவடைந்தது.

முத்தங்களாலான கூட்டில்

//உன் கைக்குள் சுருங்கிக் கொண்டு
முகமெங்கும் ஈரம் காயாமல்
முத்தங்கள் வாங்கிக் கொண்டிருப்பினும்
என் கீழுதட்டை நோக்கிப் பயணித்து பின்
வழிதவறிக் கன்னம் சேர்ந்த முதல் முத்தத்தை
வெட்கிச் சிரித்து
நினைவு கூர்கின்றன
வழியெல்லாம் படுத்திருக்கும் அத்தனை வேகத்தடைகளும்//

என் அனுபவங்களோடு சேர்த்துச் சொன்ன இந்த கவிதைகள் போல தொகுப்பிலிருந்து மனசுக்குள் புரள்கிற மேலும்சில கவிதைகள். எண்ணங்கள்,வழியும் வெறுமைகள்,என் பிரிய வழிப்போக்கனுக்கு இப்படிப் போகுமொரு வரிசை இவை என் தேர்வுகள் மட்டுமே. கவிதை அனுபவம் தானே அது அவரவர்க்கு நிகழ்வதுதான். மேலே அனுபவத்தோடு சேர்த்து எழுதுகையில் கிட்டத்தட்ட முழுக்கவிதைகளையும் எழுதியிருப்பதன் காரணம் அனிதாவின் கவிதைகளில் சில வரிகளைத் தேர்ந்தெடுத்து இது நல்லாயிருக்கு என்பதாய்ச் சொல்லமுடியவில்லை. அது அவசியமும் கூடக் கிடையாது. ஒரு முழுக்கவிதையாய் நிகழும் போதே அது நன்றாயிருக்கிறது. சில வேளை அனிதாவே சொல்வது போல

//இதயங்களின் கதகதப்பில் அடைகாக்கப்படும்

என் கவிதையின் முதல் வாசகனுக்கு

என்னை எப்போதும் புரியப்போவதில்லை//

இது என் புரிதல் அனிதாவின் கவிதைகள் எனக்குள் நிகழ்த்திய அனுபவங்கள். உங்களுக்கு அவை வேறொரு அனுபவமாகவும் நிகழலாம். அனுபவித்தல் தானே கவிதை.

கடைசியாக ஒரு குறிப்பு…

தி.நகர் நியூ புக் லாண்டில் இந்த தொகுப்பை வாங்கு முன்பாக.. புத்தகங்களைப் புரட்டினேன். பிரபலங்களின் முகவரிகள் என்கிற ஒரு புத்தகத்தை புரட்டினேன். ஜோதிகாவின் முகவரிக்கு நேரே தொடர்புக்கு சிவகுமார் (நடிகர்) என்றிருந்தது. வீட்டுக்கு வந்து அனிதாவின் தொகுப்பில் ‘இன்று இந்த அறையில்’ என்கிற கீழ்வரும் கவிதையை படிக்கையில் ஏனோ ஜோதிகாவின் முகவரி இருந்த பக்கம் நினைவுக்கு வந்தது.

இன்று இந்த அறையில்

இன்று இந்த அறையில் சில்லு சில்லாய்
சிதறியிருக்கிறேன்

உடைந்ததில் தேறியவற்றை
எடுத்துப்போக வந்து விட்டார்கள்
பிரியத்துக்குரியவர்கள்

அப்பாவை முந்திக்கொண்ட தம்பி
அம்மாவின் நினைவுகளை
கடைசி உமிழ்நீர் வழிய
அள்ளிப் போனான்

பெற்ற பரிசுகளும் பட்டங்களும்
தன்னம்பிக்கைகளும்
கவிதைப்புத்தகமும்
அப்பாவுக்கு

என் குழந்தையின் வண்ணப் புகைப்படங்களும்
முதலிரவுக்கு நாளைய சோப்பு வாசமும்
கணவனின் தேர்வு

மீதமிருக்கும் சில
சிதறுண்ட நான்
சிதறுண்ட நீ
கொஞ்சம் ரத்தம்

உயிர்மை வெளியீடு
விலை -40.00

வண்ண நிலவனின் கடல் புரத்தில் வாசித்தேன். நீண்டநாட்களாகத் தேடிக்கொண்டிருந்த நாவல்.வாசித்து முடித்தபின்னும் கடல் புரம் அலைகளைப்போல் இரைந்துகொண்டிருக்கிறது இன்னமும். அதன் சொற்களாலும் அதனுள் நடமாடுகிற மனிதர்களாலும். தான் நேசிக்கிற ஒன்றைத் தவிர்க்க,அல்லது பிரிய நிர்ப்பந்திக்கப்படுகிற மனிதர்களின்  துயரம் அந்த நாவலில் குடிகொண்டிருக்கிறது.

அந்த நாவலில் வருகிற குருஸ் ஒரு குறியீடு. எல்லாவற்றையும் நேசிக்கிற தனது பாரம்பரியத்தை, தனது நிலத்தை, கடலை,காற்றை பிரிய மறுக்கிற அவற்றின் மீது தமது எல்லாப்பிரியங்களையும் கொட்டிவைத்திருக்கிற எளியமனிதர்களின் உருவம் குரூஸ்.  கடக்கவியலாமல் திணறுகிற ஒரு காலம் அல்லது விசயம்  எல்லாருடைய வாழ்விலும் வருகிறது. சிலர் அதனை வலியோடு கடந்துவிடுகிறார்கள் சிலர் அந்தவலியோடு தேங்கிவிடுகிறார்கள்.வண்ணநிலவனின் கடல்புரத்தில் தேங்கியவர்களும் இருக்கிறார்கள் கடந்தவர்களும் இருக்கிறார்கள்.

வண்ணநிலவன் எந்த மிகுபுனைவுமற்று, வர்ணணைகள் அற்று கடலை அதன் அலையோசையோடும், கரையோரத்தை அதன் நிர்வாணத்தோடும் அதன் மனிதர்களை அவர்களின் எளிய சொற்களோடும் உலவவிட்டிருக்கிறார். தன் உயிர் வீழ்கிற வரைக்கும் கடலில் வலைவீசத்திராணியிருக்கிறதெனச் சொல்லிக்கொண்டிருக்கும் தைரியமிக்க குரூஸ் தான் நேசித்த கடலையையும் தன் வீட்டையும் வள்ளத்தையம் பிரியநேர்கிறபோது அல்லது அவற்றின் மீது தனக்கெந்த உரிமையுமில்லாமலாகிறபோது நொடிந்து வீழ்கிற அந்த மீனவனின் துயரம் என்னைப் பீடிக்கிறது. தன் பிரியமான காதலன் வேறொருத்தியைக் கைப்பிடித்த பின்னாலும் துவண்டுபோகாத பிலோமிக்குட்டியின் தைரியம் எனக்குள் நிலைகொள்கிறது. வண்ணநிலவன் எனக்குள் அதை அந்தத் துயரத்தை,தைரியத்தை அல்லது அந்த மனிதர்களின் உலகை அவர்களின் அற்புதமான சொற்களிலேயே கொண்டுவருகிறார்.

பிலோமினா எல்லாவற்றையும் கடந்து வருகிறாள் நிறைவேறாத தன் காதலையும் கனவுகளையும் கடந்து எதார்த்தத்தை எதிர்கொள்ளத் திராணியிருப்பவள். கடல் புரத்தின் ஆண்களை விட அங்கிருக்கும் பெண்கள் தைரியசாலிகளாக இருக்கிறார்கள். ஆண்கள் துயரகளைக் கடக்கவியாலாமல் மரித்தும் பைத்தியமாகியும் போகிறார்கள். பெண்கள் எல்லாவற்றையும் விழுங்கிக்கொண்டிருக்கிறார்கள். வண்ணநிலவனின் கடல புரத்தில் மட்டுமல்ல எல்லாப் புரங்களிலும் பெண்கள் அப்படித்தான் எல்லாவற்றையும் இலகுவில் கடந்து போக அவர்களால் முடிகிறது.

கரையோர மனிதர்களின் அழகான இருதயத்தை அதனுள்ளிருக்கும் கடல் மீதான ஆசையை, அவர்களுக்குள் ஒழிந்திருக்கும் குரூரத்தை அந்தக் குரூரத்தை ஓரங்கட்டும் பேரன்பை இப்படி எல்லா மனிதர்களினதும் இயலுமைகளினதும் இயலாமைகளினதும் அல்லது அகமும் பறமுமான வாழ்வின் இரு பக்கங்களையும் வண்ணநிலவனின் சொற்கள் நம்முன் விரிக்கின்றன. இந்த மனிதர்களும் அவர்களுடைய மனங்களின் உணர்வுகளும் கடல்புரத்தில் மட்டுமல்ல மனிதர்கள் வாழும் எல்லாப்புரங்களிலும் பிரதியிடக்கூடியவை. ஏனெனில் வண்ணநிலவன் கட்டியெழுப்பும் பாத்திரங்களும் அவற்றின் மன எழுச்சியும் இயல்பானவை எனக்குள்ளுள் மறுபடி மறுபடி மேலெழுந்து வருபவை அலைகளைப்போல..

கடல்புரத்தில் பற்றி சா.கந்தசாமி இப்படிச் சொல்கிறார்..

கடல்புரத்தில், பரபரப்பூட்டும் சம்பவங்களும் கிளர்ச்சி தரும் காட்சிகளும் கொண்ட நாவல் அல்ல. ஆனால், இது ஒரு நல்ல நாவல். கலைத்தன்மை நிறைந்த உயர்வான நாவல். படித்தவர்கள் மனத்தில் பல காலத்துக்கு அழுத்தமாக நிற்கக்கூடியது. இதன் கதாபாத்திரங்கள் இயல்பாக வளர்ந்து, இயல்பாகப் பேசி, இயல்பாக நடந்து, இயல்பாகவே நம் மனத்தில் இடம் பிடித்துக் கொள்கிறார்கள்.

ஒரு தேர்ந்த சிறுகதையைப்போல போராட்டத்துடன் தொடங்குகிறது நாவல். அனாதி காலமாகத் தந்தைகளுக்கும் மகன்களுக்கும் இடையில் நிலவிவரும் நெருடல், உள்ளார்ந்த இணக்கமின்மை என்ற இழைகளோடு மின்னல் வெட்டு போன்ற சம்பவத்துடன் முழு வீச்சோடு ஆரம்பமாகிறது. ஆனால், போகப் போக நெருடல்களும் கோபங்களும் அமிழ்ந்துபோக, கடல்புரத்து மக்களின் ஜீவ சரித்திரம் – குரூஸ் மிக்கேல், அவன் மனைவி மரியம்மை, மகன் செபஸ்தி, இளைய மகள் பிலோமி, பணியாள் சிலுவை, பக்கத்து வீட்டுக்கார ஐசக், பிலோமியின் சிநேகிதி ரஞ்சி, பிலோமிக்குப் பிரியமான சாமிதாஸ், மரியம்மை-யின் பிரிய வாத்தி, எல்லோருக்கும் பிரியமான பவுலுப் பாட்டா இவர்களின் கதையாகி மனிதர்களின் இதயங்களில் இயல்பாகக் குடிகொண்டுள்ள மூர்க்கக்குணம் வெறித்தன்மையோடு, ஆனால் களங்கமின்றி விவரிக்கப்படுகிறது.

வாழ்க்கையின் முரண்பாடான அம்சங்களை மிகவும் யதார்த்தமாகவும் தீவிரமாக எதிர்க்க வேண்டிய அம்சங்களை மென்மையாகவும் சாத்தியமே என ஏற்றுக்கொள்ளும்படி சொல்லுகிறது இந்த நாவல். விஷயத்தை-விட, சொல்லும் முறையில் அபூர்வமான கலைத்தன்மை பூரணம் பெறுகிறது. இந்த நாவலின் சிறப்பு அம்சமே இதன் பாஷைதான். மென்மையும் குளுமையும் உயிர்த் துடிப்பும் கொண்ட பாஷை. எதையும் சாதிக்கவல்ல பாஷை, இந்த நாவலையும் ஸ்தாபிக்கிறது.

இன்னும் பல காலத்துக்குக் கடல்புரத்தில் சிறந்த நாவலாகவே இருக்கும்.

2007
Oct 24

“இயற்கையுடன் இணைந்த கிராமத்தில் அம்மம்மாவிடம் வளர்ந்தேன்.தனிமையும் சுதந்திரமும் அப்பாவின் அடக்குமுறைகளும் அற்ற இனிய சிறுபருவம். அம்மம்மாவின் நிழலில் கிடைத்தது. அந்தச் சூழல் கற்பனைகளையும் கவிதைகளையும் எனக்கு தந்தது. 90 களின் இறுதியில் கிழக்கு மாகாணத்தில் இருந்தேன் அங்குப் பெற்ற அனுபவங்கள்தான் பின்னர் நானெழுதிய கவிதைகளுக்கு அடித்தளமாயின”
என்று கூறும் பஹீமாஜகான் இலங்கை மெல்சிரிபுரவைத்ச் சேர்ந்தவர்.கணித ஆசிரியராகப் பணிபுரிகிறார்.குறைந்த எண்ணிக்கையிலான. ஆனால் காத்திரம் நிறைந்த கவிதைகளைப் பல்வேறு இதழ்களிலும் எழுதியுள்ள இவரின் முதல் கவிதைத் தொகுப்பு இது.
தலைப்பு: ஒரு கடல் நீரூற்றி
எழுதியவர்: பஹீமா ஜகான்
வெளியீடு: பனிக்குடம் பதிப்பகம்
விலை: 40.00
தொகுதியில் இருந்து எனக்கு நெருக்கமான வரிகள்:
‘அவசரப்பட்டு நீ
ஊரைக்காணும் ஆவலிலிங்கு வந்து விடாதே.
வதைத்து எரியூட்டப்பட்டசோலைநிலத்தினூடு
அணிவகுத்து செல்லும் காவல்தேவதைகள்
அமைதியைப்பேணுகின்றன.
அந்த ஏகாந்தம் குடியிருக்கும்
மயானத்தைக் காண உனக்கென்ன ஆவல்?
வந்துவிடாதே’