pavam நான் தேடுகிறேன்.
தொலைந்தது கிடைத்தபின்னும்
தொடர்ந்தும் தேடுகிறேன்
பொருளை அல்ல
அதன் அடையாளத்தை..

எப்போதோ நான் எழுதியது நினைவுக்குள் மீளெழுகிறது. நான் எப்போதுமே இப்படி நிகழும் என்று எண்ணியதேயில்லை. எனது பால்யத்தில் இச்சையின்றித் திரும்பிய எனது வீட்டொழுங்கையைக் கடந்தும் என் கால்கள் நடந்தன. எதுவும் பழகியதாயில்லை. எல்லாம் விலகியிருந்தது. என்னைவிட்டும் தம் ஆன்மாவை விட்டும். என் பதின்ம வயது இரவுகளில் மின்சாரமற்ற தெருக்களினூடே ஏமம் சாமம் பார்க்காமல் திரிந்து விட்டு நடுராத்திரியில் வீடு திரும்புகையில் என்னைக் கேளாமலே என் சைக்கிள் எங்கள் ஒழுங்கையில் திரும்பும். அந்த வீதியின் மேடு பள்ளங்களை என் சைக்கிளின் சக்கரங்கள் இருட்டிலும் விலத்தும். ஆனால் இன்றைக்கு பட்டப்பகலில் எனது தெருவுக்கு இரண்டு தெரு தாண்டிப்போய் நிற்கிறது கால்கள். எல்லாம் மாறிற்று எனக்குள் நினைவுகள் தடுமாறிற்று. 23 வருடங்கள் என்னோடிருந்த நிலம் அடையாளமற்றுக்கிடக்கிறது. எதையும் பிரித்தறிய முடியாத படி எல்லாம் ஒரே அளவாய்ச் சிதைந்து கிடந்தன. போர் எல்லாவற்றையும் விழுங்கிவிட்டு தூங்கிக் கொண்டிருக்கிறது. சனங்கள் நினைவுகளில் இருக்கிற தங்கள் வசந்தகாலங்களை விழுங்கிச் செரிக்கமுடியாது விழிகளில் ஏந்தியவர்களாக அலைகிறார்கள்.

வன்னியில் எல்லாவற்றினதும் ஆன்மா காயப்பட்டிருக்கிறது. சனங்களின், மிருகங்களின்,கட்டிடங்களின்,தெருக்களின், மரங்களின்,புல் பூண்டுகளின் இன்னும் பறவைகளின் என்று சகலமும் ஆன்மாவைத் தொலைத்து விட்டு அலைகின்றன.

வவுனியா வைத்தியசாலையில் பணிபுரியும் நண்பர் ஒருவருடன் நான் வவுனியா வைத்திய சாலைக்குப் போனேன். போரின் முக்கால்வாசித் தீனக்குரல்களைக் விழுங்கிக்கொண்டிருக்கும் அந்தச் சுவர்களுக்கிடையில் இன்னமும் அழுகுரல்கள் மிச்சமிருக்கின்றன. நண்பரைப் பணிசெய்ய விட்டுவிட்டு புத்த பிக்குகளிற்காக வவுனியா மாவட்ட வைத்திய சாலையினுள் கட்டப்படும் விடுதிக்கு முன்பாக நிற்கிறேன். பிக்குகள் நிறையப் பேரிராத ஊரில் விகாரைகள் அதிகமில்லாத ஊரில் எதற்காக தனியே பிக்குகளிற்கான விடுதி. கேள்விகள் குடைகிறது. நான் சனங்களைப் பார்க்கிறேன் ஏதாவது தெரிந்த முகத்தை ஒரு தெரிந்த மனிதனைத் தேடுகிறேன். தங்களைத் தேடியலையும் சனங்களுக்கிடையில் எனக்குத் தெரிந்தவனை எங்கே தேடுவது. ஒட்டியுலர்ந்த தேகங்களுக்குள் எனக்குத் தெரிந்தவர்கள் ஒளிந்துகொண்டிருக்கலாம். ஆனால் என்னால் ஒரு தெரிந்தவனைக் கூட அடையாளம் காணமுடியவில்லை ஒரு ஒல்லிக்குச்சிப் பெடியனாய்  ஊரைவிட்டுப் போய்.. கொஞ்சம் குண்டாய் நிறைய மொட்டையாய்த் திரும்ப வந்திருப்பவனை அவர்களுக்கும் அடையாளம் காணச் சிரமமாய் இருக்கலாம். எந்தத் தெரிந்தமுகமுமில்லை எல்லா முகங்களும் ஒரே மாதிரியானதாக இருக்கிறது. மனங்களே முகங்களைச் செய்கின்றன. எல்லார் மனங்களிலும் ஒரே துயரம் அதனால் எல்லா முகங்களும் ஒரே மாதிரியானதாய்ப் போயிருந்தன. அன்றைக்கு வெசாக்கிற்கு முதல்நாள், புத்தர் ஞானம் பெறப்போகிறார். வைத்திய சாலைக்குள் வெசாக் கூடுகள் வெளிச்சம் காட்டத் தொடங்கின பரவுகிறது ஞானத்தின் ஒளி ஆனாலும் என்ன மனங்களுக்குள் புகமுடியாத வெளிச்சம் அது.

மறுக்கப்பட்டிருந்த எல்லாம் இப்போது வவுனியாவைக் கடந்து வன்னிக்குப் போகின்றன. மூன்று  தசாப்த யுத்தம் நிகழ்ந்த இடம் புதிய சந்தையாகிறது. வண்ண வண்ண விளம்பரத் தட்டிகள் வழியெங்கும் உங்களை அழைத்துச் செல்கின்றன. வன்னி மூன்று தசாப்தங்களாக இராணுவம் நுழையாத மண். தனி புலிகளின் தனி ராசதானியாக ஆளப்பட்ட மண். இலங்கையோடு ஒட்டாமல் துருத்திக்கொண்டிருந்த நிலம். சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில் மின் பற்றாக்குறை காரணமாக அவர் இலங்கையின் நேரத்தை அரை மணி நேரத்தால் அதிகரித்தார். அதாவது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் ஒரே நேர அளவுதான் கடைப்பிடிகப்பட்டது. ஆனால் சந்திரிகா அம்மையார்இந்திய நேரப்படி காலை ஐந்தரை மணியை இலங்கையின் 6 மணி ஆக்கினார். அரைமணிநேரம் அதிகரித்தது இலங்கை நேரம். ஆனால் அப்போதும் வன்னியில் பழைய நேரமுறைமையே கடைப்பிடிக்கப்பட்டது. இரண்டு தேசங்களிற்கான வித்தியாசம் அதிலிருந்தது. அதனால் தானே என்னவோ இப்போது இலங்கையின் முக்கியமான தொலைபேசிச் சேவைகளை வழங்கும் டயலொக் பின்வருமாறு தன் விளம்பரத்தை செய்கிறது. “இலங்கையர்களுக்கென்றால் டயலொக் தான்” என்று. எனக்கென்னவோ அந்த விளம்பரத் தட்டி வன்னிச்சனங்களை நீங்கள் இலங்கையர்களா? என்று கேட்கிறதா இல்லை அவர்களது பாவங்களைக் கழுவி அவர்களை இலங்கையர்களாக புனிதப்படுத்துகிறதா? எனும் கேள்வி ஓடிற்று.

ஆனால் இப்போது பலாத்தகாரத்தை, வன்முறையை சகித்துக்கொள்ளப் பழகிவிட்ட அல்லது எதிர்க்கத் திராணியற்ற ஒரு பெண்ணைப் போல எதிர்ப்பின்றி வீழ்ந்து கிடக்கிறது நிலம். நான் வாழ்ந்த காலத்தில் மறுக்கப்பட்டிருந்த எல்லாவற்றையும் வன்னிக்குள் கண்டேன். ஆனால் தங்களுக்கு மறுக்கப்பட்டவையெல்லாம் திரும்பக் கிடைக்கிறபோது அதை எதிர்கொள்ளத் திராணியற்ற சனக்கூட்டமாக வன்னிச்சனத்தை காலம் மாற்றிவிட்டது. அவர்களது எதிரிகளும், அவர்களது காவலர்கள் என நம்பியவர்களுமாகச் சேர்ந்து அவர்களைத் கோவணாண்டிகள் ஆக்கிவிட்டனர்.

அம்மா அழுதுகொண்டேயிருக்கிறாள். அவளது அழுகை தீராத அழுகை அதை அவள் ஒரு வன்முறையை நிகழ்த்துவதைப்போலவே நிகழ்த்துகிறாள். அவளால் காப்பாற்ற முடியாது போன இளைய மகனைப்பற்றிய நினைவுகள் அவளை அழுத்துகின்றன. அம்மா நான் சின்ன வயசுக் கதைகளினூடு கற்பனை பண்ணிய சூனியக்காரக் கிழவியைப் போல இருக்கிறாள். அச்சமாயிருக்கிறது அவளை எதிர்கொள்வது. அம்மாவைப்போல அம்மாக்களினால் சபிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது நகரம். அம்மாவின் இளைய மகனைப்போல தமது மகவுகளைப் பிரிந்த தாய்களின் கண்ணீர் பெருகுகிறது. அம்மாக்கள் மட்டுமே மிஞ்சியிருக்கிறார்கள் உயிர் மிஞ்சியிருக்கும் விருப்பின்மையோடு.

வன்னி இப்போது ஆண்களற்ற நகரம். ஆண்களைப் போர்விழுங்கிவிட்டது. ஆண்கள் இறந்து போய்விட்டார்கள் அல்லது கைது செய்யப்பட்டு விட்டார்கள். இப்போது பெண்கள் தனித்து விடப்பட்டிருக்கிறார்கள். பெண்களின் கண்ணீரால் வன்னித்தெருக்களின் புழுதி அடங்குகிறது. இதுவரைகாலமும் குடும்பத்தின் வருமான வேராக இருந்த ஆண்கள் இல்லாமல் போக இப்போது சுமக்க முடியாத சுமையை பெண்கள் சுமந்தலைகின்றனர். யாரவது துரைமார் வரமாட்டார்களா? எங்களது துயரங்களைக் களைந்துவிட மாட்டார்களா? என்று அவர்கள் ஏங்குகிறார்கள். பசியும் தேவைகளும் அவர்களை நெருக்குகின்றன. ஏதாவதொரு அரசியல் வாதியோ, அதிகாரியோ, அல்லது பன்னாட்டு நிறுவனமோ எது வந்தாலும் பிள்ளைகளையும் இழுத்துக்கொண்டு அவர்களிடம் ஓடுகிறார்கள். ராசாக்களோவெனில் பொத்தாம் பொதுவாகத் தலையசைத்தபடி அந்தச் சனங்களை ரட்சிக்கிறார்கள். பெண்கள் மனுக்களை ஏந்தியபடி அலைந்து கொண்டேயிருக்கிறார்கள். நாளைக்கான சாப்பாட்டில் தொடங்கி பிள்ளையினதோ கணவனினதோ விடுதலை வேண்டி அல்லது அவர்களை கண்டுபிடித்துத் தரச்சொல்லி. இன்னும் இன்னும் தம் வாழ்வுக்கான கருணையாசிக்கும் வேண்டுதல்கள் நிறைந்த மனுக்கள் ராசாக்களால் சேகரிக்கப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன. இவர்கள் வழக்கம் போல பதிலுக்காக காத்திருக்கிறார்கள். அல்லது காத்திருக்காமல் திரும்பவும் திரும்பவும் இரங்கல் கடிதங்களை ராசாக்களிடம் கையளித்தபடி இருக்கிறார்கள்.

வவுனியா வைத்தியசாலையில் இருக்கிற உளவியல் மருத்துவர் ஒருவர் சொன்னார். சிறப்பு முகாமில் இருந்து தன்னிடம் அழைத்து வரப்பட்டிருந்த தற்கொலைக்கு முயற்சித்து தப்பிய நபரைப்பற்றி. தற்கொலைக்கான காரணமாக அவர்சொன்னது “ஒரு சிங்களக் குழந்தைக்கு தகப்பனாக எனக்கு விருப்பமில்லை” என்பது.  அவர்விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கிய பொறுப்பில் இருந்தவர். சிறப்பு முகாமில் இருந்து அவரை விடுவிப்பதற்கான பேரமாக அவரது மனைவியின் உடல் கோரப்படுகிறது சிங்கள இராணுவ அதிகாரி ஒருவரால். பெண்கள் வஞ்சிக்கப்பட்டபடியே இருக்கிறார்கள். எல்லாவிதமாகவும் பெண்கள் சுரண்டப்படுகிறார்கள். அவர்கள் திசைதெரியாப் பயணிகளாக தாங்கள் இதுவரையும் பயணிக்காத புதிய பாதைகளில் தனித்து நிற்கிறார்கள் கூடவே பெருஞ்சுமைகளோடு.

விதவைகளும், காணமல் போனவர்களிள் மனைவிகளும், கைதிகளின் தாய்மாரும் தங்களிடம் எஞ்சியிருக்கும் குடும்பத்தை காப்பாற்ற போராடுகிறார்கள். ஆயுதப் போராட்டம்,அகிம்சைப் போராட்டம் என்று எல்லாவகையான போராட்டங்களும் கைவிட்டபின் இப்போது வயிற்றுக்கான போராட்டம் மட்டுமே அந்த மண்ணில் எஞ்சி இருக்கிறது. அந்தச் சனங்களிடம் கோபமிருக்கிறது தாங்கள் வஞ்சிக்கப்பட்ட ஏமாற்றம் எரிகிறது. முதுகிலும் நெஞ்சிலும் குத்திய ஆயுதம் தாங்கிகளை சனங்கள் வெறுக்கிறார்கள். ஆனால் அவர்களால் எதுவும் செய்ய இயலுவதில்லை அவர்களிடம் போராட்ட குணம் எஞ்சியிருக்கிறது ஆனால் அது அன்றாட வாழ்வுக்கான போராட்டமாய் நிகழத்தவே அவர்களிடம் இயலுமையிருக்கிறது.அவர்கள் யார்போனாலும் யாசிக்கிறார்கள் அவர்களின் தேவைகள் யாரால் தீர்த்து வைக்கப்பட்டாலும் ஏற்றுக்கொள்கிறார்கள். அது எதிரியா துரோகியா எந்த முத்திரைகளும் இப்போது அந்தச்சனங்களிடம் இல்லை. அந்தச் சனங்களிடம் இருப்பது எல்லாம் எதிர்காலம் இருண்டுகிடக்கும் போதான உயிர்வாழ்தல் குறித்த அச்சம் மட்டும்தான்.  அவர்களுக்கு வேறெதைப்பற்றியும் அக்கறைகளிலில்லை. அடுத்த வேளைதான் அவர்களது இலக்கு. அவர்கள் அதைக்கடப்பதற்கே போராடுகிறார்கள்.

தங்கள் பெயரால் வெளியில் நடத்தப்படும் அரசியல் குறித்துக் கவனிப்பதற்கெல்லாம் அவர்களுக்கு திராணியில்லை.  அல்லது அந்த அரசியலின் மீது சலிப்பிலும் வெறுப்பிலும் இருக்கிறார்கள் அந்தச்சனங்கள். தப்பிச் செல்லும் வழிகள் அடைக்கப்பட்டு களத்தில் தவிர்க்க முடியாமல் இறக்கிவிடப்பட்டிருக்கிற ஆட்கள் அவர்கள். அவர்கள் பெயரால் உலகமெங்கும் நிகழ்த்தப்படுகிற வாய்ச் சவடால்களுக்கும் தங்களுக்கும் எந்தத் சம்பந்தமும் இல்லை என்பதை உரக்கச் சொல்லும் திராணி அவர்களுக்கில்லை அந்த அக்கறையுமில்லை. அவர்களின் கழுத்தில் சுருக்குகள் உள்ளன. அரசிடம் சுருக்குகளின் மறு நுனிகள். முள்வேளி முகாம்களிலிருந்து சொந்த இடங்களிற்கு குடியமர்த்தப்படுகிறவர்களை நாடுகடந்து செய்யப்படுகிற வாய்ச்சவடால்கள் அச்சமூட்டுகின்றன. களத்தில் இல்லாதவர்களின் வாய்வீரத்தால் அவர்களின் கழுத்துச் சுருக்குகள் இறுகுகின்றன. அவர்கள் பாவம். வன்னியின் குடிகளாயிருப்பதைத் தவிர வேறெந்தப் பாவமும் செய்யாதவர்கள். அவர்களை பிழைக்கவிட்டுவிடலாம். அவர்களுக்கான அரசியலை அவர்களே நிகழ்த்துவார்கள். முதலில் பட்டினி நோயிலிருந்த மீண்டு தெம்பாய் எழுந்திருக்க அவர்களை அனுமதிக்கவேண்டும். பாதுகாப்பான வெளிகளில் பதுங்குழிகளிற்கு அவசியமிராத தேசங்களில் இருந்து அவர்களின் தேவைகளைப் புரிந்து கொள்ளாதவர்களின் சவடால்களால் அந்தச்சனங்களின் வாழ்க்கை அச்சமூட்டப்படுகிறது. முதுகுகளில் ஏற்றப்படும் சிலுவைகளை மறுக்கவும் திராணியற்ற பாவிகள் அவர்கள். பாவம் அந்தச் சனங்களை விட்டுவிடலாம் பிழைத்துப் போகட்டும்.

எங்களுக்குச் செய்யவும் சொல்லவும்
ஏதுமில்லை
எங்களை வைத்து
அதிகாரங்கள் செய்ய
அடிமைசெய்ய
அரசியல் செய்ய
முடிந்தால் பிச்சையெடுக்கவும்
ஆட்களிருக்கிறார்கள்..
ஆனால்
எங்களுக்குத்தான் செய்யவும் சொல்லவும்
ஏதுமில்லை

புது விசை  யூலை -செப் 2010 இதழில் வெளியாகிய கட்டுரை.

image54 புத்தர்ஒரு சுவாரசியமான கவனிக்கத்தக்க பிரகிருதி தான்.  அவரை எனக்கு நல்லாப் பிடிக்கும். யசோதராவை நித்திரையாக்கிப்போட்டு நைசா  பின்கதவால எஸ்கேப்பாகும் போது புத்தர்நினைச்சிருப்பார்இண்டையோட இந்த அரசியலையும் அரசையும் இந்த இகலோக வாழ்வையும் நான் துறக்கிறேன் என்பதாய். ஆனால் விதி யாரை விட்டது. புத்தர்அரசியலை விட்டு அரசிலையைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் அதுவே பேரரசியல் ஆகிவிட்டது. இன்றைக்கு புத்தர்தான் ஆசியாவின் மிகப்பெரும் அரசியல்வாதி. அதிகாரக் குறியீடு எல்லாம்.

ஆனாலும் புத்தர்அறியார்அழகு பொருந்திய சாந்தம் நிரம்பிய தனது உருவம் வெறும் எல்லைக்கல்லாகச் சுருங்கிப்பேயிருப்பதை. இன்றைக்குப் புத்தர்சிலையென்பது எல்லைக்கல். விகாரை என்பது காவல் கொட்டில். ஆனாலுமெனக்குப் புத்தரைப்பிடிக்கும். புத்தர்அப்படியேதான் இருக்கிறார்எப்பொழுதும் எங்காவது  புத்தரை புடையன்பாம்புகள் பின்பற்றக்கூடாதென்பதாய் அவர்சொல்லவில்லையே அங்கேதான் புத்தர்தவறிழைத்தார்அதனால்த்தான் அவர்கைவிடவும்பட்டார். புடையன்களின் இயல்புகள் புத்தருடையதாயப் பிரகடனஞ் செய்யப்படுவதை கையாலாகாதவராய்ப் புத்தர்பார்த்துக்கொண்டிருக்கிறார்.

கையாலாகதவராக இருந்தாலும் அவரை நான் பெரிதும் விரும்புகிறேன். அவரளவுக்கு தன்னைப் பிறர்இஸ்டத்திற்குப்பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கிற  ஆள் வேறுயாரும் கிடையாது.  புத்தரை நானும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன் சில சமயங்களில். கிளிநொச்சியில் ஒரு சிங்கள மகா வித்தியாலயம் இருந்தது. நான் பள்ளிக்கூடம் போகத் தொடங்குகையில் அதிசயமாய் அந்தப் பள்ளிக்கூடத்துக்குப் போற பெடியளைப் பார்த்தபடி கடந்த மங்கலான நினைவு இன்னமும் இருக்கிறது.  அதன் அதிபராக ஒரு பிக்கு இருந்தார். அவரை பெரியம்மாக்களெல்லாம் “சாது சாது” எண்டு கூப்பிடுவினம். நான் அவருடைய வீட்டுக்கு நான் இரண்டொரு தடைவை போயிருக்கிறேன். அது ஒரு மாந்தீரீகக் குகை போல இருப்பதாய்த் தோன்றுமெனக்கு. நான் ஒரு நோஞ்சான் பெடியனாய் இருந்ததால் சழி,காய்ச்சல்,இருமல் அது இதெண்டு எல்லா வருத்தங்களுக்கும் என்மேல் அற்புதமானதொரு பிரியம் இருந்தது. எனக்கு வருத்தம் வந்தால் அம்மா முதல் கூட்டிக்கொண்டு போற இடம் சுப்பையற்ற சாந்தி கிளினிக். வருத்தம் மாறினோண்ண முதல் கூட்டிக்கொண்டு போறது சாதுவிட்ட. அவர் தகடு கூடு எல்லாம் வைச்சு ஒரு நூல் கட்டிவிடுவார் இடுப்பில அல்லது கையில அதுக்குப்பிறகு வருத்தங்கள் அண்டாது எண்டது அம்மாவின் பெருநம்பிக்கை. வருத்தங்கள் அண்டுதோ இல்லையே அவர் இடுப்பில கட்டின கூடுதகடு இடுப்பில அண்டு அண்டெண்டு அண்டி காச்சட்டை கழட்டேக்க எல்லாம் என்ர கருந்திரு மேனியைச் சிவப்பாக்கி வைச்சிடும்.

வடபகுதிகளில்  இருந்து முஸ்லிம்கள் புலிகளால் வெளியேற்றப்பட்டார்கள்.  அநேகமாக பிற இனத்தவர்கள் அனைவருமே புலிகளின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேறிவிட்டார்கள்.  ஆனால் பிக்குவை அவர்களால் வெளியேற்றமுடியவில்லை. (அவர்தமிழ்ப் பௌத்தரும் அல்ல)அல்லது பிக்கு வெளியேற விரும்பவில்லை. அவர்ஒரு அதிசயம் போல அங்கே நடமாடினார். பிக்கு வெளியேறாமல் வன்னியிலேயே இருப்பது குறித்து  பல்வேறு விதமான வதந்திகள் உலாவின. பிக்கு புலிகளுக்கு உதவிசெய்கிறார்என்பதாகச் சிலபேரும். அவர்இராணுவத்துக்கு மெசேச் கொடுக்கிறார்என்று சிலபேரும் சொல்லிக்கொண்டார்கள். ஆனால் உண்மை எதுவென்பது பிக்குவுக்குத்தான் வெளிச்சம். பிக்கு தன்னட்ட வாறாக்களுக்கு கூடு தகடு கட்டினாரே அன்றி வேறொரு விசயத்துக்கும் வாயைத்திறக்கயில்லை. ஆனால் பிக்கு புலிகளின் வீழ்ச்சி வரைக்கும்  வன்னியிலேயே இருந்துதான் வெளியேறினார். தன்னை புலிகள் நாகரீகமாகவும் மரியாதையாகவும் நடத்தினார்கள் என்பதையும் வெளி உலகுக்குச் சொன்னார். கடைசிவரைக்கும் அம்மாவைப் போல பலபேர்பிக்குவிடம் தங்கள் பிள்ளைகளுக்கு மந்திரித்துக்கொண்டுதான் இருந்தார்கள்.  அதைவிட முக்கியமான விசயம்  பிக்கு வன்னியில் இருக்கும் வரைக்கும் மொட்டைத்தலையும் காவியுமாகவே தன் அடையாளங்களோடேயே உலவினார்தன் அடையாளங்கள் எதனையும் துறக்கவுமில்லை துறக்க நிர்ப்பந்திக்கப்படவுமில்லை.

வழித்துணையாய் வந்த புத்தர்

புத்தரை நான் அடையாள அட்டையாகவும் ஒரு முறை பயன்படுத்தியிருக்கிறேன். அடையாள அட்டைகளைப் பராமரிப்பதற்கான டிப்ளோமாப் பயிற்சிகள் எதனையும் நான் பெற்றிருக்கவில்லை என்பதனாலும். வன்னியில் அடையாள அட்டைகளை பரீட்சை மண்டபத்தில் பயன்படுத்துவதேயன்றி சந்திக்குச் சந்தி காட்டவேண்டிய நிர்ப்பந்தங்கள் ஏதுமிருக்காது என்பதனாலும்  அதைக்கவனிக்க ஆட்களில்லை.    (இப்போது இங்கே கொழும்பில் அடையாள அட்டைகளைப் பாதுக்காப்பது எப்படி என்பது பற்றி பேச்செடுத்தாலே வகுப்பெடுக்கிறார்கள் நண்பர்கள் அவ்வளவு அனுபவசாலிகளாக இருக்கிறார்கள்)  அதைப்பற்றிக் கேட்டபோது நண்பரொருவர்சொன்னார்இப்போ ஓரளவு பரவாயில்லை இரண்டு வருடங்களுக்கு முன்னால்  என்றால் போய்க்கொண்டிருக்கிற உயிரை மறிச்சு அடையாள அட்டை கேப்பாங்கள் ஆமிக்காரர்என்று. இப்போது கெடுபிடிகள் குறைந்தேயிருக்கின்றன.

இலங்கைத் தீவில் புலிகளுக்கும் அரசுக்குமிடையில் ஏற்படுகின்ற சீசன் சமாதானங்களின் கடைசிச் சீசனான 2002 – 2006 பருவகாலத்தில் நானும் வவுனியாவுக்கும் யாழ்பாணத்துக்கும் அடிக்கடி போய்வந்தேன். புலிகளிடம் பாஸ் காட்டாமலும் இராணுவத்திடம் இலங்கை தேசிய அடையாளஅட்டையைக் காட்டாமலும் போகமுடியுமென்பதை அடிக்கடி நண்பர்கள் மத்தியில் நான் சமாதானகாலத் தொடக்கத்தில் நிரூபித்து எனது சாகசங்கைளை நிகழ்த்தி வந்தேன். ஆனால் 2006 ல் குலுக்கிய கைகள் குலுக்கியபடியே இருக்க உள்ளே எலும்புகள் உடைந்துகொண்டிருக்கிற சத்தம் சனத்துக்கு கேட்கத் தொடங்கியபோது தேசிய அடையாளஅட்டையில்லாமல் முகாமாலை இராணுவச்சோதனைச் சாவடியைக் கடப்பதென்பது சிம்ம சொப்பனமாகியது. அந்த நேரம்பார்த்து எனது தேசிய அடையாள அட்டையையும் நான் தொலைத்து விட்டிருந்தேன். அடையாள அட்டை இல்லை ஆனால் அவசரமாய் யாழ்ப்பாணம் போகோணும் எண்ட ஒரு இக்கட்டான நிலைமையில் நான் புத்தரைத் துணைக்கழைத்தேன். மனுசன் அதே புன்னகையுடன் வழித்துணையாய் வந்தார். புத்தகத்தின் அட்டைப்படமாக.  ஜெயமோகனின் ‘நெடுஞ்சாலைப் புத்தரின் நூறு முகங்கள்’ என்ற கவிதைத் தொகுதியைக் கையிலெடுத்தபடி முகமாலைச் சோதனைச்சாவடியைக் கடந்தேன். அடையாள அட்டையைக் கேட்ட இராணுவ வீரனிடம் தொலைந்துவிட்டது என்றேன் தைரியமாக. அவன் புத்தகத்தில் இருந்த புத்தரையும் என்னையும் மாறி மாறி இரண்டு தடைவை பார்த்தான். சிங்களத்தில் ஏதோ கேட்டான்.. நான் சிரித்தேன் கிட்டத்தட்ட புத்தரைப்போலச் சிரிப்பதாய்க் கற்பனைபண்ணிக்கொண்டு சிரித்தேன். என்ன நினைச்சானோ புத்தர்படம் போட்ட புத்தகத்தை கையில் வைத்திருக்கும் ஒருவனிடம் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் பயணம் செய்ய அனுமதிக்கலாம் என்று அந்த இராணுவ அதிகாரி அன்று அனுமதித்தான். புத்தர்என் வழித்துணையாயும் அடையாள அட்டைக்கு பதிலாக நான் அவரைப் பிரதியிட்டேன் என்பதையும் அறியாதவராய் அதே சிரிப்பை மெயின்டெயின் பண்ணினார்.  பிறகு நான் அந்தப்புத்தகத்தையும் வன்னியையும் விட்டு வெளியேறினேன்.  அதனாலும் புத்தரை எனக்குப்பிடிச்சிருந்தது.

புத்தர் என்னைத் துரோகியாக்கின கதை

image0006 கனநாள் கழிச்சு நான் இலங்கை திரும்பினேன். சந்திக்கு சந்தி மறிச்சு அடையாள அட்டை கேட்காத இலங்கை. ஆனாலும் பதட்டம் உள்ளோடிக்கொண்டிருக்கிறது. தமிழன் என்கிற நினைப்பு உறுத்திக்கொண்டேயிருக்கிறது ஒரு ஒழித்து வைக்கப்பட்டிருக்கிற ரகசிய உறவைப்போல. நான் இருக்கிற ஒரு ஆற்றங்கரையில் ஒரு புத்தர். போகவும் வரவும் என்னைப் பாத்துச் சிரிச்சண்டேயிருந்தார். வௌ;ளைப்புத்தர்.. எனக்குப் புத்தரை இப்பவும் பிடிச்சிருந்தது. நான் அவரைப் படமெடுக்கவிரும்பினேன் என்னிடம் கமரா இல்லாததால் அதைத் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தேன். ஆனால் ஒரு நாள் நான் புத்தரைப் பாக்கேக்க திடுக்கிட்டுப் போனேன். அவரது அழகிய புன்னகையைப் போத்தி மூடியிருந்தது காவி. கொழும்பில அரசு சார்பிலான கொண்டாட்டங்கள் திட்டமிடப்பட்டிருந்தன. மே 18 தமிழனை வெண்டதினம் எண்ட கொண்டாட்டம். நான் அப்பதான் புத்தரைச் சரியா மதிச்சன். அட இந்த மனுசன் அப்பாவிகளைப் படுகொலை செய்தநாட்களை தன் மக்கள் வெற்றிநாளாக கொண்டாடுகிற அநியாயத்தை காணச்சகியாமல் கண்ணைக்கட்டிக்கொண்டிருக்குதே எண்டு. இந்தக்கணத்தை தவறவிடக்கூடாது விட்டா மனுசன் நாளைக்கு திரும்பவும் சிரிக்கத் தொடங்கியிருமெண்டு நினைச்சு உடன என்ர மொபைலால படமெடுத்தேன். இரண்டு கோணங்களில். மழைவேற பெய்யுது. நான் படமெடுத்து முடியவும் ஒருத்தர்என்னை “மல்லி மல்லி” எண்டு கூப்பிடவும் சரியாயிருந்திச்சு. அப்பயும் எனக்கு காந்தண்ணை முந்திக்காலத்தில எழுதின கவிதையொண்டின்ர வரி நினைவுக்கு வந்திச்சு ( அங்கதான் நிக்கிறான் அகிலன்) அது என்ன வரியெண்டா “மல்லி மல்லி எண்டு கொஞ்சி அழைத்தார்கள் மஞ்சி விசுக்கோத்தும் கிள்ளிக்கொடுத்தார்கள்” எண்டு வரும் அந்தக் கவிதையில.. அது நினைவுக்கு வர  நான் மல்லி மல்லி எண்டவரைத் திருப்பிப் பாத்தன் அவற்ற கையில மஞ்சிவிசுக்கோத்து இல்லை.

வந்தவர் சிங்களத்தில ஏதோ புத்தரைக்காட்டி கோவமாக் கேட்டார். நான் ஏன் இந்தாள் கோவப்படுது? பக்தனுக்கும் கடவுளுக்குமிடையில நானெதுக்கு என்பதாய் நடக்கத்தொடங்கினேன். அந்தாள் திரும்பவும் மறிச்சு பேசிச்சிது ஏன் இந்தாள் பேசுது எண்டு யோசிச்சன் பாத்தா அந்தாள் நான் புத்தரைப் படமெடுத்தது அவருக்கு குண்டு வைக்கத்தான் எண்ட ரீதியில முறைச்சுக்கொண்டு போட்டோ போட்டோ எண்டு சிங்களத்தில ஆவேசப்பட்டிச்சிது. நான் அந்தாளைப் புறக்கணிச்சிட்டு என்ர பாட்டுக்கு நடக்க வெளிக்கிட்டன் பெரிய கெத்தான ஆள்மாதிரி. (கால் அகலமான் ஜீன்சுகள் போடுறது எவ்வளவு நல்லது நடுக்கத்தை மறைக்கலாம் ஹி ஹி ஹி )  ஆனால் அந்தாள் தான் ஆவேசப்பட்டாலும் பறவாயில்லை றோட்டால் போற ஒரு ஆட்டோக்காரனை மறிச்சும் தன்ர ஆவேசத்தை அவனுக்கும் பற்றவைக்கும் முயற்சியில் தீவிரமா இறங்க நான் என்ர நடையின்ர வேகத்தைக் மெதுமெதுவாக்கூட்டி.. பிறகு வீட்டடிக்கு வரேக்க எப்படி வந்திருப்பன் எண்டதை நான் எழுதியா உங்களுக்கு விளங்கோணும்….. ஆ…

உப்புடியெல்லாம் றிஸ்க்கெடுத்து உந்தாளை (புத்தரை) ஒரு படமெடுத்து. அதை நான் என்ர பேஸ்புக்கில போட்டன். உடன என்ர நண்பர்ஒருத்தர்தொடங்கினார் ஓ உங்களுக்கிப்ப புத்தரைத் தானே பிடிக்கும் எண்டு.. எனக்கு சத்தியமா விளங்கேல்ல எனக்குப் புத்தரைப் பிடிச்சா அவருக்கென்ன பிரச்சினை எண்டு. பிறகென்ன அடியெடா பிடியடா எண்டு ஆளாளுக்கு றபர்ஸ்டாம்புகளோட வரிசையில வந்திட்டினம் புத்தரைப் பிடிச்சிருக்கெண்டு சொல்லுறவன் ஒரு தமிழ்விரோதி , புலிவிரோதி ( இது இரண்டையும் தனித்தனிய எழுதினதுக்கே சண்டைபிடிச்சாலும் பிடிப்பாங்கள் இரண்டும் ஒண்டுதான் பிரிக்கிறாய் எண்டு) நீங்க அரசாங்கத்துக்கு ஜால்றா அடிக்கிறீங்க விடியவில கிரிபத்தானே சாப்புடுறனீங்க எண்டு அரைச்செஞ்சுரி கொமண்டுகள். அடடா ஒரு புத்தருக்குப் போய் இத்தனை அக்கப் போரா? அடேய் அப்ப நீர் வேலியில கிடைச்சதாச் சொல்லப்படுற தமிழ்ப்பௌத்தத்துக்கான ஆதாரங்கள் பொய்யா?( அதுக்கான நான் தமிழ்ப்பௌத்தனல்ல)  எங்களிடம் புத்தர்என்ன மாதிரியான அரசியலாகிப் போனார்? எனக்கு அப்பத்தான் விளங்கிச்சு முகமாலைச் சென்ரிப்பொயின்ரில என்னைக் காப்பாத்தின புத்தர்முகப்புத்தகத்தில என்னைக் கைவிட்டிட்டார் எண்டு. டக்கெண்டு இன்னொண்டும் எனக்குத் தோணிச்சு எங்களிட்ட இருக்கிறது ஒரு ஒடுக்கப்படும் இனத்தின்ர வலி மாத்திரமல்ல. அதைவிடவும் மேலால எங்களிட்ட தமிழ் இனவாதம் இருக்கு அது சிங்கள இனவாதத்திற்குக் கிஞ்சித்தும் குறைஞ்சதில்ல.  அதைப்போலவே கருணையற்றதும் கொடுரமானதும் மன்னிக்கமுடியாததுமான தமிழ் இனவாதம். கனவில வந்த புத்தர்கேட்டேர் இப்ப தெரியுதா நான் ஏன் இலங்கைத் தீவின் குடிகளைக் கைகழுவிவிட்டேன் என்பது..?

குறிப்பு- 09.06.2010 திகதியிடப்பட்ட ஆனந்தவிகடனில் வெளியான புத்தன் எத்தனை புத்தனடா ..? கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம்.

Next »

FireStats icon Powered by FireStats