“தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்”

-    பைபிளிலிருந்து

பொங்குதமிழ் இணையத்தில் வெளியான அனுபவங்களின் காயத்தினை கேள்வி ஞானத்தினால் கண்டடைய முடியாது என்னும் என்னுடைய கட்டுரைக்கு பதிலாக யமுனா ராஜேந்திரன் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். அதைப் பதில் கட்டுரையாகப் பார்ப்பதா அல்லது சேகுவேரா நுழைந்தேயிராத கிறிஸ்தோபரின் வீடு என்ற தன் முன்னைய கட்டுரையில் யமுனா ராஜேந்திரன் என்னென்ன சொற்களை தான் என்னவிதமான அர்த்தங்களின் பயன்படுத்தினார் என்பதற்காக வழிகாட்டல் குறிப்பாகப் பார்ப்பதா என்றெனக்கு குழப்பமாகவே இருக்கிறது.

எப்போதும் எவரதும் சொற்களுக்கான இன்னோர் அர்த்தம் எதிராளியின் மனதில் ஒளிந்திருக்கிறது  என்பதை யமுனாராஜேந்திரன் அறியார் போலும். வயதாவதால் ஏற்பட்ட மறதியாய் இருக்கலாம். சின்னப் பொடியனான எனக்கு அது நினைவில் இருக்கிறது. அவரது கட்டுரையை நான் படித்திருக்கவில்லை என்று குற்றம் சாட்டும் யமுனா ராஜேந்திரன் எனது கட்டுரையில் தலைப்பைத் தவிர வேறெதையும் படித்திருக்க மாட்டார் போல. த. அகிலன் என்ற பெயரைப் பார்த்ததுமே வழக்கமாக எல்லாக் காலாவதியானவர்களுக்கும் வருகிற கோவம் யமுனா ராஜேந்திரனுக்கும் வருகிறது பொடிப்பயல் என்னைக் கேள்வி கேட்பதா? அந்த மனப்பிரச்சினையை தத்துவார்த்தப் பிரச்சினையாக்கி, சொற்களின் அர்த்தங்களைக் கட்டுரையாக எழுதிமுடித்துவிட்டுத்தான் மூச்சே விட்டிருப்பார் என்று நினைக்கிறேன்.

யமுனாராஜேந்திரனின் கட்டுரையைப் படித்ததும் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க சிரமப்பட்டபடி எப்போதோ ஒரு காலத்தில் சண்டியராய் இருந்த அதே நினைப்பில் முறைத்துப் பார்த்தபடி நிற்கிற பென்சன் எடுத்த பிரின்சிப்பலின்ர தோற்றமே கண்முன்னால் வந்தது. அவர் என்னை சின்னப்பொடியன் என்று சொன்னதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே. ஏனெனில் ஈழத்தமிழர்களின் வரலாற்றில் சின்னப்பெடியன்களின் பாத்திரம் மிகவும் முக்கியமானது. சின்னப் பெடியன்களே காலம் முழுதும் வரலாற்றை முன்னகர்த்துகிறவர்களாக இருக்கிறார்கள், இருப்பார்கள். அரசியல் சூழலை விளங்கிக் கொள்வதற்கு நான் ஒரு கதையை எப்போதும் நினைவுகொள்வதுண்டு. யமுனா போன்ற தங்களைத் தத்துவ அறிஞர்களாக் கருதிக் கொண்டு யார் யாருடைய காசுக்கோ ஜிங் ஜக் .. அடிப்பவர்களைப் பார்த்தால் எனக்குடனே அந்தக் கதைதான் நினைவுக்கு வரும். அதுவும் ஒரு சின்னப் பொடியன் பற்றிய கதைதான்.  அந்தக் கதையை இங்கே எழுதி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை ஏனெனில் யமுனாவுக்கு கொடுப்பதைப் போல எழுதுவதற்குக் காசு தருவதற்கு எனக்கு யாருமில்லை. நான் வெல்பெயராரும் அடிக்க முடியாது. ஆக கதைச் சுருக்கும்.. உலகத்திலேயெ அழகான ஆடையைத் தயாரிக்கிறோம் என்று அரசனின் காசில் சந்தோசமாயிருந்துவிட்டு இரண்டு நெசவுத் தொழிலாளிகள் அறிவுள்ளவர் கண்களுக்கு மட்டுமே அந்த ஆடை தெரியும் என்று சொல்லி வெறுந்தறியைக் காட்டுவார்கள். யமுனா ராஜேந்திரன் மாதிரி தத்துவஞானிகள்!, புலவர்கள், அமைச்சர்கள் என்று பெருங்கூட்டம் ஆஹா ஓஹோ என்று வெற்றுத் தறியைப் பார்த்துப் புகழக் கடைசியில் அரசன் அம்மணமாய் ஊர்வலம் போவான். அப்போது கூட்டத்திலிருந்து ஒரு சின்னப் பெடியன் கத்துவான் அரசன் அம்மணமாயெல்லோ போறான் என்று. இந்தக் கதைதான் எனக்கிப்போதும் நினைவுக்கு வருகிறது. சின்னப் பெடியன்களே மெய்யைச் சொல்லுகிறார்கள் எனவே என்னைக் சின்னப் பெடியன் என்று சொன்னமைக்காக உங்களுக்கு நன்றி யமுனா.

சொற்களை எப்படிக் கையாள்வது என்று யமுனா ராஜேந்திரன் சொல்லித்தருகிறார். அவரது பெருங்கருணைக்கு நன்றி. எந்தப் பொருளையும் விற்கிறவர்கள் அதை அழகாகவே காட்சிப்படுத்த வேண்டும் அப்படியல்லாவிட்டால் எப்படிப் போணியாகும். எனக்கு அது அப்படியல்ல. யமுனா ராஜேந்திரனே ஒத்துக்கொண்டபடி யமுனா ராஜேந்திரன் எழுதி வாழ்கிறவர். அல்லது எழுதி வாழும் வாய்ப்புப் பெற்றவர். நாங்கள் வாழ்ந்ததை அல்லது வாழ்க்கையைத் தான் எழுதுகிறோம். எங்களுக்கிடையிலான வித்தியாசம் இங்கேதான் இருக்கிறது யமுனா. நீங்கள் எழுதுவதற்கான விசயங்களைத் தேடுகிறீர்கள் நாங்கள் எங்களிடமிருக்கும் விசயங்களையே முழுமையாக எழுத முடியாமல் உள்ளே அமுங்கிக் கொண்டிருக்கிறோம்.

அனுபவத்திற்கு ஏகத்துவம் கோருகிறோம் என்று சொல்கிறார் யமுனா ராஜேந்திரன். அப்படி அர்தப்பட எதையாவது எழுதித் தொலைத்திருக்கிறேனா என்று மறுபடியும் பார்த்தேன் அப்படியெதுவும் எழுதவில்லை. உண்மையில் நான் கர்ணன் எழுதியிருப்பது அனுவம் என்று சொன்னேனே தவிர வேறு யாருக்கும் அனுபவமே கிடையாது என்று சொல்லவில்லை.  இலட்சோப லட்சம் தன்னிலைகளின் அனுபவத்திற்றுப் பதிலியாக எங்களுடைய அனுபவங்களைக் கோருகிறோம் என்று சொல்கிறீர்கள். நான் எழுதியிருப்பது இதுதான்.

புள்ளி விபரங்கள் குருதி சிந்துகிறதோ இல்லையோ? கதைசொல்லிகள் அவற்றை குருதி சிந்த வைக்கிறார்களோ இல்லையோ? எனக்குத் தெரியாது? ஆனால் புள்ளிவிபரங்களின் தானங்களிலொன்று பேசுவதே காலத்தின் குரலென்று நான் நம்புகிறேன். அப்படிப் பார்த்தால் அம்னஸ்டி அறிக்கை, .நா அறிக்கை போன்ற பல அமைப்புகளின் அறிக்கைகளின் புள்ளிவிபரங்களின் தானங்களில் ஒன்று கர்ணனுடைய தலையும். மேசைகளில் இருந்து கொண்டு புள்ளி விபரங்களை அலசி ஆராய்ந்து துவைத்துக் காயப்போட்டு. நடந்து முடிந்த ஈழப்போரை எழுத்துக்களாகவும், மிஞ்சி மிஞ்சிப்போனால் காட்சிகளாகவும், வதந்திகளாகவும் தெரிந்து வைத்துக்கொண்டிருக்கும் கேள்விச் செவியர்கள் கண்டடையும் மெய்யை விடவும் மேலானதாகவே இருக்கும், மேற்குறித்த புள்ளி விபரங்களின் தானங்கள் ஒன்றினது வாக்குமூலத்தில் வெளிப்படும் மெய். புள்ளி விபரங்களின் தானமாயிருப்பதன் சங்கடமும் வலியும் கேள்வி ஞானத்தால் கண்டடைய முடியாதவையே ஆகவே அவற்றை யமுனா ராஜேந்திரன் கண்டடையவில்லை என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

நான் இங்கே புள்ளி விபரங்களின் தானங்களிலொன்று என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன். அதே போலப் புள்ளி விபரங்களின் தானங்களின் மற்றொன்று பேசுவதையும் நான் நிராகரிக்கவேயில்லை. இவற்றில் எங்கேயிருந்து இலட்சோபலட்சம் தன்னிலைகளின் அனுபவத்திற்கு பதிலியாக கர்ணனுடைய அனுபவங்கள் இருக்கின்றன என்கிற அர்த்தத்தை நீங்கள் கண்டடைகிறீர்கள் என்றெனக்குத் தெரியவில்லை. அல்லது கட்டுரையை நீங்கள் படிக்காமல் யாரும் கவனத்துக்குக் கொண்டுவருபவர்களின் வாயிலிருந்து வந்ததைக் கேட்டு எழுதிவிட்டீர்களா?

யமுனா ராஜேந்திரன் போன்ற வெளியாட்களுக்கு அல்லது அவரது சொற்களிலேயே பங்கேற்பாளருக்கு அனுபவம் கிடையாதுதான் பங்கேற்பாளருக்கிருப்பதும் கேள்விஞானமே. உண்மையில் வன்னியில் இடம் பெற்ற போரைப்பற்றி எக்கச்சக்கமான வாக்கு மூலங்கள் வருகின்றன. நாங்கள் எதை மறுத்திருக்கிறோம் எதையுமே மறுத்ததில்லை. அவை ஏன் மிச்சப் பகுதி உண்மைகளைப் பேசவில்லை என்று கேள்வி கேட்டதில்லை. ஆனால் நீங்கள் கேட்டீர்கள். அதனால் தான் நான் என்னுடைய முந்தைய கட்டுரையில் இப்படி எழுதியிருந்தேன்.

பகுதி உண்மைகள் தொடர்பில் நீங்கள் நிறையக் கவலைப்படுகிறீர்கள். ஏன் கர்ணன் பகுதி உண்மைகளை எழுதுகிறார் மிகுதி உண்மையையும் எழுத வேண்டியதுதானே என்று சர்வசாதாரணமாக கேட்கிறீர்கள். வரலாற்றை சம நிலையுடன் பயில நினைக்கும் நீங்கள், கர்ணன் சொல்லாததாகச் நீங்கள் சொல்லும் மிகுதி உண்மைகளை (அரச தரப்பு பிழைகளை மட்டும்) பேசுவோரிடம் என்றைக்காவது அவர்கள் சொல்லாமல் விட்ட மிகுதி உண்மைகள் தொடர்பில் கேள்வியெழுப்பியதுண்டா? அல்லது வரலாற்றை சமநிலையுடன் பயில்வதென்பதை நிபந்தனைகளுக்குட்பட்டுத்தான் பாவித்துக்கொண்டிருக்கிறீர்களா? உண்மையில் கர்ணன் விடுதலைப் புலிகளின் இருண்ட பக்கத்தை மட்டும் பேசுபவரல்ல என்பதை கர்ணனுடைய கதைகள் குறித்த உங்களுடைய வகைப்பாடுகளின் வழியே நிறுவ முடியும். புலிகளின் பெயர்களை வெளிப்படையாகச் சொன்ன மாதிரி ஏன் தாடிக்காரர்களின் பெயர்களை பகிரங்கமாகச் சொல்லவில்லை? கர்ணன் எப்படி புலிகளின் ஆளுகைக்குள் இருந்த போது எப்படி அவர்களின் பெயர்களைச் சொல்ல முடியாதோ அதே போலத்தான் இப்போதும் அவர் இருப்பது தாடிக்காரர்களின் ஆளுகைப் பகுதிக்குள்.

கட்டுரையில் நான் கேட்ட கேள்விகள் எல்லாவற்றையும் “அகிலன் நக்கலடிக்கிறார். நையாண்டி பண்ணுகிறார்” என்று சாதுர்யமாகக் கடந்து போகிறீர்கள். முன்னைய கட்டுரையையும் சேர்த்தே மறுபடியும் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எல்லா வற்றையும் கொப்பி பேஸ்ட் செய்து எனது நேரத்தையும் வாசிக்கிறவர்களின் நேரத்தையும் வீணடிக்க எனக்கு விருப்பமில்லை. உங்களுக்கு வாசிப்பதற்கு காசுதரவும் யாரேனும் இருக்க முடியும். இல்லாவிட்டாலும் வாசித்துத் தானே ஆனவேண்டும். அல்லது ஐந்து கட்டுரைகள் எழுதியவரின் ஆறாவது கட்டுரையைப் படிக்கமாட்டேன் என்று நீங்கள் அழிச்சாட்டியம் செய்தால் நானொன்றும் செய்யமுடியாது. எழுத்தென்பது எண்ணிக்கையின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படுகிறதென்பதை எந்தத் தத்துவத்திலிருந்து தாங்கள் கண்டடைந்தீர்கள் என்று நானறியேன். நான் இரண்டாயிரங்களின் ஆரம்பத்தில் எழுத வந்தவன் என்கிற அர்தத்தில்(அதை உங்களது கவனத்துக்கு கொண்டு வந்தவர்கள் வாழ்க)  எனது கடந்தகாலத்தை பெரிய மனது வைத்து பன்னிரண்டு ஆண்டுகளாக்கியிருக்கிறீர்கள். எனது காலம் எழுதுவதிலிருந்து ஆரம்பிக்கிற ஒன்றல்ல. எழுத்தையும் தாண்டிய கடந்தகாலம் எனக்குண்டு. எழுத வந்திருக்காவிட்டாலும் உங்களால் மறுக்கமுடியாத கடந்தகாலம் எங்களுக்கிருக்கிறது.எழுத்தைக் கழித்தும் அகிலனுக்கு அடையாளங்கள் உண்டு.

ஆதவன் தீட்சண்யா, தமிழ்ச்செல்வன், அவர்கள் சார்ந்திருக்கிற கட்சி இதெல்லாம் யமுனா ராஜேந்திரனை அவருக்குள்ளிருந்து குடைகிற பிரச்சினைகள் என்பதால் அதைச் சொறிந்து விடாமல் உதாசீனம் செய்து கடந்து போகிறேன். தமிழகம் தொடர்பான அவருடைய எந்த அபிப்பிராயத்தையும் யமுனா பதிவு செய்து நான் பார்த்ததில்லை. கூடங்குளம் விவகாரம் போன்ற விவகாரங்களில் ஏன் யமுனா கருத்துச் சொல்வதில்லை என்கிற கேள்வியும் எழுகிறது. அவற்றிலெல்லாம் ஏன் தாங்கள் பங்கேற்பதில்லை யமுனா. அதற்கும் ஏதாவது தத்துவார்த்தக் காரணங்கள் இருக்கிறதா?

புலியெதிர்ப்பிலக்கியம் குறித்து நான் சொன்னது பொருளாதார ரீதியிலானது மட்டும் அல்ல அகிலன் அதையும் தவறாகப் புரிந்து கொண்டார். என்று தான் எழுதிய அதையும் விட்டுவைக்காமல் விளக்கவுரை ஈந்திருக்கிறார் யமுனா ராஜேந்திரன். அவரது வருத்தம் புரிந்து கொள்ளக்கூடியதே.  தமிழக இந்திய ஊடகங்கள் விடுதலைப்புலிகளின் இருண்மைப் பக்கத்தை( இருண்மை என்பது யமுனா ராஜேந்திரன் கையாண்ட சொல்) பதிவு செய்ய வாய்ப்பளிக்கின்றனவே என்கிற ஆதங்கம் அவரிமிடம் மிகுதியாகவேயிருக்கிறது. பழைய முதலாளிகள் அல்லவா அவர்கள். ஆனாலும் வருந்த வேண்டியதில்லை யமுனா நீங்கள் சொல்வதிலும் ஒரு பகுதி உண்மை இருக்கவே செய்கிறது. ஆனாலும் நீங்கள் சொல்வது போல ஆயுதப் போராட்டத்தின் இருண்டகாலத்தை பேசுவதற்கான வாய்ப்புக்களை விடவும் அதனை ஆதரித்துக் காவடி எடுப்பவர்களுக்கான அரசியல் பொருளாதார வாய்ப்புக்களே பிரகாசமாக இருக்கிறது. ஒரு பட்டியலைத் தயார் செய்து பாருங்கள் எத்தனை எதிர்ப் படைப்புகள் வந்திருக்கின்றன. எத்தனை ஆதரவுப் படைப்புக்கள் வந்திருக்கின்றன. எதிர்ப்பாளர்களுக்கான ஆதரவுத் தளமா அல்லது புலி ஆதரவாளர்களுக்கான அரசியல் ஆதரவுத் தளமா பெரியதும் பலமானதும்.  அந்தத் தரவுகளிலிருந்து உங்களுடைய மனாசாட்சி விடை பகிரும் இந்தக் கேள்விக்கு.

இன்னுமொரு பிரச்சினை சிங்கள தமிழ் அரசியல் தலைமைகள் சேகுவேராவின் புரட்சிகர ஆன்மாவைத் தீண்டவே முடியாது? என்று உங்களுடைய கட்டுரையில் நீங்கள் எழுதியிருந்தீர்கள். அந்த வாக்கியத்தில் பிரபாகரனைப்  பிரதியிட முடியாதா என்று அர்த்தப்பட நான் கேட்டால். ஆரம்பகட்ட புரிதல் என்று மழுப்புகிறீர்கள். எது ஆரம்பகட்ட புரிதல். பிரபாகரன் ஒரு வேளை தமிழர்களின் தலைவர் இல்லையா? அதைத்தான் நீங்கள் சொல்லவருகிறீர்களா? எதையும் அதன் நேரடியான அர்த்தத்தில் மட்டுமே புரிந்து கொள்வதைத்தைான் தர்க்கபூர்வமான பார்வை என்று சொல்லுகிறீர்களா யமுனா? உங்களுக்குள் இருக்கிற வரலாற்றை சமநிலையுடன் பயிலநினைப்பவன் சமநிலை தழும்பி ஒருபக்கம் குடைசாய்ந்து நிற்பது அய்யய்யோ நான் பிரபாகரனைச் சொல்லவில்லை என்று நீங்கள் பதட்டப்படுவதிலிருந்து அப்பட்டமாகத் தெரிகிறது.

அடுத்தது ஜெயன்தேவாவின் பின்னுாட்டத்தை அனுமதித்தமை தொடர்பானது. கருத்துச் சுதந்திரத்தில் யமுனா ராஜேந்திரனும், பொங்குதமிழ் இணையத்தினரும் மட்டுமே நம்பிக்கையுள்ளவர்களா என்ன? எங்களுக்கும் கருத்துச் சுதந்திரத்தில் நம்பிக்கை உண்டு. அதன் அடிப்படையிலேயே அந்தப் பின்னூட்டம் என்னுடைய முகப்புத்தகத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

யோ.கர்ணன் உங்களுடைய கட்டுரைக்கு பதிலை ஒரு கட்டுரையாகத் தனது தளத்தில் எழுதியிருக்கிறாரே அதை யாரும் உங்கள் கவனத்துக்கு கொண்டு வரவில்லையா? கண்டும் காணாதது போல ஓடித் தப்பியிருக்கிறீர்களோ என்று ஒரு சந்தேகம். அப்படியில்லைத்தானே? அதில் கர்ணன் பிரபாகரன் கதை குறித்த உங்களது புரிதலுக்கான பதிலைச் சொல்லியிருக்கிறார். என்னுடைய அபிப்பிராயம் பிரபாகரன் என்கிற பெயர் புனைவுக்குட்டபடாததல்ல.. கேலிச்சித்திரங்களுக்குள் சிக்காத புனிதமான தலைமைகளை நான் நம்புவதுமில்லை. பிரபாகரன் என்கிற பெயரை வைத்திருப்பதாலேயே இன்னமும் சிறைகளில் வாடும் மனிதர்களை அறிந்தவன் நான். பிரபாகரனின் பெயர் என்பது தனியே விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்குரியது மட்டுமல்ல. அந்தப் பெயருக்கு பேட்டட்ண்ட் ரைட்ஸ் வாங்கி வைத்துக்கொண்டு நீங்கள் நாட்டாமை பண்ணினால் நான் ஒன்றும் செய்யமுடியாது. நான் மேற்சொன்ன பிரபாகரன்களில் ஒரு பிரபாகரனை கர்ணனின் கதையில் பிரதியிட்டால் அங்கேயும்  இருக்கத்தான் செய்கிறது மெய். பங்கேற்பாளர்களுக்கு அதைப் புரிவதில் இருக்கிற சிரமத்தை புரிந்துகொள்ளமுடியும் என்னால்.

நான் கர்ணனுக்காகவும்,நிலாந்தனுக்காகவும்,கருணாகரனுக்காகவும் பதிலியாகப் பேசவில்லை என்பதனை நான் கடந்த கட்டுரையிலேயே குறிப்பிட்டிருந்தேன். இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்லி அதை எதிர்ப்பதாக ஏன் பாவ்லா பண்ணுகிறீர்கள். அவர்களுக்கான பதிலை அவர்களேதான் சொல்ல வேண்டும் கர்ணன் சொல்லியிருக்கிறார். மற்றவர்களின் மௌனத்தை அவர்களேதான் கடக்கவேண்டும்.

நீங்கள் ஊதியத்திற்காக புலிகளின் நிறுவனத்தில் வேலை செய்தாலும் சுயாதீனமாக உங்களது நிலைப்பாட்டில் இருக்கமுடியும் என்கிறீர்கள். அப்படித்தான் இருந்தேன் என்று அடித்துச் சொல்கிறீர்கள். இதைத்தான் ஒரு தலைப்பட்சமானது என்கிறேன் நான். அதே நிலையை எங்களுக்குப் பொருத்திப்பார்த்தால் செல்லாது செல்லாது என்று கூவுகிறீர்கள். நான் முதற் கட்டுரையிலேயே பகுதி உண்மைகளை எவ்வாறான சூழ்நிலையில் பேச வேண்டியிருக்கிறது என்பதை எழுதியிருக்கிறேன். ஆதாரபூர்மாகப் பேசுதல், தர்க்க பூர்வமாகப் பதில் சொல்லுதல், இப்படி வெவ்வேறு சொற்கள் கொண்டு ஒரே வாதத்தை திரும்பத் திரும்ப எழுதி வெறுப்பேற்றுகிறீர்கள்.

வன்னிக்குள் இருந்து வந்து முழுமையாக மாறுபட்டு யாரும் பேசிக்கொண்டிருக்கவில்லை யமுனா ராஜேந்திரன். வன்னிக்குள் இருக்கும் போது பேசமுடியாதவற்றைப் பேசுகிறோம். எங்களுடைய கடந்தாகாலத்தை அவற்றின் எழுத்துக்களை, பங்களிப்பை ஒழித்து வைத்துக்கொண்டு நாங்கள் யாரும் பேசவில்லை. எல்லாம் பொதுத்தளத்திலேயே வைக்கப்பட்டிருக்கின்றன. இப்போது பேசுபவையும் பொதுத்தளத்திலேயே பேசப்படுகின்றன. ஆனால் என்ன ஒன்று உங்களுடைய பங்கேற்புக்குக் கிடைக்கும் வெகுமதிகளைப்போல அல்லாமல் எங்களுடைய பங்களிப்புகளிற்குக் கிடைத்தவை அவதூறுகளும் வசைகளுமே. நான் விடுதலைப்புலிகளைப் பற்றிப் பேசும் போது இருதுருவ நிலைப்பாடுகளை எடுத்துக்கொண்டு பேசுவதில்லை என்று சமநிலை பயிலுதல்ப் படங்காட்டியபடி நீங்கள் புலித்துருவத்திலேதான் நின்றுகொண்டிருக்கிறீர்கள். நீங்கள் மனசாட்சியுடன் மெய்யான பங்கேற்பாளனாக துருவநிலைப்பாடுகளை தவிர்த்து எழுதிப்பாருங்கள். அதன் பிறகும் உங்களுக்கு எழுதி வாழும் வாய்ப்பு கிடைக்கிறதா என்று பார்க்கலாம்.

நன்றி  பொங்குதமிழ் இணையம்

Leave a Comment
XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Please note: Comment moderation is enabled and may delay your comment. There is no need to resubmit your comment.

Spam Protection by WP-SpamFree