THE WAY HOME (வேர்களை அடையும் வழி)

Posted by த.அகிலன் on Jul 11th, 2009
2009
Jul 11

twh-01.jpgஅடுத்த வரியை நீங்கள் வாசிக்கத் தொடங்குவதற்கு முதல் அவசியம் இதனைத் தெரிந்து கொள்ளவேண்டும் நீங்கள். என்னுடைய அம்மம்மாவின் பெயர் சின்னம்மா. என்னுடைய அம்மப்பாவின் பெயர் செல்லையா.
காலம் 03.03.2005
இடம்: கிளிநொச்சியில் அமைந்த திருநகர் கிராமத்தில் எங்கட வீடு.

நான் சைக்கிளின் முன் பிரேக்கையம் பின் பிரேக்கையும் ஒண்டா அமத்தி முத்தத்தில் அரை வட்டமடிச்சு பாட்சா ரஜனி ரேஞ்சுக்கு இறங்க முதல் அம்மம்மா சொன்னா
“ஆ வாறார் அய்யா .. அவரும் அவற்ற ஸ்ரையிலும்.”
“ஹாய் சின்னம்மாக்கா”
“டேய்… பேர் சொல்லிக் கூப்பிடுறியோ” தடியை அடிக்கிற மாதிரி ஓங்கினா..
“எணெய் பெயர் என்னத்துக்கு இருக்கு கூப்பிடத் தானே.”
“ஓமடா ஆனா நீ கூப்பிட இல்ல..”
“சரி அந்த வெத்திலைப் பையைத் தாணை”
“அதுக்க இல்ல..”
“என்ன இல்லை…”
“ஆ… உன்ர …. கோ….”
ஹி ஹி ஹி ஹி…
“என்னடா இளிப்பு ஆரடா அவள்”
“எவள்?”
“அதான் நீ கண்ணன் கொயிலடியில வைச்சு கதைச்சுக்கொண்டிருந்தியாமே ஒருத்தி அவள்.”
எல்லாம் உங்கட மேளின்ர மருகள் தான்..
“மருமகளோ எவள் அவள்? எடியேய் நல்ல இளக்கயிறா எடுங்கோடி இவனைக் கட்டி வைப்பம்..”
“தாலி மஞ்சள் கயிறில எல்லோ கட்டிறது”
“தாலியோ நீ வீட்டை விட்டு வெளியில போகாம உன்னை உந்த தென்னையோட கட்டிவைக்க கயிறு கேக்கிறன் நான்”
“ஹா ஹா ஹா ணேய் அவள் நல்ல வடிவான வெள்ளைப் பெட்டையணை..”
“வெள்ளையோ வெள்ளையை என்ன கரைச்சோ குடிக்கிறது”
“ஹே அதானே செல்லையர் குடிச்சவர் என்ன…”
அதற்குப்பிறகு அம்மம்மா பேசயில்லை வெட்கப்பட்டு சிரிச்சுக்கொண்டு என்னை அடிக்கிற மாதிரி தடியை ஓங்கினா.. நான் ஓடியிட்டன். எனக்கு அம்ம்மாவைப்பிடிக்கும் அம்ம்மாக்கும் என்னைப் பிடிக்கும். எல்லோருடைய அம்மம்மாக்களும் அற்புதமானவர்கள் தான்.

அம்மம்மாக்கள் காட்டும் உலகம் புராதனமானது. அது ராஜகுமாரர்களும் இளவரசிகளும் மலைகளும் கடல்களுமென ஒரு அற்புதமான மறக்கவியலாக் கனவினைப்போல நம் வாழ்வின் நீளத்திற்கும் வழிந்துகொண்டிருக்கும். அங்கே குழந்தைகளுக்கான ரகசியங்களும் அவைகளுக்கான விடைகளும் உண்டு. வயதானவர்களைக் குழந்தைகள் என்று சொல்லுவது சரிதான் அவர்களால் தான் குழந்தைகளாக முடிகிறது. குழந்தைகளை மனிதர்களாக்க முடிகிறது. அம்மாக்களை விடவும் அம்மம்மாக்களின் சொற்கள் குழந்தைகளை எளிதில் வசப்படுத்தி விடுகிறது. அவர்களிடம் குழந்தைகளிற்குக் கொடுப்பதற்கு எப்போதும் ஏதேனும் இருந்துகொண்டேயிருக்கிறது. குழந்தைகளிடம் மறுதலிப்பதற்கு அம்மம்மாக்களிற்கு இயலுவதில்லை. குழந்தைகளும் அம்மம்மாக்களிடம் தயங்குவதில்லை.

நான் என்னுடைய அம்மம்மாவை நினைக்கிறேன். அம்மம்மா என்றால் எனக்கு இரண்டு விசயங்கள் உடனே நினைவுக்கு வரும் ஒன்று அப்பம். இன்னொன்று சத்தகம். அப்பம் என்றவுடன் நான் சரியான சாப்பாட்டு ராமனாயிருப்பேன் என்று நீங்கள் நினைத்தால் (என்னை நேரில் பார்க்காதவர்கள்) அதற்கு நான் பொறுப்பல்ல. ஏனெனில் எனக்கு தெரிந்து என்னுடைய பரம்பரையிலேயே அப்பத்தை சரியாகச் சுடத்தெரிந்தவர்கள் இரண்டே பேர். ஒன்று அம்மம்மா மற்றது பெரியம்மா. பெரியம்மாவை விட அம்மம்மாக்கு இந்த விசயத்தில எக்ஸ்பீரியன்ஸ் கூட என்பதனால் யாருடைய அப்பம் நன்றாயிருக்கும் என்பதையும் நான் சொல்லவேண்டியிருந்தால் இதை வாசிப்பதை விட்டு விட்டு வேறு வேலையிருந்தால் போய்ப் பார்க்கவும்.

மற்றது சத்தகம். சத்தகம் என்பது சிறியவகையான கத்தி(சரியான விளக்கம் தெரிந்தவர்கள் ஆட்டோ அனுப்பவேண்டாம்). அம்மம்மா சதா பெட்டிகள் இழைப்பவளாயிருந்தாள். பனை ஓலைப் பெட்டிகள் சிறியதும் பெரியதுமான பெட்டிகள். இடையிடையே பச்சை மற்றம் நாவல் கலர் ஓலைகள் வைத்தப்பின்னப்பட்ட அழகான பெட்டிகள். அம்ம்மா சத்தகத்தை கையில் பிடித்துக்கொண்டு ஓலையைக் கிழிக்கும் போதும் நறுக் நறுக் கென்று வெட்டும் போதும் எனக்கு கூசும். ஆனாலும் பிடிக்கும். அம்மம்மா எனக்கும் ஒரு பெட்டி இழைத்து தந்தாள் ஒரு குட்டிப் பெட்டி அது முற்றிலும் வண்ண இழைகளால் பின்னப்பட்டது. அதற்கு ஒரு மூடியும் உண்டு. சூர்யா தீப்பெட்டிக்குள் மூச்சுத்திணறிக்கொண்டிருந்த என்னுடைய பொன் வண்டுக்கு அந்தப்பெட்டி ஒரு அரண்மனையானது. அதனால் அம்மம்மாவின் சத்தகத்தையும் எனக்கு பிடிக்கும். அம்மம்மா பாடிக்கொண்டே இழைப்பாள்.
“மாப்பிள்ளை வாறார் மாப்பிள்ளை வாறார் மாட்டு வண்டியிலே
பொண்ணு வரா பொண்ணு வரா பொட்டு வண்டியிலே”
அம்மம்மா ஆயிரத்தெட்டு பாட்டுகளைப் பாடியிருந்தாலும் எனக்கு இந்தப்பாட்டுத்தான் ஞாபகமிருக்கு. மாப்பிளை பொம்பிளை எண்டு கலியாணத்தை பற்றியிருக்கிறதாலயே என்னவோ சின்னவயசிலயே இந்தப்பாட்டு நல்லாப்பிடிக்கும். அப்ப இது வயசுக்கு மீறின விசயம்தான் ஆனா எப்ப,எதில நாங்கள் வயசுக்கு மீறாமல் இருந்திருக்கிறம். (14 வயசில மாவீரராக் கூட ஆகிறாங்கள் இதொரு பெரிய விசயமே ஆ) அம்மம்மா சத்தகத்தாலா இல்லை பாட்டுக்களாலா எதனால் பெட்டிகளை இழைக்கிறாள் என்பதைத் தெரிந்து கொள்வது சிரமம் அப்படிப் பாடிக்கொண்டேயிருப்பாள்.
நாட்டில எவ்வளோ நடக்க உன்ர அம்மம்மா கலியாணப்பாட்டு பாடிறா என்டிறது முக்கியமோ எண்டு நீங்கள் கேக்கிறது விளங்குது. ஆனால் திடீரென்று நான் அம்மம்மா புராணம் பாடக் காரணம் The way home என்கிற படம்.
பால்யத்தின் மீளமுடியாத் திசைகளுக்கு என்னை இட்டுச்சென்றது. என்னுடைய அம்மம்மா எனக்கு கொடுத்துப்போன வாழ்வின் செழுமையான பக்கங்களில் எழுதப்பட்டிருக்கும் என் மழலைக்கிறுக்கல்களை நினைவுகளால் தடவச் செய்கிறது The way home. செத்துப்போன இந்த நகரத்து வாழ்வில் குழந்தைகளின் வாழ்க்கையும் களிப்பும் எத்தகைய மலட்டுத்தன்மையானது என்று தோன்றிற்றெனக்கு. மிக அற்புதங்கள் நிறைந்த படம்.
twh-03.jpgசங் – வூ நகரச் சூழலில் பிறந்து அதன் அத்தனை சௌகர்யங்களுடனும் வளர்க்கப்பட்டவன். திடீரென்று ஒரு விடுமுறைக்காலத்தில் அவனது தாயாரால் அவனுடைய பாட்டியின் கிராமத்துக்கு அழைத்துச் செலல்லப்படுகிறான். அவன் அந்தக் கிராமத்தை விரும்புகிறவன் இல்லை. பாட்டியையும் கூட. வாய்பேச முடியாத நகரத்தின் பகட்டுகள் எதுவுமற்ற கொஞ்சம் அழுக்காகக் கூட இருக்கிற அந்தக் கிழவியை அவனுக்கு பிடிக்கவேயில்லை. ஆனால் அம்மாதான் கட்டாயப்படுத்தி விட்டுவிட்டுப் போகிறாள். அவன் தன்னுடைய நகரத்தின் குட்டி உலகத்தை அவனது பையில் கொண்டு வந்திருக்கிறான் நகரமயப்பட்ட அவன மனத்தைப்போலவே.அவனுக்கான குடிபானங்கள் ரின் களிலான உணவுவகைகள். (எனக்கு இதைப்பார்த்துக்கொண்டிருக்கையில் வெளிநாட்டால நம்மட ஆக்கள் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு வந்து பிள்ளையளுக்கு ஊர்த்தண்ணி ஒத்துக்கொள்ளாதெண்டு சொல்லி மினரல் வாட்டருக்கு அலைஞ்சது நினைவுக்கு வந்தது. இதையும் மிஞ்சி சிலபேர் பிள்ளைகள் தண்ணி குடிக்காதெண்டும் ஒலே சோடா மட்டும் தான் குடிக்குமெண்டும் கூட சொல்லியிருக்கினம்)

சங் – வூ வை பாட்டியுடன் விட்டுவிட்டு அம்மா போய் விடுகிறாள். சங் – வூ பாட்டியுடன் பேசுவதில்லை. அம்மா போனதிலிருந்து அவனது ரீ.வி கேமுடன் எந்நேரமும் சதா விளையாடிபடியிருக்கிறான். அவனது நகரத்தில் இருந்து கொண்டு வந்த தின்பண்டங்களையே தின்கிறான். பாட்டி ஆசையாய் அவனுக்காய் தனது சுருக்குப்பையிலிருந்து இனிப்புகளை எடுத்து நீட்டுவாள். சுருங்கியும் கசங்கியும் வெறும் துணிக்கயிறு கொண்டு கட்டப்பட்டிருக்கும் அவளது சுருக்குப்பையுள் நிறைந்திருக்கும் இனிப்பை பிரியம் பொங்க எடுத்துத் தருவாள் ஆனால் சங்- வூ அதனைப் புறந்தள்ளிவிட்டு நீண்டதொரு சொக்லேட் பாரை தின்றபடி பாட்டியின் வீட்டில் குற்றுயிரும் குலையுயிருமாய்க் கிடக்கும் டி.வியில் காட்டுன் நெட்வர்க் ஏதாவது வருமா என்று அலைவரிசைகளைச் சோதிக்கிறான். பாட்டி தனது பிரியத்தை புறந்தள்ளும் அந்த நகரத்து குழந்தைமையப் புரிந்து கொண்டவளாக அமைதியாயிருக்கிறாள்.

மறுநாள் அந்தக் கிராமத்தின் சிறுவன் ஒருவனைப் பேரனுடன் விளையாட வருமாறு பாட்டி அழைத்து வருவாள். வந்தவனும் சங்-வூ வைத் தன்னுடன் விளையாட வரும்படி அழைக்கிறான். சங்- வூ அவனுடன் பேசுவதே தனக்கு பிடிக்கவில்லை என்பது போல முகத்தை திருப்பிக்கொள்வான். அந்தப் பையன் வெளியேறிவிடுவான்.

எனக்கு இந்த இடத்தில் என்னுடைய அம்மம்மா கண்டிப்பாக நினைவுக்கு வந்தாள் நான் அம்மம்மா வீட்ட போகும் போதெல்லாம் அம்மம்மா தெருவில் கிரிக்கெட் விளையாடுகிறவர்களிடம் பரிந்துரைப்பாள். ஏனெனில் அம்மம்மா வீட்ட போனால் மட்டும் தான் ஒழுங்கையில் (தெரு) விளையாட முடியும். அம்மாட்ட வீட்டுக்குள்ள ஆடு புலி சிங்கம் சேர்த்து விளையாடுற விளையாட்டெண்டாலே அரைநாள் முதல் பர்மிசன் வாங்கோணும். இல்லாட்டி வழக்கம் பொல அகப்பைக் காம்புதான் விளையாடும். ஆனால் அம்மம்மா என்னை வீதியில் விளையாட அனுமதிப்பாள். இன்னும் ஒரு படி மேல போய் “டேய் இவனையும் சேர்த்து விளையாடுங்கோடா” எண்டு அங்க விளையாடுற பெடியங்களிடம் பரிந்துரைத்திருக்கிறா. அம்மம்மா கிட்டத்தட்ட அந்த ஏரியா தாதா போல டேய் கோயிலாச்சி என்று ஒரு விநோதக் குரலில் பேசி அம்மம்மாவின் வருகையை அவர்கள் தங்களுக்குள் அறிவித்துக் கொள்வதை, வில்லியைப் போல சிறுவர்கள் அம்மம்மாக்கு பயப்பிடுவதை நான் பார்த்திருக்கிறேன். அம்மம்மா என்கிற அதிகாரமையம் அருகிலிருப்பதாலேயே நான் எத்தினையோ தரம் நான் அவுட் எண்டாலும் பொறு நான் அம்மம்மாட்ட சொல்றன் எண்டு அவர்களை வெருட்டி அவுட்டை கான்சல் செய்ய வைத்திருக்கிறேன்.(அழாப்பி அழாப்பி) அவர்களும் அம்மம்மாக்கு பயந்து கொண்டு என்னை அனுமதிப்பார்கள்.

எனக்கு இன்னொரு காட்சியிலும் அம்மம்மா நினைவுக்கு வந்தாள். சங்-வூ இரவில் டாய்லெட் போவதற்காக அம்மம்மாவுடன் வெளியே வருவான். அவளைத் தன்னைப் பார்க்கவேண்டாம் எனச் சொல்லும் அதே வேளை அவளை அங்கிருந்து போகவும் வேண்டாமெனச் சொல்லுவான். நானும் சின்ன வயசில் அம்மம்மாவை அழைத்துகொண்டு போயிருக்கிறேன் டாய்லெட்டுக்கு இரவுகளில். கழிப்பறையின் கதவுக்கு வெளியே நின்றபடி அம்மம்மாவை தொடர்ச்சியாகக் கதைத்தபடியிருக்கும்படி சொல்லுவேன். அம்மம்மா எனக்கு கதை சொல்லியபடியே இருப்பாள் அவள் ஒரு செக்கன் மௌனமானாலும் நான் பலத்த சத்தம் போட்டு பயத்துடன் அம்மம்மாவை அழைப்பேன். அம்மம்மா சிரித்தபடி நிற்கிறேன் என்பாள். அப்போதெல்லாம் எனக்கு ஆறு மணிக்கு பிறகு வீட்டுக் கேற்றுத் தடிபோடப் போறஎண்டாலும் ஆளும் பேருமாப்போனாத்தான் போவன் இல்லாட்டி அரங்கன். அம்மம்மாக்கள் எப்போதும் குழந்தைகளைப் பாதுகாக்கிறார்கள். (இப்போதைய அட்டாச் பாத்றூம்களில் இந்தச் சிக்கல் இருக்காதென்கிறவர்கள் அம்மம்மாக்களின் கதைகளையும் அறியாதிருக்கிறோம் என்பதறிக)

அம்மம்மாக்கள் எப்போதும் பேரன்களைச் சந்தோசப்படுத்திய படியே இருக்கிறார்கள். இப்போது டி.வி கேமில் விளையாடிக்கொண்டிருக்கும் சங்- வூ விடம் பாட்டியுடன் ஊசியில் நூலைக் கோர்த்துத் தரும்படி கேட்பாள். அவனோ இந்தக்கிழவியோட பெரிய கரைச்சல் என்கிற மாதிரி சினந்துகொண்டே கோர்த்துத் தருவான். அவளைத் திட்டி வீட்டுச் சுவர்களில் எழுதி வைப்பான். பாட்டி எல்லாவற்றைப் பார்த்தும் பேசாமலிருப்பாள். அவள் பேசமுடியாதவள் வேறு.

படம் முழுவதும் குழந்தைமையின் பிடிவாதமும். குட்டிக் கோபமும். தன்னை மீறி அம்மம்மாவின் மீது எழும் பிரியத்தை வெளிகாட்ட விரும்பாதவனாகவும் இருக்கிறான் நம்ம ஹீரோ சங்-வூ.
ஒரு நாள் அவனது டி.வி கேமின் பாட்டரி தீர்ந்து விடுகிறது. புதிய பாட்டரி வாங்குவதற்கு அம்மம்மாவிடம் பணம் கேட்டுக்கொண்டேயிருக்கிறான். அவளோ பதில் சொல்வதாயில்லை. பணமும் தரவில்லை. அவன் அவள் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவளது கொண்டையில் இருக்கும் அழகான ஊசியை எடுத்துக்கொண்டு அதை கொடுத்து பாட்டரி வாங்கலாமா என்று முயற்சிப்பதற்காக கடைகளைத் தேடி போகிறான். அந்தக் கிராமத்தின் சிறிய கடையில் அவன் தேடுகிற பாட்டரி இல்லை. அவன் பாட்டரி தேடிக்கொண்டே நீண்ட தொலைவு வந்து விடுகிறான். பிறகு கிராமத்துக்கு திரும்புகையில் களைத்து சோர்ந்து விடுகிறான். அவனை ஒரு பெரியவர் அவனைப் பாட்டியின் பேரன் என்று கண்டுகொண்டு அவனை அழைத்து வருகிறார். அதற்குள் அவனைத் தேடி பாட்டி வந்துவிடுகிறாள் பாதி வழி.. பாட்டியைக் கண்டதும் ஓடிச்சென்று அணைக்க ஆசையிருந்தாலும் அவள் வந்ததை விரும்பாதவனாகப் பாவனை செய்தபடி நடக்கிறான் சங்-வூ.

twh-04.jpgஅவன் கொண்டு வந்த தின்பண்டங்கள் எல்லாம் தீர்ந்துவிட அவன் அம்மம்மா தயாரிக்கும் சாப்பாட்டையே சாப்பிட வேண்டியாகிறது. அவனுக்கோ நகரத்து உணவுகள் வேண்டும். pizza,kentucky chicken , hamburger கேட்கிறான். தன் வாழ்நாட்களில் கேட்டேயிராத பெயர்களிலான உணவுப்பண்டங்களை பேரன் கேட்கிறானே எனக் கிழவி குழம்புகிறாள். பாட்டி தனது தரப்பை புரிந்து கொள்ள முயற்சிக்கிறாள் எனத் தெரிந்து கொண்டு. அவளுக்கு அவன் உச்சரிக்கும் விநோதமான உணவுப் பண்டங்கள் என்ன என்பதை தெரிவித்து விட சங்-வூ பிரயத்தனப்படுவான். தனது புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு அவளுக்கு விளக்க முயற்சிப்பான். கடைசியில் ஒரு வழியாகக் ஏதோ கோழியிறைச்சியைத்தான் பேரன் கேட்கிறான் என்கிற அளவில் கிழவி புரிந்து கொண்டு விடுவாள். கிழவி விரல்களால் தலையில் கொண்டை வைத்துக்காட்ட சங்-வூ மகிழ்ந்து ஆ அதேதான் கோழி கோழிதான் எனக்கு வேண்டும் என்பான். பாட்டி தன் தோட்டத்து விளை பொருட்களுடன் நகரத்துக்கு போவாள். சங்-வூ மிகுந்த மகிழ்ச்சியுடன் அவளை வழியனுப்புவான்.. அவளைத்திட்டித் தான் சுவர்களில் எழுதியதையெல்லாம் அழித்துவிட்டுத் தூங்கிப்போவான். அதுதான் குழந்தைமனம் சட்டென்று மறந்து விடும் அழுகையை நிறுத்தி ஹே என்று சிரிக்கும் கோபத்தைக் கலைத்து சட்டென்று முத்தமிடும். நீடித்து உள்ளுறையும் வன்மங்கள் ஏதுமற்றது குழந்தைமனம். சங்-வூஅப்படித்தான். அவனைப் பொறுத்தவரை பாட்டி இப்போது வில்லியல்ல அவன் கேட்ட தின்பண்டத்தை வாங்கிவரப்போகிற தேவதை.

பாட்டி மழையில் நனைந்தபடி கோழியை வாங்கிக்கொண்டு வருவாள். அவன் தூங்கிக் கொண்டிருப்பான் அவள் அவளுக்கு தெரிந்தது மாதிரி கோழியைச் சமைத்து வைப்பாள். பாட்டி kentucky chicken  உடன் வருவாள் என்று எதிர்பார்க்கிற சங்-வூ விற்கு தூங்கி எழுந்து பார்க்கையில் பாட்டி கோழியை தனக்கு தெரிந்த மாதிரி சமைத்து வைத்திருப்பது எரிச்சலை ஊட்ட திட்டுவான்.எங்கே என் kentucky chicken என்று ஆர்ப்பாட்டம் பண்ணுவான். பாட்டியோ என்னடா இவன் கோழி கேட்டான் வாங்கிக் கொடுத்தால் அதற்கும் திட்டுகிறான் என்பது மாதிரிப் பார்த்து கவலையடைவாள். அழுது கொண்டே சங்-வூ தூங்கிவிடுவான். பாட்டியும் தூங்கிப் போவாள். காலை எழுந்து பாரக்கையில் பாட்டிக்கு காய்ச்சல்(ஜரம்) வந்திருக்கும். பாட்டி எழுந்திருக்க முடியாமல் படுத்திருப்பாள். மழையில் மழையில் கோழி வாங்கிவரப் போனதால் தான் அவளுக்கு காய்ச்சல் வந்தது என்று சங்-வூ பாட்டியின் மீது இரக்கம் கொண்டு அவளைப் போர்த்துவான் அவள் சாப்பிட தானே எடுத்து வைப்பான். அவளுக்கு சுடுநீர் ஒத்தடம் கொடுப்பான்.

ஒருநாள் பாட்டி அவனை நகரத்து அழைத்துச் செல்வாள். அவனுக்கு பிடித்ததெல்லாம் வாங்கித் தருவாள். அவன் பாட்டியின் கிராமத்தில் இருக்கும் குட்டிப் பெண்ணொருத்தியிடம் சிநேகிதம் பிடிக்க விரும்புவான். ஆனால் எதிர் பாராத விதமாக அவர்களது சந்திப்பு மோதலில் முடிவடைந்து விடும். அவள் உனக்கு வளர்ந்த பிறகு நல்ல பொண்டாட்டியே கிடைக்க மாட்டாள் என்கிற ரேஞ்சில் திட்டி விட்டு ஓடியிருப்பாள். பிறகு ஒரு நாள் அவளே இவனோடு விளையாட விரும்பி இவனைத் தேடி வருவாள். இவன் நாளைக்கு வருவதாகச் சொல்லி வீட்டுக்கு வருவான். வீட்டுக்கு வந்ததும் நாளைக்கு அவளுடன் சேர்ந்து விளையாடுவதைக் கற்பனை பண்ணியபடியே தனது விளையாட்டுப் பொருட்களை எல்லாம் அவளுக்கு பரிசளிப்பதற்காக எடுத்து வைத்துக்கொண்டிருப்பான். பாட்டி இவனது பாட்டரி தீர்ந்து போன டி.வி கேமை ஒரு காகிதத்தில் சுற்றி இவனிடம் தருவாள்.

திடீரென்று சங் – வூ விற்கு நாளை புதிய சிநேகதியுடன் விளையாடும் போது தனது தலைமுடி அழகாயிருக்காதோ. இப்போது இருக்கிற ஸ்ரைல் அவளுக்கு பிடிக்காதோ என்கிற எண்ணம் ஏற்பட்டு பாட்டியிடம் முடிவெட்டுவது பற்றி கேட்க பாட்டி பேரனுக்கு முடிவெட்ட ஆயத்தமாகிறாள்.(புத்திசாலிப்பையன்) இவன் கொஞ்சமாக வெட்டுங்கள் என்று விரல்களால் அளவு காட்ட பாட்டி வெட்டத் தொடங்குவாள். இவன் அப்படியே தூங்கிப் போவான். பாட்டி எழுப்பும் போது தலைமுடியில் பாதி பரதேசம் போயிருப்பதை உணர்ந்து ஏன் மொட்டையாக வெட்டினாய் என்பான். பாட்டி நீதானோ அளவு காட்டினாய் என்பாள். நான் இருப்பதில் கொஞ்சத்தை வெட்டு என்றேன்.. நீ கொஞ்சத்தை விட்டு வைத்திருக்கிறாய் என்பான். இந்த தலைமுடியுடன் எப்படி நான் அவளைச் சந்திப்பேன் என்று கவலையடைவான்.

ஆனால் அடுத்த நாள் அவளுடன் விளையாடி விட்டு தனது தள்ளு வண்டியில் உட்கார்ந்த படியே பொம்மையுடன் சரிவில் இறங்குகைளில் கற்களில் இடறுப்பட்டு விழுந்து கைகால முழுக்க காயங்கள் அடைகிறான் யாருமற்ற கிராமத்து வீதியில் விழுந்து கிடப்பவனை கண்டு பாட்டியால் அழைத்து வரப்பட்டு முதலில் இவனிடம் சிநேகம் கொள்ளவந்து புறக்கணிக்கப்பட்ட கிராமத்து சிறுவன் உதவுவான். சங்-வூ இப்போது அவனிடம் மன்னிப்பு கேட்பான்.

அழுதபடியே வீடுதிரும்பும் சங்-வூ தன்னிடம் காகிதம் சுற்றப்பட்டபடி பாட்டி கொடுத்த டி.வி.கேமை எடுத்து பார்ப்பான். அந்தச் சுற்றிய காகிதத்திற்குள் பாட்டி பாட்டரி வாங்கப் பணம் வைத்திருப்பதைப் பார்ப்பான் சட்டென்று அழுகை பீறிட்டுக்கொண்டு வரும் பாட்டி தன்மீது வைத்திருக்கும் பிரியத்தை அவன் உணர்வான். பாட்டியின் தனிமையையும். அழுது கொண்டே வரும் அவனைப் பாட்டி சமாதானப்படுத்துவாள். அம்மா அவனை அழைத்துச் செல்லவரப்போவதாக எழுதிய கடிதத்தை பாட்டி அவனிடம் கொடுப்பாள்.
அவன் பாட்டியிடம் பிரியம் கொண்டு. அவளுக்கு கடிதம் எழுதக் கற்றுக்கொடுப்பான். I miss u ,I am sick இந்த இரண்டு வசனங்களையும் எழுதிக்காட்டி பாட்டியிடம் எழுதிப் பழகச் சொல்லிக்கொண்டிருப்பான். அந்த எழுத்தின் வாசனையறியாக் கிழவி அதைச் சரியாக எழுதமாட்டாள். பாட்டியைப் பிரியப்போகிறோமே. என்கிற ஏக்கம் மேலுற அவன் அழுதபடி பாட்டியிடம் சொல்லுவான். பாட்டி உனக்கு உடம்பு சரியில்லாவிட்டால் வெறும் வெள்ளைக்காகிதத்தையாவது அனுப்பு நான் அதைப் பார்த்ததும் உனக்கு உடம்பு சரியில்லை என்று புரிந்து கொள்வேன் என்பான். பாட்டியும் கண்ணீருடன் தலையசைப்பாள். அவன் பாட்டி வைத்திருக்கும் எல்லா ஊசிகளிலும் நூல் கோர்த்து வைப்பான்.

அம்மா வந்து விடுவாள் அவனை அழைத்துச்செல்ல.சங் – வூ வார்த்தைகள் ஏதுமற்றவனாக நின்று கொண்டிருப்பான். பாட்டியிடம் பேருந்தில் ஏறுமுன்பாக ஒரு சிறிய நோட்டைக் கொடுப்பான். அழுகை விம்ம திரும்பிப் பார்க்காமலே பேரூந்தில் ஏறுவான். பாட்டி பேரூந்தின் ஜன்னலைத் தட்டிக்கொண்டிருப்பாள்.. இவன் திரும்பாமல் மௌனமாயிருப்பான். பேருந்து புறப்படுகையில் இவன் பேருந்தின் பின் கண்ணாடிக்கு ஓடிச்சென்று அழுகையுடன்..பாட்டியிடம் மன்னிப்பு கேட்பான்.. கையசைப்பான்.. பாட்டியின் கையில் இருக்கும் நோட்டு முழுவதும்.. போஸ்ட் காட்டுகளில் I miss u ,I am sick என அவனது முகவரியிடப்பட்டு எழுதப்பட்டிருக்கும். பேரூந்து கிராமத்தின் அழுந்தப் புதையும் புழுதி நிலத்தை விட்டு இறுகித் திமிறும் நகரத்தின் வழவழப்பான சாலைகளில் நகரத் தொடங்கும்….

நகரவாழ்வு தின்று கொண்டிருக்கிறது குழந்தைகளின் பால்யத்தையும் பெரியவர்களின் ஆறுதலையும்.. தனித்த எலக்ரானிக் மனங்களுடன் குழந்தைகள் உருவாகிறார்கள்.பாட்டரி தீரும் வரைதான் இயங்கும் மனங்கள் அவை.. காலம் முழுதும் இயங்கும் சக்தி எங்கள் மூத்தவர்களின் சொற்களிலும் வருடலிலும் இருக்கிறது. நகரத்தின் குழந்தைகள் தொலைத்து விட்டிருக்கும் மிகப்பெரிய பொக்கிசம் இது. முதியவர்களின் கதைகளில் பெறமுடியாத அறிவை ஒரு போதும் கான்வெண்டுகள் வழங்கிவிடப்போவதில்லை. கட்டிடங்கள் ஒரு போதும் கற்றுத்தரப்போவதில்லை பூக்களும் பறவைகளுமிருக்கும் கிராமத்தின் அற்புதங்களையும் எங்கள் மூதாதையர்களின் பாடல்களையும் தடங்களையும்.

The way home

மொழி – கொரிய மொழி

வெளியான ஆண்டு – 2002

நாடு- தென் கொரியா

எழுத்து – இயக்கம் –  Jeong-hyang Lee

father-n-daughter.jpgகண்ணீரும் கம்பலையுமாக ஒரு தாய் கதறுகிறாள் “எனது மகனைக் காப்பாற் றுங்கள் அவன் எனக்கு வேண்டும் தயவு செய்து காப்பாற்றுங்கள்”.
சீடர்கள் எல்லாரும் காத்திருந்தார்கள் நிகழப்போகும் அதிசயத்தின் சாட்சியாய் இருக்கப்போகிறோம் என்கிற முறுவல் அவர்களிடம் மிதந்து கொண்டிருந்தது.
புத்தர் அமைதியாய் சொன்னார் “அம்மா மரணமே நிகழாத வீட்டில் இருந்து ஒரே ஒரு பிடி கடுகு வாங்கிவா” புத்தரின் முகம் புன்னகை மாறாதிருக்கிறது.
அவள் தெருவெங்கும் ஒடினாள் தன்மகனைக் காப்பாற்றி விடுகிற வெறியில் ஓடினாள் ஆனால் மரணம் இறுதியில் அவளை வென்றுவிட்டது. மரணம் காற்றைப்போல எங்குமிருந்தது. மரணத்தின் வாசனை தெரியாத ஒரு பிடி கடுகு கூட இந்தப் பூமியில் கிடையாது.
மரணத்தை வென்று விடுகிற ஆசை எல்லோருக்கும் உண்டு ஓட்டப்பந்தயத்தில் ஓடுகிற சாகசவீரனைப்போல் மரணம் வாழ்க்கை முழுவதும் நம்மோடு கூட வருகிறது. கடைசிவரை பின்னாலேயே ஓடி வந்து இறுதியில் முந்திக்கொண்டு விடுகிறது.
எனது வழியில் கடந்து போன மரணத்தின் சுவடுகளின் சில காட்சிகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

அப்பாவின் மரணத்தைப் பார்த்திருக்கிறேன் மிகநெருக்கமாக மரணத்தின் வாசனை அவர் முகத்தில் மிதந்து கொண்டிருக்க அவரது இறுதிவார்த்தைகள் எனக்கானவையாய் இருந்தன.
எனக்கு அப்போது 7 வயது. அதற்கு முன்பாக என்னிடம் மரணம்குறித்த சேதிகள் அனுபவங்கள் ஏதும் கிடையாது. என்னிடம் மரணம் குறித்து இருந்ததெல்லாம் சவஊர்வலமும் அதில் கொழுத்தப்படுகின்ற சீனா வெடி குறித்த பயமும் தான். அதை விடவும் “பொடிக்கு கையைக்காட்டாதடா கைஅழுகிப் போகும்” என்ற அக்காக்களின் வெருட்டலுக்கும் நான் பயந்து போயிருந்தேன். கை அழுகிப்போகாதிருக்க சவஊர்வலங்களைப் பார்க்கிற போதெல்லாம் கையைப் பின்னால் கவனமாய் கட்டி மறைத்தி ருக்கிறேன். என்னையும் மீறிக் கையைக்காட்டிய பொழுதொன்றில் கை அழுகப் போகிறது என்று அழுது அழுது ஊரைக் கூட்டி யிருக்கிறேன்.
இப்போது அப்பாசெத்துப்போனார். பாம்பு அப்பாவைக் கடித்துவிட்டது என்றவுடனேயே எல்லாரும் பதறினார்கள். அப்பாவைச் சூழ்ந்து கொண்டார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை அப்பாவைச் சுற்றி நின்ற சனங்களுக்குள் நான் இடறுப்பட்டுக்கொண்டிருந்தேன். அப்பாவைக் காப்பாற்றி விடவேண்டும் என்று எல்லோரும் நினைத்தார்கள் அப்பாவை தூக்கிக்கொண்டு எல்லோரும் றோட்டுக்கு ஓடினார்கள். சந்தி வைரவர் கோயிலடியில் கிடத்தினார்கள். அவர்கள் நினைத்திருப்பார்கள் வைரவர் காப்பாற்றி விடுவார் என்று.

அப்போதெல்லாம் இந்தியராணுவம் எங்கள் றோட்டுச் சந்தியில் முகாமிட்டிருந்தது. எங்கள் றோட்டுச் சந்தியில் மட்டு மில்லை நிறைய இடங்களில் இந்தியராணுவம் முகாமிட்டிருந்தது. முதல்ல வேடிக்கையாத்தானிருந்தது. தாடிவைத்த இந்திய ராணுவ வீரர்கள். அவர்களது தலைப்பாகை, இவையெல்லாம் அப்ப எங்களுக்கு வேடிக்கையா இருந்தது. அவர்கள் பேசுகிற புரியாத மொழி அவர்கள் வைத்திருக்கிற நீள நீளமான கத்திவைத்த துப்பாக்கிகள் நான் துப்பாக்கியை முதல் முதலில் கண்டது அவர்களிடம்தான். அவர்களால் எங்களுக்கு ஆபத்தெண்டால் நான் சத்தியமாய் நம்பியிருக்க மாட்டன். ஒவ்வொரு நாளும் காலமையும் பின்னேரமும் ஒழுங்கைக்குள்ளால லைனாப் போவாங்கள். பிறகு அப்படியே லைனாவருவாங்கள் அவ்வளவுதான். அக்கா என்னை வெருட்டுவாள் டேய் அவங்கள் வரேக்க வெளியால நிக்காத தூக்கிக்கொண்டு போயிருவாங்கள். எனக்குப் பயமில்லை. நான் அக்காவின் சொல்லைக் கேக்காமல் வெளிய நிண்டு அவங்கள் போவதை வேடிக்கை பார்ப்பேன். பையா பையா ஒன்றிரண்டு பேர் என்னை அழைப்பார்கள் நான் தயங்கித் தயங்கிச் சிரிப்பேன். என்னதான் பயமில்லையெண்டு சொன்னாலும் குறுக்காஸ் எண்டால் பயமிருந்தது. அவங்கள் கட்டியிருந்த தலைப் பாகையும் தாடியும் கொஞ்சம் பயத்தை இயல்பாகத் தரவல்ல தாத்தான் இருந்தது. எண்டாலும் நான் சமாளிச்சு நிண்டு வேடிக்கை பார்ப்பன்.

குறுக்காசின் வீரத்தைப் பற்றியும். அவர்கள் சாப்பிடுகின்ற சப்பாத்தி பற்றியும் சின்னக்கா கதைகதையாச் சொல்வாள். அவள் சொல்வதைக் கேட்கும் போதெல்லாம் குறுக்காசைக் கண்டால் மேலும் மேலும் பயப்பிடவும் சப்பாத்தி என்கிற நான் பார்த்தேயிரா வெறுமனே கேட்டு மட்டுமேயிருக்க அந்த உணவுப்பொருள் மீது வெறுப்பைக்கொட்டவும் நாங்கள் பழக்கப்பட்டுப்போனோம். சின்னக்கா அவ்வளவு மினக்கெட்டு அந்தக்கதைகளுக்கு கைகால் வைப்பா. எல்லாத்தையும் மிஞ்சி நான் ஒரு நாள் ஒரு தலைப்பாக்கார இந்தியன் ஆமியால் எதிர்பாராதொரு கணத்தில் தூக்கப்பட்டேன் என்னதான் நான் கறுப்பெண்டாலும் கஸ்தூரிதான் நான் எண்டதை எனக்கு உணர்த்தின சம்பவங்களில் ஒன்று. என்னில இருந்த கஸ்தூரியைக் கண்டு ஆசையில இந்தியன் ஆமி ஒராள் தூக்க நான் குய்யோ முறையோ எண்டு அலற. வீட்டுக்க இருந்து அம்மாக்கள் ஓடிவர அந்தாள் என்னை இறக்கிவிட்டது நான் முதலையின்ர வாயால தப்பினவனைப்போல இயன்ற மட்டும் குழறினேன். அவர் பையா பையா எண்டு எனக்குச் சமாதானம் சொன்னார். ஆனாலும் நான் அழுகையை நிப்பாட்டினா அவர் மறுபடியும் தூக்கக்கூடிய ஆபத்திருப்பதை உணர்ந்து வீறிட்டழுதேன். அவர் டக்கெண்டு அவற்ற பாக்கிற்குள் (ஙிணீரீ) இருந்து ஒரு மஞ்சள் நிற பலூனை எடுத்துத் தந்தார் நான் டக்கெண்டு அதை வாங்கிக்கொண்டு என் அழுகையின் வேகத்தைக் குறைத்தேன். ஆனாலும் அவர் போகுமட்டும் தொடர்ந்து அழுதேன். அவர் சிரித்தபடி போனார். அதுக்குப்பிறகு யார் வெருட்டினாலும் நான் நம்பத்தயாராயில்லை. பலூனெல்லாம் தாறினம் எப்பிடியும் நல்லவையாத்தானே இருப்பினம் எண்டு நினைச்சன்.

ஆனால் கொஞ்சநாள் தான். பிறகு வெறுமனே ஒழுங்கைக் குள்ளால போய் வந்தவை காணிக்குள்ளால போய் வரத் தொடங்கிச்சினம். பயிர்க்கொடியளுக்குள்ளால சப்பாத்துக்காலோட நடந்து போய்ச்சினம். நாங்கள் செருப்புக் காலோட போனாலே பேசிற மாமா ஒண்டு பேசாம பாத்துக்கொண்டு நிண்டார். பிறகு வீட்டுக்குப் படலை இருந்தாலும் தாங்கள் போற வழியில் குறுக்க வாற வேலியளை வெட்டிக்கொண்டு போக வெளிக்கிட்டிச்சினம் அவை வெட்டிக்கொண்டு போற கடப்புகளுக்குள்ளால ஆடு மாடுகள் உள்ளிட்டு பயிர்க்கொடியளைத் தின்னுதெண்டு மாமா அடைப்பார் ஆனா அவையள் புதுபுதுசு புதுசா வெட்டத் தொடங்கிச்சினம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில வேலிக் கம்பியளை வெட்டுவினம். மாமா கொஞ்சநாளால அவையள் வெட்டுறதுகளை அடைச்சு அடைச்சுக் களைச்சுப்போய் அடைக்காமலே விட்டிட்டார். எனக்கு இப்ப குறுக்காசின்ர முகமெல்லாம் சின்னக்கா சொல்ற மாதிரி குருரமாத்தான் தெரிஞ்சுது அவைற்ற இப்ப பலூன்கள் இருக்குமெண்டு நான் நம்பயில்லை.

திடீரென்று ஒருநாள் அவங்களே கத்திகளைக் கொண்டு வந்து வேலிக்கொப்புகளை வெட்டிச் சரிச்சுக்கொண்டு போய்ச்சினம். எல்லா மரங்களும் மொட்டையடிச்சினம். ஒரு மரம் கூட மிச்சமில்லை. பெரிய மரங்களிலை எல்லாம் வெள்ளை ரேப் அடிச்சு லைற் போட்டிச்சினம். இப்படி மொட்டையாத்தான் எல்லா மரங்களும் இருக்கோணுமெண்டும் இலைகள் கிளைகள் வளந்தா வெட்டிவெட்டி விடோணுமெண்டும் சொல்லிச்சினம். மொத்தத்தில் அவை முந்தின மாதிரி இல்லை. அது ஒரு வகையில் எனக்கு பிரயோசினம் தான். ஏனெண்டா அம்மா அடிக்கிறதுக்கு கம்பு முறிக்கிறதுக்கு வேலியில சின்னக் கிளைகூட இல்லை. ஆனா பெரியம்மாதான¢ கவலைப்பட்டா. அடுத்த மாரிக்கு ஊண்டுறதுக்கு ஒரு கதியால்கூட இல்லை எண்டு.

ஒருக்கா வீடு மேயுறதுக்கு கிடுகு கொண்டு வந்த வண்டிலை றோட்டிலயே மறிச்சுக் கொட்டி றோட்டில இருந்து வீட்டுக்கு ஒவ்வொண்டாக் கொண்டு போகச் சொல்லிச்சினம். இப்படி நிறையக் கெடுபிடியல். எங்கட வீட்டில எத்தனை மணிக்கு விளக்கு வைக்கோணம் அதை எத்தினை மணிக்கு நூக்கோணும். எத்தனை மணி வரைக்கும் ஆக்கள் வெளியில போகலாம் வரலாம் எண்டதையெல்லாம் அவைதான் தீர்மானிச்சினம். ஒருநாள் இரவு திடீரென்று ஜீப்பொண்டு ஒழுங்கைக்குள்ள உறுமிக்கொண்டு வந்து இலக்கில்லாம சுடத் தொடங்கிச்சிது நாங்களும் அம்மாவும் மேசைக்கு கீழ் குறண்டிக்கிடந்தம் அம்மா காப்பாத்தம்மா அம்மாளாச்சித் தாயே எண்டு சொல்லிக்கொண்டிருந்தா திரும்பத் திரும்ப. அப்பா மட்டும் விறாந்தைக்குப் போய் எட்டிப்பார்த்தார். அடுத்தநாள் காலமை இரணை மடுச்சந்தியில் எட்டுப்பேரைச் சுட்டுப் போட்டுப் போயிற்றாங்களாம் எண்டு பெரியப்பாவும் அப்பாவும் கதைச்சுக்கொண்டிருந்திச்சினம்.

அதற்குப்பிறகான நாட்களில் ஆறு மணியோட றோட்டில பெரிய றோல் றோலா முளுக்கம்பிகளைப்போ றோட்டை அடைச்சுப் போடுவினம். வீட்டை ஆறுமணிக்கு முதல் எல்லாரும் வந்திடோணும். ஆறுமணிக்குப் பிறகு றோட்டால யாரும் வரேலா. அப்பதான் என்ர பிறந்தநாளுக்கு முதல் முதலா அந்தோனியாருக்கு நான் நாலு மணிக்கே மெழுகுதிரி கொளுத்த வேண்டி வந்தது. மற்ற பிறந்த நாளுக்கெல்லாம் ஆறரைக்குத்தான் போய் மெழுகுதிரி கொளுத்தினன் இந்தியனாமி வந்தாப்பிறகு முள்ளுக்கம்பியள் போட்டாப்பிறகு அதுவும் மாறிச்சு. அம்மா எனக்குப் பிறந்தநாள் எண்டாலும் அவேள் மெழுகுதிரி கொளுத்த விடமாட்டினமா எண்டு நான் அம்மாவைக் கேட்டன். அம்மா வழக்கம் போல “பேசாம வாடா” எண்டு வெருட்டிப் போட்டு என்னை இழுத்துக்கொண்டு போனா. யாரும் போக முடியாது ராணுவ வாகனங்களைத்தவிர யாரும் போகமுடியாது.

இப்ப ஆறரை மணிக்கு மேலையாச்சுது. றோட்டில இந்தியனாமி முள்ளுக்கம்பி போட்டிட்டான். அதையெல்லாம் எடுத்தாத்தான் அப்பாவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகமுடியும். அப்பாவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போவதற்கு ராணுவத்துடன் யார்யாரேவெல்லாம் கதைக்கிறார்கள். நான் குரல்களை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தனான். குரல்களில் கெஞ்சலும் அழுகையும் கேட்டுக்கொண்டிருந்தது. அழுத குரல் பெரிய மாமாவின் குரலாகத் தான் இருக்கவேண்டும். என்னால் மனிதர்களின் கால்களை மட்டும் தான் பார்க்க முடிந்தது. சேர் மூர்த்திசேர் பாம்பு கடிச்சிட்டுது சேர். யாரோ இந்திய ராணுவத்திடம் கெஞ்சினார்கள். இந்தியராணுவம் பலமாக மறுத்துக்கொண்டிருந்தது.

நான் சனங்களின் கால்களிடையில் நசிபட்டுக் கொண்டிருந்தேன். கால்களிடையில் புகுந்து புகுந்து அப்பாவிடம் போனேன். அப்பாவை வைரவர் கோயிலடியில் கிடத்தியிருந்தார்கள். நான் அப்பா என்று அவர் மீசையைப் பிடித்தேன். அப்பா என்னைக் கட்டிப்பிடிச்சுக் கொஞ்சினார். அந்தக் கொஞ்சலில் என்றைக்கு மில்லாத அழுத்தம் நிரம்பியிருந்தது. அப்பா ஏன் அழுகிறார்? “அப்பா அப்புசாமியிட்ட போட்டு வாறன் பிள்ளை வடிவாப் படியுங்கோ” அப்பான்ர குரல் தளுதளுத்தது. அந்த வார்த்தைகளின் இறுதியையும் நிரந்தரத்தையும் என்னால் அப்போது புரிந்து கொள்ள முடியவில்லை. அதுதான் அப்பா என்னிடம் பேசுகிற கடைசி வார்த்தையாக இருக்கப்போகிறது என்பதும் எனக்குத் தெரிய வில்லை. அப்பாவின் ஞாபகங்கள் எல்லாவற்றையும் அடைத்துக் கொண்டு அந்த ஒற்றைமுத்தமும் வார்த்தைகளும் மட்டும்தான் என்வாழ்வின் மீதி நீளத்துக்கு எனக்கு மிஞ்சப்போகிறது என்பது எனக்குத் தெரியாது. சொல்லப்போனால் மரணம் மறுபடி ஆளைத் திரும்பத் தராது என எனக்கு அப்போது புரியவேயில்லை. இந்திய ராணுவம் இறுதிவரை அப்பாவை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போக விடவில்லை. அப்பா செத்துப்போனார். வைரவரும் கைவிட்டார்.
அப்பாவை வீட்டைகொண்டு வந்து கிடத்தினார்கள். யார் யாரோ என்னைக்கட்டிப்பிடித்து அழுதார்கள். நான் கொஞ்சம் அசௌகரியப்பட்டேன் அவ்வளவுதான். துக்கம் எல்லாம் அப்போ திருக்கவுமில்லை தெரியவுமில்லை. நான் அப்பாவை கிட்டபோய் பார்த்தேன் அவர் விழிகள் ஒருமுறை திறந்து மூடியது போலிருந்தது. நான் நிச்சயமாய் பார்த்தேன் அந்த வெளிறிய விழிகளை அதில் வழிந்துகொண்டிருந்த எம்மைப்பிரிய முடியாத வலியைப் பார்த்தேன். நான் அப்பா முழிப்பு என்று யாரிடமாவது சொல்லவேண்டும் என்று நினைத்தேன். யாரும் என்னைக் கவனிக்கவேயில்லை நிறைய ஆட்கள் நின்றார்கள். எல்லோரதும் முழங்கால்களை முட்டி முட்டி நான் அலைந்து கொண்டிருந்தேன். கடைசியாக பெரியமாமாவிடம் போய்ச் சொன்னேன் “மாமா அப்பா முழிப்பு என்று.” பெரியமாமா பெரிதாக வெடித்து அழுதார் என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டு, வீட்டு விறாந்தைக்கும் குசினிக்கும் இடையில் இருக்கிற ஓடைக்குள் நிண்டு மாமா பெரிதாக அழுதார். எனக்கு அப்ப ஏதோ மனசுக்குள் சின்னதாய் துயரம் நெருடியது. நான் மாமாவிடமிருந்து விடுபட்டு ஓடினேன். என்னைப் பொருத்தவரையில் அப்பா முழிப்பு. அதற்குப் பிறகு யாரிடமும் சொல்ல முடியவில்லை அப்பா முழிப்பு என்று. அந்த வேதனை இன்றைவரைக்கும் எனக்கு உண்டு. (நான் இப்போது யோசிப்பது உண்டு அது ஒரு பிரமையோ என்று) ஆனால் அது பிரமையென்பதை மனசுக்குள் ஒரு குட்டி அகிலன் உட்கார்ந்து கொண்டு நம்ப மறுக்கிறான். இந்தப் பெரிய அகிலன் அதைப் பிரமையென்று நம்பிவிட முனைகிறான். ஒரு பிரமையின் ஞாபகங்கள் இருபது வருடம் தாண்டியும் மனசில் தங்கியிருப்பது என்பது ம்…

ஒப்பாரி காதைக்கிழித்தது. பிறகு எல்லாம் வேகமாக நடந்தது. நான் அப்பா இப்போது பொடி என்பதால் அப்பாவுக்கு முன்னுக்கு அல்லது அப்பா என்கிற இந்தப் பொடிக்கு முன்னுக்கு கையை வெளியில் எடுக்காமல் பின்னாலேயே கட்டிக்கொண்டிருந்தேன். அல்லது அப்பாதானே கையை எடுக்கலாமா விடலாமா அழுகிப் போகாதா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். எனக்கு நல்ல ஞாபகமிருக்கிறது. அப்பாவுக்கு நிறையப்பேர கண்ணீர் அஞ்சலி அடித்தார்கள். நான் அதையெல்லாம் ஒரு மூட்டைக்கு மேலிருந்து உரத்து மரண அறிவித்தல் பாணியில் வாசித்துக்கொண்டிருந்தேன். கார்ல ஸ்பீக்கர் கட்டி எனௌன்ஸ் பண்ணிக் கொண்டு போனதைப் பிரதிபண்ணி நான் வாசித்துக் கொண்டிருந்தேன். வெத்திலத் தட்டத்தை பெரியாக்கள் கேக்க கேக்க அங்கயும் இங்கயுமா மாறிமாறிக்கொண்டு போய்க் கொடுத்துக் கொண்டிருந்தேன். அப்பா என்கிற மனிதனின் இல்லாமை எனக்கு அப்போது உறுத்தவே இல்லை. பெரியக்கா வந்து என்னைக் கூட்டிக்கொண்டு போய்ச் சாப்பாடு தந்தாள் பாணும் சம்பலும். எனக்கு நினைவிருக்கிறது. பெரியம்மா வீட்டுக் குந்தில வைத்து அக்கா எனக்கும் தம்பிக்கும் தீத்தி விட்டாள். யாரோ வந்து பெரியக்காவிடம் சொன்னார்கள். இவங்களை அங்க விடாதை பிள்ளை இவங்களைப் பார்க்கப் பார்க்க அவளுக்கு கவலையின்னும் இன்னும் கூடும். அக்கா ஓம் ஓம் என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.

நான் அழவேயில்லையா கொள்ளிக்குடத்தோடு என்னைத் தோளில் வைத்துக்கொண்டு அப்பாவைச்சுற்றி வந்தபோது எனக்கு ஏதோ விபரீதம் என்று புரிந்தபோது. அழுதேன். கடைசியாக சுடலையில் அப்பாவைக் கொளுத்தியபோது பட்டு வேட்டியும் சால்வையுமாகப் படுத்திருந்த அப்பாவின் சுருட்டைத் தலை முடியைப் பற்றிக்கொண்டு மஞ்சளாய்த் தீ நடனமாயிபோது, அப்பா இனிமேல் வரவே மாட்டார் என்று எனக்கு புரிந்தபோது வீறிட்டு கத்தினேன். அப்பா என்கிற மிகப்பெரிய துணையின் இழப்பு எனக்கு அந்தக் கணத்தில் புரிந்தது. யார் யாரோ என்னை அணைத்தார்கள். சமாதானப்படுத்தினார்கள். சோடா கொடுத்தார்கள். இப்போதும் அந்த அழுகை உறங்கிக்கொண்டிருந்தது எனக்குள். இதை எழுதிக் கடக்கையிலும் உதடுகள் துடித்து மனசுக்குள் மெல்லிய நடுக்கம் கிளம்பிக்கொண்டிருந்தது.

இப்போது 18 வருடங்கள் கழித்து மரணம் பற்றி எனக்கிருந்த எண்ணங்களை அனுபவங்களை எழுதலாம் என்று நினைத்து தொடங்கினேன். அப்பாவின் மரணத்தை தவிர்த்து விட்டு எப்படி-? அப்பா எனக்கு சரியாக நினைவுகளில் பதியாத பிம்பம். அவர்
மரணம் என்னை அவர் மரணம் என்னை நிச்சயமாக பாதித்தது. என்னிலும் அதிகமாக தம்பியை அதைவிட அப்போதுதான் பிறந்திருந்து தங்கையை (அவளுக்கு அப்பாவின் முகமே தெரியாது) அந்த மரணம் பாதித்தது. அப்பனில்லாப்பிள்ளைகள் என்கிற இலவச இணைப்பு அனுதாபம் என்னோடு எப்போதும் கூடவே வந்து அசௌகரியத்தையும் கூடவே அப்பாவின் நினைவுகளையும் தந்து கொண்டேயிருக்கிறது.

மரணத்தின் வாசனை நூலில் இடம்பெற்றுள்ள படைப்புகளில் ஒன்று.

பறத்தலின் திசை

Posted by த.அகிலன் on Jun 17th, 2009
2009
Jun 17

leaf.jpgஎனது கவிதைக்குள்
ஒழிந்திருக்கிறது
திசையறியாப்பறவையின்
சிறகுகளின் தத்தளிப்பு..

உள்ளோடும்
சொற்களினதும்
வாக்கியங்களினதும்
அர்த்தங்களை நான் மறந்துவிட்டேன்
இறகினைப்போல் அலைந்து
கொண்டிருக்கிறது கவிதை

திசையறியாப் பறத்தலின்
தவிப்பில்
உதிரும் இலைகளைப்
பின்பற்றியபடியிருக்கிறது மனம்
எனை ஏந்திக்கொண்டிருப்பது
காற்றின்
எந்தக்கிளை

சலிப்பு…

Posted by த.அகிலன் on Jun 14th, 2009
2009
Jun 14


யாரும் புரிந்து கொள்ளவியலா?
ஜடமாகவே இருந்துவிடுகிறேன்
நான்……

காலம்
என் கைகளில்
திணித்துப்போன…
நிறமற்ற கனவுகள்…
எனக்குள்ளே மூழ்கிவிடட்டும்…

தேவதைகள்
யாருமற்ற எனது நிலத்தில்
சருகுற்று…
பேய்கள் வசிக்கட்டும்….

எப்போதேனும்…
கொலுசுகளோடு
வரும்
யாரோ ஒருத்தி
கண்டெடுக்கக் கூடும்…
சருகுகளினடியில்….
சிக்குண்டு போன…
யாரும்படிக்காத…
எனது புத்தகத்தின்…
இறுதிப் பக்கங்களை…..

2009
Jun 14

இரண்டு வாரங்களாக இந்தப் புத்தகம் என்னுடன் எல்லா நேரத்திலும் பயணித்து வந்தது. ஒன்றிரண்டு நாட்களில் வாசித்திருக்க முடியும். ஆனால் இப்புத்தகத்தின் ஆழமும், வாசித்தபின் ஏற்படும் மன அழுத்தமும் சொல்லில் அடங்காது. கதையென்று அதை எப்படிக் கூற முடியும்? போரின் கொடூரங்களை பேரழிவுகளை வார்த்தை வார்த்தையாக கொட்டியிருக்கிறார் அகிலன். அவரைப்போல எம் ஈழ மக்களுக்கு அங்கு ஏற்பட்டிருக்கும் பெரும்துயர் என்று எப்போது எப்படி ஆறும்? காலத்தின் படர்ந்திருக்கும் இந்த ரத்தக் கறையை எவ்வளவு துடைத்தாலும் மறையுமா? பதில் சொல்ல யாரிருக்கிறார்? இத்தனைக்குப் பின்னும் வாழ்தலின் பேரலவலத்தை புனைவாயும் நிஜமாயும் விவரிக்கிறார் அகிலன். நம்முன் அலறித்துடிக்கும் அந்த ஓலத்தின் குரல் தமிழ்க்குரல் என்பதைத் தவிர நமக்கு போரின் அவலங்கள் பற்றி எவ்வளவு வாசித்தும் எத்தனை படம் பார்த்தும் தினம் தினம் செய்தி கேட்டும் என்ன தெரிந்துவிடும்?

‘மரணத்தின் வாசனை’ மூலம் அகிலனும் நானும் ஏதோ ஒரு புள்ளியில் இணைந்துள்ளோம்.‘எதைக் கடந்துவிட்டதாய் நான் எண்ணிக் கொண்டிருந்தேனோ, அது என்னைத் துரத்துகிறது’ அவனைப் போலவே நானும் பல நாள்கள் துயருற்றிருக்கிறேன். பிரிவும், தனிமையும், மரணமும் செர்ந்து என்னை துரத்தியபடியே இருந்த காலகட்டங்கள் உண்டு. எம்மைவிட மிக வலிமையான அவற்றுடன் நான் போராடிச் சலித்து இறுதியில் சரணடைந்துவிட்டேன். என் பிரியமான தங்கையை மரணம் என்னிடமிருந்து இரக்கமில்லாமல் பிடுங்கிச் சென்றது. பின் அன்பான நண்பனை தெருவில் அடிபட்டு சாகச் செய்தது. எனக்கு தோழமையாகவும் வழிகாட்டியாகவும் இருந்த என்னுடைய பாஸை (boss) மலையிலிருந்து கீழ் தள்ளி சாகடித்து அகோரமாய் சிரித்ததுப் பார்த்தது. எல்லாமே எதிர்பாராத மரணங்கள்… இளமையின் வெவ்வேறு படிகளில் நின்றுகொண்டிருந்த அவர்கள் நினைத்திருப்பார்களா சாவு தங்களை இப்படி காவு கொள்ளுமென்று? பித்துப் பிடித்து செய்வதறியாது நான் கலங்கி நின்றிருந்தேன். யாரிடமும் காண்பிக்க முடியாத வேதனையை கவிதையாய், எழுத்தாய், என் டைரியின் தாள்களில் இறக்கி வைத்தேன். துக்கம் ஓரளவிற்கு இருநூறு பக்கங்களில் அடங்கிவிட்டது. ஆனால் அதன் வெம்மை என் மனதிற்குள் அணையா நெருப்பாய் இருக்கிறது, நான் இறக்கும்வரையிலும் அது இருக்கத்தான் செய்யும். தற்செயலாய் அதை வாசித்த என் நண்பர் ஒருவர் இரண்டு நாள் இரவு தூங்காமல் தவித்தாராம். அத்தனை வலியையும் வேதனையும் வார்த்தையின் வடிவில் பார்த்தவருக்கு அதிர்ச்சி. எப்படி தாங்கிக் கொண்டாய், இதற்குப்பின்னரும் உன்னால் எப்படி சிரிக்க முடிகிறது, நானென்றால் பைத்தியமாகியிருப்பேனே என்றார். நான் புன்னகைத்து வாழ்க்கை கற்றுக் கொடுக்கும் பாடங்களில் மகத்தானது மரணத்தை பற்றியது சிலருக்கு அது கொடூரமாக சொல்லித்தருகிறது, என்னைப் போல என்றேன். இப்போது அகிலனின் கதைகளை வாசிக்கும்போது எமக்கேற்பட்ட துன்பங்கள் மங்கலாகிக் கொண்டிருக்கிறது. தந்தையை, நண்பனை, சித்தியை, ப்ரியமான நங்கையை – சமீபத்தில் தன்னுடன் பிறந்தவனை என எத்தனை எத்தனை மரணங்கள் அவர் வாழ்வில். வழி நெடுக மரணத்தூனூடே பயணிக்கிறது அகிலனின் வாழ்வு இந்த சிறிய வயதில் எப்படி எப்படித் தாங்கிக் கொண்டார் என நினைக்கையில் மனம் கனத்துக் கிடக்கிறது. வெகு நாள் கழித்து முகம் தெரியாத மனிதர்களுக்காகவும் அழ நேர்ந்தது. காலம் எல்லா காயங்களுக்கும் மருந்து போடும் என்பதைத் தவிர அகிலனுக்கு ஆறுதலாய்க் கூற வார்த்தை ஏதுமில்லை என்னிடம்.

இப்புனைவுகளை நுட்பமான மொழிநடையில் ஈழத்தின் அழகுத் தமிழில் எழுதியுள்ளார் அகிலன். தொன்மையான நம் தமிழனின் மொழியது. சில வார்த்தைகள் புரியாவிட்டாலும் தொடர்ந்து வாசிக்கும்போது தெள்ளந்தெளிவாக புரிகிறது. இத்தொகுப்பில் மொத்தம் பனிரெண்டு கதைகள். எல்லாக் கதைகளுமே என்னை பாதித்தது, மிகவும் பாதித்த கதைகள் எண்டு சொன்னால், ‘ஒரு சின்னப் பையனின் அப்பா செத்துப் போனார்’, ‘செய்தியாக – துயரமாக – அரசியலாக’, சித்தி’, குமார் அண்ணாவும் மிளகாய்க் கண்டுகளும்’, ‘சலனங்கள் அற்றவனின் கடைசிநாள்’, ‘தோற்ற மயங்கங்களோ’. மற்ற கதைகளான ‘ஒரு ஊரில் ஒரு கிழவி’, ‘ஒருத்தீ’, ‘மந்திரக்காரண்டி அம்மாண்டி’, ‘கரைகளிற்க்கிடையே’ ‘நீ போய்விட்ட பிறகு’ ‘நரைத்த கண்ணீர்’, ஆகியவையும் மிகவும் நுட்பமான கதைகள்.

இப்புத்தகத்திலிருந்து என் மனதை பிழிந்தெடுத்த சில வரிகள், இதை எழுதும் போது அகிலனின் மனநிலையை அவதானிக்க முடிகிறது. என் கண்ணில் கண்ணீரை அல்ல அனல் நீரை வார்க்கச் செய்துவிட்டது இவ்வுரைகள்.

“மரணமும் அதுகுறித்தான பயமும் அறியப்படாத ஒரு ரகசியச் சுவை போல நம்மிடையே கலந்திருக்கிறது. யாரும் தாண்டிவிட விரும்பாத சுவரைப்போலவும்….”

“அவர்கள் நேசித்த உடலைக் கண்ணுக்குள் வைப்பதும் யாருவருக்கும் பிரியமான ஒரு செய்லாயிருக்கிறது. நான் நினைத்தேன், மனிதன் உடலாகவே அறியப்படுகிறான். கறுப்பாய், ஒல்லியாய், குண்டாய் என அவனது உடலையே நம் நினைவுகள் முதலில் கொண்டாடுகின்றன. உடல் சார்ந்தே அவனுடைய பிறநினைவுகளும் வாழ்கின்றன. அந்த உடலின் பிரதிநிதியாகவே ஒரு மனிதன் குறித்த நினைவுகள் நமக்குள் தங்கிவிடுகின்றன. அதனால் அந்த உடலைக் கடைசியாகப் பார்த்துவிட வேண்டும் என்று துடிக்கிறோம்…..”

“துயர் தரும் மரணத்தின் கதைகளுக்கு இந்த நாட்டில் பஞ்சமா? குருதியும் எதிந்த தசைகளின் துர்மணமும் நிறைந்த கதைகள் தவிர வேறென்ன இருக்கிறது இங்கே. எல்லாரையும் கொன்று கொண்டோ அல்லது கொல்வதற்குக் கட்டாயப்படுத்திக் கொண்டோ இருக்கிறது.”

“தேவதையின் மரணத்தை அண்ணி கடிதத்தில் உறுதி செய்தாள். மெலிந்து கறுத்துப் போன உனது சீருடைப் படத்திற்உ உன் கிராமத்து வீட்டில் மாலைபோட்டு ஊதுபத்தி ஏற்றியிருப்பதாக, மரணத்தின் வாசனை அதனின்றும் கமழ்ந்து கொண்டிருப்பதை தான் போய் பார்த்தேன் என்று அண்ணி எழுதியிருந்தாள். மரணம் நாசமாய்ப் போக. அது தேவதைகளையும் விட்டு வைப்பதில்லை.”

“யுத்தம் கொடிய யுத்தம். மனித மனங்களை சிதைத்துக் குவித்துக் கொன்றுவிட்டிருக்கும் யுத்தத்தின் இன்னுமொரு சாட்சி இவன். இனி என்றைக்கும் திரும்பவியலாதது. பிரிவும் துயரமும் எதிர்ப்பார்ப்பு கலவையாகிப் பினைந்து கொண்டிருக்கிறது இவன் சிந்தனைகளை என்று தோன்றியது எனக்கு.”

புத்தகத்தை மூடி வைத்து இரவில் வெகு நேரம் தூங்காமல் விழித்திருந்தேன். அகிலன் சொல்வது போல் ‘மரணமும் அது குறித்தான சேதிகளும் ஒரு கொடு நிழலைப்போல் என்னைப் பின் தொடர்ந்து கொண்டிருக்கின்றன” ஆம்…

http://umashakthi.blogspot.com/2009/04/blog-post_16.html

மஞ்சு ஒரு அழகான குட்டிப்பெண். 3 வயதில் அவளைத் தூக்கி நான் முத்தமிடும் போதெல்லாம் அவள் என் கறுப்பு நிறம் தனக்கும் ஒட்டிவிடப்போகிறது என்ற சின்னக்காவின் வார்த்தைகளை நம்பி தனது கைகளால் நான் முத்தமிட்ட கன்னத்தை அழுந்த துடைத்துக்கொள்வாள்.. அகிலன் மாமா ஆள்தான் கறுப்பு மனசுமுழுக்க வெள்ளை (நம்பலாம்) என்று அவளது கனவில் ஒரு பட்டாம் பூச்சி சொல்லிய நாளொன்றில். அவளது அகிலன் மாமா  வெள்ளையாய் மாறுவதற்காக எனக்குச் சிலமுத்தங்களும் தந்திருக்கிறாள்… அதற்குப்பிற நிறையத் தடைவை..
கடவுள் என்கிற சமாச்சாரங்களில் நம்பிக்கையில்லையெனச் சொல்லித்திரிகிற கோயிலுக்குப்போகாத நெற்றியில் திரு நீறு பூசிக்கொள்ளாத ஒரு நாளில்.. தன் அம்மாவோடு கோயிலுக்குப் போய்விட்டு வந்து என் நெற்றியில் அச்சிறுபெண் “அப்பு சாமி” என்று பெரியவர்களின் தொனியில் சொல்லியபடி திருநீற்றைப்பூசிவிடுகையில் நான் கடவுள் இருந்துவிட்டுப்போகட்டும் என்று நினைத்தேன். அந்த அழகான கைகளை அவள் இழந்துவிட்டாள் இந்தப் போர் நாசமாய்ப்போன கொடிய போர் தின்றுவிட்டது அவளது பிஞ்சுக்கைகளையும் அச்சிறுமியின் கனவுகளையும்.. தன் நான்கு வயதில் எனக்காகவும் சேர்த்து வேண்டிக்கொண்ட அந்தச்சிறுபெண்ணை ஏன் இந்தப்பாழாய்ப்போன தெய்வங்கள் கைவிட்டன?
5 வயதுச்சிறுபெண்ணுக்கு கையில்லையா? ஏன் என்கிற கேள்விகள் அபத்தமாகப்பட்டது எனக்கு.. இதுதானே நடக்கிறது.. பிறந்த குழந்தைகளே கைகளை இழக்கும் போதும் உயிரை இழக்கும் போதும்..  இது சாதாரணம் தான்.. ஆனாலும் மனசுக்குள் எதுவோ நெருடியது.. எதுவோ தொண்டைக்குள் சுழன்றாடிது.. நனைந்த கன்னங்களை துடைத்துக்கொள்கிறேன்.. இப்படித்தான் மஞ்சுக்குட்டியும் நான் முத்தமிடும்போது கன்னங்களைத் துடைத்துக்கொள்ளும்..  ஆனால் எல்லாவற்றையும் விட வேதனையானது இதுதான் மஞ்சுவுக்கு தான் எதற்காக கைகளை இழந்தோம் என்பதைப் புரிந்துகொளவியலாமல் இருப்பதுதான். அது எவ்வளவு கொடுமையான தண்டனைகள் தவறானவை சரியானவை என்பதற்கு முன்பாக அவை எதற்காக வழங்க்படுகின்றன என்ற காரணங்கள் முக்கியமானவை இல்லையா.
அம்மா வெளியே போயிருக்கிற நேரமாகப் பார்த்து அவளுக்கு தெரியாமல் சக்கரையை திருடித் தின்றுவிட்டு வாய்முழுதும் சக்கரை அப்பியிருக்க அம்மா வந்ததும் கேப்பாள் சக்கரை எடுத்து சாப்பிடனியளோ கண்களால் சிரித்தபடி இல்லையே என்று சொல்லும் குழந்தைக்கு தண்டனையாய் அம்மா  முத்தங்களைத்தான் பரிசளிப்பாள். அம்மா மட்டுமென்ன குழந்தைகளைப் நேசிக்கிற எவனாலும் அந்தத் தண்டனையைத்தான் அவற்றுக்கு தரமுடியும்.செய்த தவறுக்கே தண்டனைகள் இனிக்கிற குழந்தைகளில் உலகில் செய்யாத தவறுகளுக்கான தண்டனைகள் வலிப்பதில் என்ன நியாயம் இருக்கமுடியம்.
ஆனால் தான் எதற்காக குண்டுகளால் தாக்கப்படுகிறோம் என்கிற காரணங்களை அறிந்து கொள்ளாமலேயே அவள் தண்டனை பெறுகிறாள். செத்துப்போகிறாள்..அவயவங்களை இழக்கிறாள்.

HOTEL RWANDA படத்தில் ஒரு காட்சி வரும் ஒரு செஞ்சிலுவைச் சங்க பெண் அதிகாகரி சொல்லுவாள். நான் நிறைய அனாதைக் குழந்தைகளைச் சந்தித்தேன் அந்தக் குழந்தைகள் சொல்லின “தயவு செய்து அவர்கள் எங்களைக் கொல்லவேண்டாம் என்று சொல்லுங்கள்  சத்தியமாக இனியொரு தடைவை நான் துசி இனமாகப் பிறக்கமாட்டேன்” (Please don’t let them kill me. i promise I won’t be tutsi any more) அந்த செஞ்சிலுவைச் சங்க அதிகாரி இப்படிச் சொல்லியபடி அழுவாள்.
வன்னியிலும் குழந்தைகள் அப்படித்தான் சொல்லியழும். “தயவு செய்து எங்களை இந்தமுறை மன்னித்து விடுங்கள் இனியொரு தடைவை நாங்கள் தமிழர்களாகப் பிறக்கமாட்டோம்” இந்தக் குரல் போர் நடத்துகிற எந்தத் தரப்புக்குமே கேட்பதில்லை. வெற்றிகளின் போது போரையும் தோல்விகளின் போது போர் நிறுத்தத்தையும் கோருகிற. கிரிக்கெட் ஸ்கோரைப்போல போரில் இருந்து உதிருகிற எண்ணிக்கைகளையும் எதிர்கொள்கிற தங்களையும் தங்கள் குழந்தைகளையும் பத்திரமாக வெளிகளில் வைத்துக்கொண்டிருக்கிற எந்த……………… டிக்கும் இந்த அழுகுரல் ஒரு பிரச்சினையில்லை.
பதுங்குகுழிகளில் இருந்து
சிலந்திகள் வெளியேறிய அன்றைக்கு..
குழந்தைகள் சம்மணமிட்டு அமர்வதை மறந்தார்கள்..
(சிலந்திகள் வெளியேறிய பதுங்குகுழிகள்)

குழந்தைகள் அஞ்சி நடுங்கிக்கொண்டிருக்கின்றன. பால்யத்தில் துப்பாக்கிகளைக் கண்டு அஞ்சவும் சில பொழுதுகளில் அவற்றைச் சுமக்கவும் நிர்;பந்திக்கப்படுகிறார்கள் குழந்தைகள். போர் குழந்தைகளைத் தின்றுகொண்டிருக்கிறது. பல்வேறு வழிகளிலும் காலத்தால் திருப்பித்தரமுடியாத பால்யத்தின் ஆனந்தத்தை குழந்தைகள் இழக்கிறார்கள். அச்சமுற்றும் தயங்கியும் தமக்குள் உள்ளொடுங்கியவர்களாகவும் அவர்கள்மாறிப்போகிறார்கள்.
தமிழனாகப் பிறந்ததற்காக வன்னியில் இருக்கிற ஒருவன் சாகலாம் சாகவேண்டும் அப்படி சாகாவிட்டால் (பத்திரமான வெளிகளில் தங்கியிருக்கிற எங்கள் மானம் என்னாவது) ஆனால் ஒரு குழந்தை தான் எதற்காகத்  சாகிறோம் என்கிற காரணம் தெரிந்துகொண்டு சாவது மேலானது இல்லையா அந்த வாய்ப்பை குழந்தைகளிற்கு வழங்கவேண்டும் நண்பர்களே?

2009
Jun 9

எழுதியவர் அய்யனார்
பின்
ஓர் இரவில்
துப்பாக்கியின் கண்கள்
அவன் முதுகினில் நிழலெனப்படிந்து
அவன் குரலுருவி
ஒரு பறவையைப் போல்
விரைந்து மறைந்ததாய்
அவன் குழந்தைகள் சொல்லின

தமிழ்சூழலை வெற்றுச் சொற்களால், பகட்டால், விளம்பர மிகைப்படுத்தல்களால் நிறைக்கும் மாதிரிகளின் குரல்வளையை / கைவிரலை நெறிக்கத் தோன்றும் அதே சமயத்தில் உண்மைக்கு சமீபமான எழுத்துக்களை கொண்டாடத் தோணுகிறது.தனது வாழ்வை கிசுகிசுப்பான குரலில் ஈரத்தோடு பதிவிக்கும் கவிஞனை இறுக அணைத்துக்கொள்ளலாம். மிகுந்த அன்பும் நெகிழ்வும் கொண்ட வினோத படைப்பு கவிஞனாகத்தான் இருக்க முடியும்.அகிலனின் கவிதைகள் வலைப்பக்கத்தில் படிக்கும்போது ஏற்படுத்திய உணர்வுகளை விட முழுத் தொகுப்பாய் படிக்கும்போது அதன் வீர்யம் சற்று அதிகமாய்த்தான் இருந்தது.

மழையையும், வண்ணத்துப் பூச்சியையும், அன்பையும், நெகிழ்தலையும், துயரையும், வலிகளையும் அழைத்து வந்திருக்கும் இன்னொரு கவிஞன்.இவனுக்கான பின்புலமாய் அலைவுகளுக்குட்பட்ட வாழ்வும், துப்பாக்கி சப்தங்களும், நெருக்கமான மரணங்களும், அந்நியத்தின் இணக்கமற்ற குரூரமும், அடையாளங்களுக்கான தவிப்புகளுமாய் இருந்திருக்கிறது.மொழியில் வாழ்வைப் பொதிந்துவைக்கும் அல்லது பொய்மை/பூச்சுகளைத் தவிர்க்கும் கவிதைகளோடு என்னால் நெருக்கமாக ஒட்டிக்கொள்ள முடிகிறது.உரத்த குரலில் பேசுவது எப்போதும் நிம்மதியின்மையைத் தருகிறது.கிசுகிசுப்புகளாய் சொல்லப்படும் குருதி வாடை கலந்த கவிதைகள் என்னமோ செய்து விட்டுப் போகிறது.

அகிலனின் முதல் கவிதைத் தொகுப்பை மின் நூலாகத்தான் படிக்க முடிந்தது. இக்கவிதைகளை எந்த ஒரு சட்டகத்துக்குள்ளும் நான் அடைத்து வைக்க விரும்பவில்லை.தனி மனிதனின் நுண்ணுணர்வுகளை மொழியாக்கும்போது அதை விமர்சிக்கவோ, இப்படி இருந்திருக்கலாம், அப்படி இருந்திருக்கலாம் ரீதியிலான மேதாவித் தனங்களை வெளிப்படுத்திக் கொள்ளவோ எனக்கு விருப்பமில்லை. மேலும் இக்கவிதைகளிள் அதிகமாய் விரவி இருக்கும் தன் வயத்தன்மை மிகுந்த பரிவுகளை உண்டாக்கி கவிஞனை மிக நெருக்கமாய் உணரச் செய்துவிடுகிறது.வடிவ நேர்த்தி, ஒழுங்கு, கவித்துவம் என்பதின் மீதான நம்பிக்கைகள் எனக்கு எப்போதும் இருந்திராதது மிக வறட்சியான கவிதைகளையே எழுதத் தூண்டி இருக்கிறது.இக்கவிதைகளில் எனக்குப் பட்ட கச்சிதத் தன்மை படிக்க ஏதுவாகவும் கனவுத் தன்மையை உயிர்ப்பிப்பதாகவும் இருந்தது…

வெயில் சார்ந்த வாழ்வு மழையின் மீது காதலை,ஏக்கத்தை அதிகரித்துப் போகிறது. மழையைப் பற்றி எழுதாதவனை கவிஞனில்லை எனச் சொன்னாலும் அதை புன்முறுவலோடு ஏற்றுக்கொள்ளலாம் மழையின் மீதான நெகிழ்வை அகிலனின் மொழி கதவுகளைப் பிறாண்டும் பிராணி என்கிறது.இப்படிமம் மழையை சக உயிராக நினைக்கும் நெகிழ்வான மனதை கண் முன் நிறுத்துகிறது.வண்ணத்துப் பூச்சிகள், சிட்டுக்குருவிகள், முத்தம், கொலுசு என சன்னமாய் பெய்து கொன்டிருக்கும் மழையை நினைவூட்டும் கவிதைகள் சில பக்கங்கள் தாண்டியதும் குரூரத்தைப் பேசுகிறது. வன்மத்தை, அதிகாரத்தை, நசுக்கப்படுதலை, எதிர்க்கத் திராணியற்று போதலை பேசத் துவங்கியதும் கவிதையின் மொழியில் இறுக்கம் கூடுகிறது.குறிப்பாய் காட்டின் நினைவு என்கிற கவிதை திரும்பத் திரும்ப வாசிக்க வைத்தது.அந்த கச்சிதமான எதிர்ப்பு, மிகக் குறைவான/சன்னமான ஆனால் அழுத்தமான எதிர்ப்பு எல்லாவற்றுக்குமான காரணங்களை சொல்கிறது.

எம்மிடம்
பை நிறையக் கனவுகள் இருந்தன
வேரெதையும் எடுத்துக்கொள்ளவுமில்லை
விட்டுச்செல்லவுமில்லை
கொஞ்சம் விரோதங்களைத் தவிர..

கவிதை மய்யங்களின் சீரான வளர்ச்சி மொழியின் வசீகரத்தைத் தவிர்த்திருக்கிறது தவிர்ப்பது தேவையானதும் கூட. வீர்யமான கவிதைகளுக்கான காலமென இச்சூழலைச் சொல்லலாம் புனைவை நோக்கி நகர வேண்டிய நிர்பந்தத்திலும் நாமிருப்பது அல்லது புனைவின் மீதான விருப்பங்களில் நாமிருப்பது மிகவும் ஆரோக்கியமானது. எழுதப்படாத சொற்களும் தாள்களும் புனையும் தளம் விநோதமானது

தன் பின்னலைத் தளர்த்திய
ஒரு கிழவியின்
சாபத்தின் சொற்கள்
ஊரை நிறைத்தது

பின்பொரு நாள்
பூவரசம் வேலிகளைத்
தறித்தபடியெழும் கோடாரின் கரங்கள்
ஒரு குழந்தையிடமிருக்கக்
கண்டேன்

அம்மம்மாவின் சுருக்குப் பை மிக அழகான கிராமத்து வாழ்வை மிகுந்த ரசனைகளோடு சொல்கிறது

தும்புமிட்டாஸ்காரனின்
கிணுகிணுப்பிற்கு
அவிழ்கிற அம்மம்மாவின்
சுருக்குப் பை போல
அவிழ்ந்து கிளம்புகின்றன
ஞாபகங்கள்

கடவுள், துரத்தப்பட்ட ஆடு, மதங்கொண்ட நிலவு போன்ற கவிதைகள் சிறுகதைக்கான காட்சிகளை உள்ளடக்கியிருக்கிறது.கவிஞனுக்கு இருக்கும் பொது குணமாக கழிவிரக்கத்தையும் குற்றவுணர்வையும் சொல்லலாம் அல்லது மிகுந்த குற்ற உணர்வுகளும், கழிவிரக்கமும், பிரிவும், துயர்களும் மாத்திரமே கவிதை எழுதத் தூண்டுகிறதோ என்னமோ..பிறழ்வில் முடித்திருக்கும் அகிலனிடமிருந்து பிறழ்வின் வசீகரங்களை, பிறழ்வின் மூலமாய் நிகழ்த்தப்படக்கூடிய சாத்தியங்களை, புது மொழிகளை எதிர்பார்க்கலாம் எனத்தான் தோன்றுகிறது.நல்லதொரு கவிதை அனுபவத்தை தந்த அகிலனுக்கு வாழ்த்துக்களும் அன்பும்.

http://ayyanaarv.blogspot.com/2008/03/blog-post.html

« Prev - Next »