BROTHERHOOD OF WAR

Posted by த.அகிலன் on Dec 10th, 2012
2012
Dec 10

390326-0வெறுமனே

எதிர்முனை இரையும்

என் கேள்விகளின் போது

நீ

எச்சிலை விழுங்குகிறாயா?

எதைப்பற்றியும்

சொல்லவியலாச்

சொற்களைச் சபித்தபடி

ஒன்றுக்கும் யோசிக்காதே

என்கிறாய்..

அவன் இறப்பதற்கு சில மாதங்கள் முன்னதான  தொலைபேசி உரையாடலின் பின் எழுதிய வரிகள் அவை.

யார் முதல் பற்றிங்? யார் சைக்கிள் ஓடுவது? யார் எடுத்திருக்கிறது பெரிய வாழைப்பழம்? இப்படி எதற்கெடுத்தாலும் சண்டைபிடித்துக்கொண்டேயிருந்தோம் சண்டை பிடிக்கவே பிறந்தது போலச் சண்டை, ஜென்ம விரோதிகளைப் போல. அவன் ஒரு முறை மயங்கி விழுந்த போது நான் அழுத கண்ணீர் எங்கிருந்தது? என்பது எனக்கே தெரியாது. எனக்குள்ளே புகுந்திருந்தது என்னை அழவைத்தது எது?அம்மம்மா சொன்னாள் “தானாடா விட்டாலும் தசையாடும்” சகோதரனைச் சினேகிதனாக்கும் வித்தைகள் தெரிந்தவர்கள் பாக்கியவான்கள். சினேகிதனோ? இலலையோ? நமக்கே தெரியாமல் நமக்கிடையில் ஓடிக்கொண்டிருக்கும் பிரியத்தின் அலைவரிசை ஆனந்தமானது, அலாதியானது. தம்பியைப் பற்றிய நினைவுகள் மீழெழுந்தபடியிருக்கிறது இன்றைக்கு. ஒரு கடற்கரையில் அவன் பிணமாய் மிதந்திருக்கக் கூடும் எனும்போது .. மேலே எழுதவேண்டாம் என்று தோன்றுகிறது. என்னுடை தம்பி மாத்திரமா? நிறையத் தம்பிகள், நிறையத் தங்கைகள் ஆனாலும் என்ன என்னைப்போலச் சகோதரங்கள் தானும் ஆடித் தசையும் ஆடிக் களைத்துச் சோர்ந்து விழத்தான் முடிந்தது. காப்பாற்றமுடியவில்லையே எனும் குற்றவுணர்வு நிழலைப்போலக் கூடவருகிறது. எப்படிக் கடப்பது அதை? சாகும் வரைக்கும் கடக்கவே முடியாதென்றுதான் தோன்றுகிறது. சகோதரனை இழப்பதென்பது உடலின் பாகமொன்றை இழப்பதைப் போலென்று அடிக்கடி நினைக்கிறேன். போர் என் சகோதரனைத் தின்றது. புலிகளால் கட்டாயமாக அவன் பிடித்துச் செல்லப்பட்டபோது கோழையாய் நான் தப்பிச் சென்னைக்கோடினேன். அதைவிடவும் எனக்குச் செய்வதற்கேதுமிருந்ததா எனவும் எனக்குத் தெரியாது? ஆனால் இன்றைக்கு அவனை இழந்தபின்னரான குற்றவுணர்விலிருந்து தப்பியோடும் திசைகளற்றவனாய் தடுமாறி நிற்கிறேன்.

tae-guk-gi-the-brotherhood-of-war-korean-flicks-9966602-400-172ஒரு தென் கொரியப் படம் The brotherhood of war கொரிய யுத்தம் பற்றியது. தென் கொரியாவில்  கட்டாயமாகப் படைக்கு இழுத்துச் செல்லப்படுகிற தம்பியைச் சாவிலிருந்து காப்பாற்ற அவனைப் படிப்பித்து பெரியாளாக்கோணும் என்கிற தன் அம்மாவின் கனவை நிறைவேற்ற, அண்ணனும் அவனோடே போகிறான். அதன் பிறகு சாவின் தருணங்களிலிருந்தெல்லாம் எப்படித் தம்பியைக் காப்பாற்றுகிறான் என்கிற கதையினூடாக யுத்தகாலத்தை, யுத்தத்தை, தென்கொரியாவின் படைகளை, அதன் அரசை விமர்சிக்கிறது அந்தப்படம். என் தம்பியை மற்றும் என்னை முன்னிறுத்தி அந்தப்படம் பெரும் துயரையும் கொந்தளிப்பையும் எனக்குள் நிகழ்த்தியது. உலகம் நம்மிலிருந்தே தொடங்குகிறது. நமது துயரங்களைப் போலவோ அல்லது நமது ஆனந்தங்களைப்போலவோதான் உலகத்தின் கண்ணீரும் புன்னகையும் இருக்கமுடியும் என்கிற புரிதலிருந்துதானே தொடங்கமுடியும் மனிதநேயம்.

போர் எல்லா இடங்களிலும் ஒன்றையேதான் உற்பத்தி செய்கிறது. அதுதான் சாவு. சாவுகளால் ஊரை நிறைக்கிற போர், திரை முழுதும் விரிகிற இரத்தம், காதுகளை நிறைக்கிற வெடிச்சத்தம், ஆன்மாவை அரித்துத் தொலைக்கிற போரின் நெடில் அவை துயரமானவை.  மனதை வெடித்துவிடச்செய்யும் பாரம் நிறைந்த துயரத்தை திரைகளின் சித்திரங்களில் அசையவைப்பதன் சாத்தியங்கள் சொற்பமே. ஆனாலும் இந்தப்படம் இதயத்தை உலுக்குகிறது. ஒரு துளி கண்ணீரை, உதடுகளின் விம்மலை, போர் உற்பத்தியாளர்களின் மீதான  கசப்பை பார்வையாளனிடம் விட்டுச் செல்கிறது.

துவக்குகள் திணிக்கப்பட்ட சிறுவர்கள், துரோகிகளால் நிறையும் சவக்குழிகள், நிலம் விட்டுத் துரத்தப்படும் சனங்கள், கூட்டம் கூட்டமாக சரணடைந்த எதிரிப்படைகளைக் கொல்லும் போர்க்குற்றங்கள் என்று எல்லா யுத்தங்களும் ஒரே மாதிரியானவையே.

“நீ வீரமாகப் போரிட்டாயானால் ஒரு மெடலுக்குத் தகுதி பெற்றவனானாயானால் உன்னுடைய தம்பியை வீட்டுக்கனுப்பிவிடுகிறேன். முன்பு ஒரு தந்தை தன் மகனைக் காப்பாற்ற அவ்வாறுதான் செய்தார் என்று தளபதி அண்ணனிடம் கூறுகிறான். அந்தக்கணத்திலிருந்து தன் தம்பியைக் காப்பாற்றப் போகும் பதக்கத்துக்காக அதற்காகவே தன்னுடைய உயிரைப் பணயம் வைத்து ஒரு யுத்த வெறியனைப் போல வட கொரியர்களைக் கொல்லுவதே தன்னுடைய லட்சியம் என்பதைப்போல தமையன் போரிடுகிறான். தன்னுடைய தளபதியை திருப்திப் படுத்துவதற்காக தங்களுடைய பால்ய நண்பனான ஒரு சரணடைந்த வடகொரியப் படைச்சிறுவனை (அவனும் கட்டாயமாகப் படையில் சேர்க்கப்பட்டவனே) அவனை கொல்லவும் துணிகிறான் அண்ணன். இதனால் தம்பி அவனை வெறுக்கவும் செய்கிறான். தம்பி அண்ணன் வெறும் பதக்கத்துக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு இதனைச் செய்கிறான் என்று கோவித்துக் கொள்கிறான். உன்னுடைய இதயத்தை எங்கே தொலைத்துவிட்டாய் நீ மாறிவிட்டாய் என்று அண்ணனிடம் வெறுப்படைகிறான். அண்ணனைக் குற்றவுணர்வுக்குள்ளாக்க தன்னைத் தானே சில சமயங்களில்  சில சமயங்களில் வருத்திக்கொள்ளவும் செய்கிறான் தம்பி.

ஒரு காட்சியில் தென் கொரியாவுக்கு உதவுவதற்காக வந்திருக்கிற அமெரிக்கப்படைகளிடம் இருந்து கொஞ்ச சொக்லேற்றுக்களை வாங்கிக் கொண்டு வருகிற அண்ணன் அதிலொன்றை தன் தம்பியிடம் கொடுக்கிறான். படத்தின் ஆரம்பத்தில் ஐஸ் பழம் விற்கிறவரிடம் இருந்து தன் தம்பிக்கு எவ்வளவு ஆசையாக ஒரு ஐஸ்பழத்தை வாங்கிக் கொடுப்பானோ அதைப்போல அந்த சொக்லேட் பாரையும் அவனிடம் கொடுப்பான். யுத்தகளத்திலும்,  சுற்றிலும் நிறைகிற மரணங்களின் மத்தியிலும், விரட்டுகிற கட்டளைகளிற்குள்ளும் தமையனிடம் மிதக்கிற சகோதர வாஞ்சை மனதைப் பிசைகிறது.

taegukgi1ஒருநாள் தென்கொரியப் படையினரே கம்யூனிஸ்டுகளின் ஊர்வலத்துக்கு போனாள் என்று அண்ணனின் காதலியை பிடித்துச் செல்வார்கள். தம்பி அவளைக் காப்பாற்றப் போவான். அண்ணின் காதலியை சுடுவதற்காக வரிசையில் நிறுத்தி வைத்திருப்பார்கள். தன் இராணுவமே இந்தப் படுகொலையைச் செய்வதை தம்பி தடுப்பான். அவர்கள் அவனை நீயும் துரோகியா என்று கேட்பார்கள். இதற்கிடையில் அண்ணனும் வந்து சேர்ந்து கொள்வான் இருவருமாய் அவளைக் காப்பாற்ற தங்கள் சொந்த இராணுவத்தின் புலனாய்வுத் துறையினரிடமே சண்டையிடுவார்கள். அவர்கள் தமையனின் மெடலைப் பார்த்ததும் அவனிடம் சொல்லுவார்கள் இவள் துரோகி கம்யூனிஸ்டுகளின் ஊர்வலத்துக்குப் போயிருக்கிறாள் என்பான். அவளோ நானும் உன் தாயும் என் சகோதரர்களும் பசியாயிருந்தோம் ஊர்வலத்தில் அவர்கள் சாப்பாடு கொடுத்தார்கள் அதனால் போனேன் மற்றும்படி நான் எதுவும் செய்யவில்லை நம்பு என்று சொல்லுவாள். அண்ணனாலும் தம்பியாலும் எதுவும் செய்யமுடியாமல்  அவளை அவர்களின் கண்ணெதிரே சுட்டுக்குழியில் தள்ளுவார்கள். தங்களை எதிர்த்தான் என்பதால் தம்பியையும் அவர்கள் சரணடைந்த எதிரிப்படையினரோடு  சேர்த்து அடைத்து வைத்து தீயிட்டு கொழுத்தியும் விடுவார்கள். தம்பியை தன் சொந்த நாட்டு இராணுவமே கொன்று விட்டதே என்று அண்ணன் ஆத்திரமுற்று எதிரிகளோடு சேர்வான்.

ஆனால் தம்பி யாரோலோ காப்பாற்றப்பட்டு உயிரோடு ஒரு வைத்தியசாலையில் இருப்பான். தான் இறந்து விட்டதாகக் கருதித்தான் அண்ணன் எதிரிகளோடு சேர்ந்து விட்டான் என்பதை ஒரு கட்டத்தில் தம்பி தெரிந்து கொள்வான். அவன் அண்ணனைத் தேடி யுத்தம் தீவிரமாக நடந்துகொண்டிருக்கும் போது எதிரிகளின் முன்ணணி காவலரணுக்கு செல்வான். அங்கே தமையனிடம் நான் உயிரோடிருக்கிறேன். வா அம்மா நமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறாள். நான் பள்ளிக்கூடம் போகவேண்டும் நீ என்னோடு வா என்று கேட்கிறான். நீ இப்போது போ.. நான் நிச்சமாக வருவேன் என்று சொல்லி அவனைத் தமையன் அனுப்பி வைத்துவிடுகிறான்.

எனக்கு பவா மச்சாளினதும் ஜெகா மச்சாளினதும் நினைவு வருகிறது. ஜெகா மச்சாள் ஒரு நாள் இயக்கத்துக்கு போய்ட்டாள்  அன்றிலிருந்தே  மாமா வீடு செத்த வீட்டைப்போல இருந்தது. மாமா ஒப்பாரி வைத்தே அழுதுகொண்டிருந்தார். மாமி பவி மச்சாளோட ஏதோ இயக்க பேசுக்கு முன்னால நிண்டு அழப்போட்டா.  சில வேளைகளில் பொறுப்பாளர்களின் மனதைத் தாய்மாரின் கண்ணீர் கரைத்த காலம் அது. அந்த நேரத்தில மாமாட இன்னொரு மகளான பவா மச்சாளும் இயக்கத்துக்கு போயிட்டா.. மாமா வீடே கதி கலங்கிப்போனது. ஒரே நேரத்தில் இரண்டு பிள்ளைகள் இயக்கத்திற்குப் போவதென்பதைவிடத் துயரமானது ஒரு குடும்பத்திற்கு வேறெதுவும் இல்லை. இயக்கத்துக்கு போவதென்பது மரணத்தை நோக்கிப் போவது. மரணத்தை விரும்பி ஏற்பது. கத்தி எடுத்தவன் கத்தியாலயே சாவான் என்பது போல துவக்கெடுத்தவன் துவக்காலதான் சாவான் எண்டு மாமா அடிக்கடி சொல்லுவார். இரண்டு பேரும் இயக்கத்துக்கு போன பிறகு மாமா தாடி வளர்த்துக் கொண்டு திரிஞ்சார்.. அந்தத் தாடி பெரிதாகிக் கொண்டேயிருந்தது அவரது துயரம் போல. பார் மகளே பார்… போன்ற சிவாஜி படத்துச் சோகப்பாட்டுக்களை பெரிதாகப் போட்டுக் கேட்டுக்கொண்டிருந்தார் மாமா. ஒரே வீட்டில இரண்டு பேர் ஒரேயடியாய் இயக்கத்துக்கு போறதென்பது மிகவும் துயரமானதுதான் அது ஒரு பெரிய விசயமாகக் கிராமத்தில் பேசப்பட்டது.  ஆனால் கொஞ்சக் காலம் கழித்து மாமாவின் இரண்டு பிள்ளைகளுமே இயக்கத்திலிருந்து ஓடி வந்தார்கள். ஒரு நாள் சாமம் இரண்டு மணிக்கு யாருக்கும் தெரியாமல் ஒராளை எங்கட வீட்டையும் ஒராளை பெரியம்மா வீட்டிலும் ஒளிச்சு வைத்திருக்கச் சொல்லி விட்டிட்டு போனார் மாமா. அதற்குப்பிறகுதான் பவா மச்சாள் சொன்னா நான் ஜெகாவை திரும்ப வீட்ட கூட்டிக்கொண்டு வாறதுக்காகத்தான் நான் இயக்கத்துக்கே போனான் என்று. ஆனால் அதெல்லாம் கட்டாயமாக ஆட்பிடிப்பு நிகழாத காலம் விருப்பத்தின் பேரில் மட்டுமே இயக்கத்துக்கு பிள்ளைகள் சேர்ந்த காலம். கட்டாயமாக ஆட்பிடிக்கும் காலத்தில்  எந்தத் தாயின் கண்ணீரும் பொறுப்பாளர்களின் இதயத்தை கரைக்கமுடியவில்லை. யாராலும் அவர்களிடமிருந்து தப்பியோடிவந்துவிடமுடியாதிருந்தது. யூரோக்களும், கல்வீடு வளவும் சொத்துக்களும் பொறுப்பாளர்களின் இதயங்களைமட்டுமல்ல வன்னியை விட்டு வௌியேறும்  வழிகளையும் திறக்கவல்லனவாய் இருந்தது. ஏழைச் சனங்களின் கண்ணீரை உதாசீனம் செய்யதபடி அவர்களது புன்னகைக்கானதெனச் சொன்னபடி துவக்குகள் சுட்டன.

எனக்கு The brotherhood of war படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது. இந்த அண்ணனும் தம்பியும்  எனக்கு பவா மச்சாளினதும் ஜெகா மச்சாளினதும் நினைவு படுத்தினர். கூடவே இயக்கத்தில் சேர்ந்து மாவீரர்களாகிப்போன ஒரே வீட்டின் பிள்ளைகள் அத்தனை பேரின் நினைவும் வந்தது. ஓரே சண்டையில் அடுத்தடுத்த நாள் செத்துப்போன ஒரே குடும்பத்தின் சகோதரர்களும் இருக்கிறார்கள். எல்லாரையும் விதைத்தோம் எதனை அறுவடை செய்தோம்? குருதி விட்டு வளர்த்தோம், கண்ணீரால் கழுவினோம் யார் யாரோ கொலரைத் தூக்கிக்கொள்ள மண்தின்ற பிள்ளைகளை சுமந்த வயிறுகளிடம் கனன்றுகொண்டிருக்கும் தீயை காலத்தின் எந்தப் பெருங்காற்றும், எந்தப் பெருநதியும் அணைக்காது. அணைக்கவும் முடியாது.

தவிப்பு என்று வன்னியிலிருந்து வெளியான முல்லை யேசுதாசனின் படமொன்றும் இருக்கிறது. அதுவும் மிக முக்கியமான படம். கரும்புலியாய் தம்பி போவான். அவனது படகினைத் தள்ளிக் கடலில் இறக்கும் குழுவில் அவனது சொந்தச் சகோதரியே இருப்பாள். கரும்புலிப்படகு தினமும் சரியாக இலக்கை அடைய முடியாமல் திரும்ப வந்து கொண்டேயிருக்கும். அப்போது கரும்புலியாய் இருக்கும் தம்பிக்காரன் தமக்கையிடம் சொல்லுவான்

“நீ அழுது கொண்டு படகு தள்ளுறதாலதான் எனக்கு இலக்கு கிடைக்குதில்லை இனிமேல் நீ படகு தள்ள வரவேண்டாம்”

தமக்கை கவலையோடு இருப்பாள். பிறகு கொஞ்ச நேரம் கழித்து அவனே திரும்பவும் அவளிடம் வந்து சொல்லுவான்

“சரி சரி அழாம வந்து தள்ளு. ஆனால் இண்டைக்கும் எனக்கு இலக்கு கிடைக்கேல்ல எண்டால் என்ர கண்ணுக்கு முன்னால வராத நான் உன்னை பார்க்கவும் மாட்டன் கதைக்கவும் மாட்டன்”

அவள் சொல்லுவாள் “உனக்கு இலக்கு சரியாக அமைந்தாலும் என்னால் உன்னைப் பார்க்கவோ கதைக்கவோ முடியாது தானேடா..”

ஒரு கனத்த மௌனத்தோடு கோவமா கவலையா என்று தெரியாமல் அவன் போவான். ஆனால் அன்றைக்கும் இலக்கு கிடைக்காது.

அடுத்தநாள் காலையில் படகு கடலில் இறக்கப்படும் போது அவன் அக்காவைத் தேடுவான் அவள் தொலைவில் நடந்துகொண்டிருப்பாள். இலக்கு கிடைக்கும். இது ஒரு உண்மைச் சம்பவம் என்பதோடு முல்லையேசுதாசனின் தவிப்பு படம் முடியும்.

மென்று விழுங்கப்பட்ட வழியனுப்புதல்களின் வடு எதனால் ஆற்றப்படக்கூடியது. தியாகங்களைக் கொண்டாடுவதால் மட்டுமே இந்தக் காயங்கள் ஆறுமா? தியாகத்தின் விலையென்ன? மேலும் மேலும் தியாகங்களைக் கோருவதா? அப்படியிருக்கமுடியாது. அவை புன்னகைகளையே யாசித்திருக்க முடியும். இன்னும் நம்மிடையே மீந்திருக்கும் தவிப்புகளின் தீர்வென்ன. தவிப்பையும் கண்ணீரையும், தியாகங்களையும் யார் அறுவடை செய்தார்கள்? யார் சுகித்திருந்தார்கள்? காலத்தின் கறைபடிந்த, ஆன்மாவை வெட்கப்பட வைக்கிற கேள்விகள் இவை. யாரிடமும் பதிலற்று நழுவிக்கொண்டிருக்கிறது காலம் நம் காலடியில். உறுதியளிக்கப்பட்ட மீள்வருகைகளுக்காக அம்மாக்களும், அப்பாக்களும், மனைவிகளும், குழந்தைகளும், சகோதரர்களும் காத்திருக்கிறார்கள்.

ஒரு சண்டையின் முடிவில் The brotherhood of war படத்தின் தம்பி தன் தமையனிடம் சொல்லுவான் “நான் இதெல்லாம் ஒரு கனவென்று நம்பவிரும்புகிறேன். காலையில் எனது படுக்கையிலிருந்து விழித்துக்கொண்டு. காலை உணவருந்துகையில் இந்தக் கொடுரமான கனவைப்பற்றி உன்னிடம் சொல்லி ஆச்சரியப்பட்டபடி பாடசாலைக்குப் போகவிரும்புகிறேன்” அவன் இப்படிச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஓரு குண்டு அவர்களின் பின்னால் விழுந்து வெடிக்கிறது. அண்ணனும் தம்பியும் பதறியடித்துக்கொண்டு பங்கருக்குள் ஒடுகிறார்கள்.

எல்லாவற்றையும் கனவென்று நினைக்கவே எனக்கும் விருப்பம். கால்களின் இழுப்பிற்குள் நுழைந்துவிட்ட பயணத்தின் திசைகளை கால்களே தீர்மானிக்கின்றன. யுத்தம் எதையும் மிச்சம் வைக்காமல் தின்றும் பசியடங்காமல் அலைகிறது. தம்பியுடையான் படைக்கஞ்சான் என்று மாமா அடிக்கடி சொல்லுவார். காலத்தின் எல்லா முடிச்சுகளும் இறுகி குற்றவுணர்வின் தாழ்வாரத்தில் ஒதுங்கிக் கிடப்பதைத் தவிரவும் வேறேதுவும் விதிக்கப்படாத தம்பியிழந்தான்கள் விழித்தபடியிருக்கிறோம் யாரைச் சபிப்பதெனத்தெரியாமல்.. திரும்பி வருவதாய் வாக்குறுதியளித்த தமையனை எண்ணித் தன் முதிய வயதில்  அழுதபடியிருக்கிறான். The brotherhood of war  படத்தின் தம்பி. ஒளியற்று நிறைகிறது திரை.

நன்றி காலம் 22வது ஆண்டுச் சிறப்பிதழ்

THE WAY HOME (வேர்களை அடையும் வழி)

Posted by த.அகிலன் on Jul 11th, 2009
2009
Jul 11

twh-01.jpgஅடுத்த வரியை நீங்கள் வாசிக்கத் தொடங்குவதற்கு முதல் அவசியம் இதனைத் தெரிந்து கொள்ளவேண்டும் நீங்கள். என்னுடைய அம்மம்மாவின் பெயர் சின்னம்மா. என்னுடைய அம்மப்பாவின் பெயர் செல்லையா.
காலம் 03.03.2005
இடம்: கிளிநொச்சியில் அமைந்த திருநகர் கிராமத்தில் எங்கட வீடு.

நான் சைக்கிளின் முன் பிரேக்கையம் பின் பிரேக்கையும் ஒண்டா அமத்தி முத்தத்தில் அரை வட்டமடிச்சு பாட்சா ரஜனி ரேஞ்சுக்கு இறங்க முதல் அம்மம்மா சொன்னா
“ஆ வாறார் அய்யா .. அவரும் அவற்ற ஸ்ரையிலும்.”
“ஹாய் சின்னம்மாக்கா”
“டேய்… பேர் சொல்லிக் கூப்பிடுறியோ” தடியை அடிக்கிற மாதிரி ஓங்கினா..
“எணெய் பெயர் என்னத்துக்கு இருக்கு கூப்பிடத் தானே.”
“ஓமடா ஆனா நீ கூப்பிட இல்ல..”
“சரி அந்த வெத்திலைப் பையைத் தாணை”
“அதுக்க இல்ல..”
“என்ன இல்லை…”
“ஆ… உன்ர …. கோ….”
ஹி ஹி ஹி ஹி…
“என்னடா இளிப்பு ஆரடா அவள்”
“எவள்?”
“அதான் நீ கண்ணன் கொயிலடியில வைச்சு கதைச்சுக்கொண்டிருந்தியாமே ஒருத்தி அவள்.”
எல்லாம் உங்கட மேளின்ர மருகள் தான்..
“மருமகளோ எவள் அவள்? எடியேய் நல்ல இளக்கயிறா எடுங்கோடி இவனைக் கட்டி வைப்பம்..”
“தாலி மஞ்சள் கயிறில எல்லோ கட்டிறது”
“தாலியோ நீ வீட்டை விட்டு வெளியில போகாம உன்னை உந்த தென்னையோட கட்டிவைக்க கயிறு கேக்கிறன் நான்”
“ஹா ஹா ஹா ணேய் அவள் நல்ல வடிவான வெள்ளைப் பெட்டையணை..”
“வெள்ளையோ வெள்ளையை என்ன கரைச்சோ குடிக்கிறது”
“ஹே அதானே செல்லையர் குடிச்சவர் என்ன…”
அதற்குப்பிறகு அம்மம்மா பேசயில்லை வெட்கப்பட்டு சிரிச்சுக்கொண்டு என்னை அடிக்கிற மாதிரி தடியை ஓங்கினா.. நான் ஓடியிட்டன். எனக்கு அம்ம்மாவைப்பிடிக்கும் அம்ம்மாக்கும் என்னைப் பிடிக்கும். எல்லோருடைய அம்மம்மாக்களும் அற்புதமானவர்கள் தான்.

அம்மம்மாக்கள் காட்டும் உலகம் புராதனமானது. அது ராஜகுமாரர்களும் இளவரசிகளும் மலைகளும் கடல்களுமென ஒரு அற்புதமான மறக்கவியலாக் கனவினைப்போல நம் வாழ்வின் நீளத்திற்கும் வழிந்துகொண்டிருக்கும். அங்கே குழந்தைகளுக்கான ரகசியங்களும் அவைகளுக்கான விடைகளும் உண்டு. வயதானவர்களைக் குழந்தைகள் என்று சொல்லுவது சரிதான் அவர்களால் தான் குழந்தைகளாக முடிகிறது. குழந்தைகளை மனிதர்களாக்க முடிகிறது. அம்மாக்களை விடவும் அம்மம்மாக்களின் சொற்கள் குழந்தைகளை எளிதில் வசப்படுத்தி விடுகிறது. அவர்களிடம் குழந்தைகளிற்குக் கொடுப்பதற்கு எப்போதும் ஏதேனும் இருந்துகொண்டேயிருக்கிறது. குழந்தைகளிடம் மறுதலிப்பதற்கு அம்மம்மாக்களிற்கு இயலுவதில்லை. குழந்தைகளும் அம்மம்மாக்களிடம் தயங்குவதில்லை.

நான் என்னுடைய அம்மம்மாவை நினைக்கிறேன். அம்மம்மா என்றால் எனக்கு இரண்டு விசயங்கள் உடனே நினைவுக்கு வரும் ஒன்று அப்பம். இன்னொன்று சத்தகம். அப்பம் என்றவுடன் நான் சரியான சாப்பாட்டு ராமனாயிருப்பேன் என்று நீங்கள் நினைத்தால் (என்னை நேரில் பார்க்காதவர்கள்) அதற்கு நான் பொறுப்பல்ல. ஏனெனில் எனக்கு தெரிந்து என்னுடைய பரம்பரையிலேயே அப்பத்தை சரியாகச் சுடத்தெரிந்தவர்கள் இரண்டே பேர். ஒன்று அம்மம்மா மற்றது பெரியம்மா. பெரியம்மாவை விட அம்மம்மாக்கு இந்த விசயத்தில எக்ஸ்பீரியன்ஸ் கூட என்பதனால் யாருடைய அப்பம் நன்றாயிருக்கும் என்பதையும் நான் சொல்லவேண்டியிருந்தால் இதை வாசிப்பதை விட்டு விட்டு வேறு வேலையிருந்தால் போய்ப் பார்க்கவும்.

மற்றது சத்தகம். சத்தகம் என்பது சிறியவகையான கத்தி(சரியான விளக்கம் தெரிந்தவர்கள் ஆட்டோ அனுப்பவேண்டாம்). அம்மம்மா சதா பெட்டிகள் இழைப்பவளாயிருந்தாள். பனை ஓலைப் பெட்டிகள் சிறியதும் பெரியதுமான பெட்டிகள். இடையிடையே பச்சை மற்றம் நாவல் கலர் ஓலைகள் வைத்தப்பின்னப்பட்ட அழகான பெட்டிகள். அம்ம்மா சத்தகத்தை கையில் பிடித்துக்கொண்டு ஓலையைக் கிழிக்கும் போதும் நறுக் நறுக் கென்று வெட்டும் போதும் எனக்கு கூசும். ஆனாலும் பிடிக்கும். அம்மம்மா எனக்கும் ஒரு பெட்டி இழைத்து தந்தாள் ஒரு குட்டிப் பெட்டி அது முற்றிலும் வண்ண இழைகளால் பின்னப்பட்டது. அதற்கு ஒரு மூடியும் உண்டு. சூர்யா தீப்பெட்டிக்குள் மூச்சுத்திணறிக்கொண்டிருந்த என்னுடைய பொன் வண்டுக்கு அந்தப்பெட்டி ஒரு அரண்மனையானது. அதனால் அம்மம்மாவின் சத்தகத்தையும் எனக்கு பிடிக்கும். அம்மம்மா பாடிக்கொண்டே இழைப்பாள்.
“மாப்பிள்ளை வாறார் மாப்பிள்ளை வாறார் மாட்டு வண்டியிலே
பொண்ணு வரா பொண்ணு வரா பொட்டு வண்டியிலே”
அம்மம்மா ஆயிரத்தெட்டு பாட்டுகளைப் பாடியிருந்தாலும் எனக்கு இந்தப்பாட்டுத்தான் ஞாபகமிருக்கு. மாப்பிளை பொம்பிளை எண்டு கலியாணத்தை பற்றியிருக்கிறதாலயே என்னவோ சின்னவயசிலயே இந்தப்பாட்டு நல்லாப்பிடிக்கும். அப்ப இது வயசுக்கு மீறின விசயம்தான் ஆனா எப்ப,எதில நாங்கள் வயசுக்கு மீறாமல் இருந்திருக்கிறம். (14 வயசில மாவீரராக் கூட ஆகிறாங்கள் இதொரு பெரிய விசயமே ஆ) அம்மம்மா சத்தகத்தாலா இல்லை பாட்டுக்களாலா எதனால் பெட்டிகளை இழைக்கிறாள் என்பதைத் தெரிந்து கொள்வது சிரமம் அப்படிப் பாடிக்கொண்டேயிருப்பாள்.
நாட்டில எவ்வளோ நடக்க உன்ர அம்மம்மா கலியாணப்பாட்டு பாடிறா என்டிறது முக்கியமோ எண்டு நீங்கள் கேக்கிறது விளங்குது. ஆனால் திடீரென்று நான் அம்மம்மா புராணம் பாடக் காரணம் The way home என்கிற படம்.
பால்யத்தின் மீளமுடியாத் திசைகளுக்கு என்னை இட்டுச்சென்றது. என்னுடைய அம்மம்மா எனக்கு கொடுத்துப்போன வாழ்வின் செழுமையான பக்கங்களில் எழுதப்பட்டிருக்கும் என் மழலைக்கிறுக்கல்களை நினைவுகளால் தடவச் செய்கிறது The way home. செத்துப்போன இந்த நகரத்து வாழ்வில் குழந்தைகளின் வாழ்க்கையும் களிப்பும் எத்தகைய மலட்டுத்தன்மையானது என்று தோன்றிற்றெனக்கு. மிக அற்புதங்கள் நிறைந்த படம்.
twh-03.jpgசங் – வூ நகரச் சூழலில் பிறந்து அதன் அத்தனை சௌகர்யங்களுடனும் வளர்க்கப்பட்டவன். திடீரென்று ஒரு விடுமுறைக்காலத்தில் அவனது தாயாரால் அவனுடைய பாட்டியின் கிராமத்துக்கு அழைத்துச் செலல்லப்படுகிறான். அவன் அந்தக் கிராமத்தை விரும்புகிறவன் இல்லை. பாட்டியையும் கூட. வாய்பேச முடியாத நகரத்தின் பகட்டுகள் எதுவுமற்ற கொஞ்சம் அழுக்காகக் கூட இருக்கிற அந்தக் கிழவியை அவனுக்கு பிடிக்கவேயில்லை. ஆனால் அம்மாதான் கட்டாயப்படுத்தி விட்டுவிட்டுப் போகிறாள். அவன் தன்னுடைய நகரத்தின் குட்டி உலகத்தை அவனது பையில் கொண்டு வந்திருக்கிறான் நகரமயப்பட்ட அவன மனத்தைப்போலவே.அவனுக்கான குடிபானங்கள் ரின் களிலான உணவுவகைகள். (எனக்கு இதைப்பார்த்துக்கொண்டிருக்கையில் வெளிநாட்டால நம்மட ஆக்கள் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு வந்து பிள்ளையளுக்கு ஊர்த்தண்ணி ஒத்துக்கொள்ளாதெண்டு சொல்லி மினரல் வாட்டருக்கு அலைஞ்சது நினைவுக்கு வந்தது. இதையும் மிஞ்சி சிலபேர் பிள்ளைகள் தண்ணி குடிக்காதெண்டும் ஒலே சோடா மட்டும் தான் குடிக்குமெண்டும் கூட சொல்லியிருக்கினம்)

சங் – வூ வை பாட்டியுடன் விட்டுவிட்டு அம்மா போய் விடுகிறாள். சங் – வூ பாட்டியுடன் பேசுவதில்லை. அம்மா போனதிலிருந்து அவனது ரீ.வி கேமுடன் எந்நேரமும் சதா விளையாடிபடியிருக்கிறான். அவனது நகரத்தில் இருந்து கொண்டு வந்த தின்பண்டங்களையே தின்கிறான். பாட்டி ஆசையாய் அவனுக்காய் தனது சுருக்குப்பையிலிருந்து இனிப்புகளை எடுத்து நீட்டுவாள். சுருங்கியும் கசங்கியும் வெறும் துணிக்கயிறு கொண்டு கட்டப்பட்டிருக்கும் அவளது சுருக்குப்பையுள் நிறைந்திருக்கும் இனிப்பை பிரியம் பொங்க எடுத்துத் தருவாள் ஆனால் சங்- வூ அதனைப் புறந்தள்ளிவிட்டு நீண்டதொரு சொக்லேட் பாரை தின்றபடி பாட்டியின் வீட்டில் குற்றுயிரும் குலையுயிருமாய்க் கிடக்கும் டி.வியில் காட்டுன் நெட்வர்க் ஏதாவது வருமா என்று அலைவரிசைகளைச் சோதிக்கிறான். பாட்டி தனது பிரியத்தை புறந்தள்ளும் அந்த நகரத்து குழந்தைமையப் புரிந்து கொண்டவளாக அமைதியாயிருக்கிறாள்.

மறுநாள் அந்தக் கிராமத்தின் சிறுவன் ஒருவனைப் பேரனுடன் விளையாட வருமாறு பாட்டி அழைத்து வருவாள். வந்தவனும் சங்-வூ வைத் தன்னுடன் விளையாட வரும்படி அழைக்கிறான். சங்- வூ அவனுடன் பேசுவதே தனக்கு பிடிக்கவில்லை என்பது போல முகத்தை திருப்பிக்கொள்வான். அந்தப் பையன் வெளியேறிவிடுவான்.

எனக்கு இந்த இடத்தில் என்னுடைய அம்மம்மா கண்டிப்பாக நினைவுக்கு வந்தாள் நான் அம்மம்மா வீட்ட போகும் போதெல்லாம் அம்மம்மா தெருவில் கிரிக்கெட் விளையாடுகிறவர்களிடம் பரிந்துரைப்பாள். ஏனெனில் அம்மம்மா வீட்ட போனால் மட்டும் தான் ஒழுங்கையில் (தெரு) விளையாட முடியும். அம்மாட்ட வீட்டுக்குள்ள ஆடு புலி சிங்கம் சேர்த்து விளையாடுற விளையாட்டெண்டாலே அரைநாள் முதல் பர்மிசன் வாங்கோணும். இல்லாட்டி வழக்கம் பொல அகப்பைக் காம்புதான் விளையாடும். ஆனால் அம்மம்மா என்னை வீதியில் விளையாட அனுமதிப்பாள். இன்னும் ஒரு படி மேல போய் “டேய் இவனையும் சேர்த்து விளையாடுங்கோடா” எண்டு அங்க விளையாடுற பெடியங்களிடம் பரிந்துரைத்திருக்கிறா. அம்மம்மா கிட்டத்தட்ட அந்த ஏரியா தாதா போல டேய் கோயிலாச்சி என்று ஒரு விநோதக் குரலில் பேசி அம்மம்மாவின் வருகையை அவர்கள் தங்களுக்குள் அறிவித்துக் கொள்வதை, வில்லியைப் போல சிறுவர்கள் அம்மம்மாக்கு பயப்பிடுவதை நான் பார்த்திருக்கிறேன். அம்மம்மா என்கிற அதிகாரமையம் அருகிலிருப்பதாலேயே நான் எத்தினையோ தரம் நான் அவுட் எண்டாலும் பொறு நான் அம்மம்மாட்ட சொல்றன் எண்டு அவர்களை வெருட்டி அவுட்டை கான்சல் செய்ய வைத்திருக்கிறேன்.(அழாப்பி அழாப்பி) அவர்களும் அம்மம்மாக்கு பயந்து கொண்டு என்னை அனுமதிப்பார்கள்.

எனக்கு இன்னொரு காட்சியிலும் அம்மம்மா நினைவுக்கு வந்தாள். சங்-வூ இரவில் டாய்லெட் போவதற்காக அம்மம்மாவுடன் வெளியே வருவான். அவளைத் தன்னைப் பார்க்கவேண்டாம் எனச் சொல்லும் அதே வேளை அவளை அங்கிருந்து போகவும் வேண்டாமெனச் சொல்லுவான். நானும் சின்ன வயசில் அம்மம்மாவை அழைத்துகொண்டு போயிருக்கிறேன் டாய்லெட்டுக்கு இரவுகளில். கழிப்பறையின் கதவுக்கு வெளியே நின்றபடி அம்மம்மாவை தொடர்ச்சியாகக் கதைத்தபடியிருக்கும்படி சொல்லுவேன். அம்மம்மா எனக்கு கதை சொல்லியபடியே இருப்பாள் அவள் ஒரு செக்கன் மௌனமானாலும் நான் பலத்த சத்தம் போட்டு பயத்துடன் அம்மம்மாவை அழைப்பேன். அம்மம்மா சிரித்தபடி நிற்கிறேன் என்பாள். அப்போதெல்லாம் எனக்கு ஆறு மணிக்கு பிறகு வீட்டுக் கேற்றுத் தடிபோடப் போறஎண்டாலும் ஆளும் பேருமாப்போனாத்தான் போவன் இல்லாட்டி அரங்கன். அம்மம்மாக்கள் எப்போதும் குழந்தைகளைப் பாதுகாக்கிறார்கள். (இப்போதைய அட்டாச் பாத்றூம்களில் இந்தச் சிக்கல் இருக்காதென்கிறவர்கள் அம்மம்மாக்களின் கதைகளையும் அறியாதிருக்கிறோம் என்பதறிக)

அம்மம்மாக்கள் எப்போதும் பேரன்களைச் சந்தோசப்படுத்திய படியே இருக்கிறார்கள். இப்போது டி.வி கேமில் விளையாடிக்கொண்டிருக்கும் சங்- வூ விடம் பாட்டியுடன் ஊசியில் நூலைக் கோர்த்துத் தரும்படி கேட்பாள். அவனோ இந்தக்கிழவியோட பெரிய கரைச்சல் என்கிற மாதிரி சினந்துகொண்டே கோர்த்துத் தருவான். அவளைத் திட்டி வீட்டுச் சுவர்களில் எழுதி வைப்பான். பாட்டி எல்லாவற்றைப் பார்த்தும் பேசாமலிருப்பாள். அவள் பேசமுடியாதவள் வேறு.

படம் முழுவதும் குழந்தைமையின் பிடிவாதமும். குட்டிக் கோபமும். தன்னை மீறி அம்மம்மாவின் மீது எழும் பிரியத்தை வெளிகாட்ட விரும்பாதவனாகவும் இருக்கிறான் நம்ம ஹீரோ சங்-வூ.
ஒரு நாள் அவனது டி.வி கேமின் பாட்டரி தீர்ந்து விடுகிறது. புதிய பாட்டரி வாங்குவதற்கு அம்மம்மாவிடம் பணம் கேட்டுக்கொண்டேயிருக்கிறான். அவளோ பதில் சொல்வதாயில்லை. பணமும் தரவில்லை. அவன் அவள் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவளது கொண்டையில் இருக்கும் அழகான ஊசியை எடுத்துக்கொண்டு அதை கொடுத்து பாட்டரி வாங்கலாமா என்று முயற்சிப்பதற்காக கடைகளைத் தேடி போகிறான். அந்தக் கிராமத்தின் சிறிய கடையில் அவன் தேடுகிற பாட்டரி இல்லை. அவன் பாட்டரி தேடிக்கொண்டே நீண்ட தொலைவு வந்து விடுகிறான். பிறகு கிராமத்துக்கு திரும்புகையில் களைத்து சோர்ந்து விடுகிறான். அவனை ஒரு பெரியவர் அவனைப் பாட்டியின் பேரன் என்று கண்டுகொண்டு அவனை அழைத்து வருகிறார். அதற்குள் அவனைத் தேடி பாட்டி வந்துவிடுகிறாள் பாதி வழி.. பாட்டியைக் கண்டதும் ஓடிச்சென்று அணைக்க ஆசையிருந்தாலும் அவள் வந்ததை விரும்பாதவனாகப் பாவனை செய்தபடி நடக்கிறான் சங்-வூ.

twh-04.jpgஅவன் கொண்டு வந்த தின்பண்டங்கள் எல்லாம் தீர்ந்துவிட அவன் அம்மம்மா தயாரிக்கும் சாப்பாட்டையே சாப்பிட வேண்டியாகிறது. அவனுக்கோ நகரத்து உணவுகள் வேண்டும். pizza,kentucky chicken , hamburger கேட்கிறான். தன் வாழ்நாட்களில் கேட்டேயிராத பெயர்களிலான உணவுப்பண்டங்களை பேரன் கேட்கிறானே எனக் கிழவி குழம்புகிறாள். பாட்டி தனது தரப்பை புரிந்து கொள்ள முயற்சிக்கிறாள் எனத் தெரிந்து கொண்டு. அவளுக்கு அவன் உச்சரிக்கும் விநோதமான உணவுப் பண்டங்கள் என்ன என்பதை தெரிவித்து விட சங்-வூ பிரயத்தனப்படுவான். தனது புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு அவளுக்கு விளக்க முயற்சிப்பான். கடைசியில் ஒரு வழியாகக் ஏதோ கோழியிறைச்சியைத்தான் பேரன் கேட்கிறான் என்கிற அளவில் கிழவி புரிந்து கொண்டு விடுவாள். கிழவி விரல்களால் தலையில் கொண்டை வைத்துக்காட்ட சங்-வூ மகிழ்ந்து ஆ அதேதான் கோழி கோழிதான் எனக்கு வேண்டும் என்பான். பாட்டி தன் தோட்டத்து விளை பொருட்களுடன் நகரத்துக்கு போவாள். சங்-வூ மிகுந்த மகிழ்ச்சியுடன் அவளை வழியனுப்புவான்.. அவளைத்திட்டித் தான் சுவர்களில் எழுதியதையெல்லாம் அழித்துவிட்டுத் தூங்கிப்போவான். அதுதான் குழந்தைமனம் சட்டென்று மறந்து விடும் அழுகையை நிறுத்தி ஹே என்று சிரிக்கும் கோபத்தைக் கலைத்து சட்டென்று முத்தமிடும். நீடித்து உள்ளுறையும் வன்மங்கள் ஏதுமற்றது குழந்தைமனம். சங்-வூஅப்படித்தான். அவனைப் பொறுத்தவரை பாட்டி இப்போது வில்லியல்ல அவன் கேட்ட தின்பண்டத்தை வாங்கிவரப்போகிற தேவதை.

பாட்டி மழையில் நனைந்தபடி கோழியை வாங்கிக்கொண்டு வருவாள். அவன் தூங்கிக் கொண்டிருப்பான் அவள் அவளுக்கு தெரிந்தது மாதிரி கோழியைச் சமைத்து வைப்பாள். பாட்டி kentucky chicken  உடன் வருவாள் என்று எதிர்பார்க்கிற சங்-வூ விற்கு தூங்கி எழுந்து பார்க்கையில் பாட்டி கோழியை தனக்கு தெரிந்த மாதிரி சமைத்து வைத்திருப்பது எரிச்சலை ஊட்ட திட்டுவான்.எங்கே என் kentucky chicken என்று ஆர்ப்பாட்டம் பண்ணுவான். பாட்டியோ என்னடா இவன் கோழி கேட்டான் வாங்கிக் கொடுத்தால் அதற்கும் திட்டுகிறான் என்பது மாதிரிப் பார்த்து கவலையடைவாள். அழுது கொண்டே சங்-வூ தூங்கிவிடுவான். பாட்டியும் தூங்கிப் போவாள். காலை எழுந்து பாரக்கையில் பாட்டிக்கு காய்ச்சல்(ஜரம்) வந்திருக்கும். பாட்டி எழுந்திருக்க முடியாமல் படுத்திருப்பாள். மழையில் மழையில் கோழி வாங்கிவரப் போனதால் தான் அவளுக்கு காய்ச்சல் வந்தது என்று சங்-வூ பாட்டியின் மீது இரக்கம் கொண்டு அவளைப் போர்த்துவான் அவள் சாப்பிட தானே எடுத்து வைப்பான். அவளுக்கு சுடுநீர் ஒத்தடம் கொடுப்பான்.

ஒருநாள் பாட்டி அவனை நகரத்து அழைத்துச் செல்வாள். அவனுக்கு பிடித்ததெல்லாம் வாங்கித் தருவாள். அவன் பாட்டியின் கிராமத்தில் இருக்கும் குட்டிப் பெண்ணொருத்தியிடம் சிநேகிதம் பிடிக்க விரும்புவான். ஆனால் எதிர் பாராத விதமாக அவர்களது சந்திப்பு மோதலில் முடிவடைந்து விடும். அவள் உனக்கு வளர்ந்த பிறகு நல்ல பொண்டாட்டியே கிடைக்க மாட்டாள் என்கிற ரேஞ்சில் திட்டி விட்டு ஓடியிருப்பாள். பிறகு ஒரு நாள் அவளே இவனோடு விளையாட விரும்பி இவனைத் தேடி வருவாள். இவன் நாளைக்கு வருவதாகச் சொல்லி வீட்டுக்கு வருவான். வீட்டுக்கு வந்ததும் நாளைக்கு அவளுடன் சேர்ந்து விளையாடுவதைக் கற்பனை பண்ணியபடியே தனது விளையாட்டுப் பொருட்களை எல்லாம் அவளுக்கு பரிசளிப்பதற்காக எடுத்து வைத்துக்கொண்டிருப்பான். பாட்டி இவனது பாட்டரி தீர்ந்து போன டி.வி கேமை ஒரு காகிதத்தில் சுற்றி இவனிடம் தருவாள்.

திடீரென்று சங் – வூ விற்கு நாளை புதிய சிநேகதியுடன் விளையாடும் போது தனது தலைமுடி அழகாயிருக்காதோ. இப்போது இருக்கிற ஸ்ரைல் அவளுக்கு பிடிக்காதோ என்கிற எண்ணம் ஏற்பட்டு பாட்டியிடம் முடிவெட்டுவது பற்றி கேட்க பாட்டி பேரனுக்கு முடிவெட்ட ஆயத்தமாகிறாள்.(புத்திசாலிப்பையன்) இவன் கொஞ்சமாக வெட்டுங்கள் என்று விரல்களால் அளவு காட்ட பாட்டி வெட்டத் தொடங்குவாள். இவன் அப்படியே தூங்கிப் போவான். பாட்டி எழுப்பும் போது தலைமுடியில் பாதி பரதேசம் போயிருப்பதை உணர்ந்து ஏன் மொட்டையாக வெட்டினாய் என்பான். பாட்டி நீதானோ அளவு காட்டினாய் என்பாள். நான் இருப்பதில் கொஞ்சத்தை வெட்டு என்றேன்.. நீ கொஞ்சத்தை விட்டு வைத்திருக்கிறாய் என்பான். இந்த தலைமுடியுடன் எப்படி நான் அவளைச் சந்திப்பேன் என்று கவலையடைவான்.

ஆனால் அடுத்த நாள் அவளுடன் விளையாடி விட்டு தனது தள்ளு வண்டியில் உட்கார்ந்த படியே பொம்மையுடன் சரிவில் இறங்குகைளில் கற்களில் இடறுப்பட்டு விழுந்து கைகால முழுக்க காயங்கள் அடைகிறான் யாருமற்ற கிராமத்து வீதியில் விழுந்து கிடப்பவனை கண்டு பாட்டியால் அழைத்து வரப்பட்டு முதலில் இவனிடம் சிநேகம் கொள்ளவந்து புறக்கணிக்கப்பட்ட கிராமத்து சிறுவன் உதவுவான். சங்-வூ இப்போது அவனிடம் மன்னிப்பு கேட்பான்.

அழுதபடியே வீடுதிரும்பும் சங்-வூ தன்னிடம் காகிதம் சுற்றப்பட்டபடி பாட்டி கொடுத்த டி.வி.கேமை எடுத்து பார்ப்பான். அந்தச் சுற்றிய காகிதத்திற்குள் பாட்டி பாட்டரி வாங்கப் பணம் வைத்திருப்பதைப் பார்ப்பான் சட்டென்று அழுகை பீறிட்டுக்கொண்டு வரும் பாட்டி தன்மீது வைத்திருக்கும் பிரியத்தை அவன் உணர்வான். பாட்டியின் தனிமையையும். அழுது கொண்டே வரும் அவனைப் பாட்டி சமாதானப்படுத்துவாள். அம்மா அவனை அழைத்துச் செல்லவரப்போவதாக எழுதிய கடிதத்தை பாட்டி அவனிடம் கொடுப்பாள்.
அவன் பாட்டியிடம் பிரியம் கொண்டு. அவளுக்கு கடிதம் எழுதக் கற்றுக்கொடுப்பான். I miss u ,I am sick இந்த இரண்டு வசனங்களையும் எழுதிக்காட்டி பாட்டியிடம் எழுதிப் பழகச் சொல்லிக்கொண்டிருப்பான். அந்த எழுத்தின் வாசனையறியாக் கிழவி அதைச் சரியாக எழுதமாட்டாள். பாட்டியைப் பிரியப்போகிறோமே. என்கிற ஏக்கம் மேலுற அவன் அழுதபடி பாட்டியிடம் சொல்லுவான். பாட்டி உனக்கு உடம்பு சரியில்லாவிட்டால் வெறும் வெள்ளைக்காகிதத்தையாவது அனுப்பு நான் அதைப் பார்த்ததும் உனக்கு உடம்பு சரியில்லை என்று புரிந்து கொள்வேன் என்பான். பாட்டியும் கண்ணீருடன் தலையசைப்பாள். அவன் பாட்டி வைத்திருக்கும் எல்லா ஊசிகளிலும் நூல் கோர்த்து வைப்பான்.

அம்மா வந்து விடுவாள் அவனை அழைத்துச்செல்ல.சங் – வூ வார்த்தைகள் ஏதுமற்றவனாக நின்று கொண்டிருப்பான். பாட்டியிடம் பேருந்தில் ஏறுமுன்பாக ஒரு சிறிய நோட்டைக் கொடுப்பான். அழுகை விம்ம திரும்பிப் பார்க்காமலே பேரூந்தில் ஏறுவான். பாட்டி பேரூந்தின் ஜன்னலைத் தட்டிக்கொண்டிருப்பாள்.. இவன் திரும்பாமல் மௌனமாயிருப்பான். பேருந்து புறப்படுகையில் இவன் பேருந்தின் பின் கண்ணாடிக்கு ஓடிச்சென்று அழுகையுடன்..பாட்டியிடம் மன்னிப்பு கேட்பான்.. கையசைப்பான்.. பாட்டியின் கையில் இருக்கும் நோட்டு முழுவதும்.. போஸ்ட் காட்டுகளில் I miss u ,I am sick என அவனது முகவரியிடப்பட்டு எழுதப்பட்டிருக்கும். பேரூந்து கிராமத்தின் அழுந்தப் புதையும் புழுதி நிலத்தை விட்டு இறுகித் திமிறும் நகரத்தின் வழவழப்பான சாலைகளில் நகரத் தொடங்கும்….

நகரவாழ்வு தின்று கொண்டிருக்கிறது குழந்தைகளின் பால்யத்தையும் பெரியவர்களின் ஆறுதலையும்.. தனித்த எலக்ரானிக் மனங்களுடன் குழந்தைகள் உருவாகிறார்கள்.பாட்டரி தீரும் வரைதான் இயங்கும் மனங்கள் அவை.. காலம் முழுதும் இயங்கும் சக்தி எங்கள் மூத்தவர்களின் சொற்களிலும் வருடலிலும் இருக்கிறது. நகரத்தின் குழந்தைகள் தொலைத்து விட்டிருக்கும் மிகப்பெரிய பொக்கிசம் இது. முதியவர்களின் கதைகளில் பெறமுடியாத அறிவை ஒரு போதும் கான்வெண்டுகள் வழங்கிவிடப்போவதில்லை. கட்டிடங்கள் ஒரு போதும் கற்றுத்தரப்போவதில்லை பூக்களும் பறவைகளுமிருக்கும் கிராமத்தின் அற்புதங்களையும் எங்கள் மூதாதையர்களின் பாடல்களையும் தடங்களையும்.

The way home

மொழி – கொரிய மொழி

வெளியான ஆண்டு – 2002

நாடு- தென் கொரியா

எழுத்து – இயக்கம் -  Jeong-hyang Lee

என்னிடம் ஒரு விநோதமான பழக்கம் இருந்தது. நான் நினைக்கிற காரியம் நடக்குமா என்பதை அறிந்து கொள்ள.. பூவா தலையா போட்டுப்பார்ப்பதைப்போல.. நான் போகிற பாதையில் ஒரு குறிப்பிட்ட தூரத்தை மூச்சே விடாமல் கடந்து பார்ப்பது மூச்சு விடாமல் கடந்தால் அந்த காரியம் வெற்றி.. இடையிலே மூச்சை விட்டு விட்டால் அந்த காரியம் தோற்றுவிடும் என்று நான் நம்பி வந்தேன்.. என்னிடம் அந்த விநோதமான பழக்கம் இருந்தது என்று சொல்வதன் மூலம் அதை நான் விட்டு விட்டேன் என்று அர்த்தம் அல்ல.. அதைப் பிரயோகிக்கும் தேவைகள் இப்போது குறைந்துள்ளன என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம்… ( இது என்ன விதமான மனோ வியாதி என்று ஆராய்பவர்கள் முடிவுகளை என் மின்னஞ்சல் முகவரிக்கு தட்டிவிடலாம்…) ஆனால் சென்னையில் மேடவாக்கத்தில் வசிக்கத் தொடங்கிய பிற்பாடு அதன் தேவை நம்பிக்கைகளையும் தாண்டி வாழ்வதற்கு அவசியமான ஒன்றாகிவிட்டது.. வேளச்சேரி மேடவாக்கம் பிரதான சாலையில் காமாட்சி மருத்துவ மனைதாண்டியதும் .. ஆலந்தூர் நகராட்சியின் குப்பை கொட்டுகின்ற இடம். இருக்கிறது அதைத்தவிர்த்து விட்டு வேறு பாதைகள் .. மிகத் தொலைவானவை..(எனக்கு)  அதைக்கடக்கும்போது.. யப்பா.. குப்பென்று அடிக்கின்ற வாசம்.எனது மூச்சடக்கும் விளையாட்டுத்தான் என்னைப் பாதுகாக்கிறது..
இதை இங்கே எழுதுவதற்கு காரணம் மூச்சுவிடுவது மற்றும் சுவாசம் தொடர்பான ஒன்றைச் சொல்ல…இயற்கை மனிதனை விரோதிக்கத் தொடங்கி தசாப்பதங்கள் கடந்து விட்டிருக்கிற நிலையில்.. இயற்கையின் அநேக வடிவங்கள் மனிதனை திருப்பித் தாக்கத் தொடங்கிவிட்டன.. தண்ணீர் வெள்ளமாய்,சுனாமியாய்.. தாகமாய் .. ஒரு குடம் குடிநீருக்கு அலையவிட்டு மனிதனை கண்ணீர்ப் பலி(ழி) வாங்குகிறது.. நெருப்பும் அவ்வப்போது தன் வக்கிரத்தை காட்டுகிறது.. நிலம் அவ்வப்போது தனக்குள் மனிதனை விழுங்கி ஆத்திரத்தை அடக்கிக் கொள்கிறது.. மரங்கள் மட்டும் தான் நேரடியாக களத்தில் இன்னமும் குதிக்காதவை(என் சிற்றறிவுக்குட்பட்டு) மரங்களும் களத்தில் குதித்தால் என்னாகும் என்று கற்பனை பண்ணிப் பார்க்கிறது happening திரைப்படம்…
மனிதனின் கொடுமை தாங்காத மரங்களெல்லாம் ஒன்றாகக் கூட்டம்போட்டு மனிதனுக்கெதிராக களமிறங்குகின்றன.. எப்படி?

படம் தொடங்கும் போது மிக ரம்மியமன பூங்காவில் மனிதர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள்.. காற்று மிதமாக வீசகிறது.. ஒரு வாங்கில் (பெஞ்ச்) அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் இரண்டு பெண்களில் ஒருத்தி திடீரென்று சிலைபோலாகி.. தனது ஹெயார் பின் எடுத்து தனது கழுத்தில் குத்திக்கொண்டு செத்துப் போகிறாள்.. இதைப்பார்த்த அவளது தோழி திகைத்து திரும்ப.. அந்த பூங்கா அமைந்திருக்கிறது தெருவில் இருந்த மனிதர்கள் முழுப்பேரும்.. ஆங்காங்கோ நடுத்தெருவில் நின்று கொண்டு.. தற்கொலை செய்து கொள்கின்றனர்.. ஒரு கட்டடத்தில் வேலை செய்து கொண்டிருப்பவர்கள் எல்லோரும் பொத்து பொத்தென்று மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்கிறார்கள்.. மீடியா அலறுகிறது தீவிரவாதிகளின் சதியா என்று அலசுகிறது.. ஏதாவது ரசாயன ஆயுதங்களின் தாக்குதலா.. தற்கொலைகள் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது..
சனங்கள் ரயிலில் ஏறித் தப்பிவிடலாம் என்று போகிறார்கள்.. தொடர்ந்து செல்வது ஆபத்தென்று கருதி ரயில் பாதிவழியில் நிறுத்தப்படுகிறது. ஆனால் ரயில் நின்ற இடமும் பாதுகாப்பில்லாத இடம் என்று அறிவிக்கிறார்கள்.. அங்கிருந்து ஓடுகிறார்கள்.. ரயிலில் ஏறித்தப்புகிறவர்களில் ஏலியட்(elliot) ஒருவன்.. அவன் சூழலில் அக்கறையுள்ள ஒரு விஞ்ஞான வாத்தியார் அவனோடு அவனின் காதலி.. மற்றும்.. அவர்களது நண்பன் யூலியன் அவனுடைய மகள் ஜெஸ் ஆகியோர் அடக்கம்.. இவர்கள் ரயிலில் வந்திறங்கிய இடமும் பாதுகாப்பில்லாத இடம் என்று அறிவிக்கப்பட.. அவர்கள் அங்கிருந்து ஓடுகிறார்கள்.. யூலியன் தான் புறப்பட்ட இடத்தில் விட்டுவிட்டு வந்துவிட்ட அவனுடைய மனைவியைத் தேடி.. மறுபடியும் அங்கே போக முடிவெடுக்கிறான்.. ஏலியட்டிடமும்  அவர் காதலி அல்மாவிடமும் தன் மகளை ஒப்படைத்து விட்டு.. போகிறான்;.. அவன் வேறு திசை இவர்கள் வேறு திசையில் போக முடிவெடுக்கிறார்கள்..
ஆனால் அங்கிருந்து சிறிது தூரம் சென்ற பின் எத்திசையில் போனாலும்.. பாதுகாப்பற்ற பிரதேசம் என்ற நிலைமை ஏற்பட்டு விடுகிறது.. எல்லாத் திசையில் மனிதர்கள் தற்கொலை செய்து கொண்டே இருக்கிறார்கள்.. இப்போது ஒரு நாற்சந்தியில்.. நான்கு பக்கமும் இவர்களைப் போலவே எங்கேபோவதெனத் தெரியாது வந்து சேர்ந்தவர்கள்.. இருக்கிறார்கள்.. அதில் ஒரு ராணுவ வீரனும் இருக்கிறான்.. அவன் ஒரு வரைபடத்தை தோண்டித் துருவி பாதுகாப்பான இடத்திற்கு வாகனங்கள் போக முடியாத ஆனால் இலகுவில் நடந்து போகக் கூடிய பாதை ஒன்றிருப்பதாகச் சொல்கிறான். இவர்கள் போகிறார்கள்.. அவன் பின்னால்.. ஆனால் இது வரைக்கும் எதனால் இப்படிநேர்கிறது ஏன் மனிதர்கள் திடீரென்று தற்கொலை செய்து கொண்டு செத்துப்போகிறார்கள் என்று தெரியாமல் எல்லாரும் குழம்பிக்கொண்டிருக்கிறார்களே ஒழிய கண்டுபிடிக்கிறார்கள் இல்லை..  இப்போது அவர்கள் இராணுவவீரன் சொன்ன பாதுகாப்பான இடத்திற்கு குழுக்குழுவாக போகிறார்கள்.. இராணுவ வீரன் நடுவிலும்.. ஏலியட் ,அல்மா எல்லாரும் முன்னாலும்.. இராணுவவீரனுக்கு பின்னால் ஒரு குழுவுமாக போய்க்கொண்டிருப்பார்கள்.. திடீரென்று இராணுவத்தான் எனது ஆயுதம் எனது நண்பன் என்று கத்திக்கொண்டே தன்னைத் தானே சுட்டுச் செத்துப்போவான்.. வெடிச்சத்தம் கேட்டு முன்னால் போன ஏலியட் குழு திரும்பிப் பார்க்கும்.. தொடர்ச்சியாக டப் டப்..என்று வெடிச்சத்தம் பின்னால் வந்தவர்கள் எல்லாரும் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று புரிய..அல்மா ஏதாவது செய் என்று கத்துவாள்.. என்ன நடக்கிறது என்று ஏலியட்டை ஆற்றாமையிலும் பயத்திலும் திட்டுவாள்.. இப்போது ஏலியட் உறுதியாக மரங்கள் வெளிவிடுகிற ரசாயனக் காற்றுத்தான் மனிதர்களைத் தற்கொலைக்கு தூண்டுகிறது என்று கண்டு பிடிப்பான்..(இதற்கு முன்பாகவும் அவன் அதைச் சொல்லிவருவான் ஆனால் சந்தேகத்துடன்) அதே கணம் மரங்கள் அசையும் காற்று இவர்களை நோக்கி வரும்.. ஓடுகிறார்கள்.. கத்தரி வெய்யில் காலத்தில் காய்ஞ்ச புல்வெளியில் பற்றிக்கொண்ட தீ போல கிசு கிசு வென்று.. இவர்களைக் காற்று விரட்டும்…. ஓடு வார்கள் முடிந்த மட்டும்.. பிறகு மூச்சை அடக்கிக் கொண்டு காற்றைத் தம்மைக் கடந்து போக விடுவார்கள். காற்றடங்கிப் போனதும் தொடர்ந்து போகிறார்கள்.. காற்றின் சூரத்தனம் அடங்குவதாயில்லை.. இவர்கள் மரங்கள் வெளிவிடுகிற இரசாயன வாயுவில் இருந்து தப்பி.. தேனும் பாலும்போல.. அல்லது ஓடும் புளியம்பழமும் போல வாழ்ந்தார்களா என்பதுதான் மிச்சம்..
உலகத் தரமாக மிகச் சிறந்த படம் என்றெல்லாம் இதை நான் சொல்லவரவில்லை.. அது சொல்ல வந்திருக்கிற செய்தி.. முக்கியமானது. இதன் இயக்குனர் செய்திருக்கிற வேலை.. மிக அற்புதமானது.  ஒரு மீட்டிங்கைப்போட்டு.. கொஞ்சம் பேர் மரங்களைப் பாதுகாப்போம் சற்றுச் சூழலைப் பேணுவோம் என்றெல்லாம் மாநாடு போட்டுப் சலிக்கச் சலிக்க புள்ளிவிபரங்களோடு பேசுகிற விசயத்தை.. மவனே புள்ளி விபரமெல்லாம் கிடையாது மரங்களெல்லாம் ஒரு நாள் வெகுண்டெழுந்திச்சின்னு வைச்சுக்கோ உன்கதை முடியும் நேரமிதுன்னு பாட்டுப்பாடக் கூட அவகாசம் இருக்காதுன்னு சொல்லிவிடுகிறது படம். (சீரியசை ஜனரஞ்சகமாக்குவது என்பது இது தானோ)  விறு விறுப்பான படமாக்கியிருக்கிறார்கள் கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் ஓடுகிற இந்தப்படத்தில் எதுவும் சலிப்பாகத் தோன்றவில்லை படம் முழுக்க படபடப்பிருக்கிறது…
படத்தின் இறுதிக்காட்சியில். அல்மாவும் ஜெஸ்சும் ஒரு கட்டிடத்திலும்.. ஏலியட் இன்னனொரு கட்டிடத்திலும் மாட்டிக்கொள்வார்கள்… காற்று உள்ளே வந்து விடக்கூடாது கதவுகள் ஜன்னல்கள் எல்லாவற்றையும் அடைத்து விட்டு  இரண்டு கட்டிடங்களையும் எதற்காகவோ இணைத்திருக்கிற குழாய் வழி இருவரும் பேசிக்கொள்வார்கள்.. கொஞ்சம் புருசன் பொண்டாட்டிப்பிரச்சினை… (காற்றே என்வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்.. காற்றே உன் பேரைக் கேட்டேன் சாதல் என்றாய் என்கிற றேஞ்சில்)
உண்மையில் இப்படி ஒரு நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை… சென்னையில் இப்போதிருக்கிற மரங்களை எண்ணிச் சொல்லிவிடலாம். ஒரு நாளில்.. இன்னும் சில பத்தாண்டுகளில் சென்னையில் கூவம் நதியில் இருந்து பல்வேறு வகையான விச வாயுக்கள் வெளியேறி.. மனிதர்களை விரட்டிக்கொண்டு வரலாம்.. எங்கே ஓடுவது… படத்தில் வரும் காட்சிகள் போல கதவுகள் எல்லாவற்றையும் பூட்டிக்கொண்டு.. மாஸ்க்குகள் சிலிண்டர்கள் என்று மாட்டிக்கொண்டு.. வாழ வேண்டி வந்தாலும் வரலாம் வாழ்க்கை ஹெக்கே பிக்கே தான் போங்க..

 

2008
May 16

 Photobucket

(1)
ஒவ்வொரு நாளும் புதுப்புது வழிமுறைகளை கையாள வேண்டியிருக்கிறது தகிக்கும் சுவர்களிடமிருந்து தப்பித்த மனோநிலையைப் பெறுவதற்காக இன்றைய இரவுக்கு ஒரு படத்தை பார்த்து விடுவதென்று தீர்மானித்தேன். தகிப்பிலிருந்து என்னை விடுவிக்கும் தன் குளுமையான காட்சிகளால் எனை விழுங்கியது tha king of masks திரைப்படம்.

ஒரு திருவிழா இரவில் எங்கும் வாணவேடிக்கை நிகழந்து கொண்டிருக்க.  ஓரமாய் தன் குரங்கோடு ஒரு கிழவர் வித்தைகாட்டிக் கொண்டிருப்பார். அவரிடம் நிறைய வித்தைகள் இருந்தன. மனதைக் கட்டிப்போடுகிற வித்தைகள். தன் அன்றாட வாழ்க்கையில் அடுத்தவனை ஏமாற்றுவதைத் தொழிலாகக் கொண்டிருக்கும் ஒருவனைக் கூட தன் கண்கட்டி வித்தைகளை நம்பச் செய்துவிடுகின்ற ஆற்றல் கொண்டவர் அந்தக் கிழவர். தன் கையில் வைத்திருந்த விசிறியை வெறும் வெளியில் சடக் சடக் கென்று மடக்கி மடக்கி விரிக்கும் போதெல்லாம் அவர் முகம் வௌ;வேறு முகமூடிகளை அணிந்து கொண்டது. நொடிக்கொரு முகமூடியை மாற்றும் அவர் வித்தையால் மொத்தக் கூட்டமும்  குதூகலித்தது. அவர் தான் முகமூடிகளின் ராஜா. (tha king of masks)

ஒரு ஓரத்தில் கிழவர் தன் வித்தையை நிகழ்த்திக் கொண்டிருக்கையில் அந்த நாட்டின் அரசில் மிகுந்த செல்வாக்குள்ளவரும் வாழும் போதிசத்துவா (பெண் தெய்வம்) என்று அழைக்கப் படுபவருமான பிரபலமான  இசை நாடக நட்சத்திர நடிகர் மாஸ்டர் லியாங் (சூப்பர் ஸ்டார்) (பெண் வேடங்களிற்கு பெயர் போனவர்)  அந்தத் திருவிழாக் கூட்டத்துக்குள் நுழைவார். அவரைப் பார்ப்பதற்காக கூட்டம் முண்டியடித்துக்கொண்டு போகும். பல்லக்கில் அமர்ந்திருக்கிற அவர் அந்தக் கூட்டதிலிருந்து விலகி ஒரு புறமாக சூப்பர் ஸ்டாரான தன்னைக் கூட மறந்துவிடுமளவுக்கு இன்னொரு கூட்டத்தை சேர்த்து வைத்துக்கொண்டிருக்கும் கிழவரைப் பார்ப்பார். கிழவர் காட்டுகிற இந்த முகமூடி மாற்றும் வித்தையிலே தன்னை மறந்து  அவரும் சொக்கிப்போவார். அது ஒரு அரிதான அழிந்து வருகின்ற கலை என்பதை மாஸ்டர் லியாங் அறிவார். இப்போது கிழவர் தன் வித்தைகளை நிறுத்தியிருந்தார். தன் முன்னே சிதறிக் கிடக்கும் மிகச் சொற்பமான சில்லறைகளைப் பொறுக்கிவைத்துக்கொண்டு ஒரு திட்டின் மீது யோசனையோடு அமர்ந்திருப்பார். அப்போது வந்து விழுந்த தங்க நாணயத்தை நிமிர்ந்து பார்ப்பார் அது வாழும் போதிசத்துவரான மாஸ்டர் லியாங் போட்ட நாணயமென்று தெரிந்து கொள்வார் கிழவர். மாஸ்டர் லியாங்கும் கிழவரைப் பார்த்து தலையசைத்தபடியே சென்று விடுவார்.

அடுத்த நாள் கிழவரை மாஸ்டர் லியாங் சந்தித்து. கிழவருடைய கலை அற்புதமானதென்றும் கிழவரை தன்னுடைய நாடகக் குழுவில் இணைந்து விடும் படியும் வருமானத்தை பிரித்துக்கொள்வோம் என்றும் கேட்பார்.ஆனால் கிழவர் மறுத்து விடுவார். மேலும் தன் கலையின் ரகசியங்களை பிறத்தியாருக்கு சொல்லித் தரமாட்டேன் என்றும் சொல்லுவார் கிழவர். நான் தனியாள் எனக்கு ஒரு பிரச்சினையுமில்லை ஆனால் ஒரு வாரிசில்லை என்கிற கவலைதான் என்னைப் பிடித்தாட்டுகிறது சகோதரனே என்று சொல்லுவார். அதற்கு மாஸ்டர் லியாங்கோ நீங்கள் என்னை சகோதரனே  என்று அழைத்தாலும் பாதி நாட்களில் பெண்வேடத்தில் பெண்ணாகவே வாழ்ந்து விடுகிறேன். இந்தச் சமூகமும் என்னை பெண்வேடத்திலேயே வைத்திருக்க விரும்புகிறது என்பார். அவரவர் துன்பம் அவருக்கு என்றபடி கிழவரிடம் விடைபெறுவார். கிழவர் விரைவில் தனக்கான வாரிசைத் தேடிவிட வேண்டு மென்றும் அவரது கலையை அழியவிடக் கூடாதென்றும் மாஸ்டர் லியாங் கேட்டுக் கொள்வார்.

மாஸ்டர் லியாங்குடனான சந்திப்பிற்குப் பிறகு கிழவர் தனக்கான வாரிசொன்றை உருவாக்கிவிட வேண்டும் என்று முடிவெடுப்பார். குழந்தைகளை நேர்த்திக்கு விற்கிற ஒரு இடத்திற்கு தனது வாரிசாக உருவாகத் தகுதியான ஆண் பிள்ளையை வாங்குவதற்காக போவார். ஆனால் அங்கே அதிகமும் பெண்குழந்தைகள் தான் இருக்கும். என்னைக் கூட்டிக்கொண்டு போங்கள் என்னைக் கூட்டிக்கொண்டு போங்கள் நான் உங்களிற்காக சுத்தம் பண்ணுவேன் சமைப்பேன் என்று அந்தப் பெண் குழந்தைகள் அவரிடம் கெஞ்சும். ஆனால் கிழவரோ எனக்கு ஒரு ஆண்பிள்ளைதான் தேவை என்று கூறியபடியே அந்தப் பெண்குழந்தைகளைப் புறக்கணித்தபடி நடப்பார். அந்தச் சந்தையில் தனக்குப் பொருத்தமான ஒரு குழந்தை இல்லை என முடிவு செய்து அவர் வெளியேற எத்தனிக்கையில் தாத்தா தாத்தா என்று அழைக்கிற குரல் கேட்டு அவர் திரும்பிப் பார்ப்பார். அங்கே ஒரு சின்னப் பையன் நின்று கொண்டிருப்பான். அந்தச் சின்னப் பையனை விற்க வந்தவனோ பத்து டாலர் தந்தால் பையனைத் தருவேன் என்பான். கிழவர் அது அதிகம் என்றபடி போவார். அவன் ஐந்து டாலருக்கு இறங்கி வருவான். கிழவர் அதுவும் அதிகம் என்று புறப்படுவார். அப்போது தாத்தா தாத்தா என்று அழைக்கிற அந்தக் குழந்தையின் மனசைப் பிசைகிற குரல் அவரை எதுவோ செய்ய அந்தச் சிறுவனை அவர் ஐந்து டாலருக்கு வாங்கிக் கொள்வார்.

இப்போது அவர் தனக்கு வாரிசு கிடைத்து விட்டான் என்ற புழுகத்துடன் எல்லாரிடமும் தான் வாங்கிய பையனை அது தன்னுடைய பேரன் என்று சொல்லிக்கொண்டே செல்வார். அவரது வசிப்பிடம்  நதியின் மீது இருந்த ஒரு படகு வீடு. அவர் அங்கு வைத்து அந்தக் குழந்தையிடம் தன் முகமூடி வித்தைகளைச் செய்து காட்டி மகிழ்விப்பார். அவனுக்கு டொக்கி என்று செல்லப் பெயர் வைத்து அழைப்பார். அப்படியே தன்னைவிட்டு முப்பது வருடங்களிற்கு முன்னால் ஓடிப்போன தன்மனைவியைப் பற்றியும், பத்து வயதான தன் மகன் நோய்வாய்;ப் பட்டு இறந்து போனது பற்றியும் சொல்லுவார். இப்போது நீ மட்டும் தான் எனக்கிருக்கிறாய் என்று சொல்லும் கிழவரைச் சிறுவன் பார்த்துக்கொண்டேயிருப்பான்.  தான் வித்தைகாட்டுகிற இடங்களிற்கு அவனையும் கூட அழைத்துச் செல்வார். அவன் தனக்கும் இந்த வித்தையைக் கற்றுத் தருவீர்களா? என்று கேட்க. ஆமாம் உனக்கு மட்டும் தான் இந்த வித்தை அதை உனக்கு மட்டும் தான் கற்றுத் தருவேன் ஏனெனில் அது குடும்பத்தின் சொத்து. இதை வெளியாட்களும் அதைவிட முக்கியமாகக் பெண்களும் கற்றுக்கொள்ளக் கூடாது. என் வாழ்க்கையில் என்றைக்குமே சொல்லித்தரவும் மாட்டேன் என்று சொல்லுவார். இதைச் சொல்லும் போது கிழவர் மிகவும் அழுத்தமாகச் சொல்லுவார்.

ஒரு நாள் இவர் தனது பேரனைத் தோளில் சுமந்தபடி மாஸ்டர் லியாங்  நடிக்கிற இசை நாடகம் ஒன்றைப் பார்ப்பதற்காக போவார். மாடியில் ஒப்பனையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கும் மாஸ்டர் லியாங் கிழவரைக்; கண்டு விட்டு அவரிடம் அவர் தனது வாரிசைக் கண்டு பிடித்து விட்டதற்கு வாழ்த்துச் சொல்லுவாள். அவரைத் தனது பேரனுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளச் சொல்லுவார். கிழவர் தன் பேரனுக்கு மாஸ்டர் லியாங்கை அறிமுகம் செய்து வைத்து விட்டுப் பேரனுடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளுவார். நாடகம் முடிவடைந்ததும் கிழவரும் பேரனும் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் வழியில் ஒரு இடத்தில் கரும்பை யார் சரிபாதியாக நிலைக்குத்தாகப் பிளக்க முடியும் என்று போட்டி வைத்துக்கொண்டிருப்பார்கள். கிழவர் தான் முயற்சிப்பதாய்ச் சொல்லி வெகு அனாசயமாக அதை நிலைக்குத்துச் சரிபாதியாகப் பிளந்தெறிவார் வெண்ணெயைப் போல. அடுத்த கரும்பையும் கிழவர் பிளக்க முயற்சிக்கும் போது போட்டி நடத்துகிறவன் ஒளிந்திருந்து கெட்டப் போலால்(உண்டி வில்) அவரைத் தாக்குவான் கைதவறிக் கத்தி காலில் பட்டு வெட்டிவிடும். கிழவர் டொக்கியை பக்கத்து கடையில் வைன் வாங்கி வரச்சொல்லி விரட்டுவார். வைன் வந்ததும் அதைக் காயத்தின் மீது விசிறியடித்து விட்டு மீதமிருந்த வைனை ஒரு துணியில் நனைத்து எரித்து அந்தச் சாம்பரின் மீது டொக்கியை ஒண்ணுக் கடிக்கச் சொல்வார் அவன் தயங்குவான். என்ன ஒண்ணுக்கு வரவில்லையா பரவாயில்லை அடி அப்பதான் எனக்கு காயம் ஆறும் என்று கிழவர் துரிதப் படுத்து வார். டொக்கி மேலும் தயங்கிய படி அழ ஆரம்பிப்பான் கிழவர் ஏன் அழுகிறாய் அடி என்று சொல்லுவார். அப்போது டொக்கி அழுதபடி தான் ஒரு ஆண் அல்ல என்றும் தான் ஒரு பெண் என்றும் அழுதபடி சொல்லுவாள். கிழவர் திடுக்கிட்டுப் போவார். தான் வெட்டப்பட்டது கத்தியால் அல்ல இவளது சொற்களால் தான் என்பது போல ஆத்திரத்துடன் ஒரு சின்னப் பெட்டை என்னை ஏமாற்றிவிட்டாயே என்று திட்டியபடி எல்லாவற்றையும் விட்டெறிந்து விட்டு கோபத்துடன் நடந்து செல்ல ஆரம்பிப்பார். அவரைத் தொடர்ந்து நடந்து போகிற டொக்கி தான் அவரை ஏமாற்றுவதற்காக அப்படிச் செய்யவில்லை என்றும். தான் இதுவரை நிறையத் தடவைகள் விற்கப்பட்டிருப்பதாகவும் ஆனால் யாருமே உங்களைப் போல அன்பாக நடத்தவில்லை எங்கே நான்  பெண் என்று தெரிந்தால் நீங்கள் என்னை சேர்த்துக்கொள்ள மாட்டீர்களோ என்றுதான் தான் பொய் சொன்னதாக கிழவருக்கு சமாதானம் சொல்லுவாள். அனால் கிழவரோ சமாதானம் ஆகாதவராக  அவள் தன்னை முட்டாளாக்கி விட்டதாக மேலும் மேலும் திட்டிக்கொண்டே போவார்.

இப்போது டொக்கி கிழவரிடம் கெஞ்சுவாள். தான் ஒரு பெண் என்று தெரிந்ததனால் தன்னை மறுபடியும் விற்று விடவேண்டாம் என்று கிழவரிடம் கெஞ்சுவாள். கிழவரோ நான் உன்னை விற்கப்போவதில்லை என்று சொல்லிக் கொண்டே ஒரு பணப்பையை அவளெதிரில் விட்டெறிந்து இதை எடுத்துக்கொள் போ போய் எங்காவது பிழைத்துக்கொள் என்பார். டொக்கியோ தான் எங்கே போவேன் என்கிற கேள்வி தொனிக்க அவரைப் பரிதாபமாய்ப் பார்த்தபடி விம்மி விம்மி அழுதபடியே பணப்பையை எடுக்காமல் இருப்பாள். கிழவர் அவளைக் கரையிலேயே அழுதபடி கைகழுவி விட்டு விட்டு தனது படகு வீட்டை அவிழ்த்து நதியிலே கலக்க விடுவார். டொக்கி  அவரது துடுப்பை பற்றியபடி நான் நன்றாக சமைத்து வீட்டை சுத்தமாக வைத்திருக்கிறேன் என்னை ஒரு வேலைக்காரியாக மட்டுமாவது வைத்திருங்கள் என்று மன்றாடுவாள். கிழவர் கோபத்துடன் அவளைத் எத்தித் துரத்திவிட்டு படகை எடுத்துக்கொண்டு புறப்படுவார். டொக்கி நதியின் கரைமுழுதும் தாத்தா தாத்தா என்று கத்தியபடியே ஓடுவாள். அவள் ஓடுவதைப் பார்க்கிறபோது எழுந்து அவளுக்கு உதவியாக அந்தக் கிழவருக்கு இரண்டு போடமாட்டோமா என்றிருக்கிறது. கிழவர் மீது கரைபுரண்ட கோபம் எழுகிறது. கரைமுடிந்து போகிற ஒரு இடத்தில் தண்ணீருக்குள் இறங்கி அவரது படகை நோக்கிப் போக முயல்வாள் டொக்கி. நீச்சல் தெரியாத அவள் தாத்தா தாத்தா என்று கதறியபடி மூழ்குவதைப் பார்க்கிற பெரியவர் மனம் கேட்க மாட்டாமல் படகிலிருந்து குதித்து அவளைக் குதித்துக் காப்பாற்றுவார்.

Photobucket

அதன் பிறகு அவள் தன்னோடிப்பதற்கு சம்மதிக்கும் கிழவர். ஆனால் அவள் இனிமேல் தன் வாரிசாக முடியாதென்றும் அவள் ஒரு வேலைக்காரியாகத்தான் இருக்க வேண்டும் என்றும் சொல்லுவார். அவளிடம் தன்னை இனிமேல் தாத்தா என்று சொல்லக் கூடாதென்றும் இன்றிலிருந்து அவள் தன்னை முதலாளி என்றுதான் அழைக்க வேண்டும் என்றும் சொல்வார். வேலை செய்தால் மாத்திரமே இனிமேல் உனக்கு  சாப்பாடு கிடைக்கும் என்பார். அவள் சரி முதலாளி என்று அவர் சொன்னதற்கெல்லாம் ஒத்துக்கொள்வார். கிழவர் தன் முகமூடி மாற்றும் வித்தையைத்  தவிர்த்து விட்டு அவளுக்கு வேறு சில கரணமடிக்கும் வித்தைகள் சொல்லிக்கொடுப்பார். அன்றிலிருந்து அவரும்,டொக்கியும்,அவரது குரங்கு (ஜென்ரல் அதன் பெயர்) சேர்ந்தே வித்தை காட்டப் போவார்கள். டொக்கியும்,குரங்கும் தம் உடலை விதவிதமாய் வளைத்து கரணமடித்து பார்வையாளர்களின் மனசை வளைப்பாள். அவள் கிழவர் தன் கூடாரத்திற்குள் மூகமூடி மாற்றும் வித்தைக்கான ஒத்திகை பார்த்துக்கொண்டிருக்கையில் ஒளிந்திருந்து அவர் எப்படி அந்த வித்தைக்கு தயாராகிறார் என்பதை ஏக்கத்துடன் பார்ப்பாள். அவளிடம் அந்த வித்தையைக் கற்பதற்கான ஆர்வம் அதிகமிருக்கும். என்னதான் உடலை வில்லாக வளைத்தாலும் அவளால் கிழவரின் மனசை வளைக்க முடியவில்லை. அவர் பெண்களைத் தன் வித்தைக்கு வாரிசாக்குவதில்லை என்னும் முடிவில் உறுதியாக இருந்தார்.

ஒரு நாள் கிழவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அவள் அவரது வித்தைப் பெட்டியில் இருந்து முகமூடிகளை எடுத்து தன் முகத்தில் பொருத்திப் பார்ப்பாள். அந்த முகமூடிகள் அவளது முகத்துக்கும் மாற்றத்தைக் கொடுத்தன. அப்போது அவளுக்கு முன்னால் எரிந்து கொண்டிருந்த விளக்கில் தவறுதலாகப் பட்டு முகமூடி பற்றிக்கொண்டு எரிந்துவிடும் அவள் அதை அணைக்க முயற்சி செய்வதற்கிடையில் தீ தொடர்ந்து பற்றி அவர்களுடைய படகு வீடே பத்திக்கொண்டு எரியும் உதவி செய்ய யாருமற்று அவள் தீ தீ என்று கத்திக்கொண்டே அவரது வித்தைப் பெட்டியை மட்டும் தீயிடமிருந்து காப்பாற்றி எடுத்து வருவாள். அந்தப் பிஞ்சின் கனவுகளையும் ஆசையையும் தீ தின்று தொலைத்து விட்டிருக்கும்.

படகு வீடு முற்றிலுமாக எரிந்து போயிருக்கும். கிழவர் வந்து பார்ப்பார் அவள் அவருக்குப் பயந்துகொண்டு வீட்டை விட்டு ஓடிவிடுவாள். கிழவரும் அவள் போவதையே விரும்பியவராக தனது வீடெரிந்து விட்டதே என்கிற துயரத்துடன் அலைந்து கொண்டிருப்பார்.  டொக்கி மறுபடியும் பிச்சையெடுத்தும் திருடியும் வாழும் நிலைக்கு தள்ளப்படுவாள். அழுக்கேறிய சட்டையுடனும் அதைவிடக் கொடூரமான பசியுடனும் தெருக்களில் அலைந்து கொண்டிருப்பாhள். அப்போது யார் அவளைக் கிழவரிடம் விற்றானோ அவனிடமே மறுபடி அகப்பட்டுக்கொள்வாள். அவளைக் ஒரு இடத்திற்குக் கொண்டு செல்கிற அவன் அவளை ஒரு பழைய மரச்சாமான்கள் வைக்கும் அறையில் அடைத்து வைக்கிறான். இப்போது டொக்கி அந்த அறையில் ஏற்கனவே அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு அழகான குட்டிப் பையனைப் பார்க்கிறாள். அவன் விக்கி விக்கி அழுதுகொண்டிருக்கிறான் மிகச் சிறிய கிண்ணத்தில் தன் முன்னே வைக்கப்பட்டிருக்கும் உணவைக் கூடச் சாப்பிடாமல். அவன் சாப்பிடாமல் வைத்திருக்கும்; உண்வை மிகுந்த பசியுடன் எதுவும் பேசாமல் சாப்பிட்டு முடிப்பாள் டொக்கி. அப்போது அந்தச் குட்டிப் பையன் தன் கையிலிருந்த முட்டை ஒன்றையும் இவள் பக்கமாய் நீட்டி இதையும் சாப்பிடு எனபான்;. அவள் அதைச் சட்டென்று வாங்கி ஒரு கடி கடித்துவிட்டு பிறகு ஒருகணம் யோசிப்பாள். அதன் பின்பே அவள் அவனது பெயர் என்ன என்கிறாள். அடுத்து சில நிமிசங்கிளிலேயே அவளை அவன் அக்காவாக ஏற்றுக்கொண்டு விடுகிறான். அவள் தனது தாத்தா king of masks என்று சொல்கிறாள். அவன் தன் தாத்தாவும் கிங் என்று சொல்லுவான். இவள் சிரித்தபடி எனது தாத்தா பெரியவர் நிறைய வித்தைகள் தெரிந்தவர் அப்படி இப்படி என்று கிழவரைப் புகழ்ந்து அந்தச் சின்னப் பையனின் குண்டுக் கண்களை விரியச் செய்வாள்.

இரவானதும் அவள் அவனையும் அழைத்துக்கொண்டு அந்த அறையில் இருந்தும் அவர்களை அடைத்து வைத்திருக்கிற கூட்டத்திடமிருந்தும் தப்பி ஓடுவாள். தப்பித்த அன்று இரவு மறைவான ஒரு இடத்தில் தங்கும்போது அவள் நாளைக்கு உன்னை என் தாத்தாவிடம் அழைத்துச் செல்கிறேன் அவர் உன்னைப்போல ஒரு ஆண் பிள்ளையைக் கட்டாயம் விரும்புவார் என்று சொல்லுவாள்.

அடுத்த நான் அந்தச் சிறுவனை கிழவரின் படகு வீட்டில் விட்டு விட்டு அவள் போய்விடுவாள். கிழவர் தன் படகு வீட்டில் இருக்கிற சிறுவனைப் பார்த்து மகிழ்வார். தனக்கு வாரிசு கிடைத்து விட்டான் என்று அவனைத் தூக்கிக் கொஞ்சுவார். அவர் அவனிடம் உனது வீடு எப்படியிருக்கும் என்று கேட்பார். உன்னை யார் இங்கு கொண்டு வந்தது என்றும் கேட்பார். அவனோ எனது வீடு ஒரு மாளிகை என்றும் தன்னை இங்கு அக்கா கொண்டு வந்தாள் என்றும் சொல்லுவான். அக்கா …. கிழவருக்கு டொக்கி தான் அவனைக் கொண்டு வந்திருக்கிறாள் என்று புரிந்து போகும். அவர் படகு வீட்டை விட்டு வெளியில் வந்து அவளை அளைப்பார் ஆனால் அவள் அங்கிருக்க மாட்டாள். அவன் தன் வீடு மாளிகை மாதிரி என்று சொல்வதை கேட்டுச் சிரிப்பார் கிழவர். ஆனால் அவர் அப்போது அறிந்திருக்கவில்லை அந்தச் சிறுவன் அந்த நாட்டு அரசரின் பேரன் என்பதையும். அவனைக் காணவில்லை என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதையும் கூட.  அரச படைகள் குழந்தையைத் தேடிக் கொண்டிருந்தன. அடுத்த நாள் டொக்கி ஒரு தோட்டத்தில் முள்ளங்கிகளைத் திருடிக் கொண்டிருக்கையில் கிழவரை அரசபடைகள் இழுத்துச் செல்வதைக் காண்பாள்.

Photobucket

அவரை ஏன் இளவரசரைக் கடத்தினாய் என்று விசாரிப்பார்கள். அவரோ எனக்கு இதைப்பற்றி எதுவும் தெரியாது என்பார். ஆனால் விசாரணையில் போலீசார்; அவருக்கு அடிப்பார்கள். அவருக்கு உங்ளே அடிவிழும்போது வெளியே மரத்தில் இருக்கிற அவரது குரங்குக் குட்டி தவியாத் தவிக்கும். தன் எஜமானன் அடிவாங்குவதைப் பொறுக்க முடியாமல் பரபரக்கும். இப்போது கிழவர் இளவரசனைக் கடத்திய குற்றத்திற்காக சிறையிலடைக்கப்படுவார். இதுவரை இடம்பெற்ற குழந்தைக் கடத்தல்களிற்கெல்லாம் அவர்தான் காரணம் என்று அவர் மீது அனைத்து வழக்குகளையும் போடுவார்கள்.(எல்லா நாட்டுக் காவல்துறையும் ஓரே மாதிரித்தான் போல) டொக்கி சிறைக் காவலனிடம் கெஞ்சி. கிழவரைப் போய்ப் பார்ப்பாள். அவரிடம் முதலாளி தான் உங்களிற்கு ஒரு ஆண் பிள்ளை வேண்டும் என்பதனாலேயே அவனை அழைத்து வந்ததாகவும் ஆனால் அது உங்களை இப்படிச் சிக்கலில் மாட்டிவிடுமென்று தான் நினைக்கவில்லை உங்களைச் சிக்கலில் மாட்டிவிட்ட என்னைத் தண்டியுங்கள் என்று அவள் அவரிடம் மன்றாடி அழுவாள். ஆனால் கிழவரோ டொக்கி இது என்னுடைய விதி இதற்காக நான் உன்னைக் குற்றம் சொல்லமாட்டேன் என்று சொல்லுவார். டொக்கி தன்னுடன் எடுத்து வந்திருந்த அவரது முகமூடிகளை அவரிடம் கொடுப்பாள். அவரோ அவற்றை வாங்கி அழுதபடி இவற்றோடு விளையாடிபடியே என்வாழ்நாட்களை கழித்து விடலாம் என்று நினைத்தேன் ஆனால் இனி இவற்றிற்கு என்ன வேலை என்று  விசும்பியபடி அவற்றைக் கிழித்தெறிவார். இந்தக் கலை என்னுடனேயே அழிந்து போகப் போகிறது என்று அழுவார். அதை அழித்த பாவத்தை நான் செய்யப் போகிறேன் என்று கதறுவார் அவளிடம் அவரது குரங்கைக் கொடுத்து எமது வீட்டில் கொஞ்சப் பணமிருக்கிறது இந்தக் குரங்கையும் உன்னுடன் வைத்துக்கொள் எங்காவது போய்ப் பிழைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லுவார். டொக்கியோ குரங்கைக் கையில் பிடித்தபடி முதலாளி முதலாளி என்றழைத்துக் கொண்டே அழுவாள். கிழவருக்கு இப்போது அவள் முதலாளி என்றழைப்பது உறுத்தினாலும் ஒன்றும் சொல்லமாட்டார். அதற்குள் டொக்கி கதறக் கதற காவலாளி அவளை இழுத்துச் சென்று சிறைக்கு வெளிளே விடுவான்.

குரங்குடன் அழுதபடி வரும் டொக்கியைக் கண்ட கிழவரின் நண்பர் ஒருவர் அவளிடம் கிழவரைக் காப்பாற்ற ஒரு வழியிருக்கிறதென்றும், அந்த நாட்டின் வாழும் போதிசத்துவர் மாஸ்டர் லியாங் கிழவரின் நண்பர் என்றும். அவர் நாட்டின் செல்வாக்கானவர்களில் ஒருவர் அவரிடம் சென்று நீ உதவி கேள் அவரால் மட்டுமே  king of masks இனைக் காப்பாற்ற முடியும் என்று சொல்லுவார். டொக்கி பெரிய பிரயத்தனப் பட்டு ரசிகர்களாலும் பிரமுகர்களாலும் சூழப்பட்டிருக்கிற மாஸ்டர் லியாங்கை சந்திப்பாள். அவரிடம் தான் king of masks ன் பேத்தி என்று அவரிடம் அறிமுகப் படுத்திக் கொள்வாள். மாஸ்டர் லியாங் டொக்கி நீ ஆணாக இருந்தாயே என்பார். டொக்கி அவரிடம் கிழவர் கைது செய்யப் பட்டிருப்பதையும் நடந்த உண்மைகளையும் அவரிடம் சொல்லி தன் தாத்தாவைக் காப்பாற்றுங்கள் என்று வேண்டுவாள்.

இப்போது மாஸ்டர் லியாங் அவளைக் கவலைப்பட வேண்டாம் என்றும் தான் அவளுக்கு உதவி செய்வதாகச் சொல்லுவார். ஆனால் அடுத்தநாளே அவர் டொக்கியிடம் கொஞ்சப் பணத்தை கொடுத்து தான் எவ்வளவோ முயற்சி செய்தும் தாத்தாவின் விவகாரத்தில் டொக்கிக்கு உதவ முடியவில்லை என்றும் தன் செல்வாக்கை வைத்துக் கொண்டு உள்ளுர்; அரசியல் விவகாரங்களில் தலையிட முடியாதென்றும் கவலையோடு சொல்லுவார். டொக்கி அழுதுகொண்N;ட வெளியேறுவாள்.

ஆனால் அன்று மாலை மாஸ்டர் லியாங்கின் பரம ரசிகரான காவல்துறை ஜெனரல் கலந்து கொள்கிற மாஸ்டர் லியாங்கின் நாடகம் நடைபெறுவதைத் டொக்கி தெரிந்து கொண்டு. நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்தில் கூரை மேல் ஏறிக்காத்திருப்பாள். நிகழ்ச்சி முடிவடைந்ததும் கூரையில் இருந்து கயிற்றில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டே காவல்துறை ஜெனரலைப் பார்த்து கத்துவாள் என் தாத்தா நிரபராதி அவரை விடுதலை செய்யுங்கள் குழந்தைகளைத் தாத்தா கடத்த வில்லை. அந்தக் கடத்தல் கும்பலிடமிருந்து இளவரசரைத் காப்பாற்றி அழைத்து வந்தது நான் தான் தாத்தாவுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லுவாள். காவல் துறை ஜெனரல் யார் இவள் என்று கேட்பார். அப்போது மாஸடர் லியாங் நேற்று நான் உங்களிடம் கேட்டேனே king of masks ஐப் பற்றி. அவரது பேத்தி என்று சொல்லுவாள். காவல்துறை ஜெனரலோ அதுதான் நேற்றே சொல்லிவிட்டேனே நாங்கள் இந்த விவகாரத்தில் தலையிட முடியாதென்று என்பார். ஆனால் டொக்கியோ மேலே தொங்கிக் கொண்டே நீங்கள் இதைப்பற்றி மீண்டும் விசாரிப்பதாக உறுதி தராவிட்டால் நான் கயிற்றை அறுத்துக்கொண்டு இறந்து விடுவேன் என்று சொல்லுவாள். ஆனால் காவல் துறை ஜெனரலோ இப்படிச் சொல்பவர்கள் ஒரு போதும் அறுத்துக்கொண்டு சாகமாட்டார்கள் நீங்கள் உங்கள் வேலைகளைக் கவனியுங்கள் என்று சொல்லிவிட்டுப் புறப்படுவார்.  ஆனால் டொக்கி கயிற்றை அறுத்துக்கொண்டு கீழே விழுவாள் அவளை நிலத்தில் விழுந்து விடாமல் மாஸ்டர் லியாங் ஏந்திக் கொண்டு படிகளில் உருண்டு அவளைக் காப்பாற்றுவார். மாஸ்டர் லியாங்கிற்கும் அடிபட்டுவிடும். அவர் காவல்துறை ஜெனரலிடம் இந்தக் குழந்தை தன் உயிரைத் தியாகம் செய்ய முன்வந்த பிறகும் உங்களிற்கு இரக்கம் வரவில்லை என்றால் நீங்கள் தராளமாக கிழவரைப் பற்றி விசாரிக்காமல் விடுங்கள் என்பார். காவல்துறை ஜெனரல் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு தான் உடனடியாக இதில் தலையிடுகிறேன் என்பார்.

விடுதலையாகிற கிழவர். மாஸ்டர் லியாங்கிடம் சென்று தன் நன்றிகளைச் சொல்வார் மாஸ்டர் லியாங்கிடம். ஆனால் லியாங்கோ மறுத்தபடி நீங்கள் நன்றி சொல்வதாக இருந்தால் அதை டொக்கிக்குத்தான் சொல்லவேண்டும் ஏனெனில் அவாள்தான் உங்களைத் தன் உயிரைக் கூடத் துச்சமென மதித்து காப்பாற்றினாள் என்று சொல்லுவார். கிழவர் உடைந்த மனநிலையுடன் தன் படகு வீட்டிற்கு போவார் அங்கே வீட்டைச் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கிற டொக்கியையும் தன் குரங்கையும் பார்ப்பார். இவரைக் கண்டதும் முதலாளி என்று அழைக்கும் டொக்கியை நோக்கி அழுதபடி தன்னைத் தாத்தா என்று அழைக்கும் படி சொல்லுவார். இப்போது டொக்கியின் முகம்  துன்பங்கள் வடிந்து பிரகாசமானதாய் மாறும் கூடவே முகமூடிகளாலும்.

Photobucket

(2)

இந்தப்படம் இந்த இரவில் என்னை பெண்களுக்கும் ஆண்களிற்கும் விதிக்கப்பட்டிருக்கிற எல்லைகள் குறித்து சிந்தனைகளைக் கிளப்பி விட்டது.  பெண்களுக்கு ஆண்களிற்கு என்று ஒதுக்கப் பட்டிருக்கிற எல்லைகள் சமூகத்தின் எல்லா இடங்களிலும் எல்லாத் தளங்களிலும்  இறைந்து கிடக்கிறது. பெண்கள் பேசக் கூடியவிசயங்கள் செய்யக்கூடிய செயல்கள் என்று வரையறைகள் உள்ளன. கிழவரிடம் டொக்கியின் மீPதான பிரியம் உள்ளே ஒளிந்திருந்தாலும். பாரம்பரியத்தில் ஊறிக்கிடக்கிற அவரது மனதின் மறுபாதி அவளுக்கு தன் கலையைச் சொல்லிக்கொடுக்கத் தயங்குகிறது. இவளை எப்படி தன் வாரிசாக கொள்ள முடியும் என்று குமைகிறார். சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளைக்குத்தாள் தன் கலையைச் சொல்லிக்கொடுப்பேன் என்கிறார். அவரைப் பெண்களிற்கு தன்கலையைக் கற்றுக்கொடுக்க கூடாது என்கிற தன் மனோநிலையில் இருந்து இறங்கி வர வைப்பதற்கு டொக்கி நிறையப் போராட வேண்டியிருக்கிறது. அவரிடம் மட்டு மல்ல இந்த சமூகத்திடமும்.

இந்தப்படம் எனக்கு என்னுடைய கோபக்காரா மாமா ஒரு வரை நினைவு படுத்தியது. அவருக்கு 6 பெண்பிள்ளைகள் ஆறுமே பெண்கள் தான். ஒரு ஆண் பிள்ளை கூடக்கிடையாது. அவர் அது குறித்து மிகவும் கவலைப் பட்டார் என்று நினைக்கிறேன். கவலைப் படாமல் இருக்க முடியுமா சீதனம் மாப்பிள்ளை படிப்பு செலவு என்று ஒரே கவலை ஆனால் அதெல்லாவற்றையும் விட அவரை வாட்டி வதைக்கிற ஒரு கவலையாய் தனக்கு கொள்ளி வைக்க ஒரு பிள்ளை இல்லை என்பதாய் இருந்தது. அந்தக் கவலை அவரது ஒவ்வொரு செய்கையிலும் இருக்கிறதாய்ப் படும் எனக்கு.

என் சின்ன வயசில் நடந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. ஒரு முறை மிளகாய்க் கண்டுகளிற்கு தண்ணீர் இறைப்பதற்காக கிணற்றுக்குள் பலகை கட்டி அது கயிற்றில் தொங்கிக் கொண்டு நிற்கும் அந்தரத்தில். அதிலே வாட்டர் பம்பை வைத்து தண்ணீர் இறைத்தால் தான் தண்ணீர் இழுக்கும் பம்ப். ஆழம் அப்படி கிணறுகளில். விஸ்ணு அந்தக் கிணறுகளில் இறங்கித் தேட ஆரம்பித்திருந்தால் இன்னும் வேலை சுலபமாக முடிந்திருக்கும் (அடியதை; தேடுவதற்கு தோண்டுகிற வேலை குறைந்திருக்கும் என்கிறேன்) ஆழம் அப்படி. அப்படி ஒரு முறை இறைத்துக் கொண்டிருக்கும் போது அவருக்கு தேத்தண்ணி கொண்டு வந்து கொடுத்தா அவற்ற மகள்களில ஒராள். அப்ப அவர் சொன்னார் பொம்பிளைப் பிள்ளையெண்டபடியா தேத்தண்ணி ஊத்தி கொண்டு வந்துதான் தரேலும் ஆம்பிளைப் பிள்ளையெண்டா என்னோட கிணத்துக்க இறங்கியிருப்பான் எண்டார். எனக்கு ஒரு மாதிரியிருந்திச்சு. அவருக்கு அது ஒரு குழறயாகவும் வருத்தமாகவும் கடைசி வரைக்கும் இருக்கும் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் அவரது மகள்களிற்குக் கொள்ளி வைக்கிற அளவுக்குத் தைரியமும் துணிச்சலும்(சமூகத்தின் வரையறைகளை உடைக்க) அவர் சுதந்திரம் கொடுக்கவும் தவறவில்லை. ஆனால் எங்கள் அம்மாக்களை யெல்லாம் பார்த்து அவர் சொல்லுவார் என்னடி ஆம்பிளைப் பிள்ளையள் வளர்க்கிறியள் எனக்கு ஆம்பிளைப் பிள்ளையள் இருந்தால் எப்படி வளர்ப்பன் தெரியுமா என்பார். என்னதான் அவர் தைரியசாலிகளாக அவர் தன் மகள்களை வளர்த்தாலும் சமூகத்தை எப்படி எதிர்கொள்வது என்று கற்றுக்கொடுத்தாலும். தான் ஆண்களிற்கு நிகராக பெண்பிள்ளைகளை வளர்த்திருக்கிறேன் என்று சொன்னாலும் அவரது அடிமனதிலும் ஆண் குழந்தைகளை உயர்த்தி வைத்துப் பார்க்கிற மனநிலை இருந்து கொண்டேயிருந்தது.அது இருந்து கொண்டேதான் இருக்கும் கட்டைவேகிற வரைக்கும்.

இதுதான் The king of masks  இலும் நிகழ்கிறது. கிழவர் மட்டும் கெட்டவரல்ல அவரிடமும் டொக்கியைப் பிரிய முடியாத ஏக்கம் இருக்கிறது. அவள் மீதான பாசம் இருக்கிறது. ஆனாலும் அவருள் இருக்கிற தன் கலையை பெண்களிற்கு கற்றுக்கொடுக்க கூடாது என்கிற நம்பிக்கை (ஆண் குழந்தைகள் உயர்வானவை எனுமாப்போல்) அவரைத் தடுக்கிறது. தன் வீட்டில் எல்லா வேலைகளையும் அழகாக செய்கிற அவளிடம் நீ மட்டும் ஆணாக இருந்தால் என்று பெருமூச்சுடன் சொல்வார். டொக்கி கோபத்துடன்  ஏன் ஆண்களுக்கு மட:;டும் என்ன வித்தியாசமாக இருக்கிறது என்பாள் ஒரு சின்னக் குழாய்தான் என்று கிழவர் வறட்சியாய் சிரிப்பார். டொக்கி மேலும் கோபத்துடன் அவரிடம் ஏன் நான் வித்தைகள் செய்யவில்லையா சிறப்பாக வீட்டைக் கவனிக்கவில்லையா எனக்கு என்ன குறை என்று கேட்பாள். சரி பெண்களிடம் குறை இருக்கும் என்றால் பிறகெதற்காக நீங்கள் போதிசத்வாவை(பெண் தெய்வம்)  மட்டும் வணங்குகிறீர்கள் அவளுக்கு இருக்கிறதா அந்தப் குழாய்  என்று கேட்பாள். கிழவரிடம் பதிலேதும் இல்லாமல் என்ன சொல்வதெனத் தெரியாமல் கிழவர் மௌனிப்பார்.
(எனக்கு கனிமொழியின் ஒரு கவிதை நினைவுக்கு வந்தது) 

இது வெறுமனே ஒரு டொக்கி என்கிற சிறுமிக்கும் கிங் ஒவ் மாஸ்க்கிற்கும் இடையிலான பிரச்சினையில்லை. இது சமூகத்தின் நம்பிக்கைகள் குறித்து அல்லது வாரிசு அரசியல் குறித்த புரிதல்களையும் சேர்த்து கேள்விக்குள்ளாக்குகிற படம். இன்றைக்கும் கொள்ளி வைக்கப் பிள்ளையில்லை என்று கவலைப்படுகிறவர்கள் இருக்கிறார்கள். கொள்ளி வைக்க ஆம்பிளைப் பிள்ளையள் இல்லை என்கிற மாதிரித்தான் கிழவரும் தனக்கான வாரிசைத் தேடி அலைகிறார்;. இப்படியான ஒரு நம்பிக்கைகள் குறித்துத் தான் படம் ஒரு சிறுமியைத் கொண்டு கேள்விகளை எழுப்புகிறது. இதோ டொக்கியின் முகத்திலும் கிழவரின் முகத்திலும் முகமூடிகள் ஒரு சேர மாறிமாறி வித்தை காட்டுகின்றன.

குறிப்பு
இயக்குனர் – வூ-தியன்மிங்
சீன மொழித்திரைப்படம்

விக்கிபீடியா இணைப்பு
நன்றி DVD இரவல் தந்த இயக்குனர் செல்வம் அவர்களுக்கு

01.

எதைப்பற்றியும் கவலைப்படாத ஒருவன். உலகின் எந்த நியதிகளிற்குள்ளும் சிக்கிக்கொள்ள விரும்பாதவன் இது வரையும் சிக்கிக்கொள்ளாதவன் ரவி. அவனது உலகம் பரந்துவிரிந்தது. எந்த எல்லைகளும் அதற்குக்கிடையா, கால்கள் தீர்மானிக்கும் வரை நடக்கிறவன் வயிறு இவன் சொன்னால்தான் பசிக்கும். பசிக்கும் பணத்துக்கும் இடையில் எவ்வளவு இடைவெளியிருக்கிறது என்பதை இவனைக்கேட்டால் சரியாகச் சொல்வான். அவனது இந்த திகைப்பூட்டும் இந்த உலகம் அவனது நண்பர்களாலும், அவர்களின் உதவியாலும்,கொஞ்சம் புத்தகங்களாலும் நிரம்பியிருக்கிறது. சென்னையின் நடைபாதை வாசி. வானத்தைக் கூரையாகக் கொண்டு நட்சத்திரங்களின் வண்ணங்களை ரசித்தபடி இரவுகளைக் கரைப்பவன். உலகின் அழகான விசயங்களை ஆராதிக்கவேண்டும் எல்லாவற்றையும் தன் கமராக்கண்களால் புகைப்படத்தின் சட்டகங்களிற்கள் இறுக்கிவிடவேண்டும் என்று நினைப்பவன். ஆனால் அவனுக்கு இதுவரை வாய்த்தேயிராதது காதல். காதல் மட்டுமே. பெண்களை அறியாத அழகின் ஆராதகன். இது வரைக்கும் அவன் யாரையும் காதலிக்கவும் இல்லை காதலிக்கப்பட்டதும் இல்லை. ஆனால் உள்ளுக்குள்ளே யாராலாவது தான் காதலிக்கப்பட மாட்டோமா என்று ஏங்கிக்கொண்டும் இருக்கிறான்.

வெளியூர் போகிற நண்பனின் அலுவலக அறையைப் பார்த்துக்கொள்கிற வேலை இந்த வேலைகளை வெறுப்பவனுக்கு வருகிறது. இந்த நடைபாதை வாசிக்கு கொஞ்சநாளைக்கு மின்விசிறியின் கீழ் தூங்க ஒரும் இடம் கிடைக்கிறது. தலைக்கு மேல் ஓயாமல் சுழன்று கொண்டிருக்கும் மின்விசிறியின் கீழ் அவன் மறுபடி மறுபடி கடைசி நான்கு பக்கங்களும் இல்லாத ஓரே புத்தகத்தை வாசித்துக்கிடக்கிறான். அவனையும் அவன் படுத்துக்கொண்டிருக்கும் மேசையையும் கதிரையையும் தவிர ஒரு தொலைபேசி கிடக்கிறது வெறுமனே. படம் தொடங்குகையில் அது ஒரு ஆர்ப்பாட்டமில்லாத குழந்தையைப்போல் தூங்கிக்கிடக்கும்.

இப்போது தொலைபேசியினால் அந்த ஊமை அறையின் அமைதி குலைகிறது. ஒரு அழைப்பு அது அங்கே வந்திருக்க வேண்டிய அழைப்பே அல்ல. பிறகு கொஞ்ச நேர மௌனத்துக்குப்பிறகு மறுபடியும் அழைக்கிறது. இப்போது எதிர்முனையில் ஒருத்தி. எதிர்க்குரல் யாராயிருக்கிறது என்பது குறித்த கவலைகளற்று உரையாடும் ஒருத்தி. ஆக அவள் இப்போது அழைத்திருப்பது வெறுமனே எதிர்முனையில் ஒரு குரலுக்காகத்தான். இப்படித்தான் நகரத்தின் அநேக அநாமதேய அழைப்புக்கள் நிகழ்கின்றன. யாரெனத் தெரியாத ஒருமுகத்துடன் ரகசியங்கள் திறக்கவே நாங்கள் விரும்புகிறோம். எங்களை நன்கறிந்தவர்களிடத்தில் மாய்ந்து மாய்ந்து எங்கள் வழமையான இயல்புகளை ஒழித்துக்கொண்டே அலைகிற நாங்கள் யாரேனும் நமக்கு அறிமுகமில்லா மனிதர்களெதிரில் எம் சுயம் திறக்க தயங்குவதேயில்லை. அது தான் இங்கேயும் நடக்கிறது எதிர்முனையில் குரல்தவிர்த்து வேறதுவும் அறியா அவளும் இவனும் பேசத்தொடங்குகின்றனர் விதவிதமான தொலைபேசி உரையாடல்கள் அவர்களை பிணைத்துக்கொண்டேயிருக்கிறது. அவள் அழகாககச் சிரிப்பதாக அவன் ஒரு நாள் அவளிடம் சொல்கிறாள். அவளோ அப்படி என்னிடம் சொல்லாதே என்கிறாள். இவன் அப்படி மனசில் பட்டதை சொல்லாமல் தன்னால் இருக்க முடியாது என்கிறான். அவள் தனக்கு நீ இப்படி எனக்கு விருப்பமில்லாததை பேசுகிற போது மனசுக்கு வருத்தமாயிருக்கிறது என்கிறாள். அவனோ யாருடைய மனசும் வருந்துவதைப்பற்றிய கவலைகள் எதுவும் எனக்கு கிடையாது என்னால் மனசில் பட்டதைச்சொல்லாமல் இருக்கமுடியாது என்கிறான் தீர்மானமாக. இப்போது அவள் அவனது இந்த முரண்நிலையை ரசிக்கதொடங்குகிறாள். எதிர்முனை பெண்ணாயிருத்தலே போதுமென்றிருக்கிற ஆண்களிடத்தில் இவன் வித்தியாசமானவன்தான் என்று சொல்கிறாள் அவள். அவன் தனக்கு புகைப்படங்கள் எடுப்பது பிடிக்குமென்றும் தன்னிடம் ஒரு கமரா இல்லையென்றும் இவளிடம் சொல்கிறான். தன்னிடம் பணம் வருகிறபோது தான் ஒரு மினோல்ட்டா கமரா வாங்க வேண்டும் என்கிற ஆசையையும் சொல்கிறான்.

அவனும் மின்விசிறியும் இதர பொருட்களாலும் ஆன அந்த அறை. இப்போது அவளது தொலைபேசி அழைப்புகளால் நிரம்புகிறது. எப்போதாவது இவன் வெளியே அலைந்துவிட்டு திரும்புகையில் தொலைபேசி குழந்தையைப்போல் வீரிட்டுக்கொண்டேயிருக்கிறது. இவன் நமட்டுச்சிரிப்புடன் மேலும் மேலும் அதனை அழவிட்டு பிறகு தூக்குவான். அந்த அழைப்பு அவளுடையதுதான் என்பதை அவன் அறிவான். அது ஒரு வகையான ஊடல். அவளது குரலில் கொஞ்சம் கோபிக்கமுடியாத பதட்டம் இருக்கும். இப்போது அவன் ஏதாவது சாட்டுச்சொல்லுவான், அவளது அழைப்புகளுக்காக தான் காத்திருக்கவில்லை என்பது போன்ற பாவனையில் பேசுவான். அதற்கு அடுத்த நாள் தொலைபேசி அழைக்காது. அந்த அறை வெறுமையால் நிரம்பும். அவன் தாங்க முடியாமல் பொறுமையின்றி இருக்கையில் நெளிவான். அவளது அழைப்புகளிற்குப்பதிலாக சிகரட் புகையினால் அந்த அறையை நிரப்புவான். கடைசி சிகரட்டின் நுனி புகைந்து கொண்டிருக்கையில் தனது மௌனத்தை கலைக்கிறது தொலைபேசி இவன் வேட்டையைத்தாக்கும் மிருகம்போலப் பாய்ந்து எடுக்கிறான் தொலைபேசியை.அவள்தான் காத்திருப்பின் வெறுமையும், தான் ஒருத்தியின் அழைப்புக்காக ஏங்குகிறோமே என்கிற அவனது வெட்கமும் கோபமாக மாற அவளிடம் சீறுவான். “என்னால் உனக்காக காத்திருக்க முடியாது. அது மிகவும் தொந்தரவாகவும் என்னைச் சிதைப்பதாகவும் இருக்கிறது” என்கிறான் அவன். அவள் தான் இனிமேல் தினமும் அழைப்பதாகச் சமாதானம் சொல்லுவாள்.

பிறிதொரு அழைப்பில் அவள் தான் ஒரு பாடல் பாடட்டுமா என்று இவனிடம் கேட்கிறாள். சம்மதிக்க பாடுகிறாள்… இவன் அந்தப்பாடலில் கரைந்து போகிறான். இவனுக்குள் உறங்கிக்கிடந்த ஏக்கங்கள் இவனைப்பிசையத்தொடங்குகின்றன. இவன் தாளமாட்டாமல் அழைப்பைத் துண்டித்து விடுகிறான். பிறகொரு அழைப்பில் இவனே மறுபடியும் அந்தப்பாடலைப்பாடச்சொல்லி கரைந்து அழுவான். ஒரு குழந்தையைப்போலவும், அவனது துயரங்களையெல்லாம் கண்ணீராய் அந்தப்பாடல் கரைப்பதைப்போலவும் அவன் அழுவான் அவளிடம் பேசமுடியாமல் தான் பிறகு பேசுவதாக இணைப்பைத்துண்டிப்பான்.

இவன் இப்போது ஒரு புதிய உலகத்துக்குள் தன்னை இழந்து விட்டவன். விட்டேத்தியாய் பற்றுகள் எதுவும் அற்று அலைந்து கொண்டிருக்கிற ஒருவன் இப்போது அவளது அழைப்புகளைப் பற்றிக்கொண்டுவிட்டான். அவற்றை நேசிக்கவும் செய்கிறான். அவளது அழைப்புகள் இல்லாத நாட்கள் இருக்கும் என்பதை அவன் இப்போது ஏற்கவும் சகித்துக்கொள்ளவும் மாட்டான். அந்த நண்பனின் இரவல் அறையில் அவனது கனவுலகம் மின்விசிறியோடு சேர்ந்து சுழன்றுகொண்டிருக்கிறது. வெளியூருக்கு போன நண்பன் மறுபடியும் நான்கு நாட்களில் வந்து விடுவதாக இவனிடம் சொல்கிறான். இவனுக்குள் இருக்கிற கனவுலகம் விரிசல் காண்பதை இவன் உணர்கிறான். அந்த உலகம் இரவல், அதன் நிரந்தரமின்மை இப்போது அவனுக்கு உறுத்துகிறது. அவனது இந்த ராஜாங்கத்தில் குரலால் மட்டுமே அவளைக்கொண்டுள்ளான் அவன். அவளது குரல் தவிர்ந்த வேறெதையும் அவன் அறியான். அவள் “ஏன் என் பெயரைக் கேட்க மாட்டீர்களா” என்றதற்கு “உனது குரல்தான் உன் பெயர்” என்கிறான். இப்போது அந்த குரல் ராஜாங்கம் மூழ்கப்போவதை அவன் அறிகிறான். இந்த இரவல் ராஜாங்கத்தின் காலம் முடிவடைந்து கொண்டிருப்பதை அவன் அவளிடம் சொல்கிறான். அவளோ உங்களின் இந்த ராஜாங்கம் முடிகிற அன்றைக்கு எனது தொலைபேசி இலக்கத்தை தருவேன் என்கிறாள். இவனோ இன்னும் ஒரு படிமேலே போய் நான் உன்னை நேரில் பார்க்கவேண்டும் என்கிறான். அவள் சம்மதிக்கிறாள். அவன் தன்னைப்பார்க்கிறபோது தான் அவனுக்கு ஒரு மினோல்டா கமராவைப்பரிசளிப்பதாக கூறுகிறாள். அவனுக்குள் அவனது ராஜாங்கம் காப்பாற்றப்படும் என்பதான நம்பிக்கைகள் வருகிறது. அப்போது அவள் தான் இரண்டு நாட்கள் அழைக்கமாட்டேன் குடும்பத்தோடு வெளியூர் போகிறேன் என்கிறாள். அவன் மௌனிக்கிறான், அந்த அறையும் மௌனிக்கிறது. அவளது அழைப்புகளில்லாத இரண்டு நாட்களின் மௌனத்தை அவனால் ஒருபோதும் தாங்கிக்கொள்ளமுடியாது. அவன் அறையின் சூன்யம் முகத்திலறைய அவளது குரலுக்கும் அழைப்புக்கும் ஏங்கி உழல்கிறான்.தொலைபேசி அழைக்கவேயில்லை ஒரு சவத்தைப்போல, கொடும்பிராணியைப்போல அவனது துயரங்களை விழுங்கிக்கொண்டு ஆனந்தித்துக்கிடக்கிறது.

அவன் மனசு அவளது அழைப்புகளைப் பிரார்த்தித்துக் கிடக்கிறது. மனசு முழுவதையும் அவளது அழைப்புக்களின் சங்கீதம் நிறைக்கிறது. அவன் அந்த அழைப்புக்களின் போதையில் மூழ்கிவிடவிரும்புகிறான். அவளது அழைப்புகளற்ற இந்த சூன்யத்தில் இருந்து தப்பிஓடிவிட முயற்சித்து முயற்சித்து இறுதியில் இயலாதவனாய் இயக்கமற்று அவளது அழைப்புகளைத் தவிர வேறnதையும் அறியாதவனாய் ஏங்கிக்கிடந்தான். மனசுக்குள் அவளது அழைப்புக்களின் மணி இப்போது கர்ணகடுரமாய் கொடும்இம்சையயாய் காலத்தின் கெக்கட்டமாய் ஒலிக்கத்தொடங்குகிறது. அவன் அந்த நினைவுகளைப் புறந்தள்ளப்பார்க்கிறான். மனம் அந்தப்புள்ளியில் அவனை அறைந்து இம்சிக்கிறது. தொலைபேசியின் அழைப்பின் ஒலி அவனது மனசை உலுக்கி இம்சித்து இம்சித்து உடலெங்கும் வியாபித்து உடலெங்கும் துயரத்தை நிரப்புகிறது. மனசே உடலாக அவன் தாங்கவொண்ணாமல் புரள்கிறான். அந்த அழைப்புகளின் இம்சை ஒலியினின்றும் தப்பிக்கும் முயற்சிகளில் தோற்று உருக்குலைந்து போகிறான். அந்த அறையின் தொலைபேசி எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருந்தது. எதையும் அவனுக்குச்சொல்லும் வழிகளெதுவும் அதனிடம் இருக்கவில்லை. அவன் தளர்ந்தான். இயலாமல் எழுந்து தீர்ந்து போய்விட்டிருக்கும் நீர்க்குவளையில் இருந்து துளிநீரைப்பருகுகிறான். இப்போது அவன் போரில் தோற்றுப்போன ஒரு ராஜாவைப் போலாகிவிட்டான்.

இப்போது மேஜைத்தொலைபேசி தன் மௌனத்தை உடைக்கிறது. அது அவள்தான். ஆனால் ஏற்கனவே குற்றுயிராய்க் கிடக்கும் அந்த அறையை உயிர்ப்பிக்க அவளது அந்த அழைப்பால் முடியவில்லை. எங்கோ குரல்களற்றவெளியில் பதுங்கிக்கொண்டு விட்ட பாடலைப்போல ஆகிவிட்டன அந்த அறையின் ஓசைகள். அவளது அழைப்பால் எதனையும் உயிர்ப்பூட்டமுடியவில்லை. அவன் அழைப்பை எடுக்கிறான் அவள் பதட்டமாய் ஏன் குரல் ஒரு மாதிரியாய் இருக்கிறது என்கிறாள் அவன் துயரச்சிரிப்பொன்றை உதிர்க்கிறான் ஏனெனில் குரல்தான் அவன் அதுதான்; அவனது உயிர். அவன் தனது ராஜாங்கம் முடிவடைந்து விட்டதாக அவளிடம் சொல்கிறான் தேய்ந்து உடைகிறது குரல். அவள் தனது தொலைபேசி இலக்கத்தை குறித்துக்கொள்சசொல்கிறாள். அவனது குரல் செத்துவிட்டது. அவளது குரல் தொலைபேசி இலக்கங்களை வெறுமனே காற்றில் இறைத்தது. அவன் தொலைபேசியை வைக்கிறான் உடல் மேசையில் சரிகிறது… அவனது குரல்ராஜாங்கம் முடிகிறது. அறை அவளது தொலைபேசி அழைப்புகளால் நிரம்புகிறது. வெளியேறிவிட்ட எதையோ நிரப்பும் முயற்சியாய்…….

02.
இது வெறுமனே தொலைபேசிக்கலாச்சாரத்தைப்பற்றிய படம் கிடையாது. இங்கே தொலைபேசி ஒருபாத்திரம். அது ஒரு நாகரீக நகர்சார்ந்த வளர்ச்சியின் அடையாளம். நகரம் எப்படி தனியன்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. உறவுகளின் பிணைப்புகளினின்றும் உதிர்ந்த ஒருவனை விழுங்கிக்கொண்டு நகரம் அவனிடம் எவற்றை நிரப்புகிறது. நகரில் அலைந்து கொண்டிருக்கும் நபர்களிடத்தில். ஏழ்மையின் துயர்விழுங்க அலையும் இளைஞர்களைப் பற்றி நிச்சயமாய் இந்தப்படம் பேசுகிறது. இதன் கதாநாயகன் நிச்சயமாய் ஒரு விதிவிலக்கல்ல என்று எனக்கு தோன்றியது. வெறுமை அறையும் தனியறையில் கடத்திய எனது நாட்களை நான் அவனது நாட்களோடு பிரதியீடு செய்து கொள்ள முடிகிறது. அவன் வேலைகளெதையும் செய்யவிரும்பவில்லை என்பதும் சமூகத்தின் மீதான கோபமே. வாழ்வின் இல்லாமைகள் அழுத்தும் வாழக்கையை நகரத்தில் எதிர்கொள்கிற ஒருவன். எல்லாவற்றையும் புறக்கணிக்கிறான். காதல், கோபம் ,வேலை இப்படி தனது இயல்பின் கைகளை முறித்து அதனைவீசியெறிந்து நடக்கிறான். அவனது எதிர்பார்ப்புக்கள் எல்லாவற்றையும் புறக்கணிக்கிற நகரத்தின் அல்லது சமூகத்திடமிருந்து இவன் எதிர்பார்ப்பதையே புறக்கணிக்கிறான். அவனது உலகமும் கனவுகளால் ஆனது அவை தூங்கிக்கிடக்கும் கனவுகள் ஒரு வறட்டுத்தனத்தில் நேசத்துக்காககவும் கவனிப்பிற்காகவும் ஏங்குகிற ஒரு தனியனின் கனவுகள். அப்படி அலைகிற ஒரு தனியனின் சிறுகனவின் வலிசொல்கிறது இராஜாங்கத்தின் முடிவு என்கிற இந்தக்குறும்படம்.

எப்போதும் மனித மனம் அன்புசெய்யப்படுவதற்காக காத்திருக்கிறது. யாரையும் நேசிக்காத அல்லது அவ்வாறு காட்டிக்கொள்கிற மனிதனின் ஆழ்மனசில் யாரலாவது தான் நேசிக்கப்படமாட்டோமா! என்கிற நினைப்பு சதா உருண்டுகொண்டேயிருக்கிறது. ரவியும் அப்படிப்பட்ட ஒருவன்தான். இந்த நகரங்களில் அலைந்து கொண்டிருக்கும் இளைஞர்களின் ஒருபிம்பம் ரவி. தனிமை ஒருவனை செதுக்குகிறது. யாரோடும் பகிர்ந்துகொள்ளமுடியாத துயரங்களை மனசுக்கள் இறுக்கியபடியே இருக்கிறது. துயரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் நேரமில்லாததாய் ஆகிவிட்டிருக்கிறது வாழ்க்கை.

ரவிக்குத்தெரியும் இந்த உலகம் துயரங்களால் நிரம்பியதென்று. அது ஏதிலிகளிற்கு எதையும் தருவதுமில்லை அவர்களை ஏற்றுக்கொள்வதமில்லை. அவன் போட்டுக்கொண்டிருப்பது வேசம். எதனையும் புறக்கணிக்கிறவேசம். சாதிக்கவேண்டும் என்று எல்லாவற்றின் மீதும் இருக்கிற ஆசையை புறக்கணிப்பு என்கிற போர்வையால் போர்த்திக்கொண்டிருக்கிற வேசம். எதனைப்பற்றியும் எனக்கு கவலைகள் கிடையாதெனச்சொல்வது தப்பிக்கும் அவனது வழிகளில் ஒன்று. உண்மையில் ரவி பற்றிக்கொள்ள எதையாவது தேடுகிறான் அவன் மனம்விரும்பியபடி ஆனால் கிடைப்பதென்னவோ வெறுமைதான். எதிர்பார்ப்புகளும் கனவுகளும் நிறைந்ததுதான் அவனது வாழ்க்கையும் எல்லாரையும் போலவே நமக்குள்ளும் நிறையரவிகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நகரச்சூழலில் தனித்துவசிக்கிற மனங்களின் கண்ணாடி அருள்எழிலன் இயக்கிஇருக்கிற இந்தப்படம். இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு முந்தைய இந்தியாவில் பிறந்தமிகச்சிறந்த உருது மொழி கலைஞன் சதத் ஹசன் மண்டோவின் சிறுகதையை தழுவிஎடுக்கப்பட்டிருக்கிறது.

தனது கனவுகளை அடையும் வழிகள் ஏற்கனவே இந்த நியாயமற்ற மனசற்ற சமூகத்தின் கரங்களால் அறைந்து சாத்தப்பட்டிருபதை தாங்கமுடியாமல் உங்ளுக்குள் புழுங்கிக்கிடக்கிற ஒருவனது வலிமிகஅற்புதமாக வெளிப்படுகிறது. அந்த புழுக்கம்தான் அவனது புறக்கணிப்பு. அவன் தனக்கு ஒரு காதலிகிடைத்தால் தனதுவாழ்க்கையே மாறிவிடும் என்கிறான்.இந்த சமூகத்தின் எல்லாவற்றையும் ஜீரணித்துக்கொண்டு ஐக்கியமாகிவிட அவன் தயாராகத்தான் இருக்கிறான். ஆனால் காதலைக்கூட அவளிடம் தான் சொல்ல மாட்டேன் அவளாகவே வந்து சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறான். அவனுக்கு பயம் தொடர்ச்சியான புறக்கணிப்புகளால் ஏற்பட்ட பயம். மேலும் மேலும் தொடர்ச்சியாக புறக்கணிப்புகளை சம்பாதித்து விட அவனுக்கு விருப்பம் கிடையாது அதனால் அவன் எதையும் நெருங்குவதுமில்லை. எல்லாவற்றினின்றும் ஒதுங்கியிருக்கிறாள். இப்படித்தான் நிறையப்பேர் துவண்டு போயிருக்கிறார்கள். நகரத்தின் அன்பற்ற பெரும்சிக்கி தூக்கிஎறியப்பட்டவனின் மனோநிலை இது. புறவாழ்வு சுயங்களைச்சாப்பிட்டுவிட வெறும் கூடாகிய நிலை. அப்படிப்பட்ட பாத்திரம் தான் ரவி அவனுக்கு பற்றிக்கொள்ள கிடைக்கிற ஒரு வாய்ப்பில் அவன் உடைந்து போய்விடுகிறான் அவன் ஏங்கியது அவனுக்கு கிடைக்கிறபோது அவன் அதை இறுகப்பற்றிக்கொள்கிற மனோநிலைக்கு வருகிறான். சிறு பரிவும் அவனை உருக்குலைத்து சிதைத்து அவனைத் தின்றுவிடுகிறது. இது ரவிக்கு மட்டுமல்ல நிறையப்பேருக்கு நிகழ்கிறது. அன்றாடம் புறவிழிகளுக்கு புலப்படாத நிறைய ரவிகளின் ராஜாங்கம் முடிவடைந்துகொண்டேயிருக்கிறது.

குறைந்த வசனங்களாலும். அளவான நடிப்பாலும் (ஒருசில இடங்களைத்தவிர) இந்த குறும்படத்தை நடித்து இயக்கி செதுக்கியிருக்கிறார் இயக்குனர் டி.அருள்எழிலன். ஒரு பத்ததிரிகையாளரான அருள்எழிலன் ஒரு தேர்ந்த இயக்குனராகவும் நடிகராகவும் நிச்சயமாக ஒரு அற்புதமான படைப்பை கொடுத்திருக்கிறார். சுயவாழ்வின் கண்ணாடியாய் நம்பிம்பங்கள் தெரியும் தமிழின் சிறந்த குறும்படங்களில் ஒன்று, அருள்எழிலன் இயக்கிய இராஜாங்கத்தின் முடிவு.

இயக்குனர் பற்றி
அடிப்படையில் ஒரு பத்திரிகைக்காரரான இக்குறும்படத்தின் இயக்குனர் அருள்எழிலன். ஆனந்தவிகடன் வார இதழில் பணியாற்றுகிறார். அவர் தனது படைப்பு குறித்து இப்படிச்சொல்கிறார்.
“ம‌னித‌னின் பிற‌ப்பிற்கு எவ்வித‌ கார‌ண‌ங்க‌ளும் எப்ப‌டி இல்லையோ அப்ப‌டித்தான் ம‌ர‌ண‌மும் அதுவும் கார‌ண‌ங்க‌ள‌ற்ற‌து. நக‌ர‌ம் எப்போதும் இசைக்கும் மாய‌ப்புல்லாங்குழ‌லின் இசையில் க‌ன‌வுக்கும் வாழ்வுக்கும் இடையில் ந‌ட‌க்கும் போராட்ட‌ம‌ல்ல‌ அனுப‌வ‌மே இந்த‌ ப‌டைப்பு..”


குறும்படத்தின் இயக்குனர் டி.அருள்எழிலன்

குறும்படத்தை இணையத்தில் பார்க்க

நல்ல விசயங்கள் எனக்கு தாமதமாகவே நிகழ்கிறது. அல்லது நான் தாமதமாகவே கண்டு கொள்கிறேனோ என்னவோ தெரியாது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக சஞ்சிகைகள் மூலமாகவும் நண்பர்கள் வாயிலாகவும் நிறையத் தெரிந்து கொண்டதாக நான்நினைத்துக்கொண்டிருந்த children of heaven என்கிற திரைப்படத்தை. இன்றைக்கு பார்த்தேன். நிறைய நாட்களுக்கு பிறகு சென்னையில் இன்றைக்கு மழைபெய்து கொண்டிருந்தது. வழக்கமாக மழையைக் கண்டால் நின்று போகிறமின்சாரம் அதிசயமாய் இன்றைக்கு இருந்தது. நண்பர்கள் யாருமில்லை நான் தனியே. தனிமைஒரு விதமான அச்சத்தை தருகிறது இப்போதெல்லாம். தனிமை வேண்டித் தவங்கிடந்தநாட்களெல்லாம் என்னை கேலிசெய்கின்றன எனத் தோன்றும். தனிமை கொல்லும்என்பார்களே அதைப்போல இன்றைக்கு தனிமையை நிரப்பவென்று இந்தப்படத்தை போட்டேன்.

(1)

ஒரு அழுக்குப்படிந்த றோஸ்நிறச்சப்பாத்துக்களைத் தைத்துக்கொண்டிருக்கும் கைகள் திரையை நிறைக்க ஆரம்பிக்கிறது படம். தனது தங்கையின் சப்பாத்துக்களை செருப்பு தைப்பவரிடம்கொடுத்து தைத்துக்கொண்டிருக்கிறான் சிறுவன் அலி. பிறகு வீட்டுக்கு போகிற வழியில்ஒரு கடைவாசலில் வைத்து அதை தொலைத்து விடுகிறான் அவனது கவனக்குறைவால். நோயாளி அம்மா கோபக்கார,வறுமையான அப்பா என்றிருக்கிறது அந்தச்சிறுவனின் வீடு. சப்பாத்துக்களைத் தொலைத்து விட்டு வந்திருக்கிற அண்ணணிடம். “எனது சப்பாத்துக்களின்றி நான் எப்படி நாளைக்குபள்ளிக்கூடம் போவது. நான் அப்பாவிடம் சொல்லப்போகிறேன்” என்கிற தங்கையை. ஐயோ நீ சொன்னால் அப்பா என்னை தண்டிக்கக் கூடும். அதுதவிர அப்பாவிடம் இப்போது பணம் கிடையாது நீ எனது சப்பாத்துக்களை போட்டுக்கொண்டுபள்ளிக்கூடம் போ திரும்பி வந்ததும் நான் மறுபடி மாலையில் அதைப் போட்டுக்கொண்டு போகிறேன் என்று ஒரு புதிய ஏற்பாட்டுக்கு வருகிறார்கள் அண்ணனும் தங்கையும். பெற்றோரின் தண்டனைக்கு பயந்து மட்டுமல்ல அந்தக்குடும்பத்தின் வறுமைக்கும் பயந்து குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் இருந்து சப்பாத்து தொலைந்த விசயத்தை மறைக்கிறார்கள். அவர்களது வறுமையும் அந்த பிஞ்சு மனங்களின் அண்ணன் தங்கை உறவும் அற்புதமாக மனத்தை செலுத்துகிறது அவர்களோடு. என்னதான் தங்கை தனது பள்ளியிலிருந்து வேகமாக ஓடிவந்து அண்ணணிடம் சப்பாத்துகளைக் கொடுத்தாலும். அலி பள்ளிக்கு பிந்தியே செல்லநேர்ந்து விடுகிறது தினமும். படபடக்கும் மனத்துடன் தடதடத்து பள்ளியின் படிகளில் அவன் ஏறிச்செல்லும் ஓசை அவனைக் காட்டிக்கொடுத்து விடுகிறது. அவனது தலைமை ஆசிரியர் அவனைக் கண்டித்து அவனதுபெற்றோருடன் வருமாறு சொல்கிறார். அலி அழுதுகொண்டே பள்ளியை விட்டுவெளியேறுகையில் அவனது வகுப்பாசிரியர் அவன் நல்ல மாணவர் என்று சொல்லி அவனைக் காப்பாற்றுகிறார்.ஒரு முறை சாரா வேகமாக ஓடிவரும்போது அவளதுகால்களுக்கு பெருசான அண்ணனின் காலணிகள் கழன்று ஓடும் தண்ணீரில் விழுந்துவிடுகிறது அவள் அதைத் பெரும்பாடுபட்டு துரத்துகிறாள் விடாமல் மூச்சிரைக்கமூச்சிரைக்க துரத்துகிறாள். எனக்கு எழும்பி அவளுக்கு உதவமாட்டோமா என்று இருந்தது நாக்கு வறண்டு ஏனோ தொண்டை அடைத்தது. கண்கள் திரண்டு நின்றது. அவளது சப்பாத்து ஒரு சிறிய பாலத்துள் தேங்கி நின்றுவிடுகிறது. அவள்அழுகிறாள் அந்தப் பாலத்தினின்றும் எடுக்க முடியாத தனது காலனிகளுக்காக மட்டுமல்ல. ஆற்றாமை மேலெழ இன்னொரு காலனிகளை வாங்கமுடியாத தனது குடும்பத்தின் வறுமையை எண்ணி,பாடசாலைக்கு போவதற்காக தான் அணிந்து வந்த காலணிகளுக்காக காத்திருக்கும் தனது சப்பாத்துக்களைத் தொலைத்து விட்ட அண்ணன் மீது எழுகிற கோபம், அவனுக்கு பள்ளிக்கு தாமதமாகிறதே என்கிற வேதனை எல்லாவற்றையும் நினைத்து அழுகிறாள். உப்பிய அந்தச்சிறுமியின் கன்னங்களில் வழிகிற கண்ணீர் ஒரு கணம் என்னை உலுக்கி எடுத்து விடுகிறது.

யாரோ ஒரு பெரியவர் அழுதுகொண்டிருக்கும் அவள்மீது கருணைகொண்டு காலணிகளைமீட்டுத்தருகிறார். நான் இப்போது அந்தப் பெரியவரிடத்தில் என்னைப் பிரதிசெய்துகொண்டு பெருமைப்பட்டேன். முற்றிலும் நனைந்து போன அந்த ஒருகாலணியுடன் அவள் மூச்சிரைக்க ஓடி அண்ணிடம் வருகிறாள். இப்போது மிகுந்த கோபத்துடன்காலணிகளை அண்ணன் முன் விட்டெறிகிறாள். அவன் காலனிகள் ஏன் நனைந்திருக்கின்ற ஏன் நீ இத்தனை தாமதமாக வருகிறாய் என்று கேட்கிறான். அண்ணின்கேள்விகளிற்கு பதிலளிக்காமல் நான் இன்றைக்கு அம்மாவிடம் சொல்லிவிடப்போகிறேன் நீ எனது காலணிகளைத் தொலைத்துவிட்டாய் என்பதைப்பற்றி என்று மட்டும் கோபமாகக் கூறுகிறாள். அவனோ நீ சொன்னாலும் அப்பாவால் உனக்கு புதிய காலணிகளை வாங்கித்தர முடியாது அவரிடம் பணமில்லை நீ தயவு செய்து சொல்லாதே என்று சொல்கிறான்.

Photo Sharing and Video Hosting at Photobucket

அவனது தந்தை அடுத்தநாள் அருகில் இருக்கிற நகரத்துக்கு சென்று நகரவாசிகளின் தோட்டத்தை பராமரிக்கும் வேலை செய்து நானும் அலியும் கொஞ்சம் பணம் பெற்றுக்கொண்டு வருவோம் என்கிறார். அங்கே ஒரு வீட்டில் வேலைசெய்து கொஞ்சம் பணத்துடன் திரும்புகையில் தந்தை சொல்கிறார் நாங்கள் நிறையச் சம்பாதிக்க வேண்டும், கொஞ்சநாள் எங்கோயவது போய் ஓயவெடுக்க வேண்டும், உனக்கும் தங்கைக்கும் நிறைய பொருட்கள் வாங்க வேண்டும்,நாங்கள் இதைவிடப்பெரிய வாடகை வீட்டிற்கு நாங்கள் போகவேண்டும். ஏழ்மையின் கனவுகள் விரிய தகப்பன் மகனிடம் ஆசைகளை விவரித்து கொண்டு சைக்கிளில் வந்துகொண்டிருக்கிறார். அலி அப்போது சப்பாத்துக்கள் வாங்க வேண்டும் என்று அப்பாவிடம் சொல்கிறான். அப்பா ஓம் நிச்சயமாக உனக்கு சப்பாத்துக்ள் வாங்கித் தருவேன் என்று சொல்கிறார். அலி இல்லை முதலில் சாராவுக்கு வாங்கிக்கொடுங்கள் என்று சொல்கிறான். தந்தையும் ஆமோதிக்கிறார்.ஆனால் அவர்களுடைய கனவுகள் சரிவதைப்போலவே அந்த ஏழைக்குடியானவனின் லொக்கடா சைக்கிள் ஒரு இறக்கத்தில் வேகமாக இறங்கிக்கொண்டிருக்கையில் பிறேக் பிடிக்காமல் தகப்பனும் மகனும் மரத்தில் மோதி காயமடைகிறார்கள்.

தானும் தங்கையும் ஒரே சோடிக்காலனிகளை பகிர்ந்து கொள்வதின் சிக்கல்கள் அதிகரித்து வருவதை அலி உணர்கிறான். தங்கையோ அண்ணணிடம் முடியுமானவரை பொறுமையோடும் பாசத்தோடும் நடந்து கொள்கிறாள். அலியின் பள்ளியில் ஓட்டப்போட்டியில் ஓடவிரும்புகிறவர்கள் தமது பெயரைப் பதிவு செய்யுமாறு ஆசிரியர் சொல்கிறார் அலி கண்களில் ஆர்வம் மின்ன அந்த அறிவிப்பைக் கவனித்தாலும் தனது காலணிகளை மற்ற மாணவர்களின் காலணிகளோடு ஒப்பிட்டுப்பார்த்து ஒருவகையில் ஒதுங்குகிறான். அந்த காலணிகள் இருவர் பாவிக்கவேண்டியிருப்பதையும் நினைத்து அவன் போட்டியில் கலந்து கொள்ளாமல் விலகி விடுகிறான்.ஆனால் பள்ளியில் ஓட்டப்போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கான மூன்றாம் பரிசாக ஒரு சோடிக்காலணிகள் என்று அறிவித்திருப்பதை பார்த்ததும். அவன் தன்னையும் போட்டியில் சேர்த்துக்கொள்ளுமாறு ஆசிரியரிடம் சென்று கெஞ்சிஅழுகிறான். அவர் முதலில் மறுத்தாலும் பின்னர் அவன் நன்றாக ஓடுவான் என்பதைதெரிந்து கொண்டு சேர்த்துக்கொள்கிறார்.

அலி தனது தங்கையிடம் தான்ஓட்டப்போட்டியில் கலந்து கொள்வதாகவும் தனக்கு மூன்றாம் பரிசு கிடைக்கவேண்டும் எனவும் கூறுகிறான். அவள் ஏன் மூன்றாம் பரிசு எனக்கேட்க “அது இரண்டு காலணிகள்” என்கிறான் அவற்றை நான் உனக்கு தருவேன் என்கிறான். அவளோ அது ஆண்களுக்கான சப்பாத்துக்களாக அல்லவா இருக்கும் என்கிறாள். அலி நாங்கள் அதனைக் கடையில் கொடுத்து மாற்றலாம் என்கிறான். சாரா அண்ணணை பாசத்துடன் பார்க்கிறாள் ஆனாலும் முதற்பரிசு என்ன என்றுகேட்கிறாள் அவனோ அதைச் சரியாக பார்க்கவில்லை என்கிறான்.போட்டி நாளன்று போட்டிக்கு வந்திருக்கும் விதவிதமான உயர்ந்த காலணிகளை அணிந்த நிறைய சிறுவர்களுடன் தனது பழைய காலணியை குனிந்து குனிந்து பார்த்துக்கொள்கிறான் அலி. போட்டி தொடங்குகிறது. தனது தங்கைக்கு காலணிகளை பெற்றுத்தருவதற்காக அவன் ஒடுகிறான் ஒருவன் ஒரு போட்டியில் மூன்றாம் பரிசை இலக்குவைத்து ஓடுகிறான். அவனது தங்கையின் குரலும்,தனது பாடசாலையில் இருந்து இவனிடம் காலணிகளை ஒப்படைப்பதற்காக அவள் மூச்சிரைக்க ஓடிவருவதும் இவனதுநினைவில் சுழன்று கொண்டிருக்கிறது. வேகமாக ஒடுகின்றான். இறுதியிடம் நெருங்க நெருங்க முதலிருவரை விட்டு விட்டு மூன்றாவதாக அலி ஓடுகிறான்.நான்காவதாக ஒடிவருபவனும் அலியும் ஒருவரை ஒருவர் போட்டிபோட்டு ஒடுகின்றனர். அலி இடறி விழுகிறான். மறுபடியும் தன் தங்கையை நினைத்து அவன் எழுந்து ஒடுகிறான் முன்னிலும் வேகமாக அவன் மிகவும் களைத்துப்போய்போட்டியின்எல்லைக்கோட்டைத்தொட்டு விழுகிறான். அவனது ஆசிரியர் அவனைத் தூக்குகிறார். அலி சேர் நான் மூன்றாம்பரிசை பெற்று விட்டேனா என்றுகேட்பான் அவரோ எதற்கு மூன்றாம் பரிசு உனக்குத்தான் முதற்பரிசு என்பார்.எல்லாரும் அலியைக் கொண்டாடுவார்கள். அவன் மிகவும் கவலை தோய்ந்தவனாக சோர்ந்து போவான். ஆனால் யாரும் அதைப் பொருட்படுத்தவே மாட்டார்கள். அவனது மனத்தின் தயரங்களை யாரும் பகிர்ந்து கொள்வதாகவும் புரிந்து கொள்வதாகவும் இல்லை. அந்த வெற்றி அவனுக்கு வேண்டியதில்லை அவன் கண்களில் மூன்றாம் பரிசுக்காக வைக்கப்பட்டிருக்கும் காலணிகள் மினுங்கும். அவன்கவலையோடு தனக்கான பதக்கத்தையும் கோப்பையையும் வாங்கிக்கொள்வான்.கேற் திறக்கப்படுவதை முற்றத்தில் பாத்திரம் கழுவிக்கொண்டிருந்த தங்கை ஆர்வத்துடன் அவளது அழகிய குழந்தமையின் மினுங்கும் கண்களால் பார்ப்பாள். அலி குற்றமிழைத்தவன் போல் தங்கையில் விழிகளை எதிர்கொளவியலாதவனாய் சோர்ந்துபோய் வருவான் அண்ணன் தனக்காக காலணிகளைக் கொண்டு வரவில்லை எனத் தெரிந்துகொண்ட சாரா மௌனமாக வீட்டுக்குள் ஓடிப்போகிறாள்.படம் முடிவடைந்து திரை கறுப்பாக அரபு எழுத்துக்கள் ஓடத்தொடங்கின.

Photo Sharing and Video Hosting at Photobucket

நான் ஆற்றாமல் அழுதேன் வெறும் பிம்பம் தான் என்று புறக்கணிக்க வியலாத அந்த சிறுவர்கள் அலிக்காகவும் சாராவுக்காகவுமா என்று சொல்லமுடியாது.எப்போதோ நான் பள்ளியில் தொலைத்துவிட்ட எல்லாவற்றுக்காகவும் அல்லது எனக்குமறுக்கப்பட்ட கொடுக்கப்பட்ட குழந்தமையின் நினைவுகள் உந்த அவர்கள் மீது என்னைப் பிரதிசெய்து கொண்டு அழுதேன். நீண்ட நாட்களுக்கு பிறகு சினிமாபார்த்து அழுதேன். அலி பந்தயத்தில் இடறி விழுகையில் காலத்தைச் சபித்தேன் அவனது தங்ககைக்கு காலணிகள் கிடைத்துவிடவேண்டும் என்று எனக்குள் துயரம் பீறிட்டெழுந்தது.இதுவரைக்கும் நான் இந்தப்படத்தை பற்றி கேள்விப்பட்டதெல்லாம் ஏன் நான் இது வரைக்கும் சொன்னதெல்லாம் கூட ஒன்று மேயில்லை. அது குழந்தைகளின் சொர்க்கம் நான் அதைக்கடந்திருக்கிறேன்.கிட்டத்தட்ட அதே வறுமையுடனும் வலிகளுடனும் அந்த குழந்தைமையைக் கடந்திருக்கிறேன். இதே மாதிரி குழந்தைமையைத் திணிப்புடனும் அவர்களின் உணர்வுகளைப் பகிந்து கொள்ளவியலாமல் காலம் எத்தனைநாளைக்கு விரட்டிக்கொண்டேயிருக்கப் போகிறது.

குழந்தைகள் எப்போதும் அவர்களுக்கான உலகத்தை சித்தரித்துக்கொள்கிறார்கள். பெரியவர்களால் எப்போதும் அவர்களுடைய உலகத்திற்குள் நுழைந்துவிடமுடியாது. பெரியவர்களின் கண்களிற்கு எதிரிலேயே பெரியவர்களால் குழந்தைகள் தங்கள் உலகத்துக்குள் அல்லது தங்களதுகட்டுக்கள் இருக்கிறார்கள் என்கிற நினைப்பில் ஆழ்ந்து கிடக்கையில் ஒரு மாயவித்தைபோல அவர்களறியாமல் விரிந்து கிடக்கிறத குழந்தைகளின் உலகம்.குழந்தைகள் இரண்டு உலகங்களில் எப்போதும் வாழ்கிறார்கள். கண்டிப்பும் ஏமாற்றமும் நிரம்பிய தங்கள் பெற்றோருடனான வாழ்க்கை ஒன்று. எந்த வரையறைகளுமற்று சோப்புநுரையைப்போல வானத்தில் வர்ணங்கள் மினுங்க பறக்கும் இன்னொரு வாழ்க்கை. படத்திலும் அப்படித்தான் ஏழ்மையும் கண்டிப்பும் நிறைந்த ஒரு பெற்றோருடன் வாழும் குழந்தைகள் சாராவும் அலியும் தமது பெற்றோர்கள் அறிந்துவிடாத நுழையமுடியாத இன்னுமோரு உலகத்துள் வாழ்கிறார்கள்.எனக்கு படம் பார்த்ததும் எனது குழந்தைப்பருவம் மீழெழுகிறது. யாரும் நுழைந்து விடமுடியாமல் நான் வாழ்ந்த ரகசிய நினைவுகள்.தீப்பெட்டிப் பொன்வண்டுக்கும் என் பூனைக்குட்டிக்கும் மட்டுமே காட்டிய அந்த உலகின் பரவசக் கணங்கணை அந்த சொர்க்கத்தை children of heaven எனக்கு மறுபடியும் கொடுத்தது. என் கைகளைப் பிடித்து அழைத்துப்போய் மறுபடியும் என் குழந்தைமையில் என் கைகளை விடுவித்து விட்டது. திருவிழாவில் குழந்தைகள் தெரிந்தே தொலைந்து போகின்றன தம்மைத்தாமே தொலைத்துக்கொள்ள விரும்புகின்றன. அம்மாவின் கிடுக்கிப்பிடியினின்றும் அவளே அறியாத ஒருகணத்தில் பலூன்காரனின் வண்ணங்களை அழைத்துக்கொண்டு வரையறைகளற்ற வானத்தின் கீழ் விளையாடச் சென்று விடுகின்றன. அப்படி நானும் தொலைந்து போய்விடலாமென்று தோன்றியது எனக்கு.

(2)
எனக்கு நினைவிருக்கிறது இன்னமும் எனது சிறுபராயங்களில் நான் எனது பொருட்களைத் தொலைத்துவிட்டு அழுகொண்டே வீடுதிரும்பிய அனுபவங்கள். சிறுபராயம் ஒரு கனவு போல மீழெழுந்து கொண்டேயிருக்கிறது இன்றைக்கும் அப்படியே இருந்துவிடமுடியாது போன துயரம் என்னை அழுத்துகிறது.மூன்றாம் ஆண்டு வரையிலும் பகல் பன்னிரண்டு மணிவரைதான் பாடசாலை பன்னிரண்டு பன்னிரண்டரைக்கு விட்டுவிடுவார்கள். யாரேனும் வீட்டில் இருந்து பெரியவர்கள் வந்து எங்களை அழைத்துச்செல்வார்கள்.அப்படி ஒரு முறை முதலாம் ஆண்டிலா இரண்டாம் ஆண்டிலா என்று நினைவில்லை. அப்பா தான் ஏதோ வேலையாக செல்வதாகக்கூறிஅவரது நண்பர்களுடன் என்னை ஏற்றி வீட்டில் இறக்கிவிடச்சொல்லி அனுப்பிவைத்தார். அது முதலாமாண்டில்தான் நிச்சயமாக ஏனெனில் இரண்டாம் ஆண்டில் அப்பா இறந்துவிட்டார். நான் இடையில் போய்க்கொண்டிருக்கும் போதுதான் தொப்பியை விளையாடிய இடத்திலேயே விட்டுவிட்டு வந்தது ஞாபகம்வந்தது. உடனே இயன்றவரை அழுதேன். என்னை மறுபடியும் பள்ளிக்கூடத்தில் இறக்கிவிட்டுவிடும்படி அவர்களைக் அழுது குழறிக்கேட்டுக்கொண்டேன். எனக்கு தொலைந்து போன தொப்பியை விடவும் அம்மாவின் அகப்பை காம்பு என்பது மிகவும் முக்கியமானதாக இருக்கும் அப்போதெல்லாம் எனக்கு. அம்மா தொப்பியை துலைத்து விட்டு வீட்டுக்கு போனால் அடிபின்னி எடுப்பார் என்பதில் சந்தேகமேயில்லை அம்மாவுக்கும் எனக்கும் அப்படி ஒரு ராசி. நான் அழுது குழறிப்பார்த்தேன் அவர்கள் மசிவதாக இல்லை என்னை இங்கேயே இறக்கிவிடுங்கள் நான் போகிறேன் என்று சொல்லி அரைவழியிலேயே சைக்கிளில் இருந்து குதித்து விட்டேன். பள்ளிக்கூடத்திற்கு நடந்தே வந்தேன். நல்ல வேளையாக தொப்பி நான் விளையாடிய இடத்திலேயே கிடந்தது. அப்போது எனக்கிருந்த பரவசமும் மகிழ்ச்சியும் அதைச் சொல்லவே முடியாது நிச்சயமாய். வானத்தில் பறக்கிற மாதிரி மஞ்சள் நிற வண்ணத்துப்பூச்சியை நட்பாக்கிக்கொண்டது மாதிரி அத்தனை மகிழ்ச்சியாயிருந்தது. தொப்பியில் போட்டிருந்த பூனைக்குட்டிப்படம் என்னைப் பார்த்து ஒருமுறை கண்சிமிட்டியது. தொப்பியை எடுத்த பிறகு மறுபடியும் வீடு செல்லாமல் அந்த மரத்தடியிலேயயே தூங்கிக்கொண்டிருந்தேன் எல்லாரும் என்னைத் தேடி அல்லோல கல்லோலப்பட்டுக்கொண்டிருந்திவிட்டு மறுபடி என் தூக்கத்தை கலைத்து என்னை வீட்டை கூட்டிக்கொண்டு போய் கொஞ்சிக் கூத்தாடி விட்டார்கள். இதுவே நான் தொப்பியில்லாமல் வீட்டை போயிருந்தால் கொஞ்சியாயிருப்பார் அம்மா கெஞ்சினாலும் அடிதான். ஆனால் என்னதான் அடிவிழுந்தாலும் என்னுடைய தொலைத்தல் புராணம் என்பது அழிறப்பர் இல் இருந்து சைக்கிள் வரைக்கும் நீண்டுகொண்டே யிருந்தது. தொலைப்பது அதை அம்மாவுக்கு தெரியாமல் மறைப்பது என்பதெல்லாம் பிறகு கைதேர்ந்த விசயங்களாகிவிட்டன.தொலைப்பதற்கும் பிறகு அதை அம்மாவிடம் இருந்து கேட்டுப்பெறுவதற்குமான இடைப்பட்ட காலம்திக்திக்கென்று நெஞ்சுக்குள் வாட்டர்ப்பம் இறைப்பதைப்போன்றது. ஒரு ஊழிக்குக் காத்திருப்தைப்போன்றது. சில வேளைகளில்நிகழலாம் நிகழாதும் போகலாம் ஒரு வானிலை அறிவிப்பு மாதிரித்தான் சொல்லமுடியும்.

அலியை மாதிரியே தம்பியின் பென்சிலை கட்டரால் சீவித்தருகிறேன் பேர்வழி என்று வாங்கி ஒரு அடியாக இருந்த பென்சிலை கட்டைவிரலளவுக்கு மாற்றியிருக்கிறேன். அவனைச் சமாளிப்பதற்காக என்னுடைய கூர்மாத்திப்பென்சிலை அவனுக்கு கொடுக்கவேண்டியதாகிவிட்டது.இப்படி நிறைய நினைவுகள் மறுபடி மறுபடி எழுந்து கொண்டேயிருக்கின்றன எனக்கு இன்று முழுதும்.

எனக்கு நினைவுதெரிந்து ஒரு முறை நான் அம்மாவைத் திட்டிக்கொண்டே ஒரு முறை பெரிதாக அழுதிருக்கிறேன். இடப்பெயர்வின் பின்னர் நாங்கள் வேறு ஒருவருடைய காணியில் ஒரு சிறிய வீட்டைப் போட்டுக்கொண்டு இருந்தோம். அது ஒரு சிறிய வீடு அம்மாவிடம் பெரிதாகப்பணமில்லை.வீடு மழை வந்தால் ஊறும், ஒழுகும். கிடுகுக் கூரைஇத்துப்போய் நாங்கள் தறப்பாள் போட்டு மூடியிருந்தோம். தறப்பாளும் இத்துவிட்டது மழை அகோர மழை, காட்டு மழை. முற்றத்து நிழல் மரவள்ளி பாறி விழுந்து விட்டது. அம்மாவும் நாங்களும் ஒரு சிறிய இடத்தில் படுத்துக்கிடந்தோம். எனக்கு பதின்மூன்று வயதிருக்கலாம். மூன்று அறைகளும் விறாந்தையும் கொண்ட எங்கட ஊர் வீடு் எனக்கு நினைவுக்கு வந்தது. வீட்டில் 13 வயசு மூத்தவன் என்பதால் எனக்கு திட்டுகளும் கொட்டுகளும் அதிகமாகவே கிடைக்கும். அதைவிட வீட்டுஆம்பிளைகள் செய்யவேண்டிய வேலைகள் என்று வரையறுக்கப்பட்ட எல்லாவற்றையும் வேறு செய்யவேண்டும். **ஒரு முறை கூரையைச் சரிசெய்வதற்காக மேலே ஏறிய நான் அந்த இத்துப்போன தறப்பாளையும் உக்கிப்போன கூரையையும் தாண்டி பொத்தென்று கூரையைப்பிய்த்துக்கொண்டு கீழே விழுந்தேன். அப்போது நான் பெரிதாக அழுதேன். எனக்கு நிச்சயமாகத் தெரியும் கீழே விழுந்த அதற்காக மட்டுமல்ல நான் அழுதது. அது மட்டுமல்ல என்னை அழத்தூண்டியது. கூரை மேய காசில்லாமல் இருக்கும் அம்மாவை நினைத்து, 7 வயதில் செத்துப்போன அப்பாவை நினைத்து, குண்டுகளிற்கும் சப்பாத்துகளிற்கும் பயந்து விட்டுவிட்டு வந்த வீட்டை நினைத்து இப்படி விழுந்த ஒரு கணத்தில் எனக்கு நிறைய நினைவுக்கு வந்தது நான் தேம்பித் தேம்பி அழுதேன். படத்தில் சப்பாத்துக்கள் பாலத்துக்குள் தேங்கி நின்று விட சாரா அழுகிறாளே அதைப்போல தன்னால் மீட்கமுடியாமல் தனது சின்னக்கைகளைத் தாண்டிய தொலைவில் செருகிக் கொண்டு விட்ட சப்பாத்துகளிற்காக மட்டும் அழவில்லை அவள். அந்த நிகழ்விற்கான புறச் சூழ்நிலைகளை நினைத்து அழுகிறாள். சிக்கிக்கொண்ட சப்பாத்துக்களினிடையில் சிக்கிக்கொண்ட இரண்டு பிஞ்சுகளின் பள்ளிக்கூடநாட்களைப் பற்றிய பயத்திலும் ஏக்கத்திலும் அழுகிறாள். அந்த ஒருகணத்தில் அவளுக்குள் மின்னிமறையும் உலகின் பெருமிருட்டு அவளை அழுத்த வெடித்த அழுகை அது.

உலகம் குழந்தைகளை அழுத்திக்கொண்டேயிருக்கிறது.தனக்கு விருப்பமானதைச் செய்ய. குழந்தைகளின் உலகம் இப்போதெல்லாம் அழுத்தங்களால் நிரம்பி வழிகிறது. ஏற்கனவே பெரியவர்களால் வரையறுக்கப்பட்டிருந்த அவர்களுடைய புன்னகைகளை, குழந்தைகளை அச்சுறுத்திக்கொண்டிருந்த பெரியவர்களினுடைய உலகம் அவர்களுக்கு தாங்கமுடியாச் சுமையைத்தலையில் அழுத்துகிறது. உலகின் எல்லா இடஙகளிலும் குழந்தைகள் வயசை மீறவைக்கப்படுகிறார்கள். அவர்களின் உலகத்துக்குள் புத்தக மூட்டைகளும் ஏன்? துப்பாக்கிகளும், பீரங்கிகளும், சப்பாத்துக்களும் நிரம்பி அச்சமூட்டுகின்றன. இப்போது அவர்களது மணல்வீடுகளையும் கனவுகளையும் கூட உலகம் தன் கொடுங்கரங்களால் ஆக்கிரமித்திருக்கிறது. கண்ணெதிரில் பெரியவர்களுக்கு புலப்படாமல் குழந்தைகள் சிருஸ்டிக்கும் மாய உலகத்தில் இப்போதெல்லாம் ராட்சசர்கள் அச்சுறுத்தியபடியிருக்கிறார்கள். குழந்தைகள் பயந்தபடி உலகின் இருண்ட மூலைக்குள் பதுங்குகிறார்கள்.

**நான் கூரையிலிருந்து கீழே வீழ்ந்து கிடக்கையில் எதற்கென்றெ தெரியாது என்னோடு கூட அழுத தங்கைக்கு ஒரு மகள் பிறந்திருக்கிறாள் இன்றைக்கு. தன் ஊர்களையும் வேர்களையும் தாண்டி எங்கோ லண்டனின் வைத்தியசாலையில் புன்னகைத்துக்கொண்டிருக்கும் அந்தச் சின்னத் தேவதையின் மலர்ப்புன்னகைக்கு.

த.அகிலன்
22.10.2007

இணைப்புகள்.

children of heaven படத்தின் இணையதளம்.

இந்தப்படம் குறித்த நிவேதாவின் பதிவு.

சித்தார்த் அண்ணாவின் பதிவு

நன்றி.
DVD இரவல் தந்த அருள்எழிலன் அண்ணாவிற்கு.

ஏய்!!!!!!!
சர்புர் என்று பறக்கும் டாடாசுமோக்கள்.. மற்றும் இதர கறுத்தக்கலர் புதியவாகனங்கள் எல்லாம் டயர் கிறீச்சிட நிற்க மூட்டை மூட்டையாய் குண்டர்களோடு வந்து இறங்குகிறார் வில்லன். சோவெனக் கொட்டுகின்ற மழை சட்டென்று ஒரு கொலை. முதல் 2 நிமிடத்திலேயே வெறுத்து விட்டது எனக்கு அடடா தெரியாம நுழைஞ்சுப்புட்டியேடா…

இயக்குனர் பூபதிபாண்டியனின் இதற்கு முந்தைய படமான திருவிளையாடல். பரவாயில்லை நிறைய காமெடி இருந்தது சலிக்காமல் ஒரு முக்கால்வாசிப்படமாவது பார்க்கக்கூடியமாதிரி இருக்கும். அதே நகைச்சுவையை எதிர்பார்த்து போனேன். கொஞ்சநேரமாவது சிரிச்சிக்கிட்டு இருக்கலாமேன்னுட்டு. கவுத்துப்புட்டார் பூபதிபாண்டியன்.

ஊரையே கலக்குகிற வழமையான வில்லன் அவருக்கு ஒரு பாசக்காரத் தம்பி. (இப்ப எல்லாம் ஹீரோக்களை விட வில்லன்களிற்குத்தான் தனது உடன்பிறப்புக்களிற்காக துடித்துப்போகிற சான்சைத்தருகிறார்கள் இயக்குனர்கள்.)

“எத்தினை பேர்றா? என்று அடிபட்டுக்கிடக்கும் தம்பியைப்பார்த்து பதறியபடி வில்லன் கேட்க. “ஒருத்தன்தாண்ணே”
என்று பதுங்கியபடி எல்லாப்படங்களிலும் அடியாட்கள் சொல்கிற மாதிரி ஒரு வீரமான கதாநாயகன்.

தனது சொந்த ஊரில் ஒரு சிமோல் வில்லனோடு தனது வீரத்தைகாட்டி அதனால் கைதுசெய்யப்பட்டு தினமும் கையெழுத்திடுவதற்கு திருச்சிக்கு போகிறார் ஹீரோ. அங்கே காக்காய்க்கு சோறு போடுகிற பரியாமணியைப்பார்த்ததும் கட்டினால் இவளைத்தான் கட்டுவேன் என்று உறுதி எடுத்துக்கொண்டு ஊரிலுள்ள காக்காய்களிற்கெல்லாம் சோறுவைத்துக்கொண்டு திரிகிறார். (காண்பர்களிடமெல்லாம் காக்காய்களிடம் இரக்கம்காட்டுமாறு கருணை மனு வேறு) ஆனால் அப்பாவின் ஆபரேசன் செலவுக்கு சேர்த்த பணத்தையெல்லாம் படிப்புச்செலவுக்காக கட்டி அப்பா இறந்தபிறகும் படித்துக்கொண்டிருக்கிற பிரியாமணிக்கோ இவரது காதலை ஏற்றுக்கொண்டால் எங்கே தன்படிப்பு பாழாகிவிடுமே என்கிற பயம். மறுக்கிறார் நம்ம ஹீரோ கேட்காமல் மறுபடியும் பிரியாமணியைக்காக்காய் பிடிக்க அவரோ இவரிடமிருந்து தப்பிக்க நான் வேறொருத்தரை காதலிக்கிறேன் என்கிறார். உடனே புரட்சித்தளபதி சோகமாகி (அதாங்க நம்ம விசால்) யாரது என்னை ஜெயித்து உங்க மனசில இடம்பிடிச்சவர் அவர் காலைத்தொட்டு கும்பிடணும் என்று தத்துவமெல்லாம் பேச. பிரியாமணி கைகாட்டியதோ வில்லனின் உயிருக்குயிரான தம்பி..!!! நம்ம ஹீரோ அப்பாவியாய் !! அவரிடம் போய் வாழ்த்துச்சொல்ல அவருக்கு பிரியாமணிமேல ஒரு இது வர.. வில்லன்தம்பி பிரியாமணியை விரட்டோ விரட்டென்று விரட்ட….. அவர் விசாலிடம் நான் சும்மாதான் சொன்னேன் நான் யாரையும் காதலிக்கவில்லை என்று அபயம் புக.. பிறகென்ன

“ஏய் உன்னை விடமாட்டன்ரா”
“அடிங்கடா அவனை”
தூக்கிட்டு வாங்கடா அவனை/ளை என்று”
திரை இரைச்சல்களால் நிரம்புகிறது. கடைசியில் என்னவாகிறது இதெல்லாம் நான் சொல்லியா தெரியணும் நம்ம ஹீரோதான் கெலிச்சார்னு.

முதல்பாதியில் காமெடி இருக்கிறது என்று சொல்லலாம். விசாலுக்கு கொஞ்சம் பொருந்தித்தான் இருக்கிறது காமெடி. விசால் இன்னொரு விஜய் ஆகிற முயற்சியில் இருக்கிறார் என்பது தெரிகிறது.”புரட்சித்தளபதி” என்கிற அடைமொழி எரிமலைக்குழம்பாய் திரையில் வழிகிறது.(ரொம்ப மினக்கெடுகிறார்) அவரது ஸ்டைலும் கொஞ்சம் போக்கிரி விஜயை ஞாபகப்படுத்துகிறது.

அடடே முத்தழகுவா இவர். பருத்திவீரனில் பார்த்ததுக்கு மொட்டை அடிக்கலாம் போல. அப்படி ஒரு ஆளாக வருகிறார் பரியாமணி. அவரும் ஹீரோவும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகமலே இரண்டு பாட்டுக்களிற்கு ஆடிவிடுகிறார். பிறகு காக்காய்க்கு சோறு வைக்கிறார். இரண்டு மூன்று சீன்களில் அழுகிறார் அவ்ளோதான். (அமீர் பார்த்தா ரூம்போட்டு அழுவார்) பாடல்காட்சிக்களில் ஏகத்துக்கும் ஏறிக்கிடக்கிறது ஆடை அப்டியே மெயின்ரெயின் பண்ணவேண்டும் அம்மணி என்று இறைவனை வேண்டுவோம்.

போக்கிரிக்கு பிறகு மறுபடியும் தாளமிட வைத்திருக்கிறார் மணிசர்மா. “ஆத்தா ஆத்தோரமா வாறியா” இன்னும் கொஞ்சநாளைக்கு சேனல்களில் போட்டு கிழிக்கப்படும். “தேவதையே வா வா” நல்ல கவித்துவமான மெலடி. யுகபாரதியின் பேனா பூபதிபாண்டியனுக்கு கொஞ்சம் ஓவர்ரைம் வேலைதான் செய்கிறது போல.

ஆசிஸ் வித்தியர்த்தியை ஒரு கூச்சலுடன் பார்க்கையில் இருக்கிற வில்லன் போதாதுண்னு இவர் வேறயா என்று தோன்றுகிறது. பிறகு அட இவர் வில்லனில்லையா என்று மனசுக்குள் வருகிற நிம்மதியை காப்பாத்துகிறார் மனுசன். ஆசிசும் ஊர்வசியும் வருகிற சீன்கள் செமகாமெடி அதுதான் படத்தை கொஞ்சமேனும் நிமிர்த்துகிறது. இதில் ஏகத்துக்கு இரைச்சல் போட்டுக்கொண்டிருந்த வில்லன்களையெல்லாம் கொண்டு வந்து காமெடி பண்ணவைத்திருக்கிறார் இயக்குனர் அதிலே பொன்னம்பலமும் ஒருவர் அவருல்லாம் ஏன்வாறார் என்ன பண்றார் ஒண்ணுமே விளங்கலே படத்துல .. பூபதி பாண்டியன் காமெடியை கைவிட்டு கொஞ்சம் அடிதடிக்கு முயற்சிக்கிறார் போல சரியா வரல்ல அவருக்கு..வேற எதுனாச்சும் முயற்சிக்கலாம்.

நானும் எனது கருத்துக்களை படத்தின் பின்பாதி மாதிரி குழப்பாம இழுக்காம முடிச்சுக்கிறேன்.

மலைக்கோட்டை வழக்கமான தமிழ்சினிமா மல்லுக்கட்டு. நான்தான் கொஞ்சம் வாய்விட்டு சிரிக்கலாம்னு (காமெடி படமா இருக்கும் எண்டு) பூபதிபாண்டினை நம்பிப் போய் பாத்து ஏமாந்துட்டேன்… பாருங்க மக்களா ஆனா என்ன மலைக்கோட்டை படத்தை திரை அரங்க இருக்கைகளோடு கொஞ்சநேரம் மல்லுகட்டி பொறுமையா இருந்தாத்தான் முழுசா பார்க்கலாம்…..

இனி உங்க இஸ்டம்…