2009
Jun 14

இரண்டு வாரங்களாக இந்தப் புத்தகம் என்னுடன் எல்லா நேரத்திலும் பயணித்து வந்தது. ஒன்றிரண்டு நாட்களில் வாசித்திருக்க முடியும். ஆனால் இப்புத்தகத்தின் ஆழமும், வாசித்தபின் ஏற்படும் மன அழுத்தமும் சொல்லில் அடங்காது. கதையென்று அதை எப்படிக் கூற முடியும்? போரின் கொடூரங்களை பேரழிவுகளை வார்த்தை வார்த்தையாக கொட்டியிருக்கிறார் அகிலன். அவரைப்போல எம் ஈழ மக்களுக்கு அங்கு ஏற்பட்டிருக்கும் பெரும்துயர் என்று எப்போது எப்படி ஆறும்? காலத்தின் படர்ந்திருக்கும் இந்த ரத்தக் கறையை எவ்வளவு துடைத்தாலும் மறையுமா? பதில் சொல்ல யாரிருக்கிறார்? இத்தனைக்குப் பின்னும் வாழ்தலின் பேரலவலத்தை புனைவாயும் நிஜமாயும் விவரிக்கிறார் அகிலன். நம்முன் அலறித்துடிக்கும் அந்த ஓலத்தின் குரல் தமிழ்க்குரல் என்பதைத் தவிர நமக்கு போரின் அவலங்கள் பற்றி எவ்வளவு வாசித்தும் எத்தனை படம் பார்த்தும் தினம் தினம் செய்தி கேட்டும் என்ன தெரிந்துவிடும்?

‘மரணத்தின் வாசனை’ மூலம் அகிலனும் நானும் ஏதோ ஒரு புள்ளியில் இணைந்துள்ளோம்.‘எதைக் கடந்துவிட்டதாய் நான் எண்ணிக் கொண்டிருந்தேனோ, அது என்னைத் துரத்துகிறது’ அவனைப் போலவே நானும் பல நாள்கள் துயருற்றிருக்கிறேன். பிரிவும், தனிமையும், மரணமும் செர்ந்து என்னை துரத்தியபடியே இருந்த காலகட்டங்கள் உண்டு. எம்மைவிட மிக வலிமையான அவற்றுடன் நான் போராடிச் சலித்து இறுதியில் சரணடைந்துவிட்டேன். என் பிரியமான தங்கையை மரணம் என்னிடமிருந்து இரக்கமில்லாமல் பிடுங்கிச் சென்றது. பின் அன்பான நண்பனை தெருவில் அடிபட்டு சாகச் செய்தது. எனக்கு தோழமையாகவும் வழிகாட்டியாகவும் இருந்த என்னுடைய பாஸை (boss) மலையிலிருந்து கீழ் தள்ளி சாகடித்து அகோரமாய் சிரித்ததுப் பார்த்தது. எல்லாமே எதிர்பாராத மரணங்கள்… இளமையின் வெவ்வேறு படிகளில் நின்றுகொண்டிருந்த அவர்கள் நினைத்திருப்பார்களா சாவு தங்களை இப்படி காவு கொள்ளுமென்று? பித்துப் பிடித்து செய்வதறியாது நான் கலங்கி நின்றிருந்தேன். யாரிடமும் காண்பிக்க முடியாத வேதனையை கவிதையாய், எழுத்தாய், என் டைரியின் தாள்களில் இறக்கி வைத்தேன். துக்கம் ஓரளவிற்கு இருநூறு பக்கங்களில் அடங்கிவிட்டது. ஆனால் அதன் வெம்மை என் மனதிற்குள் அணையா நெருப்பாய் இருக்கிறது, நான் இறக்கும்வரையிலும் அது இருக்கத்தான் செய்யும். தற்செயலாய் அதை வாசித்த என் நண்பர் ஒருவர் இரண்டு நாள் இரவு தூங்காமல் தவித்தாராம். அத்தனை வலியையும் வேதனையும் வார்த்தையின் வடிவில் பார்த்தவருக்கு அதிர்ச்சி. எப்படி தாங்கிக் கொண்டாய், இதற்குப்பின்னரும் உன்னால் எப்படி சிரிக்க முடிகிறது, நானென்றால் பைத்தியமாகியிருப்பேனே என்றார். நான் புன்னகைத்து வாழ்க்கை கற்றுக் கொடுக்கும் பாடங்களில் மகத்தானது மரணத்தை பற்றியது சிலருக்கு அது கொடூரமாக சொல்லித்தருகிறது, என்னைப் போல என்றேன். இப்போது அகிலனின் கதைகளை வாசிக்கும்போது எமக்கேற்பட்ட துன்பங்கள் மங்கலாகிக் கொண்டிருக்கிறது. தந்தையை, நண்பனை, சித்தியை, ப்ரியமான நங்கையை – சமீபத்தில் தன்னுடன் பிறந்தவனை என எத்தனை எத்தனை மரணங்கள் அவர் வாழ்வில். வழி நெடுக மரணத்தூனூடே பயணிக்கிறது அகிலனின் வாழ்வு இந்த சிறிய வயதில் எப்படி எப்படித் தாங்கிக் கொண்டார் என நினைக்கையில் மனம் கனத்துக் கிடக்கிறது. வெகு நாள் கழித்து முகம் தெரியாத மனிதர்களுக்காகவும் அழ நேர்ந்தது. காலம் எல்லா காயங்களுக்கும் மருந்து போடும் என்பதைத் தவிர அகிலனுக்கு ஆறுதலாய்க் கூற வார்த்தை ஏதுமில்லை என்னிடம்.

இப்புனைவுகளை நுட்பமான மொழிநடையில் ஈழத்தின் அழகுத் தமிழில் எழுதியுள்ளார் அகிலன். தொன்மையான நம் தமிழனின் மொழியது. சில வார்த்தைகள் புரியாவிட்டாலும் தொடர்ந்து வாசிக்கும்போது தெள்ளந்தெளிவாக புரிகிறது. இத்தொகுப்பில் மொத்தம் பனிரெண்டு கதைகள். எல்லாக் கதைகளுமே என்னை பாதித்தது, மிகவும் பாதித்த கதைகள் எண்டு சொன்னால், ‘ஒரு சின்னப் பையனின் அப்பா செத்துப் போனார்’, ‘செய்தியாக – துயரமாக – அரசியலாக’, சித்தி’, குமார் அண்ணாவும் மிளகாய்க் கண்டுகளும்’, ‘சலனங்கள் அற்றவனின் கடைசிநாள்’, ‘தோற்ற மயங்கங்களோ’. மற்ற கதைகளான ‘ஒரு ஊரில் ஒரு கிழவி’, ‘ஒருத்தீ’, ‘மந்திரக்காரண்டி அம்மாண்டி’, ‘கரைகளிற்க்கிடையே’ ‘நீ போய்விட்ட பிறகு’ ‘நரைத்த கண்ணீர்’, ஆகியவையும் மிகவும் நுட்பமான கதைகள்.

இப்புத்தகத்திலிருந்து என் மனதை பிழிந்தெடுத்த சில வரிகள், இதை எழுதும் போது அகிலனின் மனநிலையை அவதானிக்க முடிகிறது. என் கண்ணில் கண்ணீரை அல்ல அனல் நீரை வார்க்கச் செய்துவிட்டது இவ்வுரைகள்.

“மரணமும் அதுகுறித்தான பயமும் அறியப்படாத ஒரு ரகசியச் சுவை போல நம்மிடையே கலந்திருக்கிறது. யாரும் தாண்டிவிட விரும்பாத சுவரைப்போலவும்….”

“அவர்கள் நேசித்த உடலைக் கண்ணுக்குள் வைப்பதும் யாருவருக்கும் பிரியமான ஒரு செய்லாயிருக்கிறது. நான் நினைத்தேன், மனிதன் உடலாகவே அறியப்படுகிறான். கறுப்பாய், ஒல்லியாய், குண்டாய் என அவனது உடலையே நம் நினைவுகள் முதலில் கொண்டாடுகின்றன. உடல் சார்ந்தே அவனுடைய பிறநினைவுகளும் வாழ்கின்றன. அந்த உடலின் பிரதிநிதியாகவே ஒரு மனிதன் குறித்த நினைவுகள் நமக்குள் தங்கிவிடுகின்றன. அதனால் அந்த உடலைக் கடைசியாகப் பார்த்துவிட வேண்டும் என்று துடிக்கிறோம்…..”

“துயர் தரும் மரணத்தின் கதைகளுக்கு இந்த நாட்டில் பஞ்சமா? குருதியும் எதிந்த தசைகளின் துர்மணமும் நிறைந்த கதைகள் தவிர வேறென்ன இருக்கிறது இங்கே. எல்லாரையும் கொன்று கொண்டோ அல்லது கொல்வதற்குக் கட்டாயப்படுத்திக் கொண்டோ இருக்கிறது.”

“தேவதையின் மரணத்தை அண்ணி கடிதத்தில் உறுதி செய்தாள். மெலிந்து கறுத்துப் போன உனது சீருடைப் படத்திற்உ உன் கிராமத்து வீட்டில் மாலைபோட்டு ஊதுபத்தி ஏற்றியிருப்பதாக, மரணத்தின் வாசனை அதனின்றும் கமழ்ந்து கொண்டிருப்பதை தான் போய் பார்த்தேன் என்று அண்ணி எழுதியிருந்தாள். மரணம் நாசமாய்ப் போக. அது தேவதைகளையும் விட்டு வைப்பதில்லை.”

“யுத்தம் கொடிய யுத்தம். மனித மனங்களை சிதைத்துக் குவித்துக் கொன்றுவிட்டிருக்கும் யுத்தத்தின் இன்னுமொரு சாட்சி இவன். இனி என்றைக்கும் திரும்பவியலாதது. பிரிவும் துயரமும் எதிர்ப்பார்ப்பு கலவையாகிப் பினைந்து கொண்டிருக்கிறது இவன் சிந்தனைகளை என்று தோன்றியது எனக்கு.”

புத்தகத்தை மூடி வைத்து இரவில் வெகு நேரம் தூங்காமல் விழித்திருந்தேன். அகிலன் சொல்வது போல் ‘மரணமும் அது குறித்தான சேதிகளும் ஒரு கொடு நிழலைப்போல் என்னைப் பின் தொடர்ந்து கொண்டிருக்கின்றன” ஆம்…

http://umashakthi.blogspot.com/2009/04/blog-post_16.html

2009
Jun 9

எழுதியவர் அய்யனார்
பின்
ஓர் இரவில்
துப்பாக்கியின் கண்கள்
அவன் முதுகினில் நிழலெனப்படிந்து
அவன் குரலுருவி
ஒரு பறவையைப் போல்
விரைந்து மறைந்ததாய்
அவன் குழந்தைகள் சொல்லின

தமிழ்சூழலை வெற்றுச் சொற்களால், பகட்டால், விளம்பர மிகைப்படுத்தல்களால் நிறைக்கும் மாதிரிகளின் குரல்வளையை / கைவிரலை நெறிக்கத் தோன்றும் அதே சமயத்தில் உண்மைக்கு சமீபமான எழுத்துக்களை கொண்டாடத் தோணுகிறது.தனது வாழ்வை கிசுகிசுப்பான குரலில் ஈரத்தோடு பதிவிக்கும் கவிஞனை இறுக அணைத்துக்கொள்ளலாம். மிகுந்த அன்பும் நெகிழ்வும் கொண்ட வினோத படைப்பு கவிஞனாகத்தான் இருக்க முடியும்.அகிலனின் கவிதைகள் வலைப்பக்கத்தில் படிக்கும்போது ஏற்படுத்திய உணர்வுகளை விட முழுத் தொகுப்பாய் படிக்கும்போது அதன் வீர்யம் சற்று அதிகமாய்த்தான் இருந்தது.

மழையையும், வண்ணத்துப் பூச்சியையும், அன்பையும், நெகிழ்தலையும், துயரையும், வலிகளையும் அழைத்து வந்திருக்கும் இன்னொரு கவிஞன்.இவனுக்கான பின்புலமாய் அலைவுகளுக்குட்பட்ட வாழ்வும், துப்பாக்கி சப்தங்களும், நெருக்கமான மரணங்களும், அந்நியத்தின் இணக்கமற்ற குரூரமும், அடையாளங்களுக்கான தவிப்புகளுமாய் இருந்திருக்கிறது.மொழியில் வாழ்வைப் பொதிந்துவைக்கும் அல்லது பொய்மை/பூச்சுகளைத் தவிர்க்கும் கவிதைகளோடு என்னால் நெருக்கமாக ஒட்டிக்கொள்ள முடிகிறது.உரத்த குரலில் பேசுவது எப்போதும் நிம்மதியின்மையைத் தருகிறது.கிசுகிசுப்புகளாய் சொல்லப்படும் குருதி வாடை கலந்த கவிதைகள் என்னமோ செய்து விட்டுப் போகிறது.

அகிலனின் முதல் கவிதைத் தொகுப்பை மின் நூலாகத்தான் படிக்க முடிந்தது. இக்கவிதைகளை எந்த ஒரு சட்டகத்துக்குள்ளும் நான் அடைத்து வைக்க விரும்பவில்லை.தனி மனிதனின் நுண்ணுணர்வுகளை மொழியாக்கும்போது அதை விமர்சிக்கவோ, இப்படி இருந்திருக்கலாம், அப்படி இருந்திருக்கலாம் ரீதியிலான மேதாவித் தனங்களை வெளிப்படுத்திக் கொள்ளவோ எனக்கு விருப்பமில்லை. மேலும் இக்கவிதைகளிள் அதிகமாய் விரவி இருக்கும் தன் வயத்தன்மை மிகுந்த பரிவுகளை உண்டாக்கி கவிஞனை மிக நெருக்கமாய் உணரச் செய்துவிடுகிறது.வடிவ நேர்த்தி, ஒழுங்கு, கவித்துவம் என்பதின் மீதான நம்பிக்கைகள் எனக்கு எப்போதும் இருந்திராதது மிக வறட்சியான கவிதைகளையே எழுதத் தூண்டி இருக்கிறது.இக்கவிதைகளில் எனக்குப் பட்ட கச்சிதத் தன்மை படிக்க ஏதுவாகவும் கனவுத் தன்மையை உயிர்ப்பிப்பதாகவும் இருந்தது…

வெயில் சார்ந்த வாழ்வு மழையின் மீது காதலை,ஏக்கத்தை அதிகரித்துப் போகிறது. மழையைப் பற்றி எழுதாதவனை கவிஞனில்லை எனச் சொன்னாலும் அதை புன்முறுவலோடு ஏற்றுக்கொள்ளலாம் மழையின் மீதான நெகிழ்வை அகிலனின் மொழி கதவுகளைப் பிறாண்டும் பிராணி என்கிறது.இப்படிமம் மழையை சக உயிராக நினைக்கும் நெகிழ்வான மனதை கண் முன் நிறுத்துகிறது.வண்ணத்துப் பூச்சிகள், சிட்டுக்குருவிகள், முத்தம், கொலுசு என சன்னமாய் பெய்து கொன்டிருக்கும் மழையை நினைவூட்டும் கவிதைகள் சில பக்கங்கள் தாண்டியதும் குரூரத்தைப் பேசுகிறது. வன்மத்தை, அதிகாரத்தை, நசுக்கப்படுதலை, எதிர்க்கத் திராணியற்று போதலை பேசத் துவங்கியதும் கவிதையின் மொழியில் இறுக்கம் கூடுகிறது.குறிப்பாய் காட்டின் நினைவு என்கிற கவிதை திரும்பத் திரும்ப வாசிக்க வைத்தது.அந்த கச்சிதமான எதிர்ப்பு, மிகக் குறைவான/சன்னமான ஆனால் அழுத்தமான எதிர்ப்பு எல்லாவற்றுக்குமான காரணங்களை சொல்கிறது.

எம்மிடம்
பை நிறையக் கனவுகள் இருந்தன
வேரெதையும் எடுத்துக்கொள்ளவுமில்லை
விட்டுச்செல்லவுமில்லை
கொஞ்சம் விரோதங்களைத் தவிர..

கவிதை மய்யங்களின் சீரான வளர்ச்சி மொழியின் வசீகரத்தைத் தவிர்த்திருக்கிறது தவிர்ப்பது தேவையானதும் கூட. வீர்யமான கவிதைகளுக்கான காலமென இச்சூழலைச் சொல்லலாம் புனைவை நோக்கி நகர வேண்டிய நிர்பந்தத்திலும் நாமிருப்பது அல்லது புனைவின் மீதான விருப்பங்களில் நாமிருப்பது மிகவும் ஆரோக்கியமானது. எழுதப்படாத சொற்களும் தாள்களும் புனையும் தளம் விநோதமானது

தன் பின்னலைத் தளர்த்திய
ஒரு கிழவியின்
சாபத்தின் சொற்கள்
ஊரை நிறைத்தது

பின்பொரு நாள்
பூவரசம் வேலிகளைத்
தறித்தபடியெழும் கோடாரின் கரங்கள்
ஒரு குழந்தையிடமிருக்கக்
கண்டேன்

அம்மம்மாவின் சுருக்குப் பை மிக அழகான கிராமத்து வாழ்வை மிகுந்த ரசனைகளோடு சொல்கிறது

தும்புமிட்டாஸ்காரனின்
கிணுகிணுப்பிற்கு
அவிழ்கிற அம்மம்மாவின்
சுருக்குப் பை போல
அவிழ்ந்து கிளம்புகின்றன
ஞாபகங்கள்

கடவுள், துரத்தப்பட்ட ஆடு, மதங்கொண்ட நிலவு போன்ற கவிதைகள் சிறுகதைக்கான காட்சிகளை உள்ளடக்கியிருக்கிறது.கவிஞனுக்கு இருக்கும் பொது குணமாக கழிவிரக்கத்தையும் குற்றவுணர்வையும் சொல்லலாம் அல்லது மிகுந்த குற்ற உணர்வுகளும், கழிவிரக்கமும், பிரிவும், துயர்களும் மாத்திரமே கவிதை எழுதத் தூண்டுகிறதோ என்னமோ..பிறழ்வில் முடித்திருக்கும் அகிலனிடமிருந்து பிறழ்வின் வசீகரங்களை, பிறழ்வின் மூலமாய் நிகழ்த்தப்படக்கூடிய சாத்தியங்களை, புது மொழிகளை எதிர்பார்க்கலாம் எனத்தான் தோன்றுகிறது.நல்லதொரு கவிதை அனுபவத்தை தந்த அகிலனுக்கு வாழ்த்துக்களும் அன்பும்.

http://ayyanaarv.blogspot.com/2008/03/blog-post.html

Next »

FireStats icon Powered by FireStats