சாத்தானின் காதலி

Posted by த.அகிலன் on Feb 7th, 2009
2009
Feb 7

காதல் எப்போதும் தனக்கான நியாயங்களைக் கொண்டிருக்கிறது. உலகத்தின் நியதிகளைச் நீர்த்துப்போகச் செய்யவும் தனக்கான விதிகளை எழுதிக்கொள்ளவும் காதலால் முடிந்திருக்கிறது. காதலின் அழகான முடிச்சுக்கள் விழுகின்ற இடங்கள் நம்பமுடியாதவை சிலசமயங்களில் அதிர்ச்சிகளைத் தரவல்லவை.
காதல் நேசித்துக்கொண்டிருக்கிறது.. தன்னைத்தானே. எந்த எதிர்பார்ப்புகளுமற்று ஒரு கடைக்கண் பார்வையையோ அல்லது சின்னப்புன்னகையைத்தானும் பரிசளிக்காத காதலியின் பின்னால் அலைந்துகொண்டேயிருப்பான் ஒருத்தன்… தன்னைச் சட்டைசெய்யாது.. வேறுயாரோ ஒருத்தியின் பின்னால் அலைந்துகொண்டிருக்கும் ஒருத்தனிடம் காலம் முழுதும் தன்னை நிராகரிக்கிற ஒருவனிடம் தன் மொத்தஅன்பையும் கொட்டிக்கொண்டிருப்பாள் இன்னொருத்தி.

alfred-gockel-shades-of-love-lav-1.jpgஆனால் இந்த உலகமே ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து நின்று வெறுத்துக்கொண்டிருந்த ஒருவனை. “கடவுளே இவன் சாத்தான் இவனைக்கொன்றுவிடு” என்று லட்சக்கணக்கானவர்கள் அவனது மரணத்தை வேண்டி இறைவனிடம் பிரார்த்திக்கும்படி நடந்துகொண்ட ஒருத்தனை. மனிதர்களை வெறும் எண்களாக்கி அவர்களைப் பட்டியலிட்டு தினமும் கொன்றுகுவித்துக்கொண்டிருந்த அவனை எந்தத் தயக்கமும் இன்றி தான் சாகும் வரைக்கும் நேசித்துக்கொண்டிருந்தாள் ஒரு தேவதை.
அந்தச் சாத்தான் ஹிட்லர் அந்தத் தேவதை ஈவா பிரௌன்..
யூதர்களின் கனவுகளில் கொலைவாட்களோடு அலைந்த அதே ஹிட்லர்; ஈவாவின் கனவுகளைப் பூக்களால் நிறைத்தான்…  அதிகாரத்தின் போர்வைக்குள் இறுக்கமான பல வேடங்களைப் போர்த்தியிருந்த ஹிட்லரின் மனசுக்குள் ஒரு பூஞ்சோலை இருப்பது ஈவாவுக்கு மட்டுமே தெரியும். உலகமே அ;சசத்தோடு பார்த்த மனிதனை ஈவா தன் கண்களில் வழியும் காதலோடு பார்த்தாள். சிலவற்றுக்குக் காரணங்கள் கூடத்தேவையில்லை ஹிட்லர் என்கிறமனிதனிடத்தில் இருந்து எதையுமே அவளது காதல் யாசித்ததில்லை..
அந்தத் தேவதையின் காதல் அதிகமான அசாத்தியங்களைக் கொண்டிருந்தத. ஹிட்லரின் 40 வயதில் 17 வயதான ஈவாபிரவுணை தன் நண்பரின் போட்டோ ஸ்ரூடியோவில் வைத்து சந்திக்கிறார் ஹிட்லர் தன்னைவிட 23 வயது பெரியமனிதரை 17 வயதேயான ஈவா நேசிக்கஆரம்பிக்கிறாள். இந்தப் பிரபஞ்சத்தின் அற்புதமான காதல் முடிச்சொன்று அந்தக்கணத்தில் விழுகிறது. அதுதான் காதல். எதிர்பார்ப்புகளற்ற பிரியம் ஒன்றையே அது யாசிக்கிறது. நீ சிவப்பா, கறுப்பா, நெட்டையா, குட்டையா, ஒல்லியா, தடிமனா, காந்தியா, கோட்சேயா, இதெல்லாம் சிந்தித்துக்கொண்டிருக்கவில்லை.. அது நிகழ்ந்துவிடுகிறது அதுவாகவே. ஈவாவிடமும் அது நிகழ்ந்தது. உலகத்தை அச்சப்படுத்திய ஹிட்டலரின் விழிகள் ஈவாவிடம் மண்டியிட்டன.. அவள் பிரியத்தை யாசித்தன. எல்லையற்ற நிபந்தனைகள் ஏதுமற்ற தன் முழுப்பிரியத்தையும் அவள் அவனுக்கு வழங்கினாள். அதிகாரத்தின் போதையிலிருக்கிற ஒரு மனிதனின் அந்தரங்கம் என்பது ஒரு இருண்டகுகைவெளி மட்டுமல்ல அது மலர்வனங்களையும் கொண்டிருக்கிறது என்பதை ஈவா கண்டுபிடித்தாள்..
அவள் ஹிட்லரிடம் எதையுமே யாசித்தாளில்லை. தன் பிரியத்தின் விலையாய் அவள் ஜேர்மனியைக்கூடக் கேட்டிருக்கலாம். அப்படி அவள் செய்திருப்பாளானால் பல பேரசர்களின் வீழ்ச்சிகளின் பின்ணணியில் ஒழிந்துகொண்டிருக்கும் அழகிகளின் விழிகளில் அவளுடையதும் ஒன்றாகியிருக்கம். அவள் ஆனால் அவள் காதலின் புனிதங்களை நம்புபவளாயிருந்தாள். எதிர்பார்ப்புகள் ஏதுமற்ற நிர்பந்தங்கள் ஏதுமற்ற தூய்மையான அன்புஇதயமொன்றே அவளிடம் இருந்தது. ஹிட்லரிடம் அவள் மனைவி என்ற அந்தஸ்தைக்கூட எதிர்பார்த்தவளில்லை அவளது காதல் வலையில் அவனது இயல்புகளைச் சிக்கவைக்க அவள் முயன்றதில்லை ஹிட்லரை அவனாகவே இருக்க அவள் அனுமதித்தாள்.
இரண்டாம் உலகப்போர் இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது. பேர்லின் நகர வீதிகளில் ர~;யப்படைகளின் வாகனத்தடங்கள் பதியத்தொடங்கிவிட்டன. ஹிட்லரின் தலைமையகம் இருந்த சுரங்க மாளிகை தோல்வியின் செய்திகளால் நிறைகிறது. ஜேர்மனி வீழ்ந்துவிட்டது என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். ஹிட்லர் தன் நண்பர்களை நெருக்கமானவர்களை அழைத்தான். வெளியேற விரும்புபவர்கள எதிரிகளிடம் சிக்காமல் பேர்லினை விட்டு வெளியேறுங்கள் என்று சொன்னான். ஈவாவிடமும் கூடத்தான். தன் வாழ்நாளின் மிகமோசமான தோல்வியின் துயரம் தாழாமல் துடித்துக்கொண்டிருக்கும் ஹிட்லரின் விழிகளை ஈவா பார்த்தாள். அந்த விழிகளில் ததும்பிக்கொண்டிருந்த ஒரு சாம்ராஜ்யத்தோல்வியின் துயரத்தை துடைத்துவிடுகிறவள் போல ஹிட்லரின் கண்களுக்கு ஆறுதளித்தது அவள் பார்வை. பின் அவள் தன் உதடுகளால் சொன்னாள் வெகு நிதானமாக “நான் மரணத்திலும் உங்களோடிருக்கவே விரும்புகிறேன்.” ஹிட்லர் அந்தக்கணத்தில் தன்மீது கவிந்த அந்தத்தேவதையின் பெரும்பிரியத்தை சுமக்கமுடியாமல் திணறினான். உயிர் தப்பும் வழிகள் ஏதுமில்லை என்பதைச் சர்வநிச்சயமாகத் தெரிந்துகொண்ட பின்னாலும் தன்னைநேசிக்கிற ஒருத்தியின் பெரும்பிரியத்திற்குப் பதிலளிக்கும் வார்த்தைகள் ஏதுமற்றவனாய். தன் நண்பர்கள் முன்னிலையில் அதிகாரிகள் முன்னிலையில் அவளை முத்தமிட்டான் அந்த ஒற்றை முத்தம் அந்த இரும்மனிதனுள் உருகிவழியும் ஓர் காதல் இதயத்தின் ஆயிரம் வார்த்தைகளை ஈவாவுக்குச் சொல்லியது..
இப்போது மரணத்தின் கண்களால் கண்காணிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஹிட்லர் என்கிற மனிதனுக்குள் இருக்கிற காதலன். தன் காதலியைக் கௌரவிக்க விரும்பினான். தன் வாழ்நாளில் தன்னை நேசித்த என்றைக்கும் யாராலும் எதனாலும் பிரதியிடமுடியாத அன்பைப் பரிசளித்த தன் பரியசகிக்கு தன்னுடைய மனைவி என்கிற அந்தஸ்தை அளிக்கவிரும்பினான். அவளது பிரியத்தின் எதிரில் தான் அளிக்கவிருக்கும் மனைவி என்கிற அந்தஸ்து ஏதுமற்ற ஒரு வெறும் சடங்கு என்பதை அவன் அறிவான் ஆனால் அவனால் அவன் அப்போதிருந்த நிலையில் அவளுக்கு அளிக்கமுடிந்த ஒரே பரிசு அதுதான். அதுவே அவளது காதலை பூரணப்படுத்தும் ஒன்றென்று ஹிட்டலர் நம்பினான்.
ஏப்ரல் 29 ஹிட்லருக்கும் ஈவாபிரௌனுக்கும் சட்டபூர்வமான திருமணம் ஹிட்லரின் சுரங்க மாளிகையில் நடந்தது. உலகத்திற்கு ஹிட்லரின் காதலியாக அறியப்பட்டிருந்த ஈவா என்கிற தேவதை திருமதி ஹிட்லரானாள். ஏப்ரல் 30 தன் வாழ்நாள் முழுதும் எவனுக்காகப் பிரியத்தைப் பொழிந்தகொண்டிருந்தாளே அவனது மரணத்தைக் காணச்சகியாதவளாய்.. அவனுக்கு முன்பாகவே சயனைட் வில்லைகளை சாப்பிட்டு ஈவா மரணித்தாள். அதன் பிறகு ஹிட்லரும் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறந்தான்.. எல்லாம் நிகழந்தபின் ஹிட்லரின் அறைக்குள் நுழைந்த காவலர்கள்.. ஹிட்லரின் காலடியில் புன்னகைத்தபடி இறந்துபோயிருந்த ஈவாவைக் கண்டார்கள்.. பின்னர் அவர்கள்..அந்தக்காதலர்களை ஒன்றாகத் தீயிட்டு எரித்தனர். எதிரிகளின் கையில் தன் சடலமோ காதலியின் சடலமோ கூடச் சிக்கிக்கொள்ளக் கூடாதென்கிற ஹிட்லரின் ஆணையின் படி. 3 மணிநேரம் எரிந்து சாம்பரானது அவர்களின் உடல்கள்.
ஆனால் ஈவாவின் காதலை அதன் பிறகு உலகம் வியந்தது. விதிகளிற்குச்சிக்காமல் விதிவிலக்காக வீழ்ந்த காதலின் அற்புதமான முடிச்சுகளின் ஒன்று ஈவாவின் காதல். அவளது காதல் வாழ்ந்துகொண்டிருக்கிறது இன்னமும்.. ஹிட்லர் மீது அவள் கொண்டிருந்த காதலின் புன்னகை ஒன்று இன்றும்கூட உயிர்வாழ்கிறது ஹிட்லர் ஈவாவை வரைந்த ஓவியமொன்றின் வடிவில்..

காதலின் சிறைக்கைதி…

Posted by த.அகிலன் on Feb 5th, 2009
2009
Feb 5

உலகத்தின் அழகான வார்த்தைகள் ஒருவனிடம் மண்டியிட்டுக்கொண்டிருந்தன. என்னையும் உன் காவியங்களில் சேர்த்துக்கொள் என்று அவனிடம் கெஞ்சின. பெண்கள் அவனது வார்த்தைகளிடம் அடிமையாயிருந்தனர். வார்த்தைகள் அவனிடம் அடிமையாயிருந்தன. முறிந்த சிறகுகள் என்கிற தன் காதல் காவியத்தை கலீல்ஜிப்ரான் உலகத்திற்குக் கொடுத்தார். அந்த அளப்பெரிய காதலனுபவத்தை ஜிப்ரானுக்கு பரிசளித்தவள் அவனது செல்மா.

ஜிப்ரான் தன்னுடைய பதினெட்டாவது வயதில் தன் தந்தையின் ஆத்ம நண்பரான பாரிஸ் எபாண்டி கராமி என்பவருடைய செல்ல மகளாக செல்மாவைச் சந்திக்கிறான். முதல் பார்வையில் அந்த ஆன்மாவை உருக்கும் காதல் பிறந்துவிடுகிறது. தன்னுடைய இன்னொரு பாதியைக் கண்டுகொண்டதாக ஜிப்ரானின் மனம் கூத்தாடியது. செல்மா பேரழகி. இவளுடைய அழகை எந்த ஓவியனாலும் முழுமையாகப் பிரதிசெய்துவிடமுடியாது அவ்வளவு அழகு அவள். ஜிப்ரான் செல்மாவைச் சினேகிக்கத் தொடங்கினான். செல்மாவும்..

எப்போதும் காதலுக்கு அந்தஸ்து எதிரியாகவே இருக்கிறது. காதலுக்கு மட்டும் விதவிதமான எதிரிகள். சிலசமயங்களில் காதலர்களே காதலின் எதிரிகளாகிவிடுகிறார்கள். பேரழகியும் பணக்காரியுமான செல்மாவை அடைந்துவிட நிறையப்பேர் துடிக்கிறார்கள். அவர்களுடைய தூக்கத்தையெல்லாம் செல்மா கெடுத்துக்கொண்டிருக்கிறாள். ஆனால் செல்மாவின் கனவுகளில் ஜிப்ரான் அலைந்துகொண்டிருந்தான்.

இந்தக் காதலுக்கு வில்லன் ஒரு பாதிரியார் வடிவத்தில் வந்தான். கழுத்தில் சிலுவையும் மனசுள் அழுக்கையும் சுமந்துகொண்டிருக்கும் பாதிரி. தன்னுடைய மருமகனுக்கு செல்மாவை மணமுடிப்பதன் மூலம் அவனைப் பெரும் பணக்காரனாகவும் அழகியின் கணவனாகவும் மாற்றி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம் என்று திட்டம் போட்டான்.

செல்மாவின் தந்தையை வார்த்தைகளால் மயக்கி அந்தத்திருமணத்தை நடத்தியும் முடித்துவிட்டான். காதலின் வெளியில் சுதந்திரமாக மிதந்துகொண்டிருந்த செல்மாவினதும் ஜிப்ரானினதும் சிறகுகள் முறிந்து விழுந்தன. செல்மாவின் தந்தை கடுமையாக நோயுற்றிருக்கையில் இந்தத் திருமணம் நடந்தது. அதற்கு முன்பாக ஜிப்ரானை அழைத்த செல்மாவின் தந்தை “ஜிப்ரான் என்னை உன் தந்தைபோலவும் செல்மாவை உன் தங்கையைப்போலவும் நேசிக்கவேண்டும்” என்று சொன்னார். ஜிப்ரான் தன் காதலை உள்ளே ஒழித்து வைத்துக்கொண்டு புன்னகை புரிந்தான்.
ஜிப்ரானின் பிரியத்துக்குரிய செல்மாவின் இல்வாழ்க்கை பூத்துக்குலுங்கவேண்டும் என்று அவன் பிரார்த்தித்தான்.

ஆனால் அவனுடைய ஒப்பற்ற மலர் வாடிவதங்கியது. செல்மாவின் கணவன் நாள் முழுதும் மதுவிடமும் மாதர்களிடமும வசமிழந்து கிடந்தான். தன் இனிய காதலியின் வாழ்வின் துயரங்களில் எல்லாம் அவளுக்கு துணையிருந்தான் ஜிப்ரான். திருமணத்திற்குப்பின்பும் அவளைச் சந்தித்து அவளுக்கு ஆறுதலாயிருந்தான் எல்லையற்ற தன் நேசத்தை அவளுக்கு வழங்கினான். தன்னுடைய இதயத்தை அவளுடைய துயரங்களின் கல்லறையாக மாற்றினான்.

ஆனால் விதி எல்லாவற்றையம் விட வலியது. திருமணத்திற்குப்பிறகு ஜிப்ரானைச் சந்திக்கக் கூடாதென்று செல்மாவுக்கு தடை விதிக்கப்பட்டது தனது மனதுக்கு ஆறதலாக இருந்த ஒரே ஒரு ஆத்ம நண்பனை காதலனையும் இழந்து செல்மா துன்பத்தில் உழன்றாள். கருவுற்றிருந்த செல்மா தன் குழந்தையின் மழலைச் சொல்லாவது தன் துயரங்களினின்றும் தன்னை விடுவிக்கும் என்று நம்பினாள்.

குழந்தை பிறந்து தன் தாயின் கண்களை ஒரு முறை பார்த்தது. இந்த உலகத்தின் பேரன்பு முழுவதையும் தன் குழந்தைக்காக வைத்துக்கொண்டிருந்த செல்மா தன் மகனை முத்தமிட்டாள். ஆனால் அந்தக் குழந்தை அதுவே அவனது தாயைப் பார்த்த கடைசித் தடைவை தனது தாய் இந்தப்பூமியின் தன்பெயரால் துன்பப்படகூடாது என முடிவு செய்தவனைப்போல அந்தக் குழந்தை இறந்து போயிற்கு ஒரு கறுத்தநாளில். தனது மகனின் இறந்து போன உடலை முத்தமிட்டபடி செல்மா சொன்னாள் “மகனே நீ என் துயரங்களை போக்க வந்தவன் துயரங்களில்லா தேவதைகளின் நகருக்கு என்னை அழைத்துச் செல்ல வந்தவன்” அந்த வார்த்தைகளே செல்மாவின் இறுதி வார்த்தைகள். தன்னுடைய பிரியமான காதலனும் தனக்கு கிடைக்காமல் மகனும் கிடைக்காமல் உயிர்வாழ விரும்பாத செல்மா மரித்தாள்.

செல்மாவின் கணவன் அவளது மரணத்தின் போதும் குடித்துக் கும்மாளமிட்டான். மணப்பெண்போல் அலங்கிரிக்கப்பட்ட செல்மாவின் உடலை கல்லறைத்தோட்டத்திற்கு ஜிப்ரான் எடுத்துச் சென்றான். அவளுடைய குழந்தையை அவளுடைய உள்ளங்கைகளிலேயே வைத்தான். (தாயின் கரங்களே குழந்தையின் சவப்பெட்டியானது என்று எழுதுகிறான் ஜிப்ரான் பின்னர்) தனது பியம் முழுவதுமே மண்ணில் புதைந்துபோவதை ஜிப்ரான் பார்த்தான். இனி என்றைக்குமே தனது முறிந்த சிறகுகளால் பறக்கவியலாது என்பதை அவன் உணர்ந்தான்.

அவன் சொல்கிறான்….

ஓ பெய்ரூட் நகரில் சிதறிக் கிடக்கும் என்து இளம் பருவத்து நண்பர்களே
பைன் மரக் காட்டினருகே அமைந்துள்ள அந்த சமாதியைக் கடந்துசெல்லும் போது அதன் அருகே அமைதியாய் மெல்ல நடந்த செல்லுங்கள்
உங்கள் காலடியோசைகள் இறந்தவரின் ஆழ்நத் உறக்கத்தை கலைத்து விடக்கூடாது.

செல்மாவின் சமாதியின் முன்னால் அடக்கமாக நில்லுங்கள்
அவள் உடலை மூடியிருக்கும் மண்ணை வாழ்த்துங்கள்
என்பெயரை ஆழ்ந்த பெருமமூச்சுடன் உச்சரித்துவிட்டு
தனக்குத் தானே இப்படிச் சொல்லுங்கள்

காதலின் சிறைக்கைதியான கடல்கள் கடந்து வாழும்
ஜிப்ரானின் எல்லா நம்பிக்கைகளும் இங்கே தான் புதையுண்ட கிடக்கின்றன.
இந்த இடத்தில் தான் அவன் தனது மகிழ்ச்சியை இழந்தான்
இங்கே தான் அவன் கண்ணீர் வற்றிப் போயிற்று
இங்கே தான் அவன் தனது சிரிப்பை மறந்து போனது.

வாழ்நாள் முழுதும் தன் செல்மாவைக் காதலித்துக்கொண்டிருந்த கலீல் ஜிப்ரான் அவளது கல்லறையில் எதிரில் சொல்லிய வாசகங்கள் இவை. என்றைக்கும் தீராக்காதல் அவனுடையது.

நன்றி: மல்லிகை மகள் பிப்ரவரி இதழில் வெளியான எனது ஒரு காதலன் ஒரு காதலி கட்டுரையியில் இருந்து ஒரு பகுதி.

காதல் சிலுவையில் 05

Posted by த.அகிலன் on Oct 6th, 2008
2008
Oct 6

இன்றைக்குப் பெய்த மழையும் உன் முத்தங்களை நினைவூட்டிற்று.. என்னால் உன்னைப் போல் சலனமற்றிருக்க முடியவில்லை.. நீ கலைத்துவிட்டுப்போன எனது வசிப்பிடம் ஒழுங்கற்றுகிடக்கிறது.. நான் என் பிரியங்களையெல்லாம் ஒன்று திரட்டி உனது திசைகளில் ஏவினேன்.. ஒய்ந்த மழையின் பின் சொட்டிக்கொண்டிருக்கும் இலைகளின் துளியைக் கைகளில் ஏந்திக்கொள்ளுகையில் உன் குரலின் ரகசியங்கள் அதில் ஒளிந்துகொண்டிருப்பதாய் படுகிறதெனக்கு.. நீ ஒரு குட்டிப்பெண்.. சில சமயம் அம்மா..  என் திசைகளில் படர்ந்த இருள் நீ விலக்கியது. இப்போது கவிந்திருப்பதும் நீ அளித்ததே..
நீ வெளியேறியபின்.. நான் உன்னை நினைவூட்டும் எல்லாவற்றையும் வெளியேற்ற எண்ணினேன். அப்போதுதான் இந்த பூமியின் எல்லாமே உன்னை நினைவுறுத்த வல்லதென்றறிந்தேன்.. எதையும் வெளியேற்ற முடியவில்லை உன்னையும். நீ ஏகிய திசைகளைக் காத்துக்கிடந்தேன்.. உன் புன்னகையை நினைவிருத்தி நினைவிருத்தி ஒரு ஓவியம் செய்யஎண்ணியிருக்கிறேன்.. பிரிவின் குருரம் வழியும் அந்த வெளிறிய ஓவியத்திலும் உயிர்ப்புடனிருக்கிறது உனது புன்னகை..

இந்த உலகத்தில் போதையற்றது எது வெற்றி போதை,  புகழ் போதை பணம் போதை போதைக்குள் சிக்கிக்கொண்டிருக்கிறது உலகம்.. உலகம் விரும்புவதும் கூட அதைத்தான்.. நானும் உன்னில் போதையாயிருந்தேன்.. அது காதல் போதை.. உன் பிரியத்தின் வார்த்தைகளில் கிறங்கிக் குழந்தையாய்க் கிடக்கிறபோதை.. தாலாட்டுக்கேட்காமல் தூங்கமறுக்கும் குழந்தையைப்போல உனது பிரியங்கள் இல்லாத ஒரு கணப்பொழுதின் வெறுமையைத் தாங்கிக்கொள்ளவியலாமல்.. நான் பரிதவிக்கிறேன்.. நான் இனிமேல் அதை எங்கேயும் பெறமுடியாது அதைத் தரக்கூடியவள் நீ நீ மட்டுமே.. நான் ஒரு ஆடு.. பலியிடக்காத்திருக்கிற ஆடு.. உனது புன்னகையின் பின்னால் ஒழிந்திருக்கும் விசமத்தின் கொடுவேர்களைக் கண்டு கொள்ளத் திராணியற்றவனாகிக் புன்னகைக்கும் தொழிநுட்பம் வாய்க்கப்பெறாமல்;.. அழுது கொண்டிருப்பவன் தன்னிரக்கமும் இயலாமையும் மேலிட..
நீ சலனமின்றி வெளியேறினாய். பிரிவின் சொற்களை அனாசயமாய் அள்ளிஇறைத்தபடி.. நான் காத்துக்கிடந்தேன்.. நீ வரும் திசைகளை நோக்கிக்கொண்டு.. அம்மாவின் வியர்வை படிந்த கரங்களுக்குள் பொத்திவைத்து எடுத்துவரப்போகும் மிட்டாய்க்கு காத்திருக்கும் ஒரு குட்டிப்பையனைப்போல நீ எனக்கான பிரியத்தை எடுத்து வருவாய் எனக்கனவுகள் கொண்டிருந்தேன்.. நீ குறு வாட்களை எடுத்துவந்தாய்.. எனது கனவுகளைக் கிழித்தபடி உன்னோடு போயின அவை.. நான் உன் அடிமை என்னை எடுத்துச்செல் என்றுகதறினேன்.. நீ புன்னகைத்தபடி கடந்தாய்.. வழிகளில் மிதியுண்ட என் பிரியத்தின் சொற்களை புறங்காலால் விலக்கியபடி நெடு வழி நடந்தாய்.. கடைவாயில் வழிந்த ஏளனத்தின் கொடுந்தீயில் பற்றி எரிகிறதென் பிரியம்.. நான். அப்போதும் பூச்செண்டுகளைப் பரிசளித்தேன்.. நீ பூக்கள் சூடுவதில் இப்போதெனக்குப் பிரியமில்லை என்றாய்.. சரி உனக்குப் பிரியமானதைச் சொல் செய்கிறேன் என்றேன்.. உண்மையில் நான் எல்லாவற்றுக்கும் தயாராய் இருந்தேன்.. எல்லாவற்றுக்கும்…  ஆனால் நீயோ நான் செய்வதெதுவோ அது உனக்குப்பிரியமானதாய் இருக்காதென்பதில் உறுதியாய்..இருந்தாய்..
வெறும் ஆய்வுகூடப் பரிசோதனைக் குழாய் போல என்னை ஆக்கி அன்பை ஊற்றிநிரப்பி என்னவாகிறேன்.. என்று பரிசோதித்து விட்டு கழுவிக்காயவைத்துவிட்டு வெளியேறினாய்  நீ. வெளியேறிப்போனபின்பும் நான் எதிர்வினைகள் ஆற்றிக்கொண்டிருந்தேன்.. உனது குறிப்பேடுகளில் எழுதிக்கொள்.. அன்பின் எதிர்வினைகள் ஆயுளுக்கானவை அவை நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது முடிவிலிக்காலம் வரை.. என்று..

புதியகாலைகளும் பழையநினைவுகளும்..

தினமும்
புதிய காலைகளை
எதிர் கொள்ளவேண்டியிருக்கிறது
பழைய நினைவுகளுடன்..

இன்றைக்கும் மழை
உன்னிடம்
என் பிரியத்தை சொன்ன அன்றைக்கு
பொழிந்ததைப்போலவே பொழிகிறது.
மழையிடம் மாறுதல்கள் கிடையாது..

இலையின் முதுகில்
ஒழிந்திருக்கும்
பனித்துளியைப்போலப்
பதுங்கிக் கிடக்கிறது
என் துயரம்
சூரியனால் எடுத்துச்செல்ல முடியாதபடி

காதல் சிலுவையில் 04

Posted by த.அகிலன் on Sep 28th, 2008
2008
Sep 28

இதுவரை எழுதாத
சொற்கள் கொண்டவொரு கவிதையை
எழுதும் என் பிரயத்தனங்களை
ஏளனம் பொங்கப் பார்த்துக்கொண்டேயிருக்கிறாய் நீ
என்னுடைய வார்த்தைகளையெல்லாம்

அடிமைசெய்து வைத்துக்கொண்டு.

கூரையில் நிரந்தரத் தாளமெனப் பொழிந்து கொண்டிருந்துவிட்டு சட்டென்று நின்று போன மழையைப்போலப் போய்விட்டாய்.. உதிர்ந்து கிடக்கிற கொண்டல் பூக்களை இணைத்துக் கோலங்கள் செய்தபடி காத்திருக்கிறேன் நான்.. நீ வரும் திசைகளின் புகார்கள் விலகுவதாயில்லை. சில கவிதைகள் நினைவுக்குள் அலைந்தன. உன்னை நினைவூட்டும் பொருட்கள் இத்தனை தானென்ற என் வரையறைகள் சிதறிய இக்கணத்தில் நான் உணர்ந்து கொண்டேன். இங்கே எல்லாமே உன் நினைவுகளால் ஆனதென்றும். நான் உன்னால் ஆனவனென்பதையும்….

மழை ஓடிய வழித்தடங்களில் திசையற்றுக் கரைந்து போயிருந்தது உன் கால்தடங்கள். மனசுக்குள் மிதக்கிற உன் ஒற்றை ஓவியத்தில். உறைந்து போய்க்கிடக்கிறது மழையும் எனக்கழித்தபழைய புன்னகைஒன்றும். அவநம்பிக்கைகளால் செய்யப்பட்டிருந்த எனது நாட்களையும் வார்த்தைகளையும் தத்தெடுத்துக்கொண்ட உன் புன்னகை ஒரு வானவில்லைப்போலத் திடீரென்று மறைந்தது.. நீ கொடுத்த நம்பிக்கையின் குற்றுயிரில் நான் மறுபடியும் ஒரு வானவில்லைச் செய்வதற்கான வர்ணங்களைச் சேகரிக்கலானேன்.. வானவில்லை உன்னைப்போல தேவதைகள் மட்டுமே செய்யமுடியும் என்னைப் போல சாதாரணனுக்கு உன் பிரியமே வாய்க்காத போது எங்கனம் வானவில் செய்தல் வாய்க்கும்..

உனது உயரங்களை எட்டமுடியா என் நினைவுகள் நெருக்க நான் உன் புன்னகையில் தூரிகையைத் தொட்டுக் கொண்டு ஒரு ஓவியத்தை வரையத் தொடங்கினேன்.. நீ அவ் ஓவியத்தின் மீது நீரள்ளி ஊற்றுகிறாய். கரைந்தென் காலடியில் ஒழுகும் வண்ணங்களில் எது என் கண்ணீர். பிரித்தறிய முடியாதபடிக்கு பெருகிஓடுகிறது வண்ணங்கள்.. துயரத்தின் வண்ணங்களாகின அவை..

ஒரு மதுக்கோப்பையின் வண்ணங்கள் கொண்டதா காதல்.. ஒளியில் மினுங்கும் இந்தத் திராவகத்தினுள் உறைந்திருக்கிறது உன் பிரியம்.. நான் ஆசையோடு பருகத்தொடங்குகிறேன்… அது உன் பிரியப்போலியெனத் திடுக்கிடும் மனம் வீரிட்டலறுகிறது.. இத்தனிமையைச் சபித்தபடி.. மதுவாலும் உன்னை வெல்லமுடியாதொரு கணத்தில்.. மது தோல்வியுற்ற ஒரு மனிதனின் குற்றவுணர்வுகளோடு நீங்கிப்போயிற்று.. உனது இருப்பிடங்களைக் காலிசெய்யமுடியாமல்.. உனது நினைவுகளை உக்கச் செய்யமுடியாமல்.. அவமானமும் வெட்கமும் மேலிட மது தோற்றுப்போய் வெளியேறியது… குடிப்பதில் எந்தப்பயனுமில்லை எனத் தெரிந்துகொண்ட ஒருநாளில் உபயோகித்த மதுக்கிண்ணங்களை நொருக்குவதில திருப்திகொள்கிறது மனம்… நொருங்கித் தெறிக்கும் கண்ணாடிச்சில்லுகளில் கிழிந்து தொங்குகிறதென் தனிமை.. எனக்கண்ணாடிச்சில்லொன்றை எடுத்து எனக்குள் பதுங்கிக்கொண்டிருக்கும் உன்னைத் தோண்டி எடுத்துவிடலாமென்றிருக்கிறேன்..

எப்படி உன்னை வெளியெற்றுவது.. உனது நினைவுகளைப் பிரித்துவைக்கத் தொடங்கியபோதுதான் உணர்ந்தேன்… நீயற்ற ஒரு நினைவு எனக்குள் இல்லை என்பதை..

கண்ணீர் ஒரு துரோகி தனிமையில் துணைக்குக்கிளம்பிவிடுகிறது.. நான் தனித்திருக்க விரும்புகிறேன். நான் உனக்கும் நீ எனக்குமாய் அள்ளியிறைத்த வார்த்தைகள் சொரிந்து கிடக்கிறது எதிரில்.. பிரியமான நமது காதல் தீனமான குட்டி நாயின் பதுங்கலோடு பார்த்தபடியிருக்கிறது.. நான் உன்னைக் கெஞ்சுகிறேன். அதைச் சாகவிட்டுவிடாதே என்று.. நீ குரூரம் வழியச்சிரிக்கிறாய்.. இன்னமும் பதுங்கி ஒழித்துக்கொள்கிறது அது.

 

இப்போது நான் என்ன செய்வது? உனை வெளியேற்றும் வழிகள் அனைத்தும் தோற்க… நிர்க்கதியாய் நின்றேன் காலத்தின் எதிரில்.. வா உனது மயக்கும் புன்னகையில் எனது உணர்வுகளை மங்கச் செய்து எனது உடலைக்கீறிப்பிளந்துனது நினைவுகளை எடுத்துப்போ..
கோழிகூவித்தூங்கின நாட்கள்/விளிம்புகள் மழுங்கிய உனது குரல்

  

• உனது பிரியத்தின் வாசனை
மடித்து வைக்கப்பட்டிருக்கும்
றங்குப்பெட்டியின்
உட்சுவரில் ஒட்டப்பட்டிருக்கும்
கத்தரிக்கப்பட்ட கவிதைகள்
யாருடையவை?

• ஒரு
உடைந்து போன நிலவும்
மீந்த ஒற்றைக்கொலுசும்
பூட்டி வைக்கப்பட்டிருக்கும் 
பேழை
மனசு
• கோழிகள் கூவித்தூங்கின
எனது நாட்கள்.
நான்
உன் தடம் பற்றி நடக்கையில்.
அலையேந்திப் போயிருந்த
உன் காலடிகளைப் 
பின் தொடர்ந்து
அலைகளுக்குள் நடந்து 
கொண்டிருக்கிறது நிலவு
• முகமற்று
ஒளிரும்
உன் புனனகை மட்டுமாய்
அலைந்து கொண்டிருக்கிறது
எனது
தெருக்களில்.  

• கவனமற்றுச்
சொற்களை
இறைத்தபடியிருக்கிறேன்
தாள்களில்.
விளிம்புகள் மழுங்கிய அலைகளாய்
தவழும் உன் குரலால்

 

காதல் சிலுவையில் 02

Posted by த.அகிலன் on Sep 16th, 2008
2008
Sep 16

விளக்குகள் அணைக்கப்பட்ட கரையில் தளும்பிக்கொண்டிருக்கிற மதுக்கிண்மெனக்கிடக்கிறது கடல்.. உனது நினைவுகளெனப் பற்றியிழுத்து எனை வீழ்த்தும் திட்டங்கள் வகுக்கிறது கரைமணல்.. யாரோ ஒருத்தனின் முத்தங்களிற்கான யாரோ ஒருத்தியின் சிணுங்கலை எடுத்துப்போகிறது காற்று எனைக்கடந்து.. உனது முத்தங்களை நினைவூட்டி.. உன் சாயலை ஒத்த ஒருத்தியிடம் தயங்கிநிற்கிறதென் பாதங்கள்.. நிலவு எரிந்துகொண்டிருக்கிறது.. ஒரு மதுக்கடையின் மங்கலான விளக்குப்போல.. உலகம் ஒரு நாகரீகமான மதுக்கடை.. அதனால் தான் போதை எல்லாவற்றிலும் ஒளிந்திருக்கிறது.. காதல்,வெற்றி,காமம் எல்லாவற்றிலும் உள்ளொளிர்ந்து கொண்டிருக்கிறது போதை..

இசை பொலிவிழந்துகொண்டிருக்கிறது.. நமக்கான பாடல்களாய்த் தேர்வு செய்து வைத்திருந்த எல்லா தட்டுக்களையும் காலிசெய்தேன்.. கோப்பைகள் நிரம்பும் நயமான சலசலப்பிலும் அடங்காமல் ரீங்கரித்துக்கொண்டிருக்கிறது. உன் பிரிவின் வார்த்தைகள்.. யாரோ ஒரு குழந்தையிடம் தன் சிறகுகளை இழந்த பட்டாம்பூச்சியாகிற்றென் காதல்.. நூல் கட்டப்பட்ட தும்பியாகவும்.. கயிறுகள் எல்லாவற்றையும் நீயே வைத்திருக்கிறாய்.. இன்னமும்.. உனது அன்பின் கடைசி இறகும் உதிர்ந்து வீழ்ந்தபின் இந்தப் பாலைவனத்தின் கொடும் தனிமையில் துடித்துச் செத்துவிடுகிறேன் நான்.. நீ இனி ஒரு போதும் அயல்வீட்டுக்காரனின் கருணையோடு நெருங்காதே.. நான் சபிக்கப்பட்ட கடவுளின் நோஞ்சான் குழந்தை.. பிரியங்கள் எனக்கு வாய்ப்பதில்லை..

எனது கிண்ணங்களில் நிரம்பித் ததும்பும். ஒளிபொருந்திய உன் புன்னகையைப் பருகத்தொடங்குகிறேன்.. நான். நீ காதருகில் கிசுகிசுக்கும் குரல் நினைவுக்குள் எழுகிறது தீயாய்.. நான் கோப்பைகளை நிரப்பி நிரப்பி ஊற்றினேன் தீயை அணைத்துவிடும் தீவிரத்தோடு.. ஆனாலும் பாஸ்பரசைப்போலத் தண்ணீரிலும் பற்றிக்கொள்கிறது அது.. இன்னமும் எனக்குள் மிஞ்சிக்கிடக்கிறது.. நீ பெயர்த்தெடுத்துப்போன காதலின் மென் வேர்கள்.

இப்போதும் இது கனவென நம்பிக்கிடக்கிறதொரு மனம். இது விளையாட்டு.. இது முடிகையில் நீ பழைய பிரியங்களோடு மீளவருவாய் எனக்கனவுகள் வளர்க்கிறது அது. ஆனால் நீ வரப்போவதில்லை என்கிற நிஜத்தின் குரூரம் பின்னர் குருதியென வழிய… அதையும் கோப்பைகளில் நிரப்பிக்குடிக்கத் தொடங்குகிறது வழியற்று. நீ எடுத்துப்போன பின்னர் தாகித்தலையும் என் தனிமை எல்லாவற்றையும் பருகுகிறது.. ஒரு பட்டினியாளன் உணவை நெருங்கும் வேகத்தோடு.. ஒரு பெருங்குடிகாரனை ஆச்சரியத்தில் மூழ்கடித்து மயக்குகிறது என் இயலாமையின் தாகம்..

நீ எங்கிருக்கிறாய்.. உன் காத்திருப்புக்களின் புன்னகையை வென்றாகிவிட்டதா? என் பிரியங்களைப் புறக்கணித்த உன் திசைகளில் திரும்பக் கூடாதெனும் வன்மத்துடன்.. ஆரம்பிக்கிறேன் எனது வழித்தடங்களை.. என் வெளியேறும் வழிகளையெல்லாம் அடைத்து.. உனது திசைகளில் திருப்புகிறது நினைவுகள்.. கடைசியில் இயலாமைகள் பெருகிச் சூழும் இக்கணத்தில்.. தாயின் பெருவிரலினின்றும் நழுவிய குழந்தையெனத் தேம்பியழத்தொடங்குகிறேன்.. நீ போய் மறைந்த திசைகளை நோக்கி.. எனது அழுகையை ஒரு குரூரப் புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருக்கிறாய் நீ மறைவாக..

உன்னை அழைக்கும் எனது குரல் தொண்டைக்குள் தேங்க.. எனது கண்களினின்றும் நீங்குகின்றன உனது பாதங்கள்.. காற்று தடங்களை அழிக்கிறது.. நீ எனக்குச் சொன்ன பிரிவின் கொடும் சொற்கள் நடனமிடும் இக்கணத்தில் பெருகிவழியும் கண்ணீரின் உப்புக்கரிக்கும் என் உதட்டில் நான் கோப்பைகளைப் பொருத்துகிறேன்.. எதிரில் நிரம்பிக்கிடக்கின்றன அடுத்தகோப்பையும் நீயற்ற தனிமையும்..

பின்குறிப்பு 01

பீச்ல தண்ணி அடிச்சிருக்கிறீராய்யா நீரு..

நான் தண்ணி அடிக்கத்தொடங்கியே நாலு நாள்தான் ஆச்சு.. அதுக்குள்ள..

சும்மா கடல்காத்துக்கு செமையா ஏறும்யா… ஆனா ஒண்ணு.. உம்மையப்பாத்தா அப்படிச் சொல்லமுடியாதுய்யா.. ஏதோ ரொம்ப அனுபவசாலியாட்டமா நிதானமா அடிக்கிறீரு..

thank you ,thank you, thank you

என்ன தலைவருன்னு நினைப்பா.. அதுக்கெல்லாம் பாண்டிச்சேரி போகணும்யா போலமா… ஞாயித்துக்கிழமை போலாம்..

என்ன எதுக்கு பீச்சுக்கா.. யோவ் இப்பவே போறம் ஈ.சி.ஆர்ல எங்காவது.. வண்டி ஓட்டுவீங்கள்ல நிதானமா… வரும்போது..

எனக்கேவா..

பின்குறிப்பு 02

நண்பர்களுடன் கிரிக்கெட்ஆடிய மாலைகளில் அவர்களோடு சேர்ந்து அருந்த மறுத்த.. பனங்கள்ளின் சுவை குறித்த கற்பனைகள் விரிகின்றன் மனதுள்..கூடவே ஏளனமும்.

பின்குறிப்பு 03

எனது காதலைப் பரிமாறிய விருந்தொன்றுக்கு

நீ கொலைவாட்களுடன் வந்திருந்தாய்..

நான் நான் புன்னகையைப் பரிமாறினேன்

நீ கொடும் சொற்களை வைத்தாய்..

என் பிரியங்களைப் பரிமாறினேன்..

நீ முட்கரண்டிகளால் கிளறியபடியிருந்தாய்..

எதையும் விரும்பாதவள் போல

உன்னைத் திருப்திப்படுத்த எதைத்தருவதெனத் தெரியாது

என்னையே பரிமாறினேன்..

நீ கொலைவாட்களைப் பயன்படுத்தினாய்

என் புன்னகையை

சாம்பல் கிண்ணத்தில் கவிழ்த்துவிட்டு

எனது இரத்தத்தை பருகியபடி வெளியேறினாய்..

உனது வாளின் நுனியில் தொங்கிக்கொண்டிருக்கிறது

என் இதயம்..

காதல் சிலுவையில் 01

Posted by த.அகிலன் on Sep 15th, 2008
2008
Sep 15

நீ எடுத்துச் சென்ற பிரியங்களை வேறெதனாலும் நிரப்ப முடியவில்லை.. கண்ணாடிக்குவளைகளுள் உடைந்து சிதறும்.. நுரைகளில்.. நொருக்கிக்கொண்டிருக்கிறேன் உனது பிரியத்தை.. ஒரு கணத்தில் குவளையே உன் முகமாக வீசியெறிகிறேன் அதை ஒரமாய்.. உடைந்து சிதறிய கண்ணாடித்துண்டுகளிலெல்லாம் பல்கிப்பெருகுகிறாய் ஏளனச் சிரிப்போடு..

நீ கொடுத்ததை எல்லாம் எடுத்துக்கொள்.. ஒரு மழைநிசியில் நீ கொண்டு வந்த பிரியங்களையெல்லாம்.. மழைநின்ற நண்பகலில் எடுத்துக்கொண்டு வெளியேறினாய்.. வானவில் அழியத்தொடங்கியிருந்த அந்த மழைப்பகல் கோடையாகிற்றெனக்கு மட்டும். பிறகு பெய்த மழை உன் கால்தடங்களையும் அழித்தது.. சொட்டிக்கொண்டிருக்கும் இலைகளின் துளியில் விரல்நனைத்தென்னை ஈரம் செய்யுமொரு குழந்தை நினைவூட்டிப்போகிறது உன் பிரியத்தையும் பிரிவையும்.. நீ தங்கியிருந்த சில நாட்களின் கதகதப்பை இழக்க மறுக்கிறதென் மனம்.. கோழிக்குஞ்சென உனக்குள் ஒண்டிக்கிடந்த அதை ஒரு கசாப்புக்கடைக்காரனின் மனநிலையோடு பிய்த்து எடுத்தாய்.. ஒரு அனாதையெனத் தனிக்கவிட்டு..

ஒரு விருந்தாளியின் எல்லைகளோடு நீ நின்றிருக்கலாம்.. நானும் ஒரு அழைப்பாளனின் பிரியத்தை மட்டுமே உனக்கு வழங்கியிருக்கலாம்.. (எல்லாம் நிகழ்ந்தேறியபின் இன்னும் என்ன..) ஆனாலும் உன்னால் சட்டென்று வெளியேறிவிட முடிந்தது ஒரு விருந்தாளியைப்போலஎந்தச் சலனங்களுமற்று. நீ அன்றைய மழைக்குத் தங்கியவளாகப் பாவனைகள் கொண்டாய்.. நான் மழையைக்கொணர்ந்தவள் நீயென்ற கற்பனைகளினின்றும் விடுபட இயலாதவனானேன்.. எல்லாவற்றையும் எடுத்தச்சென்றபின் உன் நினைவுகளை மட்டும் இங்கெதற்கு வைத்திருக்கிறாய்.. வெளியேறு போ ஓடிப்போ..

நான் பேயோட்டியின் தீவிரத்தோடு உனை விரட்டும் கூச்சல்கள் இடுகிறேன்.. புறக்காதுகள் நிறையும் படி.. ஆனால் உனக்கு மட்டும் கேட்கும் ரகசியக் குரலில் உன்னால் புரிந்து கொள்ளமுடியுமெனத் தான் நினைக்கும் சங்கேதங்களில். உன்னை வெளியேற வேண்டாம் எனக்கெஞ்சியபடியிருக்கிறது மனம்.. நீ இதைக்கேட்கவும் போவதில்லை..

மது மிதந்துகொண்டிருக்கிறது.. ஆர்க்கிமிடிஸ் தோற்றுப்போன இடம் இது.. உன்னை வெளியேற்றி அதனை நிரப்பமுடியவில்லை.. நீ இருக்கிறாய்.. நூற்றாண்டுகள் வளர்ந்து கிளைத்த ஒரு பெருமரம்போல.. அதன் நீலியாய். வனதேவதையாய்.. எல்லாமுமாய்.. இருக்கிறாய்..உன்னால் எப்படி முடிகிறது இப்படி அடிமை செய்ய.. எனக்கே ஆச்சரியமாய் இருக்கிறதாய் உள்ளுக்குள் ரசித்தபடியிருக்கிறேன் நான் உன் அதிகாரத்தை.. நீ புதிய அடிமைகளைத் தேடிப்போகிறாய்

என் இயலாமையின் அவலங்கள் பெருகப்பெருக நான் கடதாசிக் கோப்பைகளைக் கசக்கிவீசுகிறேன். இயலாமையும் அன்பின்மையும் பெருகும் இப்பொழுதில் உடைந்து அழத்தொடங்குகிற மனசு உலகின் பெருங்கோழையாய் என்னை ஆக்கிவிடுகிறது.நீ தங்கியிருந்த நாட்களில் எனக்கழித்த நம்பிக்கையில் கடைசித்துளியையும் பருகியாயிற்று.. நான் மழையின் தடங்களை வெறித்தபடியிருக்கிறேன்.. அவைக்குள் ஒழிந்துகொண்டிருக்கும் உன் காலடித்தடங்கள் சென்ற திசைகளின் அடையாளங்கள் தேடி. தனிமையின் பெருங்கோடை உன் பிரியத்தின் ஒருதுளியைத் தாகிக்கிறது.. எனது பயணங்கள் சாத்தியமில்லாத் திசைகளில் இறங்கி நடக்கிறாய் நீ.. எனது மலர்கள் பூக்கத்தொடங்கிய ஒரு காலையில் நீ அவற்றைப் புறக்கணித்து கடந்து போனாய்..

உனது தொலைவுகள் எனது பார்வைப்புலத்தினின்றும் அகன்றன.. உன்னைப் பின்தொடரவியலாதபடி உனது ஒளிவட்டம் மங்கிய இவ்வந்தியில்.. அது எனது மதுக்கிண்ணங்களிற்குள்.. சுழன்று கொண்டிருப்பதைக் கண்டேன்..

என்னிடம் மிச்சமிருக்கும் காதலின் சொற்களனைத்தையும் திரட்டி உனக்கான பாடல் ஒன்றைச் செய்கிறேன்உன் புன்னகையில் தொடங்கும் அப்பாடலின் இறுதிவரிகளை அழித்துவிடுகிறதென் கண்ணீர்த்துளி. நான் மறுபடி மறுபடி முயல்கிறேன் முன்னிலும் தீவிரமாய் அந்த வரிகளை நிரப்பிவிட. எத்தனை தடைவை முயன்றும் அதுவே நிகழ்கிறது.. கடைசியில் இறுதிசெய்யாத அந்தப்பாடலை.. நான் பாடத்தொடங்கினேன்.. தனிமை கவிந்திருக்கும் இந்த அறையில்.. காலிப் போத்தல்களையும் என்னையும் விட்டுவிட்டு நண்பர்கள் வெளியேறிப்போன பின்..

பின் குறிப்பு 01

எனக்குத் தெரிந்த தண்ணி அடிக்கிறவரிடத்தில் நான் ஒரு முறை கேட்டேன்.. தண்ணி அடிக்கிறதில என்ன லாபம். அவர் சொன்னால் தம்பி இந்த உலகத்தில் இரண்டு விதமா சந்தோசமாயிருக்கலாம்.. ஏதையாவது சாதிச்சு>நல்லது செய்து எந்த பிரச்சினைகளும் இல்லாத சாமர்த்தியமா வாழ்க்கையை ஓட்டி சந்தோசமா இருக்கலாம்.. மற்றது இருக்கிற பிரச்சினை எல்லாத்தையும் மறந்து சந்தோசமாயிருக்கிறது.. தண்ணி இரண்டாவதைச் செய்யும்.. புதுசா ஒரு உலகம் தெரியும்.. எனக்கும் புது உலகங்களை பார்க்க ஆவலிருந்தும்.. என்னவோ வாய்ப்பும் விருப்பும் இருந்ததில்லை

பின் குறிப்பு 02

யோவ் சொன்னா கேளுமய்யா.. 3 நாளா தொடர்ந்து தண்ணி அடிக்கிறீர் கூடாது.. நம்ம எல்லாம் சும்மா ஜாலிக்கு அப்பப்போ அடிக்கிறதோட சரி.. அப்புறம் செல்வண்ணன் என்னையத் திட்டப்போறாருஉம்மைக் கெடுக்கிறன்னு..

அதைப்பற்றி உங்களுக்கென்னய்யா .. நான் என்ன குழந்தைப்பிள்ளையா.. 25 வயசாச்சு எனக்குத் தெரியாதா என்னைப்பற்றி.. நான் விரும்பித்தானே அடிக்கிறன்.. அதுக்கில்லையா அப்புறம் நீர் அழுதிட்டே படுக்கிறீரு.. நைட்டுமுழுக்க.. தூங்க முடியல என்னால..

நாந்தானய்யா அழுகிறன். வாந்தியெடுத்து அசிங்கம் பண்றனா இல்லைல்ல.. அப்புறம் என்ன ….. ரு ஆ.. நீங்க விரும்பினா கீழ போய்ப்படுத்துக்கிறது.. இடந்தான் இருக்கில்ல எதுக்கு இதேரூம்ல படுக்கிறீங்க..

பின்குறிப்பு 03

எனது சொற்களின் வண்ணங்களை

நீ எங்கே வைத்திருக்கிறாய்

என்னிடமிருக்கும்

ஒற்றை வெளிறிய ஓவியத்தையும்

தந்துவிடச் சொல்லி மிரட்டுகிறாய்

உனது காலடிஓசைகளைக்

கற்பனைபண்ணியபடியிருக்கிறது

என் செவிகள்..

ஆரவாரம் மிகுந்த இந்த மதுக்கடையில்

தனித்து நிரம்புகிறது எனது கோப்பைகள்..

உடைந்து சிதறுகிறது.. நுரையும் மனமும்..

தீர்ந்த கோப்பைகளை மறுபடியும் நிரப்புகிறேன்

இன்னமும் இடம்பெயராதிருக்கிறதுன் நினைவுகள்..

ஆர்க்கிமிடிஸ் ஒரு பொய்யன்..