“சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்” என்ற அமைப்பு இலங்கையில் “சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு” என்ற பெயரில் மாநாடு ஒன்றினை ஒழுங்குசெய்திருக்கிறது. இம்மாநாடு தொடர்பாக பல்வேறு ஐயங்களும் கேள்விகளும் எதிர்ப்புக்களும் எழுந்துள்ளன. இம்மாநாட்டுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யுமுகமாகவும் ஏற்பட்டுள்ள ஐயங்களைத் தெளிவுபடுத்துமுகமாகவும் இம்மாநாட்டின் இலங்கை இணைப்பாளராகப் பொறுப்பேற்றிருக்கும் தி. ஞானசேகரன் (ஞானம் சிற்றிதழ் ஆசிரியர்) அவர்களோடு உரையாடினோம். உரையாடல் ஒலிவடிவில் பதிவுசெய்யப்பட்டது.

ஒலிப்பதிவின் சுருக்கம் இங்கே உரைவடிவிலும் தரப்பட்டுள்ளது. இவ்வுரை வடிவம் பருமட்டானதும் சுருக்கமானதுமே. ஒலிவடிவோடு சிற்சில இடங்களில் இவ்வுரைவடிவம் முரண்படவும் வாய்ப்புண்டு. எனவே தயவு செய்து ஒலி வடிவத்தினை முழுமையாகக் கேட்கும்படி வேண்டுகிறோம்.

ஒலிப்பதிவைக் கேட்க இங்கே அழுத்துங்கள்

ஒலிப்பதிவு செய்யப்பட்ட நாளன்று உரையாடியதற்கு மேலதிகமாக, அன்று விடுபட்டுப்போன சில கேள்விகள் அடுத்தடுத்த நாட்களில் தொலைபேசி வழியாகக் கேட்கப்பட்டுப் பதில் பெறப்பட்டது. அக்கேள்விகளும் பதில்களும் பின்னிணைப்பாக இங்கே உரைவடிவில் மட்டும் தரப்பட்டுள்ளது.

நேர்கண்டவர்கள் – மு.மயூரன், த.அகிலன்

1. 2011 சனவரியில் நடக்கவிருக்கிற சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு ஏன் நடைபெறுகிறது?

எங்களுடைய நாட்டிலே 30 வருடங்கள் போர் நடந்திருக்கிறது. எங்களுடைய மக்கள்  உலகெங்கும் சிதறுண்டு போயிருக்கிறார்கள். இந்த போரின் காரணமாகச் சிதறுண்டு போயிருக்கிறார்கள். இப்பொழுது போர் முடிந்து ஏறத்தாழ ஒன்றரை வருடங்களுக்கு மேலான காலப்பகுதி கழிந்து விட்டது. இந்த நிலையில் நாங்கள், மீண்டும் போரின் காரணமாக வீழ்ச்சியுற்ற தமிழர்கள், தங்களுடைய உணர்வுகளை, தமிழுணர்வை, எழுத்தாளன் என்ற நிலையில் அல்லது கலைஞன் என்ற நிலையிலே பரந்த வாழ்கிற எங்களுடைய மக்கள் எல்லோரையும் ஒன்றிணைத்து  அவர்களோடு பரிமாற, கருத்துப்பரிமாற்றம் செய்ய ஒரு சந்தர்ப்பம் தேவை.  அந்த சந்தர்பத்தினை இந்த மகாநாடு வழங்கும். எல்லாவற்றுக்கும் ஓர் ஆரம்பம் தேவை அந்த ஆரம்பத்திற்கு இந்த மகாநாடு தேவை என்று நாங்கள் கருதுகிறோம். அதனால் தான் இந்த மகாநாடு.  நீண்டகாலமாக நாங்கள் திட்டமிட்டிருந்தாலும் இதைப்போன்ற சூழலுக்காக நாங்கள் காத்திருந்து போர் நின்றநிலையில் ஒன்றரை வருடத்திற்குப் பின்னர் இந்த மகாநாட்டை நாங்கள் நடத்த தீர்மானித்திருக்கிறோம்.

2.
சரி இந்த மாநாட்டின் நோக்கம்.. நீங்கள் எல்லாவற்றினதும் தொடக்கம் என்று சொல்கிறீர்கள் அது என்ன மாதிரியான தொடக்கம்?

ஓம் தொடக்கம் என்று நான் சொல்லும் போது . இந்தப் போருக்கு முதல் இருந்த நிலையை விட இன்று எங்களுடைய தமிழ் இலக்கியம் பல்வேறு பரிணாமங்களை அடைந்திருக்கிறது. அதாவது புலம்பெயர் இலக்கியம்,புகலிட இலக்கியம். புலம் பெயர் இலக்கியம் என்று சொல்கிறபொழுது ஆரம்பத்திலே அந்த மக்கள் தங்களுடைய நாட்டைவிட்டுப் பிரிந்த போது ஏற்பட்ட உணர்வுகளை எழுதிக்கொண்டிருந்தார்கள். அந்த நாடுகளில் இருந்து அந்த நாட்டுச் சூழலுக்கு தம்மைப் பொருத்திக்கொள்வதற்கு எடுத்த முயற்சிகளை எழுதினார்கள் அதையெல்லாம் புகலிட இலக்கியமாக எமக்குத்  தந்தார்கள். இவையெல்லாம் தமிழுக்குப் புதிய வரவுகள். அதே போன்று அந்த நாட்டு மொழியைப் படித்து அந்த நாட்டு இலக்கியங்களிலே இருந்து பல மொழிபெயர்ப்புகளை எங்களுக்குத் தந்திருக்கிறார்கள். எங்களுடைய இலக்கியங்களை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள் அந்த நாட்டு மக்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். இப்படி பல பரிணாம வளர்ச்சி எங்களுடைய இலக்கியத்திலே ஏற்பட்டிருக்கிறது. இவையெல்லாவற்றைப்பற்றியும் இந்த மகாநாட்டின் வெளிப்பாடாக கொண்டு வரவேண்டும் அதற்கு ஒரு ஆரம்பமாக இதை நாங்கள் கருதுகிறோம்.

3.
இந்த மாநாட்டுக்குப்பின்னால் இலங்கை அரசாங்கம் இருக்கிறதா?

இந்த மாநாட்டுக்குப்பின்னால் அரசாங்கம் இல்லை. நாங்கள் இதுவரை காலமும் எந்த அரசியல்வாதிக்கும் அறிவித்தல் கொடுக்கவில்லை. அல்லது அவர்களிடம் பணத்தைப் பெறவும் இல்லை.எங்களுடைய மாநாடு முழுக்க முழுக்க எழுத்தாளர்களுடைய பணத்திலே அவர்களுடைய பணத்தைச் சேகரித்து நாங்கள் நடத்தகிறோம். இதற்குப்பின்னால் எந்த அரசியல் பணமோ ஒத்துழைப்போ நாங்கள் பெற்றுக்கொள்ளவில்லை.

4. சரி அரசாங்கள் இதற்கு நிதி தராவிட்டாலும், ஒத்துழைப்பு தராவிட்டாலும் கூட இப்படி ஒரு மாநாடு யுத்தம் முடிவுற்ற நிலையில் நடக்கிறது என்பதை, தமிழர்கள் அனைவரும் மகிழ்சியாக இருக்கிறார்கள் என்றும் எழுத்தாளர்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்று அரசாங்கம் பிரச்சாரம் செய்ய வாய்ப்பாக அமைந்துவிடுமில்லையா?

இந்தப் போர் முடிவடைந்த பிறகு. நிறைய நிகழ்வுகள் தமிழர்கள் நிகழ்த்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  இப்பொழுது இந்த ஆடிவேல் விழா ஒரு பெரிய விழாவாக தமிழர்கள் இலங்கையில் அதுவும் தலைநகர் கொழும்பில் தமிழர்களால் நடத்தப்பட்டது. எங்களுடைய சனாதிபதியும் அந்த ஆடிவேலுக்குப் போனார். அது மட்டுமல்ல அவர் நல்லூர் கோவிலுக்கும் போனார் அதனுடைய அர்த்தத்தை நீங்கள் எப்படி நினைப்பீர்கள் அதற்குப்பினால் அரசு உள்ளது என்றா? அல்லது சனாதிபதி கலந்துகொள்கிறார் என்பதற்காக அவர் கலந்து கொண்டு விட்டு பிரச்சாரம் செய்வார் என்பதற்காக  இப்பிடி எல்லாம் நடக்கிறதுக்காக நாங்கள் அந்த ஆடிவேலை நிப்பாட்ட வேணுமா? அல்லது நல்லூர் கோவிலை கொண்டாட விட வேணாமா? எங்களுக்கு தமிழர்கள் வீழ்ச்சியுற்ற நிலையில் இருந்து  மீட்சி பெறவேண்டும் நாங்கள் எங்களைக் கட்டமைக்க வேண்டும் அதுதான் எங்களுக்கு முக்கியம் அவர்கள் பிரசாரம் பண்ணுவார்கள் அல்லது பிரசாரம் பண்ண மாட்டார்கள் என்ற நிலையை விட   வீழ்ந்து போன தமிழன் மீண்டும் தன்னை எழுப்பிக் கொள்ளவேண்டும் என்பதுதான் இங்கே முக்கியத்துவம் பெறுகிறது.

5. சரி அப்படியென்றாலும் இந்த மாநாட்டை பல்வேறு தரப்பினரும் மறுதலிக்கிறார்கள். குறிப்பாக இந்தியாவில் இருந்தும், புலம்பெயர் தரப்பிலிருந்தும் நிராகரிக்கிறார்கள். அண்மையில் கூட அதிகம் பேர் கையெழுத்திட்ட ஓர் அறிக்கை வெளிவந்திருந்தது?

எந்த ஆதாரத்தில் இவர்கள் இதை இவர்கள் மறுதலிக்கிறார்கள்? ஆதாரமற்ற ஓர் அறிக்கையிலே இவர்கள் கையெழுத்துப் போடுகிற பொழுது நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆதாரம் இல்லாமல் எதையும் சொல்லலாம். கள நிலவரம் அவர்களுக்கு தெரியாது. நாங்கள் முப்பது வருடம் போருக்கு முகம்கொடுத்துக்கொண்டிருக்கிறோம். போருக்கு முகம் கொடுத்தது மட்டுமல்ல  நாங்கள் இங்கே தமிழருக்கு, தமிழ் ஊடகவியலாளருக்கு என அனைத்து தரப்பினருக்கும் இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் குரலெழுப்பியே வந்திருக்கிறோம். நான் தனிப்பட ஒரு சஞ்சிகையாளன் என்ற முறையில் என்னுடைய ஞானம் இதழின் ஆசிரியர் தலையங்கங்களில் ஏறத்தாள 16 ஆசிரியர் தலையங்கங்கள் கடந்த 5 வருடங்களிற்குள்ளாக மிகவும் கடுமையாக எழுதியிருக்கிறேன்.  நாங்கள் களத்தில் இருந்து கொண்டு பேசுகிறோம். அவர்கள் களத்தில் இல்லாமல் யாரோ முடுக்கிவிட்ட பொய்யான கருத்துக்களை, ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு பேசுகிறார்கள். நாங்கள் சொல்கிற ஒவ்வொரு விடயத்தையும் எங்களால் நிரூபிக்க முடியும். ஆனால் அவர்களால் நிரூபிக்க முடியாது. இன்னொன்று நான் சொல்லுகிறேன்  75 லட்ச ரூபாய் அரசாங்கத்திடம் இருந்து லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டை எஸ்.பொ முன்வைத்தார் அவர்தான் ஆரம்பித்து வைத்தது. அவருக்கு எதிராக நாங்கள் வழக்கும் தொடர்ந்திருக்கிறோம். லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு என்பதால் வழக்கு தொடர்ந்திருக்கிறோம். நீதி மன்றத்தில் நாம் சந்திக்கவிருக்கிறோம்.


6.
சரி அப்படியானால் இந்த மாநாட்டை நடத்துவதற்கான நிதி தொடர்பான ஆவணங்கள் உங்களிடம் இருக்கிறதா?

எங்களிடம் ஆவணம் இருக்கிறது. யார்யாரிடம் பணம் சேர்த்தோம் சேர்த்த பணம் எவ்வளவு செலவழித்த பணம் எவ்வளவு இவையெல்லாம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.  இந்த விழா நிறைவடைந்ததும் ஒரு கணக்காய்வாளரை வைத்து  நிதியறிக்கையினை நாங்கள் வெளியிடுவோம். இதோ பாருங்கள் ( இது தொடர்பான ஆவணங்களைக் காட்டுகிறார்)

7. உத்தேச அளவில் நீங்கள் திட்டமிட்டு வைத்திருக்கிற அளவில் இந்த மாநாட்டை நடத்தி முடிக்க எவ்வளவு செலவாகும் என்று நினைக்கிறீர்கள்?

15 லட்சம் (இலங்கை ரூபா).  இது உங்களுக்கு சிரிப்பாயிருக்கலாம். ஆனால் எங்களுக்கு பலர் இந்த மாநாட்டுக்கான உணவுச் செலவுகளை பொறுப்பெடுக்க முன்வந்திருக்கிறார்கள். இப்படியாகப் பல விடயங்களை எங்களுக்குத் தனிநபர்கள் பொறுப்பெடுத்திருக்கிறார்கள் செலவுகளுக்கு. அதனால் மிகுதிச் செலவுகள் பதினைந்து லட்சம் மட்டும்தான்.

8.
இந்த மாநாட்டுக்கு வருகிறவர்களுக்கு பயணச்சீட்டு தங்குமிடவசதிகள் இலவசமாக வழங்கப்படுகிறதா?

இல்லை.

இரண்டு விதமாக இம்மாநாட்டில் கலந்து கொள்ள வருகிறார்கள். ஒன்று பார்வையாளர்களாக வருகிறார்கள் அடுத்தது பங்காளர்களாக வருகிறார்கள். பார்வையாளர்களாக வருகிறவர்களுக்கு நாங்கள் எதுவும் செய்யவில்லை அது செய்யவும் முடியாது. ஆனால் பங்காளர்களுக்கு  மாநாடு நடைபெறும்நாட்களில் நாங்கள் உணவும் தங்குமிட வசதியும் செய்து கொடுப்போம். பயணச்சீட்டுகள் தொடர்பில் வெளிநாட்டிலிருந்தோ இலங்கையிலிருந்தோ பார்வையாளர்களாக வருகிறவர்களும் சரி பங்காளர்களாக வருகிறவர்களும் சரி தங்களுடைய சொந்தப்பணத்திலேதான் பயணச்சீட்டுக்களைப் பெற்று இங்கே வருகிறார்கள்.

எவருக்கும் இலவசமாக அவை வழங்கப்படவில்லை.

9.
எங்கே இந்த மாநாட்டை நடத்துவதாக உத்தேசித்திருக்கிறீர்கள்?

கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் தான் நாங்கள் இதனை நடத்துவோம். அரங்குகள் தமிழ்ச் சங்கத்துக்குள்ளேயே  சங்கரப்பிள்ளை மண்டபம் (300 பேர் கொள்ளும்), விநோதன் மண்டபம் (70 பேர் கொள்ளும்), மற்றும் தமிழ்ச்சங்கத்தின் முதல் தளத்தில் உள்ள அரங்கு (சங்கரப்பிள்ளை மண்டபத்தை விடச் சற்றுப்பெரியது) ஆகிய 3 இடங்களிலே நடைபெறும். சில அரங்குகள் மிகவும் சிறிய இடமாகத்தான் இருக்கும்.  ஆனாலும் நாங்கள் ஆய்வரங்குகளில்  பார்வையாளர் எண்ணிக்கையை முதலிலேயே தீர்மானித்து விண்ணப்பங்கள் இப்போதே கோரியிருக்கிறோம் அதன் மூலம்  துறைசார் பார்வையாளர்களை அனுமதிப்பதன் மூலமாக இப்பிரச்சினையை அணுக முடிவெடுத்திருக்கிறோம்.
10. இலங்கைக்கு உள்ளேயிருந்து இந்த மாநாட்டுக்கான எதிர்ப்புகள் எதுவாவது தோன்றியிருக்கிறதா?

இது வரையில்லை.

11. இலங்கையில் உள்ள எழுத்தாளர்களுக்கு இம்மாநாடு குறித்த எவ்வாறு தெரிவிக்கப்பட்டது அல்லது அழைப்பு விடுக்கப்பட்டது?

நாங்கள் இது தொடர்பாக தொடர்ச்சியாக உள்நாட்டு பத்திரிகைகளிலே விளம்பரங்கள் கொடுத்தோம். துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டிருக்கின்றன. இது தவிரவும் ஒவ்வொரு பிரதேசங்களில் உள்ள இலக்கிய நண்பர்கள் வழியாகவும் விடயங்களை தெரியப்படுத்தினோம். படைப்பாளிகளிடையேயும் கலைஞர்களிடயேயும் பிரதேசவாரியாக நாங்கள் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தினோம்.

(ஒலிப்பதிவில் இந்தக் கேள்வி(11) இடம்பெறவில்லை இது பின்னர் கேட்டுச் சேர்க்கப்பட்டது)

12. நீங்கள் முதலில் நடத்திய ஆலோசனைக்கூட்டத்திற்கு வந்தவர்களில் எவராவது இம்மாநாட்டுக்கு எதிராக கருதுக்களை அங்கே சொன்னார்களா?

அப்படி ஒன்றுமே சொல்லவில்லை. எப்படி நடத்தலாம், எப்படி திறம்பட நடத்தலாம் என்றே கருத்துக்களைச் சொன்னார்கள். அங்கே வந்திருந்த சிவத்தம்பி கூடச்சொன்னார் இதை எப்படியும் தரமான மாநாடாக நடத்த வேண்டும், விழா போல இல்லாமல், மிகத்தரமான மாநாடாக நடத்த வேண்டும் என்று அங்கே பேசினார்.

13.நீங்கள் சொல்வதன்படி இலங்கையில் உள்ள எழுத்தாளர்கள் இதனை எதிர்க்கவில்லை. நாங்களும் அப்படி கேள்விப்பட இல்லை. இப்படி இங்கே எதிர்ப்பு இல்லாதபோது ஏன் புலம்பெயர்ந்திருக்கிறவர்களும், இந்தியாவில் இருக்கிறவர்களும் எதிர்க்கிறார்கள். ?

அவர்கள் பழக்கப்பட்டு விட்டார்கள். அவர்களுக்கு எதை எடுத்தாலும் அதை அரசியல் நோக்கம் கொண்டு மட்டுமே அணுகுவது. ஈழத்தமிழர் பிரச்சினையில் அரசியல் செய்து தங்களுடைய இருப்பை பலப்படுத்தவும் தங்களுக்கு விளம்பரம் செய்து கொள்ளவும் தான் செய்வதாகத்தான் நாங்கள் நினைக்கிறோம். வேற காரணம் இல்ல. இப்ப எஸ்.பொ,  ஒரு காரணமும் இல்லை அவர் இப்படிச் சொன்னதுக்கு தன்னை நிலைநிறுத்தி நான் பெரியவன் எண்டு காட்டிக்கொள்வதற்குத்தான் இதைச் செய்யிறார்.  இன்னொன்று நான் சொல்கிறேன் எங்களுடைய இந்த மாநாட்டிலே நாங்கள் முதியோர்களுக்கு  அல்ல இளம் தலைமுறைக்குத்தான் நாங்கள் வாய்ப்பளிக்க போகிறோம் அடுத்த தலைமுறைக்குத்தான் முக்கியத்துவம்.  நிறைய அரங்குகளில் பங்கு பற்ற விண்ணப்பித்திருப்பவர்களைப் பார்த்தால் அவர்கள் இளம் ஆட்களாய் இருக்கிறார்கள்.


14. வெளிநாட்டு எழுத்தாளர்களுக்கு எப்படி அறிவிக்கப்பட்டது?

ஊடகங்களுக்குள்ளால் அறிவிக்கப்பட்டது. பல்வேறு வானொலிகளிலும் எங்களுடைய அமைப்பாளர் நேர்காணல்கள் வழங்கி அதனைப் பரவலாக்கம் செய்தார். பத்திரிகைகளிலும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக இணையத்தளங்கள் வழி பார்த்தால் எங்களுடைய எதிர்ப்பாளர்களே எங்களுக்கு போதிய அளவு விளம்பரத்தை தந்திருக்கிறார்கள்.


15. சரி இலங்கையின் ஊடங்கள் எப்படி ஆதரவு தருகின்றன?

நிறையவே ஆதரவு.  நாங்கள் தருகிற அனைத்துச் செய்திகள் விளம்பரங்கள் கட்டுரைகள் எல்லாம் மறுப்பின்றி வெளியிடப்பட்டுக்கொண்டிருக்கின்றன.  இப்போது நாங்கள் ஆரம்பக் கட்டமாகத்தான் இதனைச் செய்து கொண்டிருக்கிறொம் டிசம்பரில் நாங்கள் ஊடகவியலாளர்கள் அனைவரையும் அழைத்து இதனை அறிமுகப்படுத்தி ஒரு பத்திரிகையாளர் மாநாட்டினை நடத்த இருக்கிறோம். அவர்களுடன் கலந்துரையாடி திட்டங்களைச் சொல்லுவோம். ஏற்கனவே முன்னணிப் பத்திரிகைகள் எங்களுக்கு உதவுவதாக ஒத்துக்கொண்டிருக்கிறார்கள்.

16. இதுவரைக்கும் ஏறத்தாழ எத்தனை விண்ணப்பங்களை நீங்கள் பெற்றுக்கொண்டிருக்கிறீர்கள். எந்த நாடுகளிலிருந்தெல்லாம் விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன?

இது வரைக்கும் உள்நாட்டிலிருந்து 300க்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. எல்லா நாடுகளிலுமிருந்தும் விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. இந்த எதிர்ப்பிரச்சாரங்களினால் ஒரு தளம்பல் நிலைமை ஏற்பட்டிருந்தது. பிறகு நாங்கள் அவற்றை தெளிவு படுத்தி இப்போது அதிகளவான விண்ணப்பங்கள் வெளிநாட்டில் இருந்து வர ஆரம்பித்திருக்கின்றன.  இது தவிரவும் கலைக்குழுக்களும் தங்களுடைய கலை வடிவங்களை நிகழ்த்துவதற்காக பெருமளவில் விண்ணப்பித்திருக்கிறார்கள்.

17.
இந்த ஆய்வரங்கங்களில் பேசப்படுகின்ற விசயங்களிற்கு தணிக்கை இருக்கிறதா?

நிச்சயமாகத் தணிக்கை இருக்கிறது அதாவது.  எந்த அரசியல் விடயங்களும் அதற்குள் வரக்கூடாது.

18. ஏன் அப்படி?

இது எழுத்தாளர் மாநாடு ஏற்கனவே இது அரசுசார்பு அரசு எதிர்ப்பெண்டு நிறைய முத்திரைகள் இதற்கு குத்தப்பட்டிருக்கின்றன. இந்தப் பொய்ப்பிரச்சாரங்களை முறியடிக்கவேண்டிய தேவையிருக்கிறது. இது ஈழத்தமிழ் இலக்கியம் குறித்து பேச வேண்டிய இடம். எங்களுடைய நோக்கம் அரசியல் பேசுவதல்ல. பல்வேறு பட்ட அரசியல் கருத்துள்ளவர்களும் இதற்குள் கலந்து கொள்ளஇருக்கிறார்கள் உதாரணமாக புலி ஆதரவாளர்கள், புலி எதிர்ப்பாளர்கள், அரச எதிர்ப்பாளர்கள், அரச ஆதரவாளர்கள் என்று பலதரப்பட்ட அரசியல் நிலைப்பாடுள்ளவர்களும் ஒன்றாகச் சேர்கின்ற இடம் இது. இதனுள் அவரவர் தன் தன் அரசியலைத் தூக்கிப்பிடித்தபடி நின்றால் வீணான குழப்பங்கள் விழையலாம்.

19. ஆனால் இதனை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் வரலாமில்லையா.. நீங்கள் புகலிட இலக்கியம் என்றொரு அரங்கை வைத்து விட்டு அதில் ஆய்வு செய்கிற ஒருவர் தான் ஏன் புலம்பெயர்ந்தேன் என்று சொல்லவெளிக்கிட்டாலே அங்கே அரசியல் வந்துவிடுகிறதில்லையா?

அதெல்லாம் உண்மைகள், உதாரணமாக கலவரங்கள் நிகழ்ந்தன அதற்கு இனவாதம் காரணம் இது வெளிப்படையான உண்மை அந்த உண்மைகளைப் பேச இங்கே தடையில்லை.

அதைப் பேசத்தான் இந்த மாநாடே.

ஆனால் அவதூறுகளைப் பேச  தனிமனிதர்களைத் தாக்குதல் செய்ய, இன்னொருவரின் அரசியல் நிலைப்பாட்டை கேலி செய்கிற விடயங்களை மாத்திரமே நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். மற்றபடி உண்மைகளைப் பேச இங்கே தடையில்லை.


20.
அரசுக்கு ஆதரவான கோசங்களே இந்த மாநாடு எங்கும் நிறைஞ்சிருக்கும் எண்டொரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறதே?

அது பொய்யென்பது இதுவரை நாங்கள் பேசியவிடயங்களில் இருந்தே தெளிவு பட்டிருக்கும். இவர்கள் தங்களை முன்னிலைப்படுத்துவதற்கா அல்லது எதற்காக இவ்வாறெல்லாம் பேசுகிறார்கள் என்பது உண்மையில் எங்களுக்கும் புரியவில்லை.

21.
சரி இவ்வளவு நாளும் பேசாமல் இருக்கிற அரசாங்கம் கடைசிநேரத்தில் ஒரு அழுத்தத்தை உங்கள் மீது பிரயோகித்து தமக்குச் சார்பானதாக நடத்தச் சொல்லவோ எதிரானதென்று தடை செய்யவோ வாய்ப்பிருக்கிறதில்லையா?

நான் உங்களுக்குச் சொல்கிறேன். இதுகளைப் பற்றியெல்லாம் நாங்கள் எற்கவே சிந்தித்திருக்கிறோம். உங்களுக்கும் தெரியும்  இதில் பல அரசியல் நிலைப்பாடுகள் உள்ளவர்களும் இருக்கிறார்கள். அதிலே இதனை அரசுக்கு எடுத்துச் சொல்லிப் புரிவைக்கும் வலு உள்ளவர்கள் இருக்கிறார்கள். இது முழுக்க முழுக்க எழுத்தாளர்களுடைய மாநாடு, அரசியல் மாநாடல்ல அதனை அப்படியே நடக்க விடுங்கள் என்று சொல்லும் வலுவுள்ள இலக்கியவாதிகள் எம்மோடு இருக்கிறார்கள்.  உடனடியாக நீங்கள் முடிவெடுத்து விடக்கூடாது அப்படியானர் அவர்கள் தான் இந்த மாநாட்டை நடத்துகிறார்கள் அதற்குப்பின்னால் இருக்கிறார்கள் என்று.  பலதரப்பட்ட அரசியில் நிலைப்பாடுள்ளவர்கள் இதில் இருக்கிறார்கள் அதிலே அரசு சார்ந்தவர்களும் இலக்கியவாதிகள் கலைஞர்கள் என்ற முறையிலே கலந்து கொள்கிறார்கள்.

22. நான் இதை வலியுறுத்திக் கேட்பதற்கான காரணம், இந்த எதிர்ப்புக்கோசங்கள், இந்த மாநாட்டில் தேவையற்ற அரசியல் தலையீடுகளை உண்டாக்கி விடக்கூடிய வாய்ப்புக்கள் உண்டு என்பதால் தான்.

இந்தக்கேள்வி “இனிய நந்தவனம்” என்றொரு சஞ்சிகைக்கு நான் வழங்கிய நேர்காணலில் கேட்கப்பட்டது. அந்நேர்காணல் அச்சஞ்சிகையில் வந்திருக்கிறது. அவர்கௌள்க்கு நான் சொன்ன பதில் இதுதான்,

நாங்கள் எழுத்தாளர்கள். அரசியல் சார்புள்ள எழுத்தாளர்கள் இருப்பார்கள். அவர்கள் இந்தப்பிரச்சினையை தீர்க்கக்கூடிய வல்லமையுடையவர்களாக இருப்பார்கள்.

23. சரி இந்த மாநாட்டின் ஒரு பகுதியான சிங்கள தமிழ் உறவுப்பரிவர்த்தனை பற்றிச் சொல்லுங்கள்?

சிங்கள் தமிழ் உறவுப்பரிவர்த்தனை என்பது ஓர் அரைநாள் நிகழ்வு. அது நடக்கவிருக்கிறது. நிறையச் சிங்கள புத்திஜீவிகள் தமிழர் தரப்பை புரிந்து கொண்டு எழுதியும் பேசியும் வந்திருக்கிறார்கள். போர்க்காலக் கதைகள் என்று நாங்கள் ஞானம் வெளியீட்டினூடாக ஒரு புத்தகம் கொண்டு வந்திருந்தோம் சிங்கள மொழிபெயர்ப்புக் கதைகள். அதைத் எங்களுக்காகத் தொகுத்து தந்தவரே எஸ்.பொ தான் அதைப்படித்தால் தெரியும் சிங்கள எழுத்தாளர்கள் எவ்வளவு புரிதலுடன் நோக்குகிறார்கள் என்று.  அதைப்போல அவர்கள் நிறைய தமிழ் நூல்களை சிங்களத்திற்கு மொழிபெயர்த்திருக்கிறார்கள் என்னுடைய ஒரு நாவல் கூட மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. அந்த நாவல் குருதிமலை. அது பேசுகிற விடயம் சிங்கள இனவாதத்திற்கெதிராக மலையக மக்கள் எப்படித் திரண்டார்கள் என்கிற விசயம் அதையே சிங்களத்தில் மொழிபெயர்த்து கொடுத்திருக்கிறார்கள்.  அப்படியான எங்களைப் புரிந்து வைத்திருக்கிறார்கள் சிங்கள எழுத்தாளர்கள். இப்போதேல்லாம் நான் சந்திக்கிற 95 வீதமான சிங்கள எழுத்தாளர்கள் எங்களை நோக்கி வருகிறார்கள். அவர்களோடு நாங்கள் தொடர்பாடல்கள் செய்யவேண்டியவர்களாக இருக்கிறோம் சிங்கள இலக்கியங்கள் தமிழுக்கு வந்திருக்கின்றன. தமிழ் இலக்கியங்கள் சிங்களத்திற்கு வந்திருக்கின்றன. இந்தப் பாங்கை வளர்க்கவேண்டியிருக்கிறது. இதனால் இந்த நிகழ்வை நாங்கள் எற்பாடு செய்திருக்கிறோம். வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிற எங்களுடைய படைப்பாளிகளுக்கு சிங்கள படைப்பாளிகள் தங்களுடைய நிலைப்பாட்டை விளங்கப்படுத்துவார்கள்.  அவர்களுக்கு இது தேவை இங்குள்ள நிலைமையைப் புரிந்து கொள்வதற்கு அது தேவை.

ஹலோ!
வணக்கம் யார் இது.
நான் சாவகச்சேரியில் இருந்து ஞானதிரவியம் கதைக்கிறன்.
உங்களை திரவியம் எண்டு கூப்பிர்றதோ ஞானம் எண்டு கூப்பிர்றதோ?
ஹி ஹி ஹி அது உங்கட விருப்பம்.
ஆ திரவியம் சொல்லுங்கோ யாருக்கு வாழ்த்துச் சொல்லப்போறீங்க?
போனமாசம் 4ம் தேதி என்ர மச்சாளுக்குப் பிறந்தநாள் அவாக்கு வாழ்த்துச் சொல்லவேணும் அவாக்காக கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா எண்ட பாட்டுப் போடுங்கோ
யார் யாரெல்லாம் கேக்கிறீங்க..
மச்சாள் அன்னபூரணி அவான்ர தங்கச்சி கோமளவல்லி சித்தப்பா டூ….ட் டூ….ட்.
இதோ ஞானதிரவியத்திற்காக அவர்விரும்பிக் கேட்வர்களுக்காககவும் அந்தப்பாடல்…..

உரையாடலின் இடையில் அறிவிப்பாளர் அடிக்கடி இதைச் சொல்லுவார். உங்கட வானொலிப் பெட்டியின் சத்தத்தை குறைச்சு வையுங்க ( வால்யூமைக் கம்மி பண்ணுங்க)…… குறைக்காட்டி கட் பண்ணிருவன்……(இந்த இடைவெளி அவசியம் விடப்படும்); லைனை.

எவ் எம் றேடியோக்களின் இவ்வாறான உரையாடல்களால். நிம்மதியாக பாரில் உட்கார்ந்து தண்ணி அடிக்கக் கூட முடியவில்லை என்று யாரோ ஒருவருடைய பதிவில் படித்ததாக நினைவு. யாருக்குத்தான் கடுப்பாகாது. இப்படியான வெறுப்பேற்றும் உரையாடல்களை எத்தனை மணிநேரம் தான் தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டிருக்க முடியும். இது போதாதென்று போன் பண்ணுகிறவர்களில் பலபேர் தாங்கள் பாட்டுப்படித்து விட்டுத்தான் போவேம் என்று அடம்வேறு. வானொலிகள் நேயர்களைக் கட்டிப்போட்டிருந்து காலம் என்றொண்டுண்டு.

நான் சென்னைக்கு வந்ததும் என்னைச் சந்திக்கிற நண்பர்கள் யாரும் இலங்கை வானொலியையும் அதன் அறிவிப்பாளர்களைப் பற்றியும் பேசாமல் இல்லை. அவ்வளவு தரமான நிகழ்ச்சிகளை அவர்கள் வழங்கிக்கொண்டிருந்தார்கள் அதனால்தான் இவ்வளவு காலம் அந்த அறிவிப்பாளர்களால் கடல்கடந்தும் நினைவில் நிற்க முடிகிறது. இப்போதிருக்கிற வானொலிச் சூழல் குறிப்பாக இலங்கையில் எப்படியிருக்கிறது என்பது குறித்து தனது கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொண்டார் இலங்கைவானொலியின் மூத்த ஒலிபரப்பாளர் எஸ். எழில் வேந்தன். இவரைப் பற்றி என் ஆரம்ப நாள் பதிவுகளில் ஒன்றான யேசுதாஸ் ஏன் அழுதார் என்கிற பதிவில் குறிப்பிட்டு எழுதியிருக்கிறேன். நண்பர்கள் அதையும் படிக்கலாம். இனி அவருடனான உரையாடல்.

Photobucket

1. அறிவிப்பாளராக ஆகும் வரையான எழில் வேந்தன் பற்றிய குறிப்புகள்?

கிழக்கிலங்கையில், மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் மட்டக்களப்பிலிருந்து 22 மைல் தொலைவிலுள்ள ஒரு சிறு கிராமம் பெரிய நீலாவணை. பெரிதாக அறியப்படாத கிராமம். அதுவே என் தந்தையின் ஊர். நான் பிறந்து வளர்ந்தது இங்குதான். என் ஊர் அப்போது பெரிதாக அறியப்பட்டிருக்கவில்லை. (அண்மையில் ஏற்பட்ட சுனாமியின்போது அதிக அழிவைச் சந்தித்ததால் இவ்வூர் சற்று அதிகம் பேசப்பட்டது வேறு கதை). ஊரின்மேல் கொண்ட பற்றுக் காரணமாக “நீலாவணன்” என்று பெயர் சூட்டிக்கொண்ட கே.சின்னத்துரை என் தந்தை. தாயார் அழகேஸ்வரி என அறியப்பட்ட அழகம்மா. இருவரும் ஆசிரியத் தொழில் பார்த்தவர்கள். இவர்களின் காதல் மணத்தின் அறுவடையாகக் கிடைத்த ஐந்து பிள்ளைகளில் தலைச்சன் பிள்ளை நான். மூன்று தங்கைகள். ஒரு தம்பி. தம்பி வலது குறைந்தவன்.

அம்மாவின் ஊரான பாண்டிருப்பில் உள்ள நாவலர் வித்தியாலயத்தில் ( அப்போது அது பாண்டிருப்பு அரசினர் மெதொடிஸ்த பாடசாலை என அழைக்கப்பட்டதென நம்புகிறேன்) பாலர் கல்வி. பின்னர் சொந்த ஊரான பெரியநீலாவணையில் உள்ள இரு பாடசாலைகளில் ஆரம்பக் கல்வி. தொடர்ந்து மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயம், மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி ஆகியவற்றில் இடைநிலை மற்றும் உயர் கல்வி. இதுவே என் இளமைக்காலம். எல்லோரையும் போலப் பாடசாலை நாட்களில் நாடகம், கலை நிகழ்ச்சிகள், போட்டிகளில் கலந்து கொண்டதும், பரிசுகள் பெற்றதும் உண்டு.

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் உயிரியல் விஞ்ஞான மன்ற உருவாக்கத்தில் ஒருவனாய் இருந்தேன் என்பதும் இம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்ட “உயிர்” என்ற கல்விச் சஞ்சிகையின் முதல் ஆசிரியர் என்பதும் சற்றுப் பெருமையான விஷயங்கள்.

பள்ளியில் படித்த காலத்திலேயே தந்தையார் 1975ல் மரணமடைந்துவிட உயர்தரப் பரீட்சை எழுதுவதற்கு 4 மாதம் இருந்த வேளையில் “எக்ஸ் கதிராளர்”அதாவது “Radiographer” தொழில் வாய்ப்புக் கிடைத்து கொழும்பு வருகை. கொழும்பில் பேராசிரியர் மௌனகுரு மூலம், நாடக இயக்குனர் தாசீசியஸ் அவர்களின் அறிமுகம் கிடைக்க, அவரின் தயாரிப்பில் உருவான கவிஞர் மஹாகவி மாமாவின் “புதியதொரு வீடு” மேடை நாடகத்தில் சிறு பாத்திரத்திலும், தொடர்ந்து நா. சுந்தரலிங்கம் அவர்களின் இயக்கத்தில் “விழிப்பு” மேடை நாடகத்தில் சிறு பாத்திரத்திலும் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. அரங்க ஆற்றுகையில் துறை போன இருவரின் நெறியாள்கையில் நடித்த அனுபவமே, 1977 தேசிய நாடக விழாவில் இடம்பெற்ற எஸ். சித்திரவேலின் “செவ்வானத்தில் ஒரு “ என்ற நாடகத்தில் முக்கிய பாத்திரமொன்றில் நடிக்கும் தைரியத்தையும், நாடக இயக்கத்தில் துணை செய்யும் துணிவையும், தலை சிறந்த துணை நடிகர் என்ற விருதையும் தந்தது.

இக்காலத்தில்தான் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினூடு எஸ்.வாசுதேவன் தொகுத்தளித்த “சங்கநாதம்” – இளைஞர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. இதுவே என் வானொலிப் பிரவேசத்தின் பிள்ளையார் சுழி. ஒலிபரப்பாளரும் நடிகருமான ஜோக்கிம் ஃபெர்ணாண்டோவின் “இருட்டினில் குருட்டாட்டம்” மேடை நாடகத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்ததும், நாடகத்தின் கருப்பொருள் காரணமாக இரகசியப்பொலிசாரின் விசாரணைக்கு ஆளானதும் இக்காலகட்டத்தில்தான்.

“சங்கநாதம்” நிகழ்ச்சியின்மூலம், பாடகர்கள் ரீ. கிருஷ்ணன், எஸ்.சத்தியமூர்த்தி ஆகியோரின் அறிமுகம் கிடைத்தபோது அவர்களின் “மெல்லிசைப்பாடல் – அரங்கேற்றம்” நிகழ்ச்சிக்கு பாடல்கள் எழுதிக் கொடுத்ததால் ஒரு பாடலாசிரியரானேன். ஒலிபரப்பாளர் அருணா செல்லத்துரையின் அறிமுகம் இதன்போதே கிடைத்தது.”சூரியா ரெக்கொர்ட்ஸ்” உரிமையாளராக இருந்த பொப் பாடகர் “ஷண்”ணின் அரங்கேற்றம் நிகழ்ச்சிக்கு, அருணா செல்லத்துரையின் அறிமுகத்தின் காரணமாக, பாடல் எழுதுகின்ற வாய்ப்பும், ஷன் தன் கையால் கொடுத்த 500ஃஸ்ரீ ரூபாய் சன்மானமும் (என் மாதச் சம்பளமே அக்கால கட்டத்தில் 450ஃஸ்ரீ ரூபாதான்) கிடைத்ததும் அப்போதுதான். என் எழுத்துக்கு முதன்முதலில் கிடைத்த “சன்”மானம் “ஷன்” மூலமே கிடைத்தது. இக்கால கட்டத்தில்தான். வானொலிக்கலைஞர் தெரிவில் கலந்துகொண்டு கிழக்கு மாகாணப் பேச்சு வழக்கில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளிலும் உரைச்சித்திரம் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளும் ஒரு வானொலிக் கலைஞனென்ற தெரிவையும் அங்கீகாரத்தையும் பெற்றேன். இவையெல்லாம் நடக்கும்போது நான் வானொலி ஊழியன் அல்லேன்.

2. வானொலி என்கிற ஊடகம் எப்படி பயன்படுத்தப் பட வேண்டும்? இப்போது அது அவ்வாறு கையாளப் படுகிறதா?

வானொலி என்பது ஒரு விரிந்த ஊடகம். அது விரைவாக மக்களைச் சென்றடையக் கூடியது. தொலைக்காட்சிபோல எங்களை கட்டுக்குள் வைத்திருக்கும் ஓர் ஊடகமல்ல. தொலைக்காட்சியை நெருக்கமான ஊடகம் (ஊடழளந ஆநனயை) என்பார்கள் இன்றைக்கு ஒருசில ரூபா செலவிலேயே ஒரு வானொலிப்பெட்டியை நாம் வாங்கிவிடலாம். வானொலிப்பெட்டியை உற்றுப் பார்க்காமலே, எந்த வேலையைச் செய்து கொண்டும் நாம் வானொலியைக் கேட்கலாம். அதேபோல் ஒரு கையடக்கத் தொலைபேசியை வைத்துக்கொண்டே வெளிக்களத்திலிருந்து ஒரு நேர்முக வர்ணனையை அல்லது ஒரு கலந்துரையாடலை ஒலிபரப்பிவிடலாம். இத்தகைய உன்னத சாதனத்தை வெறும் பாடல் ஒலிபரப்பும் சாதனமாகப் பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. முன்னர் நான் சொன்னதுபோல வானொலியை அறிவூட்டும், தகவல் தரும், களிப்பூட்டும் ஒரு சாதனமாகப் பயன்படுத்தவேண்டுமே தவிர, பாடல்களுடன், தமிழ்த் திரைத் தாரகைகள் தினமும் எத்தனை மணிக்குக் காலைக் கடன் கழிப்பார்கள் அல்லது கடைசியாக அவர்கள் எப்போது காலைக் கடன் கழித்தார்கள் என்பன போன்ற சங்கதிகளை எமக்கு அறிவிக்கும் சாதனமாக அதைப் பயன்படுத்தக்கூடாது. நடிகர் ஒருவருக்குப் பிறந்திருக்கும் குழந்தைக்கு என்ன பெயர் வைப்பார்கள் என்று கருத்துக்கணிப்புப் போட்டி நடத்திய வானொலிகளையும் நாம் கண்டிருக்கிறோம். நாம் அத்தகைய ஒரு காலகட்டத்தில் வாழ்ந்தோம் என்பதை அவமானத்துடன் பதிவு செய்கிறேன்.

3. தமிழ் வானொலிச் சூழல் பற்றி தங்களுடைய தற்போதைய அவதானிப்புக்கள் இலங்கை அளவில் என்னவாயிருக்கிறது? அதோடு உலகளாவிய ரீதியில் எதுவாயிருக்கிறது?

இலங்கையின் தமிழ் வானொலிச்சூழல் தற்போது மிகுந்த கவலைதரும் ஒன்றாகவே மாறிவிட்டது. வானொலி நிலையங்கள் தம் பிரதான பணிகளான அறிவூட்டல், தகவல் தருதல், களிப்பூட்டல் என்ற நிலையிலிருந்து விலகி தனியே களிப்பூட்டிக்கொண்டிருக்கின்றன. இன்று இலங்கையில் வானொலிகள் தென் இந்தியத் திரை உலகப் பிரமுகங்களின் பிறந்தநாளை யார் சிறப்பாகக் கொண்டாடுவது என்பதில் போட்டி போட்டுக் கொண்டு செயலாற்றுகின்றன. அவை தென் இந்திய அல்லது இந்தியத் திரைத் தகவல் களஞ்சியங்களாக மாறிவிட்டன. மட்டுமன்றி தென்னிந்தியச் சஞ்சிகைகளின் வாசிப்பு அரங்காகவும் மாற்றம் பெற்றுவிட்டன. மொழி, உச்சரிப்பு, என்பவை தொடர்பான எவ்வித பிரஞ்ஞையுமின்றி, ஒலிபரப்பாளர்கள் தாம் நினைத்ததை நினைத்தபடி பேசிவிட்டுப் போகும் ஒரு நிலை தோன்றிவிட்டது. அண்மையில் ஓர் அறிவிப்பாளர் “ அம்மா என்றாலே நிறைய வரும். கொட்டிக்கொண்டு வரும்” என்றார். எது வரும்? எது கொட்டும்? எனச் சொல்லுவார் எனக் கேட்டுக்கொண்டேயிருந்தேன். அவரும் சொல்லவில்லை. நானும் இன்றுவரை யோசித்துக் கொண்டேயிருக்கிறேன். இது ஓர் உதாரணம். இன்னுமோர் ஒலிபரப்பாளர் ஒரு பெண் நேயரிடம் “உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்?” எனக்கேட்கிறார். நேயரும் “ஒரு பிள்ளை. ஒரே மகன்” என்கிறார். ஒலிபரப்பாளரின் அடுத்த கேள்வி “ உங்களுக்குத் திருமணமாகி விட்டதா?” . எனக்கோ பலத்த சந்தேகம். கர்ணனின் தாயார் குந்திதேவியுடனா இந்த அறிவிப்பாளர் உரையாடிக்கொண்டிருக்கிறார் என்று. இப்படிப் பல உதாரணங்களைச் சொல்வேன்.

அடுத்தது, புதிய பாடல் ஒலிபரப்பும் போட்டி. புதிய பாடலொன்றை ஒலிபரப்பிவிட்டு இந்தப் பாடலை முதலில் ஒலிபரப்பியது நாமே என்றோ இப்பாடலை ஒலிபரப்பும் உரிமை எமது நிலையத்துக்கு மட்டுமே உண்டு என்றோ அபத்தமாகக் கூறும் நிலை தற்போது தோன்றியுள்ளது. இப்பாடலை எழுதிய கவிஞரோ, இசையமைத்த இசையமைப்பாளரோ, பாடிய பாடகரோ, பாடல் காட்சியை இயக்கிய இயக்குனரோ, இவர்கள் அனைவருக்கும் அப்பால் கந்து வட்டிக்கு கோடி கோடியாகக் கடன் வாங்கிப் படத்தைத் தயாரித்த தயாரிப்பாளரோ கூட இந்தப் பாடலுக்கு இத்தனை உரிமை கொண்டாடுவார்களா தெரியாது. இத்தனைக்கும் இப்பாடல் இணயத்திலிருந்து தரவிறக்கப்பட்டிருக்கும்; அல்லது ஒரு 80ஃஸ்ரீ ரூபா செலவில் வாங்கப்பட்ட திருட்டு இறுவட்டிலிருந்து ஒலித்திருக்கும். பாடல் ஒலிபரப்புவதற்காக உரிமத்தொகை ஒன்றுள்ளது என்பதைக் கூட இவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.

இன்னும் சொல்வேன். எழுவாய் பயனிலை இல்லாத வசனங்களும் பன்மையில் ஆரம்பித்து ஒருமையில் முடியும் வசனங்களும் தாராளமாகவே காற்றலை ஏறுகின்றன. ல, ள, ழ பேதங்கள் கிடையாது. ன, ண, ந வித்தியாசம் தெரியாது. சுசந்திகா என்பது சுசன்திகா என்றே எழுதப்படுகிறது;வாசிக்கப்படுகின்றது.’ ந் ‘, ‘ற்’ போன்ற எழுத்துக்கள் தமிழில் இருப்பதே சிலருக்குத் தெரியாது. இது இவ்வாறிருக்க குற்றியலுகர, இகரங்கள் பற்றியெல்லாம் இவர்கள் தெரிந்து வைத்திருப்பார்கள் என்று எதிர்ப்பார்ப்பது அதிகப்படி. பேசப்படும் சொற்களில் 50%ற்கும் அதிகமானவை ஆங்கிலச் சொற்களாகவே உள்ளன. அதுவும் பொருத்தமற்ற இடங்களில் ஆங்கிலச்சொற்கள் வலிந்து கலக்கப்படுகின்றன. ஊரில் பாட்டிமார் பழமொழியொன்று சொல்வார்கள் “காகம் அன்னநடை நடக்கப் போய் தன்னடையும் கெட்டதென”. அதன் பொருளை இப்போது நேரில் காண முடிகின்றது. இந்தியத்தமிழ் பேச முயன்று அது இந்தியத் தமிழுமின்றி இலங்கைத் தமிழுமின்றி ஒரு புதிய “இலந்தியத் தமிழ்” உருவாகி கர்ண கடூரமாக ஒலித்துக் கொண்டிருக்கின்றது. இலங்கையில் வானொலிகளை இவ்வாறு புலம்பிக் கொண்டுதான் கேட்கவேண்டியுள்ளது. அதனால் இப்போதெல்லாம் நான் வானொலி கேட்பது குறைவு.

மாறாக புலம்பெயர்ந்த நாடுகளில் எம் ஒலிபரப்பாளர்கள் எவ்வித சமரசங்களும் செய்துகொள்ளாமல் இன்றும் நல்ல வானொலி நிலையங்களை நடத்திக் கொண்டுதான் உள்ளனர். இங்கிலாந்து, ஜேர்மனி,ஃப்ரான்ஸ், நோர்வே போன்ற ஐரோப்பிய நாடுகளிலும், அவுஸ்திரேலியா, கனடா போன்ற தேசங்களிலும் நல்ல தமிழ் வானொலி நிலையங்கள் ஒலிபரப்பைச் செய்கின்றன. இலங்கை இனப் பிரச்சினை எமக்கு எத்தனையோ பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தாலும் இன்று உலகெங்கும் நல்ல தமிழ் ஒலிக்கவும் வழி வகுத்துவிட்டது. தமிழ் நாட்டு வானொலிகள் பற்றி நான் ஒன்றுமே கூறவரவில்லை . தமிழ் தொலைக்காட்சிகள்மீது சுமத்தப்படும் அத்தனை குற்றச்சாட்டுகளையும் இவர்கள்மீதும் சுமத்தலாமா தெரியவில்லை.

மொத்தத்தில் என்னைப்பொறுத்தவரையில் தனியார் வானொலிகளின் வருகையென்பது தமிழ் மொழிக்கு ஏற்பட்ட சாபக்கேடு என்றே கூறுவேன். ‘வானொலி முதலாளிகளின்’ சுய விருப்பு வெறுப்புகளுக்குத் தீனிபோடும் கருவிகளான் இந்த வானொலிகள், தமிழ் மொழிக்கு வெகு விரைவில் பாடை கட்டிவிடுமோ என அஞ்சுகிறேன். ஒரு சில நல்ல, திறமையான ஒலிபரப்பாளர்களும் இந்த வலையில் சிக்கிக்கொண்டு வெளியேற முடியாமல் தவிப்பதுதான் இதில் வேதனையான விஷயம்.

4. மொழி குறித்தான பிரக்ஞை இப்போது இருக்கிற இளந் தலைமுறை அறிவிப்பாளர்களிடம் இருக்கிறதா? ஒரு அறிவிப்பாளருக்கு அது எந்த அளவுக்கு இருக்க வேண்டும்?

ஒருசிலரைத்தவிர ஏனையோரிடம் இல்லை என்றே சொல்வேன். ஒருமை – பன்மை , இறந்த காலம் – நிகழ்காலம்- எதிர்காலம், ல-ள-ழ- அல்லது ன-ண-ந வேற்றுமை என்ற தமிழ்மொழியின் மிக அடிப்படை அறிவில்லாதவர்களே இன்று பெரும்பாலான வானொலிகளில் பணியாற்றுகின்றனர். சொல் வளம் இல்லாமல் சொற்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும்போது ஆங்கிலச் சொற்களைக்கொண்டு இட்டு நிரப்புகின்றனர். ‘Quick காச் சொல்லுங்கோ” “ஆருக்கு dedicate பண்ணுறீங்கள்” என்பதெல்லாம் இப்போது தமிழ் வானொலிகளில் சர்வசாதாரணம். ‘Hello’, bye, ‘jolly’ என்பனவெல்லாம் தமிழ்ச் சொற்களாகவே ஆகிவிட்டன.

மொழி தொடர்பான சந்தேகங்களைத் தீர்க்க வானொலி கேட்கலாம் என்றிருந்த காலம் போயே போய் விட்டது. தன் சொந்த மொழியில் (அதற்குத் தாய் மொழி என்று வேறு பெயரும் சூட்டிக் கொண்டு) சரளமாக, சரியான உச்சரிப்புடன் அறிவிக்க முடியாதவருக்கெல்லாம் ஏன் அறிவிப்பாளர் தொழில்? இப்போது அறிவிப்பாளருக்குத் தேவையான அடிப்படைத் தகுதி தொலைபேசியில் அபத்தமாக உரையாடத் தெரிந்திருத்தல் மட்டுமே. என்னிடம் ஓர் ஆசிரியை ‘ஆயிரத்தித் தொளாயிரத்தி அறுபத்தி நாலு’ என்பது சரியா? அல்லது ‘ஆயிரத்துத் தொளாயிரத்து அறுபத்து நான்கு’ என்பது சரியா? என எழுதிக்கேட்டிருந்தார். காரணம், ஓர் அறிவிப்பாளர் ‘ஆயிரத்தித் தொளாயிரத்தி அறுபத்தி நாலு’ என்று அறிவித்ததைக் கேட்ட தன் மாணாக்கரில் ஒருவர், அவ்வாறே கூற முயன்றதாகவும் தான் அதனைத் திருத்தப்போக இந்த அறிவிப்பாளர் இப்படித்தானே அறிவிக்கிறார் என வாதிட்டதாகவும் எழுதியிருந்தார். இதை இங்கு நான் கூற வந்ததன் நோக்கம் பள்ளிச் சிறுவர்களிலிருந்து படித்துப் பட்டம் பெற்றவர்கள்வரை தம்மைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை ஓர் அறிவிப்பாளன் உணர்ந்திருக்க வேண்டும் என்பதையும் எமது இளந்தலைமுறையினரை மொழிதொடர்பாக வழிநடத்துவதில் ஒலிபரப்பாளருக்கும் பாரிய பங்குள்ளது என்பதையும் உணர்த்தவே.

அறிவிப்பாளன் தன் மொழி குறித்த நல்ல இலக்கண அறிவு பெற்றிருக்கவேண்டும். மட்டுமின்றி மொழியைச் சரியாக, எவ்விதத் தவறுமின்றி உச்சரிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ‘பிரபல திருடன்’, ‘பிரபல கொள்ளைக்காரன்’ போல ‘பிரபல அறிவிப்பாளர்’ ஆக முயற்சி செய்யாமல் தயவுசெய்து ‘புகழ்பெற்ற’ அறிவிப்பாளராக முயற்சி செய்யவேண்டும். அதற்கு மொழி அறிவு மிக முக்கியம்.

5. இப்போது அவர்கள் பாவித்துக் கொண்டிருக்கிற மொழி நடையும்,அறிவிப்புப் பாணியும் உங்கள் காலத்திலிருந்து எவ்வாறு வேறு படுகிறது? மாற்றம் ஆரோக்கியமானதாக இருக்கிறதா?

இப்போது அறிப்பாளர்களால் கையாளப்படும் தமிழ் தறிகெட்டு ஓடுகின்றது. நாம் எமது இளைய சமுதாயம் குறித்து மிகுந்த அவதானத்துடன் பணியாற்றினோம். மொழி குறித்த நல்ல அறிவு அவர்களுக்குக் கிடைக்கவேண்டுமென்பதில் மிகுந்த அக்கறை காட்டினோம். அதேசமயம் எமது ஒலிபரப்பைக் கேட்டுக்கொண்டிருக்கும் அறிஞர்களும் புலமை மிக்கோரும் எம்மில் பிழை கண்டுபிடிக்கக்கூடாது என்ற கவனத்துடன் இருந்தோம். அப்போது படித்தோரும் புலமை மிக்கோரும் வானொலியைக் கூர்ந்து செவிமடுத்தனர். ஒரு சிறு தவறையும் உடனே சுட்டிக் காட்டினர். இப்போதெல்லாம் வானொலியைச் செவிமடுப்போர் யார் யார் என்பதை நீங்கள் ஒரு மணி நேரம் வானொலியைக் கேட்டுக் கொண்டிருந்தாலே இலகுவில் கணிப்பிட்டுவிடலாம். மொழி தொடர்பாக மிகுந்த பிரஞ்ஞையுடனிருந்தோம். நிறைய வாசித்தோம்.தெரியாதவற்றைக் கேட்டுத் தெரிந்துகொண்டோம். பிறமொழி வானொலிகளைச் செவிமடுத்தோம். அதன்மூலம் பிறமொழிப் பிரயோகங்கள் பற்றிய அறிவைப் பெற்றோம். மூத்த ஒலிபரப்பாளர்களுடன் நல்ல உறவைப் பேணினோம். அவர்களுடன் கலந்துரையாடினோம். விமர்சனங்களை ஏற்றுக்கொண்டோம். பிறர் எம் தவறுகளைச் சுட்டிக்காட்டினால் அவற்றை ஏற்று எம்மை நாமே திருத்திக் கொண்டோம். தமிழ்மொழி தொடர்பான அறிவை வளர்த்துக்கொண்டோம். தமிழை நாம் வளர்க்காவிட்டாலும் குறைந்தது சிதைக்காது பார்த்துக்கொண்டோம். நிகழ்ச்சிகளுக்கு தமிழில் பெயரிட்டோம். தாய் மொழியைச் சிதைப்பது தாயைச் சிதைப்பதற்குச் சமனானது என்பதை உணர்ந்து ஒலிபரப்புச் செய்தோம்.

இன்று நிகழ்ச்சிகளின் பெயர்களையே பாருங்கள். ஒரு தமிழ் வானொலி தன் காலை நிகழ்ச்சிக்கு, ‘Breakfast Show என்கிறது. மற்றொரு வானொலி அதற்கும் ஒரு படி மேலே போய் ‘Morning Breakfast Show என்கிறது. காலையில் Breakfast ‘ சாப்பிடாமல் இரவிலா ‘Breakfast ‘சாப்பிடுவார்கள்?  முதல்வர் கலைஞர், தமிழ்ப் பெயர் சூட்டும் தமிழ்ப்படங்களுக்கு வரி விலக்கு அளித்ததுபோல், வன்னியில் குழந்தைகளுக்குத் தூய தமிழ்ப்பெயர் சூட்டுவோருக்குப் பரிசளிப்பதுபோல், வானொலியிலும் நிகழ்ச்சிகளுக்குத் தமிழ்ப் பெயர் சூட்டுவோருக்குப் பரிசளிக்கும் காலமொன்று உருவானால் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இன்றைக்கும் நான் பெருமையுடன் கூறுவேன். நான் சூட்டிய  சில நிகழ்ச்சிப் பெயர்கள் இந்தப் புதிய சூறாவளியிலும் தாக்குப் பிடித்து நிலைத்து நிற்கின்றன. ‘சந்தன மேடை’, ‘தங்கக் கொழுந்து’, ‘வணக்கம் தாயகம்’ ‘வளையோசை’ (இப்பெயரை ஒரு வானொலி கைவிட மற்றொரு வானொலி பிடித்துக்கொண்டது), ‘குட்டிச் சுட்டி’, ‘அரும்புகள்’ ‘வயலோடு வசந்தங்கள்’, ’முத்துக்கள் பத்து’, இவை சில உதாரணங்கள். இன்னும் உள்ளன.

இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரு தமிழ் ஒலிபரப்பின் மிக உயர் பதவியிலுள்ள, அதாவது பிரதம நிறைவேற்று அதிகாரியான ஒரு பெண்மணி “எனக்குத் தமிழிலும் பேசத் தெரியும். வாரும் பேசிப் பார்ப்போம்” என, தனக்குக் கீழே பணிபுரிந்த ஒரு தமிழ் ஆர்வலரிடம் ஆங்கிலத்தில் சவால் விடும் நிலைதான் தற்போதுள்ளது. அவர் தமிழில் பேசி நான் கேட்டது குறைவு. அவர் அதிகமாகப் பேசும் தமிழ் “ச்சொல்லுங்கோ”. நிலமை இவ்வாறிருக்க அவர் தனக்குக் கீழே பணிபுரிவோரின் தமிழ்மொழி தொடர்பான தவறுகளை எவ்வாறு திருத்துவார்?

பொதுவாகப் பார்க்கும்போது  இன்றைய அறிவிப்புப் பாணி என்பது சாதாரண சந்தைப் பேச்சுத்தான். இது ஆரோக்கியமாக இருக்கும் என நான் கருதவில்லை. இது வெகு விரைவிலேயே தமிழையும் தமிழ் ஒலிபரப்பையும் படுக்கையில் போட்டுவிடும்.  இலங்கையில் இத்தகைய கொச்சைப் பேச்சுமொழிக் கலாசாரத்தை  தமிழ் வானொலிக்கு அறிமுகப்படுத்தியவர் வெற்றுமொழி பேசும் ஒரு ‘வானொலி முதலாளி’. அவர் தமிழைக் கொச்சைப்படுத்த வேண்டுமென்றே இந்தக் கைங்கரியத்தில் இறங்கினாரா தெரியவில்லை. கடைசியில் அந்த ‘வானொலிக் கடையை’ இழுத்து மூடவேண்டிய நிலைதான் ஏற்பட்டது. கவலைதரும் ஒரு விஷயமென்னவென்றால் அந்த ‘வானொலிக் கடைக்கு’ எதிர்க் கடை போடப் புறப்பட்டதால் இன்று எல்லா ‘வானொலிக் கடைகளும்’ அப்படியே ஆகிவிட்டன.

Photobucket

6. ஆனால் தங்களுடைய மொழியும் பாணியும் நேயர்களோடு தங்களை நெருக்கி வைக்க உதவுகிறதாய் இப்போதைய அறிவிப்பாளர்கள் கருதுகிறார்கள்?

சாதாரண பேச்சுத் தமிழில் உரையாடுவதால் நேயர்கள் தம்மோடு நெருக்கமாவதாக தற்போதைய தமிழ் ஒலிபரப்பாளர்கள் கருதுகிறார்களென்றால் இந்த மாற்றங்கள் ஏற்படுவதற்கு முன்னர் இருந்த எம் நேயர்கள் எம்மோடு நெருக்கமாக இருக்கவில்லையென்றா சொல்லவருகிறீர்கள்? “முடக்குதிரைக்கு சறுக்கியது சாட்டு” என்பார்களே. அதுதான் இது. இன்று இவர்களின் நேயர்கள் யார் என்பதிலிருந்துதான் நாம் இதனைப் பார்க்க வேண்டும். வெறுமனே பாடல்களை விரும்பிக் கேட்கும் நேயர்கள், அதுவும் தமது குரலில் தமது பெயரையும் உறவினர் நண்பர்கள் பெயர்களையும் வானொலியில் அறிவிக்க விரும்பும், (அதன் மூலம் தற்காலிக அறிவிப்பாளராக மனத்திருப்திகொள்ளும்) ஒருசில இளைய தலைமுறையினர் , அல்லது யாரோ வெளிநாடுகளில் கடும் குளிரில் விறைத்தபடி தொழில் பார்த்து, தமது ஆசைகளை அடக்கியபடி டொலர்களாகவும் யூரோக்களாகவும் பௌண்ட்ஸ்களாகவும் சேமித்து அனுப்ப, இங்கே அறை எடுத்துச் சொகுசாகச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தினரே இவர்களின் நேயர்கள். இவர்களின் கல்வித்தரமென்ன? சமூக நிலையென்ன? என்ன செய்து கொண்டிருக்கிறீர்களென்றால், படித்துவிட்டு வீட்டிலிருக்கிறேன் என்பதே பதிலாகக் கிடைக்கிறது. எதுவரை படித்தார்களென்பதைக் கேட்டால் தவறு. கேட்கக் கூடாது. தப்பித் தவறிக் கூட ஒரு தொழிசார் நிபுணரோ உயர்பதவி வகிப்போரோ இந்த வானொலிகளைக் கேட்பதாகத் தெரியவில்லை. ஒருமுறை கலையகத்திலிருந்து வடதுருவம் பற்றி ஒரு நிகழ்ச்சியை ஒலிபரப்புச் செய்துவிட்டு, அலுவலகத்துக்கு வந்து பார்த்தால் புவியியல் தொடர்பாக அமெரிக்காவில் கலாநிதி கற்கை நெறியை முடித்துவிட்டு அதற்கும் மேலே தன் படிப்பைத் தொடரும் ஒரு பெண் கல்வியியலாளர் – அதுவும் இலங்கையர்- எமது நிகழ்ச்சியை இணையத் தளம் மூலம் கேட்டுவிட்டு , நாம் நிகழ்ச்சியில் தந்த தகவல் ஒன்றில் தவறிருப்பதைச் சுட்டிக்காட்டி மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார். எத்தனை ஆசிரியர்கள்,அதிபர்கள், அலுவலர்கள் நிகழ்ச்சிகளைக் கேட்டுக்கொண்டிருந்ததில் நேரம் தவறியதாகச் சொல்ல அவர்களை அன்புடன் கண்டித்து அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். ஆனால் இன்றோ..?

இதைப்பற்றிய எவ்விதக் கவலையும் ‘வானொலி முதலாளிகளுக்குக்’ கிடையாது அவர்களுக்கு வேண்டியதெல்லாம் ‘rating’ அல்லது தரக் கணிப்பு. தரமென்றால் நிகழ்ச்சியின் தரமென்பதல்ல. இன்று தரக்கணிப்புச் செய்யும் நிறுவனங்கள், சந்தை ஆய்வு செய்யும் நிறுவனங்களாகவேயுள்ளன. எத்தனை பேர் ஒரு வகை சவர்க்காரத்தைப் பாவிக்கிறார்கள் என்று சந்தை ஆய்வு செய்வதைப்போல எத்தனை பேர் இந்த வானொலியைக் கேட்கிறார்கள் என்பதையே ஆய்வு செய்து வெளியிடுகின்றன. இதை வைத்துக்கொண்டு தாமே முதல் தர வானொலியென்று தமக்குத் தாமே முடி சூடிக்கொள்கின்றார்கள். முதல் தரமென்பது நிகழ்ச்சியின் தரமாக இருக்கவேண்டுமே தவிர அதிகம்பேர் ‘பாவிக்கிற’ வானொலியென்பதாக இருக்கக்கூடாது. உங்கள் கேள்விக்கு வருகிறேன்.

கொச்சைப் பேச்சுத் தமிழில் ஒலிபரப்பினால்தான் நேயர்களை நெருக்கமாக வைத்திருக்கும். அவர்களை இலகுவில் சென்றடையும் என்று ஒரு வாதத்திற்கு வைத்துக்கொள்வோமே. அவ்வாறெனில் ஒரு வானொலி நிலையத்தின் மிக முக்கிய நிகழ்ச்சியான செய்திகளை நீங்கள் ஏன் கொச்சைத் தமிழில் அல்லது பேச்சுத் தமிழில் ஒலிபரப்புவதில்லை? “இண்டைக்குக் காலையிலை வந்து பாருங்கோ ஒரு பத்துமணிபோல கொழும்பிலையிருந்து எயார்போட் போன SLTB பஸ் ஒண்டு ஜா எலக்குக் கிட்ட அக்சிடெண்டானதிலை 3 பேர் செத்துப் போச்சினமாம். 8 பேருக்குக் காயமாம். அதிலையும் 4 பேருக்கு சீரியசாம். சீரியசானவையை கொழும்பு பெரியாஸ்பத்திரியிலை அட்மிட் பண்ணியிருக்கினமாம் “ எனச் செய்தி வாசித்தால் அது இன்னும் மக்களை நெருங்கி அல்லது நெருக்கிச் செல்லுமே? யாராவது ஒரு ‘வானொலி முதலாளி ‘ இதனை முயற்சி செய்து பார்க்கலாம். அது வெற்றியளித்தால், இதற்கான புலமைச் சொத்துரிமையாக (Copyright) இலங்கை ரூபா 5 லட்சத்தை எனக்குத் தந்துவிட வேண்டுமென இப்போதே சொல்லிவிட்டேன்.

நல்ல தமிழில் வாசிக்கப்படுகின்ற செய்திகளைப் பாமர மக்களும் புரிந்துகொள்ள முடியுமென்றால், ஏனைய அறிவிப்புகளையும் நல்ல தமிழில் செய்தால் அவர்கள் புரிந்து கொள்வார்கள். மக்களைப் பற்றி நீங்கள் குறைவாக மதிப்பிடவேண்டாம். அவர்கள் எங்கள் அறிவிப்பாளர்களைவிடப் புத்திசாலிகள்.


7. நீங்கள் வர்ணணை யாளராகவும் , அறிவிப்பாளராகவும் பணியாற்றியவர் என்கிற அனுபவத்தில் இரண்டு துறைகளுக்கும் இறையிலான வேறுபாடுகளாக எதை உணர்கிறீர்கள்?

முதலில் என்னை ஒரு ஒலிபரப்பாளன் என்று கூறுவதையே நான் விரும்புகிறேன். ஓர் ஒலிபரப்பாளன் ஒலிபரப்பின் அனைத்துத் துறைகளிலும் ஓரளவேனும் அனுபவம் பெற்றிருக்கவேண்டுமென நம்புபவன் நான். வானொலி நிகழ்சிகளில் கலந்துகொள்ளும் ஒரு கலைஞனாக ஆரம்பித்த நான், அறிவிப்புச் செய்துள்ளேன், வானொலி தொலைக்காட்சிகளில் நேர்முக வர்ணனை செய்திருக்கிறேன், சமகால மொழிபெயர்ப்புச் செய்துள்ளேன். நிகழ்ச்சித் தயாரிப்பு, நிகழ்சித் தொகுப்பு செய்துள்ளேன். வானொலியிலும் தொலைக்காட்சியிலும் செய்தி ஆசிரியராகவும் செய்தி வாசிப்பாளனாகவும் (அதுவும் தொலைக்காட்சியியில் எனக்கு நானே மேக் அப் போட்டுக்கொண்டு) பணியாற்றியுள்ளேன். வானொலி நாடகம் – மெல்லிசைப்பாடல்கள் உட்பட வானொலிப் பிரதிகள் எழுதியுள்ளேன். விளம்பரப் பிரதிகள் எழுதியுள்ளேன். விளம்பரங்களுக்குக் குரல் கொடுத்துள்ளேன். மேடையில் நிகழ்ச்சிகளைத் தொகுத்துள்ளேன். ஆங்கிலம்-தமிழ், சிங்களம் – தமிழ் மொழிபெயர்ப்புச் செய்துள்ளேன், வானொலி மாமாவாகச் சிறுவர் மலர் நிகழ்ச்சியை 8 ஆண்டுக்காலம் நடத்தி வந்துள்ளேன். தட்டச்சு செய்பவர் வராதபோது தட்டச்சும் செய்துள்ளேன். வெளிக்களத்தில் சிரமமான நாட்டுக்கூத்து போன்ற நிகழ்ச்சிகளை தனியே ஓர் ஒலிவாங்கியின் துணையுடன் ஒலிபரப்புத் தரத்துடன் ஒலிப்பதிவு செய்துள்ளேன். கலையகங்களில் தொழில் நுட்பக்கலைஞர்கள் மட்டுமே செய்யும் ஒலிப்பதிவு (Recording) ஒலித்தொகுப்பு (Editing என்பவற்றைத் தனியே செய்துள்ளேன். ஏன் ஒரு விளம்பரத்திற்காக பாட்டும் பாடியுள்ளேன். இதை நான் என்புகழ் பாடவேண்டும் என்பதற்காக மட்டும் கூறவில்லை. தன்னை ஒரு முழுமையான ஒலிபரப்பாளனாகக் கருதும் அனைவரும் இதில் பாதியாவது செய்திருக்கவேண்டும் எனக் கருதுவதால் சொல்கிறேன். இன்று இப்படி எத்தனை பேர் உள்ளனரோ நானறியேன்.

இனி உங்கள் கேள்விக்கு வருவோம். அறிவிப்பாளனுக்குரிய பணிகள் மட்டுப்படுத்தப்பட்டவை. கொடுக்கப்படும் நிகழ்ச்சிக்குப் பொருத்தமான அறிவிப்பைச் செய்தல் அல்லது கொடுக்கப்படும் பிரதியை அறிவித்தல் என்பவற்றோடு அவனது பணிமட்டுப்படுகிறது. இன்று எஃப் எம் வானொலிகளில் செய்யப்படுவது அறிவிப்புத்தானா என்ற ஒரு கேள்வியும் இங்கே எழுகின்றது. ‘Disk Jockey அல்லது DJஎனப்படும் பாடல் தொகுத்துப் போடுபவரின் பணியைத்தான் இப்போதுள்ளவர்கள் செய்கிறார்கள். இடையிடையே ஏதோ பேசவேண்டும் என்பதற்காக ஏதேதோ பேசிவிட்டும் போகிறார்கள்.

ஒரு நேர்முக வர்ணனையாளனின் பணியென்பது இதை விடப் பாரியது. பொறுப்பானது. தனது நேயருக்கு – அவர் பார்வையற்றவராகக்கூட இருக்கலாம் – ஒரு நிகழ்வை காட்சிப்படுத்துவதே நேர்முக வர்ணனையாளரின் பிரதான பணி. காட்சிகளின் விபரிப்பு அந்த நிகழ்வை உங்கள் நேயர் காணச் செய்வதாக அமைய வேண்டும். அதற்காக உங்கள் நேயருக்கு அளவுக்கதிகமாகவும் காட்சிப்படுத்தத் தேவையில்லை. கிரிக்கெட் அரங்கினுள் நாயொன்று நுழைந்து ஆட்டத்தில் தடையேற்படும்போது நாயின் மைதானப்பிரவேசம் வர்ணிக்கப்படவேண்டியதே. ஆனால் அங்கு பறந்து செல்லும் காகத்தைப்பற்றிய வர்ணனை தேவையற்றது. எனவே நிகழ்வின் தன்மை குறித்து எதை வர்ணிக்கவேண்டும் எதைத் தவிர்க்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பும் வர்ணனையாளன் கையிலேதான் உள்ளது.

வர்ணனைகள் இருவகையென நான் நினைக்கிறேன். ஒன்று திட்டமிடப்பட்ட நிகழ்வுகளின் வர்ணனை. அதாவது ஓர் அரச தலைவரின் விஜயம் போன்றவை. இத்தகைய திட்டமிடப்பட்ட நிகழ்வுகளை வர்ணனை செய்யும்போது போனோமா வர்ணனை செய்தோமா என்றும் இருக்க முடியாது. அதற்காக நிறைய ‘வீட்டு வேலைகள்’(Home Work) செய்யவேண்டியிருக்கும். மற்றையது திடீரென நிகழும் நிகழ்ச்சிகள். குண்டு வெடிப்புகள், விமான விபத்துகள், வெள்ள அனர்த்தங்கள் போன்றவை. இங்கு முன் ஆயத்தங்கள் குறைவெனினும் அபத்தமாகப் பேச முடியாது. என்னைப் பொறுத்தவரை வர்ணனை என்பதே சிரமமான பணி.

8. இலங்கை வானொலிச் சூழலில் இலங்கை இனப்பிரச்சினை ஏற்படுத்திய முக்கிமான தாக்கம் என்று எதனை முக்கியமாகச் சொல்வீர்கள்?

சந்தேகங்கள் காரணமாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணிபுரிந்த அத்தனை தமிழ் ஊழியர்களையும் ஒட்டு மொத்தமாக கட்டாய விடுமுறையில் வீட்டுக்கனுப்பி மனத்தளவில் எம்மை நோயாளியாக்கிப் பார்த்தமை ஒரு தாக்கம். (இதில் தன் மதத்தைத் தழுவிய ஒரு தமிழ்ப் பெண்மணியை மணந்த நண்பர் பி.எச். அப்துல் ஹமீதும் , ஒரு தமிழரின் தூரத்துப் பேர்த்தியை மணந்த சிங்கள நண்பர் ஆனந்த புஞ்சிஹேவாவும் அடக்கம்) 83 ஜூலைக் கலவரம் காரணமாக புலம்பெயர்ந்த ஒலிபரப்பாளர்கள், வானொலிக் கலைஞர்கள், வானொலி எழுத்தாளர்கள் ஏற்படுத்திய வெற்றிடம் மற்றொரு தாக்கம். அதனால் ஏற்பட்ட தமிழ்நிகழ்ச்சி ஒலிபரப்பு நேரக்குறைப்பு இன்னுமொரு தாக்கம். வடகிழக்கிலிருந்து கலைஞர்கள், குறிப்பாக இசைக்கலைஞர்கள் கிராமிய நிகழ்ச்சிக் கலைஞர்களின் கொழும்பு வருகை தடைப்பட்டமையால் ஏற்பட்ட தாக்கம், மண்டைதீவு ஒலிபரப்பு நிலையம் மற்றும் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட ஒலிப்பதிவுக் கூடம் என்பவை இயங்காது போனதால் ஏற்பட்ட தாக்கம், வடகிழக்கில் வெளிக்கள ஒலிபரப்பு, ஒலிப்பதிவுகளில் ஏற்பட்ட தடங்கல்கள் ஏற்படுத்திய தாக்கம் என தாக்கங்கள் அனேகம். ஆனால் தமிழர்கள் மீதான சந்தேகம் இன்னும் தொடர்வதால் நல்ல தமிழ்பேசும் ஒலிபரப்பாளர்களுக்குப் பதிலாக கொச்சைத்தமிழ் பேசும் ஒலிபரப்பாளர்கள் பெருகியுள்ளதையே நான் முக்கிய தாக்கமாகத் தற்போது காண்கிறேன்.


9. இனப்பிரச்சினை செய்திகளின் தேவையையை அதிகரித்ததோடு செய்திகளை மட்டுமே கவனிக்கிற மனோநிலைக்கு மக்களைக் குறிப்பாக தமிழ் மக்களைத் தள்ளி விட்டிருக்கிறது என்று கொள்ளலாமா? முன்பு போல நிகழச்சிகள் வானொலிகளில் இடம் பெறாமைக்கு அதுவும் ஓர் காரணமா?

இனப்பிரச்சினை, செய்திகளின் தேவையை அதிகரித்ததென்னவோ உண்மைதான். ஆனால் எத்தனை வானொலிகள் இவ்வாறு செய்திகளுக்கு மாத்திரமே முன்னுரிமை கொடுத்து நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகின்றன? அதுவும் சுயாதீனமாக, சரியான செய்திகளை ஒலிபரப்புகின்றன? இன்று செய்திக்கான கட்டுப்பாடுகளை மீறி எல்லாச் செய்திகளும் ஒலிபரப்பாவதில்லை. அவ்வாறு ஒலிபரப்பும் வானொலி நிலையங்களும் செய்தியாளர்களும் கண்காணிக்கப்படுகின்றனர். இதனால் 100% உண்மைச் செய்திகளைத் தர வானொலி நிலையங்கள் அஞ்சுகின்றன. தமக்குத் தாமே சில சுய கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு செய்திகளைத் தருகின்றன. இதனால் செய்திகளை அறிந்துகொள்ள மக்கள் இணையத்தளங்களையும் பிறநாட்டு ஒலி, ஒளிபரப்புகளையும் நாடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன் செய்திகளைக் கவனிப்பவர்கள் யார் என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது. பெயர்கூறிப் பாடல் கேட்பவர்கள் ஒரு வானொலியின் செய்தி நேரத்தில் ஏனைய வானொலிப்பக்கம் போய் விடுகின்றனர். இவர்கள் எல்லா வானொலி நிலையங்களுக்கும் அபிமான நேயர்களாகவேயிருக்கின்றனர். மாவிலாறு தொடர்பாக திருகோணமலை மாவட்டத்தின் பல இடங்களிலும் மோதல்கள் இடம்பெற்று இடப்பெயர்வும் அனர்த்தங்களும் இடம்பெற்றுக்கொண்டிருந்த சமயம் இப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த மூதூர்க் கிராமத்திலிருந்து ஓர் இளைஞன் தன் காதலிக்காகப் பாடல் கேட்கவில்லையா? அதேசமயம் தம் இருப்புத் தொடர்பாக அக்கறை கொண்டோர், செய்திகளின்பால் அக்கறை காட்டாமலுமில்லை. இவர்கள் அனைத்து வானொலிகளையும் செய்தி நேரத்தின்போது மட்டுமே செவிமடுக்கின்றனர் என்பதும் கவனத்தில் கொள்ளவேண்டிய விடயமே.

Photobucket

முன்புபோல் வானொலியில் நல்ல நிகழ்ச்சிகள் இடம்பெறாமைக்கு, செய்திகளின் தேவை அதிகரித்ததுதன் காரணமா எனக் கேட்டீர்கள். வானொலி முதலாளிகளும் அங்கு பணிபுரிவோரும் 24 மணி நேரமும் செய்திகளைத் தேடி ஒலிபரப்புவதற்கே தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருக்கின்றனர் என நீங்கள் எண்ணிக்கொண்டிருந்தால் அது தவறு. வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை இரவுகளில் நல்ல குத்துப்பாட்டுகளைப்போட்டு, தமிழ் இளைஞர்களை குத்தாட்டம் போடுமாறு அறிவிக்கச் சொன்ன ஒரு வானொலி முதலாளியை நான் அறிவேன். எனவே இந்த வானொலி முதலாளிகளின் ஒரே குறிக்கோள் தமது வானொலிகளை ‘No 1 hit music channel’ அதாவது ‘முதல் தர இசை அலைவரிசை’ என்ற இலக்கை எட்ட வைப்பதேயன்றி வேறொன்றும் அல்ல. உண்மையில் இவர்களுக்கு செய்திகள் தொடர்பான அக்கறையிருந்தால் நல்ல உச்சரிப்புடன், அடிப்படைத் தமிழ் இலக்கணப் பிழைகளின்றி செய்திகளைத் தயாரித்துத் தரட்டும் பார்க்கலாம்.


10. FM வானொலிகளின் வருகையும் அவற்றின் 24 மணிநேர ஒலிபரப்பும் வானொலி நிகழ்சிகளின் போதாமைக்கும் தரமின்மைக்கும் காரணம் என்று சொல்கிறீர்களா?

வானொலிகளின் ஒலிபரப்பு 24 மணி நேரமாக விஸ்தரிக்கப்படதுபோல ஒலிபரப்பாளர்களின் அறிவு நிலை விஸ்தரிக்கப்படவில்லை என்பதே இன்று பலராலும் முன்வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் சினிமாப் பாடல்களும் சினிமாத் தகவல்களுமே. அவர்களது அதிகபட்ச வாசிப்பு தமிழக வாராந்தரிகளுடன் மட்டுப்பட்டுவிட்டது. எத்தனையோ பெயர்களுடன் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பானாலும் அத்தனையும் சினிமாப்பாடல்களே. சினிமாப்பாடல்களில்கூட மறைந்துகிடக்கும் நல்ல விஷயங்களைப் பிரித்துத்தர அவர்களுக்குத் தெரியவில்லை. அமரர் எஸ்.கே. பரராஜசிங்கம் தொகுத்துத்தந்த ”திரை தந்த இசை” நிகழ்ச்சியும் சினிமாப்பாடல்களை வைத்துத்தான் தொகுக்கப்பட்டது, ஆனால் அந்தப்பாடல்கள் எந்தெந்த கர்னாடக ராகத்தில் அமைந்ததென கர்நாட இசைக்கு முக்கியமளித்ததாக அமையவில்லையா? நான் தயாரித்து வழங்கிய ‘வணக்கம் தாயகம்’ தனியே பொது அறிவு, தமிழறிவுடன் தொடர்புடையதாக அமைந்தது. அதற்கும் அடிப்படை சினிமாப்பாடல்கள்தான். ராஜேஸ்வரி ஷண்முகம் வழங்கிய ‘பொதிகைத் தென்றல்’ நிகழ்ச்சியும் அப்படித்தான். இப்படி அறிவுபூர்வமான நிகழ்ச்சிகளைச் செய்யத்துடிக்கும் சில இளம் ஒலிபரப்பாளர்களின் ஆவலைக்கூட வானொலி முதலாளிகள் மழுங்கடித்துவிடுகின்றனர். இரண்டு பாடல்களுக்கிடையில் 90 செக்கனுக்குமேல் பேசக்கூடாதென உத்தரவிட்டு காலமளக்கும் கருவி (stop watch) ) வாங்கிக்கொடுத்த வானொலி முதலாளிகளும் இருக்கின்றனர். இப்படியிருக்கும்போது நிகழ்ச்சிகளின் தரம் எப்படி அதிகரிக்கும்.

பாடலுக்கோ இசைக்கோ முக்கியத்துவமின்றி ஒலிபரப்புச் செய்யலாமா என்று கேட்பீர்கள். கிரிக்கெட் ஆட்டம்பற்றிய நேர்முகவர்ணனையை வானொலியில் 6 மணிநேரம் பாடலின்றியே தொடர்ந்து கேட்பவர்கள் இல்லையா?‘A Man with the Golden Microphone’, ‘Golden tonsil’ என்றெல்லாம் அழைக்கப்பட்ட John Laws என்ற அவுஸ்திரேலிய ஒலிபரப்பாளரைப்பற்றி அவுஸ்திரேலியா சென்றிருந்தபோது அறிந்துகொண்டேன். தனது 71வது வயதில் கடந்த 2007 நவம்பர் மாதம், அவர் ஓய்வுபெறும் வரை, 54 ஆண்டுகளாக நடத்திவந்த வெறும் பேச்சையே அடிப்படையாகக் கொண்ட (talkback) வானொலி நிகழ்ச்சி, நேயர்கள் மத்தியில் புகழ்பெற்ற வானொலி நிகழ்ச்சியாகும். அவரின் எல்லா நிகழ்ச்சிகளும் காத்திரமான விடயதானங்களைக் கொண்டவை. 2003ல் ஒலிபரப்பு வாழ்வில் John Laws 50 ஆண்டுகளைப் பூர்த்திசெய்தபோது, அவர் பணியாற்றிய 2UE வானொலி நிலையம் 10,000 அவுஸ்திரேலிய டொலர் (இலங்கை ரூபாவில் அதன் தற்போதைய பெறுமதி 10 லட்சம் ரூபா!!) பெறுமதியான தங்கமுலாம் பூசப்பட்ட ஒலிவாங்கியொன்றை அவருக்கு பரிசளித்து மகிழ்ந்தது. இந்தத் தங்க முலாம் பூசப்பட்ட ஒலி வாங்கியைப் பயன்படுத்தியே தனது நிகழ்ச்சிகளை அவர் வழங்குவார். நிகழ்ச்சி நிறைவடைந்ததும் அவர் அதனைக் கழற்றிக் கொண்டு போய்விடுவார். இதற்கு முன்னரும் 40 வருட ஒலிபரப்பு வாழ்வைப் பூர்த்தி செய்தபோதும் அவருக்கு இவ்வாறே தங்கமுலாம் பூசப்பட்ட ஒலிவாங்கியொன்று பரிசளிக்கப்பட்டிருந்தது. அவ்வளவு தூரம் அவரது நிகழ்ச்சி புகழ்பெற்றிருந்தது. அதேபோல் அவரது நிகழ்ச்சி, அவர் பணியாற்றிய நிலையத்திற்குப் பெரும் புகழையும், வருமானத்தையும் ஈட்டித்தந்தது. அமெரிக்காவிலும் ஒரு வானொலி அவரது நிகழ்ச்சியை சமகாலத்தில் பெற்று ஒலிபரப்பியது. இவ்வளவுக்கும் அவர் தன்னை ஓர் ஊடகவியலாளன் என்று அழைத்துக்கொண்டதில்லை. எப்போதும் தன்னை களிப்பூட்டுபவராகவே அறிமுகப்படுத்துவார். அதாவது தனது பேச்சு நிகழ்ச்சி நேயர்களுக்குக் களிப்பூட்டும் என்பதில் அவருக்கு அசைக்கமுடியாத நம்பிக்கையிருந்தது. அவுஸ்திரேலியாவிலேயே அதிகூடிய சம்பளம் வாங்கிய ஒலிபரப்பாளர் துழாn டுயறள என்பது வேறு விஷயம்.

தரமான நிகழ்ச்சிகளைத் தந்தால் பாடல்கள் இல்லாமலே ஒலிபரப்பைக் கேட்க மக்கள் தயாராகவுள்ளனர் என்பதற்கு John Laws அவர்களின் நிகழ்ச்சி ஓர் எடுத்துக்காட்டு.

Photobucket

11. இத்தனை ஆண்டுகால அறிவிப்புத் துறை அனுபவங்களில் நீங்கள் முக்கியமாகப் பதிவு செய்ய வேண்டும் என்று நினைக்கிற அதிருப்தி என்று ஏதேனும் உங்களிடம் உண்டா?

அனேகமாக நான் செய்ய நினைத்த அனேகமான நிகழ்ச்சிகளை என் மேலதிகாரிகளுடன் சண்டை போட்டாவது செய்து முடித்திருக்கிறேன். என் மேலதிகாரிகளுக்கு எவ்வித அசௌகரியங்களையும் அந்த நிகழ்ச்சிகள் தந்ததில்லை. இங்கிலாந்து, ஜேர்மனி போன்ற நாடுகளில் ஒலிபரப்புத் தொடர்பான பயிற்சிகள் பெறும் வாய்ப்புகள் கிடைத்தன. இலங்கையில் மட்டுமன்றி, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், ஃபிரான்ஸ், கனடா, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகளில் உள்ள வானொலி நிலையங்களினூடாக தமிழிலும் தென்னாபிரிக்க வானொலி நிலையமொன்றினூடாக ஆங்கிலத்திலும் ஒலிப்பரப்புச் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. ஒரு முழுநேர ஒலிபரப்பாளனாக மரணிக்கவேண்டுமென விரும்பியிருந்தேன். வஞ்சகம், சூது , பொறாமை காரணமாக, நான் எதிர்பார்த்ததற்கும் முன்னரே ஒலிபரப்பிலிருந்து விலகியிருக்க நேர்ந்தமை துரதிஸ்டமே. இலங்கையில் மீண்டும் ஒலிபரப்பின் பொற்காலம் மலருமா என்ற ஒரேயொரு ஆதங்கமே இப்போது எஞ்சியுள்ளது. இன்று புலம்பெயர்ந்த நாடுகளிலெல்லாம் நல்ல தமிழை வானொலிகளில் எம்மவர்கள் முழங்கிக் கொண்டிருக்க, நாமோ கொச்சைத்தமிழ் பேசுவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ள வெளிநாடுகளிலிருந்து சிலரை இறக்குமதி செய்துகொண்டிருக்கிறோம். இறக்குமதியான இவர்களோ வானொலி, தொலைக்காட்சிகளில் எப்படி நரம்பு தெறிக்கக் கத்தலாமென்பதையும் 100க்கு எத்தனை சதவீதம் ஆங்கிலம் கலக்கவேண்டுமென்பதையும் கற்றுத் தருகின்றனர். இவர்கள் எங்கிருந்து இறக்குமதியானார்களோ அங்கெல்லாம் இன்றும் எம் இலங்கை ஒலிபரப்பாளர்கள் போற்றப்படுகின்றனர். இதுதான் புரியாத புதிராகவுள்ளது.

என் வானொலி அனுபவங்களை எழுத்துவடிவில் ஆவணப்படுத்துவதொன்றே இதுவரை நிறவேறாத என் ஆசை. அதை நிறைவேற்றவேண்டும். பார்ப்போம்.

(தமிழ்த்திரையின் தலைநிமிர்த் தடப்பதிவாகி பலரது பாராட்டுகளைப் பெற்ற படம் வெயில்(2006). வாழ்க்கையைப் பார்த்துப் படமெடுத்ததாக வரவேற்பைப் பெற்ற இந்த ‘வெயில்” 60வது கான்ஸ் திரைப்படவிழாவில்(2007) கலந்து கொண்டது. இதன் இயக்குநர் வசந்தபாலன் ஆல்பம் என்ற படத்தை முதலில் இயக்கியவர். இயக்குநர் சங்கரிடம் உதவியாளராக இருந்தவர். இன்று தமிழ்த் திரை உலகின் கவனயீர்பபைப் பெற்றுள்ள இளம் இயக்குநர்களில் இவரும் ஒருவர். இத்தகைய இளையோரிடமிருந்து காத்திரமான படைப்புகளை தமிழ்த் திரை ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள். சென்னையில், சலனம் இணையத்திற்காக அகிலனுடன் மனம் திறக்கிறார் வசந்தபாலன்.)

நேர்காணலில் இருந்து

- நான் சினிமாவை இரண்டு வகையாகத்தான் பார்க்கிறேன். சுவாரசியமான சினிமா, சுவாரசியம் அற்ற சினிமா.

- என்னுடைய முதலாவது படம் தோல்வி. தோல்வியுற்ற மனிதனை இந்த சமூகம் எப்போதும் நிராகரிக்கும். அதுபோலவே என்னையும் நிராகரித்தார்கள் – ஒதுக்கினார்கள். அவர்களுக்கெல்லாம் இப்போது என் நன்றி. அது தான் வெயில் படத்தினுடைய உயிரோட்டமாக இருந்தது.
- நான் ஒரு இலக்கியக்காரன் இலக்கியம் குறிப்பாக நவீன இலக்கியத்தின் பரிச்சயம் கொண்ட ஆள்…. அதன் காரணமாகத் தான் என்னுடைய படங்களின் படிமங்களின் காட்சிப்படுத்தல் சாத்தியமானது.

- உலகப் பார்வையாளர்கள் குறிப்பாக கேன்ஸ் அமைப்பினர் இந்தப்படத்தை தேர்வு செய்தமைக்கான காரணமும் கூட குழந்தைகளின் உணர்வுகளைக் குறித்து இந்தப்படம் பேசுவதாக இருக்கிறது! நானும் இந்தப்படத்தில் முக்கியமான படிமமாக கருதுவது அதைத்தான். குழந்தைகளின் மனதில் சின்னவயசில் ஏற்படுகிற காயம் அவர்களை எப்படியெல்லாம் மாற்றுகிறது என்பதைத்தான் இந்தப்படம் பேசுகிறது.

- குலத்தை காத்தவன் குலசாமி. இப்படி குடும்பத்திற்கு சந்தர்ப்பவசத்தால் ஏதாவது செய்தவன் மதிப்பிற்குரியவனாக ஆகும் போது அவனுக்குப் பிறகு நான்காவது தலைமுறை ஐந்தாவது தலைமுறை அவனை தங்களுடைய குலசாமியாக ஏற்றுக்கொள்கிறார்கள். இது தான் தெற்கத்திய மனிதர்களுடைய வாழ்க்கை.

நேர்காணல்: இயக்குநர் வசந்தபாலன்
சந்திப்பு: அகிலன்

விரைவில் ஒலிவடிவில் இடப்படும் எழுத்தில் முழுவதும் படிக்க அழுத்துங்கள்

தமிழ் சினிமாப்பரப்பில் அதிர்வுகளைக் கிளப்பியிருக்கும் பருத்திவீரன்.

இயக்குநர் அமீருடனான சிறப்பு நேர்காணல். நேர்கண்டவர் த.அகிலன். ஒளிப்படங்கள் அருண்.

நான் எல்லாப்படங்களையும் பார்க்கிறேன். தனிமையும் துயரும் நிரம்பிக்கிடக்கும் நாட்களில் மாற்றீடாக எதையாவது இட்டு நிரப்பிவிடவேண்டியிருக்கிறது. தனியே வாசித்தும், கேட்டும் நாட்களை நகர்த்துவதன் சாத்தியமின்மை, என்னை ஒரு நாளின் 4 மணிநேரத்தை விழுங்கிவிடும் திரையரங்குகளை நோக்கி செல்லவைக்கிறது. முடிவில் சோழப்பொரி சுற்றித்தரப்படும் காகிதங்களை விட்டு வருவதைப்போல திரையரங்கையும், படங்களையும், அதன் நினைவுகளையும் கடந்து வெளியேறிவிடுகிறேன். அதையும் தாண்டி நான் பார்க்க நேர்கிற படங்களில் மனசைப் பிசைகிற அல்லது வலி நிறைந்த நெடிகளுடன் என் கூடவே வந்துவிடுகிறன படங்கள் சில. அப்படி அண்மையில் என் கூட வந்த படம் பருத்திவீரன்.
கிராமத்து மனிதர்களின் வாசனையை மனமெங்கும் ஏன் அரங்குமுழுவதும் நிரப்பிவிடுகிற கதை பருத்திவீரன்.
சினிமா ரசிக மனங்களை தத்துவங்களாலும் குத்துப்பாட்டாலும் நிறைத்துவிட நினைக்கும் கதாநாயகர்களினிடையில் தனது முதல் படத்தையே இவ்வாறு மண் மணக்கும் பருத்தி வீரனை தேர்ந்தெடுத்ததற்காக நடிகர் கார்த்தியை நிச்சயம் பாராட்ட வேண்டும்.
தமிழ் சினிமாவின் பாடற்காட்சிகளில் அழகாக மிக அழகாக மட்டுமே காட்டப்பட்ட நமது கிராமங்களின் இன்னொரு முகத்தை பருத்திவீரன் காட்டுகிறது.
வறண்டு போன பொட்டல் வெளிகளையும் அதனூடே வாழும் பசிய மனங்கொண்ட மனிதர்களையும் நம்மிடையே வாழச்செய்கிறது பருத்தி வீரன்.
நாங்கள் கிராமங்களை விட்டு நிறையத்தூரம் வந்துவிட்டோம். பருத்திவீரனில் வரும் அநேக முகங்கள் மறந்துபோனவை அல்லது அவர்களை நம் சுற்றத்தாராய் புரிந்து கொள்ளாத ஒரு தலைமுறை நம்மிடையே தோன்றியிருக்கிறது. இந்தச் சூழலில் உணர்வும் உயிருமாக நம்மிடையே கிராமத்தையும் அதன் மனிதர்களையும் கொண்டுவருகிறது பருத்திவீரன்.
பெரும்பாலும் வயல் வெளிகளினிடையில் கதாநாயகி நடனம் ஆடுவதை மட்டும் மிக அழகாக பதிவு செய்கிற கமரா, இங்கோ எலும்பும் தோலுமாகிப்போன கிராமத்தை நீர்வற்றிப்போய் தகித்தலையும் ஒருகிராமத்தின் உக்கிரமுகத்தை, நக்கலும் நையாண்டியுமாய் தெனாவெட்டோடு அலையும் மனிதர்களைப் முதல்முறையாகப் பதிவு செய்திருக்கிறது.
படம் பார்த்துக்கொண்டிருக்கும் போது எனக்கு தோன்றியது கார்த்தியைவிடவும் சரவணன் நன்றாக நடிக்கிறார் என்று. முடிவில் எல்லோரும் நன்றாகத்தான் நடித்தார்கள் என்கிற முடிவிற்குத்தான் வரவேண்டியிருந்தது. கதாநாயகனையும் கதாநாயகியின் அங்கங்களையும் மட்டுமே சுற்றியலையும் கமரா இந்தப்படத்தில் எல்லோரையும் ஒரே கண்கொண்டு பார்த்திருக்கிறது. அரங்கைவிட்டு வெளியேறுகையில் கதைமாந்தர்கள் அத்தனைபேரும் நம்மிடையே வாழ்ந்துவிட்டுப் போயிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.
தமிழ் சினிமாப்பரப்பில் அதிர்வுகளைக் கிளப்பியிருக்கும் பருத்திவீரன் திரைப்படத்தின் உருவாக்க கர்த்தா இயக்குநர் அமீர் அவர்களுடன் பருத்திவீரன் படம் குறித்து எமது ஆதங்கங்களை பகிர்ந்து கொண்டோம்.

01.நாங்கள் இறுதிக்காட்சியிலிருந்தே தொடங்குவோம். படத்தின் அந்த இறுதிக்காட்சி இத்தனை சர்ச்சைகளை கிளப்புகிறதே நீங்கள் அதை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

நான் பாசிட்டிவ்வாகத்தான் எடுத்துக்கொள்கிறேன். ஏன் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது என்றால் யார் அதைக்கிளப்புகிறார்கள் என்று பார்க்கணும். படம் பார்க்கிற ரசிகர்கள் அதை ஏற்றக்கொள்கிறார்கள். ஒரு சினிமாவை யாருக்காக படைக்கிறோம். ரசிகனுக்கும் மக்களுக்கும் தான் படைக்கிறோம் வேறு யாருக்கும் கிடையாது. இங்கு படைப்பாளிகள் தான் சர்ச்சைகள் செய்கிறார்கள். ஒவ்வொரு படைப்பாளியும் ஒவ்வொரு கோணத்தில் சிந்திக்கிறார்கள். இரண்டு படைப்பாளிகள் ஒரே மாதிரி சிந்திக்கமுடியாது. விமர்சகர்கள் கூட இது அப்படியிருந்திருக்கலாம், அது இப்படியிருந்திருக்கலாம் என்று சொல்கிறார்கள். நான் சொல்கிறேன் அதெல்லாம் உங்களுடைய கருத்து. உங்களுடைய கருத்தை என்னுடைய படத்தில் திணிக்க முடியாது. இது என்னுடைய படம் என்னுடைய கருத்து ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ஐடியா சொல்கிறார்கள்.
‘அவர்கள் இரண்டு பேரும் சந்தோசமா சேர்ந்து வாழ்ந்திருக்கலாமே’ என்கிறார்கள். நான் ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் ரோமியொ யூலியட் எப்படி வரலாறாக வந்தது? அவர்கள் சந்தோசமாக இருந்திருந்தால் நீங்கள் அதை வரலாறு என்று சொல்லியிருப்பீர்களா? சில கதைகளுக்கு சிலவகையான முடிவுகள் தான் சரியாக இருக்கும். அதில எந்த சந்தேகமும் எனக்கு கிடையாது. அதைத்தவிர இப்படியிருந்திருக்கலாம் அப்படியிருந்திருக்கலாம் அந்த இறுதியிக் காட்சியில் என்கிறார்கள். நான் சொன்னேன் நீங்கள் உங்களுடைய அறிவை உள்ளே திணிக்கிறீர்கள். உங்களுடைய அறிவு சார்ந்து இந்த கிளைமாக்ஸ் இப்படியிருந்திருக்கலாம் என்கிறீர்கள் ஆனால் நான் என்னுடைய அறிவைக்கூட உள்ளே வைக்கவில்லை. ஒரு இயக்குனராக என்னுடைய அறிவைக்கூட நான் உள்ளே வைக்கவில்லை. நான் வைச்சிருக்கிற கிளைமாக்ஸ் பருத்திவீரனின் அறிவு சார்ந்தது. பருத்தி வீரன் என்கிற ஒரு படிக்காத ரவுடித்தனம் பண்ணிக்கொண்டிருக்கும் ஒருத்தன் அவன். எப்படி அந்த இடத்தில் சிந்திப்பான் முடிவெடுக்கிறான். இறந்துபோன தன்னுடைய காதலியை எப்படி ஊர்ப்பொதுமக்களிடமிருந்து காப்பறுவது என்று முடிவெடுக்கிறான். அவனுடைய அறிவு என்னவாக வேலைசெய்கிறது என்பதைத்தான் பதிவு செய்திருக்கிறேன். நீங்கள் அதை அப்படித்தான் அணுகவேண்டுமே தவிர இது இப்படியிருந்தா நல்லாயிருந்திருக்கும் அப்படியிருந்தா நல்லாயிருந்திருக்கும் என்பதெல்லாம் என்னைப் பொறுத்தவரையில் சரியான விமர்சனமாக ஆகாது.

02.தமிழ்சினிமாவில் இப்போது வரக்கூடிய நல்லபடங்கள் அவற்றிற்கான வெற்றிகள் இவையெல்லாம் ஆரோக்கியமான விசயம் தான் இது தமிழ்சினிமாவின் ரசிகமனம் மாறியதால் ஏற்பட்ட மாற்றமா? அல்லது தமிழ் சினிமாத் தரப்பினரால் ஏற்படுத்தப்பட்ட மாற்றமா?
எங்களைப்போன்ற இயக்குனர்கள் ஏற்படுத்துகிற மாற்றம் தான். ரசிகர்களுடைய மாற்றம் எல்லாம் கிடையாது அவர்கள் எப்பொழுதும் ஒரேமாதிரியாத்தான் இருக்கிறார்கள்.ஒரு உணவு எப்படி பல்வேறு வகைவகையாக ரசிகர்களால் ரசிக்கப்படுகிறதோ அது மாதிரித்தான் சினிமாவும் ரசனை சம்மந்தப்பட்ட விசயம் அது நீங்கள் என்னவிதமான படைப்புகளைக்கொடுத்தாலும் அதைப்பார்ப்பதற்கென்று ஒரு கூட்டம் இருந்துகொண்டுதான் இருக்கும்.

03.அது சரி ஆனா அந்த படைப்பாளிகள், விமர்சகாகள்,ரசிகர்கள் கூட்டத்தால வெகுஜன சினிமாக்களின் வணிகரீதியிலான வெற்றியையும் தாண்டி இந்தப்படத்துக்கு ஒரு பெரிய வணிக ரீதியிலான வெற்றியைத் தரமுடிந்திருக்கே அது மாற்றமில்லையா?

மாற்றம் எல்லாம் இல்லை யார் செர்னனா? (கோபமாகிறார்) அவர்கள் கரெக்டா இருக்காங்க சார். வெகுஜன சினிமாவையும் தாண்டி ஒரு வெற்றியை கொடுத்திருக்கிறார்கள் என்றால் அதை ஒரு set of audience பார்த்திருக்கிறார்கள். இதைவேறு சிலரும் சேர்ந்து பார்த்திருக்கிறார்கள். அப்படித்தான் கொள்ளவேண்டும். அவர்கள் அவதானித்துக் கொண்டேயிருக்கிறார்கள் என்னமாதிரியான சினிமாவுக்கு போகணும் அப்படியென்று சொல்லி பார்த்துக் கொண்டேயிருக்காங்க. சிலருக்கு இந்தமாதிரியான படங்கள் பிடிக்குது போறாங்க. யூத் புல்லான சினிமா பிடிக்கும் போது அதுக்கு போறாங்க. சிலர் குடும்பமாக குடும்பபாங்கான படம் வரும்போது அதைப்போய்ப் பார்க்கிறாங்க. இதுல எல்லாம் மொத்தமா இருக்கிறதால எல்லாரும் வந்து பார்க்கிறாங்க. அவர்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள் குடுக்கவேண்டியது நம்மட கடைமை.

04.இயக்குனரும் நடிகருமான தங்கர்பச்சான் ஒருபேட்டியில் ‘என்னுடைய படங்களை புரிந்துகொள்ளுமளவுக்கு இன்னமும் தமிழ்சினிமா ரசிகமனம் வளர்ச்சி அடையவில்லை” என்றார். (அழகி படம் வெளிவந்த புதிதில்) அதை ஒத்த காரணங்கள் தானா பருத்திவீரன் இறுதிக்காட்சி தொடர்பான சர்ச்சசைகளும்? நீங்கள் எடுத்து வைத்திருப்பதாக சொல்லப்படுகின்ற இன்னொரு பருத்திவீரன் பிரதியை தமிழ் சினிமா தளத்தில் வெளியிடாமல் இருப்பதுவும்?

ரசிகமனம் புரிந்து கொள்ளாது என்பதெல்லாம் கிடையாது வணிக ரீதியிலான வெற்றியைப் பெறமுடியாது. ஏனென்றால் வணிக ரீதியிலான வெற்றி முக்கியமானது. நீங்களே சொல்றீங்க நல்லபடம் குடுத்தா ரசிகன் பார்ப்பான் என்று. திரும்பவும் நீங்களே சொல்றீங்க நல்லபடம் குடுத்தா பார்க்மாட்டான்று என்று. ஆனால் ஒரு படைப்பை கொண்டு போய் அவர்களிடம் சேர்ப்து முக்கியமானது. அதிலே நிறையப் பிரச்சினை இருக்கிறது. எந்த படைப்புகளை எடுத்தாலும் ரசிகரிடம் கொண்டு போய் சேர்ப்பதில் நிறைய தடைகள் இங்கே இருக்கின்றன அது ரொம்ப முக்கியமான விசயம் இல்லையா? ஏன்னா இது வியாபரம் சார்ந்த விசயமாகவும் இருக்கிறது. கலையாக இருந்தாலும் வியாபாரம் சார்ந்து இருப்பதால் எனக்கும் ரசிகருக்கும் பாலமாக இருப்பவர்கள் அனைவரும் இதிலே விருப்புள்ளவர்களாக இருந்தால் மட்டும் தான் இது சாத்தியம். அல்லாவிட்டால் இந்த படைப்புக்களுக்கான உரியவிலை கிடைக்காது இவ்வளவு பிரச்சனைகள் இருக்கில்லையா? அதனால் தான் வெளியிடுவதில் பிரச்சினைகள் இருக்கிறதே தவிர மற்றபடி ரசிகர்களுடைய ரசனையை குறைச்சு மதிப்பிடுவதாகாது.

05.பருத்திவீரன் ஒரு படைப்பாளியாக உங்களுக்குள் திருப்தியை தந்திருக்கிறதா?

நான் கொடுத்த அந்த சினிமா சரியான சினிமாவா இருக்கு என்பதில் எனக்கு மாற்றுக் கருத்துகள் கிடையாது. ஒரு படைப்பாளியாக நான் அந்த சினிமாவை பருத்திவீரனை முழுமையாக நான் நினைத்தது மாதிரி எடுத்திருக்கனா என்றால் இல்லை. ஏன்னா என்ன யோசித்தேன் அதில் என்னத்தை வெளிப்படுத்திருக்கிறேன் என்பது ரசிகருக்குத் தெரியாது அவர்கள் வெளியிடப்பட்ட பிரதியை மட்டும் தான் பார்க்கிறார்கள். ஆனால் நான் என்ன யோசித்தேன் என்பது எனக்கு மட்டுமே தெரிந்த ஒரு விசயம் அல்லது ஒரு ரகசியம் அது.

06.அதைத்தான் கேட்கிறேன் அந்த வகையில் உங்களுக்கு திருப்பதியா?

அதில் எனக்கு திருப்பதின்னா ஒரு 70 சதவீதம் திருப்தி அவ்வளவுதான். 100 வீதம் நான் எதிர்பார்த்ததை 70 வீதம் அடைந்திருக்கிறென். ஒரு படம் வெளியே வந்ததற்கு பிறகு எத்தனை திருத்தங்கள் மனதில் தோன்றும். இதை இப்படிச் செய்திருக்கலலாமே அதை அப்படி பண்ணியிருக்கலாமே என்று தோன்றும் அப்படித் தோன்றுகிறவன் தான் படைப்பாளி. நோண்டிக் கொண்டே இருக்க வேண்டும். அந்த அனுபவம் ரசிகருக்கு கிடையாது ஏன்னா அவர்கள் பார்க்கும போது ரசிப்பார்கள் அவ்வளவுதான். அதனால் தான் சொல்கிறேன் முழுவதுமாக திருப்திப்பட்டுக் கொள்ள முடியாது எந்த ஒரு படைப்பாளியுமே அது என்ன படமாக இருக்கட்டும் முழுவதுமாக திருப்திப்பட்டுக் கொள்ளமுடியாது.
மற்றப்படி இந்த படத்தினுடைய மிகப்பெரிய வெற்றியே எனக்கு ஒரு பாரம். இப்பத்தான் முதல்படம் வேலைசெய்வது மாதிரியான எண்ணத்தை மனசில வைச்சிருக்கிறேன். எப்பவுமே அப்படித்தான் வச்சிருக்கிறேன்.

07.இந்தப்படத்தின் இசைபற்றிச் சொல்லுங்கள். கிராமியக் கதைகளுக்கான இசை அதை தமிழ் சினிமாவுக்கு கொண்டு வந்தவர் இளையராஜாதான். ஆனால் இதில் யுவன் அதையும் தாண்டி ஏதோ செய்திருக்கிறார் அதைப்பற்றி?

இளையராஜா ஒரு ஜீனியஸ் தமிழ் சினிமாவில் கிராமத்துக்கான அடையாளங்களை சரியான முறையில் வெளிப்படுத்தியவர் அவர்தான். ஒரு கிராமியம்னா எப்படி இருக்கணும் அதற்கான இசை என்றால் எப்படி இருக்கணும் என்பதெல்லாம் தமிழ்சினிமாவில் அவர்தான் விதைச்சு விட்டது. நான் அவருடைய படங்களை எல்லாம் பார்த்திருக்கிறேன். இருந்தாலும் எனக்குள்ள தோன்றியது இன்னும் கிராமிய இசை என்று ஒன்று இருக்கிறது. கிராமியப் படங்களுக்கான இசை அமைக்கப்பட்டிருக்கிறதே தவிர கிராமிய இசை என்று ஒன்று புறம்பாக இருக்கிறது. அது இன்னும் சினிமாவில் பயன்படுத்தப்படவில்லை என்று எனக்கு தோன்றியது. நான் அந்த இசையை எல்லாம் தேடி யுவன்சங்கர்ராஜாவின் கையில் கொடுத்தேன் யுவன் அதை அருமையாக பயன்படுத்தியிருக்கிறார் அவ்வளவுதான்.

08.பாரதிராஜா ஒரு இதழுக்கு பருத்திவீரன் படம் பார்த்துவிட்டு சொல்லியிருக்கிறார் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் அமீர் கிராமங்கள் குறித்த சில நல்ல விசயங்களையும் காட்டியிருக்கணும் என்று. ஏன் அப்படி? எலும்தோலுமான கிராமத்தை படமாக்கியது குறித்து சொல்லுங்கள்?

கேள்வியிலேயே இதற்கான பதிலும் இருக்கிறதே. கிராமத்தை அழகான கிராமமாக காண்பித்தார்கள், பாடலுக்கு பின்ணணியாக காண்பித்தார்கள் எல்லாமுமாக கிராமங்கள் காண்பிக்கப்பட்டு விட்டன. எலும்பையும் தோலையும் யார் காண்பிப்பது யாரும் காண்பிக்கவில்லை அதான் நான் காண்பித்தேன். அப்படி அந்த வறண்டு போன பூமியை எடுக்கவேண்டும் என்பதற்காக படத்தை தாமதமாக கொண்டு வரவேண்டிக் கூட இருந்தது. அந்த பூமி சில நாட்களில் அப்படி இருப்பதில்லை. விளைஞ்சு நிக்கிறது ஏதோ ஒரு ஆறு மாசம்தான். மத்தநேரம் எல்லாம் வறண்டு போய்த்தானே கிடக்கு. அப்ப அந்த வறண்ட பூமியைக் காட்டணும் இல்லையா? எல்லாமே பிரேமுக்கு அழகா பச்சைப்பசேல்னு அதை நான் காண்பிக்க முடியுமா நான் இதைத்தான் காண்பிக்கணும் என்று நினைத்தேன். என்னுடைய பூமியின் நிஜமான முகத்தை, நிஜமான மனிதர்களின் முகத்தை அதை அப்படியே பதிவு செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டே பதிவு செய்திருக்கிறேன். இதில் ஆட்சேபனை இருக்கிறது என்றால் இருந்து விட்டுப்போகட்டும். ஒவ்வோருவருடைய கருத்துக்கும் நான் பதில்சொல்ல வேண்டியதில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பீல் பண்ணுகிறார்கள் பாரதிராஜா சார் மேல எனக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. அவர் சில விசயங்கள் சொல்யிருக்காரு அது அவருடைய கருத்து. அவர் சொன்னதும் தப்புன்னு நான் சொல்லமுடியாது அதுக்காக அவர் சொன்னதெல்லாம் சரின்னும் சொல்லமுடியாது.

09.பருத்திவீரன் படம் துவக்கத்தில் அல்லது அதன்மையம் ஒரு சாதிச்சிக்கலை மையமாக வைத்து பின்னப்பட்டிருந்தாலும் இறுதியில் அது கரைந்து காணாமல் போய் ஒரு காதல குறித்த பிரச்சினையாக மாறிவிடுகிறது? அதைப்பற்றி சொல்லுங்கள்? ஒட்டுமொத்தமாக சினிமாவில் சாதி கையாளப்படும் முறை குறித்து என்ன சொல்லுகிறீர்கள்?

சாதி நம்ம வாழ்க்கையோட பின்னிப்பிணைஞ்சு கிடக்கு. நம்முடைய ரத்தத்துல நம்முடைய சதையில நம்முடைய மூச்சில நம்முடைய பேச்சில நம்முடைய உணர்வில எல்லாத்திலயுமே சாதி நம்மளோட ஒண்ணோட ஒண்ணா பின்னிப்பிணைஞ்சிருக்கு. நம்ப சமூகத்திலும் நம்மளிடத்திலும் இது இல்லேன்னு சொன்னா அது பொய். ஏன் பொய் சொல்லீட்டு வாழணும்னு நினைக்கிறீங்க? பள்ளிக் கூடத்துல கொண்டு போய் சேர்க்கணும்னு சொல்லும்போதே என்ன ஜாதின்னு கேக்கிறீங்க அங்கே ஆரம்பிக்கிது. தெள்ளத் தெளிவா கேக்கிறீர்கள் அல்லவா? ஜாதிச்சான்றிதழ் வாங்கியிருக்கீங்களா அப்படீன்னு எல்லாத்தையும் சமூகமும் அரசுகளும் சேர்ந்து எங்ககிட்ட கொடுத்துட்டு, இதெல்லாம் வேணும் உனக்கு வைச்சுக்க என்று சொல்லிவிட்டு, அப்புறம் அது சார்ந்த படங்கள் வரும்போது சாதியை முன்னிறுத்தி வராம என்ன செய்யும் அது வரத்தான் செய்யும்.

10.உங்களுடைய தனிப்பட்ட கருத்தென்ன அது சரி என்கிறீர்களா? இல்லை தவறு என்கிறீர்களா?

இது சரியா தவறா என்பதல்ல. சாதியை இப்ப இந்த ஜாதிக்காரர்கள் உயர்ந்தவர்கள் இந்த சாதிக்காரர்கள் தாழ்ந்தவர்கள் இவர்கள் தான் அறிவு பூர்வமானவர்கள் என்று சொல்ல முடியாது எல்லோருக்கும் எல்லாம் சொந்தம். அப்படி குறிப்பிட்ட ஒரு சாதியை முன்னிறுத்தி பண்ணினால்தான் தப்பே ஒழிய கதையோட ஓட்டம் போகணும் என்பதற்காக அங்கே சாதியைப் பயன்படுத்துவது தப்புன்னா முதலில் அது சமூகத்தில் இருந்து எடுக்கப்படணும். அதற்கு பிறகு திரைப்படங்களில் இருந்து ஆட்டோமட்டிக்கா வெளிய போயிரும். அதுல வைச்சுகிட்டு இதில இருந்து எடுங்க எடுங்கன்னா எப்படி எடுக்கமுடியும். சொல்லுங்க அதை எடுக்க முடியாது அது முன்னுக்கு பின் முரணாண விசயம் இல்லையா. ஒரு உண்மையை மறைச்சு எப்படி வேலை செய்யமுடியும் அது ஒரு கமர்சியல் சினிமால வேணுமெண்டா ஒன்றும் இல்லாமல் போயிரலாம். ஒரு யதார்த்த பதிவை செய்கிறபோது சொல்லித்தானே ஆகவேண்டியதிருக்கு . யதார்த்தமான பதிவைச் செய்யம் போது அது கட்டாயம் தேவைப்படுகிறது அங்கே அது இல்லாம சொல்லவே முடியாது.

11.திரைப்படங்களில் சாதி வரலாமா வரக்கூடாதா என்பதல்ல பிரச்சினை அது அணுகப்படும் விதம் குறித்துத்தான் கேட்கிறேன்?

பிரச்சினைக்கு தீர்வெல்லாம் நான் சொல்ல முடியாது. நான் எப்படி சொல்ல முடியும். நான் எங்களைச் சுற்றியிருக்கக் கூடிய பிரச்சினையை உங்க கண்ணு முன்னால கொண்டு வந்து வைக்கிறன் தீர்வை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள். இது சரியா தப்பா. கீழ் ஜாதிப் பெண்ணை திருமணம் செய்து கொள்வது சரியா தப்பா சரின்னு தோணிச்சண்ணா அது தான் தீர்வு. நான் இதைத்தான் செய்யணும் என்று ஒருத்தரிடம் போய் சொல்லமுடியாது. ரசிகனிடமே அந்த தீர்வை விட்டாச்சு. நம்மளைச் சுத்தியிருக்கிற பிரச்சினை ஒரு சின்ன விசயத்துக்காக எத்தனை வருசமா அடிச்சுக்கிறாங்க. 25 வருசமா சாதியை மனசில வைச்சுக்கிட்டு போராடிப்போராடி என்னத்தை கண்ட. சாதி சாதின்னு இழந்தது என்ன. உனக்கு சோறு போட்ட உன்னுடைய மச்சானை இழந்தாய். அவனை நம்பி வந்த ஒரு பெண்ணை இழந்தாய். இருவரும் பலியானார்கள் காலச்சக்கரத்தில அதுக்கப்புறம் இப்ப எதை இழந்தாய் அவர்கள் வயிற்றில் பிறந்த 20 வருசமாய் வளர்க்கப்பட்ட ஒரு பையனை இழந்தாய் உன்னுடைய மகளை இழந்தாய். எதை நீ ஜெயித்தாய் ஜாதி ஜாதின்னு மனசில போட்டு குழப்பிக்கொண்டு என்ன ஜெயித்தாய். இழப்புகளை மட்டுமே நாளுக்கு நாள் சந்தித்துக்கொண்டே யிருக்கிறாய் இதற்குப்பின்னால் உன் குடும்பத்தினரும் பலிகிறார்கள். நீ எதைக்கொண்டு போகப்போற சந்தோசத்தையா? துக்கத்தையா? எதை நீ இனிமே சுவாசிக்கப்போறாய்? எதை சாப்பாடா வைச்சிக்கப்போறாய் சாதியைவா? இத்தனையையும் தான் படத்தில் சொல்லியிருக்கிறேன் நீங்கள் தான் எடுத்துக்கணும். நான் தெள்ளத் தெளிவா கொண்டு வந்து உங்க கண்ணு முன்னால வைச்சிட்டன். ஜாதி ஜாதின்னு ஒருத்தன் போனான் அதனால வாழ்க்கையில் முன்னேறி இருக்கிறான் என்று நான் காண்பிக்கவில்லை அதனால் ஏற்பட்ட இழப்புகளை பதிவு செய்திருக்கிறன் பார்வையாளன் எடுத்தக்கொள்ள வேண்டும். இது வேணுமா வேண்டாமா?

12.அரவாணிகள் தமிழ்சினிமாவில் பயன்படுத்தப்படுவது பற்றி? உங்களுடைய படத்தில் பயன்படுத்தப்பட்ட விதம் பற்றி?

நான் அரவாணிகள் சார்ந்த படங்கள் நிறையப் பார்த்திருக்கிறேன். அவர்களைப் பயன்படுத்திய படங்கள் எல்லாமே பாடலுக்கு காமெடியா பயன்படுத்துவாங்க. நான் அவர்களை அவர்களின் வாழ்க்கையொடு ஒட்டியிருக்க கூடியமாதிரி அவர்களுடைய தொழில் சார்ந்து உபயோகப்படுத்தியிருக்கிறேன். அவர்கள் என்ன செய்கிறார்கள் அவர்களக்கு ஏது வருமானம் குறிப்பாக கிராமங்களில் இருக்கக் கூடிய அரவாணிகள். இந்தமாதிரியான கூத்துக்களுக்கும் ஆடல் பாடல்களுக்கும் திருவிழாக்களுக்கும் போய்த்தான் அவங்கள் வந்து பிழைப்பு நடத்திக்கொண்டு இருக்கிறார்கள் மத்தபடி அவர்களுடைய வாழ்க்கை என்று ஒன்று தனியாக இருக்கிறது. அதை நான் வேறொரு காலகட்டத்தில் பதிவு செய்வேன். ஆனா இப்ப வந்து இந்தப்படத்தில் அவர்களை அவர்கள் தொழில் சார்ந்து பயன்படுத்தியிருக்கிறேன். எந்த மாற்றமும் இல்லாமல் அதில் கலப்படமெல்லாம் கிடையாது. கலப்படமில்லாம கொடுத்திருக்கன் அதால அதில எந்த தப்பும் கிடையாது அல்லது தோணல. திடீர்னு ஒரு பாட்டுக்கு கொண்டு வந்து திணிக்காம அந்த கிராமத்திலயே அவங்களும் இருக்காங்க அந்தப்பக்கம் திருவிழா நடக்கும்போது இருக்காங்க இந்தப்பக்கம் இன்னொரு திருவிழா நடக்கும்போது இருக்காங்க என்னுடைய படத்தில் அவர்களுடைய இயல்போட இருக்காங்க அதனால தப்பா தோணாது. நிஜம் எப்பொழுதும் தோற்பதில்லை.

இந்தபேட்டி அப்பால் தமிழ் இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது