பயணம் என்பது ஒரு வகையில் விடுதலைதான். பயணம் நாம்
அடைபட்டிருக்கும் அழகான கூண்டின் வாயிலைத் திறந்து
வைத்துவிட்டு நாம் வெளியேறுவதற்காக காத்திருக்கிறது. நாம்
அன்றாடம் பழகும் சூழலும் மனிதர்களும் நம்மை ஏதோ ஒரு
வகையில் கட்டுப்படுத்துகிறார்கள். உண்மையில் நம் நெருக்கமான
சுற்றத்திடம் நாம் அதிகம் உள்ளொடுங்கியும், தெரியாத சூழலில், புதிய
நிலத்தில் நம்மை அதிகம் திறந்துகொள்ளவும் தயாராயிருக்கிறோம்.
 பயணம் மட்டுமே பிரதிபலன் எதிர்பாராத அறிமுகமற்ற மனிதர்களின்
பேரன்பை நாம் தரிசிக்கக் காரணமாயிருக்கிறது. எல்லைகளின்
விரிவென்பது நமக்களிக்கும் கிளர்ச்சியும், தீர்ந்துவிடாமல் நம் முன்னே
நீண்டு செல்லும் பாதைகள் நமக்களிக்கும் மகிழ்வும், அதனுள்
பொதிந்திருக்கும் சாகசவுணர்வும்தான் பயணம் பற்றிய உயர்வு
நவில்தல்களின் பிரதான காரணியாக இருக்கிறது. ஆனால் பயணத்தை
தொழிலாகக் கொள்வது இவற்றினின்றும் வேறுபட்டது.
சேருமிடங்களை உறுதியாக அறிந்த திரும்புதலின் நிச்சயத்தோடு
நிகழ்த்தப்படும் பயணங்களுக்கும் திரும்புதலில் நிச்சயமின்மையோடு
நிகழும் பயணங்களுக்குமான வேறுபாடு அளப்பரியது. முன்னையதில்
பெருமகிழ்வும் குறைந்த அனுபவங்களும் பின்னயதில் நிறைந்த
அனுபவங்களும் குறைந்த மகிழ்வும் சொல்லப்போனால்
அலைக்கழிப்பும் மிகுந்திருக்கும்.
நான் கடந்து வந்த பயணநூல்களில் அதிகமானவை வாசிப்பதற்குச்
சலிப்பேற்படுத்துவன. அதில் பெரும்பாலானாவை பயணவழிகளில்
எடுக்கப்பட்ட புகைப்படங்களின் அடிக்குறிப்புக்களைச்  சற்றே விரித்து
எழுதப்பட்டவை. பயணத்தின் நெகிழ்ச்சியினையும், அது தரும்
அனுபவத்தின் நீட்சியினையும் தம் சொற்களின் வழி
கடத்தத்தவறுபவை. தமிழில் என் வாசிப்பெல்லைக்குள் நான்
அதிகமும் ஆச்சரியத்துடன் நேசிக்கும் இரண்டு பயணநூல்கள்
எஸ்.ராமகிருஸ்ணனின் தேசாந்திரியும்,நரசய்யாவின் கடலோடியும்.
வாசிப்பும் ஒரு வகையில் பயணம் தானே ஒரு புத்தகம் உண்மையில்

நம்மை இன்னொரு புத்தகத்திற்கு அழைத்துச் செல்கிறது. அப்படித்தான்
எஸ்.ராவின்  தேசாந்திரி எனக்கு கடலோடியை அறிமுகம் செய்தது.
தேசாந்திரியில், கடலோடியைப் படித்த பின்னர் தான்
லோனாவாலாவுக்குப் போனதைக்குறித்து எஸ்.ரா எழுதியிருப்பார்.
எனக்கும் லோனாவாலாவுக்குப் போகத்தான் ஆசை ஆனால்
கடலோடியைத் தேடி வாசிக்கத்தான் முடிந்தது. கலாபனின் கதையும்
நரசய்யாவின் கடலோடியைப் போலவே பயணத்தைத் தொழிலாகக்
கொண்டவரால் எழுதப்பட்டது. படைப்பாளியின் அனுபவமுழுமையும்
மொழியின் ஆளுமையும் கலந்துறையும் சொற்களே வாசகமனத்தில்
நிரந்தரமான இடத்தை அடைகின்றன.
தேவகாந்தனின் சொற்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமானவை.
ஆனால் இதமானவை அல்ல. அவரது எழுத்துக்கள்
காட்சிப்படுத்தியிருக்கிற வாழ்வின் சித்திரங்கள் மிகவிரிவும் கனதியும்
மிக்கவை. ஈழம் சார்ந்து தமிழில் அதிகம் பேசப்படும் அல்லது
பேசப்பட்ட நாவல்கள் அதிகமும் முப்பத்துச் சொச்சம்
இயக்கங்களினதும் அரசியல் செயற்பாடுகளைப் பின்புலமாகக்
கொண்டே எழுதப்பட்டிருக்கின்றன.  சாதாரண மனிதரின்
வாழ்வென்பதைத் தொட்டுக்கொண்டு இயக்கங்களைப் பற்றி அல்லது
தத்தம் அரசியல் நிலைப்பாடுகள் சார்ந்து எழுதப்பட்ட அரசியல்ப்
பிரதிகள் அவை. ஆனால் தேவகாந்தனின் பிரதிகளோ அல்லலுறும்
சராசரிகளின்; வாழ்வைச் சுமந்து செல்பவை. எதிர்கால வரலாற்று
மாணவர் ஒருவர் ஈழப்போரின் காலக்கோட்டை அறிந்து கொள்ளும்
நோக்கிலும் எளியமனிதனின் வாழ்வில் அது ஏற்படுத்திய
மாற்றங்களை அறிந்து கொள்ளும் நோக்கிலும் அமைந்த ஓர்
இலக்கியப்பிரதியைத்  தேடும்போது சமகாலத்தின் சர்ச்சைகளினால்
அதிகம் முன்னிறுத்தப்பட்ட நாவல்களைக் கடந்து தேவகாந்தனின்
நாவல் பிரதிகளே அதிகம் பயனுள்ளவையாய் இருக்கும்.  வரலாற்று
மாணவர்கள் போர் கொய்தும் குலைத்தும் போட்டசாதாரணக்
குடும்பங்களினது சிதைவின் காலக்கோட்டை  தெளிவாக அவரது
எழுத்துக்களில் கண்டுணர்வர்.
ஆனால் கலாபன் கதை இதனின்றெல்லாம் விலகி தன் குடும்பத்தின்

ஈடேற்றத்திற்காய் தன்னை ஆகுதியாக்குகின்ற,
திரைகடலோடித்தன்னும் திரவியம் தேடித் தன் குடும்பத்தினை
நிமிர்த்த முனைகிற ஒருவனின் கதை. வெளிப்படையாக
ஒத்துக்கொள்ளாவிட்டாலும் நம்மில் பெரும்பான்மையினருக்கு
மேலைநாடுகளுக்கான புலப்பெயர்வின் அடிப்படைக் காரணம் திரவியம்
தேடலே. கௌரவப் பொய்கள் சொல்லுவதில் வல்லவர்களான நாங்கள்
போரை முன்னிறுத்தி அதனை மூடிமறைத்துக்கொண்டோம்.
உண்மையில் ஏஜென்சிக்கு காசைக் கட்டி வெளிநாட்டுக்கு வருவதற்கு,
நமக்கிருக்கும் கனவுகள் மற்றும் பொறுப்புக்களே முதன்மைக் காரணம்.
அது உடன்பிறந்தவர்களின் வளர்ச்சியாகவோ, ஊரில் ஒரு வீடாகவோ,
அல்லது படலை வரை வந்து அவமானப் படுத்தும் கடனாகவோ
 எதுவாகவோ இருக்கலாம். முதல் தலைமுறையில்
புலம்பெயர்ந்தவர்கள் இக்கூற்றை அதிக நெருக்கமாக உணர்வார்கள்
என்று நான் நம்புகிறேன். அதற்காக புலப்பெயர்வின் பின்னால்
இருக்கும் அரசியல் காரணங்களை நான் முழுவதுமாக
நிராகரிக்கவில்லை அநேகருக்கு அது உயிர்பிழைப்பதற்காக ஒரே
வழியாகவும் இருந்ததுதான்.
ஆனாலும் நான் இந்தியாவில் இருந்தபோது என்னைக் குடைந்து
கொண்டிருந்த ஒரு கேள்வி எனக்கு நினைவுக்கு வருகிறது. அகதி
என்ற சொல்லுக்குள் எத்தனை ஏற்றத்தாழ்வுகள். இலங்கையில்
இருந்து வெளியேறி தமிழகத்தின் அகதி முகாம்களுக்குள்
இருப்பவர்களும், வெளிப்பதிவில் ஒரு சிறிய வாடகை வீட்டில்
இருப்பவர்களும், நீலாங்கரையின் கடல்பார்த்த வீட்டிலோ அல்லது
அண்ணாநகரின் சொகுசு அடுக்குமாடிகளிலோ வசிப்பவர்களும்,
ஏஜென்சிக்கு ஆயிரக்கணக்கான டொலர்களைக் கட்டி மேலை
நாடுகளில் புலம்பெயர்ந்து வசிப்பவர்களும் எப்படி அகதி என்ற ஒரே
சொல் அளவீட்டில் அளக்கப்பட முடியும். இத்தனை வேறுபாடுகளுக்கும்
பின்னால் உயிர்பிழைத்திருத்தல் என்ற ஒற்றைக்காரணம் மட்டும்தான்
உள்ளதா? எனக்கென்னவோ திரவியம் தேடுதல் என்கிற காரணம்
உள்ளுறைந்தேயிருக்கிறது என்றுதான் இற்றைவரைக்கும்
தோன்றுகிறது.

மேற்குலக நாடுகளில் தஞ்சமடையும் முன்னதாக நம்முன் திரவியம்
தேடும் வாய்ப்புகளாக  இருந்தவை வளைகுடா நாடுகளில் வேலை
செய்வதும் ,அதிகபணமீட்டும் வேறு வேலைகளைக் கண்டடைவதும்.
அப்படியான அதிகச் சம்பளம் கிடைக்கக் கூடிய ஒரு வேலைதான்
கப்பலில் வேலை செய்வது. 90 களின் இறுதி வரைக்குமே கூட
ஊருக்கொரு கப்பல்காரர் வீடும், கப்பல் காரரும் இருந்திருப்பார்கள்.
இப்போது கப்பல்க்கார வீடுகள் மட்டும் இருக்கும் கப்பல்காரர்
கனடாக்காரராகவோ, லண்டர் காரராகவோ பரிணாம வளர்ச்சி
அடைந்திருப்பர். கலாபன் கதையைப் படிக்கத் தொடங்க எங்கள்
வீட்டிற்கு மூன்று வீடுகள் தள்ளியிருந்த கப்பல்காரர் வீடும்,கப்பல்
காரரும் எனக்கு நினைவிலெழுந்தனர். மேவியிழுக்கப்பட்டு
கழுத்துவரை நீண்ட தலைமுடியுடன் உச்சிவெயில் மண்டையைப்
பிளக்கும் போதும் டெனிம்ஜீன்சும் சப்பாத்துமாய்
விலாசமெழுப்பித்திரியும் அவரைத்தான் நான் கலாபனாக
வாசித்துக்கொண்டிருந்தேன். உங்களில் பலருக்கும் கூட  ஒரு கப்பல்
காரரைத் தெரிந்திருக்கக் கூடும். ஆனால் என்னுடைய
அம்மம்மாவுக்கோ அந்த வீடு கப்பல்காரர் வீடாக மாறுவதற்கு
முன்பாகயிருந்த பொயிலைக்காராச்சியின் வீடாகத்தான் சாகும்
வரைக்கும் இருந்தது. ஆக எங்கள் வீட்டுக்கு முன்னாலிருந்த
கலாபனின் கதைச்சுருக்கமென்பது பொயிலைக்காராச்சியின்
வீடாயிருந்ததை கப்பல் காரர் வீடாகத் தரமுயர்த்தியதே.
தேவகாந்தனின்  கலாபன் செய்ததும் அதுதான். ஒரு வீட்டைக்
கட்டிவிடுவதற்காகவும் சமூகத்தில் தன் குடும்பத்தின் அந்தஸ்தை
சற்றே உயர்த்திவிடுவதற்காகவும் அவன் கடலோடியானான்  பயணம்
அவனது தொழிலாகிறது. அப்பயணம் அவனுக்குள் விளைவித்ததென்ன.
அவன் மீறிய கட்டுப்பாடுகள் என்ன? அதற்காய் அவன் கொடுத்த
விலையென்ன அதைத்தான் ஒவ்வொரு அத்தியாயத்திலும்
தேவகாந்தன் எழுதிச் செல்கிறார்.
நிலவும் நட்சத்திரங்களுமற்ற வானைப் பார்த்தபடி கலாபனின்
முதற்பயணம் ஆரம்பிக்கிறது.   கப்பல் பல்வேறு நாடுகளின்
துறைமுகம் தோறும் போகிறது. போகும் வழியெங்கும் மது

துறைமுகம் தோறும் பெண்கள் கலாபன் ஒரு சல்லாபனாக
இருக்கிறான். ஆணின் காமம் இந்நாவலில் விரிவாகப் பேசப்படுகிறது.
உண்மையில் கலாபனின் கப்பல் பயணங்கள் துறைமுகங்களுக்குப்
போகின்றனவா அல்லது அக்கரையில் இருக்கும் பெண்களிடம்
போகின்றனவா என்கிற சந்தேகமே வாசகருக்கு வராத வண்ணம்
அவை பெண்களிடமே போய்ச் சேருகின்றன. அதற்குச் சில நேரங்களில்
தசைப்பசி, சில நேரங்களில் மனைவியிடம்  மனதால் அவன்
பிணங்கியிருப்பது என வெவ்வேறு காரணங்கள். துறைமுகம் தோறும்
அவன் சேரும் பெண்கள் உடலை மீறிய பிணைப்பினைக் கலாபனோடு
ஏற்படுத்தவிரும்புகிறவர்களாயும் கலாபன் அவற்றை
நிராகரிப்பவனாயும் இருக்கிறான். ஆனால் அவனது ஆழ்மனம்
அவ்வுறவை விரும்பத்தான் செய்கிறது. என்னதான் குடும்பத்துக்காய்
சமுத்திரத்தில் துரும்பெனவலைந்து கொண்டிருந்தாலும் அவனது
மனைவி அவனுடைய தியாகத்திற்கும்  உழைப்பிற்கும் உரிய
மரியாதையை தரத்தவறுவதாயே கலாபனின் மனம் விசனப்படுகிறது.
தான் குடும்பத்தோடு செலவிடாதிருக்கும் நேரத்தின் மதிப்பை விஞ்சி
நிற்கும் கட்டப்படும் வீட்டின் மதிப்பு கலாபனை உறுத்துகிறது. நீங்கள்
எங்களோடே இருந்துவிடுங்கள் கப்பலுக்கு ஏன் போகிறீர்கள் என
மனைவி கேட்கவேண்டும் என அவன் நினைக்கிறான் அவளோ வீடு
கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது ஏன் கப்பலுக்குப் போகாமல்
இருக்கிறீர்கள் எனக் குற்றம் சுமத்துகிறாள். இது கலாபனைச் சுடுகிறது.
 இந்தக்கீறல் துறைமுகம்தோறும் காமமெனத் துய்த்துத்
தணிக்கப்படுகிறது.
இந்த நாவல் கலாபன் எனும் ஒற்றைப்பாத்திரத்தைப் பிரதானமாகக்
கொண்டு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அப் பாத்திரத்தினூடு கதையாடும்
மனிதர்கள் அத்தியாயத்துக்கு அத்தியாயம் வேறுபடுவர். அவர்களது
நிலமும்,காற்றும்,கடலும்,அரசியலும் கூட வேறுவேறானவை. இது
கப்பலில் பயணித்துக் கொண்டிருப்பவர்களுக்கிடையிலான
உறவுகளைச் சொல்லும் நாவலாக அல்லாமல், கடலில்
அலைந்துகொண்டிருந்தாலும் கரையே தன் நினைவாய்க் கிடக்கும்
மனிதனைக் குறித்தது. அதனால் கடலின் வெவ்வேறு

கதைகளிற்கிடையில் மிதந்துசெல்லும்  இந்நாவல் அதன்
கதைமாந்தர்களுக்கிடையிலான தொடர்பற்ற தொடர்பினால்
கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அத் தொடர்பற்ற தொடர்பே
இக்கதைசொல்லியின் புதிய நாவல் உத்தியாய் மாற்றம் பெறுகிறது.
தாய்லாந்தில் இருக்கும் லேக் என்னும் பெண்ணும்  பம்பாயிலே
ஷெரின் என்னும் பெண்ணும் கலாபனின் பார்வையில் ஒருத்திதான்.
 ஒருத்தி என நான் சொல்வது பெண்ணுடல் என்கிற அர்த்தத்தில்
அல்ல. கலாபன் லேக்கிடம் கொடுக்க மறந்த ஒரு பரிசை பம்பாயில்
ஷெரினிடம் கொடுக்கிறான். ஷெரினிடம் காட்ட மறந்த அன்பைக்
கொலம்பியாவில் வேறொருத்தியிடம் பகிர்கிறான்.  நாவலின்
பின்னட்டையில் சொல்லப்பட்டிருப்பதைப் போல இந்நாவலின்
ஒவ்வொரு அத்தியாயமும் தனித் தனிக் கதைகள்தான்.
அக்கதைகளிற்கு இடையேயான இடைவெளிகளை நிரப்பும் கலாபன்
என்னும் ஒற்றைப்பாத்திரமும், அவற்றின் உள்ளோடும் ஆத்மார்த்தமான
ஒத்தவியல்புகளும் கலாபன் கதையை ஒரு நாவலாக்கி நிற்கின்றன.
சாகசமும்,உயிர்ப்பயமும்,தீராக்காமமும்,பிரிவின் வீச்சமுமாய்
அலைக்கழியும் கலாபனின் மனதினை எழுத்துகளின் வழி
சித்தரித்திருக்கிறார் தேவகாந்தன். நிலவும் நட்சத்திரங்களுமற்ற
வானத்தை கேபின் கண்ணாடிவழியாகப் பார்த்தபடி நிலம் நீங்கிய
கலாபன் அவன் பயணத்தின் போது எவ்வாறான வளர்சிதை
மாற்றங்களுக்குள்ளாகிறான் என்பதே இந்நாவலின்
ஆன்மாவாயிருக்கிறது. எஞ்சின் அறையில் ஒளிந்துகொண்டு வரும்
ஆபிரிக்க அகதிக்கு தாகம் தணிக்கத் தண்ணீர்ப்போத்தலை அருள்கின்ற
போது அவன் காருண்யனாகிறான், மும்பை கோழிவாடாவில் பாலியல்
தொழிலில் சிக்கிக்கொண்ட சிறுபெண்ணை அங்கிருந்து தப்புவிக்கும்
போது அவன் சாகசக்காரனாகிறான், இன்பம் துய்க்கச் சென்ற இரவில்
கொலம்பியப் பெண்ஒருத்தி கபிரியேல் கார்குவா மார்க்வேஸ் பற்றி
இரவுமுழுவதும் பேசக் கேட்டுக்கொண்டிருக்கும் போது
ஞானியாகிறான், கம்பஹாவில் சிங்களக்காடையரிடம் இருந்து
சுமத்திரா எனும் தேவதை தன் உயிரைப் பணயம் வைத்து இவன்
உயிரைக் காக்கையில் கலாபன் புதிதாய்ப் பிறக்கிறான். இத்தனை

கொழுத்த அனுபவங்களும்  பயணம் அவனுக்களித்த பரிசு. பயணம்
ஒரு மனிதனின் இதயத்தை எவ்வாறு விசாலிக்கச் செய்கிறதென்பதை
கலாபனின் கதை வழியே எழுதிக்காட்டுகிறார் தேவகாந்தன்.  
இந்நாவலை வாசித்து முடித்ததும் சில ஆண்டுகளுக்கு முன்னர்
பார்த்திருந்த பத்தேமாரி என்னும் மம்முட்டி நடித்த
மலையாளப்படமொன்று நினைவுக்கு வந்தது.(கள்ளத்தோணி என்பது
அச்சொல்லின் தமிழர்த்தம் என நினைக்கிறேன்) குறிப்பாகப் அந்தப்
படத்தின் இறுதிக்காட்சியைச் சொல்லவேண்டும் தன்னைத்
தொலைத்துத் தன் குடும்பத்தினரின் நலன்களுக்காகவும்
தேவைகளுக்காகவும் முதுமைவரை வளைகுடா நாடொன்றில்
உழைத்துக்கொண்டேயிருக்கும் நாராயணண் எனும் மனிதன்
இறுதியாகக் கட்டிமுடித்திருக்கும் இதுவரை குடிபோயிராத  வீட்டுக்கு
பிணமாகக் கொண்டுவரப்படுவான். ஆனால் வாழப்போகிற புதிய
வீட்டில முதல் முதலாகப்; பிணத்தையா வைப்பது என்கிற உறவுகளின்
விசனமும், அப்படி வைத்தால் வீடு அதன் சந்தைமதிப்பையிழக்கும்
என்பதாலும் அவன் உறவுகள் அவனது பிணத்தை அவனது உதிரத்தில்
உருவாகிய வீட்டுக்குள் எடுத்துச்செல்ல மறுத்துவிடுவர். கலாபனும்
ஒருவகையில் நாராயணணைப் போலத்தான். நாவலின் ஓரிடத்தில்
கலாபன் தனது நண்பனிடத்தில் குடும்பத்திற்காக சூட்கேஸ்களைக்
கொடுத்தனுப்புவான் அப்போது கலாபனின் குழந்தைகள் சூட்கேசைக்
கொண்டுவரும் நண்பனிடம் அப்பா எங்கே எனக்கேட்பார்கள். அப்போது
கலாபனின் மனைவி சொல்லுவாள் “அப்பா வேறையெங்கே
இருக்கப்போகிறார் சூட்கேசுக்குள்ளதான்”. இந்த யதார்த்தம்
ஏற்படுத்தும் வலிதான் கலாபனை அவன் பயணமெங்கும்
விரட்டுகிறதாய் எனக்குத்தோன்றும். இன்றைக்கு போர்
எங்களையெல்லாம் மேலைநாடுகளில் நிலைகொண்டு வேரூன்றச்
செய்திராவிட்டால் குடும்பத்துக்கொரு கலாபனை ஈழத்தமிழ்ச்சமூகமும்
கொண்டிருந்திருக்கும் என்பதுதான் கசப்பான உண்மை.

அறஞ்செய விரும்பும் சொற்கள்

Posted by த.அகிலன் on Mar 29th, 2019
2019
Mar 29

நம் மனதிற்கினிய பெரும்பாலானவற்றை பிரியநேர்ந்த கதை நம் எல்லோரிடமும் உள்ளது. ஓர் அடிவளவு நாவலோ, சைக்கிளின் அரவத்துக்குத் துள்ளித்தாவுகின்ற ஜிம்மியோ, வானவில் கனவுகளால் எண்ணங்களை நிரப்புகிற குடைவெட்டுப்பாவாடையொன்றின் விளிம்புகளோ, மடிப்புக்கலையாத முழுக்கைச்சட்டையின் நேர்த்தியோ, குளத்தடியோ, கடைத்தெருவோ ஏதோ ஒன்று நம் எல்லோருடைய இதயத்திலும் பிரதியிடப்படமுடியாத நினைவுகளால் நிரம்பியிருக்கிறது.

புலப்பெயர்வின் இரண்டாம் தலைமுறை தோன்றத் தொடங்கியிருக்கும் இந்தச் சூழலில் நனவிடை தோய்தலின் அவாவும் கனதியும் தேய்ந்தடங்கி வருகிறது அல்லது அது குறிப்பிட்ட முதல் தலை முறைக்குரியதாக மட்டும் மட்டுப்படத்தொடங்கியிருக்கிறது. நம் திருவிழாவையும் கொண்டாட்டத்தையும் ஏன் நம் மொழியையும் கூட அடுத்த தலைமுறையிடம் கொடுப்பதற்குத் திணறி வருகிறோம். நாம் இன்றைக்கிருக்கிற தஞ்சமடைந்த நிலத்தை தன் சொந்த நிலமாகக் காணுகின்ற ஒரு தலைமுறை உருவாகிவிட்டிருக்கிறது. இந்த வகையில் மெல்ல மெல்ல இந்த ஈழத்தமிழ்ச் சமூகம் தன்னை புலம்பெயர் நிலத்தில் ஊன்றிக்கொள்ளும் செயன்முறையைப் பதிவுசெய்யும் கதைகளாகவே பார்த்திபனின் கதைகளை நான் காண்கிறேன். மத்திய கிழக்குப்பயணத்தில் தொடங்கி ஐரோப்பா, அமெரிக்க கண்டங்களையடைந்த ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வின் ஆரம்பநாட்களை பார்த்திபனின் சொற்கள் படைக்கின்றன. இடைநடுவில் கைவிட்டுச் செல்கின்ற ஏஜென்சிக்காரர்களை, நாடுவிட்டு நாடுதாவி அடையாளமற்று இறந்துபோன மனிதர்களை, இழவையும் தொழிலாக்கிச் செழித்த மனிதர்களை பார்த்திபனின் கதைகளில் காணலாம். புலப்பெயர்வின் வரைபடத்தை தன் சொற்களின் வழி எழுதிச்செல்லும் கதை சொல்லி அவர்.

பார்த்திபனை நான் நேரடியாக அறிந்தவனில்லை. ஒரு சொல்லுத்தானும் தொடர்புச் சாதனங்களின் வழியேனும் பேசியவனில்லை. ஆனால் பார்த்திபனை நான் அறிந்தேயிருந்தேன். அவரது நண்பர்கள் வழி. அவரது சமூகச் செயற்பாடுகள் வழி. பார்த்திபன் குறித்த சித்திரமொன்றை நான் உருவாக்கிவைத்திருந்தேன். அந்தச்சித்திரம் நான் கதை தொகுதியைப் படிக்கும் போது தன் வண்ணங்களைத் தானே தீட்டிக்கொண்டது. நான் மொழியறிவதற்கு முன்னரேயே புலப்பெயர்வின் சுவை அறிந்த வாழ்வு பார்த்திபனுடையது. 83 ல் பிறந்த நான் அவர் 84ல் எழுதிய கதையை கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்கள் கடந்த பின்னர் வாசிக்கிறேன். நான் தவழும் முன்னரே குலையத்தொடங்கிய தமிழ் மனிதர்களின் வாழ்வை எழுதிச்செல்லும் பார்த்திபனின் கதை தொகுப்பு தன் காலக்கடிகாரத்தின் வழி என்னைப் பின்னோக்கி இழுத்துச்செல்கிறது. தசாப்தங்களுக்கு முன்னரான அவர்களது வாழ்வை, தத்துவக்குழப்பங்களை, எண்ணியதை எண்ணியபடி வாழமுடியாக் கோபத்தை, அடையாள இழப்பின் தத்தளிப்பை, போலிகளின் இடையில் நசிவுறும் வாழ்வின் புழுக்கத்தை இந்தப்பயணத்தில் அது எனக்குக் காட்டியது. பார்த்திபனின் கதைகளில் சொற்களின் வாணவேடிக்கையும் இல்லை அதே வேளை சொற்களின் வாரியிறைப்பும் இல்லை. சிலவேளைகளில் நம்மைக் கவரும் சொற்களாயில்லாதிருந்தாலும் கூட சிக்கனச் சொற்களால் சொல்லப்படும் கதைகள் அவருடையன.

இன்றைக்கு இருபது வருடங்களுக்கு முன்பாக 1998 ல் பார்திபனின் மிகவும் முக்கியமான கதைகளில் ஒன்றான தீவு மனிதன் எழுதப்படுகிறது. புத்தாயிரத்துக்குள் வேகமாக நுழைந்துகொண்டிருந்த மனிதகுலம் தன் சகமனிதனை எப்படிக் கைவிட்டுச் செல்கிறது என்பதையும், சக மனிதன் மீதான பரிவை உதறிக்கடக்கும் சுயநலத்தின் வெம்மை தாங்காது உள்ளொடுங்கும் ஒரு தீவு மனிதனைக் குறித்த கதை அது. மீள மீளத் தன்னை வஞ்சிக்கும் உலகத்திடமிருந்து தப்பித்து உள்ளொடுங்கும் உயிரியாகத் தன்னை மாற்றிக்கொள்ள நிர்ப்பந்திக்கப்படும் மனிதன் அவன். இன்றைய யதார்த்தத்தில் நாம் அனைவரும் தீவு மனிதர்களே. புதிரான நம் உலகத்தின் மிகப்பெரிய புதிரே நம் சகமனிதனின் மெய்யான முகம் எதுவென்பதுதான்.ஆக தீவு மனிதன் எழுதப்பட்ட காலத்திலும் பார்க்க இப்போது அது இன்னும் செறிந்த அர்தத்தத்துடன் மீளவும் படிக்கவேண்டிய கதையாகிறது. சிறந்த படைப்பென்பது நீளும் காலம்தோறும் காலவதியாகாது தன்னைப் புதுப்பித்தபடியே இருக்குமொன்றுதான் – அந்த வகையில் பார்த்திபனின் இந்தக்கதையும் தன்னைப்புதுப்பித்தபடியிருக்கிறது.

நம் சமகாலம் மெய்நிகர் உறவுகளின் காலமாக இருக்கிறது. அன்பை வெளிப்படுத்த, அரவணைக்க, கோபம் காட்ட, வஞ்சம் தீர்க்க,பெருமையைப் பீற்றிக்கொள்ள, சவடால் விட, காமம் தணிக்க நம்மிடமிருந்த அன்பின் வழியான பழைய முறைகள் அத்தனையும் காலாவதியாகிவிட்டன. இன்று இணையம் கட்டமைத்த மெய்நிகர் உலகத்துச் சமூகவலைத்தளத்தின் திறந்த வெளியிலேயே இவை அனைத்தும் நிகழ்ந்து முடிகிறது. ‘மனிதர்கள் தனிவிதம் அவர்தம் சோசியல் மீடியா ஐடி-க்கள் பலவிதம்’ என்றவாறான சமகாலத்தில் நாங்கள் வாழநேர்ந்திருக்கிறது. ‘அன்பு பாதி,அழுக்குப் பாதி’ என்றிருந்த நம்முடைய முழுமையான அடையாளம், இன்று அன்புக்கு ஒரு ஐடியும், அழுக்குக்கு ஒரு ஐடியுமாக இரண்டாகப் பிரிந்திருக்கிறது. இந்த உலகம் தன் சுயத்தை இழக்கவிரும்பாத வஞ்சகர் உலகத்தின் சூட்சுமங்களை விலத்தி நடக்கும் வித்தைதெரியா மனிதர்களைத் தீவு மனிதர்களாக்கித் தண்டிக்கிறது. சக மனிதனின் மெய்யான தோற்றத்தை கண்டடைய இன்றைக்கு நம் காலம் நம்மிடம் மேலதிக உழைப்பைக் கோரிநிற்கிறது. இயல்போடிருத்தல் என்பதே அதிகமும் மனஉழைச்சலைத் தருவதாயுள்ளது. வதைபடாதிருக்க தீவு மனிதர்கள் முன்னிருக்கும் ஒரே தெரிவு உள்ளொடுங்குதல் என்பதே. அதைக் கடப்பது எப்படி என்கிற உரையாடலை நம்மிடையே தொடங்கவேண்டியதன் அவசியத்தை உருவாக்கியிருக்கிறது தீவு மனிதன் என்ற சிறுகதை. இலக்கியம் என்பது சமூகத்தின் விகாரங்களிடமிருந்து விலகி நடக்கும் வழிகளை மனிதனுக் சொல்லித்தரும் ஒன்றென்றால் நம் உள்ளங்கைகளிலே நம்மைச் சிறைப்படுத்தியிருக்கும் திறன்பேசித் தீவுகளுக்குள் ஒடுங்கிக் கொண்டிருக்கும் நம்மிடம் நாம் பயணிக்கும் வழி சரியானதுதானா எனக்கேள்வியெழுப்பும் பார்த்திபனின் சொற்கள் இலக்கியமன்றி வேறென்ன?

பார்த்திபனின் கதைகளில் ஒரு கொள்கை பரப்பாளரின் தொனி இடையிடையே வந்து சேர்கிறது. பார்த்திபன் என்கிற எழுத்தாளர் பாத்திரங்களாக மாறிக்கதைசொல்வதற்குப் பதிலாக பாத்திரங்கள் பார்த்திபனாக மாறித் தொலைக்கிறது சில சந்தர்ப்பங்களில். அதனால் தானோ என்னவோ எழுதுபவரும் ஒரு பாத்திரமாயிருப்பார் அவரது சில கதைகளில். தன்பாத்திரங்களைப் பற்றி, அல்லது கதைகள் பற்றி அதை வாசிப்பவருக்கு வரக்கூடிய அபிப்பிராயங்களுக்கு அவர் கதைகளுக்குள் உட்புகுத்தும் எழுத்தாளப் பாத்திரங்கள் வழி பதில் சொல்ல முற்படுகிறார் என்று தோன்றியது. சில கதைகளுக்குள் கதை எழுதுகிறவர் நுழைந்து கொண்டிருப்பது உறுத்திக்கொண்டிருந்தாலும் தனியே அதையும் கூட வெற்றிகரமாக ஒரு சிறுகதையாக எழுதிக்காட்டியும் இருக்கிறார் பார்த்திபன். ‘மூக்குள்ளவரை’ என்ற தலைப்பில் ஒரு அட்டகாசமான கதை அது. இலக்கியத்தின் போலித்தனங்களை, ஒன்று எழுத இன்னொன்றாகப் புரிந்து கொள்ளப்படுதலை, தனக்குத்தானே பட்டமளிக்கும் இலக்கியவியாதிகளை, அரசியல் நீக்கம் செய்யப்பட்ட எழுத்துக்களை என, கதை எழுதப்படும் விதத்தை சமையல் குறிப்பை எழுதுவது போல எழுதிச்செல்லும் பார்த்திபனின் எள்ளலான மொழியும், சம்பவங்களும் சேர்ந்து அதுவொரு முழுமையான கதையாய் சமகால எழுத்துலகின் மீதான விமர்சனமான சிறுகதையாய் பரிமளித்திருக்கிறது.

ஈழத்தமிழர்கள் அரசியல் பிராணிகள்; ஈழத்தமிழ் எழுத்தென்பது முழுக்க முழுக்க அரசியலால் இயங்குவது. பார்த்திபனுக்கும் அரசியல் இருக்கிறது. அது அம்மாக்களின் அரசியலாய் இருக்கிறது என்பதுதான் ஆறுதலானாது. எதிரி, துரோகி, தியாகி அரசியலுக்குள் சிக்கிக் கொள்ளாத கதைசொல்லியாக அவர் இருக்கிறார். அவர் இந்த சூழலில் எஞ்சியிருக்கும் அரசியலை ‘கோதாரி விழுந்த’ அரசியலாகவும், ‘நாசமாய்ப் போன’ அரசியலாகவும் தான் கடக்கிறார். ஆக அவர் கொண்டிருக்கும் அரசியலென்பது. மகனின் நைந்து போன பழைய சறமொன்றைத் நினைவெனத் தலைக்கு வைத்துப் படுக்கும் அம்மாக்களின் அரசியல். அதையே அவர் ‘அம்மாவும் அரசியலும்’ என்ற கதையிலும் எழுதிச் செல்கிறார்.

பார்த்திபனின் கதைமாந்தர்கள் நம்மிடையே வாழ்பவர்களே, ஏன் சொல்லப்போனால் நானும் நீங்களுமே. நம்மில் அநேகர் செய்வதைப்போல குற்றவுணர்வின் தவிப்பும், சரிக்கும் பிழைக்குமிடையிலான தத்தளிப்புமாக வாழ்வைக் கடத்தநேர்கிறவர்களே. அடிமனத்தில் எப்போதும் அநீதிகளுக்கெதிராகப் பொங்குகிறவர்களாகவும் அதனால் ஏற்படப்போகும் பக்கவிளைவுகள் படமெடுத்தாடப் பின் பொங்கியதைத் தண்ணியூத்தி அணைத்துவிட்டுப் பம்முகிறவர்களாகவும் இருக்கிறார்கள். ‘ஒருதொழிலாளியும் ஒரு தொழிலாளியும்’ என்ற கதையில் ஒரு குர்திஸ் தொழிலாளி வெளியில் தன் மக்களுக்காக வேலை செய்வதற்காக தொழிற்சாலையில் மேலதிக நேரம் வேலைசெய்ய மறுப்பதால் முதலாளி அவனை வேலையில் இருந்து நீக்குவார். தன் சகதொழிலாளியான குர்திஸ்காரனுக்கு ஆதரவாக குரல்கொடுப்பதே சரியெனத் தெரிந்திருந்தும் தமிழ்த் தொழிலாளி முதலாளியைப் பகைத்துக்கொள்ள விரும்பாமல் பேசாமலிருப்பான். இவ்வகையான இயலாமையின் விம்முதலே இப்படைப்பாளியின் குரல். இப்படியான பாத்திர வார்ப்புகளின் வழி நாங்கள் கடக்கவேண்டிய மௌனத்தை, சாதாரணன் தவிர்க்கமுடியாதிருக்கும் இயலாமையைத் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கியபடியிருக்கிறது பார்த்திபனின் கதைகள்.

அது மட்டுமல்ல அவருடைய கதைமாந்தர்கள் சமூகத்தின் நோய்க்கூற்று மனநிலையையும் சுமந்தலைகிறார்கள். உதாரணமாக ‘வந்தவள் வராமல் வந்தாள்’ என்ற கதையில் கதைசொல்லியின் தங்கை ஏஜென்சிக்காரர்களால் ஜேர்மனிக்கு அழைத்துவரப்படுவாள். அவளுக்குப் பேசி வைத்திருந்த மாப்பிள்ளை ஏஜென்சிக்காரர்கள் கொண்டு வாற வழியில் எல்லாவற்றையும் முடித்துவிட்டுத்தான் கொண்டு வருவார்கள் என்கிற ஊர்க்கதையை நம்பி அவளைத் திருமணம் செய்ய மறுத்துவிடுவான். ஈழத் தமிழ்ச்சமூகம் இப்படியான குருட்டு நம்பிக்கைகள் பலவற்றைச் சுமந்தலைகிறது. இந்தக்கதையைப் பார்த்திபன் 1995ல் எழுதுகிறார். 95ல் ஏஜென்சிக்காரன் எல்லாத்தையும் முடிச்சிருப்பான் என்று கலியாணம் கட்ட மறுத்த இந்தச் சமூகம், அதிலிருந்து கொஞ்சமும் தன்னை மாற்றிக்கொள்ளாமல், 2009ல் வன்னியிலிருந்து பெண் எடுக்கமாட்டோம் ஆமி எல்லாத்தையும் முடிச்சிருப்பான் என்று கெக்கட்டமிட்டது.

அதற்கும் ஏறத்தாழ ஒன்பது வருடங்கள் கழித்து தன்னுடைய 14 வருட வாழ்வை இயக்கத்திலும் 4 வருடங்களை இலங்கை இராணுவத்தின் சிறையிலுமாய்த் தின்னக்கொடுத்த என் நண்பர் ஒருவருக்கு நண்பர்களின் ஏற்பாட்டில் ஐரோப்பாவில் வாழும் தமிழ் மணமகள் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆனால் புனர்வாழ்வுக்காரர் எல்லாருக்கும் விசஊசி அடிச்சுப்போட்டாங்கள் என்கிற பச்சை உண்மை தமிழ்ச் சமூகத்தில் தீயெனப்பரவியபோது அவரது திருமணம் நின்று போனது. அந் நண்பர் ‘நாப்பது வயதுக்குமேல் நாய்படாப் பாடென்பது உண்மைதான் மச்சான்’ எனச்சொல்லிச் சிரித்தபோது. சொற்களற்ற இரைச்சலால் தொலைபேசி நிறைந்தது.

உண்மையில் சமூகத்தின் இந்த நோய்க்கூற்று மனநிலையின் மீதான வெறுப்பே பார்த்தீபனின் எழுத்தை எழுதிச் செல்கிறது. 1995ல் எழுதப்பட்ட பிரதியின் பாடுபொருள் தசாப்தங்கள் தாண்டியும் பதிலளிக்கமுடியாத கேள்விகளை எழுப்பவல்லதாயிருப்பதே அப்பிரதியின் இலக்கியப் பெறுமதி என நான் நிச்சயமாக நம்புகிறேன்.

பார்த்திபனின் கதைகளின் ஆன்மாவாக உள்ளோடிக்கொண்டிருப்பது அறவுணர்வுதான். தன் அறவுணர்வைத் தின்று செரித்தபடி எங்கென்று தெரியாமலே விரைந்தபடியிருக்கும் மனிதகுலத்தினைச் சற்றுத் தாமதிக்க வைக்க முயற்சிக்கும் கேள்விகளைத்தான் அவர்கதைகள் காவியிருக்கின்றன. கவர்ந்திழுக்கும் சொற்களையும், துல்லிய விவரணைகளையும் அவரது கதைகள் கொண்டிருக்காமலிருக்கலாம். ஆனால் தம் மனங்களை இறுகச் சாத்தியபடியிருக்கும் மனிதர்களின் மனக்கதவுளை பார்த்திபனின் கதைகள் ஓங்கித் தட்டுகின்றன. சொல்லைப்போலச் செயலில்லாமலிருப்பதன் அபத்தமே பார்த்திபனை அலைக்கழிக்கிறது. ஒவ்வொரு மனிதனும் தன்னால் முடிந்தளவு குறைந்தபட்ச நியாயத்தோடு வாழ முயற்சிக்கவேண்டும் என்கிற தத்தளிப்பு அவரது கதைகளில் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தப்படுகிறது. ‘இழவுக்கும் தொழிலுக்கும் வ.செ’ என்கிற கதையில் ஏஜென்சிக்காரர் கேட்ட காசைத் தராததால் புனிதா என்கிற பெண்ணை ரஷ்ஷியக் ஹோட்டலில் கைவிட்டு வந்துவிடுகிறார்கள். அவள் தற்கொலை செய்துகொள்கிறாள். ஏஜென்சியிடம் வேலை செய்யும் ஒருவன் குறைந்தது அவளது மரணத்தையாவது அவளது குடும்பத்துக்கு அறிவிக்கலாம் என்று சொல்கிறார். ஏஜென்சிக்காரனோ அவனைக் கெட்ட தூசணத்தால் ஏசிப் போனை வைக்கிறான். ஒருவனிடம் மெல்லிய கீற்றாயேனும் தோன்றும் அறவுணர்வை எப்படித் தொலைத்துக்கட்டுவதென்பதை இந்தக்கதை எழுதிக்காட்டுகிறது. அத்துடன் புலம்பெயர்ந்தவர்களின் வழியென்பது எத்துணை துயரம் வாய்ந்ததென்பதும் அது கடவுளாலும் கைவிடப்பட்ட பாதையென்பதையும் பதட்டத்தோடு பதிவுசெய்கிற கதையிது. ஸ்ருரண்ட் விசாவிலோ, ஸ்பொன்சரிலோ வந்தவர்களுக்கு இது இலக்கியமா என்பதில் பலத்த சந்தேகங்கள் இருக்கலாம். வெள்ளவத்தை விசாப்பிள்ளையாருக்கு நேத்தி வைத்துவிட்டு, ரசியாவின் குளிரிலும், ஆபிரிக்க வெம்மையிலும், மலைகளையும் உறைந்த நதிகளையும் வெறுங்காலால் கடந்தவனால் அல்லது கடந்தவளால் இதை இலக்கியத்தின் உச்சமெனத்தான் கொண்டாடமுடியும்.

பார்த்திபனின் ஆகச்சிறந்த கதையென நான் கருதுவது ‘கெட்டன வாழும்’ கதையைத்தான். தனது காருக்குள் தஞ்சமடைந்த அபலைப்பெண்ணுக்கு உதவ விரும்பும் மனமுடைய கதைசொல்லி தவிர்க்க முடியாமல் அவளை தன் வீட்டை விட்டு வெளியேற்ற நேர்கிற இயலாமையும், அவளது மரணத்தின் பின்னரான குற்றவுணர்வில் அவன் தளும்பித்துடிக்கும் துடிப்பும் என மனித மனத்தின் பலத்தை பலவீனத்தை அறஞ்செய்ய விரும்பினும் அனுமதிக்காத நிகழ்காலத்தை மிக அற்புதமாக கதையாகப் பதிவு செய்கிற கதை அது. மனிதநேயம் என்பது எப்போதும் ஏன் அதிகம் விலைகொடுத்தாகவேண்டிய ஒன்றாகவேயிருக்கிறது. மிக இயல்பாயத் சகமனிதனின் துயரம் கண்டிரங்கும் சாத்தியங்களை இல்லாதொழித்திருக்கும் இவ்வுலகம் எதைநோக்கிப்போய்க்கொண்டிருக்கிறது. வலியன வாழும் என்கிற ஆபத்தான இயல்பொழுங்கில் இருந்து கெட்டன வாழும் என்கிற பேராபத்தை நோக்கி மனிதகுலத்தை தள்ளிக்கொண்டிருப்பது என்ன ? என்கிற கேள்விகளால் நிறையத் தொடங்குகிறது அக்கதை வாசிப்பின் பின்னரான மனம். படைப்பின் நிறைவென்பது அதன் நிகழ்த்துகை முடிந்த பின்னரும் நமக்குள் எஞ்சியிருக்கும் அதன் இயல்பே. கெட்டன வாழும் அவ்வியல்பு கொண்டவொன்று.

கதை என்கிற இந்தத் தொகுப்பில் பார்த்திபன் என்கிற ஏஜென்சிக்கார் வாசகர்களின் தேசத்துக்கு தன்கதைகளை ஏற்றி அனுப்புக்கிறார். சில றூட்டுகள் செமையாக ஓடி பல கதைகள் வாசகரின் இதயத்தைத் தொடுகின்றன. சில கதைகள் பாதி வழியில் உலர் சொற்களின் பாலைவனத்திலோ, உறைபனியாற்றின் உள்ளமிழ்ந்தோ வாசகரின் தேசக்கரையை தொடமுடியாமல் போகின்றன. பார்த்திபன் எழுதிய இரண்டு கதைகளைத் தவிர்த்திருக்கிறதாக கதை வந்த கதையில் நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். கதைகளின் தேர்வில் இன்னும் கொஞ்சம் கறாராக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அது பார்த்திபனின் எழுத்துக்கள் பற்றிய இன்னமும் தெளிவான சித்திரத்தை வாசகர்களுக்கு வழங்கியிருக்கும்.

சமூகத்தின் இயலாமையை,வெளியேற்ற முடியாதபடி அது தன்னகத்தே கொண்டிருக்கும் மடமைத் தனத்தை, காலத்துக்கும் அது பேணவேண்டிய அறவுணர்வைச் சுட்டிக்காட்டுவதே இலக்கியத்தியன் கடனென்று நான் கருதுகிறேன். பார்த்திபனின் கதைகள் அந்தக் கடமையின் வழியேதான் நடக்கின்றன.

-புதியசொல் ஜனவரி -மார்ச் 2019

2018
Apr 17

ess-bose2_

துப்பாக்கியின் கண்கள்
வாசிக்கத் தொடங்கிய பிறகு
சொற்கள்
ஒழிக்கத் தொடங்கிவிட்டன/சபிக்கப்பட்டு விட்டன

பீரங்கியின் வாய்களால்
அச்சமூட்டப்பட்ட
சொற்கள் கொண்டு
செய்யப்படுகிறது
ஒரு நாள்….

முடமான சொற்கள் கொண்டு
கவிதைகள்
செய்வது எங்ஙனம்?

கால்களற்ற சொற்களைக்
காணச் சகியாதொருவன்
துப்பாக்கிகளறியாதொருகணத்தில்
மொழியைப் புணர்ந்து
புதிதாய்
கால்முளைத்த சொற்களைப்
பிரசவிக்கலானான்…

பின்
ஓர் இரவில்…

துப்பாக்கியின் கண்கள்
அவன் முதுகினில்
நிழலெனப் படிந்து
அவன் குரலுருவிப்
பின்
ஒரு பறவையைப்போல
விரைந்து மறைந்ததாய்..
அவன் குழந்தைகள் சொல்லின.

எஸ்.போசை மிருகங்கள் கவர்ந்து சென்று பத்தாண்டுகள் முடிவடைந்து விட்டன. ஆனாலும் அவரது குரல் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது நம்மிடையே. ஏனெனில் எஸ்.போஸ் நாங்கள் ஒலித்திருக்க வேண்டிய குரலாயிருந்தார் பிழைத்திருத்தலே சாகசமாகிப்போன நம்முடைய காலத்தில் பிழைத்திருத்தலுக்காக நம் அறவுணர்வை சற்றே வளைக்கநேர்கிற,அநீதிகளை மௌனமாய்க் கடக்கநேர்கிற வாழ்க்கைதான் நமக்கு வாய்த்திருக்கிறது. பிழைத்திருத்தலே விலங்கினத்தின் அடிப்படை என்கிறபோதும், வாழ்வு தன்னை எல்லாப்பக்கமிருந்தும் நொருக்கித் தள்ளியபோதும் தன் அறவுணர்வைக் குன்றாமல் பாதுக்காத்து அவ் அறவுணர்வின் சொற்களைச் சுடராய் ஏந்திச் செல்ல வெகு சிலரால் மட்டுமே முடிந்திருக்கிறது. அவ்வாறு தனக்குள் நிதமும் கனன்ற அறவுணர்வின் சொற்களைச் சுடராய் ஏந்தி ஓடிய அற்பமான காலத்தின் மகத்தான கவிஞன் எஸ்.போஸ்.

தான் வாழும் காலத்தின், சமூகத்தின் குரலாய் மட்டுமில்லாது தன் சமூகத்தின் எதிர்காலம் குறித்தும் கனவுகாணவும் அதற்காய் குரலெழுப்பவும் தன் சொற்களின் குரல் வளையைத் தானே நெரிக்காது தன் சொற்களைப் போலவே வாழவும் எஸ்.போஸ் கொடுத்த விலை அவருடைய உயிராயிருந்தது.

டிப்டொப்பாக உடையணிகிற மெலிந்த தோற்றமுடைய எஸ்.போசுடன் நான் நெருங்கிப் பழகியவன் அல்ல. ஆரம்ப இலக்கிய வாசகனான எனக்கு ஆச்சரிய ஆளுமைகளில் ஒருவராய் அப்போது எஸ்.போஸ் இருந்தார். முழுக்கைச் சட்டையை விரும்பி அணிகிற அந்த மெலிந்த மனிதனைப் பற்றிய நிறையக் கதைகளை அவரது எழுத்துக்களும் நண்பர்களின் சொற்களும் எனக்குச் சொல்லித் தீர்த்தன. காலம் முழுவதும் வாழ்வின் அபத்தங்களை சகியாதிருந்தவராய்,அதிகாரத்தின் எல்லா வடிவங்களையும் எதிர்த்தவராய் சதா மனசுக்குள் கேள்விகளைக் கொண்டலைந்த இளைஞராய் எஸ்.போஸ் இருந்தார். அதிகாரத்தை எதிர்த்தல் என்பது தனியே அரசமைப்பை மட்டும் எதிர்ப்பதல்ல என்பதை எஸ்.போஸ் புரிந்தவராயிருந்தார் அதனாலேயே அவர்  குடும்பத்தில் பாடசாலையில்,வேலையிடங்களில்,நண்பர்களிடத்தில் முட்டிமோதினார்.

எங்களில் அநேகர் எங்களுடைய குரல் நேரடியாக சென்றடைய முடியாத அதிகாரங்களை நோக்கிக் குரலெழுப்புவதில் வல்லவர்களாயிருக்கிறோம் உதாரணத்திற்கு அமெரிக்க ஏகாதிபத்தியம்,சிங்கள இனவாதம், தமிழ்த்தேசியம், இந்திய வல்லாதிக்கம் இப்படியானவற்றையெல்லாம் விமர்சித்து நம் அறவுணர்வைக் கொட்டுவோம். ஆனால்  நம் அலுவலகமேலாளரின் அத்துமீறலையோ, விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரியின் நிறவாதச் செயலையோ,நாம் கேள்விகேட்பதைத் தவிர்த்து, சகித்துக் கடந்து செல்வோம். ஒரு வேளை இதெல்லாம் சின்ன அநீதி பெரிய அநீதியைத் தட்டிக்கேட்டால் போதும் என்கிற மனநிலைகூட அதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால் எஸ்.போசால் அது முடியாமலிருந்தது. அவர் பாடசாலை ஆசிரியரின் அதிகாரத்தையும் எதிர்த்தார், பத்திரிகையாளர்கள் கடத்தப் பட்டாலும் கண்டித்தார்,மண் கடத்தினாலும் கண்டித்தார். அவரிடம் அநீதியின் அளவுகோல்கள் எதுவுமில்லை அவருக்கு எல்லாமே தட்டிக்கேட்க வேண்டியவைதான். ஏனெனில் அந்த மெல்லிய மனிதன் தன்னைப் போலவே எல்லோரையும் நேசித்தான். அவனது அலைவுக்கும், துன்பங்களிற்கும், நிலையாமைக்கும் ,சுடர்போல் எரிந்த அவன் சொற்களுக்கும் ,ஏன் அவனது மரணத்திற்கும் அவனிடமிருந்த மானுடத்தின் மீதான பேரன்பே காரணம்.

அதிகாரங்களிற்கெதிராக ஏதாவது செய்யவேண்டும் என்ற துடிப்பு எப்போதும் அவரிடமிருந்துகொண்டேயிருந்தது. அவரது எழுத்துக்களில் திரும்பவும் திரும்பவும் அவர் வலியுறுத்துவது அதுவாகவேயிருக்கிறது. அவரது ஒரு சிறுகதையில் அவர் எழுதுகிறார் ஒருவருடைய அந்தரங்கத்துக்குள் இந்த அதிகாரம் எப்படிக் கேட்டுக்கேள்வியில்லாமல் சட்டென்று நுழைந்து விடுகிறது என. இன்னொரு  இடத்தில் எழுதுகிறார்  “நாங்கள் நூறு வீதம் புனிதத்தை எதிர்பார்க்கிறோம் சில சமயங்களில் அது நம்மீதே முள்ளாய்ப் பாய்கிறது ”என்று. ஏன் தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களால் தன்னோடு கூடவரமுடியவில்லை என்ற கேள்வியின் முடிச்சை அவிழ்ப்பதற்காகத் தன் எழுத்துக்கள் முழுவதும் முயன்றிருக்கிறார். நேர் வாழ்க்கையிலும் நண்பர்களைத் தன்னைப்போல் சிந்திப்பவர்களாக ஆக்குவதற்காக நிறைய முயன்றிருக்கிறார். விவாதங்கள் பேச்சுக்கள்,பாராட்டுக்கள்,திருத்தங்கள்,தட்டிக்கொடுப்புகள் என்று தன்னுடைய பாதையில் நண்பர்களையும் அழைத்துச்செல்லவிரும்பிய கூட்டாளியாகத்தான் இன்றைக்கும் அவரது நண்பர்கள் அவரை நினைவு கூருகின்றனர்.

எஸ்.போசைப் பொறுத்தவரை வாழ்வின் அபத்தங்களைக் கடப்பதற்கான கருவியாகவே எழுத்தைக் கையாண்டார். கவிதையை வெறித்தனமாக நேசிக்கிற ஒருவராக இருந்திருக்கிறார் என்றே நினைக்கிறேன். எழுத்தின் மூலமே தான் வாழ்வின் துயரங்களைக் கடந்தார். றஷ்மியின் ஆயிரம் கிராமங்களைத் தின்ற ஆடு புத்தகத்தைப் பற்றிய  குறிப்பில் சுதாகர் இவ்வாறு எழுதுகிறார்.

நமது கவிதைகள் பற்றிய உண்மைகளையும் அதன் சூக்குமங்களையும் மற்றவர்கள் புரிந்து கொள்ளும் போது அவர்களே தத்தமது புரிதல்களின் அடிப்படையில் நம்மை எதிரிகளாகவும் துரோகிகளாகவும் நண்பர்களாகவும் விபச்சாரர்களாகவும் மாற்றிவிடுகிறார்கள். நமது கவிதைகளோடு நாம் உண்மையாக வாழ்வதைப்போல இந்தச் சமூகத்தோடும் மனிதர்களோடும் உண்மையாக வாழ முடியுமா?

சமூகத்தோடு உண்மையாய் வாழமுடியாமலிருப்பதன் ஆதங்கமாயும்,  அவரது கவிதைகளின் மீதான காதலாகவுமே மேற்சொன்ன அவருடைய வரிகளை நான் புரிந்துகொள்கிறேன்.  ஆனால் வாழ்வின் நெருக்குதல்கள் குறித்துச் சலிப்பெதுவும் அவர் சொற்களிடம் இல்லை. சொல்லப் போனால் அத்தகைய நெருக்குதல்களை அவர் போராடுவதற்கான உந்துதல்களாகவே கையாண்டிருக்கிறார். அவரது சிறுகதைப் பாத்திரமொன்று இப்படி நினைக்கும்“அடிக்க அடிக்க சுணை குறையிற மாதிரி அம்மா பேசப் பேச அந்தப் பேச்சே கதையாய் கவிதையாய் வியாபிக்கும் எல்லாம் மீறி எங்கும் ஒரு சந்தோசம் துளிர்விடும்”சுதாகர் எப்படி வாழ்வை எதிர்கொண்டார் என்பதன் மிகச் சிறிய மற்றும் சரியான உதாரணம் இதுவெனத் தான் நான் நினைக்கிறேன்.

பாலம் என்கிற சிறுகதையில் அவர் எழுதுகிறார் “மனுசனுக்கு மனுசனாலதான் துன்பம் அதைஎதிர்த்து நிக்கிறதுக்காக போராடலாமே தவிர அழக்கூடாது”அன்பின் போதாமை அவரை துரத்தியிருக்கிறது. அன்புக்காய் ஏங்கும் சொற்கள் அவர் படைப்புக்கள் முழுவதும் விரவிக் கிடக்கிறது. எப்போதும் குடும்பத்திடமிருந்தும் சொந்த நிலத்திடமிருந்தும் விலகி வாழ நேர்ந்த வாழ்வலைச்சலின் விளைவாயிருக்கலாம் அது.“ஒடுக்குதலற்ற உணர்வுகளை உள்வாங்கி நேசிக்கிற பாசம் அவனுக்குத் தேவையாயிருந்தது”“மனிதர்கள் அன்பாய்ப் பேசும் ஒரு வார்த்தையைக் கூட வெளியில் கேட்கவில்லை”என்றெல்லாம் எழுதிச் செல்கிறார். இன்னொரு கவிதையில் “நரிகளோடும் எருமைகளோடும் வாழக்கிடைத்துவிட்ட நிகழ்காலம்”என்கிறார். “எனக்கு அன்பு பற்றி பாசம் பற்றி காதல் பற்றி அயலவரோடு பேசப் பயமாயிருக்கிறது”என்றெழுதுகிறார். இந்தச் சொற்களின் மூலமாகவெல்லாம் எஸ்.போஸ் அன்பாலான ஒரு உலகம் பற்றிய தன் எதிர்பார்ப்பைச் சித்தரித்தபடியே அதை நோக்கி பயணப்பட்டிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். தன்னை நாள்முழுதும் பட்டினிபோடும் வறுமையிலிருந்தும்,எல்லாத்திசைகளிலிருந்தும் உதைத்துத் தள்ளும் வாழ்வெனும் அபத்த நாடகத்திலிருந்தும் தன் வாழ்வை முன்னெடுத்துச் செல்லும் உந்து சக்தியைக் கண்டடைகிற உறுதியான மனம் எஸ்.போசிடமிருந்தது அதுவே அவர் குரலை இன்றளவும் அவரது மரணத்தின் பின்னாலும் ஒலிக்கச் செய்தபடியிருக்கிறது.

அவரது உறுதியான மனமும் அன்பாலான உலகம் குறித்த தேடலும் சக மனிதனின் துன்பம் குறித்துக் கோபப்படுகிறவராக அவரை ஆக்கின. ஆகவேதான் ஏதாவது செய் ஏதாவது செய் என அவரது கவிதைகள் அதிகாரத்துக்கெதிராக போர்க்கொடியுயர்த்துகின்றன. துப்பாக்கியைச் சனியன் என அழைக்கும் சுதாகர் ஆயுதங்களை, அவை உருவாக்கும் போரை  வெறுத்தார். ஆயுதங்களைப் பிடுங்கி எறி என்ற அவரது கவிதை சாக்கடவுளைத் தூற்றியது,போரற்ற ஒரு அழகான நிலத்தைக் குழந்தைகளுக்காக கொடுங்கள் எனக் கோரியது.சமீஹ் அல் ஹாசிமின்  றாஃபாச் சிறுவர்கள் போல ஈழ நிலத்தின் சிறுவர்கள் ஆவதை சகியாத மனம் எஸ்.போசுடையது.

போர்நிலத்தில் வாழும் மனிதர்களுக்கும் போர் நிலத்தை நீங்கிய மனிதர்களுக்கும் இருக்கிற இடைவெளி நீங்கவேண்டும் என்கிற பெருவிருப்பு அவரிடமிருந்தது. சிந்தாந்தனின் கவிதைகள் மீதான கட்டுரையில் எஸ். போஸ் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“ஆயுதப் போராட்டத்திலும் அரசியலிலும் ஏற்பட்ட விருப்பு வெறுப்புகள் காரணமாக சகிப்புத் தன்மையை இழந்தோ அன்றி தனிப்பட்ட பார்வையில் அரசியலையும் ஆயுதப்போராட்டத்தையும் நோக்கி அதன் மூலம் எடுக்கப்பட்ட தனிநபர் முடிவுகளின்படியோ அல்லது போராட்டக் குழுக்களிடையே ஏற்பட்ட விரிசல்கள் காரணமாகவோ சுயதேவைகளின் பொருட்டோ யுத்தப்பிரதேசத்தை விட்டு வெளியேறி இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் அல்லது புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் இலக்கியத்துக்காய் செயற்பட்டுக்கொண்டிருக்கும் படைப்பாளர்களுடன் யுத்தப் பிரதேசத்தில் அதன் அழிவையும் இன்னல்களையும் நேரடியாக அனுபவித்து வரும் படைப்பாளிகளிடையே நிலவி வந்த நிலவி வரும் புரிந்துணர்வு கொள்ளமுடியாத இடைவெளி இருசாராரது இலக்கிய முயற்சிகளையும் ஒருவரை ஒருவர் அணுக விடாது தடுத்திருக்கிறது.  இது எதுவுமே இல்லையென்றால் யுத்தப்பிரதேசத்திற்குள் இருக்கும் படைப்பாளர்கள் மறுதரப்பினரால் புலிகளின் ஆதரவாளர்களாக நோக்கப்பட்டமையும் இந்த நோக்கம் தந்த புறக்கணிப்பு அல்லது அதனால் விளைந்த அச்சமும் நிச்சயம் காரணமாகலாம்”

உரையாடல்களின் மீதான பெருவிருப்பு அவருக்கிருந்தது. எதிர்த் தரப்பின் குரலைக் கேட்கமறுக்கிற ஏகப்பிரதிநிதித்துவச் சார்பென்பது எஸ்.போசிடம் இல்லை அவர் தன் எழுத்திலும் செயலிலிலும் அதனைப் பதிவுசெய்தே வந்திருக்கிறார். அத்தகைய செவிகொண்ட குரலாயிருப்பதன் மூலம் தான் எஸ்.போசின் வரலாறு முக்கியத்துவமுடையதாகிறது.

எனது ஒரே அடையாளம் நான் யாரைக்குறித்து இருக்கிறேன் என்பது என்று எழுதியதைப்போலவே அவர் சனங்களைக்குறித்து இருந்தார். சனங்களின் பாற்பட்ட அதிகாரத்திற்கு எதிரான சிந்தனைதான் எஸ்போசின் அடையாளம். அதிகாரமே யுத்தத்தின் பிறப்பிடம் யுத்தமே சனங்களை இன்னலுக்குள்ளாக்கிறது என்பதில் எஸ்.போஸ் உறுதியாயிருந்தார். ஆகவே அவர் அதிகாரத்தை எந்நேரமும் வெறுத்தார் அதற்கெதிராக அவரது சொற்கள் போராடின. கண்களற்ற ஆயுதங்களின் முன் நானென்ன கடவுளேயானாலும் மரணம்தான்  என அவருக்குத் தெரிந்திருந்தது. அவரது நாட்குறிப்பில் அவர் எழுதுகிறார் “ஆயுதங்களுக்கு கருத்தியல் முக்கியமானதல்ல. ஆயுதங்களுக்கு எனது உயிர் பற்றிய அக்கறை கிடையாது அது தட்டும் திசையில் மனிதன் நானாக மட்டுமல்ல கடவுளேயாயினும் சாவு மட்டுமே தீர்ப்பு. எனினும் நான் எனது பேனாவை நம்புகிறேன். போர்க்குணம் மிக்க எனது இதயத்தில் இருந்து எழும் வார்த்தைகளை நம்புகிறேன்”சொற்களாலான சுதாகரது போராட்டம் சனங்களின் வலியைப் பிரதிபலித்தது.

உயர்ந்த பதவி, புகழ், செல்வம், பாதுகாப்பு போன்றவை அழைத்தாலும், அவற்றிற்கெல்லாம் மேலாக உள்ளுணர்வின் அழைப்பே முக்கியமாக இருக்கிறது என்று தனது இறுதி ஆசிரியர் தலையங்கத்தில் லசந்த எழுதினார். எஸ்.போசும் லசந்தவைப்போலவே தன் மரணத்தை முன்னுணர்ந்தே இருந்தார். சூரியனைக் கவர்ந்து சென்ற மிருகம் என்கிற கவிதையில்

“எனவே தோழர்களே

நான் திரும்ப மாட்டேன் என்றோ அல்லது

மண்டையினுள் குருதிக்கசிவோலோ

இரத்தம் கக்கியோ

சூரியன் வெளிவர அஞ்சிய ஒரு காலத்திலும்

நான் செத்துப்போவேன் என்பது பற்றிச் சொல்லுங்கள் ”என்கிறார்.

சுதாகர் தன் சொற்களின் விளைவை நன்கறிந்திருந்தார் என்பதன் வெளிப்பாடுதான் இந்த வரிகள்.  ஆனாலும் திரும்பவும் திரும்பவும் அதிகாரத்தை சீண்டும் சொற்களை அவர் பிரசவித்துக்கொண்டேயிருந்தார். அதுவே அதிகாரத்துக்கெதிராய் ஆயுதங்களை வெறுக்குமொருவன் செய்யக்கூடியது அதையே சுதாகரும் செய்தார்.

“நாங்கள் பயத்தின் மீதும் சிலுவையின் மீதும் அறைந்தறைந்து ஒளியிழக்கச் செய்த எமது சொற்களை மீட்டெடுப்பது எப்போது? இன்று எழுதப்பட்டவை பற்றியல்ல எழுதாமல் விடப்பட்டவை பற்றியே பேசவேண்டியிருக்கிறது. எல்லாம் எழுதப்பட்டு விட்டது என நாங்கள் கருதினால் படைப்பின் மூலம் அநீதிகள் என திரும்பத் திரும்ப வலியுறுத்தப்பட்டவை மீளவும் மீளவும் தலைவிரித்தாடுகிறது எனின் எமது எழுத்தின மூலம் சிறிதளவேனும் சமூகமாற்றமோ அரசியல் மாற்றமோ நிகழவில்லை என்ற எண்ணம் எம்முள் மூளும் எனில் அது பற்றியே நாங்கள் சிந்திக்கவும் பேசவும் வேண்டியிருக்கிறது” இவ்வாறு நிலம் ஆசிரியர் தலையங்கமொன்றில் நாங்கள் மீளவும் மீளவும்  அதிகாரத்திற்கெதிரான சொற்களைக் காவிச்செல்லவேண்டியதன் அவசியத்தை எஸ்.போஸ் வலியுறுத்துகிறார். கொல்லப்பட முடியாத எஸ்.போசின் வரலாறு அவரது இந்தக் குரலைத் திரும்பத் திரும்ப மேலெழச் செய்தபடியேயிருக்கும்.

பாவத்தின் சம்பளம்

Posted by த.அகிலன் on May 20th, 2013
2013
May 20

மரணம் என்றுமே நண்பனல்ல அப்படியிருக்க முடியவே முடியாது.

மரணம் பிரியமானவர்களுக்கு எதிரி

மரணம் எழுத்தாளர்களுக்கு பாடுபொருள்

மரணம் ஆன்மீகவாதிகளுக்குக் கச்சாப்பொருள்

மரணம் சிலருக்கு சாகசம்

மரணம் சில வேளைகளில் தந்திரோபாயம் அல்லது அப்படி அழைக்கப்படுகிற மண்மூட்டை

மரணம் சில வேளைகளில் பெரும் வியாபாரம்

மரணம் ஒரு பெரும் அரசியல்

மரணம் ஒரு இளவரசனைத் தன் இல்லாளைக் கைவிட்டு நைசாக எஸ்கேப்பாகும் படி தூண்டியிராவிட்டால். அவனது பெயரால் ஒரு வழிமுறையைக் அவன் தோற்றுவித்திருக்காவிட்டால் இன்றைக்கு ஒருவேளை நாம் இதைப் பேச நேர்ந்திருக்காது. சரி பேசுவது என்று தொடங்கிவிட்டோம் பேசிவிடுவதே சிறந்தது.

மீராபாரதி என்னை இந்தக் கூட்டத்தில் பேசும்படி அல்லது என்னுடைய கருத்தை முன்வைக்கும் படி மின்னஞ்சல் அனுப்பியபோது உண்மையில் நான் துணுக்குற்றேன். இதற்கான தகுதியை நான் வந்தடைந்த விதம் பற்றி. நான் பேச்சாளன் என்பதாலோ, அல்லது மரணத்தின் வாசனை என்கிற புத்தகத்தை எழுதினவன் என்பதாலோ அல்லது  3 கூட்டங்களில் எழுதிக்கொண்டு வந்து வைத்து வாசித்தேன் என்பதாலோ அல்ல இந்த அழைப்பு என்பதாகவே நான் உணர்ந்தேன். சில வேளைகளில் ஒரு 2009ம் ஆண்டே நான் வெளிநாட்டில் வசித்திருந்து என்னிடம் ஒரு பத்தாயிரம் யூரோ பெறுமானமுள்ள பணமும் இருந்திருந்தால் நான் இந்தச் சிறப்புத் தகுதியை வந்தடைந்திருக்கமாட்டேன். ஏனெனில் நான் புலிகளின் அனைத்துலகச் செயலகக் காரருக்குப் பத்தாயிரம் யூரோக்களைக் கொடுத்து அதற்குப் பதிலாக அவர்களிடமிருந்து என்னுடைய தம்பியை மீட்டு அவன் தெரிவாகியிருந்த பல்கலைக்கழகப் பொறியியல் பீடத்துக்கு அவனை அனுப்பியிருந்திருப்பேன். அவன் நைசாக ஸ்ரூடண்ட் விசா எடுத்து லண்டன் போய் புலிக்கொடியைப் பிடித்தபடி ஏதோ ஒரு ஊர்வலத்தில் கலந்து கொண்டிருப்பான். ஆனால் என்னுடைய கையாலாகாத் தனத்தால் அவன் கொல்லப்பட்டு நான் இத்தகைய அனுபவங்களை உடையவன் என்கிற தகுதியை வந்தடைந்தேன். உண்மையில் இந்தச் சிறப்புத் தகுதியால் நான் கவனப்படுத்தப்படும் போதெல்லாம் நான் டபுள்புறமோசன் கிடைத்த உணர்வை ஒரு போதும் அடைவதில்லை நான் கூனிக்குறுகி பெரும் குற்வுணர்வுக்குள்ளாகிறேன்.

அவ்வாறு என்னைச் சிறப்புக் கவனத்துக்குள்ளாக்குவது என்மீதான அன்பினால் அல்லது இரக்கத்தினால்,கரிசனத்தினாலாகக் கூட இருக்கலாம். ஆனால் அது என்னளவில் என்னைச் சீண்டுகிறது. ஒரு விசையைப்போல நான் கடந்து வந்துவிட விரும்பகிற அதே திசையிலேயே என்னை மீளச் செலுத்துகிறது.  என்னை  மட்டுமல்ல இழப்புள் இருக்கிறவர்களை வெளிக்கொண்டு வருதல்,ஆற்றுப்படுத்தல்,ஆறுதலளித்தல் எல்லாமே அபத்தநாடகங்களாகவே நிகழ்த்தப்படுகின்றன என்பது என் எண்ணம். உண்மையில் இழப்பினை அணுகும் விதம் பற்றிய அறிவூட்டல் இழப்புகளிற்கு வெளியில் இருக்கிறவர்களிடம் ஏற்படுத்தப்பட வேண்டும். இழப்புகளிற்கு வெளியில் யார் இருக்கிறார்கள் எல்லோரிடம் இழப்பு இருந்துகொண்டுதானே இருக்கிறது இழப்பில்லா வீட்டிலிருந்து ஒரு சொம்புத் தண்ணீர் கொண்டு வா என்று யாரேனும் கேட்கக் கூடும். நானே வெளியேயும் உள்ளேயும் இருக்கிற இடைவெட்டில் நின்றுகொண்டே தொடர்கிறேன்.

அப்படி என்ன பெரிய பிரச்சினையாக இந்த விசயம் இவருக்கிருக்கிறது என்று ஒரு சிலர் விசனப்படவும் கூடும். தொடங்கிவிட்டேன் சில அனுபவங்களைச் சொல்லிவிடுகிறேன்.

கனடாவுக்கு நான் வந்த புதிது ஒரு நண்பர் இன்னொரு இந்திய எழுத்தாளருக்கு என்னை அறிமுகம் செய்கிறார் இவர் அகிலன் இவற்ற தம்பி ஒராள் கடைசி நேரம் செத்தவர். எனக்கு என்னுடைய தகுதியை நினைத்து அருவருப்பாயிருந்தது. என்னைப் பற்றிச் சொல்ல வேறொன்றும் இல்லாவிட்டால் அல்லது வேறெதையும் சொல்ல மனமில்லாவிட்டால் அறிமுகம் தேவையேயில்லை.

இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் கருணை காட்டுவார்கள் அதுவோ பெரும் கருணை ஏதேனும் விவாதித்தால் என்ன பெரிய விவாதம் ஏதாவது ஒரு விவகாரத்தில் புலிகளை விமர்சித்தால், அரசை விமர்சித்தால் அந்த நபர் நம்பிக்கொண்டிருப்பதற்கு எதிராயிருந்தால் நீங்கள் தம்பியை இழந்திருக்கிறீர்கள் அதனால் நாங்கள் உங்களோடு கதைக்கிறதில்லை என்பார்கள். அதாவது உங்களுடைய பார்வை முற்றிலும் தவறானது உங்கட தம்பி செத்துப்போனவர் என்பதால் அதை மன்னித்து விடுகிறோம் என்பதான் பாவனை அதிலிருக்கும். எனக்கு இதுவும் எரிச்சலாயிருக்கும் ஏதோ என் தம்பி ஒருவன்தான் புலிகளால் வலுக்கட்டாயமாகப் பிடித்துச் செல்லப்பட்டவனா? வன்னியிலிருந்தவர்கள் பத்தாயிரத்திற்கும் அதிகமானவர்கள் எனச் சொல்கிறார்கள். நான் சொல்வது பிடித்துச் செல்லப்பட்டவர்களது எண்ணிக்கை அல்ல பிடித்துச் செல்லப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை. ஆகவே இது ஒரு வகை மாதிரி என்னுடைய குடும்பத்தின் பிரச்சினை பத்தாயிரம் குடும்பத்தின் பிரச்சினை அது ஒரு சமூகத்தின் பிரச்சினை இல்லையா? ஆனால் அதை என்னுடைய தகுதியாக்கி நீங்கள் பாவம் இழப்பிலிருக்கிறவர் கோபத்தில் கதைக்கிறியள் அதனால் நாங்கள் மறுத்துரைப்பதில்லை எனச் சொல்லுவார்கள். ஆக இந்த ஆறுதலளிக்கிறோம் கோஸ்டி மிகவும் ஆபத்தானவர்களால் நிறைந்திருக்கிறது.

இன்னும் கொஞ்சப் பேர் இருக்கிறார்கள் நீங்கள் எழுதவேண்டும். தம்பியைப் பற்றி எழுதுங்கய்யா உங்கடை அனுபவங்கள் பதியப்படவேண்டும் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என்று நச்சரிப்பார்கள். நீங்கள் இதிலிருந்து வெளியே வரவேண்டும் அது இதெண்டு அன்புத் தொல்லை கொடுப்பார்கள் இப்படிப் பட்டவர்களை நான் மனசுக்குள் நினைப்பதுண்டு நல்லவன் ஆனா மூதேசி. சில வேளை  எனக்கு ஓங்கி முகத்திலேயே குத்துவிடவேண்டும் என்றெல்லாம் தோன்றும். ஏனெனனில் இப்படிக் கேட்பதும் துயரத்திலிருந்து விடுபடவைப்பதற்கான வழியல்ல மாறாக மீண்டும் மீண்டும் அதனுள்ளேயே அழுந்தவைக்கும் பாரக்கற்கள். இழப்பிலிருப்பவனை அவன் வழியிலேயே விட்டு விடுங்கள் காலம் எல்லாவற்றையும் ஆற்றும். அப்படி ஆற்றாவிட்டால் தான் என்ன? இழப்பினைத் திருப்பித்தர முடியாதபோது? எல்லாரும் யேசுநாதர்களா என்ன மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து வருவதற்கு.

சொல்லப் போனால் இந்தச் சிறப்புக் கவனப்படுத்தல் சின்ன வயதிலிருந்து என்னோடு கூட வருவதுதான். அதற்குப் பெயர் தகப்பனைத் தின்னி. இப்போது இந்த தம்பியிழந்தான். இவ்வகையான சிறப்புத்தகுதியால் எனக்குக் கிடைக்கிற கடைசி மேடையாக இது இருக்கவேண்டும் என்று எல்லாம் வல்ல மரணத்தை வேண்டுகிறேன்.

இவ்வளவு நேரமும் நான் சொன்னதெல்லாம் என்னுடைய தம்பியின் இறப்பின் சற்றுப்பிந்திய சம்பவங்கள். உடனடியான சம்பவங்கள் காட்சிகள் இன்னும் கவனத்துக்குரியவை. என்னுடைய தம்பியின் இறப்புச் செய்தியை லண்டன்ல இருக்கிற தங்கையின் கணவர் எனக்குச் சென்னைக்கு போன் பண்ணிச் சொன்னவேளையில் உண்மையில் சென்னையில் நான் தங்கியிருந்த அறையில் என்னுடைய கணினியும் நானும் மட்டுமேயிருந்தோம். வெளிநாட்டில் என்னோடு நண்பராயிருந்தார் என்று நான் நம்பிய ஒரு எழுத்தாளருக்கு அவர் எனக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார் பொருளாதார ரீதியாகவும் நட்பு ரீதியாகவும் நான் சொல்வதற்கு வேறு யாருமில்லாமல் கூகுள் ரோக்கில் அவரைக் கூப்பிட்டுச் சொன்னேன்  அல்லது அழுதேன். அவர் அந்தக் கணம் ஆறுதலாயிருந்தார். போரின் மீது,புலிகள் மீது, அரசின் மீது, சமூகத்தின் மீது நிறையக் கோவப்பட்டார். அதனைத் தொடர்ந்த அவருடைய ஒன்றிரண்டு கதைகளில், கவிதைகளில் அந்த கோவத்தையும் அவர் பதிவு செய்திருந்தார். இப்போது அண்மைக்காலமாக அந்தத் தீர்ப்புகளில் ஒன்றிரண்டைத் திருத்தியெழுதியிருப்பதை அவதானித்தேன். கணிணியில் எழுதிய எழுத்துக்கள் தானே காலம் மாற மாற மாறும்.ஆனால் இழப்பென்பது சிலையில் எழுதிய எழுத்து.  எல்லாவற்றிற்கும் மேலாக சில காலம் கழித்து கோவம் குறைந்து அவர் தளம் திரும்பிய பிறகு இப்போது நான் பெயர் சொல்லாமல் அவரைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருப்பதைப் போலவே அவர் ஒரு இடத்தில் என்னைப் பற்றி மறைமுகமாகச் சொன்னார் இப்படி “ மச்சான் செத்தான் மாமன் செத்தான் எண்டு இயக்கத்தை எதிர்க்க வெளிக்கிட்டவன் என்று” அதனை அவர் பொதுசனவெளியிடம் கொஞ்சக் காலம் புலிகளை தான் விமர்சித்த பாவகாரியத்திற்கான தன்னுடைய பாவமன்னிப்புப் பிரார்த்தனையின் வாசகங்களாகத்தான் சொல்லியிருப்பார் என்று நாம் நம்புகிறேன். பாவமன்னிப்பும் அவருக்குக் கிடைத்தது. ஆனால் அதற்கும் கனகாலம் முன்பாகவே என்னிடம் புலிகள் குறித்த அப்படியான பார்வையிருந்தது என்பதை அவர் அறிவார். என்ன செய்வது எல்லோருக்குமானதுதானே ஆகாயமும் பூமியும். ஆனால் அது என்னை மிகவும் பாதித்தது. மனிதர்களற்றுக் கணினியும் நானுமாய்த் தனித்துவிடப்பட்ட கணத்தில் அறியநேர்ந்த சகோதரனின் மரணத்தை இவன் என் நண்பன் என நினைத்து ஆறுதலாச் சொல்லி இவனிடமா அழுதேன் என நான் வெட்கப்பட்டேன்.  அங்கீகாரமே எல்லாம் வல்லது என நண்பர் உணர்ந்திருந்தார் போலும் எதிர்ப்புணர்வும் மாற்றுக்கருத்தும் யாருக்கு வேண்டும் மண்ணாங்கட்டி.

இன்னொருவர் கொஞ்சப் பணத்தை எடுத்து என்பக்கமாக நீட்டி வைத்துக்கொள்ளுங்கள் என்றார் துயரத்தை பங்கு போடுகிறாராம். பற்றிக்கொள்ள ஏதுமற்றவரெனத் தன்னைச் சொல்லியபடி அவர் தமிழ்த்தேசியத்தை தாங்கும் பெருந்தூண்.

இன்னொருவர் வந்து என்னைப் பார்த்தபடியே நீண்டநேரம் மௌனமாய் அமர்ந்திருந்தார். திடீரென ஞாபகம் வந்தவரைப்போலக் கேட்டார் என்ன றாங்? எனக்கொருகணம் அவர் என்ன கேட்கிறார் எனத் தெரியவேயில்லை பிறகுதான் புரிந்தது புலிகள் அவர்களுடைய உறுப்பினர்களுக்கு வழங்குகிற இராணுவப் படிநிலையைக் கேட்கிறார் என்பது. நான் பதில் சொல்லாமல் அமைதியாயிருந்தேன். அவர் சிறிது நேரம் என்னைப் பார்த்துக்கொண்டிருந்து விட்டு சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாய்க் திரும்பவும் கேட்டார். உங்கட தம்பி அவசரகாலத்தில் அழைத்துச் செல்லப்பட்டவரா அல்லது தானாகச் சேர்ந்தவரா? தொடர்ந்து அவசரகாலத்தில் அழைத்துச் செல்லப்பட்டவராயிருந்தால் வீரவேங்கைதான் குடுத்திருப்பாங்கள் என்றார். அதற்கிடையில் என்னருகில் இருந்த இன்னொரு நண்பர் அவரைக் கையைப்பிடித்து வெளியில் அழைத்துச்சென்றுவிட்டார். இல்லையென்றால் நான் சத்தியமாய் அவரை அடித்திருப்பேன்.

நேற்று நான் இதை எழுதிக்கொண்டிருக்கும் போதுதான் இரண்டு விசயங்களை  உணர்ந்தேன். ஒன்று அந்த நண்பருக்கு பிடித்துச் செல்லப்படுவதற்கு வன்னியில் யாருமில்லை. வைபோசாகப் பிள்ளை பிடித்தல் என்பதை எவ்வளவு நல்ல நிகழ்வாக அவசரகாலத்தில் அழைத்துச் செல்லுதல் என்று அவர் சொன்னார் அது எவ்வளவு அரசியல் நியாயப்படுத்தல் நிறைந்த சொல். அங்க நிக்கிறான் தப்பியோடிய தமிழன், என்று தோன்றிச்சுது.

இந்த இடத்தில் நினைவுக்கு வருவதால் இன்னொன்றையும் சொல்லிவிட்டுப் போகிறேன். சொற்களாலானதுதான் இந்த அரசியல் வெளி. இலங்கை மனித சமூகத்தின் அரசியலே சொற்களின் வர்ணனைகளாலானது. இதே தொழிநுட்பத்தைத் தான் இலங்கை அரசும் பயன்படுத்துகிறது. அதாவது முன்னாள் போராளிகளை ஜெயிலில் அடைத்த வைத்திருப்பதற்கு அது வைத்திருக்கிற சொல் புனர்வாழ்வு பாருங்கள் எவ்வளவு அரசியல் நியாயமூட்டப்பட்ட சொல் அது.

சரி அந்த றாங் கேட்ட நண்பருக்கே மீண்டும் வருகிறேன். இன்னொரு முரணும் உண்டு அவர் சுரேஸ் பிரேமச்சந்திரனாக்கள் வைபோசா ஆள்பிடிச்சபோது(தமிழ்த்தேசிய இராணுவத்திற்கு) தான்தப்பிப் பிழைத்த கதைகளை சாகசமாக இன்றைக்கும் விபரிப்பார். ஒரே செயல் சில வருடங்கள் கடந்து செய்யப்படும்போது எப்படி நல்லசெயலாக பாதிக்கப்பட்டவராலேயே பார்க்கப்படுகிறது என்று வியந்தேன். இரண்டாவது அவர் என்ன றாங் என்ற அவருடைய கேள்விக்கு நான் பதிலளிக்காமல் இருந்ததற்கு காரணம் என்னுடைய தம்பிக்கு வழங்கப்பட்ட றாங் பெருமையோடு சொல்லப்பட முடியாதபடி குறைவானது என்பதனால் ஏற்பட்ட கள்ள மௌனம் என அவர் நினைத்திருப்பாரோ என்றும் நான் நேற்று நினைத்தேன்.

அது எவ்வளவு துயரமான உண்மை. வீரவேங்கைகளின் மரணமும், பிரிகேடியர்களின் மரணமும், இளவரசர்களின் மரணமும்,சாதாரண பாலகர்களின் மரணமும், தளபதிகளின் மரணமும், சிப்பாய்களின் மரணமும் எத்தனை வேறுபாட்டுடன் அணுகப்படுகிறது, அணுகப்பட்டது. இதற்கெல்லாம் உயிருள்ள சாட்சியங்கள் இன்னும் இருக்கிறார்கள். புரகந்த கழுவர அந்தப்படம் தான் எனக்கிந்த இடத்தில் நினைவுக்கு வருகிறது. அதோடு கூடவே கொக்காவிலில் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தினரால் எரியூட்டப்பட்ட 1500 படையினரின் சடலங்களும் நினைவுக்கு வருகின்றன. முல்லைத்தீவுப் படைமுகாமை புலிகள் கைப்பற்றியபோது அதில் கைப்பற்றப்பட்ட இராணுவத்தினரின் சடலங்களை அப்போதைய சந்திரிகா அரசாங்கம் கையேற்க மறுத்தது. அந்தச் சடலங்களை வெற்றி இறுமாப்போடு வன்னிச் சனங்கள் சந்திரன் சிறுவர் பூங்காவில் சென்று பார்த்தனர். முல்லைமண் எங்களின் வசமாச்சு ஈழம் முற்றிலும் வெல்வது திடமாச்சு வெற்றி மெட்டு வானலைகளில் மிதந்தது. ஏழாம் வகுப்புச் சின்னப்பெடியன் இந்தப் பாட்டைப் பாடிக்கொண்டு ஒழுங்கைக்குள் தனது நீலச் அரைச் சைக்கிளை ஓடித்திரிந்தான். அது நான் தான். பிறகு அதே சின்னப் பெடியன் கொக்காவில் ஏ9 வீதியோரக்காடுகளில் எரிக்கப்பட்ட அந்தச் சடலங்களின் பிணவாடை மறையும் முன்பாக மூக்கைப் பொத்தியபடி கிளிநொச்சியை விட்டு அதே சைக்கிளில் இடம்பெயர்ந்து மாங்குளம் நோக்கிப் போனான். வெற்றி என்பதும் தோல்வியின் முதற்படிதான் சில நேரங்களில்.  மரணம் எவ்வளவு பொய்யாக எவ்வளவு அரசியலாக,எவ்வளவு ஏமாற்றாக யுத்தத்தை முன்னெடுக்கும் தரப்புகளால் செய்யப்படுகின்றன என்பதற்கது சாட்சி.

இசைப்பிரியாவின்  இறந்த உடல் முதலில் துவாரகாவின் உடலாகத்தான் உலகம் முழுவதும் அறியப்பட்டது. உங்களுக்கது நினைவிருக்கலாம். உலகம் பதைபதைத்தது. பிரபாகரனின் மகள் என்கிற பதட்டம் அதிலிருந்தது. பிறகுதான் அது இசைப்பிரியா என்கிற ஆறுதலான தகவல் தமிழ்த்தேசிய இணையப்போராளிகளை வந்தடைந்தது. அந்த ஆறுதலை அவர்கள் 2009 ல் வெளிப்படுத்திய விதம் மிகவும் அருவருக்கத்தக்கது. அப்போது நான் பேஸ்புக்கில் எழுதியது நினைவிருக்கிறது “அது அவளில்லாவிட்டால் பரவாயில்லையா?” உண்மையைச் சொன்னால் பரவாயில்லை என்பதுதான் அநேகரின் உள்ளக்கிடக்கை. இந்த மனோ நிலை எங்கிருந்து முளைக்கிறது? இந்தச் சாக்கடைச் சமூகத்திற்குத்தான் அறிவூட்டல் முதலில் தேவை. மரணம் என்பதில் இத்தனை வேறுபாடுகளைக் கண்டுபிடித்து வைத்திருக்கிற ஒரு சமூகம். இழப்பில் இத்தனை தகுதி நிலைகளைக் கொண்டியங்கும் சமூக அமைப்பில் எப்படி இழப்பில் இருக்கிறவனுக்கு ஆறுதல் கிடைக்கும்.

சாவு இழப்புத்தான். ஆனால் ஐஐயோ என்று ஒன்றையும்,அப்படியா சந்தோசம் என்று இன்னொன்றையும் எப்படி இந்தச் சமூகத்தால் பார்க்கமுடிகிறது?

அண்மையில் சவுதி அரேபியாவில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட ரிசானாவின் தண்டனை நிறைவேற்றல் காட்சி என்ற பெயரில் ஒரு வீடியோவை பார்த்தேன். உடல் பதற சகமனிதனாயிருக்க வெட்கப்பட்ட ஒரு தருணம் அது. என்ன ஒரு கொடுரமான தருணம் அது. என்னை மிகவும் பாதித்தது. ஆனால் அது ஒரு பெரும் குற்றவுணர்வை எனக்குள் எழுப்பியது ஒரு பதினைந்து வருடங்கள் முன்னால் என்னுடைய அனுபவம் இது ஒரு பதினாலாவது வயதில் என்று நினைக்கிறேன் நாங்கள் இடம் பெயர்ந்து ஸ்கந்தபுரத்தில் இருந்தோம் தேசத்துரோகியைச் சுடுவதற்காக ஸ்கந்தபுரச் சந்தைக்கு முன்னால் மரக்குற்றியில் ஏற்றிவைத்து குற்றப்பத்திரிகை படித்துக்கொண்டிருந்தார்கள் அந்த மனிதனின் கைகள் பின்னால் கட்டப்பட்டிருக்க அவன் கால்களால் கூப்பியபடி தனக்கருகில் துவக்கேந்தி நின்றவர்களிடம் கெஞ்சிக்கொண்டிருந்தான். துவக்குகள் ஏந்தியிருந்தவர்கள் சுடப்போகிறார்கள் என்றெதிர்பார்த்த தருணத்தில் சரேலென்று பிக்கப்பொன்றின் கதவுதிறந்து வெகு ஸ்டைலாக பிஸ்டலை உயர்த்தி ஒரே வெடி நான் அதை ஒரு புனிதக் காரியத்தைப் பார்ப்பதைப் போலவே பார்த்தேன். தேசத்துரோகிக்கு வேண்டியதுதான் வெட்கத்துடனும் துயரத்துடனும் சொல்கிறேன் அந்த மனிதன் பற்றி எந்த அக்கறையும் எனக்கிருக்கவில்லை. இறந்து போன அந்த மனிதனை விடவும் பிஸ்டலோடு வந்த கதாநாயகனின் தரிசனம் மகிழ்ச்சியளித்தது. அவர்தான் அந்த விசாரணைப்பிரிவின் பொறுப்பாளர், பொட்டம்மானின் வலது கை இப்படித்தான் சனங்களிடம் ஆரவாரமிருந்தது. இறந்த போன அந்த மனிதனைப் பற்றி ஒரு நாயும் சீண்டவில்லை. நான் அவனது கொலையை நியாயம் என்றே நினைத்தேன். இன்னும் தெளிவாகச் சொன்னால் நியாயமா அநியாயமா என்றெல்லாம் யோசிக்கக் கூட இல்லை. ஆனால் இத்தனை வருடங்கள் கழித்து யாரோ ஒரு பெண்ணின் தலை கொய்யப்படுவதைக் கண்டு வேதனைப் படும்போது காட்டிக் கொடுத்ததாய்ச் சொல்லப்பட்டுக் கொல்லப்பட்டவனின் கூப்பிய கால்களும் அந்த மரக்குற்றியில் யாரோ மண்ணள்ளிப் போட்டு மறைத்தபின்னும் எட்டிப்பார்த்த படியிருந்து உறைந்த இரத்தமும் என் நினைவுகளில் மேலெழுகின்றன. அவை என்னைப் பார்த்து பெரிய மனிதாபிமானி மாதிரி நடிக்காதே என்றென்னைக் கேட்குமாப்போல் இருக்கிறது.  நான் இந்த இரண்டு மரணங்களையும் பார்த்ததைப் போலத்தானே இந்தச் சமூகம் மரணத்தைக் கொலையை அணுகுகிறது. அப்படியானால் எங்கே அறிவூட்டல் தேவை?

நினைவு கொள்ளல் நல்லதுதான். தேவைதான். நமது உரிமைதான் ஆனால் இன்றைக்கு அது பெரும் அரசியலாகவும் வியாபாரமாகவும் தமிழ் மொழிக்குப் புதிய சொற்களைக் கண்டடைவதற்கான நாளாகவும்தான் இருக்கிறது. மே 18 ஐ என்ன பெயரில் அழைப்பது என்பதிலேயே தமிழ்த்தேசிய ஜனநாயக இதயத்தில் ஒரு பெயரில்லை. அதற்கே ஆயிரம் அடிபாடு நீங்கள் தமிழ்த்தேசியத்தை இந்த அடிபாடுகளிலிருந்து பார்க்காதீர்கள் என்பதாய் மரத்திலிருந்து பாம்பொன்று காதுக்குள் சொல்லும்.  இன்றைக்கு புலிகள் இயக்கமே பலதாய் பிரிந்திருக்கிறது அதற்குள் ஒற்றுமை வேண்டி ஒரு சிலர் பேசுகிறார்கள். காலப்போக்கில் மற்றவற்றைப் பின்தள்ளி ஒரு அமைப்பு ஏகப்பிரதிநித்துவம் பெறும், மற்ற இரண்டோ மூன்றோ அமைப்புக்களும் ஒட்டுக்குழுவாகவும்,துரோகக் கும்பலாகவும் உறுதிப்படுத்தப்படும். தமிழ்த்தேசியத்தின் ஜனநாயக இதயம் பலத்துடன் இருப்பதாகப் பத்தியாளர் எழுதுவார்கள். இதுதானே முப்பத்துச் சொச்சம் இயக்கங்களுக்கும் நடந்தது. வாழ்க்கை மட்டுமல்ல வரலாறும் வட்டம் தானோ? நினைவு கொள்ளுதலில் எவ்வளவு அரசியல் இருக்கிறது? யார் நினைவு கொள்ளப்படுகிறார்? யாரால் நினைவு கொள்ளப்படுகிறார் என்பதில் தானே எல்லாம் இருக்கிறது இல்லையா? யார் யாரை நினைவு கொள்ளுவது யார்  யாரைக் கழிப்பது ஒரு தீர்மானத்துக்கு வரமுடியுமா? ஓரு உதாரணத்துக்குச் சொல்கிறேன் தியாகிகள் தினத்துக்கும் மாவீரர் தினமளவு பிசினஸ் நடக்குமா? மன்னிக்கோணும் கவனம் கிடைக்குமா? எங்களுக்குள் இவ்வளவு சிக்கல் இருக்கிறதே இதை எப்படித் தீர்ப்பது? நாங்களே இன்னொருவர் நினைவுகொள்ளும் உரிமையை மறுத்தபடி நமது உரிமைக்காய் குரலெழுப்புகிறோம் நடக்குமா? அது வேறு இது வேறு கனி ருசியானது அருந்து அருந்து மரத்தில் தொங்கும் அதே பாம்பு உருவேற்றும்.

அரசாங்கம் இன்றைக்கு யுத்த வெற்றியைக் கொண்டாடுகிறது அல்லது நினைவு கூர்கிறது. ஆனால் இந்த யுத்த வெற்றியைப் பெறுவதற்காக எத்தனை ஆயிரக்கணக்கான ஏழைச்சிங்களவர்களின் வீடுகளுக்கு சவப்பெட்டிகளை வெகுமானமாக இனவாதம் அழித்திருக்கிறது.  உண்மையில் சிங்களவர்கள் வீடுகளில் இந்த நாளன்று யுத்தத்தில் இழந்த தங்கள் பிள்ளைகளை நினைக்காமல் உறவினர்கள் இருப்பார்களா? வெற்றிக் கொண்டாட்டங்களின் உற்சாக ஓசையில்,இராணுவ அணிவகுப்பின் சப்பாத்துக் குளம்பின் ஓசையில்,வெடிக்கப்படும் மரியாதை வேட்டுக்களின் பேரொலியில் மேலெழமுடியாது தேய்ந்தடங்கிப் போகிறது தாய்மாரின் விசும்பல். உண்மையில் வெற்றியைக் கொண்டாடுகிறவர்களுக்கு அதற்காகக் கொடுக்கப்பட்ட விலை தெரிவதேயில்லை ஏனெனில் அதை அவர்கள் செலுத்துவதில்லை. இந்த வெற்றி என்று அவர்கள் சொல்லிக்கொள்ளும் மனிதகுலத்தையே வெட்கம் கொள்ளவைக்கும் செயலுக்காக எத்தனை பேரின் மரணங்களை அந்தச் சின்னத்தீவுக்கு இராஜபக்ச குடும்பம் பரிசளித்திருக்கிறது.

இதே நிபந்தனைகள்தான் நமக்கும் ஒரு காலத்தில் பொருந்திப் போயிருந்தது நண்பர்களே. சமாதான காலத்தில் நம்முடைய ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்றத்தில் சாவல் விட்டார் “40000 சவப்பெட்டிகளை தயாராக வைத்திருங்கள்” என்று அப்போது யாழ்ப்பாணத்தில் இருந்த இராணுவ வீரர்களின் எண்ணிக்கையது. ஆனையிறவு புலிகளிடம் வீழ்ந்த போது உலகம் முழுவதும் பட்டாசுகள் வெடித்தன இனிப்புக்கள் பரிமாறப்பட்டன. அதே நேரம் நூற்றுக்கணக்கான வீடுகளில் சவப்பெட்டிகளுக்கு தாய்மார்கள் துணையிருந்தார்கள். ஆனால் பரிமாறப்பட்ட எந்த இனிப்பிலும் இந்தத் தாய்மாரின் கண்ணீரின் உப்புச் சுவடேயில்லை. வெற்றி ஆராவாரத்தில் துயிலுமில்லப்பாடல் ஒலியடங்கித் தேய்ந்தது. எப்படி இந்த உலகம் இத்தனை கொடுரமானதாய் சீவிக்கிறது? சவப்பெட்டிகளை தயார்ப்படுத்துங்கள் என்று சவால் விட்டவர் இன்றைக்கும் இருக்கிறார் அதே சவாலை அவர் எப்போதும், இன்னொரு சந்தர்ப்பத்திலும் விடத் தயாராயே இருப்பார் என்றே நான் நம்புகிறேன். ஏனெனில் அவருக்கு உறுதியாகத் தெரியும் களத்தில் செத்து மடியப்போவது தானல்ல என்பது.

என்னிடமிருக்கும்

இந்தச் சொற்கள்

சுயநலமிக்கவை….

பதுங்குகுழியின்

தழும்புகளை,

கண்ணிவெடியில்

பாதமற்றுப்போனவளின் பயணத்தை,

மற்றும்

வானத்தில் மிதந்த

ஒரு பேரிரைச்சலுக்கு

உறைந்து போன குழந்தையின் புன்னகையை…

நாளைக்கான நிபந்தனைகள் ஏதுமற்ற

ஓய்வுப்பொழுதொன்றில்

வெற்றுத்தாளில் அழத்தொடங்குகின்றன.

என்னிடமிருக்கும்

இந்தச் சொற்கள்

அயோக்கியத்தனமானவை.

துப்பாக்கிகளிடையில்

நசிபடும் சனங்களின் குருதியை

டாங்கிகள் ஏறிவந்த

ஒரு சிறுமியின் நிசிக்கனவை

மற்றும்

தனது ஊரைப்பிரியமறுத்த

ஒரு கிழவனின் கண்ணீரை

போரின் நிழல்விழா வெளியொன்றின்

குளுமையிலிருந்து

பாடத்தொடங்குகின்றன..

என்னிடமிருக்கும்

இந்தச் சொற்கள்

சுயநலமிக்கவை….

அயோக்கியத்தனமானவை…

ஆயினும் என்ன

பிணங்களை விற்பதற்கு முன்பாக

துயரங்களை விற்றுவிடுவதுதான்

புத்திசாலித்தனமாது..

இதை என்னுடைய வலைப்பதிவில் 2009 ஜனவரியில் போட்டிருக்கிறேன் அதற்கும் சில மாதங்கள் முன்பு எழுதியிருந்திருப்பேன். துயரங்களை விற்றுத் தீர்ந்து பிணங்களை விற்கும் காலத்தில் நாம் இப்போதிருப்பதாய் உணர்கிறேன்.

வென்றவர்கள் தோற்றவர்களாகவும் தோற்றவர்கள் வென்றவர்களாகவும் மாறி மாறிக் கொன்றதில். தமிழ்த்தாய்மார்களுக்குப் பிள்ளைகளுமில்லை அவர்களின் கல்லறைகளுமில்லை. கல்லறைகளைக்கூட விட்டுவைக்காத நாகரீகமற்ற நீசர்களாக இலங்கை ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். பிழைத்தலுக்காக பல்வேறு இடங்களில் மாவீரர் நாள் என்ற பெயரில் வசூலை இந்தப்பக்கத்தில் நடத்துகிறார்கள். இது இரண்டுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? அதை விடவும் பல பத்தாண்டுகளுக்கு முன்பே மண்ணுக்காய் போராட்டம் என்ற பெயரில் செத்துப்போன எத்தனையோ பேர் செத்தும் அங்கீகரிக்கப்படாதவர்களாய் தசாப்தங்கள் கடந்தும் ஒரு அனுங்கல் குரலில் நாங்களும் ஈழத்தமிழர்களுக்காய் இனவாதத்திற்கெதிராய்ப் போராடியவர்கள் தான் என்று முனகிக் கொண்டிருக்கிறார்கள்.

“மாண்ட வீரர் கனவு பலிக்கும் மகிழ்ச்சிக் கடலில் தமிழ் மண் குளிக்கும்” என்று கொத்துரொட்டிக் கடைப் பெயர்ப்பலகையில் எழுதிப் போட்டிருக்கிறார்கள். இதற்காகத் தானா இந்தவிலை? இதற்காகவா இத்தனை மரணங்கள்? உண்மையில் இந்தச் சமூகம் அந்த மரணங்களை மதிக்கிறதா? எல்லாவற்றையும் தங்களது இருப்பிற்கானதாகவும், பிழைத்தலுக்காகவும் , உணர்ச்சி அரசியலுக்காகவும் ஆகுதியாக்கிக் கொண்டிருக்கிற இந்தச் சமூகம் உண்மையில் இழந்தவர்களைப் பற்றி அக்கறை கொள்வதை விட்டு விட்டு. மரணங்களைக் கொண்டாடாமலிருக்கக் கற்றுக் கொள்ளட்டும். எல்லா இடங்களிலும் மரணத்தின் விளைவுகள் ஒன்றேதான் என்பதை இந்தச் சமூகம் அறிந்து கொள்ளட்டும். பெருமைப்படுத்திவிட்டாலோ அல்லது சிறுமைப்படுத்திவிட்டாலோ மரணம் அல்லது இழப்பு உருவம் மாறிவிடாது என்கிற உண்மையை ஏற்றுக்கொள்ளட்டும். ஆற்றுப் படுத்துதல் பற்றி பிறகு பார்க்கலாம்.

மே 19 2013 அன்று கனடாவில் இடம்பெற்ற மரணம் இழப்பு மலர்தல் நிகழ்வில் நிகழ்த்திய உரையில் எழுத்து வடிவம்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா?

Posted by த.அகிலன் on Feb 2nd, 2013
2013
Feb 2

சாத்திரக்காரர்கள்
தலைமறைவானார்கள்.

சனங்களின் பெரும்பிணி
சாத்திரியின் பரிகாரங்களில்
தீராதென்பதை
சாவு சனங்களை நெருக்கிய
மலந்தோய்ந்த கடற்கரையில்
பிணங்கள் மிதந்த கடனீரேரிகளில்
தம்மை நோக்கி இரண்டு பக்கங்களிலிருந்தும்
குறிபார்த்துக்கொண்டிருந்த துப்பாக்கிகளை அஞ்சிய இரவில்
சனங்கள் கண்டுகொண்டார்கள்.

சனங்களோடு சனங்களாய்
தப்பியோடும் அவசரத்திலும்
சாத்திரக்காரர்கள் பரிகாரப் புத்தகத்தை
குழிதோண்டிப் புதைப்பதற்கு மறந்திருக்கவில்லை.
போகுமிடம் எப்படியோ?
சூரியன் மேற்கில்தான் உதிக்குமோ?
நிலவு பகலில்க் காயுமோ?

போன பின்னர் பார்க்கலாம்.

முக்காடிட்டபடி
தமக்கு முன்னர் ஓடித் தப்பிய சாத்திரக்காரர்களைச்
சபித்தபடி சனங்கள் உத்தரித்தனர்.

ஊழி முடிந்தபின்னர்
பிழைத்தவர் உழன்றனர்.
சவமாய் உடல் சுமந்து
மெல்லத் திரும்புகிறது காலம்.

துவக்குகளுக்கு ஒளித்தொளித்தேனும்

சப்பாத்துக்கால்களின் இடுக்குகளின் வழியேனும்
பூக்கத்தான் செய்தது நித்திய கல்யாணி

சாத்திரக்காரர்கள் காத்திருந்தனர்.
சனங்கள் தெம்படைந்த ஒரு நாளில்
அவர்கள் மறுபடியும் தொடங்கினர்

ஒபாமா உச்சத்தில்..
பான்கீ முன் பக்கத்தில்
இந்தியா கக்கத்தில்
சீனாவோ வெக்கத்தில்
சிறீலங்கா துக்கத்தில்
கண்ணா லட்டு தின்ன ஆசையா?
சாத்திரக்காரரின் வசியக்குரல்
சனங்களை மயக்கத் தொடங்குகிறது.

எலும்புக்கூடுகளை விலத்தி விலத்தி

புதையல் தோண்டிய யாரோ ஒருவன்
கண்டெடுக்கிறான் சாத்திரக்காரர்களின்
பழைய பரிகாரப் புத்தகத்தை.

சாத்திரக்காரன்
அசராமல் சொன்னான்
அது போனமாதம்
இது இந்தமாதம்.

நன்றி வல்லினம் பிப்ரவரி இதழ்


BROTHERHOOD OF WAR

Posted by த.அகிலன் on Dec 10th, 2012
2012
Dec 10

390326-0வெறுமனே

எதிர்முனை இரையும்

என் கேள்விகளின் போது

நீ

எச்சிலை விழுங்குகிறாயா?

எதைப்பற்றியும்

சொல்லவியலாச்

சொற்களைச் சபித்தபடி

ஒன்றுக்கும் யோசிக்காதே

என்கிறாய்..

அவன் இறப்பதற்கு சில மாதங்கள் முன்னதான  தொலைபேசி உரையாடலின் பின் எழுதிய வரிகள் அவை.

யார் முதல் பற்றிங்? யார் சைக்கிள் ஓடுவது? யார் எடுத்திருக்கிறது பெரிய வாழைப்பழம்? இப்படி எதற்கெடுத்தாலும் சண்டைபிடித்துக்கொண்டேயிருந்தோம் சண்டை பிடிக்கவே பிறந்தது போலச் சண்டை, ஜென்ம விரோதிகளைப் போல. அவன் ஒரு முறை மயங்கி விழுந்த போது நான் அழுத கண்ணீர் எங்கிருந்தது? என்பது எனக்கே தெரியாது. எனக்குள்ளே புகுந்திருந்தது என்னை அழவைத்தது எது?அம்மம்மா சொன்னாள் “தானாடா விட்டாலும் தசையாடும்” சகோதரனைச் சினேகிதனாக்கும் வித்தைகள் தெரிந்தவர்கள் பாக்கியவான்கள். சினேகிதனோ? இலலையோ? நமக்கே தெரியாமல் நமக்கிடையில் ஓடிக்கொண்டிருக்கும் பிரியத்தின் அலைவரிசை ஆனந்தமானது, அலாதியானது. தம்பியைப் பற்றிய நினைவுகள் மீழெழுந்தபடியிருக்கிறது இன்றைக்கு. ஒரு கடற்கரையில் அவன் பிணமாய் மிதந்திருக்கக் கூடும் எனும்போது .. மேலே எழுதவேண்டாம் என்று தோன்றுகிறது. என்னுடை தம்பி மாத்திரமா? நிறையத் தம்பிகள், நிறையத் தங்கைகள் ஆனாலும் என்ன என்னைப்போலச் சகோதரங்கள் தானும் ஆடித் தசையும் ஆடிக் களைத்துச் சோர்ந்து விழத்தான் முடிந்தது. காப்பாற்றமுடியவில்லையே எனும் குற்றவுணர்வு நிழலைப்போலக் கூடவருகிறது. எப்படிக் கடப்பது அதை? சாகும் வரைக்கும் கடக்கவே முடியாதென்றுதான் தோன்றுகிறது. சகோதரனை இழப்பதென்பது உடலின் பாகமொன்றை இழப்பதைப் போலென்று அடிக்கடி நினைக்கிறேன். போர் என் சகோதரனைத் தின்றது. புலிகளால் கட்டாயமாக அவன் பிடித்துச் செல்லப்பட்டபோது கோழையாய் நான் தப்பிச் சென்னைக்கோடினேன். அதைவிடவும் எனக்குச் செய்வதற்கேதுமிருந்ததா எனவும் எனக்குத் தெரியாது? ஆனால் இன்றைக்கு அவனை இழந்தபின்னரான குற்றவுணர்விலிருந்து தப்பியோடும் திசைகளற்றவனாய் தடுமாறி நிற்கிறேன்.

tae-guk-gi-the-brotherhood-of-war-korean-flicks-9966602-400-172ஒரு தென் கொரியப் படம் The brotherhood of war கொரிய யுத்தம் பற்றியது. தென் கொரியாவில்  கட்டாயமாகப் படைக்கு இழுத்துச் செல்லப்படுகிற தம்பியைச் சாவிலிருந்து காப்பாற்ற அவனைப் படிப்பித்து பெரியாளாக்கோணும் என்கிற தன் அம்மாவின் கனவை நிறைவேற்ற, அண்ணனும் அவனோடே போகிறான். அதன் பிறகு சாவின் தருணங்களிலிருந்தெல்லாம் எப்படித் தம்பியைக் காப்பாற்றுகிறான் என்கிற கதையினூடாக யுத்தகாலத்தை, யுத்தத்தை, தென்கொரியாவின் படைகளை, அதன் அரசை விமர்சிக்கிறது அந்தப்படம். என் தம்பியை மற்றும் என்னை முன்னிறுத்தி அந்தப்படம் பெரும் துயரையும் கொந்தளிப்பையும் எனக்குள் நிகழ்த்தியது. உலகம் நம்மிலிருந்தே தொடங்குகிறது. நமது துயரங்களைப் போலவோ அல்லது நமது ஆனந்தங்களைப்போலவோதான் உலகத்தின் கண்ணீரும் புன்னகையும் இருக்கமுடியும் என்கிற புரிதலிருந்துதானே தொடங்கமுடியும் மனிதநேயம்.

போர் எல்லா இடங்களிலும் ஒன்றையேதான் உற்பத்தி செய்கிறது. அதுதான் சாவு. சாவுகளால் ஊரை நிறைக்கிற போர், திரை முழுதும் விரிகிற இரத்தம், காதுகளை நிறைக்கிற வெடிச்சத்தம், ஆன்மாவை அரித்துத் தொலைக்கிற போரின் நெடில் அவை துயரமானவை.  மனதை வெடித்துவிடச்செய்யும் பாரம் நிறைந்த துயரத்தை திரைகளின் சித்திரங்களில் அசையவைப்பதன் சாத்தியங்கள் சொற்பமே. ஆனாலும் இந்தப்படம் இதயத்தை உலுக்குகிறது. ஒரு துளி கண்ணீரை, உதடுகளின் விம்மலை, போர் உற்பத்தியாளர்களின் மீதான  கசப்பை பார்வையாளனிடம் விட்டுச் செல்கிறது.

துவக்குகள் திணிக்கப்பட்ட சிறுவர்கள், துரோகிகளால் நிறையும் சவக்குழிகள், நிலம் விட்டுத் துரத்தப்படும் சனங்கள், கூட்டம் கூட்டமாக சரணடைந்த எதிரிப்படைகளைக் கொல்லும் போர்க்குற்றங்கள் என்று எல்லா யுத்தங்களும் ஒரே மாதிரியானவையே.

“நீ வீரமாகப் போரிட்டாயானால் ஒரு மெடலுக்குத் தகுதி பெற்றவனானாயானால் உன்னுடைய தம்பியை வீட்டுக்கனுப்பிவிடுகிறேன். முன்பு ஒரு தந்தை தன் மகனைக் காப்பாற்ற அவ்வாறுதான் செய்தார் என்று தளபதி அண்ணனிடம் கூறுகிறான். அந்தக்கணத்திலிருந்து தன் தம்பியைக் காப்பாற்றப் போகும் பதக்கத்துக்காக அதற்காகவே தன்னுடைய உயிரைப் பணயம் வைத்து ஒரு யுத்த வெறியனைப் போல வட கொரியர்களைக் கொல்லுவதே தன்னுடைய லட்சியம் என்பதைப்போல தமையன் போரிடுகிறான். தன்னுடைய தளபதியை திருப்திப் படுத்துவதற்காக தங்களுடைய பால்ய நண்பனான ஒரு சரணடைந்த வடகொரியப் படைச்சிறுவனை (அவனும் கட்டாயமாகப் படையில் சேர்க்கப்பட்டவனே) அவனை கொல்லவும் துணிகிறான் அண்ணன். இதனால் தம்பி அவனை வெறுக்கவும் செய்கிறான். தம்பி அண்ணன் வெறும் பதக்கத்துக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு இதனைச் செய்கிறான் என்று கோவித்துக் கொள்கிறான். உன்னுடைய இதயத்தை எங்கே தொலைத்துவிட்டாய் நீ மாறிவிட்டாய் என்று அண்ணனிடம் வெறுப்படைகிறான். அண்ணனைக் குற்றவுணர்வுக்குள்ளாக்க தன்னைத் தானே சில சமயங்களில்  சில சமயங்களில் வருத்திக்கொள்ளவும் செய்கிறான் தம்பி.

ஒரு காட்சியில் தென் கொரியாவுக்கு உதவுவதற்காக வந்திருக்கிற அமெரிக்கப்படைகளிடம் இருந்து கொஞ்ச சொக்லேற்றுக்களை வாங்கிக் கொண்டு வருகிற அண்ணன் அதிலொன்றை தன் தம்பியிடம் கொடுக்கிறான். படத்தின் ஆரம்பத்தில் ஐஸ் பழம் விற்கிறவரிடம் இருந்து தன் தம்பிக்கு எவ்வளவு ஆசையாக ஒரு ஐஸ்பழத்தை வாங்கிக் கொடுப்பானோ அதைப்போல அந்த சொக்லேட் பாரையும் அவனிடம் கொடுப்பான். யுத்தகளத்திலும்,  சுற்றிலும் நிறைகிற மரணங்களின் மத்தியிலும், விரட்டுகிற கட்டளைகளிற்குள்ளும் தமையனிடம் மிதக்கிற சகோதர வாஞ்சை மனதைப் பிசைகிறது.

taegukgi1ஒருநாள் தென்கொரியப் படையினரே கம்யூனிஸ்டுகளின் ஊர்வலத்துக்கு போனாள் என்று அண்ணனின் காதலியை பிடித்துச் செல்வார்கள். தம்பி அவளைக் காப்பாற்றப் போவான். அண்ணின் காதலியை சுடுவதற்காக வரிசையில் நிறுத்தி வைத்திருப்பார்கள். தன் இராணுவமே இந்தப் படுகொலையைச் செய்வதை தம்பி தடுப்பான். அவர்கள் அவனை நீயும் துரோகியா என்று கேட்பார்கள். இதற்கிடையில் அண்ணனும் வந்து சேர்ந்து கொள்வான் இருவருமாய் அவளைக் காப்பாற்ற தங்கள் சொந்த இராணுவத்தின் புலனாய்வுத் துறையினரிடமே சண்டையிடுவார்கள். அவர்கள் தமையனின் மெடலைப் பார்த்ததும் அவனிடம் சொல்லுவார்கள் இவள் துரோகி கம்யூனிஸ்டுகளின் ஊர்வலத்துக்குப் போயிருக்கிறாள் என்பான். அவளோ நானும் உன் தாயும் என் சகோதரர்களும் பசியாயிருந்தோம் ஊர்வலத்தில் அவர்கள் சாப்பாடு கொடுத்தார்கள் அதனால் போனேன் மற்றும்படி நான் எதுவும் செய்யவில்லை நம்பு என்று சொல்லுவாள். அண்ணனாலும் தம்பியாலும் எதுவும் செய்யமுடியாமல்  அவளை அவர்களின் கண்ணெதிரே சுட்டுக்குழியில் தள்ளுவார்கள். தங்களை எதிர்த்தான் என்பதால் தம்பியையும் அவர்கள் சரணடைந்த எதிரிப்படையினரோடு  சேர்த்து அடைத்து வைத்து தீயிட்டு கொழுத்தியும் விடுவார்கள். தம்பியை தன் சொந்த நாட்டு இராணுவமே கொன்று விட்டதே என்று அண்ணன் ஆத்திரமுற்று எதிரிகளோடு சேர்வான்.

ஆனால் தம்பி யாரோலோ காப்பாற்றப்பட்டு உயிரோடு ஒரு வைத்தியசாலையில் இருப்பான். தான் இறந்து விட்டதாகக் கருதித்தான் அண்ணன் எதிரிகளோடு சேர்ந்து விட்டான் என்பதை ஒரு கட்டத்தில் தம்பி தெரிந்து கொள்வான். அவன் அண்ணனைத் தேடி யுத்தம் தீவிரமாக நடந்துகொண்டிருக்கும் போது எதிரிகளின் முன்ணணி காவலரணுக்கு செல்வான். அங்கே தமையனிடம் நான் உயிரோடிருக்கிறேன். வா அம்மா நமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறாள். நான் பள்ளிக்கூடம் போகவேண்டும் நீ என்னோடு வா என்று கேட்கிறான். நீ இப்போது போ.. நான் நிச்சமாக வருவேன் என்று சொல்லி அவனைத் தமையன் அனுப்பி வைத்துவிடுகிறான்.

எனக்கு பவா மச்சாளினதும் ஜெகா மச்சாளினதும் நினைவு வருகிறது. ஜெகா மச்சாள் ஒரு நாள் இயக்கத்துக்கு போய்ட்டாள்  அன்றிலிருந்தே  மாமா வீடு செத்த வீட்டைப்போல இருந்தது. மாமா ஒப்பாரி வைத்தே அழுதுகொண்டிருந்தார். மாமி பவி மச்சாளோட ஏதோ இயக்க பேசுக்கு முன்னால நிண்டு அழப்போட்டா.  சில வேளைகளில் பொறுப்பாளர்களின் மனதைத் தாய்மாரின் கண்ணீர் கரைத்த காலம் அது. அந்த நேரத்தில மாமாட இன்னொரு மகளான பவா மச்சாளும் இயக்கத்துக்கு போயிட்டா.. மாமா வீடே கதி கலங்கிப்போனது. ஒரே நேரத்தில் இரண்டு பிள்ளைகள் இயக்கத்திற்குப் போவதென்பதைவிடத் துயரமானது ஒரு குடும்பத்திற்கு வேறெதுவும் இல்லை. இயக்கத்துக்கு போவதென்பது மரணத்தை நோக்கிப் போவது. மரணத்தை விரும்பி ஏற்பது. கத்தி எடுத்தவன் கத்தியாலயே சாவான் என்பது போல துவக்கெடுத்தவன் துவக்காலதான் சாவான் எண்டு மாமா அடிக்கடி சொல்லுவார். இரண்டு பேரும் இயக்கத்துக்கு போன பிறகு மாமா தாடி வளர்த்துக் கொண்டு திரிஞ்சார்.. அந்தத் தாடி பெரிதாகிக் கொண்டேயிருந்தது அவரது துயரம் போல. பார் மகளே பார்… போன்ற சிவாஜி படத்துச் சோகப்பாட்டுக்களை பெரிதாகப் போட்டுக் கேட்டுக்கொண்டிருந்தார் மாமா. ஒரே வீட்டில இரண்டு பேர் ஒரேயடியாய் இயக்கத்துக்கு போறதென்பது மிகவும் துயரமானதுதான் அது ஒரு பெரிய விசயமாகக் கிராமத்தில் பேசப்பட்டது.  ஆனால் கொஞ்சக் காலம் கழித்து மாமாவின் இரண்டு பிள்ளைகளுமே இயக்கத்திலிருந்து ஓடி வந்தார்கள். ஒரு நாள் சாமம் இரண்டு மணிக்கு யாருக்கும் தெரியாமல் ஒராளை எங்கட வீட்டையும் ஒராளை பெரியம்மா வீட்டிலும் ஒளிச்சு வைத்திருக்கச் சொல்லி விட்டிட்டு போனார் மாமா. அதற்குப்பிறகுதான் பவா மச்சாள் சொன்னா நான் ஜெகாவை திரும்ப வீட்ட கூட்டிக்கொண்டு வாறதுக்காகத்தான் நான் இயக்கத்துக்கே போனான் என்று. ஆனால் அதெல்லாம் கட்டாயமாக ஆட்பிடிப்பு நிகழாத காலம் விருப்பத்தின் பேரில் மட்டுமே இயக்கத்துக்கு பிள்ளைகள் சேர்ந்த காலம். கட்டாயமாக ஆட்பிடிக்கும் காலத்தில்  எந்தத் தாயின் கண்ணீரும் பொறுப்பாளர்களின் இதயத்தை கரைக்கமுடியவில்லை. யாராலும் அவர்களிடமிருந்து தப்பியோடிவந்துவிடமுடியாதிருந்தது. யூரோக்களும், கல்வீடு வளவும் சொத்துக்களும் பொறுப்பாளர்களின் இதயங்களைமட்டுமல்ல வன்னியை விட்டு வௌியேறும்  வழிகளையும் திறக்கவல்லனவாய் இருந்தது. ஏழைச் சனங்களின் கண்ணீரை உதாசீனம் செய்யதபடி அவர்களது புன்னகைக்கானதெனச் சொன்னபடி துவக்குகள் சுட்டன.

எனக்கு The brotherhood of war படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது. இந்த அண்ணனும் தம்பியும்  எனக்கு பவா மச்சாளினதும் ஜெகா மச்சாளினதும் நினைவு படுத்தினர். கூடவே இயக்கத்தில் சேர்ந்து மாவீரர்களாகிப்போன ஒரே வீட்டின் பிள்ளைகள் அத்தனை பேரின் நினைவும் வந்தது. ஓரே சண்டையில் அடுத்தடுத்த நாள் செத்துப்போன ஒரே குடும்பத்தின் சகோதரர்களும் இருக்கிறார்கள். எல்லாரையும் விதைத்தோம் எதனை அறுவடை செய்தோம்? குருதி விட்டு வளர்த்தோம், கண்ணீரால் கழுவினோம் யார் யாரோ கொலரைத் தூக்கிக்கொள்ள மண்தின்ற பிள்ளைகளை சுமந்த வயிறுகளிடம் கனன்றுகொண்டிருக்கும் தீயை காலத்தின் எந்தப் பெருங்காற்றும், எந்தப் பெருநதியும் அணைக்காது. அணைக்கவும் முடியாது.

தவிப்பு என்று வன்னியிலிருந்து வெளியான முல்லை யேசுதாசனின் படமொன்றும் இருக்கிறது. அதுவும் மிக முக்கியமான படம். கரும்புலியாய் தம்பி போவான். அவனது படகினைத் தள்ளிக் கடலில் இறக்கும் குழுவில் அவனது சொந்தச் சகோதரியே இருப்பாள். கரும்புலிப்படகு தினமும் சரியாக இலக்கை அடைய முடியாமல் திரும்ப வந்து கொண்டேயிருக்கும். அப்போது கரும்புலியாய் இருக்கும் தம்பிக்காரன் தமக்கையிடம் சொல்லுவான்

“நீ அழுது கொண்டு படகு தள்ளுறதாலதான் எனக்கு இலக்கு கிடைக்குதில்லை இனிமேல் நீ படகு தள்ள வரவேண்டாம்”

தமக்கை கவலையோடு இருப்பாள். பிறகு கொஞ்ச நேரம் கழித்து அவனே திரும்பவும் அவளிடம் வந்து சொல்லுவான்

“சரி சரி அழாம வந்து தள்ளு. ஆனால் இண்டைக்கும் எனக்கு இலக்கு கிடைக்கேல்ல எண்டால் என்ர கண்ணுக்கு முன்னால வராத நான் உன்னை பார்க்கவும் மாட்டன் கதைக்கவும் மாட்டன்”

அவள் சொல்லுவாள் “உனக்கு இலக்கு சரியாக அமைந்தாலும் என்னால் உன்னைப் பார்க்கவோ கதைக்கவோ முடியாது தானேடா..”

ஒரு கனத்த மௌனத்தோடு கோவமா கவலையா என்று தெரியாமல் அவன் போவான். ஆனால் அன்றைக்கும் இலக்கு கிடைக்காது.

அடுத்தநாள் காலையில் படகு கடலில் இறக்கப்படும் போது அவன் அக்காவைத் தேடுவான் அவள் தொலைவில் நடந்துகொண்டிருப்பாள். இலக்கு கிடைக்கும். இது ஒரு உண்மைச் சம்பவம் என்பதோடு முல்லையேசுதாசனின் தவிப்பு படம் முடியும்.

மென்று விழுங்கப்பட்ட வழியனுப்புதல்களின் வடு எதனால் ஆற்றப்படக்கூடியது. தியாகங்களைக் கொண்டாடுவதால் மட்டுமே இந்தக் காயங்கள் ஆறுமா? தியாகத்தின் விலையென்ன? மேலும் மேலும் தியாகங்களைக் கோருவதா? அப்படியிருக்கமுடியாது. அவை புன்னகைகளையே யாசித்திருக்க முடியும். இன்னும் நம்மிடையே மீந்திருக்கும் தவிப்புகளின் தீர்வென்ன. தவிப்பையும் கண்ணீரையும், தியாகங்களையும் யார் அறுவடை செய்தார்கள்? யார் சுகித்திருந்தார்கள்? காலத்தின் கறைபடிந்த, ஆன்மாவை வெட்கப்பட வைக்கிற கேள்விகள் இவை. யாரிடமும் பதிலற்று நழுவிக்கொண்டிருக்கிறது காலம் நம் காலடியில். உறுதியளிக்கப்பட்ட மீள்வருகைகளுக்காக அம்மாக்களும், அப்பாக்களும், மனைவிகளும், குழந்தைகளும், சகோதரர்களும் காத்திருக்கிறார்கள்.

ஒரு சண்டையின் முடிவில் The brotherhood of war படத்தின் தம்பி தன் தமையனிடம் சொல்லுவான் “நான் இதெல்லாம் ஒரு கனவென்று நம்பவிரும்புகிறேன். காலையில் எனது படுக்கையிலிருந்து விழித்துக்கொண்டு. காலை உணவருந்துகையில் இந்தக் கொடுரமான கனவைப்பற்றி உன்னிடம் சொல்லி ஆச்சரியப்பட்டபடி பாடசாலைக்குப் போகவிரும்புகிறேன்” அவன் இப்படிச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஓரு குண்டு அவர்களின் பின்னால் விழுந்து வெடிக்கிறது. அண்ணனும் தம்பியும் பதறியடித்துக்கொண்டு பங்கருக்குள் ஒடுகிறார்கள்.

எல்லாவற்றையும் கனவென்று நினைக்கவே எனக்கும் விருப்பம். கால்களின் இழுப்பிற்குள் நுழைந்துவிட்ட பயணத்தின் திசைகளை கால்களே தீர்மானிக்கின்றன. யுத்தம் எதையும் மிச்சம் வைக்காமல் தின்றும் பசியடங்காமல் அலைகிறது. தம்பியுடையான் படைக்கஞ்சான் என்று மாமா அடிக்கடி சொல்லுவார். காலத்தின் எல்லா முடிச்சுகளும் இறுகி குற்றவுணர்வின் தாழ்வாரத்தில் ஒதுங்கிக் கிடப்பதைத் தவிரவும் வேறேதுவும் விதிக்கப்படாத தம்பியிழந்தான்கள் விழித்தபடியிருக்கிறோம் யாரைச் சபிப்பதெனத்தெரியாமல்.. திரும்பி வருவதாய் வாக்குறுதியளித்த தமையனை எண்ணித் தன் முதிய வயதில்  அழுதபடியிருக்கிறான். The brotherhood of war  படத்தின் தம்பி. ஒளியற்று நிறைகிறது திரை.

நன்றி காலம் 22வது ஆண்டுச் சிறப்பிதழ்

“தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்”

–    பைபிளிலிருந்து

பொங்குதமிழ் இணையத்தில் வெளியான அனுபவங்களின் காயத்தினை கேள்வி ஞானத்தினால் கண்டடைய முடியாது என்னும் என்னுடைய கட்டுரைக்கு பதிலாக யமுனா ராஜேந்திரன் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். அதைப் பதில் கட்டுரையாகப் பார்ப்பதா அல்லது சேகுவேரா நுழைந்தேயிராத கிறிஸ்தோபரின் வீடு என்ற தன் முன்னைய கட்டுரையில் யமுனா ராஜேந்திரன் என்னென்ன சொற்களை தான் என்னவிதமான அர்த்தங்களின் பயன்படுத்தினார் என்பதற்காக வழிகாட்டல் குறிப்பாகப் பார்ப்பதா என்றெனக்கு குழப்பமாகவே இருக்கிறது.

எப்போதும் எவரதும் சொற்களுக்கான இன்னோர் அர்த்தம் எதிராளியின் மனதில் ஒளிந்திருக்கிறது  என்பதை யமுனாராஜேந்திரன் அறியார் போலும். வயதாவதால் ஏற்பட்ட மறதியாய் இருக்கலாம். சின்னப் பொடியனான எனக்கு அது நினைவில் இருக்கிறது. அவரது கட்டுரையை நான் படித்திருக்கவில்லை என்று குற்றம் சாட்டும் யமுனா ராஜேந்திரன் எனது கட்டுரையில் தலைப்பைத் தவிர வேறெதையும் படித்திருக்க மாட்டார் போல. த. அகிலன் என்ற பெயரைப் பார்த்ததுமே வழக்கமாக எல்லாக் காலாவதியானவர்களுக்கும் வருகிற கோவம் யமுனா ராஜேந்திரனுக்கும் வருகிறது பொடிப்பயல் என்னைக் கேள்வி கேட்பதா? அந்த மனப்பிரச்சினையை தத்துவார்த்தப் பிரச்சினையாக்கி, சொற்களின் அர்த்தங்களைக் கட்டுரையாக எழுதிமுடித்துவிட்டுத்தான் மூச்சே விட்டிருப்பார் என்று நினைக்கிறேன்.

யமுனாராஜேந்திரனின் கட்டுரையைப் படித்ததும் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க சிரமப்பட்டபடி எப்போதோ ஒரு காலத்தில் சண்டியராய் இருந்த அதே நினைப்பில் முறைத்துப் பார்த்தபடி நிற்கிற பென்சன் எடுத்த பிரின்சிப்பலின்ர தோற்றமே கண்முன்னால் வந்தது. அவர் என்னை சின்னப்பொடியன் என்று சொன்னதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே. ஏனெனில் ஈழத்தமிழர்களின் வரலாற்றில் சின்னப்பெடியன்களின் பாத்திரம் மிகவும் முக்கியமானது. சின்னப் பெடியன்களே காலம் முழுதும் வரலாற்றை முன்னகர்த்துகிறவர்களாக இருக்கிறார்கள், இருப்பார்கள். அரசியல் சூழலை விளங்கிக் கொள்வதற்கு நான் ஒரு கதையை எப்போதும் நினைவுகொள்வதுண்டு. யமுனா போன்ற தங்களைத் தத்துவ அறிஞர்களாக் கருதிக் கொண்டு யார் யாருடைய காசுக்கோ ஜிங் ஜக் .. அடிப்பவர்களைப் பார்த்தால் எனக்குடனே அந்தக் கதைதான் நினைவுக்கு வரும். அதுவும் ஒரு சின்னப் பொடியன் பற்றிய கதைதான்.  அந்தக் கதையை இங்கே எழுதி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை ஏனெனில் யமுனாவுக்கு கொடுப்பதைப் போல எழுதுவதற்குக் காசு தருவதற்கு எனக்கு யாருமில்லை. நான் வெல்பெயராரும் அடிக்க முடியாது. ஆக கதைச் சுருக்கும்.. உலகத்திலேயெ அழகான ஆடையைத் தயாரிக்கிறோம் என்று அரசனின் காசில் சந்தோசமாயிருந்துவிட்டு இரண்டு நெசவுத் தொழிலாளிகள் அறிவுள்ளவர் கண்களுக்கு மட்டுமே அந்த ஆடை தெரியும் என்று சொல்லி வெறுந்தறியைக் காட்டுவார்கள். யமுனா ராஜேந்திரன் மாதிரி தத்துவஞானிகள்!, புலவர்கள், அமைச்சர்கள் என்று பெருங்கூட்டம் ஆஹா ஓஹோ என்று வெற்றுத் தறியைப் பார்த்துப் புகழக் கடைசியில் அரசன் அம்மணமாய் ஊர்வலம் போவான். அப்போது கூட்டத்திலிருந்து ஒரு சின்னப் பெடியன் கத்துவான் அரசன் அம்மணமாயெல்லோ போறான் என்று. இந்தக் கதைதான் எனக்கிப்போதும் நினைவுக்கு வருகிறது. சின்னப் பெடியன்களே மெய்யைச் சொல்லுகிறார்கள் எனவே என்னைக் சின்னப் பெடியன் என்று சொன்னமைக்காக உங்களுக்கு நன்றி யமுனா.

சொற்களை எப்படிக் கையாள்வது என்று யமுனா ராஜேந்திரன் சொல்லித்தருகிறார். அவரது பெருங்கருணைக்கு நன்றி. எந்தப் பொருளையும் விற்கிறவர்கள் அதை அழகாகவே காட்சிப்படுத்த வேண்டும் அப்படியல்லாவிட்டால் எப்படிப் போணியாகும். எனக்கு அது அப்படியல்ல. யமுனா ராஜேந்திரனே ஒத்துக்கொண்டபடி யமுனா ராஜேந்திரன் எழுதி வாழ்கிறவர். அல்லது எழுதி வாழும் வாய்ப்புப் பெற்றவர். நாங்கள் வாழ்ந்ததை அல்லது வாழ்க்கையைத் தான் எழுதுகிறோம். எங்களுக்கிடையிலான வித்தியாசம் இங்கேதான் இருக்கிறது யமுனா. நீங்கள் எழுதுவதற்கான விசயங்களைத் தேடுகிறீர்கள் நாங்கள் எங்களிடமிருக்கும் விசயங்களையே முழுமையாக எழுத முடியாமல் உள்ளே அமுங்கிக் கொண்டிருக்கிறோம்.

அனுபவத்திற்கு ஏகத்துவம் கோருகிறோம் என்று சொல்கிறார் யமுனா ராஜேந்திரன். அப்படி அர்தப்பட எதையாவது எழுதித் தொலைத்திருக்கிறேனா என்று மறுபடியும் பார்த்தேன் அப்படியெதுவும் எழுதவில்லை. உண்மையில் நான் கர்ணன் எழுதியிருப்பது அனுவம் என்று சொன்னேனே தவிர வேறு யாருக்கும் அனுபவமே கிடையாது என்று சொல்லவில்லை.  இலட்சோப லட்சம் தன்னிலைகளின் அனுபவத்திற்றுப் பதிலியாக எங்களுடைய அனுபவங்களைக் கோருகிறோம் என்று சொல்கிறீர்கள். நான் எழுதியிருப்பது இதுதான்.

புள்ளி விபரங்கள் குருதி சிந்துகிறதோ இல்லையோ? கதைசொல்லிகள் அவற்றை குருதி சிந்த வைக்கிறார்களோ இல்லையோ? எனக்குத் தெரியாது? ஆனால் புள்ளிவிபரங்களின் தானங்களிலொன்று பேசுவதே காலத்தின் குரலென்று நான் நம்புகிறேன். அப்படிப் பார்த்தால் அம்னஸ்டி அறிக்கை, .நா அறிக்கை போன்ற பல அமைப்புகளின் அறிக்கைகளின் புள்ளிவிபரங்களின் தானங்களில் ஒன்று கர்ணனுடைய தலையும். மேசைகளில் இருந்து கொண்டு புள்ளி விபரங்களை அலசி ஆராய்ந்து துவைத்துக் காயப்போட்டு. நடந்து முடிந்த ஈழப்போரை எழுத்துக்களாகவும், மிஞ்சி மிஞ்சிப்போனால் காட்சிகளாகவும், வதந்திகளாகவும் தெரிந்து வைத்துக்கொண்டிருக்கும் கேள்விச் செவியர்கள் கண்டடையும் மெய்யை விடவும் மேலானதாகவே இருக்கும், மேற்குறித்த புள்ளி விபரங்களின் தானங்கள் ஒன்றினது வாக்குமூலத்தில் வெளிப்படும் மெய். புள்ளி விபரங்களின் தானமாயிருப்பதன் சங்கடமும் வலியும் கேள்வி ஞானத்தால் கண்டடைய முடியாதவையே ஆகவே அவற்றை யமுனா ராஜேந்திரன் கண்டடையவில்லை என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

நான் இங்கே புள்ளி விபரங்களின் தானங்களிலொன்று என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன். அதே போலப் புள்ளி விபரங்களின் தானங்களின் மற்றொன்று பேசுவதையும் நான் நிராகரிக்கவேயில்லை. இவற்றில் எங்கேயிருந்து இலட்சோபலட்சம் தன்னிலைகளின் அனுபவத்திற்கு பதிலியாக கர்ணனுடைய அனுபவங்கள் இருக்கின்றன என்கிற அர்த்தத்தை நீங்கள் கண்டடைகிறீர்கள் என்றெனக்குத் தெரியவில்லை. அல்லது கட்டுரையை நீங்கள் படிக்காமல் யாரும் கவனத்துக்குக் கொண்டுவருபவர்களின் வாயிலிருந்து வந்ததைக் கேட்டு எழுதிவிட்டீர்களா?

யமுனா ராஜேந்திரன் போன்ற வெளியாட்களுக்கு அல்லது அவரது சொற்களிலேயே பங்கேற்பாளருக்கு அனுபவம் கிடையாதுதான் பங்கேற்பாளருக்கிருப்பதும் கேள்விஞானமே. உண்மையில் வன்னியில் இடம் பெற்ற போரைப்பற்றி எக்கச்சக்கமான வாக்கு மூலங்கள் வருகின்றன. நாங்கள் எதை மறுத்திருக்கிறோம் எதையுமே மறுத்ததில்லை. அவை ஏன் மிச்சப் பகுதி உண்மைகளைப் பேசவில்லை என்று கேள்வி கேட்டதில்லை. ஆனால் நீங்கள் கேட்டீர்கள். அதனால் தான் நான் என்னுடைய முந்தைய கட்டுரையில் இப்படி எழுதியிருந்தேன்.

பகுதி உண்மைகள் தொடர்பில் நீங்கள் நிறையக் கவலைப்படுகிறீர்கள். ஏன் கர்ணன் பகுதி உண்மைகளை எழுதுகிறார் மிகுதி உண்மையையும் எழுத வேண்டியதுதானே என்று சர்வசாதாரணமாக கேட்கிறீர்கள். வரலாற்றை சம நிலையுடன் பயில நினைக்கும் நீங்கள், கர்ணன் சொல்லாததாகச் நீங்கள் சொல்லும் மிகுதி உண்மைகளை (அரச தரப்பு பிழைகளை மட்டும்) பேசுவோரிடம் என்றைக்காவது அவர்கள் சொல்லாமல் விட்ட மிகுதி உண்மைகள் தொடர்பில் கேள்வியெழுப்பியதுண்டா? அல்லது வரலாற்றை சமநிலையுடன் பயில்வதென்பதை நிபந்தனைகளுக்குட்பட்டுத்தான் பாவித்துக்கொண்டிருக்கிறீர்களா? உண்மையில் கர்ணன் விடுதலைப் புலிகளின் இருண்ட பக்கத்தை மட்டும் பேசுபவரல்ல என்பதை கர்ணனுடைய கதைகள் குறித்த உங்களுடைய வகைப்பாடுகளின் வழியே நிறுவ முடியும். புலிகளின் பெயர்களை வெளிப்படையாகச் சொன்ன மாதிரி ஏன் தாடிக்காரர்களின் பெயர்களை பகிரங்கமாகச் சொல்லவில்லை? கர்ணன் எப்படி புலிகளின் ஆளுகைக்குள் இருந்த போது எப்படி அவர்களின் பெயர்களைச் சொல்ல முடியாதோ அதே போலத்தான் இப்போதும் அவர் இருப்பது தாடிக்காரர்களின் ஆளுகைப் பகுதிக்குள்.

கட்டுரையில் நான் கேட்ட கேள்விகள் எல்லாவற்றையும் “அகிலன் நக்கலடிக்கிறார். நையாண்டி பண்ணுகிறார்” என்று சாதுர்யமாகக் கடந்து போகிறீர்கள். முன்னைய கட்டுரையையும் சேர்த்தே மறுபடியும் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எல்லா வற்றையும் கொப்பி பேஸ்ட் செய்து எனது நேரத்தையும் வாசிக்கிறவர்களின் நேரத்தையும் வீணடிக்க எனக்கு விருப்பமில்லை. உங்களுக்கு வாசிப்பதற்கு காசுதரவும் யாரேனும் இருக்க முடியும். இல்லாவிட்டாலும் வாசித்துத் தானே ஆனவேண்டும். அல்லது ஐந்து கட்டுரைகள் எழுதியவரின் ஆறாவது கட்டுரையைப் படிக்கமாட்டேன் என்று நீங்கள் அழிச்சாட்டியம் செய்தால் நானொன்றும் செய்யமுடியாது. எழுத்தென்பது எண்ணிக்கையின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படுகிறதென்பதை எந்தத் தத்துவத்திலிருந்து தாங்கள் கண்டடைந்தீர்கள் என்று நானறியேன். நான் இரண்டாயிரங்களின் ஆரம்பத்தில் எழுத வந்தவன் என்கிற அர்தத்தில்(அதை உங்களது கவனத்துக்கு கொண்டு வந்தவர்கள் வாழ்க)  எனது கடந்தகாலத்தை பெரிய மனது வைத்து பன்னிரண்டு ஆண்டுகளாக்கியிருக்கிறீர்கள். எனது காலம் எழுதுவதிலிருந்து ஆரம்பிக்கிற ஒன்றல்ல. எழுத்தையும் தாண்டிய கடந்தகாலம் எனக்குண்டு. எழுத வந்திருக்காவிட்டாலும் உங்களால் மறுக்கமுடியாத கடந்தகாலம் எங்களுக்கிருக்கிறது.எழுத்தைக் கழித்தும் அகிலனுக்கு அடையாளங்கள் உண்டு.

ஆதவன் தீட்சண்யா, தமிழ்ச்செல்வன், அவர்கள் சார்ந்திருக்கிற கட்சி இதெல்லாம் யமுனா ராஜேந்திரனை அவருக்குள்ளிருந்து குடைகிற பிரச்சினைகள் என்பதால் அதைச் சொறிந்து விடாமல் உதாசீனம் செய்து கடந்து போகிறேன். தமிழகம் தொடர்பான அவருடைய எந்த அபிப்பிராயத்தையும் யமுனா பதிவு செய்து நான் பார்த்ததில்லை. கூடங்குளம் விவகாரம் போன்ற விவகாரங்களில் ஏன் யமுனா கருத்துச் சொல்வதில்லை என்கிற கேள்வியும் எழுகிறது. அவற்றிலெல்லாம் ஏன் தாங்கள் பங்கேற்பதில்லை யமுனா. அதற்கும் ஏதாவது தத்துவார்த்தக் காரணங்கள் இருக்கிறதா?

புலியெதிர்ப்பிலக்கியம் குறித்து நான் சொன்னது பொருளாதார ரீதியிலானது மட்டும் அல்ல அகிலன் அதையும் தவறாகப் புரிந்து கொண்டார். என்று தான் எழுதிய அதையும் விட்டுவைக்காமல் விளக்கவுரை ஈந்திருக்கிறார் யமுனா ராஜேந்திரன். அவரது வருத்தம் புரிந்து கொள்ளக்கூடியதே.  தமிழக இந்திய ஊடகங்கள் விடுதலைப்புலிகளின் இருண்மைப் பக்கத்தை( இருண்மை என்பது யமுனா ராஜேந்திரன் கையாண்ட சொல்) பதிவு செய்ய வாய்ப்பளிக்கின்றனவே என்கிற ஆதங்கம் அவரிமிடம் மிகுதியாகவேயிருக்கிறது. பழைய முதலாளிகள் அல்லவா அவர்கள். ஆனாலும் வருந்த வேண்டியதில்லை யமுனா நீங்கள் சொல்வதிலும் ஒரு பகுதி உண்மை இருக்கவே செய்கிறது. ஆனாலும் நீங்கள் சொல்வது போல ஆயுதப் போராட்டத்தின் இருண்டகாலத்தை பேசுவதற்கான வாய்ப்புக்களை விடவும் அதனை ஆதரித்துக் காவடி எடுப்பவர்களுக்கான அரசியல் பொருளாதார வாய்ப்புக்களே பிரகாசமாக இருக்கிறது. ஒரு பட்டியலைத் தயார் செய்து பாருங்கள் எத்தனை எதிர்ப் படைப்புகள் வந்திருக்கின்றன. எத்தனை ஆதரவுப் படைப்புக்கள் வந்திருக்கின்றன. எதிர்ப்பாளர்களுக்கான ஆதரவுத் தளமா அல்லது புலி ஆதரவாளர்களுக்கான அரசியல் ஆதரவுத் தளமா பெரியதும் பலமானதும்.  அந்தத் தரவுகளிலிருந்து உங்களுடைய மனாசாட்சி விடை பகிரும் இந்தக் கேள்விக்கு.

இன்னுமொரு பிரச்சினை சிங்கள தமிழ் அரசியல் தலைமைகள் சேகுவேராவின் புரட்சிகர ஆன்மாவைத் தீண்டவே முடியாது? என்று உங்களுடைய கட்டுரையில் நீங்கள் எழுதியிருந்தீர்கள். அந்த வாக்கியத்தில் பிரபாகரனைப்  பிரதியிட முடியாதா என்று அர்த்தப்பட நான் கேட்டால். ஆரம்பகட்ட புரிதல் என்று மழுப்புகிறீர்கள். எது ஆரம்பகட்ட புரிதல். பிரபாகரன் ஒரு வேளை தமிழர்களின் தலைவர் இல்லையா? அதைத்தான் நீங்கள் சொல்லவருகிறீர்களா? எதையும் அதன் நேரடியான அர்த்தத்தில் மட்டுமே புரிந்து கொள்வதைத்தைான் தர்க்கபூர்வமான பார்வை என்று சொல்லுகிறீர்களா யமுனா? உங்களுக்குள் இருக்கிற வரலாற்றை சமநிலையுடன் பயிலநினைப்பவன் சமநிலை தழும்பி ஒருபக்கம் குடைசாய்ந்து நிற்பது அய்யய்யோ நான் பிரபாகரனைச் சொல்லவில்லை என்று நீங்கள் பதட்டப்படுவதிலிருந்து அப்பட்டமாகத் தெரிகிறது.

அடுத்தது ஜெயன்தேவாவின் பின்னுாட்டத்தை அனுமதித்தமை தொடர்பானது. கருத்துச் சுதந்திரத்தில் யமுனா ராஜேந்திரனும், பொங்குதமிழ் இணையத்தினரும் மட்டுமே நம்பிக்கையுள்ளவர்களா என்ன? எங்களுக்கும் கருத்துச் சுதந்திரத்தில் நம்பிக்கை உண்டு. அதன் அடிப்படையிலேயே அந்தப் பின்னூட்டம் என்னுடைய முகப்புத்தகத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

யோ.கர்ணன் உங்களுடைய கட்டுரைக்கு பதிலை ஒரு கட்டுரையாகத் தனது தளத்தில் எழுதியிருக்கிறாரே அதை யாரும் உங்கள் கவனத்துக்கு கொண்டு வரவில்லையா? கண்டும் காணாதது போல ஓடித் தப்பியிருக்கிறீர்களோ என்று ஒரு சந்தேகம். அப்படியில்லைத்தானே? அதில் கர்ணன் பிரபாகரன் கதை குறித்த உங்களது புரிதலுக்கான பதிலைச் சொல்லியிருக்கிறார். என்னுடைய அபிப்பிராயம் பிரபாகரன் என்கிற பெயர் புனைவுக்குட்டபடாததல்ல.. கேலிச்சித்திரங்களுக்குள் சிக்காத புனிதமான தலைமைகளை நான் நம்புவதுமில்லை. பிரபாகரன் என்கிற பெயரை வைத்திருப்பதாலேயே இன்னமும் சிறைகளில் வாடும் மனிதர்களை அறிந்தவன் நான். பிரபாகரனின் பெயர் என்பது தனியே விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்குரியது மட்டுமல்ல. அந்தப் பெயருக்கு பேட்டட்ண்ட் ரைட்ஸ் வாங்கி வைத்துக்கொண்டு நீங்கள் நாட்டாமை பண்ணினால் நான் ஒன்றும் செய்யமுடியாது. நான் மேற்சொன்ன பிரபாகரன்களில் ஒரு பிரபாகரனை கர்ணனின் கதையில் பிரதியிட்டால் அங்கேயும்  இருக்கத்தான் செய்கிறது மெய். பங்கேற்பாளர்களுக்கு அதைப் புரிவதில் இருக்கிற சிரமத்தை புரிந்துகொள்ளமுடியும் என்னால்.

நான் கர்ணனுக்காகவும்,நிலாந்தனுக்காகவும்,கருணாகரனுக்காகவும் பதிலியாகப் பேசவில்லை என்பதனை நான் கடந்த கட்டுரையிலேயே குறிப்பிட்டிருந்தேன். இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்லி அதை எதிர்ப்பதாக ஏன் பாவ்லா பண்ணுகிறீர்கள். அவர்களுக்கான பதிலை அவர்களேதான் சொல்ல வேண்டும் கர்ணன் சொல்லியிருக்கிறார். மற்றவர்களின் மௌனத்தை அவர்களேதான் கடக்கவேண்டும்.

நீங்கள் ஊதியத்திற்காக புலிகளின் நிறுவனத்தில் வேலை செய்தாலும் சுயாதீனமாக உங்களது நிலைப்பாட்டில் இருக்கமுடியும் என்கிறீர்கள். அப்படித்தான் இருந்தேன் என்று அடித்துச் சொல்கிறீர்கள். இதைத்தான் ஒரு தலைப்பட்சமானது என்கிறேன் நான். அதே நிலையை எங்களுக்குப் பொருத்திப்பார்த்தால் செல்லாது செல்லாது என்று கூவுகிறீர்கள். நான் முதற் கட்டுரையிலேயே பகுதி உண்மைகளை எவ்வாறான சூழ்நிலையில் பேச வேண்டியிருக்கிறது என்பதை எழுதியிருக்கிறேன். ஆதாரபூர்மாகப் பேசுதல், தர்க்க பூர்வமாகப் பதில் சொல்லுதல், இப்படி வெவ்வேறு சொற்கள் கொண்டு ஒரே வாதத்தை திரும்பத் திரும்ப எழுதி வெறுப்பேற்றுகிறீர்கள்.

வன்னிக்குள் இருந்து வந்து முழுமையாக மாறுபட்டு யாரும் பேசிக்கொண்டிருக்கவில்லை யமுனா ராஜேந்திரன். வன்னிக்குள் இருக்கும் போது பேசமுடியாதவற்றைப் பேசுகிறோம். எங்களுடைய கடந்தாகாலத்தை அவற்றின் எழுத்துக்களை, பங்களிப்பை ஒழித்து வைத்துக்கொண்டு நாங்கள் யாரும் பேசவில்லை. எல்லாம் பொதுத்தளத்திலேயே வைக்கப்பட்டிருக்கின்றன. இப்போது பேசுபவையும் பொதுத்தளத்திலேயே பேசப்படுகின்றன. ஆனால் என்ன ஒன்று உங்களுடைய பங்கேற்புக்குக் கிடைக்கும் வெகுமதிகளைப்போல அல்லாமல் எங்களுடைய பங்களிப்புகளிற்குக் கிடைத்தவை அவதூறுகளும் வசைகளுமே. நான் விடுதலைப்புலிகளைப் பற்றிப் பேசும் போது இருதுருவ நிலைப்பாடுகளை எடுத்துக்கொண்டு பேசுவதில்லை என்று சமநிலை பயிலுதல்ப் படங்காட்டியபடி நீங்கள் புலித்துருவத்திலேதான் நின்றுகொண்டிருக்கிறீர்கள். நீங்கள் மனசாட்சியுடன் மெய்யான பங்கேற்பாளனாக துருவநிலைப்பாடுகளை தவிர்த்து எழுதிப்பாருங்கள். அதன் பிறகும் உங்களுக்கு எழுதி வாழும் வாய்ப்பு கிடைக்கிறதா என்று பார்க்கலாம்.

நன்றி  பொங்குதமிழ் இணையம்

Next »